logo

|

Home >

devotees >

tirugnanasambandha-moorthi-nayanar-puranam

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்

 

Tirugnanasambandha Moorthi Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


காழிநகர்ச் சிவபாத விருதயர் தந்த
    கவுணியர்கோ னமுதுமையள் கருதி யூட்டு
மேழிசையி னமுதுண்டு தாளம் வாங்கி
    யிலங்கியநித் திலச்சிவிகை யிசைய வேறி
வாழுமுய லகனகற்றிப் பந்த ரேய்ந்து
    வளர்கிழி பெற்ற ரவின்விடமருகற் றீர்த்து
வீழிநகர்க் காசெய்தி மறைக்கதவம் பிணித்து
    மீனவன்மே னியின்வெப்பு விடுவித்தாரே.

ஆரெரியிட் டெடுத்தவே டவைமுன் னேற்றி
    யாற்றிலிடு மேடெதிர்போ யணைய வேற்றி
யோரமண ரொழியாமே கழுவி லேற்றி
    யோதுதிருப் பதிகத்தா லோட மேற்றிக்
காருதவு மிடிபுத்தன் றலையி லேற்றிக்
    காயாத பனையின்முது கனிக ளேற்றி
யீரமிலா வங்கமுயி ரெய்த வேற்றி
    யிலங்குபெரு மணத்தரனை யெய்தி னாரே.

சோழமண்டலத்திலே, பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என்னும் பன்னிரண்டு திருப்பெயரையுடைய சிவஸ்தலத்திலே பிராமண குலத்திலே, வேதங்களிலே மகாபாண்டித்தியமுடைய கௌணியர் கோத்திரத்திலே, சிவபாதவிருதயரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் மனைவியார், கற்பிலே தமக்கு உயர்வொப்பில்லாத பகவதியாரென்பவர். அவ்விருவருடைய தாய்மரபு, தந்தைமரபு என்னும் இருமரபுஞ் சைவ நெறி வழிவந்தனவேயாம். அவர்கள் அநாதிமலமுத்தபதியாகிய பரமசிவனையேயன்றி, அவிவேகிகளாலே பதிகளெனத் திரித்துணரப்பட்ட பசுக்களைத் தெய்வமென்று கருதாத மெய்யறிவினையும், உண்மாசை நீக்கும் பெருமையையுடையதென்று வேதசிரசுகளாகிய உபநிடதங்களினாலே உணர்த்தப்பட்ட அருமருந்தாகிய விபூதிமேல் வைத்த பேரன்பைப் பரிபாலிக்குந்தன்மையையும் உடையவர்களாகி, இல்லறத்திலே சிறந்து வாழ்ந்திருந்தார்கள்.

அப்படியிருக்கும்பொழுது, சீவகாருண்ணியமே திரண்டு ஒரு வடிவெடுத்தாற்போல விளங்குகின்ற சிவபாதவிருதயர், தமிழ்நாடெங்குஞ் சமணரும் பௌத்தருமாகிய இவ்விரு வகைப்பதிதர்கள் போதிக்குந் துர்ப்போதனையினாலே அவர்கள் அநுட்டிக்கின்ற கபடமார்க்கமாகிய ஆருகதமும், பௌத்தமுமே பெருக, அதிபரமாப்தராகி சிவபெருமான் அருளிச்செய்த வேதசிவாகமங்களால் உணர்த்தப்படுஞ் சற்சமயமாகிய சைவ சமயம் அருகி, விபூதிசாதன விளக்கங் குன்றுதலைக் கண்டு, கவலை கொண்டு, நிகழ்காலத்தும் எதிர்காலத்துமுள்ள சருவான்மாக்களும் உய்தல்வேண்டுமென்பதைத் திருவுளத் தடைத்து; ஒரு திவ்விய புத்திரரைப் பெறல்வேண்டுமென்னும் பேராசையினாலே, இல்லறத்திலிருந்து கொண்டே சர்வாபீஷ்டவரதராகிய தோணியப்பரையும் பெரியநாயகி யாரையும் நோக்கி, பரசமய நிராகரணம் பண்ணிச் சைவசமயஸ்தாபனஞ் செய்யவல்ல உயர்வொப்பில்லாத ஒரு சற்புத்திரரைப் பெறும் பொருட்டு, மிகுந்த அன்பினோடு தவஞ்செய்தார். அங்ஙனஞ் செய்த தபோபலம்பற்றி, தோணியப்பருடைய பெருங்கருணையினாலே, உலகமெல்லாம் உய்யும்படி, பகவதியாருடைய அருமைத் திருவயிற்றிலே, கர்ப்போற்பத்தியாகிய பெரும்பேறு உளதாயிற்று. சிவபாதவிருதயர் அதனை உணர்ந்து, திருவருளைத் துதித்து, மூளுகின்ற மகிழ்ச்சியோடு, தங்கள் வேதவிதிப்படி செய்ய வேண்டுஞ் சடங்குகளைப் பத்துமாசங்களினும் சுற்றத்தார்களோடு சிறக்கச் செய்து, பேரின்பத்தை நுகரு நாளிலே, சூரியன் முதலிய கிரகங்கள் உச்சங்களிலே மிக்கவலியுடன் நிற்க, திவ்வியலக்கினம் எழ, திருவாதிரை நக்ஷத்திரத்திலே, பரசமயத்தருக்கு நீங்கவும், வைதிகமார்க்கமும் சைவமார்க்கமுந் தழைத்தோங்கவும், பிராமணர்களுடைய ஆகுதிகள் பெருகவும், எம்மொழிகளினுந் தமிழ்மொழியே உயர்ச்சியடையவும், பலவுலகங்களுள்ளும் பூலோகமும் அப்பூலோகத்திலுள்ள பலநாடுகளுள்ளுந் தமிழ் நாடுமே சிறக்கவும், பிள்ளையார் திருவவதாரஞ் செய்தருளினார். அவருக்குச் சாதகருமம், நாமகரணம், அன்னப் பிராசனம், சௌளம் என்கிற கருமங்கள் உரிய காலங்களிலே மிகுந்த சிறப்போடு செய்யப்பட்டன.

பிள்ளையார், மூன்றாம் ஆண்டிலே, தம்முடைய தந்தையாராகிய சிவபெருமான் தம்மைச் சிவபாதவிருதயருக்குப் புத்திரராகக் கொடுக்க அவரைப் பிரிந்தமையால், ஓரோர்கால் அப்பிரிவு உள்ளத்திற்றோன்ற வெருக்கொண்டாற் போலக் குறிப்பயிலாய் அழுவர். இங்ஙன நிகழுநாளிலே வேறொரு நாள் தந்தையாராகிய சிவபாதவிருதயர் ஸ்நானம் பண்ணுதற்குப்போம் பொழுது, பிள்ளையார், பரமசிவனுடைய திருவருள் கூட, அவரைத் தொடர்ந்து அழுதுகொண்டு பின் சென்றார். பின்சென்ற பிள்ளையாரைத் தந்தையார் திரும்பிப் பார்த்து, கோபமுடையவர் போல விலக்குதலும் பிள்ளையார் கால்கொட்டி மீளாராக தந்தையார் "உன் செய்கை இதுவாயில் வா" என்று, கொண்டு சென்று, ஆலயத்தினுள்ளிருக்கின்ற தீர்த்தத்தை அடைந்து. அப்பிள்ளையாரைக் கரையிலே வைத்துவிட்டு, தாந்தீர்த்தத்தினுள்ளே இறங்கி நின்றுகொண்டு சங்கற்பம் அகமருஷண சூக்தபடன முதலியன செய்தார். பின்பு தந்தையார் ஸ்நானம் பண்ணும் பொழுது, பிள்ளையார் அவரைக் காணாது இறையளவாயினுந் தரியார் என்னும் நிலைமை தலைக்கீடாக, பரமசிவனுடைய திருவடிகளை வழிபட்ட முன்னுணர்ச்சி மூள கரையினின்று கண்களைக் கண்ணீர் ததும்பும்படி கைகளினாலே பிசைந்து அதரந்துடிக்க, எவ்வுலகங்களும் குதூகலிக்க, பொருமி அழுதார். தம்முடைய முற்சார்பை அறிந்தோ, பிள்ளைமையானோ, சுவாமியுடைய திருத்தோணிச்சிகரத்தைப் பார்த்து, "அம்மே, அப்பா" என்று அழைத்தழைத்து அழுதார், அப்பொழுது சுத்தசாட்குண்ணிய பரிபூரணராகிய தோணியப்பர் அவருடைய முற்றிருத்தொண்டை நினைந்து, அவருக்கு அருள் செய்தற்குத் திருவுளங்கொண்டு பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் எழுந்தருளி, தீர்த்தக்கரையை அடைந்து உலகமாதாவாகிய உமாதேவியாரை நோக்கி, "உன்னுடைய முலைப்பாலைப் பொன் வள்ளத்திலே கறந்து இவனுக்கு ஊட்டு" என்று அருளிச் செய்தார். பரிபக்குவர்களாகிய ஆன்மாக்களிடத்திலே சகசமாயுள்ள மலத்தை நீக்கி அவர்களைச் சிவத்தோடு இரண்டறக் கலப்பித்தருளும் பராசத்தியாகிய உமாதேவியார் சென்றணைந்து, தம்முடைய திருமுலைப்பாலப் பொன்வள்ளத்திலே கறந்து, சிவஞானத்தைக் குழைத்து, பிள்ளையாருடைய கண்ணீரைத் துடைத்து, கையிலே கொடுத்து ஊட்ட, சிவபெருமான் அழுகை தீர்த்து அநுக்கிரகஞ் செய்தருளினார். அப்பிள்ளையார் சர்வான்மாக்களுக்கும் பரமபிதாமாதாக்களாகிய சிவன் சக்தி இருவராலும் ஆளப்பட்ட மையினாலே ஆளுடைய பிள்ளையார் என்னும் பெயரும், அரிபிர மேந்திராதிதேவர்களுக்கும் முனிவர்களுக்கும் எட்டாத சிவஞானத்தோடு சம்பந்தஞ்செய்தலினாலே திருஞானசம்பந்தமூர்த்தி என்னும் பெயரும் உடையராயினார்.

சிவபாதவிருதயர் சிறிதுபொழுதிலே தம்முடைய நியமங்களை முடித்துக் கொண்டு கரையிலேறி, பரஞானக் கண்ணினாலே சிவத்தைத் தரிசித்து அதில் அதீதப்பட்டு நின்ற ஆளுடைய பிள்ளையாரை நோக்கி, "நீ யார் தந்த பாலை உண்டாய்" என்று கோபித்து, "எச்சில் மயங்க உனக்கு இதனைத் தந்தவரைக் காட்டு" என்று சொல்லி, கையில் எடுத்த ஒரு சிறிய மாறுகொண்டோச்ச, பிள்ளையார் ஆனந்தபாஷ்பஞ் சொரிய உச்சியின் மேல் எடுத்தருளிய ஒரு திருக்கை விரலினாலே சுட்டி, ஆகாயத்திலே இடபாரூடராகி உமாதேவியாரோடு நின்றருளிய பரமசிவனைக் காட்டி, உள்ளே நிறைந்து எழுந்த சத்தியஞானத் திருமொழியினாலே, எல்லையில்லாத வேதத்தினுட்சிறந்த தாற்பரியங்களெல்லாவற்றையும் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டுத் தமிழினாலே திருவாய்மலர்ந் தருளுதற்குத் திருவுளங்கொண்டு, அவ்வேதத்திற்கு ஆதியாகிய அக்ஷரத்தை மெய்யோடுபுணர்த்தி, தம்முடைய பாடல் சிவபெருமானுடைய திருச்செவியில் ஏறும் பொருட்டு முன்னர் அத்திருச்செவியையே சிறப்பித்து,

	"தோடுடை யசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்
	காடுடை யசுடலைப் பொடி பூசியென் னுள்ளங்கவர்கள்வ
	னேடுடை யமல ரான்முனை நாட்பணிந் தேத்த வருள் செய்த
	பீடுடை யபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே"

என்று பாடத் தொடங்கியருளினார். சிவபெருமான் தமக்குப் பிழை செய்த ஆன்மாக்களும் பின் தம்மை வந்தடையின் அவர்களுக்கு அநுக்கிரகஞ் செய்வாரென்பதை விளக்கும் பொருட்டு, தம்மை மதியாமல் தாம் வீற்றிருக்கின்ற திருக்கைலாசத்தை எடுத்துத் தன் வலியிழந்த இராவணன் பின் தம்மேல் இசைபாட அவனுக்கு அருள்புரிந்த திறத்தை எட்டாந்திருப்பாட்டிலும், எவ்வகைப்பட்ட சிறப்பினரும் சிவபெருமானை அன்போடு வழிபடினன்றி அவரை அடையார்கள் என்பதை விளக்கும் பொருட்டு, சிவபெருமான் தம்மை வணங்குகின்றவர்களுக்கே அருள்செய்வாரென நினைந்து அவரை வணங்காது வழுவாகிய மானத்தை மேற்கொண்டு மயங்கிய பிரமவிட்டுணுக்கள் இழிவாகிய பன்றியும் அன்னமுமாய்த் தேடியும் அடையாதவர்களாகிப் பின்பு திருவைந்தெழுத்தைத் துதித்தே உய்ந்த திறத்தை ஒன்பதாந் திருப்பாட்டிலும், வேதகாரணராகிய கடவுளை அடையுநெறியை அறிந்து உய்யாத சமணரும், புத்தருமாகிய கையர்களுடைய சமயங்கள் கபட மார்க்கங்கள் என்னுந் திறத்தைப் பத்தாந்திருப்பாட்டிலும், அமைத்துப் பாடியருளினார். இங்ஙனந்திருப்பதிகத்தை நிறைவித்து, திருக்கடைக்காப்புச் சாத்தித் தொழுதுகொண்டு நின்றார். சிவபெருமானுடைய பெருங்கருணையைக் கண்டு ஆகாயத்திலே தேவர்களெல்லாரும் புஷ்பமழை பொழிந்தார்கள். சிவபெருமான் தேவதுந்துபிகள் முழங்க, கந்தருவர்களும் கின்னரர்களும் கீதவொலி செய்ய, அரிபிரமேந்திராதி தேவர்களெல்லாரும் தோத்திரம் பண்ண, சிவகணநாதர்கள், ஹரஹர என்று சொல்லும் ஓசை தழைக்க, முனிவர்கள் தேவகோஷத்தோடு பக்கத்திலே சூழ, பார்வதி யாரோடு திருத்தோணிக்கு எழுந்தருளினார். திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் அதைக் கண்டு, அவரைத் தொடர்ந்து எழுகின்ற அன்பு மேலீட்டினாலே தம்முடைய கண் வழியே சென்ற கருத்து நீங்காமற் கலந்து செல்ல, சிவபிரான் எழுந்தருளிய திருக்கோயிலினுள்ளே பிரவேசித்தார். அந்தகோடி சிவபுண்ணியங்களைச் செய்து அப்பிள்ளையாருக்குப் பிதாவாயிருக்கப் பெற்றுக் கொண்ட சிவபாதவிருதயர் கைகுவித்து ஆனந்தக் கூத்தாடி, வெருட்சியும் வியப்பும் விருப்பும் அடைந்து, அவர் திருவாய் மலர்ந்தருளிய திருநெறித் தமிழின்பொருளை உணர்ந்தார். பரமசிவனைத் தனியே கண்டு தொடர்ந்த பிள்ளையாரைப் போலக் காணப்பெற்றிலராயினும், அங்கு நிகழ்ந்த அற்புதத்தைக் கண்டு, அது தோணியப்பருடைய திருவருளெனத் துணிந்து பேரானந்தத்தோடும் முன் சென்ற பிள்ளையாருக்குப் பின் சென்றார். அப்பொழுது அங்கே நிகழ்ந்ததைக் கேள்வியுற்ற பிராமணர்களெல்லாரும் உரோமப்புளகங் கொண்டு "இதற்கு ஒப்பாகிய அற்புதம் எங்கே நிகழ்ந்தது" என்று சொல்லிக்கொண்டு, திருக்கோயில்வாயிற்புறத்திலே வந்து சூழ்ந்தார்கள். பிள்ளையார் திருத்தோணியில் வீற்றிருந்தருளிய சிவபிரானை அடைந்து திருப்பதிகம்பாடி, திருக்கோயிலினின்றும் புறப்பட்டார். அது கண்ட பிராமணர்களும் மற்றையோர்களும் எதிர்கொண்டுவந்து நின்று, தோத்திரம் பண்ணி, பூமியிலே விழுந்து அவருடைய திருவடிகளை நமஸ்கரித்து, எழுந்தார்கள். சிவபாதவிருதயர் பிள்ளையாரை எடுத்து, தோளின்மேலே வைத்துக்கொண்டு, மங்கலவாத்தியங்கள் ஒலிக்க, பிராமணர்கள் வேதகோஷஞ்செய்ய, சிவனடியார்களெல்லாரும் ஸ்தோத்திரம் பண்ண, சீர்காழியை வலஞ்செய்துகொண்டு, தம்முடைய திருமாளிகையை அடைந்தார்.

திருஞானசம்பந்தப்பிள்ளையார், மற்றைநாள் பிராதக் காலத்திலே, ஆலயத்திற்சென்று, தம்முடைய பிதாமாதாக்களாகிய பரமசிவனையும் பார்வதியாரையும் வணங்கித் துதித்து, அருள்பெற்று, திருக்கோலக்கா வென்னுந் திருப்பதியை அடைந்து, திருக்கோயிலை வலஞ்செய்து முன்னின்று, கையினாலே ஒத்தறுத்துத் திருப்பதிகம் பாடத் தொடங்கினார். பாடும்பொழுது, சிவபெருமானுடைய திருவருளினாலே ஸ்ரீ பஞ்சாக்ஷரம் எழுதப்பட்டிருக்கின்ற பொற்றாளம் உலகமெல்லாம் உய்யும்படி பிள்ளையாருடைய திருக்கரத்தே வந்திருந்தது;. பிள்ளையார் அதைக் கண்டு, திருவருளை வியந்து, களி கூர்ந்து, ஏழிசையும் தழைத்தோங்க, திருப்பதிகத்தைப் பாடிமுடித்து, திருக்கடைக் காப்புச் சாத்தி நின்றார். அவர் பாடும் பொழுது, விண்ணுலகமும் அதிசயிக்கும்படி ஓங்கிய அதிமதுரநாதத்தை நோக்கித் தும்புரு நாரதர் முதலாகிய சங்கீதவித்துவான்கள் ஸ்தோத்திரஞ்செய்து, புஷ்பமாரி பொழிந்தார்கள். வேதசிவாகமங்கள் வாழும்படி திருவவதாரஞ் செய்தருளிய பிள்ளையார் மீண்டு சீர்காழிக்குப் போம்படி நடந்தார். நடக்கும் பொழுது, சிவபாதவிருதயர் தரிக்கலாற்றாமையால் தோளின் மேலே தரித்துக் கொள்ள, பிள்ளையார் அத்தோளின்மேல் எழுந்தருளி, சீர்காழியிலிருக்கின்ற திருக்கோயிலை அடைந்து, வலஞ்செய்து, சந்நிதானத்திலே நின்று திருப்பதிகம் பாடி வணங்கிக் கொண்டு, தம்முடைய திருமாளிகையை அடைந்து, அந்தச் சீர்காழியில் வாழுகின்றவர்களெல்லாரும் வாழும் பொருட்டு, தம்முடைய இளந்திருக்கோலக் காட்சியைக் கொடுத்து வீற்றிருந்தருளினார். அப்படியிருக்கும் பொழுது, அவருடைய தாயாராகிய பகவதியார் பிறந்த திருநனிப்பள்ளியில் இருக்கின்ற பிராமணர்கள் எல்லாரும் பெருமகிழ்ச்சியோடு அவ்விடத்திற்கு வந்து சேர்ந்து, அவரை வணங்கப் பெற்று இருந்தார்கள். பிள்ளையார் உலகமெல்லாம் உய்யும்படி சிவஞானம்பெற்ற பெருவார்த்தையைக் கேள்வியுற்று, சமீப ஸ்தலங்களிலிருக்கின்ற பிராமணர்களும் திருத் தொண்டர்களும் மற்றையனைவரும் அதிசயித்துத் திரண்டு வந்து, பிள்ளையாரை வணங்கி உய்ந்தார்கள்.

இங்ஙனநிகழுநாளிலே, திருநனிபள்ளியிற் பிராமணர்கள் பிள்ளையாரை வணங்கி "அடியேங்களெல்லாரும் உய்யும்படி திருவவதாரஞ் செய்தருளிய பரமகிருபாலுவாகிய சிவாமி! அடியேங்களுடைய வாசஸ்தானமாகிய திருநனிபள்ளியில் வீற்றிருக்குஞ் சிவபெருமானை வணங்கும்பொருட்டு அவ்விடத்திற்கு எழுந்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள். சிவானுபூதிப் பெருவாழ்வாகிய பிள்ளையார் அதற்கு இசைந்து; தோணியப்பரை வணங்கி, அருள்பெற்று, பிறதலங்களையும் வணங்கச் சென்றார். செந்தாமரை மலரினுஞ் சிறந்த அருமைத்திருவடிகள் தரையின் மேற் செல்வதையும் பிறரொருவர் தாங்குவதையும் பொறாத அன்பினையுடைய சிவபாதவிருதயர் வந்து எடுத்துத் தோளின் மேலே வைத்துக்கொண்டு சென்றார். திருநனிபள்ளிக்குச் சமீபித்த பொழுது, பிள்ளையார் "அந்தச் சோலை தோன்றும் பதி யாது" என்று வினவியருள; தந்தையார் "திருநனிபள்ளி" என்றார். அதுகேட்டு, திருப்பதிகம் பாடிக்கொண்டு திருக்கோயிலை அடைந்து சுவாமியை வணங்கிக் கொண்டு, அந்தஸ்தலத்தில் இருந்தார். பின் அவ்விடத்தினின்று நீங்கி, தலைச்சங்காடு, திருவலம்புரம், பல்லவனீச்சரம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, திருமுல்லைவாயில் என்னுந் தலங்களுக்குப் போய்ச் சுவாமிதரிசனஞ் செய்து, திருப்பதிகம் பாடிக்கொண்டு, மீண்டு சீர்காழியை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார். இருக்கு நாளிலே, திருமயேந்திரப்பள்ளி, திருக்குருகாவூர் முதலிய ஸ்தலங்களை வணங்கித் திருப்பதிகம் பாடினார்.

இப்படி நிகழும்காலத்திலே, திருநீலகண்டபெரும்பாணர் ஆளுடையபிள்ளையாரைத் தரிசிக்கும்பொருட்டு, விறலியாரோடு யாழ்கொண்டு சீர்காழியிலே வந்து சேர்ந்தார். பிள்ளையார் அவருடைய வரவை அறிந்து, இவரை எதிர்கொள்ள; அவர் பிள்ளையாருடைய திருவடிகளை நமஸ்கரித்து, ஸ்தோத்திரஞ் செய்தார். பிள்ளையார் அவரை அழைத்துக் கொண்டு, திருக்கோயிற் புறமுன்றிலே சென்று கும்பிடுவித்து, அவரை நோக்கி, "நீர் இங்கே சுவாமிக்கு யாழ் வாசியும்" என்றார். திருநீலகண்டப் பெரும்பாணர் யாழ் வாசித்தபின், பிள்ளையாரை வணங்கிக்கொண்டு பரமசிவன் மேலதாகிய பாணியை விறலியாரோடும் பாடி, யாழ்வாசிக்க; பிள்ளையார் மகிழ்ச்சியடைந்தார். திருநீலகண்டப் பெரும்பாணர் யாழ் வாசித்தபின், பிள்ளையார் அவரைக் கொண்டுபோய், அவருக்கு உறைவிடம் கொடுத்து, விருந்து செய்தார். திரு நீலகண்டப் பெரும்பாணர் சுவாமிமேலே பிள்ளையார் பாடிய திருப்பதிகங்களைக்; கேட்டு, பெருமகிழ்ச்சிகொண்டு, அவைகளின் இசைகளை யாழிலே இட்டு வாசித்தார். பின் பிள்ளையாரை நோக்கி, "சுவாமி! இன்னுந் தேவரீர் அருளிச் செய்யுந் திருப்பதிகங்களின் இசையை அடியேன் யாழிலே இட்டு வாசித்துக் கொண்டு தேவரீரைப் பிரிவின்றிச் சேவிக்கப் பெற வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்து தொழுதார். பிள்ளையார் திருவுள மகிழ்ந்து அதற்கிசைந்தருளினார். திருநீலகண்டப் பெரும்பாணர் அற்றைநாட்டொடங்கிப் பிள்ளையார் பாடுந் திருப்பதிகத்தினிசைகளை யாழிலே இட்டு வாசித்துக்கொண்டு என்று மகலாத நட்புடனிருந்தார்.

திருஞானசம்பந்தப் பிள்ளையார் பூமிக்குச் சுழுமுனா நாடியாகிய தில்லையில் விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்திலே திருநிருத்தஞ் செய்தருளும் சபாநாயகரைத் தரிசனஞ் செய்தற்கு விரும்பித் தந்தையாரோடும் திருநீலகண்டப் பெரும்பாணரோடும் அடியார்கள் பக்கத்திலே சூழ சீர்காழியைக் கடந்து சென்று, சிதம்பரத்தினது திருவெல்லையை அடைந்து நமஸ்கரித்துக் கொண்டு, அந்தத் திருப்பதியைச் சூழ்ந்த திருமதிலினது தெற்கு வாயிலை அடைந்து, தில்லைவாழந்தணர்களும் மற்றை யடியார்களும் மகா அலங்காரத்தோடும் எதிர்கொள்ளப் போய், திருவீதியைத் தொழுது, தூலலிங்கமாகிய கோபுரத்தை நமஸ்கரித்து, எழுந்து உள்ளே புகுந்து, திருமாளிகையை வலஞ்செய்து, பேரம்பலத்தை வணங்கிக் கொண்டு, கனகசபையை அடைந்தார். ஆயிரம் ஆதித்தப்பிரகாசம் கூடிய மண்டலம்போலக் குறைவற நிறைந்த ஞானசபையிலே, திருவருளே திருமேனியாகக் கொண்டு ஆனந்தத்தாண்டவஞ் செய்தருளுகின்ற சபாநாயகரைத் தரிசனம் பண்ணினார். உடனே, அவயவத்திலே யாதொரு சேட்டையுமின்றி, வாதனையினாலே திருக்கரங்கள் சிரத்தின் மேலேறிக் குவிய, உரோமாஞ்சங்கொள்ள, நாத்தழும்ப, விழிநீர்த்தாரை கொள்ள, சிவானந்தசாகரத்தில் அமிழ்ந்தி நின்று, "கற்றாங்கெரி" என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். பின்பு திருமாளிகையை வலஞ்செய்து புறப்பட்டு, திருமுன்றிலிலே நமஸ்கரித்து எழுந்து, கோபுரவாயிலைக் கடந்து பணிந்து, நான்கு திருவீதிகளையுந் தொழுது, அங்கே எழுந்தருளியிருத்தற்கு அஞ்சி, திருவேட்களத்தை அடைந்து சுவாமிதரிசனஞ் செய்து, திருப்பதிகம் பாடிக்கொண்டு அவ்விடத்தில் எழுந்தருளியிருந்தார். அங்கெழுந்தருளியிருந்து கொண்டே, சிதம்பரத்துக்கும் வந்து சபாநாயகரைத் தரிசிப்பார். அப்படியிருக்கு நாளிலே, திருக்கழிப்பாலைக்குப் போய், சுவாமி தரிசனஞ் செய்து, திருப்பதிகம் பாடினார். அவர் பாடுந் திருப்பதிக விசைகளை யாழ்ப்பாணரும் யாழிலிட்டு வாசிப்பாராயினார். ஒருநாள் பிள்ளையார் திருவேட்களத்தைக் கடந்து சிதம்பரத்தை அடைந்த பொழுது, சபநாயகருடைய திருவருளினாலே தில்லை வாழந்தணர் மூவாயிரரும் சிவகணநாதராய்த் தோன்றக் கண்டு, அத்தன்மையைத் திருநீலகண்டப் பெரும்பாணருக்குங் காட்டினார். தில்லைவாழந்தணர்கள் பிள்ளையாரைக் கண்டவுடனே வணங்க; பிள்ளையார் அவர்கள் வணங்குமுன் தாமும் வணங்கி, திருக்கோயிலிற் பிரவேசித்து, சபாநாயகரை வணங்கி "ஆடினாய் நறுநெய்யோடு பாறயிர்" என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். அந்தத் திருப்பதிகத்திலே "நீலத்தார் கரியமிடற்றார்" என்னுந் திருப்பாட்டிலே தில்லைவாழந்தணரைத் தாங்கண்டபடி கூறி, அவர்கள் "தொழு தேத்து சிற்றம்பலம்" என்று அருளிச் செய்தார். பின்பு திருக்கோயிலினின்றும் புறப்பட்ட பொழுது திருநீலகண்டப் பெரும்பாணர் பிள்ளையாருடைய திருவடிகளை வணங்கி நின்று, "சுவாமி! அடியேனுடைய ஜன்மஸ்தலமாகிய திருவெருக்கத்தம்புலியூர் முதலாக நிவாவென்னும் நதிக்கரையில் இருக்கின்ற தலங்களை வணங்குதற்கு எழுந்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.

ஆளுடையபிள்ளையார் அதற்கிசைந்தருளி, தந்தையார் முதலிய சமஸ்தரோடும், திருநீலகண்டப்பெரும்பாணர் திருவவதாரஞ்செய்த திருவெருக்கத்தம்புலியூருக்கும் திருமுதுகுன்றுக்கும் போய், சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு, பெண்ணாகடத்தை அடைந்தார். அங்கே திருத்தூங்கானை மாடம் என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற சுவாமியைத் தரிசனஞ் செய்துகொண்டு, திருநெல்வாயிலரத்துறைக்குப் போக விரும்பி, தந்தையாருடைய தோள்மேலிருத்தலை ஒழிந்து, அவர் மனம் வருந்தும்படி பிராமணர் முதலியோர் சூழ்ந்து செல்ல, திருவடித்தாமரை நோவ, பையப்பைய நடந்து, மாறன்பாடி என்னும் பதிவந்தவுடனே, வழி சென்ற வருத்தத்தினாலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டு, அப்பதியிற் சென்றார். அப்பொழுது சூரியன் அஸ்தமயனமாயிற்று.

அன்றிரவு பிள்ளையார் அடியார்களோடும் அந்தப் பதியிலேயே தங்கினார். திருவரத்துறையில் வீற்றிருக்கின்ற கடவுள் தம்முடைய திருக்குமாரராகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருடைய வழிவருத்தத்தைத் திருவுளத்தடைத்து, அவர் ஏறுதற்கு முத்துச்சிவிகையும், அவருக்கு நிழற்றுதற்கு முத்துக் குடையும், ஊதுதற்கு முத்துச் சின்னங்களுங் கொடுத்தருளத் திருவுளங்கொண்டு, அந்த ஸ்தலத்திலிருக்கின்ற பிராமணர்களெல்லாருக்கும் தனித்தனியே சொப்பனத்திலே தோன்றி, "ஞானசம்பந்தன் நம்மிடத்துக்கு வருகின்றான், நீங்கள் முத்துச்சிவிகையும் முத்துக்குடையும் முத்துச் சின்னங்களும் நம்மிடத்தில் எடுத்து அவனிடத்திற்குக் கொண்டுபோய்க் கொடுங்கள்" என்று ஆஞ்ஞாபித்து மறைந்தருளினார். உடனே பிராமணர்கள் விழித்தெழுந்து, மகிழ்ந்து, அற்புதமெய்திய சிந்தையோடும் ஆலயத்திலே வந்து கூடி, திருப்பள்ளியெழுச்சிக் காலம் வர, திருக்காப்பை நீக்கி, முத்துச்சிவிகையயும் முத்துக்குடையையும் முத்துச் சின்னங்களையும் கண்டு, ஆனந்தங்கொண்டு, துந்துபி முதலிய வாத்தியங்கள் ஒலிப்ப, சிவனடியார்களோடு, அந்தச் சிவிகை முதலாயினவற்றைத் தாங்கிக் கொண்டு, ஆளுடைய பிள்ளையாரிடத்திற்குப் போனார்கள். அதற்குமுன் பரமசிவன் ஆளுடைய பிள்ளையாருக்கும் சொப்பனத்திலே தோன்றி, "நாம் உனக்கு முத்துச்சிவிகையும் முத்துக்குடையும் முத்துச்சின்னங்களும் அனுப்புகின்றோம். நீ அவைகளை ஏற்றுக்கொள்" என்று திருவாய்மலர்ந்தருளினார். பிள்ளையார் விழித்தெழுந்து, தாங்கண்ட சொப்பனத்தைத் தந்தையாருக்கும் அடியார்களுக்கும் அருளிச்செய்து, வைகறையிலே விபூதி தரித்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொண்டு எழுந்தருளினார். சூரியோதய காலத்திலே பிராமணர்கள் சிவனடியார்களோடு ஹரஹர என்னும் ஓசையுடனே முத்துச்சிவிகை முதலியனவற்றைக் கொண்டு எதிரே வந்து, பிள்ளையாரை வணங்கி நின்று, "இவை திருவரத்துறையில் வீற்றிருக்கின்ற கடவுள் தந்த பொருள்கள், ஏற்றருளும்" என்றார்கள். பிள்ளையார் அதைக்கேட்டு, அக்கடவுளுடைய திருவருளை "எந்தையீசனெம்பெருமான்" என்னுந் திருப்பதிகத்தினாலே பாடி திருவருள் வடிவாகிய முத்துச்சிவிகையை வலஞ்செய்து, பூமியிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொண்டு, உலகமெல்லாம் உய்யும்படி, அதில் ஏறியருளினார். அப்பொழுது சிவனடியார்களெல்லாரும் ஆரவாரித்தார்கள். பிராமணர்கள் சமஸ்தரும் வேதகோஷஞ் செய்தார்கள். இந்திராதிதேவர்கள் ஆரவாரித்துப் புஷ்பமாரி பொழிந்தார்கள். பலவகைப்பட்ட மங்கலவாத்தியங்கள் ஒலித்தன. முத்துச்சிவிகையிலே ஏறியருளிய பரமகருணாநிதியாகிய திருஞானசம்பந்தப்பிள்ளையார், மேலே முத்துக்குடை நிழற்றவும் சிவனடியார்களும் பிராமணர்களும் நெருங்கி ஆனந்தமேலீட்டினாலே கூத்தாடித் தங்கள் கண்களின்றும் பொழிகின்ற ஆனந்தவெள்ளத்தினுள்ளே குளிக்கவும், முத்துச்சின்னங்கள் "சமஸ்தலோகங்களும் சிவனடியார்களும் வேதங்களும் உய்யும்படி சைவசிகாமணி வந்தார்; சிதசித்துப்பிரபஞ்சங்களெங்கும் வியாபித்திருக்கின்ற உமாதேவியார் ஞானப்பாலூட்ட உண்ட திருஞானசம்பந்த மூர்த்தி வந்தார். வேதாகமாதி சமஸ்த சாத்திரங்களையும் ஓதாதுணர்ந்த முத்தமிழ் விரகர் வந்தார்" என்று ஊதவும், சென்று, திருவரத்துறையை அடைந்து, கோபுர வாயிலுக்குத் தூரத்திலே முத்துச்சிவிகையினின்றும் இறந்கி, நமஸ்கரித்து எழுந்து, திருக்கோயிலினுள்ளே பிரவேசித்து, வலஞ்செய்து சந்நிதானத்திலே நமஸ்கரித்து, திருப்பதிகம் பாடி சில நாள் அந்தஸ்தலத்தில் எழுந்தருளியிருந்தார். இருக்குநாளிலே, திருநெல்வெண்ணெய் முதலிய தலங்களுக்குப் போய், சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு திரும்பினார்.

திருஞானசம்பந்த மூர்த்திநாயனார், சில நாளாயினபின், சீர்காழிக்குத் திரும்பும்படி திருவுளங்கொண்டு, அத்திருவரத்துறையில் வீற்றிருக்குங்கடவுளை வணங்கி விடைபெற்று, முத்துச்சிவிகையில் ஏறிச்சென்று, திருப்பழுவூர், திருவிசயமங்கை, திருவைகா, திருப்புறம்பயம் என்னுந்தலங்களை வணங்கிக் கொண்டு, திருசேய்ஞலூரின் எல்லையை அடைந்து, அது சண்டேசுரநாயனார் திருவவதாரஞ்செய்த திருப்பதியாதலால் முத்துச்சிவிகையினின்று இறங்கி, அத்திருப்பதியினுள்ளே நடந்து போய், ஆலயத்திலே பிரவேசித்து, சுவாமிதரிசனஞ் செய்து"பீரடைந்தபாலதாட்ட" என்னுந் திருப்பதிகம் பாடினார். பின்பு, திருப்பனந்தாள், திருப்பந்தணைநல்லூர், திருவோமாம்புலியூர், திருவாளொளிபுற்றூர், திருக்கடம்பூர், திருநாரையூர், திருக்கருப்பறியலூர் என்னுந் தலங்களை வணங்கிக்கொண்டு சீர்காழிக்குச் சமீபத்திலே போனார். போம்பொழுது, சீர்காழியிலிருக்கின்ற பிராமணர்க ளெல்லாரும் அவருடைய வரவைக் கேள்வியுற்று, மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, திருவீதிகளை அலங்கரித்து, எதிர்கொள்ளும்படி திரண்டுசென்று, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை முத்துச்சிவிகையின் மேலே முத்துக்குடை நிழலின் கீழே தரிசித்தார்கள், தரிசித்தவுடனே கைகள் சிரசின்மேலேறிக் குவிய, கண்ணும் மனமுங்களிக்க, அவரைச் சூழ்ந்து ஸ்தோத்திரம் பண்ணினார்கள். பிள்ளையார் முத்துச்சிவிகையினின்றும் இறங்கி, அவர்களோடு கூடச்சென்று, திருக்கோயிலை அடைந்து சுவாமி தரிசனஞ்செய்து, திருப்பதிகம் பாடிக்கொண்டு, புறப்பட்டுச் சென்றார். செல்லும்பொழுது திருநீலகண்டப் பெரும்பாணர் பின்னேவர, அவருக்கு வீட்டுக்குப் போம்படி விடை கொடுத்து, தாம் தம்முடைய திருமாளிகைக்கு எழுந்தருளினார். எழுந்தருளும் பொழுது, பார்ப்பனிகள் நெருங்கி, நிறைகுடம் தீபம் முதலாயின ஏந்த, தாயாராகிய பகவதியார் வந்து, திருநீற்றுக்காப்புச்சாத்தி, வணங்கித் துதிக்க; பிள்ளையார் அவருக்கு அருள்செய்து, திருமாளிகையினுள்ளே பிரவேசித்தார்.

திருஞானசம்பந்தப் பிள்ளையார் தினந்தோறும் தோணியப்பரை தரிசனஞ்செய்து, திருப்பதிகம் பாடிக்கொண்டிருக்கு நாளிலே; உபநயனப்பருவம் வர, பிராமணர்கள் வேதவிதிப்படி உபநயனச் சடங்கு செய்ய, சிவானுபூதிப் பெருஞ்செல்வராகிய திருஞானசம்பந்தப்பிள்ளையார், தமக்கு அதுவேண்டுவதன்றாயினும், உலகத்திலே வைதிக கர்மத்தை நாட்டல் வேண்டுமெனத் தமது திருவுளத்திலே முகிழ்த்த பெருங்கருணையினாலே அதற்கிசைந்து, யக்ஞோபவீத தாரணஞ் செய்தருளினார். பின்பு பிராமணர்கள் "உமக்கு நான்கு வேதத்திற்கும் அதிகாரந்தந்தோம்" என்று சொல்லி, மந்திரோபதேசஞ்செய்யப் புகும்பொழுது, பிள்ளையார் எண்ணிறந்த வேதங்களை ஓதி, அவற்றிற்கு அங்கமாகிய பல்கலைகளையும், எடுத்துச் சொல்லியருளினார். பிராமணர்கள் அவர் பரமசிவனுடைய திருவருள் பெற்றமையை நினைந்து வியந்து, அவரை நமஸ்கரித்து ஸ்தோத்திரஞ்செய்து, தாங்கள் முன் பயின்ற வேதங்களை அவரித்திற்கேட்டு, ஐயந்திரிபற உணர்ந்தார்கள். பரமாசாரியாராகிய ஆளுடைய பிள்ளையார் அந்தப் பிராமணருடைய சந்தேகந்தீரும் படி எல்லாவற்றையும் அருளிச் செய்து, பின் சகலமந்திரங்களுக்கும் வித்து ஸ்ரீபஞ்சாக்ஷரம் என்பதை அவர்களுக்கும் மற்றையாவருக்கும் விளக்கும்பொருட்டு, "துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்" என்னும் பஞ்சாக்ஷரத் திருப்பதிகத்தைப் பாடியருளினார். அந்தத் திருப்பதிகத்திலே "வேதியர்க் கந்தியுண் மந்திரமஞ் செழுத்துமே" என்றருளிச் செய்தார். பிராமணர்கள் அதைக்கேட்டு மனமகிழ்ந்து; அவருடைய திருவருளைத் தலைமேற்கொண்டு, வணங்கித் துதித்து உய்ந்தார்கள்.

ஆளுடையப்பிள்ளையார் தினந்தோருந் தோணியப்பரை வணங்கித் திருப்பதிகம் பாடிக்கொண்டு, அடியார்களோடும் இருக்குநாளிலே; திருநாவுக்கரசுநாயனார் அவருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவரை வணங்குவதற்கு நினைந்து, சீர்காழிக்குச் சமீபத்திலே வந்தருளினார். பிள்ளையார் அதைக்கேட்டுத் திருவுளமகிழ்ந்து, அடியார்கூட்டத்தோடும் அவரை எதிர்கொள்ளப் போனார். எதிரேவந்த திருநாவுக்கரசு நாயனார் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரை வணங்க; திருஞானசம்பந்த மூர்த்திநாயனாரும் அவரை வணங்கித் திருக்கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போய், சுவாமி தரிசனஞ்செய்வித்து; தம்முடைய திருமாளிகையிற்கொண்டு சென்று திருவமுது செய்வித்தார். சிலநாளாயினபின் திருநாவுக்கரசு நாயனார் பிறதலங்களை வணங்கும்படி செல்ல; திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருக்கோலக்கா வரைக்கும் அவரோடு சென்று, சீர்காழிக்குத் திரும்பிவிட்டார். அங்கே தோணியப்பர் மேலே பலவகைப்பட்ட திருப்பதிகங்களைப் பாடிக்கொண்டிருந்தார். அவைகளெல்லாவறையும் திருநீலகண்டப்பெரும்பாணர் விறலியாரோடும் பாடி, யாழில் இட்டு வாசித்துக் கொண்டு பிள்ளையாரோடு சீர்காழியில் இருந்தார்.

சிலநாட் சென்றபின், திருஞானசம்பந்தப் பிள்ளையார் தந்தையாரையும் மற்றைப் பிராமணர்களையும் நோக்கி, "இந்தத் தமிழ் நாட்டிலுள்ள சிவஸ்தலங்களெங்குஞ்சென்று சுவாமி தரிசனஞ்செய்து திருப்பதிகம் பாடிக்கொண்டு இங்கே வருவேன்" என்றார். தந்தையார் "நான் அருமையாக உம்மைப் பெற்றமையால் உம்மைப் பிரிந்திருக்கமாட்டேன். இருமைக்கும் இன்பம் பயக்கும் யாகமும் நான் செய்ய வேண்டும். இன்னுஞ் சிலநாள் உம்முடன் யாத்திரை செய்வேன்" என்றார். பிள்ளையார் அதற்கு இசைந்து, தோணியப்பரை வணங்கி விடைபெற்றுக்கொண்டு, தந்தையார் பின்வர, முத்துச்சிவிகை மேற்கொண்டு, முத்துக்குடை நிழற்ற, திருநீலகண்டப் பெரும்பாணரோடும் மற்றையடியார்களோடுஞ் சென்று, திருக்கண்ணார் கோயிலை வணங்கிக் கொண்டு, காவேரிக்கு வடபாலிலே மேற்றிசை நோக்கிப் போய், திருப்புள்ளிருக்குவேளூர், திருநன்றியூர், திருநீடூர், திருப்புன்கூர், திருமண்ணிப்படிக்கரை, திருக்குறுக்கை, திருவன்னியூர், திருப்பந்தணநல்லூர், திருமணஞ்சேரி, திருவெதிர்கொள்பாடி, திருவேள்விக்குடி, திருக்கோடிக்கா, கஞ்சனூர், திருமங்கலக்குடி, திருவியலூர், திருந்துதேவன்குடி, திருவின்னம்பர், வடகுரங்காடு துறை, திருப்பழனம், திருவையாறு, திருப்பெரும்புலியூர், திருநெய்த்தானம், திருமலபாடி, திருக்கானூர், திருவன்பிலாலந்துறை, திருமாந்துறை என்னுந் தலங்கடோறூம் போய், சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடினார்.

பின் மழநாட்டிலே காவேரி வடகரையே சென்று, திருப்பாச்சிலாச்சிராமத்துக்குச் சமீபிக்குமுன்; அந்நகரத்திலே கொல்லி மழவன், தன்னுடைய புத்திரி முயலகனென்னும் நோயினால் வருந்துதலைக் கண்டு, கவலையுற்று, வேறொரு பரிசினாலும் நீங்காமைகண்டு, தான் சைவபரம்பரையோனாதலால் அவளைத் திருக்கோயிலினுள்ளே கொண்டே போய் சுவாமி சந்நிதானத்திலே இட்டு வைத்தான். ஆளுடைய பிள்ளையார் அந்நகரத்திற்குச் சமீபிக்கும்பொழுது, "திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் எழுந்தருளிவந்தார்" என்று ஊதுகின்ற திருச்சின்னத்தின் ஓசையைக் கேட்டு, கொல்லி மழவன் புத்திரியைவிட்டு விரைந்து சென்று, அந்நகரத்தை மிக அலங்கரிப்பித்து பிள்ளையாரை எதிகொண்டு, ஆனந்த பாஷ்பஞ்சொரிய, முத்துச்சிவிகைக்கு முன்னே அடியற்ற மரம்போல விழுந்தான். அது கண்டு, பிள்ளையார் "எழுக" என்று அருளிச் செய்ய; கொல்லிமழவன் எழுந்து மனமகிழ்ந்து, சிரசின்மேலே கைகுவித்துக்கொண்டு பிள்ளையாருடன் சென்றான். பிள்ளையார் திருக்கோயிற் கோபுரத்துக்குச் சமீபித்தவுடனே, முத்துச்சிவிகையினின்றும் இறங்கி, உள்ளே பிரவேசித்து, வலஞ்செய்துகொண்டு, சந்நிதானத்திலே போனார். போன பொழுது, அறிவு கெட்டு நிலத்திலே கிடக்கின்ற கன்னியைக் கண்டு, "இஃதென்னை" என்று வினாவ; மழவன் வணங்கி நின்று, "இவள் அடியேனுடைய புத்திரி. இவள் முயலகனென்னும் நோயினால் மிக வருந்துகின்றமையால் இவளைச் சுவாமி சந்நிதானத்திலே கொணர்வித்தேன்" என்று விண்ணப்பஞ் செய்தான். திருஞானசம்பந்தப்பிள்ளையார் அதைக்கேட்டு, அருள்சுரந்து, அவ்விடத்திலே நின்றே சுவாமியை நமஸ்கரித்து, அவளுடைய நோயை நீக்கும்பொருட்டு, "துணிவளர் திங்கள்" என்றெடுத்து, "மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோவிவர் மாண்பே" என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். அப்பொழுது அந்தக் கன்னி நோய் நீங்கி, எழுந்து ஒல்கிவந்து, தந்தையின் பக்கத்தை அடைந்தாள். அது கண்ட மழவன் மிகுந்த மகிழ்ச்சிகொண்டு, அவளோடும் பிள்ளையாரை விழுந்து நமஸ்கரித்தான். பிள்ளையார் அங்கே சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு. சில நாள் எழுந்தருளி இருந்தார்.

அதன்பின் பிள்ளையார் திருப்பைஞ்ஞீலியையும் திருவீங்கோய் மலையையும் வணங்கிக்கொண்டு கொங்க தேசத்திலே காவேரிக்குத் தென்கரையிற் சென்று, திருக்கொடி மாடச் செங்குன்றூரை அடைந்து, சுவாமிதரிசனஞ்செய்து கொண்டிருந்தார். இருக்கு நாளிலே திருநணாவிற்கும் போய்த் திருப்பதிகம் பாடி, திருக்கொடிமாடச்செங்குன்றூருக்குத் திரும்பி விட்டார். அங்கே எழுந்தருளியிருக்கும் பொழுது, மழைக்காலம் நீங்கிப் பனிக்காலம் வர, குளிர் மிருந்தது. அப்பொழுது பிள்ளையாருடைய பரிசனங்கள் நளிர்சுரத்தினால் வருத்தமுற்றுப் பிள்ளையாரை வணங்கி அவருக்கு விண்ணப்பஞ் செய்தார்கள். பிள்ளையார் "அவ்வினைக்கிவ்வினை" என்னும் திருநீலகண்டப் பதிகத்தைப் பாடியருளினார். உடனே அந்நகரவாசிகளுக்கு மாத்திரமேயன்றி, அந்நாளிலே பனிப்பிணி அந்நாடு முழுதுந்தீர்ந்தது. பிள்ளையார் சிலநாள் அங்கெழுந்தருளியிருந்து, பின் அவ்விடத்தை நீங்கி, திருப்பாண்டிக்கொடுமுடி, திருவெஞ்சமாக் கூடல், திருக்கருவூர் என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு கொங்கநாட்டைக் கடந்து, சோழநாட்டை அடைந்தருளினார்.

சோழமண்டலத்திலே திருப்பராய்த்துறை, திருக்கற்குடிமலை, திருமூக்கீச்சரம், திருச்சிராப்பள்ளி, திருவானைக்கா, திருப்பாற்றுறை, திருவெறும்பியூர், திருநெடுங்களம், மேலைத்திருக்காட்டுப்பள்ளி, திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி, திருக்கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருவெண்ணி, திருச்சக்கரப்பள்ளி, திருப்புள்ளமங்கை, திருநல்லூர், திருக்கருகாவூர், திருவவளிவணனல்லூர், திருப்பரிதிநியமம், திருப்பூவனூர், திருவாவூர் என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு, திருவலஞ்சுழியை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார். இருக்குநாளிலே முதிர்வேனிற்காலம் வந்தது. அம்முதிர்வேனிற்காலத்திலே பிள்ளையார் திருவலஞ்சுழியின்றும் நீங்கி, திருப்பழையாறைக்குப் போதற்கு அடியார்கள் உடன் செல்லச் சென்றருளி திருவாறைமேற்றளியை அடைந்து வணங்கி, திருச்சத்திமுற்றத்திற்சென்று, சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு திருப்பட்டீச்சரத்துக்குப் போகப் புறப்பட்டார். அப்பொழுது வெய்யில் வெப்பத்தைத் தனிக்கும் பொருட்டு, பிள்ளையாருடைய திருமுடியின்மேலே, சிவபூதம் முத்துப்பந்தரை எடுத்து "பட்டீசர் எம்மை விடுத்தருளினார்" என்று சொல்லிற்று. அந்தச் சொல்லும் முத்துப்பந்தரும் ஆகாயத்திலே தோன்ற; பிள்ளையார் திருவருளைத் துதித்து, பூமியிலே விழுந்து நமஸ்கரித்தார். பிள்ளையாருடைய பரிசனங்கள் அந்த முத்துப்பந்தரைக் காம்பிலே பிடித்தார்கள். பிள்ளையார் அந்த முத்துப்பந்தர் நிழற்றச் சென்று திருப்பட்டீச்சரத்தை அடைந்து, சுவாமி தரிசனஞ் செய்தார். பின் அவ்விடத்தினின்றும், நீங்கி, திருவாறைவடதளி, திருவிரும்பூளை, திருவரதைப்பெரும்பாழி; திருச்சேறை, திருநாலூர்மயானம், திருக்குடவாயில், திருநாறையூர், அரிசிற்கரைப்புத்தூர், திருச்சிவபுரம், திருக்குடமூக்கு, திருக்குடந்தைக்காரோணம், திருநாகேச்சரம், திருவிடைமருதூர், திருக்குரங்காடுதுறை என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு, திருவாவடுதுறையை அடைந்தார்.

திருவாவடுதுறையிலே சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருக்கு நாளிலே, சிவபாதவிருதயர் பிள்ளையாரை நோக்கி, "நான் யாகஞ்செய்தற்கு ஆகுங்காலஞ் சமீபித்தது. அது செய்யும்படி போதற்குப் பொருள் தரல்வேண்டும்" என்றார். பிள்ளையார் அதைக் கேட்டு, திருக்கோயிலிற் சென்று வணங்கி, "இடரினுந்தளரினும்" என்னுந் திருப்பதிகம் பாடினார். அப்பொழுது, பரமசிவனுடைய திருவருளினாலே, ஒருபூதம் விரைந்து வந்து, பீடத்தின் மேலே ஆயிரம்பொன் பொருந்திய கிழியொன்று வைத்து, முன்னே நின்று, "இந்தக்கிழி பொன்னுலவாக்கிழி இது பரமசிவனால் உமக்கு அருளிச் செய்யப்பட்டது" என்று சொல்ல; பிள்ளையார் திருவருளை நினைந்து, நமஸ்கரித்து எழுந்து கும்பிட்டு, பீடத்தின் மேலே வைக்கப்பட்ட பொற்கிழியைச் சிரமேற்கொண்டு, தந்தையார் கையிற் கொடுத்து, "பரமசிவனையே தலைவராக நினைந்து வேதவிதிப்படி செய்யப்படும் யாகத்தை நீருஞ் சீர்காழியில் இருக்கின்ற மற்றப்பிராமணர்கள் சமஸ்தரும் செய்ய, இக்கிழி குறையாது முகும்" என்று சொல்லி, சீர்காழிக்குப் போம்படி அவருக்கு விடைகொடுத்து அனுப்பி, தாந்திருவாவடுதுறையில் எழுந்தருளியிருந்தார்.

சிலநாட்சென்ற பின் அவ்விடத்தை அகன்று, திருக்கோழம்பம், திருவைகன் மாடக்கோயில், திருநல்லம், திருவழுந்தூர், திருத்துருத்தி, மாயூரம், திருச்செம்பொன் பள்ளி, திருவிளநகர், திருப்பறியலூர், திருவேட்டக்குடி என்னுந் தலங்களைத் தரிசித்துக் கொண்டு, தருமபுரத்தை அடைந்தார். அந்தத் தருமபுரம் திருநீலகண்டப் பெரும்பாணருடைய தாயார் பிறந்த தலமாதலால், அங்குள்ள அவருடைய சுற்றத்தார்கள் வந்து எதிர்கொண்டு வணங்கித் துதித்தார்கள். அது கண்டு, திருநீலகண்டப் பெரும்பாணர் பிள்ளையார் அருளிச்செய்த அருமையாகிய திருப்பதிகங்களின் இசையைத் தாம் யாழில் இட்டு வாசிக்கப்பெற்ற பெரும்பேற்றை அவர்களுக்கு அருளிச்செய்தார். அவர்கள் அதைக் கேட்டு "நீர் திருப்பதிகவிசையை அளவு பெற யாழிலே அமைத்து வாசித்தலினாலே உலகமுழுதிலும் இசை விளங்குக" என்றார்கள். உடனே பெரும்பாணர் மன நடுங்கி, பிள்ளையாருடைய திருவடிகளை வணங்கி நின்று, "சுவாமி! திருப்பதிகவிசை அளவுபடாத தன்மையை இவர்களேயன்றி உலகத்திலுள்ள மற்றையாவரும் அறிந்து உண்மையை உணர்ந்து உய்யும்பொருட்டுத் தேவரீர் ஒரு திருப்பதிகம் பாடியருளுவீராகில், அடியேன் அதனிசை யாழிலே அடங்காமையைக் காட்டப்பெறுவேன்" என்றார். அப்பொழுது பிள்ளையார் பரமசிவனை வணங்கிக் கொண்டு, திருப்பதிகத்தின் உண்மை பூமியிலுள்ளோருடைய கண்டத்திலும் யாழிலும் இசைநூலிற் கூறப்பட்ட இசை முயற்சிகளினால் அடங்காமையைக் காட்டும் பொருட்டு, "மாதர் மடப்பிடி" என்னும் திருப்பதிகத்தைப் பாடியருளினார். திருநீலகண்டப் பெரும்பாணர் அத்திருப்பதிக இசையைத் தம்முடைய யாழ் நரம்பிலே முன்போல இட்டு வாசிக்கப்புக; அது அதனிடத்தே அடங்கிற்றில்லை அப்பொழுது திருநீலகண்ட பெரும்பாணர் அதனை விட்டு அச்சங்கொண்டு பிள்ளையாருடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து, எழுந்து, "சுவாமி அருளிச் செய்த திருப்பதிகத்தினிசையை யாழிலே ஏற்பேன் என்று சொல்லப்பண்ணியது. இந்த யாழன்றோ" என்று அதனை உடைக்கும்படி ஓங்கினார். உடனே பிள்ளையார் தடுத்தருளி, "ஐயரே நீர்! இந்த யாழைத் தாரும்" என்று வாங்கிக்கொண்டு, "ஐயரே நீர்! இந்த யாழை முரிப்பது என்னை! பரமசிவனும் பார்வதியம்மையாரும் அருளிச் செய்த திருவருளின் பெருமையெல்லாம் இந்தக் கருவியில் அளவுபடுமா! மனசினாலும் அளவுபடாத இசைப்பெருமை செய்கையினால் அளவுபடுமோ! அளவுபடாதே. நீர் இந்த யாழைக்கொண்டே சுவாமியுடைய திருப்பதிக இசையை இயன்ற மட்டும் இதில் அமைத்து வாசியும்" என்று சொல்லி, திருநீலகண்டப் பெரும்பாணர் கையிலே யாழைக் கொடுத்தருளினார். பெரும்பாணர் பிள்ளையாரைத் தொழுது, யாழை வாங்கி, சிரமேற்கொண்டார்.

சிலநாட் சென்றபின், பிள்ளையார் தருமபுரத்தை அகன்று, திருநள்ளாற்றை அடைந்து திருக்கோயிலிற் பிரவேசித்து சுவாமியை வணங்கி"போகமார்த்த பூண்முலையாள்" என்னும் திருப்பதிகத்தை யாழ்நரம்பிலே இசை கூடும்படி பாடிமுடித்து, புறத்தணைத்து, பெரும்பாணரை நோக்கி, யாழில் இட்டு வாசிக்கும்படி பணித்து, திருத்தாளங் கொண்டு பாடினார். பெரும்பாணர் அத்திருப்பதிக இசையை யாழில் இட்டு வாசித்தார். அதுகேட்டுப் பிள்ளையார் திருவுள மகிழ்ந்தருளினார். பின் பிள்ளையார் திருநள்ளாற்றினின்றும் நீங்கி திருச்சாத்தமங்கைக்குச் சமீபித்து அந்தத் திருப்பதியினின்று, வந்து தம்மை எதிர்கொண்டு வணங்கிய திருநீலநக்கநாயனாரோடு சென்று, அயவந்தியென்னும் ஆலயத்திற்சென்று; சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு திருநீலநக்கநாயனாருடைய திருமாளிகைக்குப் போய்த் திருவமுது செய்து, அன்றிரவு அங்கே பள்ளி கொண்டார். மற்ற நாள் பிராதக்காலத்தில் திருநீலநக்கநாயனாரோடும் அந்தியிற் சென்று, சுவாமிதரிசனஞ் செய்து திருநீலநக்க நாயனாரைச் சிரப்பித்துத் திருப்பதிகம் பாடினார்.

சிலநாளாயினபின், திருநீலநக்கநாயனருக்கு விடை கொடுத்துத் திருச்சாத்தமங்கையை நீக்கி, திருநாகைக்காரோணம், கீழ்வேளூர் என்னுந்தலங்களை வணங்கிக் கொண்டு, பிற தலங்களையும் வணங்கும்படி எழுந்தருளினார். அப்பொழுது திருச்செங்காட்டாங் குடியில் இருக்கின்ற சிறுத்தொண்டநாயனார் அதனைக் கேள்வியுற்று ஓடிச்சென்று பிள்ளையாரை எதிர்கொண்டு, தம்முடைய திருப்பதியில் அழைத்துக் கொண்டு போனார். பிள்ளையார் அப்பதியிலிருக்கின்ற கணபதீச்சரமென்னுந்திருக் கோயிலை வணங்கி, சிறுத்தொண்ட நாயனாரைச் சிறப்பித்துத் திருப்பதிகம் பாடி அந்நாயனாருடைய வீட்டிலேபோய்த் திருவமுது செய்து கொண்டு அங்கெழுந்தருளியிருந்தார். சில நாளாயின பின், திருமருகலுக்குப் போய், சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு அங்கிருந்தார். அந்நாளிலே, ஒரு வணிகன் வழிச்செல்வோனாகி ஒரு கன்னியையும் உடன்கொண்டு கோயிலுக்குப் புறத்திலே ஒரு மடத்தில் இராத்திரியில் நித்திரை செய்யும்போது, பாம்பினாலே தீண்டப்பட்டு மாண்டான். அதுகண்டு அக்கன்னியானவள் தளர்ந்து அவனைப் பாம்பு தீண்டியும் தான் தீண்டாமல், சமீபத்திலே வீழ்ந்து புரண்டு அழுதாள், அப்போது விஷ வைத்தியர் வந்து தீர்க்கவுந் தீராதாயிற்று. விடியற்காலத்திலே அக்கன்னிகை மிக அயர்ந்து புலம்பி. திருக்கோயிலின் வாயிற்றிக்கை நோக்கிக் கைதொழுது, "தேவர்கள் உய்யும் பொருட்டு நஞ்சை அமுதாக்கிய கடவுளே! வெந்து பொடியாகிய மன்மதனுடைய உயிரை அவன் மனைவியாகிய இரதி வேண்ட அருளிச்செய்த கருணா நிதியே! மார்க்கண்டேயர் பொருட்டு இயமனை உதைத்த திருவடித் தாமரைகளையுடையவரே! திருமருகலில் வீற்றிருக்கும் பரமசிவனே! தேவரீர் இந்தக்கொடிய விஷம் நீங்கும் பொருட்டும் அடியேன் துக்கசாகரத்தினின்று கரையேறும் பொருட்டும் அருள்செய்யும்" என்று பிரார்த்தித்தாள். அவ்வோசையைச் சுவாமிதரிசனஞ் செய்யும்படி எழுந்தருளிவருகின்ற திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் கேட்டு திருவுளம் இரங்கி, அவளுக்கு அருள்செய்யும் பொருட்டு அடியார்களோடு எழுந்தருளிவந்து நின்று, அவளை நோக்கி "பயப்படாதே! நிகழ்ந்த சமாசாரத்தைச் சொல்" என்று அருளிச் செய்தார். கன்னிகை கண்ணீர்சொரிய, பிள்ளையாருடைய திருவடியிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்று,"வைப்பூரில் இருக்கின்ற தாமனென்னும் பெயரையுடைய என் பிதாவுக்குப் புத்திரிகள் எழுவர். அவர்களில் என்னை ஒழிய மூத்தோர் அறுவரையும் தன் மருமகனாகிய இவனுக்கே விவாகஞ்செய்து கொடுப்பேன் என்று சொல்லிச் சொல்லி, பிறரிடத்திலே திரவியம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு விவாகஞ்செய்து கொடுத்து விட்டான். அது கண்டு மனவருத்தமுற்ற இவனுக்கே நான் மனைவியாதல் வேண்டும் என நினைந்து, என் பிதாமாதாக்களை மறைத்து இவனையே சார்ந்து வந்தேன். இவனும் பாம்பினாலே தீண்டப்பட்டு இறந்தான். அடியேன் கடனடுவே கலங்கவிழப் பெற்றார் போல நிற்கின்றேன். தேவரீர் எழுந்தருளிவந்து, அடியேனுடைய துன்பமெல்லாம் நீங்க அருள் செய்தீர்" என்றாள். பிள்ளையார் விஷம் நீங்கும் பொருட்டுத் திருமருகற்கடவுள் மேல் "சடையா யெனுமால்" என்னுந் திருப்பதிகம் பாடியருளினார். உடனே வணிகன் விடந்தீர்ந்து எழுந்து, பிள்ளையாரை நமஸ்கரித்தான். அது கண்ட திருத்தொண்டர்களெல்லாரும் ஆரவாரித்தார்கள். கன்னிகை மனமகிழ்ந்து, பிள்ளையாருடைய திருவடியிலே விழுந்து வணங்கினாள். பிள்ளையார் அக்கன்னிகையையும் வணிகனையும் மணம்புணரும்படி செய்து அவர்களுக்கு விடைகொடுத்து, அங்கே எழுந்தருளியிருந்தார். இருக்கு நாளிலே, சிறுத்தொண்டநாயனார் வந்து பிரார்த்திக்க; பிள்ளையார் மீண்டும் திருச்செங்காட்டாங் குடிக்கு எழுந்தருள விரும்பி அடியாரொடும் அத்திருமருகற் கோயிலிற் சென்று வணங்க; பரமசிவன் தாந்திருச்செங்காட்டாங் குடியிலிருக்கின்ற திருக்கோலத்தை அவருக்கு அங்கே காட்டியருளினார். பிள்ளையார் அதுகண்டு மனமகிழ்ந்து, "அங்கமும் வேதமு மோதுநாவர்" என்னுந் திருப்பதிகம்பாடி, அந்தத் திருப்பதியிலே தானே எழுந்தருளியிருந்தார்.

சிலநாட்சென்றபின் அத்திருப்பதியை நீங்கி, தம்மைத் தொடர்ந்த சுறுத்தொண்டநாயனாருக்கு விடைகொடுத்து, சிவஸ்தலங்கள் பலவற்றை வணங்கிக்கொண்டு, திருப்புகலூருக்குச் சமீபித்து, அப்பதியினின்று வந்து தம்மை எதிர்கொண்டு வணங்கிய முருகநாயனார் முதலிய அடியார்களோடு சென்று, திருக்கோயிலை அடைந்து சுவாமிதரிசனஞ் செய்து, முருகநாயனாருடைய திருமடத்திற்குப் போய், அவர் உபசரிக்க அங்கே எழுந்தருளியிருந்தார். இருக்குநாளிலே, வர்த்தமானீச்சரத்தை வணங்கி, முருக நாயனாருடைய திருத்தொண்டைச் சிறப்பித்துத் திருப்பதிகம் பாடினார். அங்கே எழுந்தருளியிருக்குங்காலத்திலே, திருநாவுக்கரசுநாயனார் திருவாரூரை வணங்கிக் கொண்டு திருப்புகலூரை வணங்குதற்கு அடியார்களோடும் எழுந்தருளும் திருவார்த்தையைக் கேட்டு, பேராசையோடு அவரை எதிகொள்ளும் பொருட்டு, திருக்கூட்டத்தோடும் திருப்புகலூரின் எல்லையைக் கடந்து சென்றார். திருநாவுக்கரசு நாயனாரும் பிள்ளையாருக்கு எதிரே வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி, நல்வரவு வினவி மகிழ்ந்தார்கள். அப்போது பிள்ளையார் அப்பமூர்த்தியை நோக்கி, "அப்பரே! நீர் வருநாளிலே திருவாரூரிலே நிகழ்ந்த சிறப்பைச் சொல்லும்" என்று சொல்ல; அப்பமூர்த்தி திருவாதிரைச் சிறப்பைத் திருப்பதிகத்தினாலே சொல்லியருளினார். பிள்ளையார் அது கேட்டு, "நான் திருவாரூருக்குப் போய்ச் சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு மீண்டும் இவ்விடத்திற்கு வந்து உம்முடன் இருப்பேன்" என்று சொல்லியருளினார். அப்பமூர்த்தி திருப்புகலூருக்குப் போக, திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் சென்று, திருவிற்குடி வீரட்டத்தை வணங்கிக் கொண்டு திருவாரூரை அடைந்து, வன்மீகநாதரை வணங்கித் திருப்பதிகம் பாடி, அப்பதியில் எழுந்தருளி யிருந்தார். அங்குள்ள அரநெறியென்னும் ஆலயத்தையும் காலந்தோறும் பணிந்தார். அங்கெழுந்தருளியிருக்குநாளிலே, திருவலிவலம், திருக்கோளிலி முதலிய ஸ்தலங்களுக்கும் போய், சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு மீண்டும் அத்திருவாரூரில் வந்து இருந்தார். சில நாளாயின பின், திருநாவுக்கரசு நாயனாரைக் காணுதற்கு விரும்பி, திருவாருரை நீங்கி, திருப்பனையூரிற்சென்று, சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு, திருப்புகலூருக்குச் சமீபித்து அப்பதியினின்று வந்து தம்மை எதிர்கொண்ட அப்பமூர்த்தி, முருகநாயனார் முதலாகிய திருத்தொண்டர்களோடும் போய் சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு, முருகநாயனாருடைய திருமடத்தை அடைந்து, அங்கே இருந்தருளினார். இருக்குநாளிலே திருநீலநக்கநாயனாரும் சிறுத்தொண்ட நாயனாரும் அவ்விடத்திற்கு வந்து அவர்களோடு இருந்தார்கள்.

சில தினஞ்சென்ற பின், பிள்ளையாரும் அப்பமூர்த்தியும் பிறதலங்களை வணங்க விரும்பிப் புறப்பட்டு, முருகநாயனாரை அங்கே இருக்கவும். திருநீலநக்கநாயனாரையும் சிறுத்தொண்ட நாயனாரையும் தங்கள் தங்கள் ஊருக்குச் செல்லவும் ஏவினார்கள். பிள்ளையார் அப்பமூர்த்தியை விட்டுப் பிரியாமல் முத்துச் சிவிகை பின் வர, வழிக்கொள்ளும் பொழுது, அப்பமூர்த்தி பிள்ளையாரை நோக்கி, "சிவபெருமான் தேவரீருக்கு அருளிச் செய்த இம்முத்திச் சிவிகை யின்மேலே எழுந்தருளும்" என்று சொல்ல; பிள்ளையார் "நீர் அடியார்களோடும் எங்கே முன் போவீரோ அங்கே நான் பின் வருவேன்" என்றார். அப்பமூர்த்தி "தேவரீர் அருளிச்செய்தபடியே செய்வேன்" என்று சொல்லிக் கொண்டு, அன்றுமுதல் அவருடன் செல்லுநாள் எல்லாம் அப்படியே செய்வாராகி நடந்து முன்னே அடியாரோடும் திருவம்பருக்குச் சென்றார். பிள்ளையார் பரமசிவனுடைய திருவருள்வழியே நிற்பாராகி, முத்துச்சிவிகையில் ஏறி, திருப்புகலூரைக் கடந்து சென்று, "அப்பமூர்த்தி எங்கே சென்றார்" என்று வினாவிப் போய், திருவம்பரை அடைந்து, மாகாளத்தில் இருக்கின்ற சுவாமியை வணங்கித் திருப்பதிகம் பாடி, அப்பமூர்த்தியோடும் அந்தத் திருப்பதியில் எழுந்தருளியிருந்தார். அங்கே கோச்செங்கட்சோழநாயனார் செய்த பெருந்திருக் கோயிலை அடைந்து, சுவாமி தரிசனஞ் செய்து, அந்நாயனாரைச் சிறப்பித்து திருப்பதிகம் பாடினார். சிலநாட் சென்றபின், திருவம்பரை நீங்கி, அப்பமூர்த்தியோடு திருக்கடவூருக்குச் சமீபித்து, அங்குநின்று வந்து எதிர்கொண்டு வணங்கிய குங்குலியக் கலயநாயனார் முதலிய அடியார்களோடு, திருவீரட்டானத்திற் சென்று சுவாமிதரிசனஞ் செய்து, திருப்பதிகம் பாடி, அக்குங்குலியக் கலயநாயனார் வீட்டில் திருவமுது செய்து, திருக்கடவூர் மயானத்தையும் வணங்கிக் கொண்டிருந்தார்.

சிலநாளாயின பின் திருக்கடவூரை நீங்கி, திருவாக்கூர் திருமீயச்சூர், திருப்பாம்புரம் என்னுந்தலங்களை வணங்கிக் கொண்டு, திருவீழிமிழலையை அடைந்து, சுவாமி தரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடி, புறத்தணைந்து, அப்பமூர்த்தி ஒரு திருமடத்தை அடைய, தாம் வேறொரு திருமடத்திலே போயிருந்தார். அவ்விருவரும் பேணுபெருந்துறை, திலதைப்பதி என்னுந் தலங்களுக்கும் போய்த் தரிசனஞ் செய்துகொண்டு மீண்டும் திருவீழிமிழலையில் வந்திருந்தார்கள். இருக்கு நாளிலே, சீர்காழியிற் பிராமணர்கள், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரைக் காணல்வேண்டும் என்னும் ஆசை செலுத்த, திருவீழிமிழலையை அடைந்து, தங்களை எதிர்கொண்ட அவ்வூர்ப் பிராமணர்களோடு திருக்கோயிலிலே போய்ச் சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு, அந்நாயனார் எழுந்தருளியிருக்குந் திருமடத்திற்சென்று அவரை நமஸ்கரித்து, "சுவாமி! தேவரீர் அடியேங்களோடு சீர்காழிக்கு எழுந்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள். பிள்ளையார் அது கேட்டு, "மிகநன்று. இன்று கழித்துத் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் கடவுளுடைய அருளைப்பெற்றுக் கொண்டு, திருத்தோணியப்பரை வணங்குதற்கு உங்களோடு வருவேன்" என்றார். சீர்காழிப் பிராமணர்களுக்குத் திருவீழிமிழலைப் பிராமணர்கள் விருந்து செய்தார்கள். தோணியப்பர் அன்றிரவு பிள்ளையாருக்குச் சொப்பனத்திலே தோண்றி, "நாம் திருத்தோணியில் வீற்றிருக்குங் கோலத்தை இத்திருவீழிமிழலையிலே உள்ள விண்ணிழிந்த விமானத்திலே காட்டுவோம்; காண்" என்று சொல்லி மறைந்தருளினார். பிள்ளையார் விழித்து எழுந்து, திருக்கோயிலிற் சென்று, அங்கே சுவாமியைத் தாம் முன்னே திருத்தோணியிற் கண்டபடியே கண்டு, திருவுளமகிழ்ந்து, "மைம்மருபூங்குழல்" என்னும் வினாவுரைப்பதிகம் பாடிப் போந்து சீர்காழிப் பிராமணர்களை நோக்கி, "திருத்தோணியப்பர் தாம் வீற்றிருக்கும் ஸ்தலங்களெங்ஞ்சென்று தரிசித்துத் திருப்பதிகம்பாடி வருதலின் மேற்கொண்ட என்விருப்பத்தைக் கண்டு, தாம் அங்கே அமர்ந்த திருக்கோலத்தை இந்கே எனக்குக் காட்டியருளினார். நீங்கள் சீர்காழிக்குப் போங்கள்" என்றார். அதைக் கேட்ட பிராமணர்கள் சீர்காழிக்குப் போய்விட்டார்கள்.

பிள்ளையார் அப்பமூர்த்தியோடும் சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு திருவீழிமிழலையில் இருக்குநாளிலே, மழையின்மையாலும் காவேரிப்பெருக்கு இன்மையாலும் பஞ்சம் உண்டாக; அதனால் உயிர்களெல்லாம் வருத்தமுற்றன. சிவனடியார்களையும் பசிநோய் வருத்திற்று. அதுகண்டு பாலறாவாயராகிய பிள்ளையாரும் அப்பமூர்த்தியும் "சிவபெருமானது விபூதியைத் தரித்த அடியார்களுக்கும் கவலை வருமோ" எனத் திருவுளமிரங்கி, பரமசிவனுடைய திருவடிகளைச் சிந்தித்துக் கொண்டு, அன்றிரவு துயின்றார்கள். துயிலும்போது, பரமசிவன் அவ்விருவருக்கும் சொப்பனத்திலே தோன்றி, "காலபேதத்தினாலே நீங்கள் மனவாட்டம் அடையீர்களாயினும், உங்களை வழிபடுகின்ற அடியார்களுடைய வருத்தத்தை நீக்கும் பொருட்டு, இப்பஞ்சம் நீங்கும்வரைக்கும் நாம் தினந்தோரும் திருக்கோயிலின் கிழக்குப்பீடத்திலும் மேற்குப்பீடத்திலும் ஒவ்வொரு காசு உங்களுக்குத் தருகின்றோம்" என்று சொல்லி, மறைந்தருளினார். பிள்ளையார் விழித்தெழுந்து, திருவருளைத் துதித்து, அப்பமூர்த்தியோடு திருக்கோயிலிற் புகுந்தபோது, கிழக்குப்பீடத்திலே காசு இருத்தலைக் கண்டு, விருப்பத்தோடுந் தொழுது, அதனை எடுத்து, "நாடோறும் சிவனடியார்களெல்லாரும் வந்து அமுது செய்யக்கடவர்கள்" என்று இரண்டு காலங்களிலும் பறைசாற்றித் தெரிவித்து, தம்முடைய திருமடத்தில் வரும் அடியார்களுக்குக் கறி, நெய், பால், தயிரோடு அன்னம் இட்டுக்கொண்டு இருந்தார். அப்பமூர்த்தியும் மேற்குப்பீடத்தில் வைக்கப்படும் காசை எடுத்து, அப்படியே அடியார்களைத் திருவமுது செய்வித்தார். இப்படி நிகழுநாளிலே, பிள்ளையார், அப்பமூர்த்தியுடைய திருமடத்திலே அடியார்கள் காலம்பெறத் திருவமுதுசெய்தலைக் கண்டு தம்முடைய திருமடத்திற் பாகுகர்களை நோக்கி, "நீங்கள், காலம்பெற அமுது பாகம்பண்ணி இங்கே வரும் அடியார்களுக்குக் கொடாமைக்குக் காரணம் யாது" என்று வினாவியருளினார். பாகுவர்கள் பாலறாவாயரை வணங்கி நின்று, "சுவாமி! தேவரீர் கடவுளிடத்திற் பெறும் படிக்காசைத் தினந்தோறும் பண்டம் வாங்குவதற்குக் கொண்டுபோனால் அதற்கு வாசி கேட்கின்றார்கள். அப்பமூர்த்தி பெற்றகாசையோ வாசியின்றி ஏற்றுக் கொள்கின்றார்கள். இதினாலே காலந்தாழ்க்கின்றது" என்றார்கள். பிள்ளையார் அதைக்கேட்டு, அப்பமூர்த்தி கைத்தொண்டு செய்தலால் அவர் பெறுங்காசு வட்டமின்றி ஏற்கப்படுகின்றது என்று சிந்தித்து, "இனி வரும் நாட்களிலே தருங்காசு வாசி தீரும்பொருட்டுப் பாடுவேன்" எனத் திருவுளங்கொண்டார். மற்றநாள் திருக்கோயிலிலே புகுந்து, சிவபிரானை வணங்கி,

	"வாசிதீரவே, காசு நல்குவீர்
	மாசின் மிழலையீ ரேச லில்லையே"

என்னுந் திருப்பதிகம் பாடி, நற்காசு பெற்றார். அந்த காசைப் பாகுகர்கள் கொண்டுபோய்க் கடையிலே காட்ட; அங்குள்ளோர் "இக்காசு மிகநன்று; வேண்டுவனவற்றை நாந்தருவோம்" என்று கொடுத்தார்கள். அன்று தொடங்கிப் பாகுகர்கள் அடியவர்களைக் காலம்பெறத் திருவமுதுசெய்தார்கள். இருவருடைய திருமடங்களிலும் நாடோறும் எண்ணிறந்த சிவனடியார்கள் வந்து திருவமுது செய்தார்கள். இவருடைய திருமடங்களிலும் நாடோறும் எண்ணிறந்த சிவனடியார்கள் வந்து திருவமுதுசெய்து மகிழ்ந்திருக்குங்காலத்திலே; எங்கும் மழை பெய்து தானிய முதலியவைகள் மிக விளைந்தமையால், உயிர்களெல்லாம் துன்பம் நீங்கி இன்பமுற்றன.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும் திருநாவுக்கரசு நாயனாரும், சிலநாட் சென்றபின், திருவீழிமிழலையை அகன்று திருவாஞ்சியம், திருத்தலையாலங்காடு, திருப்பெருவேளூர், திருக்கரவீரம், திருவிளமர், திருவாரூர், திருக்காறாயில், திருத்தேவூர், திருநெல்லிக்கா, திருக்கைச்சினம், திருத்தெங்கூர், திருக்கொள்ளிக்காடு, திருக்கோட்டூர், திருவெண்டுறை, திருத்தண்டலைநீணெறி, திருக்களர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு, வேதாரணியத்தை அடைந்து, திருக்கோயிலிற் பிரவேசித்து, வலஞ்செய்து, வேதங்கள் அருச்சித்துத் திருக்காப்புச் செய்த அந்நாள்முதல் இந்நாள் வரைக்கும் அடைக்கப்பட்டேயிருக்கின்ற திருவாயிலுக்கு முன் வந்து, வேதங்களாலே திருக்காப்புச் செய்யப்பட்ட அத்திருக்கதவை அவ்வேதங்களை ஓதும் அடியார்கள் நீக்கப் பெறாமையினால் வேறோர் பக்கத்தில் ஓர்வாயிலிட்டு அதன் வழியே செல்கின்றார்கள் என்பதைக் கேட்டறிந்தார்கள். திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் அப்பமூர்த்தியை நோக்கி, "அப்பரே! நாம் எப்படியும் சுவாமியை அபிமுகத்திருவாயில் வழியே சென்று தரிசிக்க வேண்டும். ஆதலல் இந்தத் திருக்கதவு திறக்கப்படும் பொருட்டு நீரே திருப்பதிகம் பாடும்" என்றார். அப்பமூர்த்தி திருப்பதிகத்தைத் திருக்கதவு திறக்கப்படும்பொருட்டுப் பாட; அது திறக்கப்படாமல் தாழ்ந்தது; அதுகண்டு, "இரக்கமொன்றிலீர்" என்று திருக்கடைக்காப்பிலே பாடி வணங்கினார். உடனே வேதாரணியேசுரருடைய திருவருளினாலே திருக்கதவு திறக்கப்பட்டது. அப்பொழுது நாயன்மாரிருவரும் விழுந்து நமஸ்கரித்தார்கள். அடியார்களெல்லாரும் ஆனந்தகோஷஞ் செய்தார்கள். நாயன்மாரிருவரும் பேரின்ப வெள்ளத்திலே அமிழ்ந்தி எழுந்து, உள்ளே புகுந்து, சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகங்கள் பாடி, அரிதில் வெளியே வந்தார்கள். அப்பொழுது அப்பமூர்த்தி திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை நோக்கி, "எம்பெருமானுடைய திருவருளினாலே இந்தத்திருக்கதவு திறக்கப்பட்டும் அடைக்கப்பட்டும் என்றும் வழங்கும் பொருட்டுத் தேவரீர் இது அடைக்கப்படும்படி திருப்பதிகம் பாடியருளும்" என்றார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பதிகத்திலே "சதுரம்மறை" என்னும் முதற்றிருப்பாட்டுப் பாடியமாத்திரத்தில் திருக்கதவு அடைக்கப்பட்டது. அதுகண்டு, நாயன்மாரிருவரும் திருவருளை வியந்து களிப்புற்று வணங்கினார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தாம் எடுத்த திருப்பதிகத்தை முடித்தருளினார். அன்று தொடுத்து அந்தத் திருக்கதவு திறத்தலும் அடைத்தலுமாகிய வழக்கம் என்றும் நிகழ்ந்தது. அங்கே நிகழ்ந்த அற்புதத்தைக் கண்ட அடியார்கள் சமஸ்தரும் ஆச்சரியங்கொண்டு, உரோமாஞ்சங்கொள்ள கண்ணீர்சொரிய நாயன்மாரிருவருடைய திருவடிகளிலும் விழுந்து நமஸ்கரித்தார்கள்.

நாயன்மாரிருவரும் திருமடத்தை அடைந்தபின் திருநாவுக்கரசு நாயனார் "சிவபெருமான் ஆதியிலே அருளிச் செய்த முதனூலாகிய வேதங்களின் தாற்பரியங்களை அமைத்துத் தமிழ் வேதஞ் செய்தருளும் சிவாநுபூதிப் பெருவாழ்வாகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தாமே அக்கடவுளைப்போல அருட்செய்கை செய்ய வல்லவர். அவரொழிந்த என்போலும் அடியார்களுக்கு அவ்வேதங்களோடு இடையீடு பெரிதாகும். அவ்வேதங்களாலே திருக்காப்புச் செய்யப் பட்ட திருக்கதவு என்பாடலினல் அரிதிற்றிறக்கப்பட்டதும், அவர் பாடலினால் எளிதில் அடைக்கப்பட்டதும் இதனாலன்றோ" என்று சிந்தித்து, அருநித்திரை செய்தார். அப்பொழுது பரமசிவன் அவரிடத்திற் சென்று, "நாம் வாய்மூரிலே இருப்போம், அவ்விடத்திற்குத் தொடர்ந்து வா" என்று அருளிச் செய்துபோக; அப்பமூர்த்தி அவருக்குப்பின் விரைந்து சென்றார். நெடும்போது சென்றதும், அவரைச் சமீபிக்கப்பெற்றிலர். சுவாமி சமீபத்திலே காட்சி கொடுப்பவர்போல ஒரு திருக்கோயிலை எதிரே காண்பித்து, அதனுள்ளே புகுந்தருள; அப்பமூர்த்தியும் அவ்விடத்திலே விரைந்து தொடர்ந்தார். பிள்ளையாரும், அப்பமூர்த்தி திருவாய்மூருக்குப் போகின்றார் என்று கேள்வியுற்று, வந்து சேர்ந்தார். அப்போது பரமசிவன் பார்வதியாரோடு ஆடல் காட்ட; பிள்ளையார் தரிசித்துத் திருப்பதிகம் பாடினார். பின் அப்பமூர்த்தியோடு திருவாய்மூருக்குப் போய், சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்து, சிலநாளாயின பின், வேதாரணியத்துக்குத் திரும்பி வந்து, சுவாமி தரிசனஞ் செய்து கொண்டிருந்தார். அது நிற்க.

பாண்டிநாட்டிலே பாண்டியராஜன் தான் பூர்வஜென்மத்திலே செய்த தீவினையினால், உலகமெல்லாம் இப்படியே நித்தியமாய் இருக்கும் அருகேசுரன் குருத்துவமாத்திரத்திலே கருத்தாவாய் இருப்பன் எனப்பிதற்றுகின்றபடிகளாகிய சமணர்களுடைய துர்ப்போதனையை மெய்யென்று துணிந்து, சத்தியமார்க்கமாகிய சைவத்தை விட்டு, அவர்களுடைய அசத்திய மார்க்கமாகிய ஆருகதமதத்திலே பிரவேசித்தான். அரசன் அவ்வாறாயினமையால், "மன்னனெப்படி மன்னுயிரப்படி" என்னும் பழமொழிப்படி குடிகளும் அவ்வாறாயின. மயிர் பறிக்கப்பட்ட தலையையும், ஊத்தைவாயையும், உறிபொதிகலனும், மயிற்பீலியும் பொருந்திய கையையும், பாயுடையையும், மனம்போல மாசுண்டசரீரத்தையும், நின்றுண்டலையும், வெற்றரையையும் உடைய சமணப்பதிதர்களே எங்கும் பரந்தார்கள். இங்ஙனம் பாண்டியநாடெங்கும் வைதிகமார்க்கமும், சைவமார்க்கமுமாகிய இரண்டுங்குன்றி, சமணசமயமே விருத்தியாகியும்; அப்பாண்டியனுடைய மனைவியரும் சோழமகாராஜாவுடைய புதல்வியாருமாகிய மங்கையர்க்கரசியார் அவ்வரசனுடைய முதன்மந்திரியாராகிய குலச்சிறைநாயனார் என்கின்ற இருவரும், தாங்களும் அப்பாண்டியனும், பாண்டி நாட்டாரும், மற்றயாவருஞ் செய்த புண்ணியத்தினாலே சைவர்களாலே இருந்தார்கள். அவர்கள் அப்பாண்டி நாட்டுள்ளோர் பொருட்டுக் கவலைகொண்டு, தாங்கள் சைவவொழுக்கத்தில் நிற்குந்தன்மை அரசனுக்கு விளங்கா வண்ணம் ஒழுகினார்கள். இங்ஙனம் ஒழுகுநாளிலே உலகமெல்லாம் உய்யும்படி திருவவதாரஞ் செய்தருளிய உயர்வொப்பில்லாத சைவசமயாசாரியராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய அளவிறந்த மகிமைகளையும் அவர் வேதாரணியத்திற் சென்று எழுந்தருளியிருத்தலையும், பாண்டியநாடு செய்த பெருந் தவத்தினாலே கேள்வியுற்றார்கள், கேள்வியுற்ற பொழுதே, அளவிறந்த மகிழ்ச்சியோடு, சில பரிசனங்களை, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரிடத்திற்குச் செல்லும் பொருட்டு, ஏவினார்கள்.

ஏவப்பட்ட அப்பரிசனங்கள் பாண்டிநாட்டைக் கடந்து சென்று, வேதாரணியத்தை அடைந்து, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் எழுந்தருளியிருந்த திருமடத்தை அடைந்து, தங்கள் வரவை வாயிற்காவலாளர்களுக்குத் தெரிவிக்க; அவர்கள் உள்ளேபோய், நாயனாரை வணங்கி நின்று, "சுவாமி! பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியாரும் மந்திரியாராகிய குலச்சிறைநாயனாரும் ஏவுதலால் தேவரீருடைய ஸ்ரீபாதாரவிந்தங்களை வணங்குதற்குச் சிலர் புறத்து வந்து நிற்கின்றனர்" என்று விண்ணப்பஞ்செய்தார்கள். பிள்ளையார் திருவருள் சுரந்து, "அவர்களை இங்கே அழையுங்கள்" என்று அருளிச் செய்ய, வாயிற்காவலாளர்கள் அவர்களைக் கூவ; அவர்கள் உள்ளே புகுந்து, பிள்ளையாரை விழுந்து நமஸ்கரித்து எழுந்து, அஞ்சலியஸ்தர்களாகி நின்றார்கள். பிள்ளையார் அவர்களை நோக்கி, "மங்கையர்க் கரசியாரும் குலச்சிறையாரும் க்ஷேமமாய் இருக்கின்றார்களா" என்று வினாவியருள; அவர்கள் 'ஆம்' என்று சொல்லி, பின், 'ஏழுலகமும் உய்யும்படி திருவவதாரஞ்செய்தருளிய பரமகிருபாலுவே! சைவசமயாசாரிய மூர்த்தியே! பாண்டியனும் பாண்டியநாட்டாரும் சமணர்களுடைய துர்ப்போதனையினாலே விபூதி சாதனங்களை விட்டு ஆருகதமதத்திலே பிரவேசித்தமையால், மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை நாயனாரும் மிகக் கவலை கொண்டிருந்தார்கள். பின்பு தேவரீருடைய மகிமையைக் கேள்வியுற்று, அந்தச் சமாசாரத்தைத் தேவரீருக்கு விண்ணப்பஞ் செய்யும் பொருட்டு, அடியேங்களை அனுப்பினர்' என்று பிரார்த்தித்தார்கள். அது கேட்ட சிவனடியார்கள் சமஸ்தரும் பிள்ளையாரை நமஸ்கரித்து எழுந்து நின்று, "சுவாமி! தேவரீர் பாண்டிநாட்டுக்கு எழுந்தருளி, நமது கடவுளாகிய பரமசிவனுடைய திருவடிகளை அடையாத அதிபாதகர்களாகிய சமணர்களை வாதிலே வென்று, வேதசிவாகமங்களால் உணர்த்தப்படுஞ் சைவ சமயத்தை ஸ்தாபனம் பண்ணி, பாண்டியனையும் விபூதியிடுவித்து, உய்விக்கும் பொருட்டுத் திருவுளங்கொண்டருள வேண்டும்" என்றார்கள். பிள்ளையார். அவர்களுக்கு அருள்புரிந்து, அப்பமூர்த்தியோடு திருக்கோயிலிற் சென்று, சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு, திருக்கோபுரத்துள் இருந்து, பாண்டிமா தேவியாரும் குலச்சிறைநாயனாரும் சொல்லி அனுப்பிய வார்த்தையை அவருக்குச் சொல்லி, பாண்டிநாட்டுக்கு எழுந்தருளுதற்குத் துணிந்தருளினார்.

அப்பொழுது அப்பமூர்த்தி "தேவரீர் சிறுபிள்ளையாய் இருக்கிறீர். அச்சமணர்களுடைய வஞ்சனைக்கோ ஓரெல்லையில்லை. தேவரீருக்கு இப்பொழுது கிரகங்கள் வலியில, ஆதலால் தேவரீர் அவ்விடத்திற்கு எழுந்தருளுதற்கு உடன்படுவது ஒண்ணாது" என்று விண்ணப்பஞ்செய்ய; பிள்ளையார் "பரமசிவன் நம்முடைய சிந்தையை கோயில்கொண்டு வீற்றிருத்தலினால் நமக்குத் தீங்கு வராது" என்று சொல்லி பரமசிவனுடைய திருவடிகளைத் துதித்து, "வேயுறுதோளி" என்னுங் கோளறுபதிகத்தைப் பாடியருளினார். அந்தத் திருப்பதிகத்தைக் கேட்டதன் பின், அப்பமூர்த்தியும், அதற்கு உடன்பட்டு தாமும் அவர்முன்னே எழுந்தருள அமைந்தபொழுது; பிள்ளையார் "அப்பரே! நீர் இந்தச்சோழ மண்டலத்திலே தானே எழுந்தருளியிரும்" என்று சொல்லி, கைகுவித்து வணங்கித் தடுக்க; அப்பமூர்த்தியும் வணங்கி, அதற்கு ஒருவாறு அருமையாக உடன்பட்டார். பிள்ளையார் வேதத்தை வளர்த்தற்கும் சைவத்தை விளக்குதற்கும் எழுந்து வேதாரணியேசுரரை மீண்டும் போய் நமஸ்கரித்துப் பாடித் துதித்து, அநுஞ்ஞை பெற்றுக்கொண்டு புறப்பட்டு, அப்பமூர்த்தி மாறாதவண்ணம் அவரை வணங்கி விடை கொடுத்து நீங்கி, முத்துச் சிவிகையில் ஏறி, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதி, சுவாமியுடைய விபூதியணிந்த திருமேனியைச் சிந்தித்துக் கொண்டு சென்றார். திருவகத்தியான் பள்ளி, கோடிக்குழகர் கோயில், திருக்கடிக்குளம், திருவிடும்பாவனம், திருவுச்சாத்தானம் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு, சோழநாட்டைக் கடந்து, பாண்டிநாட்டை அடைந்து, திருக்கொடுங்குன்றத்திற் சென்று சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு, மதுரைக்குச் சமீபித்தார். அது நிற்க.

எட்டு மலைகளிலும் வசிக்கின்ற சமணர்களெல்லாரும் துர்நிமித்தங்களும் துர்ச்சொப்பனங்களும் கண்டு, மதுரையிலே ஒருங்குவந்து கூடி, தாந்தாங் கண்ட சொப்பனங்களை ஒருவருக் கொருவர் சொல்லி, பாண்டியராஜனுக்குந் தெரிவித்து, தங்களுக்குத் தீங்கு விளைவது திடமெனக் கருதி, உணவின்றிக் கவலை கொண்டிருந்தார்கள். சைவர்களாகிய பாண்டிமாதேவியாரும் குலச்சிறைநாயனாருமோ அளவில்லாத மகிழ்ச்சியைக் காட்டுகின்ற நன்னிமித்தங்களைக் கண்டு, சமணசமயங் குன்றிச் சைவசமயம் விருத்தியாதல் திடமெனக்கருதி, மகிழ்ந்திருந்தார்கள். இருக்கும் பொழுது, "சர்வலோகங்களும் உய்யும்படி திருவவதாரஞ் செய்தருளிய பரமாசாரியராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் எழுந்தருளி வருகின்றார்" என்று சிலர் அவர்களுக்குப் போய்ச் சொன்னார்கள். மங்கையர்க்கரசியார் அதைக்கேட்டு அவ்வார்த்தையைச் சொல்லியவர்களுக்கு அளவிறந்த திரவியங்களைக் கொடுத்து, எல்லையில்லாத மகிழ்ச்சியுடையராகி, தம்மை வணங்கி நின்ற குலச்சிறை நாயனாரை நோக்கி "நமது தம்பிரானாராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை எதிகொள்ளும்" என்றார். குலச்சிறைநாயனார் பாண்டிமாதேவியாரை வணங்கிப் போந்து, "அரசனுக்கும் உறுதியே" என்று விரைந்து மதுரைக்குப் புறத்திலே போய், பிள்ளையாரை எதிர்கொள்ளுதற்குச் செல்ல; பாண்டிமாதேவியாரும், தம்முடைய பரிசனங்கள் சூழ, ஆலயத்திற் சென்று, சொக்கநாதசுவாமியை நமஸ்கரித்து, பிள்ளையாருடைய நல்வரவை ஏற்று நின்றார்.

ஆருகதம் பௌத்தமுதலிய பரசமயவிருளை நீக்குகுன்ற ஞானாதித்தராகிய திருஞானசம்பந்தமூர்த்திநாயனார், தோற்கருவி துளைக்கருவி நரம்புக்கருவி கஞ்சக்கருவி என்னும் நால்வகை வாத்தியங்களும் ஒலிக்க, எண்ணிறந்த பிராமணர்கள் உதாத்த அநுதாத்த ஸ்வரிதப் பிரசயங்களோடு வேதகோஷஞ் செய்ய, அடியார்கள் ஹரஹர என்று சொல்லும் ஓசையினாலே திக்குகளெல்லாஞ் செவிடுபட, செந்தமிழ்மாருதமாகிய தென்றல் எதிர்கொண்டு எம்மருங்குஞ் சேவிக்க, விபூதியைத் தரித்த திருமேனியுடைய திருக்கூட்டம் சர்வலோகத்தாருஞ் செய்த சிவபுண்ணியங்களின் படையெழுச்சிப் போலப் பொலிந்து விளங்க, சமணசமயம் பாழ்பட, சைவசமயம் தழைத்தோங்க, தம்முடைய திருநாமங்கள் பலவற்றையும் ஊதுகின்ற முத்துச் சின்னங்களெல்லாம் "பரசமய கோளரி வந்தார். பரசமய கோளரி வந்தார்." என்று பணிமாற, அடியார்கள் பலர் உரோமஞ் சிலிர்ப்ப, ஆனந்தவருவி சொரிந்து எங்கும் பெருகி அலைப்பத் தம்முடைய மகிமைகள் எல்லாவற்றையும் பாடி ஆட, இவற்றைக் கண்ட கேட்ட சமணப்புல்லர்களெல்லாரும் ஓட்டெடுக்க, அற்புத சின்மயத் திருவருள் வடிவாகிய முத்துச் சிவிகையின் மேலே, முத்துக்குடைநிழற்ற எழுந்தருளி வந்தார். சத்திய நிர்மல சிவஞானானந்த வடிவாகிய பிள்ளையார் இப்படி எழுந்தருளி வரும்பொழுது ஒப்பில்லாத முத்துச்சின்னம் உலகமெல்லாம் உய்யும்படி ஊதுகின்ற அதிமதுரமாகிய பேரொலியானது குலச்சிறைநாயனாருடைய திருச்செவிகளிலே திவ்வியாமிர்தம் போலப் புகுந்து சுவைக்க, உடனே அந்நாயனார் பூமியிலே விழுந்து நமஸ்கரித்து, அளத்தற்கரிய பெருங்களிப்பினையுடையராகி எழுந்து, இரண்டு கைகளும் சிரசின்மேல் ஏறிக்குவிய, உரோமாஞ்சங்கொள்ள, எதிரே கடுகி நடந்தார். பிள்ளையாரோடு கூடி வருகின்ற அடியார்கள் திருக்கூட்டத்தை நெடுந்தூரத்திலே கண்டு வணங்கி, எழுந்து விரைந்து சமீபத்திற் சென்று, ஆனந்தபரவசராகி அடியற்ற மரம்போல நிலத்திலே விழுந்து கிடந்தார். அக்குலச்சிறைநாயனாரை எதிரே வந்த அடியார்கள் பலர் வணங்கி, அவர் பூமியினின்று எழாமையைக் கண்டு, திரும்பித் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை அடைந்து வணங்கி, வாய்பொத்தி நின்று "சுவாமி! பாண்டியனுடைய மந்திரியாராகிய குலச்சிறையார் திருமுன்னே வந்து அடியற்ற மரம்போல விழுந்து கிடக்கின்றனர்" என்று விண்ணப்பஞ் செய்தார்கள். சர்வசீவ தயாநிதியாகிய பிள்ளையார் அதுகேட்டு, திருமுகத்தாமரை மலர்ந்து, முத்துச்சிவிகையினின்றும் இறங்கி, விரைந்து சென்று, அவரை அணைந்து, தம்முடைய அருமைத் திருக்கரங்களினாலே பற்றி எடுக்க; அத்திருக்கரங்கள் தீண்டுதற்குப் பூர்வசன்மங்களிலே அநந்தகோடி சிவபுண்ணியங்களைச் செய்திருந்த குலச்சிறை நாயனார், அப்பிள்ளையாருடைய திருமுகமண்டலம் பொழியா நின்ற பெருங்கருணை வெள்ளத்திலும் தம்முடை கண்ணின்று பொழியா நின்ற ஆனந்தவெள்ளத்திலும் முழுகி, உரை தடுமாற, உரோமஞ் சிலிர்ப்ப, சரீரம் நடுங்க, எழுந்து, கைகளைச் சிரமேற் குவித்து நின்றார். பிள்ளையார் அவர்மீது திருவருணோக்கஞ் செய்து, "அன்பரே! பாண்டிமாதேவியாருக்கும் உமக்கும் நமது கடவுளாகிய சிவபெருமானது திருவருள் பெருகும் நன்மை தான் வாலிதே" என்று சொல்லியருள. அம்மதுரவாசகத்தைக் கேட்ட குலச்சிறைநாயனார் வணங்கி நின்று, "அடியேங்கள் செய்த தவப்பயனே! அருட்குன்றே! சிவஞான தீபமே! அடியேங்களுக்குச் சென்றகாலத்திலே பழுதடையாத்திறமும் எதிர்காலத்திலே வருஞ்சிறப்பும் இந்நிகழ்காலத்திலே தேவரீர் இந்நாட்டில் எழுந்தருளியதாலினாலே பெற்ற பெரும்பேறாகும். இதனால் அடியேங்கள் எக்காலத்துந் திருவருளுடையேம். அஃதன்றியும், பொய்ச் சமயமாகிய சமணசமயத்தில் அமிழ்ந்திய இந்நாடும் அரசனும் வெற்றி பொருந்திய விபூதிப்பிரகாசத்தினாலே விளங்கும் மேன்மையையும் பெற்றோம். பாண்டிமாதேவியார் தேவரீர் இங்கெழுந்தருளுதலைக் கேட்டுப் பெருமகிழ்ச்சி கொண்டு, நமது பெருவாழ்வு எழுந்தருளியது; நீர் போய் எதிர்கொண்டு திருவடிபணிவீர்" என்று அடியேனை ஏவினார் என்று விண்ணப்பஞ் செய்து, மிக்க களிப்பினாலே மீளவும் பணிந்து, தோத்திரம் பண்ணினார்.

பிள்ளையார் அங்ஙனம் பணிந்து துதித்த குலச்சிறைநாயனாருக்கு அருண்மொழி கூறியருளும் பொழுது மதுராபுரி தோன்றுதலும், அடியாரை நோக்கி, "நமது சிவபெருமானுடைய திருவாலவாய் எம்மருங்கினது" என்று வினாவியருள, அவ்வடியவர் பிள்ளையாருடைய திருவடிகளை வணங்கித் திருமுன்னே நின்று, கையினாலே காட்டி, "இங்கே கோபுரம் தோன்றுகின்றது. திருவாலவாய் இது" என்றார். அது கண்டு பிள்ளையார் கைகுவித்து மிகுந்த அன்போடு பூமியின்மேலே விழுந்து நமஸ்கரித்து, "மங்கையர்க்கரசி" என்று எடுத்து, மங்கையர்க்கரசியாரும் குலச்சிறைநாயனாருமாகிய இவருடைய திருத்தொண்டுகளைக் கொண்டமையைச் சிறப்பித்து திருப்பாட்டிறுதிதோறும் "ஆலவாயாவது மிதுவே" என்பதை அமைத்துத் திருப்பதிகம் பாடிக்கொண்டு, அடியார்களோடுந் திருவாலவாயை அணைந்து, கோபுரத்தை வணங்கி, உள்ளே புகுந்து வலஞ்செய்து, மந்திரியாரோடு சந்நிதானத்தை அடைந்தார். சொக்கநாத சுவாமியைத் தரிசித்து, அட்டாங்கபஞ்சாங்கமாகப் பலமுறை நமஸ்கரித்து, உரோமப்புளகங்கொள்ள ஆனந்தவருவி சொரிய நின்று, திருப்பதிகம்பாடி, திருமுன்றிலை அடைந்தார். முன்னே சுவாமி தரிசனஞ் செய்யும் பொருட்டுப் பிள்ளையார் உள்ளணையும் போது எதிர்செல்லாமல் ஒரு பக்கத்திலே ஒதுங்கி நின்ற பாண்டிமாதேவியார் முன்னே வர குலச்சிறைநாயனார் பிள்ளையாரை வணங்கிநின்று, "சுவாமி! இங்கே சிரசின்மேற் கைக்குவித்துக் கொண்டு வருகின்றவரே பாண்டிமாதேவியார்" என்று விண்ணப்பஞ்செய்ய; பிள்ளையார் பெருங்களிப்போடு விரைந்து எதிரே சென்றார். பாண்டிமாதேவியார் பிள்ளையாருடைய திருவடிகளை விழுந்து நமஸ்கரித்தார். பிள்ளையார் திருவருள் சுரந்து அவரைத் திருக்கரத்தினால் எடுத்தருளினார். பாண்டிமாதேவியார் தம்முடைய மனக்கருத்து முற்றியது என்று நினைந்து, கண்ணீர் சொரிய, வாய் குழறி, "அடியேனும் அடியேனுடைய பதியும் செய்த தவம் என்" என்று சொல்லி வணங்கினார். "பிள்ளையார் பரசமயத்தார்களுளிருந்தும் சைவநெறியில் வாழும் அன்பரே! உம்மைக் காணுதற்கு வந்தோம்" என்று சொல்லி அவரை விடைகொடுத்து அனுப்பிக் கொண்டு, அடியார்கள் சூழ எழுந்தருளினார். எழுந்தருளும் பொழுது, திருவாலவாயிலிலே திருத்தொண்டு செய்து கொண்டிருக்கின்ற அடியார்களெல்லாரும் வந்து, பிள்ளையாரை நமஸ்கரித்து, "ஞானாதித்தராகிய சுவாமி! சமணிருள் நீங்கும்படி தேவரீர் இங்கே எழுந்தருளி வருதற்கு அடியேங்கள் அளவிறந்த தவங்களைச் செய்திருந்தோம்" என்றார்கள். பாலறாவாயர் அவர்களுக்கு அருள்செய்து, புறத்தணைந்து, குலச்சிறைநாயனார் திருமடங்காட்ட, பரிசனங்களோடும் அதில் எழுந்தருளியிருந்தார். பாண்டிமா தேவியாருடைய ஆஞ்ஞையின்படி குலச்சிறைநாயனார் பிள்ளையாருக்கும் பரிசனங்களுக்கும் விருந்தளித்தார்.

பகலிலே பிள்ளையார் அடியார்களோடு எழுந்தருளிவரக்கண்ட சமணர்களெல்லாரும் மனங்கலங்கி, சூரியன் அஸ்தமயனமான பின், ஒருங்கு கூடினார்கள். பிள்ளையார் எழுந்தருளியிருக்கின்ற திருமடத்திலே திருத்தொண்டர்கள் ஓதுகின்ற திருப்பதிகவிசையின் பேரொலி செவிப்புலப்பட, சமணர்கள் அது பொறாராகி, "பாண்டியராஜனிடத்திற்சென்று சொல்வோம்" என்று துணிந்து அப்பாண்டியராஜனை அடைந்தார்கள். பாண்டியன் அவர்களுடைய மனத்துயரத்தைக் கண்டு, "நீங்கள் இங்ஙனந் திரண்டு வருவதற்குக் காரணம் யாது" என்று பரிந்து வினாவ; சமணர்கள் "மஹாராஜாவே, உம்முடைய மதுரையிலே சைவப் பிராமணர்கள் வருதலால்! இன்றைக்கு நாங்கள் கண்டுமுட்டு" என்றார்கள். உடனே அரசன் "நானும் கேட்டுமுட்டு" என்று சொல்லிக் கோபித்து, "அந்தச் சிவனடியார்கள் இன்றைக்கு இந்நகரத்திற்கு வருவதற்குக் காரணம் யாது? அவர்கள் யாவர்" என்றான். அதற்குச் சமணர்கள் "சோழநாட்டிலே சீர்காழியிலிருக்கின்ற ஓர் பிராமணப்பாலன் சிவனிடத்திலே ஞானம் பெற்றவனென்று முத்துச்சிவிகை மேற்கொண்டு, எங்களை வாதிலே வெல்லும்பொருட்டு அடியார்களோடு வந்திருக்கின்றான்" என்றார்கள். பாண்டியன் மிகக் கோபித்து, "இதற்கு நாம் யாது செய்வோம்" என்று சொல்ல; தீயவர்களாகிய சமணர்கள் "நாங்கள் அந்தப் பிராமணப் பிள்ளை இருக்கின்ற மடத்திலே மந்திரவித்தையினாலே அக்கினி பற்றச் செய்வோமாயின், அவன் இந்நகரத்திலே இராமல் போய் விடுவான்" என்றார்கள். பாண்டியன் அதைக் கேட்டு, "விரைந்து சென்று அங்ஙனஞ் செய்யுங்கள்" என்று சொல்லி, அவர்களைப் போக்கி, யாதொரு பேச்சுமின்றி, மனக்கவலையோடு சயனத்திற்புக்கான். பாண்டிமாதேவியாரும் புகுந்தார். பாண்டியன் ஒன்றும் பேசாதிருக்க: பாண்டிமாதேவியார் "என் பிராணநாயகரே! நீர் முன்னுள்ள மகிழ்ச்சியின்றி முகம்புலர்ந்திருக்கின்றீர். உம்முடைய மனசிலே வந்த கவலை யாது? சொல்லியருளும்" என்றார். பாண்டியன் தேவியாரை நோக்கி, "என் அதிப்பிரியையாகிய பிராணநாயகியே! சோழநாட்டிலே சீர்காழியிலிருக்கின்ற ஒரு பிராமணப் பிள்ளை சிவனுடைய அருளைப் பெற்று நம்முடைய ஆசாரியர்களை வாதிலே வெல்லும்பொருட்டு அடியார்களோடும் இங்கே வந்திருக்கின்றான். ஆசிரியர்கள் அவர்களைக் கண்டுமுட்டு; நான் கேட்டு முட்டு. இதுவே என் கவலைக்குக் காரணம். என்றான் மங்கையர்க்கரசியார் "என் பிராணநாயகரே! நீர் கோபிக்க வேண்டுவதில்லை. இரு பக்ஷத்தாரும் வாதுசெய்தால், வென்றவர் பக்கஞ்சேர்ந்து அவர் அநுட்டிக்குஞ் சமயத்தையே அநுட்டித்தல் உறுதியாகும் என்று சொல்லிவிட்டு, பெருமகிழ்ச்சியோடு தம்முடைய மாடத்திற் சென்றிருந்தார். குலச்சிறைநாயனார் அங்கே எந்த; பாண்டிமாதேவியார் இந்தச் சமாசாரத்தை அவருக்குச் சொல்லினார். குலச்சிறைநாயனார் கைகுவித்து நின்று "இன்றைக்குத் திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் இங்கே எழுந்தருளிவரப் பெற்றுக் கொண்டோம். இனிச் சமணர்கள் செய்யும் வஞ்சனையை அறியேன்" என்றார். பாண்டிமாதேவியாரும் அஞ்சி, "வஞ்சகப் புலையராகிய சமணர்கள் தீத்தொழில் செய்யவல்லவர்கள் என் செய்வோம்" என்று நினைந்து "திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்கு யாதாயினும் ஓரூறு வருமாயின், நாமும் உயிர்துறந்து விடுவோம்" என்றார். அது நிற்க.

தவமறைந்து அல்லனசெய்யுஞ் சமணர்கள், பிள்ளையார் எழுந்தருளியிருக்கின்ற திருமடத்திலே அக்கினிபற்றும்படி மந்திரஞ் செபித்தார்கள். உயர்வொப்பில்லாத ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதும் மகான்கள் பார்க்குந் திசையிலும் மற்றை மந்திரங்கள் பலிக்குமோ? பலியா. அடியாருடைய திருமடத்திலே தங்கள் மந்திரசாதனைகள் பலியாமையைக் கண்ட சமணர்கள் மனந்தளர்ந்து, "அரசன் இதனை அறியின் நம்மைச் சிறிதும் நன்கு மதியான். நம்முடைய விருத்தியையும் ஒழித்துவிடுவான்" என்று நினைந்து பயந்து, அக்கினியைக்கொண்டுபோய், திருமடப்புறச்சுற்றிலே கொளுத்தினார்கள். அத்தொழில் வெளிப்படுதலும் பரிசனத்தவர்கள் மறுகிப்பதைப்புடனே சிதைத்து நீக்கி, அது செய்தவர்கள் பாதகர்களாகிய சமணர்களென்பதை உணர்ந்து சென்று, பிள்ளையாரை நமஸ்கரித்து நின்று, சமணர்கள் செய்த தீங்கை விண்ணப்பஞ் செய்தார்கள். உடனே பிள்ளையார் "சிவனடியார்கள் துயில்கின்ற இந்தத் திருமடத்திலே பாவிகள் பழுது செய்யலாமோ" என்று பரிந்தருளி, "அவர்கள் என்பொருட்டுச் செய்த தீங்காயினும், சிவனடியார்களுக்கு இப்படி வருமோ" என்று பின்னும் அச்சுற்று மகாகோபங் கொண்டு, "இத்தீங்கு அரசனால் வந்தது" எனத் திருவுளங் கொண்டு, "செய்யனே திருவாலவாய்" என்னுந் திருப்பதிகத்தை "அமணர் கொளுவுஞ் சுடர் பையவே சென்று பாண்டியற்காகவே"என்று பாடியருளினார். சிவபத்தியிற் சிறந்த பாண்டிமாதேவியாருடைய திருமாங்கலியத்தைப் பாதுகாத்தல் வேண்டினமையாலும் மந்திரியாராகிய குலச்சிறை நாயனாருடைய அன்பினாலும், அரசனிடத்தில் அபராதம் உறுதலாலும், அவனுக்கு மீண்டும் சைவமார்க்கத்தை அடையும் விதி உண்மையாலும், அவன் வெப்பு நீங்கும்படி தம்முடைய அருமைத் திருக்கரங்களினாலே தீண்டி விபூதி சாத்தும் பெரும்பேற்றை உடையனாதலாலும் தீப்பிணியைப் "பையவே சென்று" என்று அருளிச் செய்தார். திருப்பதிகம் பாடியவுடனே, அக்கினி வெம்மை போய்ப் பாண்டியனை அடைந்தது.

சூரியன் உதித்தபின், பாண்டிமாதேவியார் இரவிலே சமணர்கள் செய்த தீங்கைக் குலச்சிறைநாயனாரோடு கேள்வியுற்று, "திருஞானசம்பந்தப் பிள்ளையாரை இந்தப் பாதகர்களுடைய நாட்டிலே வரவழைத்த நாங்கள் இறப்பதே திண்ணம்" என்று மனமயங்கி அச்சுற்றுப் பதைபதைத்தார். பின்பு திருமடத்திலே தீதின்மையைத் தெளிந்து, "சமணர்கள் செய்த தீங்கு இறுதியில் எப்படி முடியுமோ" என்று நினைக்கும்பொழுது; "அரசனுக்கு வெப்புநோய் அடுத்தது" என்று கஞ்சுகிகள் வந்து சொல்ல; மாதேவியர் பதைபதைத்துச் சென்றார். குலச்சிறைநாயனாரும் விரைந்து போனார். பாண்டியன் வெப்புநோயினாலே மிகவருந்தி, வைத்தியர்கள் வந்து பல வைத்தியங்களைச் செய்யவும் அந்நோய் சிறிதும் நீங்காமல் மேற்பட; அறிவிழந்து பேச்சின்றிக் கிடந்தான். சமணர்கள் அதனைக் கேள்வியுற்று, வெய்துயிர்த்து ஓடிவந்து, அந்நோயின் மூலம் இதுவென்று அறியாமல், தங்கள் மந்திரங்களைச் சொல்லி மயிற்பீலியினாலே தடவ; பீலிகள் பிரம்பினோடு தீய்ந்து, பொரி சிதறி வீழ்ந்தன. அவ்வெப்பின் அதிசயத்தை நோக்கி, தங்கள் கையிலே தூங்குகின்ற குண்டிகையிலுள்ள ஜலத்தை "அருகனே காவாய் அருகனே காவாய்" என்று சொல்லிப் பாண்டியன் மேலே தெளிக்க; அந்தச் சலம் மிகச் சுவாலிக்கின்ற அக்கினியிலே சொரிந்த நெய்போலாக; பாண்டியன் மிகவருந்திச் சமணர்களை நோக்கி, "நீங்கள் ஒருவரும் இங்கே இராமல் போய்விடுங்கள்" என்று சொல்லி அறிவு சோர்ந்தான். பாண்டிமாதேவியார் பயமெய்திக் குலச்சிறைநாயனாரை நோக்கி, "இராத்திரியிலே திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருக்குச் சமணர்கள் செய்த தீங்கு இப்படி முடிந்ததோ" என்று சொல்ல; குலச்சிறைநாயனார் வணங்கி நின்று; "அசுரர்களுடைய முப்புரத்தையும் எரித்த சிவபெருமானுடைய அடியாராகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருக்கு இவர்கள் செய்த தீங்கே அரசனிடத்திலே பலித்தது.இவர்கள் தீர்க்கப்புகின், அது முதிர்வதேயாகும்" என்றார். மாதேவியாரும் மந்திரியாரும் அரசனை வணங்கி நின்று, "திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருக்குச் சமணர்கள் செய்த தீங்கினாலேயே உமக்கு இந்த வெப்பு நோய் அடுத்தது. ஆதலால் இநதப் பாதகர்கள் செய்யும் மாயம் இந்நோயை வளர்ப்பதேயன்றித் தீர்ப்பதில்லை. அந்தத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருவுளமிரங்கித் திருவருணோக்கஞ் செய்வாராயின் இந்த வெப்புநோய் மாத்திரமா எவர்களாலும் நீக்குதற்கரிய பிறவி நோயும் நீங்கிவிடும். இது சத்தியம்" என்றார்கள். பாண்டியன் தன் செவியிலே, மெய்யறிவினையுடைய அவ்விரு வருஞ் சொல்லிய "திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்" என்கின்ற திருமந்திரம் புகுந்தவுடனே அயர்வுநீங்க, "இந்தச் சமணர்கள் செய்யுஞ் செய்கைகளெல்லாம் இந்நோய்க்கு ஏதுவாயே யிருக்கின்றன" என்று நினைந்து அவ்விருவரையும் நோக்கி "அந்தத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரை இங்கே அழையுங்கள். என்னுடைய நோயை நீக்கி வென்றவர் எவரோ அவர் பக்கஞ்சேர்வேன்" என்றான்.

மங்கையர்க்கரசியார் அது கேட்டு, பெருங்களிப்புடையவராகி சிவிகையிலேறி, பெண்கள்சூழ, குலச்சிறைநாயனார் குதிரையிலேறிக் கொண்டு முன்னே செல்ல, சென்று திருமடத்தை அடைந்தார். குலச்சிறைநாயனார் குதிரையினின்றும் இறங்கி, பரிசனங்களை நோக்கி, "அடியேங்கள் வந்து நிற்றலைச் சுவாமிக்கு விண்ணப்பஞ் செய்ய வேண்டும்" என்றார். அவர்கள் உள்ளே புகுந்து திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரை வணங்கி நின்று, "சுவாமி! பாண்டிமாதேவியாரும் குலச்சிறைநாயனாரும் வந்து நின்கின்றனர்" என்று விண்ணப்பஞ் செய்ய; பிள்ளையார் "அவர்களை இங்கே அழையுங்கள்" என்று அருளிச் செய்தார். பரிசனங்கள் மீண்டு போய் அழைக்க; அவர்கள் இருவரும் உள்ளே பிரவேசித்து, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரைக் கண்களிக்கக் கண்டு, சமணர்கள் செய்த கொடுந்தொழிலை நினைந்து. நெடிதுயிர்த்து, சோகபாஷ்பஞ்சொரிய, ஸ்ரீபாதங்களின் கீழே விழுந்தார்கள். உரைகுழற, சரீரம் நடுங்க, ஒன்றும் அறிந்திலராகி, நிலத்திலே புரண்டு அயர்ந்து, திருவடிகளைப் பற்றிக் கொண்டு கவலைக்கடற்கு ஓர் கரைப் பற்றினார் போன்று மெய்யன்பினாலே விடாது கிடந்தார்கள். பிள்ளையார் அதுகண்டு; அவ்விருவரையும் திருக்கரத்தினால் எடுத்தருளித் தேற்றவும், அவர்கள் தெளியாராக; அவர்களை நோக்கி, "அன்பர்களே! உங்களிடத்திலே யாதாயினும் தீங்கு உண்டா" என்று வினாவியருளினார். அதற்கு அவர்கள் "அடியேங்கள் சமணர்கள் முன்செய்த வஞ்சனைக்கு மிக அஞ்சி வருந்தினோம். அது திருமேனிக்கு அடாது என்று உணர்ந்து, அது தீர்ந்தோம். அவ்வஞ்சகர்கள் செய்த தீத்தொழில் வெப்பு நோயாகி, அரசனை அடைந்து, மிக வருத்துகின்றது. சமணர்கள் அதனைத் தீர்க்கப் புக, அது வளர்கின்றது. ஆதலால், தேவரீர் அவ்வரசன் முன் அவர்களை வென்றருளின், அவனுயிரும் அடியேங்களுயிரும் உய்யும்" என்று விண்ணப்பஞ்செய்தார்கள். அப்பொழுது கருணாகரராகிய பிள்ளையார் "நீங்கள் சிறிதும் அஞ்சவேண்டாம். நாம் மெய்யுணர்வில்லாத சமணர்களை இன்றைக்கு நீங்கள் மகிழும்படி சமஸ்தருங்காண வாதிலே வென்று, பாண்டியனை விபூதி அணிவிப்போம்" என்று சொல்லியருளினார். அவ்விருவரும் அதைக்கேட்டு, "தேவரீர் அடியேங்களைத் துன்பக்கடலினின்றும் எடுத்தருளும் பொருட்டு இவ்விடத்துக்கு எழுந்தருளிவரப் பெற்றுக் கொண்ட நாங்கள் என்பெற்றோம்" என்று விண்ணப்பஞ்செய்து, வணங்கினார்கள்.

ஆளுடையபிள்ளையார் "பாவிகளாகிய சமணர்களை நோக்கி வாது செய்து வெல்லுதற்குச் சொக்கநாத சுவாமியினுடைய திருவுள்ளத்தை அறிவோம்" என்று, திருமடத்தினின்றும் நீங்கி, திருக்கூட்டஞ்சூழச் சென்று, திருவாலவாயிலிலே புகுந்து, நோக்க விதியில்லாத சமணர்களை நோக்கி வாது செய்தற்குத் திருவுள்ளமோ என்பதை அறியும் பொருட்டு "காட்டுமாவ துரித்து" என்னுந் திருப்பதிகம்பாடி, சுவாமியுடைய திருவுள்ளத்தை அறிந்து, பின்னும் சமணர்களை வாதில் வென்று அழிக்கும் பொருட்டும். சிவநாமத்தையே பரப்பும் பொருட்டும், "வேதவேள்வியை" என்னுந் திருப்பதிகத்தைப் பாடி, திருவருள் பெற்று, திருவுள மகிழ்ந்து விடைகொண்டு, கோபுரவாயிலைக் கடந்து முத்துச் சிவிகையின் மேல் ஏறி, முத்துக்குடை நிழற்ற அடியார்கள் சூழ, பலவகைப்பட்ட வாத்தியங்கள் தொனிக்க முத்துச் சின்னங்கள் ஊத, மங்கையர்க்கரசியார் சிவிகை மேலேறிக் கொண்டு பின்னாக வர, குலச்சிறை நாயனார் முன்னே அடியார் கூட்டத்திற்செல்ல, பாண்டியனுடைய கோயிலுக்கு எழுந்தருளினார்.

குலச்சிறைநாயனார் முன்னே விரைந்து பாண்டியனிடத்திற் சென்று, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருடைய வரவைச் சொல்ல; பாண்டியன் தன்னுடைய துயரம் சிறிது நீங்கி, தன்முடியின் பக்கத்திலே இரத்தினாசனத்தை இடுவித்து, குலச்சிறைநாயனாரைப் பின்னும் எதிர்செல்லும் பொருட்டு ஏவினான். குலச்சிறை நாயனார் மனமகிழ்ந்து எதிர்கொள்ளச் சென்றார். சமணர்கள் அரசனுடைய தன்மையைக் கண்டு, "மகாராஜாவே! நமது சமயத்தை ஸ்தாபிக்கும் நெறி இதுவோ" என்று சொல்லி, பின்னும் "உம்முடைய தருமநெறியை நீரே காத்தருளல் வேண்டும். ஆயின் அவரையிங்கே அழைத்தீர். உம்முடைய நோயை அவரும் நாங்களும் ஒருங்கு தீர்க்கும்படி சொல்லி, முழுமையும் அவராலேயே தீர்க்கப்பட்ட தாயினும் எங்களாலுந் தீர்க்கப்பட்டதாகச் சொல்லும்" என்றார்கள். அதுகேட்ட அரசன், தான் பூர்வசன்மத்திலே செய்த தவப்பயனை அடையுஞ் சமயம் சமீபித்தலால், சமணர்களை நோக்கி, "நீங்கள் இருபக்ஷத்தீரும் உங்கள் உங்கள் தெய்வச்சார்பினாலே தீருங்கள். நான் வஞ்சகம் பேசேன்" என்றான். அதைக் கேட்ட சமணர்கள் "என் செய்வோம்" என்று கவலைக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது தமிழ்நாடு செய்த தவக்கொழுந்து போலும் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அரண்மனைவாயினுள் அணைந்து, முத்துச் சிவிகையினின்றும் இறங்கி, குலச்சிறை நாயனார் முன்செல்ல, பாண்டிமாதேவியாரும் சிவிகையினின்றும் இறங்கிவர, உள்ளே எழுந்தருளினார். பாண்டியன் பிள்ளையாரைக் கண்டவுடனே அஞ்சலிசெய்து அவர் சமீபத்தில் வர அவரை நோக்கி, தன்முடியின் பக்கத்தில் இருக்கின்ற இரத்தினாசனத்தைக் காட்ட; அவர் அதிலே வீற்றிருந்தருளினார். சமணர்களெல்லாரும் அச்சங்கொண்டார்கள். பாண்டியன் பிள்ளையாருடைய திருமேனியைத் தரிசிக்கப் பெற்றதனால் வெப்புநோய் சிறிது நீங்கி, "சுவாமி! தேவரீருடைய ஊர் யாது" என்று வினாவ, பிள்ளையார் பிரமனூர் வேணுபுரம் என்றெடுத்து, "கழுமல நாம் பரவுமூரே" என்று திருப்பதிகத்திலே உத்தரங் கொடுத்தருளினார்.

பிள்ளையார் இரத்தினாசனத்தில் எழுந்தருளியிருந்த பொழுது, சமீபத்தில் இருந்த சமணர்கள் பொறாமை கொண்டு, தங்கள் உள்ளத்திலுள்ள அச்சத்தை மறைத்து, கோபாக்கினி சொலிக்கக் கண்கள் சிவந்து, பாலசூரியனைச் சூழ்கின்ற கருமுகிற் குழாங்கள் போலப் பிள்ளையாரைச் சூழ்ந்து, அவரை வாதினால் வெல்லக் கருதி, தங்கள் சமய நூல்களை எடுத்துச் சொல்லிக் குரைத்தார்கள். பிள்ளையார் அதைக்கேட்டு, "உங்கள் சமய நூற்றுணிவை உள்ளபடி கிரமமாக பேசுங்கள்" என்று சொல்லியருள; சமணர்கள் துள்ளி எழுந்து, அநேகர்களாய்ச் சூழ்ந்து, பதறிக் கதறினார்கள். பாண்டிமாதேவியார் அதுகண்டு பொறாராகி, மனநடுங்கி, பாண்டியனை நோக்கி, "சுவாமிகள் சிறுபாலர். இச்சமணர்களோ எண்ணில்லா தவர்கள். என்பிராணநாயகரே! எம்பெருமானார் உம்முடைய நோயை நீக்கியருளுக. பின்பு இச்சமணர்கள் பேசவல்லவராயிற் பேசக்கடவர்கள்" என்றார். பாண்டியன் தேவியாரை நோக்கி, "நீ வருந்தாதே" என்று சொல்லி, சமணர்களை நோக்கி, "நீங்களும் இந்தச் சிவபக்தரும் உங்களுங்கள் தெய்வத்தன்மையை என்னுடைய வெப்புநோயை நீங்குதலினாலே தெரிவியுங்கள்" என்றான். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாண்டிமாதேவியாரை நோக்கி, "மாதேவியே, என்னை நீ பாலன் என்று அஞ்சவேண்டாம். திருவாலவாயான் நிற்க, நான் சமணர்களுக்கு எளியேனல்லேன்" என்னுங் கருத்தினையுடைய "மானி னேர்விழி மாதராய்" என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். அது கேட்ட அரசன் பிள்ளையாரையும் குரைத்தல் ஒழியாத சமணர்களையும் நோக்கி, "நீங்கள் என்னுடைய நோயை இகலித்தீருங்கள். தீர்த்தவர் எவரோ அவரே வாதில் வென்றவர்" என்று சொல்ல; சமணர்கள் "மகாராஜாவே! உம்முடைய இடப்பாகத்து நோயை நாங்கள் எங்கள் சமய மந்திரத்தினாலே தீர்ப்போம். அவர் வலப்பாகத்து நோயை தீர்க்கக்கடவர்" என்று சொல்லி, அரசனுடைய இடப்பாகத்தைப் பீலியினாலே தடவினார்கள். அதினாலே வெப்பு நோய் வளர, பாண்டியன் அதைப் பொறுக்கலாற்றாதவனாகி, பிள்ளையாரைப் பார்த்தான். பிள்ளையார் அரசனுடைய நோக்கத்தைக் கண்டு, "மந்திரமாவது நீறு" என்னுந் திருநீற்றுப் பதிகத்தைப் பாடி. அவனுடைய வலப்பாகத்தை விபூதி கொண்டு, திருக்கையினாலே தடவியருள; அவ்வலப்பாகம் வெப்புநோய் நீங்கிப் பொய்கை போலக் குளிர்ந்தது. இடப்பாகத்து வெப்புநோய் முன்னையிலும் இருமடங்காய் மிகுந்து பொங்க, சமணர்கள் மனநடுங்குற்று, மயிற்பீலி தீய, அவ்வெப்புத்தீ தம்மேலும் தாவ, சரீரமுங்கன்றி, செருக்கு அழிந்து, அருகுவிட்டுத் தூரத்திலே நின்றார்கள். பாண்டியன் சமணர்களை நோக்கி, "சமணர்களே! நீங்கள் தோற்றுப் போனீர்கள். என்னை விட்டு அகலப்போய் விடுங்கள்" என்று சொல்லி, பின் பிள்ளையாரை நோக்கி, "அடியேனை ஒரு பொருளெனக் கொண்டு உய்வித்த காருண்ணிய சாகரமாகிய சுவாமி! இடப்பாகத்து வெப்பையும் தேவரீரே நீக்கியருளும்" என்று மனசினால் வணங்கி பிரார்த்தித்தான். பிள்ளையார் இடப்பாகத்தையும் முன்போல விபூதி கொண்டு தடவியருள; பண்டியன் வெப்புநோய் முழுதும் நீங்கி உய்ந்தான். அதுகண்ட பாண்டிமாதேவியாரும் குலச்சிறைநாயனாரும் பிள்ளையாருடைய திருவடிகளிலே விழுந்து நம்ஸ்கரித்து, "எங்கள் அரசர் பிறவா மேன்மை பெற்றனர்" என்று களிப்படைந்தார்கள். பாண்டியர் சயனத்தைவிட்டு எழுந்து, இரண்டு கைகளையும் சிரசின்மேலேறக் குவித்து, "பொய்யராகிய சமணர் கண்முன் அடியேனுடைய நோயை நீக்கியருளிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருடைய ஸ்ரீ பாதங்களை அடைந்து, "உய்ந்தேன் உய்ந்தேன்" என்றார்.

சமணர்கள், பிள்ளையாருடைய சொல்வெற்றியை, அவர் தமிழ்ப் பதிகத்தினாலே பாண்டியனுடைய வெப்புநோயை நீக்கினமையால் அறிந்த பின், தருக்கம் பேசி இவரை வெல்லுதல் கூடாது. அக்கினியினாலும் ஜலத்தினாலும் வெல்லல் வேண்டும் என்று தங்களுக்குள்ளே சிந்தித்தார்கள். பிள்ளையார் சமணர்களை நோக்கி, "இனி உங்கள் சமய நூற்றுணிவைப் பேசுங்கள்" என்று அருளிச் செய்ய; சமணர்கள் "தருக்கம்பேசி வெல்ல வேண்டுவதில்லை. நாமிருபக்ஷத்தேமும் எங்கள் எங்கள் சமயவுண்மையை உள்ளபடி பிரத்தியக்ஷமாகக் காட்டி வெல்லுவோம்" என்று ஒட்டினார்கள். அப்பொழுது பாண்டியராஜர் "என்னுடைய வெப்புநோயை நீங்கள் ஒழித்திலீர்கள். உங்களுக்கு என்ன வாது" என்று சொல்ல; சமணர்கள் அரசர் உங்களுக்கு என்ன வாது" என்றதையே வினாவாகக் கொண்டு, "நாங்கள் இருபக்ஷத்தேமும் எங்கள் எங்கள் சமயக்கருத்தை ஏட்டிலே தீட்டி, அக்கினியில் இடக்கடவோம். வேவப் பெறாமையே வெற்றி" என்றார்கள். அப்பொழுது அரசர் ஒன்றுஞ்சொல்லு முன், பிள்ளையார் "நீங்கள் சொல்லியது நன்று. அரசனெதிரே அப்படியே செய்வோம், வாருங்கள்" என்று சொல்லியருளினார். பிள்ளையாருடைய ஆஞ்ஞையினாலே பாண்டியர் சபை முன்னே அக்கினி அமைக்கும் படி ஏவலாளர்களை ஏவ; அவர்களும் அக்கினி அமைத்தார்கள். பிள்ளையார் சமீபத்திலே எழுந்தருளி வந்து, பரமசிவனே மெய்ப்பொருள் என்று தாம் பாடியருளிய தமிழ்வேதத் திருமுறையை ஸ்தோத்திரஞ்செய்து, "நம்முடைய சிவபெருமானே பரம்பொருள்" என்று சொல்லி வணங்கி, திருக்கரத்தினால் எடுத்து, சிரசின் மேற்கொண்டு, திருக்காப்பிட்ட கயிற்றை அவிழ்த்து, அத்திருமுறையைத் தமது திருக்கரத்தினால் மறிக்க; திருநள்ளாற்றின் மேலதாகிய "போகமார்த்த பூண்முலையாள்" என்னுந் திருப்பதிகம் வந்து நேர்ந்தது. பிள்ளையார் அத்திருப்பதிகத்தையே விரும்பி, திருநள்ளாறரை வணங்கி, அது எழுதப்பட்ட திருவேட்டைக் கழற்றி, திருக்கரத்திலே கொண்டு பரமசிவனே மெய்ப்பொருள் என்பதைச் சமஸ்தருக்கும் உணர்த்தும் பொருட்டு, "இவை அக்கினியில் இடப்படுமாயிற் பழுதில்லை. இது சத்தியம்" என்னுங்கருத்தையுடைய "தளிரிளவளரொளி" என்னுந் திருப்பதிகத்தைப் பாடி, அங்குள்ளோர்களெல்லாருங் காண, சமணர்களுடைய சிந்தைவேவ, அவ்வக்கினியிலே அவ்வேட்டை இட்டருளினார். இட்ட ஏட்டில் எழுதப்பட்ட திருப்பதிகம், பரஞானம் அபரஞானம் என்கின்ற இருதனங்களையுடைய உமாதேவிபாகரும் அட்டமூர்த்தியுமாகிய பரமசிவனையே பொருளென உடைமையால், மிகச்சுவாலிக்கின்ற அக்கினியிலே பச்சையாய் விளங்கிற்று. சமணர்களும் தங்கள் நூற்பொருளை எழுதிய ஏட்டை, "இது உய்யுமோ" என்கின்ற கவலையோடு, நடுங்கி நின்று, அக்கினியில் இட்டார்கள். அது தகிக்கப்பட்டொழிந்தது. அதுகண்டு பயத்தினாலே மனஞ் சோர்ந்து நின்றார்கள். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தாம் அக்கினியில் இட்ட ஏட்டைக் குறித்த நாழிகையிலே ஈனமின்மை கண்டு, யாவரும் வியக்கும்படி எடுத்தருளினார். அது முன்னையிலும் பசுமையும் புதுமையும் உடைத்தாய் விளங்கிற்று. பிள்ளையார் அவ்வேட்டைச் சபை முன்னே காட்டி, திருமுறையிலே முன்போலக் கோத்தருளினார். அரசர் அத்தியந்த ஆச்சரியம் அடைந்து, சமணர்களை நோக்கி, "நீங்கள் இட்ட ஏட்டை காட்டுங்கள்" என்றார். சமணர்கள் தாங்கள் இட்ட ஏட்டை எடுக்கும்படி சென்றணையும் போது, அக்கினி மிகச்சுவாலித் தலைக்கண்டு, திரும்பி விட்டார்கள். அதுகண்ட அரசர் ஜலத்தினாலே அக்கினியைத் தணிப்பித்தார். சமணர்கள் அங்கே சாம்பருங் கரியுமன்றி, மற்றொன்றுங் காணார்களாகி, செய்வதொன்றறியாது, திகைப்பினாலே, திரண்ட சாம்பரக்கையினாலே பிசைந்து தூற்றிப் பார்த்தார்கள். அதுகண்ட அரசர் புன்முறுவல் செய்து, "ஏட்டை இன்னும் அரித்துப் பாருங்கள். பொய்ந்நெறியையே மெய்ந்நெறியாகக் கொண்டு உலைகின்றவர்களே, போங்கள். முன் நான் வெப்பாகிய தீயினின்றும் உய்ய, நீங்கள் அப்பொழுது தோற்றீர்கள் ஆதலால், அதுவே வழியாக இப்பொழுது அக்கினியில் இடப்பட்ட ஏடு உய்ந்ததில்லை என்றால், நீங்கள் தோற்றிலீர்கள் போலும்" என்றார்கள்.

சமணர்கள், பாண்டியர் நகை உட்கொண்டு சொல்லிய சொற்பொருளை அறியாராகி, திரித்துணர்ந்து. "முன்னே இரண்டு தரம் வாது செய்தோம். இன்னும் ஒருதரம் செய்ய வேண்டும். மூன்றுதரத்தில் ஒருதரமாயினும் வெற்றி பெறுவோம்" என்றார்கள். பாண்டியர் "இது என்னவார்த்தை" என்று மறுத்த பின்னும். பிள்ளையார் சமணர்களை நோக்கி "இனி என்ன வாது செய்வோம்" என வினாவியருள; சமணர்கள் "நாங்கள் இருபக்ஷத்தேமும் எங்கள் எங்கள் சமயவுண்மையை எழுதிய ஏட்டை ஓடுகின்ற வைகையாற்றிலே இடுவோம் எதிர்த்துச் செல்லும் ஏடே மெய்ப்பொருளையுடையது" என்றார்கள். பிள்ளையாரும் "அப்படியே செய்வோம்" என்று அருளிச்செய்தார். அப்பொழுது குலச்சிறைநாயனார் சமீபத்தில் வந்து, "இனிச் செய்யப்படும் இவ்வாதிலே தோற்றவர்கள் செய்வது யாது" என்றார். அதைக் கேட்ட சமணர்கள் அவர் மேற் கோபங்கொண்டு, பொறாமை காரணமாக, தங்கள் வாய் சோர்ந்து "நாங்கள் வாதிலே தோற்றோமாயின், எங்களை இவ்வரசர் கழுவில் ஏற்றக்கடவர்" என்றார்கள். இதைக் கேட்ட அரசர் "வைகையாற்றிலே ஏடு இடும்பொருட்டுப் புறப்படுங்கள்" என்று சொல்ல; முன்னே பிள்ளையார் இரத்தினாசனத்தினின்றும் இறங்கிப் போய், முத்துச்சிவிகைமேற் கொண்டு சென்றார். அவர்பின்னே பாண்டியர் குதிரைமேற்கொண்டு சென்றார். சமணர்கள் மயக்கமேற்கொண்டு சென்றார்கள். சமுத்திரத்தை நோக்கித் திரையெறிந்து அதிவேகத்துடன் பாய்கின்ற வைகையாற்றின் கரையை அடைந்தவுடனே பாண்டியர் "இருபக்ஷத்தாரும் தங்கள் தங்கள் சமயவுண்மையை எழுதிய ஏட்டை இடக் கடவர்கள்" என்றார். அரிசியாகிய உள்ளீடில்லாத நெற்பதர்போல "அறிவாகிய உள்ளீடு இல்லாத மக்கட்பதராகிய சமணர்கள் "அத்திநாத்தி" என்று எழுதிய ஏட்டை நதி அதிவேகத்துடன் பாய்தலைக் கண்டும், அவா மேலீட்டினாலே இடுதலும்; அது விரைந்து கொண்டு கடலை நோக்கி ஓடிற்று. சமணர்கள் ஆறுகொண்டோடும் ஏட்டைத் தொடர்ந்து எதிரே அனைப்பவர் போலக் கரைமேல் ஓடிப்போனார்கள். அவ்வேடு நூறுவிற்கிடைக்கும் அப்பாற் சென்றமையால், அதைக் காணுதற்கும் கூடாதவர்களாகி, வேறொருசெயலுமின்றி, தங்களுக்கு நாசகாலம் வந்தது என்று அஞ்சி நடுநடுங்கி, அரசருக்கு எதிரே வந்து தங்கள் நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார்போல பிள்ளையாரை நோக்கி "நீரும் உம்முடைய ஏட்டை இட்டால் அறியலாம்" என்றார்கள். பாண்டியராஜா அவர்களை விட்டு பிள்ளையாருடைய திருக்குறிப்பை நோக்க; தம்மை அடைந்த அன்பர்களுடைய சனனமரணங்களுக்கு ஏதுவாய் இருக்கின்ற மலமாயாகர்மங்களை நீக்கியருளுந்தேசிகோத்தமராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார், பாண்டியராஜர் தம்முடைய அருமைத் திருக்கரத்தினாலே தீண்டி விபூதி பூசப் பெற்று மல பரிபாகமும் இருவினையொப்பும் உற்று நிற்றலால், அவருக்கும் அவர் போலப் பக்குவப்படும் சர்வான் மாக்களுக்கும் சைவ சமயத்துண்மைப் பொருளை விளக்கும் உபதேசமொழியாகிய "வாழ்கவந்தணர்" என்னும் திருப்பாசுரத்தைப் பாடி, ஏட்டில் எழுதி அத்திருவேட்டைத் தமது திருக்கரத்தினாலே வைகை நதியில் இட்டருளினார். அத்திருவேடு நதியிலே எதிர்ந்து ஜலத்தைக் கிழித்துக்கொண்டு சர்வான்மாக்களுக்கும் இதுவே மெய்ப்பொருள் என்று காட்டிக் கொண்டு சென்றது. பரமசிவனே எல்லாப்பொருளும் என்று எழுதிய திருவேட்டிலே "வேந்தனு மோங்குக"என்று பாடியருளியபடியால் பாண்டியராஜருடைய கூன் நிமிர்ந்தது. ஏடு எதிகொண்டு செல்லும்பொழுது, தேவர்களெல்லாரும் ஸ்தோத்திரஞ்செய்து, புஷ்பமாரி பெய்தார்கள் பாண்டியர் அற்புதங்கொண்டு நின்றார். சமணர்களெல்லாரும் அஞ்சிப்பதைபதைத்துத் தலைகுனிந்து நின்றார்கள். குலச்சிறைநாயனார் அத்திருவேட்டைத் தொடர்ந்து எடுத்தற்கு விரும்பி, காற்றைப்போல அதிவேகத்தோடு செல்கின்ற குதிரைமேல் ஏறிக்கொண்டு, பின் சென்றார். பிள்ளையார் அவ்வேடு தங்கும் பொருட்டு, "வன்னியுமத்தமும்" என்னுந் திருப்பதிகம் பாட; குலச்சிறைநாயனார் சிவாலயத்துக்குப் பக்கத்தில் இருக்கின்ற நீர் நடுவிலே புகுந்து, அங்கே தங்கிய ஏட்டை எடுத்துச் சிரமேற் கொண்டு பெருமகிழ்ச்சி பொங்க, கரையில் ஏறி, திருவேடகத்தில் எழுந்தருளியிருக்குங் கடவுளை வணங்கித் துதித்து, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் சந்நிதியில் வந்து அவருடைய திருவடிகளை வணங்கிக்கொண்டு, பாண்டியர் முதலாயினோ ரெல்லாருக்குங் காட்ட; அடியார்கள் எல்லாரும் அத்தியந்த ஆனந்தத்துடனே "ஹரஹர" என்று ஆரவாரித்தார்கள்.

பாண்டியராஜர் கண்டு, குலச்சிறைநாயனாரை நோக்கி "வாதிலே ஒட்டித் தோற்ற இந்தச் சமணர்கள் முன்னே எங்கள் பரமாசாரியராகிய சுவாமிகளிடத்திலே அநுசிதஞ் செய்தவர்கள். ஆதலால் இவர்களைக் கழுவிலே ஏற்றுக" என்று ஆஞ்ஞாபித்தார். கருணாகரராகிய பிள்ளையார் அதைக் கேட்டும், தாம் அவர்கண்மேல் சிறிதும் பகையிலராயினும், அவர்கள் சிவனடியார்கள் வாழுந்திருமடத்திலே செய்த தீங்கு அதிபாதகமாதலாலும், அதிபாதகஞ்செய்தார் யாவராயினும் அவரைக் கொல்லல் வேண்டுமென்பது சிவாகம நூற்றுணிவாதலாலும், பாண்டியருடைய குற்றமற்ற செய்கையை விலக்காதிருந்தார். திடபத்தியுடைய குலச்சிறைநாயனார், கழுத்தறிகளை நிரையாக நாட்டுவித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரரும் ஏறினார்கள். பிள்ளையார் பாண்டியராஜருக்கு விபூதி கொடுத்தருள, அவர் அவருடைய ஸ்ரீபாதங்களை விழுந்து நமஸ்கரித்து எழுந்து வாங்கி அணிந்து நின்றார். பாண்டி நாட்டிலுள்ள சமஸ்தரும் விபூதி அணிந்துகொண்டார்கள். அரசர் சைவராயினமையால் சமணசமயம் பாழாக, சைவசமயமே தழைத்தோங்கிற்று. திருஞானசம்பந்த மூர்த்திநாயனாருடைய திருப்புகழே எங்கும் பரந்தது. பிள்ளையார் சொக்கநாத சுவாமியைத் தரிசிக்கவேண்டும் என்று எழுந்து சென்று, முத்துச் சிவிகைமேற் கொண்டுபோனார். பாண்டியரும் மங்கையர்க்கரசியாரும் அவரை ஸ்தோத்திரஞ்செய்து கொண்டு, உடன் சென்றார்கள், அடியார்கள் சமஸ்தரும் பெருமகிழ்ச்சி பொங்க, பிள்ளையாரைத் துதித்துக் கொண்டு கூடிப்போனார்கள். பிள்ளையார் திருக்கோயிலை அணைந்து, முத்துச் சிவிகையினின்றும் இறங்கி, பாண்டியராஜரும் மாதேவியாரும் மந்திரியாரும் தம்மைத் தோத்திரஞ்செய்து கொண்டு உடன்புகப் புகுந்து, வலஞ்செய்து சந்நிதானத்தை அடைந்து, சொக்க நாதசுவாமியை வணங்கி "வீடலால வாயிலாய்" என்னுந் திருப்பதிகம் பாடினார். பாண்டியர் சொக்கநாத சுவாமியை நமஸ்கரித்து நின்று, "திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே! சமணர்களுடைய மாயையினாலே மயங்கித் தேவரீரை அறியாதிருந்த சிறியேனைப் பிணி நீக்கி ஆட்கொள்ளும் பொருட்டுத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரைத் தந்தருளிய பெருங்கருணையை என்னென்று பேசுவேன்" என்று தோத்திரம் பண்ணினார். பிள்ளையார் சுவாமியை வணங்கி அருள்பெற்று, அங்குநின்று, அரிதினீங்கித் திருமடத்திற்சென்று, எழுந்தருளியிருந்தார். பாண்டியரும் மாதேவியாரும் பிள்ளையாரை வணங்கி, அநுமதி பெற்றுக் கொண்டு, தங்கள் மாளிகைக்க்குப் போனார்கள். பிள்ளையார் "ஆலநீழலு கந்த திருக்கையே" என்னுந் திருவியமகத் திருப்பதிகத்திலே திருநீலகண்டப் பெரும்பாணருக்கு அருளிய திறத்தையும் துதித்து, அவரோடும் அளவளாவியிருந்தார்.

பிள்ளையார். பாண்டியரும் மாதேவியாரும் குலச்சிறைநாயனாரும் தினந்தோரும் வந்து தம்முடைய திருவடிகளை வணங்கித் துதிக்க, தாம் கொக்கநாதசுவாமியை வணங்கித் துதித்துக் கொண்டு எழுந்தருளியிருக்குநாளிலே; சீர்காழியிலிருந்த சிவபாதவிருதயர் "சமணர்களுடன் வாது செய்து வெல்லுதற்கும் பாண்டிநாடெங்கும் விபூதியைப் பரப்புதற்கும் போயருளிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரிடத்தில் நிகழ்ந்தவற்றை அறிவேன்" என்று புறப்பட்டு, மதுரையை அடைந்து திருவாலவாயிற்சென்று, சொக்கநாத சுவாமியை வணங்கிக் கொண்டு, பிள்ளையார் எழுந்தருளியிருக்கின்ற திருமடத்தை அணைந்தார். பிள்ளையார் தந்தையார் வந்தமையை அடியார்கள் சொல்லக்கேட்டு "திருவுளமகிழ்ந்து எழுந்தருள; சிவபாதவிருதயர் தொழுது கொண்டு முன் சென்றணைய பிள்ளையார் அவரை எதிர்தொழுது, தமக்குச் சிவஞானம் அருளிய திருத்தோணியப்பரை நினைந்து, சீர்காழி மேலே "மண்ணினல்ல வண்ணம்" என்னுந் திருப்பதிகம் பாடியருளினார்.

சிலநாளாயின பின், பிள்ளையார் அடியார்களோடு பிற தலங்களையும் வணங்கும் பொருட்டுப் புறப்பட்டு, பாண்டியரும் மாதேவியாரும் குலச்சிறைநாயனாரும் பிரிவாற்றாமையால் உடன் செல்லச் சென்று, திருப்பரங்குன்றம், திருவாப்பனூர், திருப்புத்தூர், திருப்பூவணம், திருக்கானப்பேர், திருச்சுழியல், திருக்குற்றாலம், திருக்குறும்பலா, திருநெல்வேலி என்னுந் தலங்களை வணங்கித் திருப்பதிகம் பாடிக் கொண்டு இராமேச்சுரத்தை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடி, அங்கே இருந்தருளினார். அங்கிருந்தே, ஈழமண்டலத்தில் உள்ள திருக்கோணமலை, திருக்கேதீச்சரம் என்னுந் தலங்களை வணங்கித் திருப்பதிகம் பாடியருளினார். சிலநாட்சென்ற பின் இராமேச்சுரத்தை நீங்கி, திருவாடானை, திருப்புனவாயில் என்னுந்தலங்களை வணங்கி, குலச்சிறை நாயனாருடைய ஊராகிய மணமேற்குடியை அடைந்து, அங்கே எழுந்தருளியிருந்தார். இருக்கு நாளிலே அதற்குச் சமீபத்திலுள்ள சிவஸ்தலங்களுக்குப் போய்ச் சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு திரும்பிவிட்டார். சிலநாளாயின பின் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சோழ நாட்டுக்கு மீண்டும் செல்லுதற்குத் திருவுளங்கொண்டருள; பாண்டியரும் மாதேவியாரும் குலச்சிறைநாயனாரும் அவருடைய திருவடிகளைப் பிரியவாற்றாமையால் அவருடன் போதற்கு ஒருப்பட்டார்கள். பிள்ளையார் அதுகண்டு, "அன்பர்களே நீங்கள் நம்முடைய சொல்லை மறவாமல், சைவ சமயத்தைப் பரிபாலனஞ் செய்து கொண்டு உங்கள் நகரத்திலேயே இருங்கள்" என்று அருளிச் செய்தார். அவர்கள் பிள்ளையாருடைய ஆஞ்ஞையை மறுத்தற்கு அஞ்சி, அவருடைய ஸ்ரீபாதங்களை நமஸ்கரித்து, அநுமதி பெற்றுத் திரும்பி மதுரையை அடைந்து, அவரை ஒரு பொழுதும் மறவாத சிந்தையுடன் சைவசமய பரிபாலனஞ்செய்து கொண்டிருந்தார்கள்.

பிள்ளையார் திருக்கூட்டத்தோடு பாண்டிநாட்டைக் கடந்து, சோழநாட்டை அடைந்து, திருக்களர்திருப்பாதாளீச்சரம் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு, முள்ளி வாய்க்கரையை அணைந்தார். அங்கே ஆறு மிகப் பெருகுதலால், நீர்வாணர்கள் ஓடத்தை ஓடக்கோல் நிலையில்லாமை பற்றிக் கரையிலே நிறுத்திப் போய்விட்டார்கள் பிள்ளையார் அதுகண்டு கரையிலே எழுந்தருளி நின்றபோது திருக்கொள்ளம்புதூர் எதிரே தோன்ற; அங்கே சென்று சுவாமி தரிசனஞ்செய்தற்குத் திருவுளம் விரும்புதலால், அதிசீக்கிரம் ஓடத்தின் கட்டை அவிழ்த்து, சிவனடியார்களை அதிலே ஏற்றி, நாவலமே கோலாக அதன்மேல் நின்று, "கொட்டமே கமழும்" என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். பரமசிவனுடைய திருவருளினால் ஓடஞ்சென்று மற்றக்கரையை அடைந்து. பிள்ளையார் அடியார்களுடனே இறங்கித் திருக்கோயிலை அடைந்து சுவாமிதரிசனஞ்செய்து, அங்கே எழுந்தருளியிருந்தார்.

சிலநாளாயின பின், வாதிலே அக்கினியில் வேவாத திருப்பதிகத்தையுடைய கடவுளை வணங்க விரும்பி, திருக்கொள்ளம் புதூரை நீங்கி, திருநள்ளாற்றை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து, "பாடகமெல்லடி" என்னும் வினாவுரைப் பதிகம் பாடி, சிலநாள் எழுந்தருளியிருந்தார்.

பின்பு பிள்ளையார் திருத்தெளிச்சேரியை அடைந்து சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு செல்லும்போது, பௌத்தர்கள் இருக்கின்ற போதிமங்கை சமீபிக்க, அதனை அறிந்த அடியார்களெல்லாரும் கடலொலிபோலச் சங்கு தாரை முதலிய பலவகைப்பட்ட வாத்தியங்களையும் முழங்கி ஆரவாரித்தார்கள். முத்துச் சின்னங்களெல்லாம் "பரசமய கோளரி வந்தார்" என்று ஊதின. பௌத்தர்கள் ஒருங்குகூடி, பிள்ளையார் தங்கள் எல்லையில் எழுந்தருளும்போது அடியார்கள் எடுத்த ஆரவாரத்தினாலும் திருச்சின்னவொலியினாலும் பொறாமை கொண்டு, தங்கள் சமய நூலிலே மகா பாண்டித்தியமுள்ள புத்தநந்தி முதலியோருக்குச் சொன்னார்கள். அவர்களுடைய சொல்லும் பிள்ளையார் முன் வருகின்ற திருச்சின்னவொலியும் அடியார்களுடைய ஆரவாரமும் காதினுள்ளே புகுத்திய நாராசம்போலப் புகுந்த போது, புத்தநந்தி மிகக் கோபித்து எழுந்து பௌத்தர் கூட்டஞ்சூழச் சென்று, சிவனடியார்களை அணைந்து "நீங்கள் எங்களைத் தருக்கத்தில் வென்றன்றோ வெற்றிச் சின்னங்கள் ஊதல் வேண்டும்" என்று கோபங்கொண்டு விலக்கினான். அப்பொழுது திருத்தொண்டர்கள் மிகக்கோபித்து, இந்தக் கொடுஞ்செயலுக்கு இவர்களைக் கொல்லாது பொறுக்கின், இவர்கள் தங்கள் நிலையெடுப்பார்கள் என்று முத்துச்சிவிகை மேல் எழுந்தருளியிருக்கின்ற திருஞானசம்பந்தப் பிள்ளையாரை அடைந்து வணங்கி, நிகழ்ந்ததை விண்ணப்பஞ் செய்தார்கள். பிள்ளையார் "நாம் வருமிடத்திலே இது நமக்கு அழகியதாய் இருக்கின்றது. புத்தநந்தி வாது செய்யப் புகுமிடத்து அவனுடைய பொய்ம்மேற்கோளை அறிகின்றோம்" என்று அருளிச் செய்தார். அதற்குமுன்னே, தேவாரத்திருமுறை எழுதும் அடியவர் பொறாமல், தேவரத்திலே,

		"புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
		சித்தத் தவர்க டெளிந்து தேறின
		வித்தக நீறணி வார்வி னைப்பகைக்
		கத்திர மாவன வஞ்செ ழுத்துமே"

என்னுந் திருப்பாட்டை ஓதி, "இப்புத்தனுடையசிரம் உருண்டு, விழும்படி இடியிடித்து விழக்கடவது" என்று சொல்லியருளினார். உடனே இடியடித்துப் புத்தநந்தியுடைய சரீரத்தையும் தலையையும் வேறாகக் கூறுபடுத்தியது. அதுகண்ட பௌத்தர் கூட்டம் அஞ்சிக் குலைந்தோடிற்று. பௌத்தர்களுடைய நிலைமையையும், புத்தநந்தியுடைய சரீரமும் தலையும் அற்று விழும்படி தமிழ்வேதலேககர் தேவாரத்திருப்பாட்டினால் அறுத்ததையும் கண்ட அடியார்களெல்லாரும் ஓடிப்போய், பிள்ளையாருக்கு விண்ணப்பஞ் செய்தார்கள். பிள்ளையார் "அங்ஙனம் எதிர்ந்த விலக்கை நீக்கும்முறை அதுவேயாம். நீங்களெல்லீரும் ஹரஹர என்று ஆரவாரியுங்கள்" என்று அருளிச்செய்ய; அவ்வொலி மிக்கோங்கிற்று அஞ்சி ஓடிய பௌத்தர்களெல்லாரும் ஆச்சரியங்கொண்டு, மீண்டும் ஒருங்குகூடி, "இச்செய்கை வஞ்சனையோ அவர்களுடைய சைவசமயத்து உண்மையோ" என மருண்டு "நீங்கள் எங்களோடு மந்திரவாதமின்றி, எதிர்த்து தருக்கம் பேச வாருங்கள்" என்று, தங்களுக்குள்ளே தலைவனாகிய சாரிபுத்தனையே முன்கொண்டு, பின்னும் வந்தார்கள். பிள்ளையார் அதைக் கேட்டுத் திருவுளமிகமகிழ்ந்து விரைந்து சென்று, முத்துச் சிவிகையினின்றும் இறங்கி, ஒரு சத்திரமண்டபத்தின் மேல் ஏறி, சைவர்கள் சூழ வீற்றிருந்து கொண்டு, திருமுன்னே நின்ற அடியார் சிலரை நோக்கி "தருக்கம் பேச விரும்பிய பௌத்தர்களை இங்கே அழையுங்கள்" என்று ஆஞ்ஞாபித்தருளினார். அவ்வடியார்கள் அவ்வாஞ்ஞையைச் சிரமேற்கொண்டு, பௌத்தர் கூட்டத்தை அணைந்து "வேதசிவாகமாதி சமஸ்தசாஸ்திரங்களையும் ஓதாதுணர்ந்த வரும், முத்தமிழ்வேந்தரும், பரசமய கோளரியும், எங்கள் பரமாசாரியருமாகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் உங்கள் விருப்பத்தின் படி வாது செய்தற்கு உங்களை மகிழ்ச்சியோடும் அழைக்கின்றார்; வாருங்கள்" என்றார்கள். அதுகேட்ட சாரிபுத்தன் பௌத்தர்களோடு வந்து, மண்டபத்திலே பிள்ளையாருக்குச் சமீபத்தில் நின்றான். அப்பொழுது திருச்சின்னத்தைத் தடுத்த புத்த நந்தியினுடைய சிரசைப் பொடிபடுத்திய தமிழ் வேதலேககர் பிள்ளையாருடைய திருவடிகளை வணங்கித் துதித்து, சாரி புத்தனோடு வாதிசெய்து, பௌத்தசமயத்தை நிராகரணம் பண்ணி, அவனைவென்று, பிள்ளையாருடைய திருவடிகளை நமஸ்கரித்தார்கள். பௌத்தர்கள் தோற்று, தங்கள் சமயம் பொய்ந்நெறியென்று கண்டு, பிள்ளையாரை விழுந்து நமஸ்கரித்தார்கள். பிள்ளையார் சைவசமயமே சற்சமயமென்பதை அவர்களுக்கு ஐயந்திரிபற உணர்த்தியருள, அவர்கள் அவருடைய கருணைநோக்கம் பெற்றமையால், அதனை இனிதுணர்ந்து, அவரை வணங்கி, சைவர்களாயினார்கள்.

பிள்ளையார் அவ்விடத்தினின்று நீங்கி, திருக்கடவூரிலே சென்று, சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு, அங்கே எழுந்தருளியிருந்தார். சிலநாளாயின பின், திருநாவுக்கரசுநாயனார் திருப்பூந்துருத்தியில் இருத்தலைக் கேள்வியுற்று, அவரைக் காண விரும்பிப் புறப்பட்டுச் சென்று திருப்பூந்துருத்திக்குச் சமீபித்தார். அதைத் திருநாவுக்கரசு நாயனார் கேட்டு மனமகிழ்ந்து, அவரை எதிர்கொண்டு வணங்கும்படி சென்று, அவர் வரும் எல்லையை அடைந்து, திருச்சின்னத்தின் ஓசையைக் கேட்டு அவரைத் தரிசிக்கும்படி சூழ்ந்த சனங்களுடைய நெருக்கத்தினாலே, தம்மை ஒருவரும் காணாதபடி உட்புகுந்து அவர் ஏறிவரும் முத்துச்சிவிகையைத் தாங்குகின்றவர்களோடு தாமும் ஒருவராய்த் தாங்கி கொண்டு வந்தார். பிள்ளையார் திருப்பூந்துருத்திக்கு மிகச் சமீபித்தவுடனே "அப்பர் எங்குற்றார்" என்று வினாவ; அதைக் கேட்ட அப்பமூர்த்தி "அடியேன் தேவரீரைத் தாங்கிவரும் பெருவாழ்வைப் பெற்று இங்குற்றேன்" என்றார். உடனே பிள்ளையார் சிவிகையினின்றும் இறங்கி மனப்பதைப்போடும் அப்பமூர்த்தியை வணங்க; அப்பமூர்த்தியும் தம்மை அவர் வணங்குதற்கு முன் தாம் அவரை வணங்க; அதுகண்ட அடியார்களெல்லாரும் வணங்கி ஆனந்தகோஷஞ் செய்தார்கள். பிள்ளையார் அப்பமூர்த்தியோடும் திருப்பூந்துருத்தியிற் சென்று, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார். பிள்ளையார் தாம் பாண்டி நாட்டிற் சென்று சமணர்களை வாதில் வென்றதையும், பாண்டியனுடைய கூனை நிமிர்த்தியதையும், அந்நாடெங்கும் விபூதியை வளர்த்ததையும், மங்கையர்க்கரசியார், குலச்சிறைநாயனார் என்கின்ற இருவருடைய பெருமையையும், அப்பமூர்த்திக்குச் சொல்லியருளினார். அப்பமூர்த்தி தாந்தொண்டை நாட்டுக்குச் சென்று அங்குள்ள சிவஸ்தலங்களை வணங்கியதைப் பிள்ளையாருக்குச் சொல்லியருளினார். அப்பமூர்த்தி விடைபெற்றுக் கொண்டு, பாண்டிநாட்டுக்குப் புறப்பட்ட பிள்ளையார், காவேரிக்கு வடகரையிற் சென்று, திருநெய்த்தானம், திருவையாறு, திருப்பழனம் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு, சீர்காழியை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடிக்கொண்டிருந்தார்.

நெடுநாட் சென்ற பின், பிள்ளையார் தொண்டை மண்டலத்துக்கு யாத்திரைசெய்யத் திருவுளங்கொண்டு, தோணியப்பரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு, அடியார்களோடு புறப்பட்டு, தம்மோடு உடன்வருவதற்குத் துணிந்த தந்தையராகிய சிவபாதவிருதயரை நோக்கி, "அப்பரே நீர் இங்கே தானே யாகஞ் செய்து சிவதரிசனம் பண்ணிக்கொண்டிரும்" என்று சொல்லிச் சென்று, சிதம்பரம், திருத்தினைநகர், திருமாணிக்குழி, திருப்பாதிரிப்புலியூர், திருவடுகூர், திருவக்கரை, திருவிரும்பைமா காளம், திருவதிகை, திருவாமாத்தூர், திருக்கோவலூர், திருவறையணி நல்லூர், திருவண்ணாமலை என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு தொண்டை நாட்டை அடைந்தார். அங்கே திருவோத்தூரிற் சென்று, சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு எழுந்தருளியிருந்தார். இருக்குநாளிலே, அந்தத் தலத்திலே உள்ள சிவனடியார் ஒருவர் வந்து, பிள்ளையாரை வணங்கி நின்று, "பரசமயங்களைப் பாற்றிச் சைவஸ்தாபனஞ் செய்தருளும் எம்பெருமானே! மெய்க்கடவுளாகிய பரமசிவனுக்கு அடியேன் ஆக்கும் பனைகளெல்லாம் மிக உயர்வாக வளர்ந்தும் ஆண்பனைகளாகிக் காயாவாயின. அதுகண்ட சமணர்கள் நீர் ஆக்கும் ஆண்பனைகளெல்லாவற்றையும் காய்க்கப் பண்ணுதல் கூடுமோ என்று நகை செய்து இகழ்ந்து சொன்னார்கள். தேவரீர் திருவருள் செய்ய வேண்டும்" என்று விண்ணப் பஞ்செய்தார். பிள்ளையார் அது கேட்டுப் பரிந்தருளி, எழுந்து விரைந்து திருக்கோயிலிற்சென்று, சுவாமியை வணங்கி, "பூந்தொத்தாயின" என்னுந் திருப்பதிகம் பாடியருளினார். அத்திருப்பதிகத்தின் திருக்கடைக்காப்பிலே "குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்" என்று அருளிச் செய்தார். அதனால் ஆண்பனைகளெல்லாம் குரும்பைக் குலைகளையுடையனவாய்ப் பெண்பனைகளாயின. அதனைக் கண்டவர்களெல்லாரும் ஆச்சரியங்கொண்டார்கள். பிள்ளையார் ஆண்பனைகள் காய்த்துப் பழுக்கும்படி அன்பருக்கு அருள் செய்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு அங்கே எழுந்தருளியிருந்தார். சமணர்கள் பரசமயகோளரியாராகிய பிள்ளையாருடைய செய்கையைக் கண்டு, அந்நாட்டைவிட்டு ஓடினார்கள். அவர்களிற் சிலர் பரமசிவனே மெய்க்கடவுள் என்று துணிந்து, சைவர்களாகி உய்ந்தார்கள். பிள்ளையாருடைய திருவாக்கிலே பிறத்தலால் அப்பனைகளெல்லாம் தங்கள் காலத்தைக் கழித்து, ஒழியாப் பிறவியை ஒழித்துச் சிவத்தை அடைந்தன.

பிள்ளையார் சிலநாளாயின பின், அத்திருப்பதியை நீங்கி, திருமாகறல், திருக்குரங்கணின் முட்டம் என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு, காஞ்சிபுரத்தை அடைந்தார். அங்கே திருவேகம்பம், திருக்கச்சநெறிக்காரைக்காடு, திருவனேகதங்காவதம், திருக்கச்சமேற்றளி என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு அங்கெழுந்தருளியிருந்தார். பின்பு புறப்பட்டு, திருமாற்பேறு, திருவல்லம், திருவிலம்பயங்கோட்டூர், திருவிற்கோலம், திருவூறல் முதலாகிய தலங்களை வணங்கிக் கொண்டு, பழையனூர்த் திருவாலங்காட்டுக்குச் சமீபத்திலே போனார். அது காரைக்காலம்மையார் திருத்தலையாலே நடந்த திருப்பதியாதலால், அதை மிதிக்க அஞ்சி, அதற்குச் சமீபத்திலே உள்ள ஓரூரிலே அன்றிரவு பள்ளி கொண்டருளினார். திருவாலங்காட்டில் எழுந்தருளியிருக்குங் கடவுள் அத்தயாமத்திலே அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி; "நம்மைப் பாடுதற்கு மறந்தனையோ" என்று அருளிச் செய்ய; உடனே பிள்ளையார் விழித்து எழுந்து, திருவருளைத் துதித்து, "துஞ்சவருவாரும்" என்னுந் திருப்பதிகம் பாடியருளினார். மற்றநாள் உதயத்திலே திருக்கூட்டம் தம்மை அணைந்தபொழுது, இரவிலே நிகழ்ந்ததை அவர்களுக்குச் சொல்லியருளினார். பின்பு திருப்பாசூர், திருவெண்பாக்கம், திருக்காரிகரை முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு, திருக்காளத்திமலைக்குச் சமீபித்து, அதன்மேலே கண்ணப்ப நாயனாருடைய திருத்தொண்டைச் சிறப்பித்து "வானவர் கடானவர்கள்" என்னுந் திருப்பதிகம் பாடிக் கொண்டு சென்று, மலைமேல் ஏறி, சந்நிதானத்தை அடைந்து, சுவாமியை வணங்கினார். அவ்வணக்கத்தாற் பெற்ற பயனைக் காண்பார் போல அன்புருவமாகிய கண்ணப்பநாயனாரைக் கண்டு, ஆனந்த வருவி சொரிய விழுந்து நமஸ்கரித்தார். பின் மலையினின்றும் இறங்கி, ஒரு திருமடத்தில் எழுந்தருளியிருந்தார். காலந்தோரும் திருக்காளத்தியப்பரை வணங்கிக் கொண்டு அங்கே எழுந்தருளியிருக்கு நாளிலே வடதிசையிலும் மேற்றிசையிலும் தமிழ் மொழிவழக்கு இன்மையால், உத்திரகைலாசம், திருக்கேதாரம், திருக்கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திர நீல பருப்பதம் முதலிய தலங்களை அங்கிருந்தே வணங்கித் திருப்பதிகம் பாடினார். சில தினங்கழிந்த பின், திருக்காளத்தியை நீங்கி, திருவேற்காடு, திருவலிதாயம் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு, திருவொற்றியூரை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு எழுந்தருளியிருந்தார். அது நிற்க.

திருமயிலாப்பூரிலே, வைசியர் குலத்திலே, சிவபத்தி அடியார் பத்திகளிற் சிறந்தவரும், பரசமயங்களைப் பாற்றல் வேண்டும் என்னுஞ் சிந்தையுடையவரும், பெருஞ்செல்வருமாகிய சிவநேச ரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் ஞானப்பால் உண்டமையையும், உலகம் உய்யும் பொருட்டுத் திருப்பதிகங்களிலே ஆருகதத்தையும் பௌத்தத்தையும் இழித்துரைத்தலையும், சிவனடியார்கள் சொல்லக் கேள்வியுற்று, மனமிக மகிழ்ந்து, அவருடைய திருவடிகளிலே பேரன்புடையராகி, அகோராத்திரம் அவருடைய திருவருட்டிறங்களையே பேசல் கேட்டலாகிய தொழிலினராயினார். அவர் பெருஞ்செல்வமும், பெருங்கீர்த்தியும் உடையராயினும், பிள்ளைப் பேறின்மையால் மிகக் கவலையுற்று, சிவபூசை மகேசுரபூசைகள் செய்து, ஒரு பெண்பிள்ளையைப் பெற்றார். அப்பெண் செந்தாமரையாசனியாகிய இலக்குமிபோல மகாசௌந்தரியம் உடையளாதலால், அவளுக்குப் பூம்பாவை என்னும் பெயர் கொடுக்கப்பட்டது. அவளுக்குப் பெதும்பைப் பருவம் வந்தபின், தந்தையார் அவளுடைய குணாதிசயங்களைக் கண்டு வியப்புற்று, மனமகிழ்ந்து "இவளை விவாகஞ்செய்பவரே என்னுடைய அளவிறந்த திருவியங்களுக்கு உரியவர்" என்றார். அந்நாட்களிலே, திருஞானசம்பந்தப் பிள்ளையார் பாண்டிநாட்டிற்சென்று செய்தருளிய திருவருட்டிறங்களெல்லாவற்றையும் அறிந்தவர்கள் வந்து, சிவநேசருக்குச் சொன்னார்கள். சிவநேசர் அதைக் கேட்டு மனமகிழ்ந்து, அவர்களெல்லாருக்கும் அளவிறந்த திரவியங்களைக் கொடுத்து, பிள்ளையாரைத் திக்குநோக்கி நமஸ்கரித்து, எழுந்து நின்று, தம்முடைய சுற்றத்தார்கள் சமஸ்தருங்கேட்க, "அடியேன் என்னுடைய புத்திரியாகிய பூம்பாவையையும் திரவியங்களையும் என்னையும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குக் கொடுத்து விட்டேன்" என்று சொல்லிப் பேரானந்தம் அடைந்தார். ஒருநாள், பூம்பாவை சேடியரோடு கன்னிமாடத்துக்குப் பக்கத்தில் இருக்கின்ற பூஞ்சோலையிற் சென்று பூக்கொய்யும் பொழுது ஒரு பாம்பு மல்லிகைப் பந்தரிலே மறைந்து வந்து, அவளுடைய விரலிலேகாளி, காளாத்திரி, யமன், யமதூதி என்னும் நான்கு தந்தங்களும் எலும்பிலே தாவக் கடித்து, நஞ்சை உகுத்து, மேலே படத்தை விரித்து நின்றாடி, அடங்கிற்று. பூம்பாவை மயங்கி விழ; சேடியர்கள் அச்சுற்று அவளைத் தாங்கி, கன்னிமாடத்தினுள்ளே கொண்டுபோனார்கள். சிவநேசர் சுற்றத்தாரோடு மனங்கலங்கி அழுதார். விஷவைத்தியர்கள் அநேகர் தனித்தனியே மந்திர தியான பாவங்கள் செய்தும், எண்ணிறந்த ஔஷதங்களைப் பிரயோகித்தும், விஷம் நீங்காமல் ஏழுவேகமும் முறையே பொங்கித் தலைக் கொண்டது. ஆவி தங்குதற்குரிய குறிகள் இல்லாமையால் விஷவைத்தியர்கள் கைவிட; சுற்றத்தார்கள் அவண்மேல் விழுந்து, அலறி அழுதார்கள். சிவநேசர் ஒருவாறு தெளிந்து, "இந்த விஷத்தை நீக்கினவர்களுக்கு என்னுடைய அளவிறந்த திரவியங்களைக் கொடுப்பேன்" என்று பறையறைவித்தார். மூன்று நாளையும் அரசரிடத்துள்ளோர் முதலாகிய மந்திரவாதிகள் சமஸ்தரும் வந்து, தங்கள் செய்கையினால் தீராமையால் திரும்பிவிட்டார்கள். சிவநேசர் அதுகண்டு மயங்கி, பின்பு, "இவளைப் பிள்ளையாருக்கு என்று சொல்லியதனால் நான் துன்புறவேண்டுவதில்லை" என்று துன்பநீங்கி, "பிள்ளையார் வருமளவும் இவ்வுடலைத் தகனஞ் செய்து, எலும்பையும் சாம்பரையும் சேமித்து வைப்பேன்" என்று துணிந்து, அப்படியே தகனஞ்செய்து எலும்பையும் சாம்பரையும் ஓர் குடத்தில் இட்டு கன்னிமாடத்திலே வஸ்திரஞ்சாத்தி ஆபரணங்கள் அணிந்து பஞ்சணைமேல் வைத்தார். தினந்தோறுந் தவறாமல் மஞ்சனம், மாலை, சந்தனம், அன்னம், விளக்கு முதலியவைகளை அமைத்தார். அதனை அறிந்த யாவரும் வியப்புற்றார்கள்.

இப்படி நிகழுநாளிலே பிள்ளையார் திருக்கூட்டத்தோடு திருவொற்றியூரில் எழுந்தருளி வந்து சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருக்கின்றார்" என்று அவ்வூரவர்கள் பலர் வந்து சிவநேசருக்கு சொன்னார்கள். அவர் அவர்கள் எல்லோருக்கும் வஸ்திரங்களையும் பொன்களையும் கொடுத்து பெருங்களிப்புடையராகி, திருவொற்றியூர் வரைக்கும் நடைப்பந்தல் இட்டு, வஸ்திரங்களால் விதானித்து கழுகுகளும், வாழைகளும் நாட்டி, தோரணங்கள் நிரைத்து, கொடிகள் கட்டி, மாலைகள் தூக்கி அலங்கரிப்பித்தார். பின்பு, "திருவொற்றியூரிற் சென்று திருஞானசம்பந்த பிள்ளையாருடைய திருவடிகளை வணங்குவேன்" என்று எழுந்து அத்திருமயிலாப்பூரில் இருக்கின்ற சிவனடியார்களும் உடன்செல்லச் சென்று, திருவொற்றியூருக்குச் சமீபித்தார். அப்பொழுது பிள்ளையாரும் திருவொற்றியூரை அகன்று, திருமயிலாப்பூரை நோக்கி அடியார்கூட்டத்தோடும் எழுந்தருளியிருந்தார். சிவநேசரும் சிவனடியார்களும் அடியார் திருக்கூட்டத்தைத் தூரத்திலே கண்டு, சிவகுமாரராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் எழுந்தருளி வருகின்றார். என்று அளவில்லாத மகிழ்ச்சி கொண்டு, விழுந்து நமஸ்கரித்தார்கள். பிள்ளையார் முத்துச் சிவிகையினின்றுமிறங்கி, அவர்களெதிரே தொழுது கொண்டெழுந்தருளி, சிவநேசருடைய செய்கையை அடியார்கள் சொல்லக் கேட்டு, திருமயிலாப்பூரை அடைந்தார்.

ஆளுடையபிள்ளையார் சிவநேசரிடத்து நிகழ்ந்ததைத் திருவுளத்தடைத்து, அவருடைய கருத்தை முற்றுவித்தற்கும் ஆருகதசமயத்தையும், பௌத்தசமயத்தையும் அழித்தற்கும் திருவுளங்கொண்டு, கபாலிச்சரம் என்னும் ஆலயத்திற் பிரவேசித்து சிவபெருமானை வலஞ்செய்து, நமஸ்கரித்து ஸ்தோத்திரஞ் செய்துகொண்டு, திருக்கோயிலுக்குப் புறத்திலே வந்து சிவநேசரை நோக்கி, "உம்முடைய மகளினது எலும்பை நிறைத்த குடத்தைத் திருக்கோயிற் புறமதிற்றிருவாயிலிலே கொண்டுவாரும்" என்று அருளிச் செய்தார். சிவநேசர் பெருங்களிப்புடையவராகி, விழுந்து நமஸ்கரித்து எழுந்து, தம்முடைய வீட்டை அடைந்து, கன்னி மாடத்திலே புகுந்து, வெந்த சாம்பரும் எலும்பும் நிறைந்த குடத்தை எடுத்து, மூடுகின்ற இரத்தினச் சிவிகையிலுள்ளே வைத்து, சேடியர்கள் சூழ்ந்து செல்லும்படி, எடுப்பித்துக் கொண்டு வந்து, திருக்கோபுரத்துக்கு எதிரே சிவிகையை நீக்கி, அக்குடத்தை எடுத்து, சிவலிங்கப்பெருமானுக்கு அபிமுகத்திலே வைத்து நமஸ்காரம் பண்ணினார். திருமயிலாப்பூரில் இருக்கின்றவர்களும், மற்றையூர்களில் உள்ளவர்களும், சமணர் முதலாகிய புறச்சமயிகளும் பார்க்கும் பொருட்டுப் பக்கத்திலே வந்து சூழ்ந்தார்கள். தேவர்கள் முதளியோர் ஆகாயத்திலே வந்து நெருங்கினார்கள். பசுகரணமின்றிச் சிவகரணமுடைய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சர்வான் மாக்களுக்கும் உறுதி பயப்பித்தற் பொருட்டு, அடியார் திருக்கூட்டம் பக்கத்திலே தம்மைச் சூழ்ந்து வரும்படி திருக்கோபுரவாயிலின் நேரே வந்து, பூம்பாவையினது அத்தியிருக்கின்ற மட்குடத்தைக் கண்டு, சுத்தசாட்குண்ணிய பரிபூரணராகிய பரமசிவனுடைய திருவருளின் பெருமையைச் சிந்தித்து இப்பூமியிலே இறந்தவர்களுடைய எலும்பைப் பின்னும் நன்னெறிப்படுத்த அந்நன்மை அவ்வெலும்போடு தொடர்ச்சியாகும் என்று, திருவருணோக்கிலே "பூம்பாவாய்" என்று விளித்து "பூமியிலே மானுடப்பிறப்பு எடுத்தவர்கள் பெரும் பயன் அன்புடனே சிவபெருமானுடைய அடியார்களைத் திருவமுது செய்வித்தலும், சைவாகமவிதிப்படி செய்யப்படுகின்ற அவருடைய திருவிழாவைத் தரிசித்து ஆனந்தம் அடைதலுமே என்பது சத்தியமாயின், நீ இவ்வுலகர்முன் வருவாய்" என்று "மட்டிட்டபுன்னை" என்னுந் திருப்பதிகத்தை எடுத்தருளினார். அதில் அருளிச் செய்யப்பட்ட "போதியோ" என்னுந் திருவாக்காகிய அமிர்தம் அவ்வங்கத்திலே பொருந்த; அது குடத்தினுள்ளே சரீரமாய்ப் பரிணமித்தது. பூம்பாவை முதற்றிருப்பாட்டிலே வடிவு பெற்று வேறெட்டுப் பாட்டிலே பன்னிரண்டு வயசடைந்து குடத்தினுள் அடங்கியிருந்தனள். பின்பு பிள்ளையார், சமணர்களும் பௌத்தர்களும் இச்செய்கையை ஏற்றதன்று என்று எடுத்துச் சொல்வார்கள் என்னுங் கருத்தினாற் பத்தாந்திருப்பாட்டை அருளிச் செய்தார். அப்பொழுது பூம்பாவை தன்கை வெளியே தோன்ற, குடமுடைந்து எழுந்தாள். அதுகண்டு பிள்ளையார் திருக்கடைக்காப்புச் சாத்தியருளினார். அங்ஙனம் எழுந்து நின்ற பூம்பாவையைக் கண்டவர்களெல்லாரும் அற்புதம் எய்தினார்கள். சிவனடியார்களெல்லாரும் "ஹரஹர" என்று சொல்லும் ஓசை மிக்கோங்கிற்று. தேவர்களும், முனிவர்களும் திருவருட்சிறப்பை நோக்கி, புஷ்பமாரி பொழிந்தார்கள். பூமியில் உள்ளவர்கள் "இது எம்பெருமானுடைய பெருங்கருணையே" என்று, கைகள் சிரசின்மேல் ஏறிக்குவிய ஆனந்த பராயணராய் வீழ்ந்தார்கள். அவ்வற்புதத்தைக் கண்ட சமணர்கள் முதலிய புறச்சமயிகளெல்லாரும் ஏங்கித் தள்ளாடி விழுந்தார்கள். எண்ணில்லாத வயசையுடைய பிரமதேவர், தம்மாலே படைக்கப்பட்ட திலோத்தமையினிடத்தே, அவளினது அழகின் வெள்ளத்தை நான்கு முகத்தினாலே கண்டார்; பதினாறு வயசையுடைய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரோ, அத்திலோத்தமையினும் பார்க்க மிகுந்த சௌந்தரியத்தையுடைய தம்மாலே படைக்கப்பட்ட பூம்பாவையினிடத்தே, பரமசிவனது பெருங்கருணை வெள்ளத்தை ஆயிரமுகத்தினாலே கண்டார். பூம்பாவையைக் கண்ட தந்தையாராகிய சிவநேசர், பிள்ளையாருடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்தார்; பூம்பாவை சிவபெருமானை வணங்கி, பின்பு பிள்ளையாரை நமஸ்கரித்து எழுந்து நின்றாள்.

பிள்ளையார் சிவநேசரை நோக்கி, "இனி உம்முடைய புத்திரியை வீட்டிற்குக் கொண்டுபோம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். சிவநேசர் பிள்ளையாருடைய திருவடிகளை வணங்கித் துதித்து, "சுவாமி! அடியேன் அருமையாகப் பெற்ற இப்புத்திரியைத் தேவரீர் திருமணஞ்செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்திக்க; பிள்ளையார் அவரை நோக்கி, "நீர் பெற்ற பெண் விஷத்தினால் இறந்த பின், நாம் சர்வான்மாக்களும் உய்யும்படி அவர்களுக்குச் சிவபெருமானது திருவருண்மகிமை விளங்கும் பொருட்டு உற்பவிப்பித்தமையால் இவ்வார்த்தை தகாது" என்று மறுத்தருளினார். அதுகேட்டுச் சிவநேசரும் அவர் சுற்றத்தார்களும் மயங்கி, பிள்ளையாருடைய திருவடிகளிலே விழுந்து அழ, பிள்ளையார் அவர்களுடைய பெருந்துயரந்தணியும் பொருட்டு, தேருளி சிவாகமத்துணிவை அவர்களுக்கு எடுத்துப் போதித்தருளினார். அதுகேட்ட சிவநேசரும் சுற்றத்தார்களும் கவலை நீங்கினார்கள். பிள்ளையார் திருக்கோயிலினுள்ளே எழுந்தருளினார். சிவநேசர் "பூம்பாவையை வேறொருவருக்கும் விவாகஞ்செய்து கொடுப்பதில்லை" என்று கொண்டு போய், கன்னிமாடத்தில் வைத்தார். அவள் சிவத்தை அடைந்தனள். திருக்கோயிலினுள்ளே எழுந்தருளிய பிள்ளையார் சுவாமியை வணங்கி, திருவருளைத் துதித்து, திருப்பதிகம் பாடிக் கொண்டு, புறம்போந்து எழுந்தருளியிருந்தார்.

சிலநாளாயினபின், பிள்ளையார் திருமயிலாப்பூரை அகன்று, அங்குள்ள திருத்தொண்டர்கள் விடைகொள்ள, சிவநேசருக்கு வருத்தம் நீங்கும்படி மதுரமொழி அருளி விடைகொடுத்துச் சென்று, திருவான்மியூர், திருவிடைச்சுரம், திருக்கழுக்குன்று, திருவச்சிறுபாக்கம், திருவரசிலி, திருப்புறவார்பனங்காட்டூர் முதலாகிய தலங்களை வணங்கிக் கொண்டு, சிதம்பரத்தை அடைந்து, காலந்தோறும் சபாநாயகரைத் தரிசனஞ் செய்து கொண்டு எழுந்தருளியிருந்தார். சிவபாதவிருதயரும் சீர்காழியில் உள்ள மற்றைப்பிராமணர்களூம் அடியார்களும் "பிள்ளையார் சிதம்பரத்தில் வந்து எழுந்தருளியிருக்கின்றார்" என்று கேள்வியுற்று, வந்து சேர்ந்தார்கள். பிள்ளையார் அவர்களோடு சபாநாயகரை வணங்கி அருள்பெற்று, சிதம்பரத்தை அகன்று சீர்காழியை அடைந்து, காலந்தோறும் தோணியப்பரை வணங்கிக் கொண்டு எழுந்தருளியிருந்தார். இருக்குநாளிலே, முருகநாயனார், திருநீலநக்க நாயனார் முதலாகிய திருத்தொண்டர்கள் சுற்றத்தார்களோடு சீர்காழியில் வந்து பிள்ளையாரைச் சேவித்துக் கொண்டிருந்தார்கள்.

சிவபாதவிருதயரும் அவர் சுற்றத்தார்களும் ஒருங்கு கூடி, "திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருக்கல்யாணஞ் செய்தருளுதற்கு இதுவே பருவம்" என்று எண்ணி, பிள்ளையாரை அணைந்து, "சுவாமி! தேவரீர் வைதிகச்சடங்கைப் பிறருக்குக் காட்டும்பொருட்டு, ஓர் கன்னியை விவாகஞ் செய்தருளல் வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்தார்கள். பிள்ளையார் "அது கூடாது" என்று மறுத்தருள, பிராமணர்கள் பின்னுங்கை தொழுது, "தேவரீர் இப்பூமியின் கண்ணே வேதநெறியை ஸ்தாபிக்கப் புகுந்தீர். ஆதலால் அவ்வேத விதிப்படி திருமணஞ் செய்தருளுதற்குத் திருவுளஞ் செய்தல் வேண்டும்" என்றார்கள். பிள்ளையார் வேதநெறி நிலைப்படும் பொருட்டு அதற்கு உடன்பட்டருளினார் அதுகண்ட தந்தையாரும், மற்றைப் பிராமணர்களும் "இது சிவபெருமானுடைய திருவருள்" என்று உருகி மனமகிழ்ந்து, திருநல்லூரிலிருக்கின்ற பிராமணருள் நம்பாண்டார் நம்பி என்பவருடைய புத்திரியே திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு "மனைவியாதற்குத் தகுதியுடையவள்" என்று எண்ணினார்கள். தந்தையாராகிய சிவபாதவிருதயர் பிராமணர்களோடும் திருத்தொண்டர்களோடும் விவாகம் பேசுதற்குத் திருநல்லூரைச் சமீபித்து, அங்குநின்று சுற்றத்தாரோடு வந்து தம்மை எதிர்கொண்டு வணங்கிய நம்பாண்டார் நம்பியோடு அவர் வீட்டை அடைந்தார். நம்பாண்டார் நம்பி சிவபாதவிருதயரையும் மற்றையோரையும் உபசரித்து "நீங்கள் இங்கே எழுந்தருளிவந்தது என்னை" என்று வினாவ; அவர்கள் நம்பாண்டார் நம்பியை நோக்கி, "நாங்கள் திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு உம்முடைய புத்திரியை விவாகம் பேசி வந்தோம்" என்று சொல்ல; நம்பாண்டார் நம்பி பெருங்களிப்புடையராகி, சிவபாதவிருதயரை நோக்கி "சுவாமி! தேவரீருடைய பெருந்தவத்தினாலே திருவவதாரஞ் செய்தவரும், உலகமாதாவாகிய உமாதேவியாருடைய திருமுலைப்பாலை உண்டவருமாகிய திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்கு அடியேன் யானும் என் குலமும் உய்யும் பொருட்டு, என் குலக்கொழுந்தை விவாகஞ் செய்து கொடுத்தற்கு என்ன தவஞ் செய்தேனோ" என்றார். அதுகேட்ட சிவபாதவிருதயர் மற்றவர்களோடு மகிழ்ச்சியுடன் சீர்காழிக்கு மீண்டு சென்று, பிள்ளையாருக்கு அதனைத் தெரிவித்து, சோதிடர்களைக் கொண்டு விவாகத்திற்குச் சுபதினமும் சுபமுகூர்த்தமும் நிச்சயிப்பித்து, எங்குந் திருக்கல்யாண பத்திரம் பெருஞ்சிறப்பினோடு அனுப்பி, திருக்கல்யாணத்துக்கு வேண்டும் முயற்சிகளைச் செய்வித்தார். நம்பாண்டார் நம்பியும் விவாகத்துக்கு வேண்டும் முயற்சிகளைச் செய்வித்தார்.

ஆளுடைய பிள்ளையார், திருக்கல்யாண தினத்துக்கு முதற்றினத்திலே சமாவர்த்தனம் பண்ணீ, ரக்ஷாபந்தனஞ் செய்து, மற்றநாட் காலையில் நித்தியகருமங்களைச் செய்து திருத்தோணியப்பரை வணங்கிக் கொண்டு, முத்துச்சிவிகை மேல் ஏறி, திருக்கல்யாணந்தரிசிக்க வந்த சமஸ்தருஞ்சூழ, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, குடைகள் சாமரங்கள் ஆலவட்டங்கள் முதலியன நெருங்க, முத்துக்குடை நிழற்ற, மகா அலங்காரத்தோடு சென்று, திருநல்லூரைச் சமீபித்து அங்கிருந்துவந்து அநேகர் எதிர்கொள்ளப் போய், அங்குள்ள திருப்பெருமணம் என்னும் ஆலயத்திற் பிரவேசித்து, சுவாமியை வணங்கித் திருப்பதிகம் பாடிக்கொண்டு, பிராமணர்களுடைய வேண்டுகோளின் படி திருக்கோயிலுக்குப் புறத்தில் இருக்கின்ற ஒரு திருமடத்திலே புகுந்தருளினார். பிராமணர்கள் பிள்ளையாரைப் பத்துத் துவரையும் ஓமாலிகை முப்பத்திரண்டும் விரை ஐந்துமாகிய இருவகை வாசனைத் திரவியங்களையும் வெவ்வேறு சேர்த்து அரைத்துத் திருமேனியிலே பூசி திருமஞ்சனநீராட்டி, விலைமதிப்பில்லாத வஸ்திராபரணங்களாலே திருக்கோலஞ் செய்தார்கள். பின்பு பிள்ளையார் பரமசிவனது திருக்கண்ணினின்றும் உதிக்குந் திருவருட் குறியாகிய உருத்திராக்ஷமாலையைச் சர்வலோகத்தாரும் துதிக்கும்படி வணங்கித் தாமே எடுத்துத் தரித்து, பசுமல நீக்கத்துச் சிவத்துவக்குறியாகிய அழகுக்கு அணியாய் விளங்குகின்ற திருவெண்ணீற்றைத் திருவைந்தெழுத்தோதிச் சாத்திக் கொண்டு, மிக அலங்கரிக்கப்பட்ட திருவீதியிலே எழுந்தருளிவந்து, பரமசிவனை வணங்கி, முத்துச்சிவிகைமேல் ஏறியருளினார். அப்பொழுது பலவகைப்பட்ட வாத்தியங்களும் ஒலித்தன. ஆகாயத்திலுள்ள தேவர்கள் கற்பகப்பூமாரி பெய்தார்கள். பிராமணர்கள் வேதகோஷஞ் செய்தார்கள். பிள்ளையார் முத்துக்குடை நிழற்ற, முத்துச் சின்னங்களெல்லாம் தம்முடைய எண்ணில்லாத திருநாமங்களை எடுத்து ஊத, எழுந்தருளிவந்தார். பூப்பந்தருக்கு முன் வந்தவுடனே, முத்துச் சிவைகையினின்றும் இறங்கி, பூக்களும் பொற்சுண்ணமும் பரந்த பாவாடைமேல் நடந்து, திருக்கல்யாண மண்டபத்துட் சென்று இரத்தினாசனத்தின் மேல் வீற்றிருந்தருளினார். அப்பொழுது நம்பாண்டார் நம்பி, தம்முடைய மனைவியார் பசும்பாலும் சுத்தஜலமும் ஏந்திப் பின்வர வந்து, பிள்ளையாரைப் பரமசிவனாகப் பாவித்து, தம்முடைய மனைவியார் கரகநீரை வார்க்க அவருடைய ஸ்ரீபாதங்களை விளக்கி, அங்ஙனஞ்செய்த தீர்த்தத்தை தம்முடைய சிரசின்மேலே புரோக்ஷித்து, உள்ளும் பூரித்து சுற்றத்தார்கள்மேலுந் தெளித்தார். பிள்ளையாருடைய திருக்கரத்திலே ஜலத்தை வார்த்து தம்முடைய கோத்திரத்தைச் சொல்லி, "என்னுடைய புத்திரியைத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருக்குக் கொடுத்தேன்" என்றார். விவாகமுகூர்த்தம் வர மணமகளைக் கொண்டுவந்து பிள்ளையாருக்கு வலப்பக்கத்தில் இருத்தினார்கள். திருநீலநக்க நாயனார் திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருமுன்பே பரமசிவனைத் தியானித்துக் கொண்டு, வேதவிதிப்படி சடங்கு செய்ய; வேதங்கள் ஒலிக்க, திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருமங்கலியத்தைச் சாத்தி, பாணிக்கிரகணம்பண்ணி, பொரியை அக்கினியில் இட்டு பரமசிவனைத் துதித்து, அக்கினியை வலஞ்செய்ய வேண்டி "அக்கினியாவார் பரமசிவனே" என்று திருவுளங்கொண்டு திருப்பெருமணம் என்னும் சிவாலயத்திற் செல்லக் கருதி, வேதவிதிப்படி வளர்க்கப்பட்ட அக்கினியை வலஞ்செய்து, "இந்த இல்லொழுக்கம் வந்து சூழ்ந்ததே, நான் இவளோடு சிவபெருமானது திருவடியை அடைவேன்" என்று திருவுளங்கொண்டு, சமஸ்தருஞ் சூழும்படி; மனைவியாரோடு சென்று, அச்சிவாலயத்திற் பிரவேசித்து, தம்முடைய திருமணத்தைத் தரிசித்தவர்களுடைய பாசத்தை நீக்கத் திருவுளங்கொண்டு, "திருநல்லூர்ப்பெருமணத்தில் எழுந்தருளியிருக்குங் கடவுளே! தேவரீருடைய திருவடிகளை அடையும் பதம் இது" என்று "கல்லூர்ப்பெருமணம்" என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

அப்பொழுது கருணாநிதியாகிய சிவபெருமான் "நீயும் உன் மனைவியும் உன்னுடைய விவாகத்தைக் காண வந்தவர்கள் சமஸ்தரும் இந்தச் சோதியினுள்ளே வந்து நம்மை அடையுங்கள்" என்று அருளிச் செய்து திருக்கோயில் உட்பட மேலோங்கிய சுத்தசோதி வடிவமாகி அச்சோதிக்கு ஒரு திருவாயிலை வகுத்துக் காட்டியருளினார். கிருபா சமுத்திரமாகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் சோதிவடிவாய் நின்ற கடவுளை வணங்கித் துதித்து, உலகம் உய்யும் பொருட்டு அதனை அடையும் நெறியை அருளிச் செய்யத் திருவுளங் கொண்டு, யாவருக்கும் ஞானமெய்ந்நெறி நமச்சிவாய என்கின்ற மந்திரம் என்னுங்கருத்தையுடைய "காதலாகிக் கசிந்து" என்னும் நமச்சிவாயத் திருப்பதிகத்தைச் சமஸ்தருங்கேட்க அருளிச் செய்து, "இக்கலியாணங் காணவந்த எல்லீரும் உங்கள் சனனநோய் தீரும் பொருட்டு இந்தச் சோதியினுள்ளே பிரவேசியுங்கள்" என்று திருவாய் மலர்ந்தருளினார். பிறவிக்கடலிலே கரைகாணாது அழுந்தி அறிவின்றி மயங்குகின்றவர்கள், பிள்ளையாருடைய திருமணத்தைச் சேவிக்கப் பெற்றமையால், அந்தச் சோதியினுள்ளே புகுந்தார்கள். திருநீலநக்கநாயனார், முருகநாயனார், சிவபாதவிருதயர், நம்பாண்டார் நம்பி, திருநீலகண்டப் பெரும்பாணர் முதலிய திருத்தொண்டர்கள் தங்கள் தங்கள் மனைவியரோடும் சுற்றத்தாரோடும் புகுந்தார்கள். பிள்ளையாருடைய முத்துச்சிவிகை முதலியவற்றைத் தாங்கிச் சைவர், பாசுபதர், மகாவிரதர், காளாமுகர், வாமர், வைரவர் என்கின்ற அறுவகை உட்சமயிகளும், வைதிக சைவர்களும் சைவ சித்தாந்திகளும் ஆகிய சமஸ்தரும் அந்தச் சுத்த சோதியினுள்ளே புகுந்த பின்; சர்வான்மாக்களையும் உய்விக்கும்பொருட்டுத் திருவவதாரஞ் செய்தருளிய சைவ சித்தாந்த சமயாசாரியராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தம்முடைய மனைவியாரைக் கைப்பற்றிக் கொண்டு அந்தச் சோதியை வலஞ்செய்து, அதனுள்ளே புகுந்து, சிவசாயுச்சியம் அடைந்தார். அதன்பின் அந்தசோதி மறைந்துவிட, திருப் பெருமணமாகிய திருக்கோயில் தோன்றுதலும் உலகத்திலே பேறில்லாதவர்களெல்லாருங் கவலைகொண்டார்கள். பிள்ளையார் சோதியுட்புகுந்தமையைத் தூரத்திலே கண்டு நணுகப்பெறாத அரிபிரமேந்திராதி தேவர்களும் முனிவர்களூம் கவலை நீங்க எடுத்துத் தோத்திரம் பண்ணினார்கள்.

திருச்சிற்றம்பலம்

 


திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

1. வேதநெறியும் சைவத்துறையும்

சைவத்திருநெறி ஓங்கி வளர்ந்துள்ள செந்தமிழ்த் திருநாட்டிலே வேதாகம நிந்தகர்களாகிய சமணர் பௌத்தர்களின் ஆதிக்கம் மிகுந்து அரசச் செல்வாக்கையுங் கபளீகரித்துச் சைவநெறி இயங்க வொட்டாது நலியக்கால் கொண்டிருந்த ஒரு காலகட்டத்திலே வேதநெறியையுஞ் சைவத்துறையையும் புனர்நிர்மாணஞ் செய்யும் பொருட்டாகத் திருவவதாரஞ் செய்தருளியுள்ளார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். அது, "வேதெநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்கப் பூத பரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்" என்ற திருத்தொண்டர் புராணச் செய்யுளாற் பெறப்படும். ஆதியிலே பரமசிவனால் அருளிச்செய்யப்பெற்றுள்ள வேதத்தில், மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வாழ்விலட்சிய மடைதற்கு உதவுஞ் சாதனமாக வகுக்கப்பெற்றுள்ள வேள்விநெறியே வேதநெறியும் அதன் மூலம் வாழ்விலட்சியத்திற் படியேறி மேலுயர்ந்து பாசநீக்கமுஞ் சிவப் பேறுமாகிய முழுநிலையை எய்த நிற்போர்க்கு இறங்கு துறையாய் நிற்கும் மெய்ஞ்ஞான நிலையே சைவத்துறையும் ஆதல் அமையும். ஆன்மாவானது ஞானத்தால் விளையும் மெய்யன்பின் மூலம் சிவனருளிற் படிந்து மூழ்கித் திளைத்தற்குரிய இடம் என்ற நயப் பாட்டினாலும் அத்தகு மெய்யன்பை இடமாகக் கொண்டு அதன் மயமாகவே சிவம் வெளிப்படும் என அறியப்படுதலானும் மெய்ஞ்ஞானநிலை சைவத்துறையாதல் அமையும். "ஞானம் ஈசன்பாலன்பே" எனத் திருத்தொண்டர் புராணத்தும் "அன்பே சிவமாவது" எனத் திருமந்திரத்தும் வருவனகொண்டு அது தெளியப்படுவதாம்.

இப்பிரபஞ்சம் முழுவதும் பிரம (வியாபக) மன்றோ (சர்வம் கலு இதம் ப்ரஹ்ம), இது முழுவதும் ஈசனால் வகிக்கப்பெற்றுள்ளதாம் (ஈசாவாஸ்ய மிதம்சர்வம்) எனக் கூறும் வேதம் இப்பிரபஞ்சத்தினூடாகவே, பிரமமாயும் ஈசனாயும் பேசப்படுஞ் சிவத்தை அறிதல் சாலும் என்ற உண்மையையுஞ் சொல்லாமற் சொல்லியுள்ள தாகையாலும் பிரபஞ்சத்தின் மூலகாரணங்களாக அறியவுள்ள பஞ்சபூத மொவ்வொன்றும் அதிசயகரமான அற்புத ஆற்றலுள்ளதாயிருக்கக் கண்டு சடவஸ்துக்களாகிய இவற்றுக்கு அத்தகு பேராற்றல் சேர்ந்தது அவைதொறும் வசிக்குஞ் சிவ ஆற்றலினாலேயே என அனுமானிக்கக் கிடத்தலினாலும் அப்பஞ்சபூதங்கள் தாம் தனித்தனியாகவும், அவை வேண்டும் வேண்டும் விகிதாசாரப்படி தம்மிற் கலந்து கூட்டாக விளைக்கும் பொருள்பண்டங்களாகவும் உதவினாலன்றிப் பிரபஞ்ச அநுபவம் பெற முடியாமை நிச்சயித்துணரப்பட இருந்தமையானும் அவற்றை வெறும் பொருள்களாக ஒதுக்காது போற்றிப் பேணுதல் மூலமும் அவற்றை வெறுமனே சடப்பொருள்களாக அவமதிக்காது ஒவ்வொன்றுஞ் சிவ ஆற்றல் நிலைகளாக மதித்து அதற்கேற்குமளவு கௌரவ கண்ணியத்துடன் அவற்றை நேசித்துப் பூசித்து வாழ்த்தி வணங்குதல் மூலமும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கான ஏது சாதனங்களைச் செழிப்பாகப் பெறுவதுடன் கால அடைவில் அவற்றின் பின்னணியில் துலங்குஞ் சிவத்தை நேரில் அறிந்து அதனொடு கூடும் முடிநிலைப்பயனும் அடையலாம் என்ற நோக்கில் அவற்றுள் ஆற்றல் மிக்கதான அக்கினியைத் தளமாக வைத்து மந்திரக்கிரியாபாவனை ரூபமாக நிகழ்த்தப்பட்ட வழிபாட்டு நெறியே வேள்விநெறியாகும். இங்ஙனம் லௌகிக நோக்கிலும் ஆத்மிகநோக்கிலும் நீடு பயனளிப்பதாகிய இந்த வேள்வி நெறியை ஆஸ்திக நெறியாகப் போற்றி மேற்கொண்டிருந்த மக்களின் மதியூகம் இருந்த வாறென்னே!

குறித்தபூதங்கள் தோறும் அமைந்த ஆற்றல்கள் அனைத்தும் அவ்வவற்றுடன் "அதுவதுவாதல்" என்றதன் இலக்கணப்படி ஒன்றியிருக்குஞ் சிவத்தினால் விளைந்தவையே என்பது, "திண்மறற் றீயின் வெம்மை செய்தோன் பொய்தீர் வானிற் கலப்பு வைத்தோன் மேதகு காலினூக்கங் கண்டோன் நிழல் திகழ் நீரி லின்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன் என்றென் றெனைப் பலகோடி எனைப்பல பிறவும் அனைத்தனைத்தவ்வயி னடைத்தோன்" என்னுந் திருவாசகத்தானும் அவ்வைம்பூதக் கூட்டுறவால் விளையும் பண்டங்கள் தோறும் பரிமளிக்கும் மணம், குணம், மாதுரியம், அழகு, கவர்ச்சியாதியனவும் மற்றுங் கருதுநிலைப் பண்புகளான அன்பு, அறம், மறம் ஆதியனவுங்கூட அச்சிவத்தினால் அமைந்தவையே என்பது, "பூவினில் வாசம் புனலினிற் பொற்பு புதுவிரைச்சந்தினின் நாற்றம் நாவினிற் பாடல்கள் நள்ளாறுடைய நம் பெருமான்" - "கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே கடல்மலைவா னாகாசமானாய் நீயே" - "பண்ணி னிசையாகி நின்றாய் போற்றி" என்பன போன்ற தேவாரத் திருவசனங்களானும் "தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம் நீ கல்லினுள் மணியுநீ சொல்லினுள் வாய்மைநீ அறத்தினுளன்புநீ மறத்தினுள் மைந்து நீ வேதத்து மறைநீ பூதத்து முதலுநீ அனைத்துநீ அனைத்தினுட் பொருளுநீ" என்னும் பரிபாடலானும் பெறப்படும். இன்னும் பூசிக்கப்படும் பொருள் பூசிக்கப் பூசிக்க ஆற்றல்மிகும் என்ற அனுபவ உண்மையால், பஞ்சபூதங்கள் மந்திரக்கிரியா பாவனைகளாற் பூசிக்கப்படுந்தோறும் அவற்றின் ஆற்றல்கள் சாமானியத்தில் வெளிப்படுமளவுக்குப் பன்மடங்காக வெளிப்பட அதனால், கலி வரட்சி, துர்ப்பிக்ஷம் முதலாகிய சமூகதோஷங்கள் நீக்கமுற அவ்வகையில் வேள்விநெறி உலகோபகாரிணி யாதலுங் காண்க. அது, "கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லை" எனும் தேவாரத்தானும் "வேள்விநற் பயன் வீழ்புனலாவது" என்ற திருத்தொண்டர் புராண வசனத்தானும் இனிது புலப்படும். இங்ஙனம் லௌகிகம் ஆத்மிகம் என்ற சுயநலப் பேறுகளுடன் உலகோபகாரமாகிய பொதுநலப்பேறும் விளைக்கவல்ல வேள்வி நெறியை ஆன்மிக நெறியாக மேற்கொண்டிருந்தமை பற்றியே அந்நெறிக்குரியோர் ஆரியர்-பூசிக்கப் படத்தக்கவர் - என உயர்மொழி கொடுத்தழைக்கப்பட்டா ரென்பதுங் காண்க.

இங்ஙனமாகவும் வேதகால மக்கள் இயற்கையின் கோரங்களுக்குப் பயந்து இயற்கைக்கே வழிபாடு செய்ததாகக் கூறுநருமுளரன்றோ எனின் அது ஆய்விலார் கூற்றென்க. மேற்கண்டவாறு சிவம் வசித்தற்கிடம் என்ற வேத வாய்மை வழிநின்று ஆதார ஆதேய ஐக்கிய பாவம்பற்றி ஐம்பூதக் கூறுகளுஞ் சிவமே என்னும் நயத்தினால் அவர்கள் வழிபாடாற்றியுள்ளார்கள் என்பது, "வாயுவே உனக்கு வணக்கம். நீயே கண் கண்ட சிவமாகின்றாய் இதை உள்ளபடியே சொல்லுகின்றேன் சத்தியமாகவே சொல்லுகிறேன் என்னைக் காப்பாற்றுக (நமஸ்தே வாயோ த்வம் ஏவ ப்ரத்யஷம் ப்ரஹ்மாசி இருதம். வதிஷ்யாமி சத்யம் வதிஷ்யாமி தந் மாமவது தத்வக்தாரம் அவது அவதுமாம் அவதுவக்தாரம்) என்பன வாதி வேதமந்திரங்களால் அறியக்கிடத்தலின், அது அங்ஙனமாகாமை அறிக.

இத்தகு மகிமைக்குரியதாகிய இவ்வேள்வி நெறிக் குறிக்கோளுண்மையைத் திருபுபடுத்தியும் அதற்கிழிவு கற்பித்தும் அறிவறியா மக்களைத் தம் சொற்சாலங்களால் மயக்கி அவ்வகையில், சற்சமயமாகிய சைவ இயக்கத்துக்குக் கேடு சூழ்ந்துவந்த அன்றைய சமணர் பௌத்தர்களின் செயற்பாடோ ஆ கொடிது! கொடிது!! அதற்கெதிர், அவர் கண்ணெதிரே வேள்வி நெறியாகிய வேதநெறி மீளத் தலையெடுத் தோங்க வைத்தருளிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரின் விறல் மிக்க தொண்டு மகிமையோ மிக அரிது! அரிது!! அது அவர் வரலாற்று நிகழ்வுகளும் அவர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத் திருப்பாடல்களுமாகிய அகச் சான்றுகளாலேயே வலுவுறுவதாகும்.

மெய்ஞ்ஞான தீபமாய் விளங்கிய அவர் தாமே வேதநூற் கல்வியாகிய உபஞானக் கல்விக்கு உத்தரவாதமளிக்குமளவினதாகிய உபநயனச் சடங்கிற்கும் தாம் திருப்பெருமணநல்லூரிற் சிவசோதியிற் கலந்து கொள்வதற்குச் சற்று முன்னாகவுங் கூட ஒரு திருமணச் சடங்கிற்கும் இசைந்தருளினமையும் தமது அருமைத் தந்தையாரின் ஆப்திக (வருடாந்த) வேள்விப் பொருட்டுத் திருவாவடுதுறையிற் பொன்பெறுபதிகம் பாடிப் பொன்னுலவாக்கிழி பெற்றுக் கொடுத்துத் தந்தையார் வேள்வி மட்டிலன்றிச் சீர்காழி அந்தணர் அனைவர் வேள்விக்கும் அது போதும் எனவுங் கூறி வேள்வி நெறியை ஊக்குவித்துள்ளமையும் அவர் வரலாற்று நிகழ்வுகளாம். அவை அவரது புராணத்தில், "ஒல்லைமுறை உபநயனப் பருவமெய்த உலகிறந்த சிவஞான முணரப்பெற்றார் தொல்லைமறை விதிச்சடங்கு மறையோர் செய்யத் தோலொடு நூல் தங்கினார் சுரர்கள் போற்ற" - "வேத வாய்மையின் விதியுளி வினையினால் விளங்க ஓத நீருல கியன்முறை யொழுக்கமும் பெருகக் காதல் நீள் திருத்தொண்டர்கள் மறையவர் கவினார் மாதர் மைந்தர்பொற் காப்புநாண் நகர் வலஞ் செய்தார்" - "ஆர்வம் மிக்கெழுமன்பினால் மலரய னனைய சீர்மறைத் தொழிற் சடங்குசெய் திருந்து நூன்முனிவர் பார் வழிப்பட வருமிரு வினைகளின் பந்தச் சார் பொழிப்பவர் தங்கையிற் காப்புநாண் சாத்த" எனவும் "பணிந்தெழுந்து கை தொழுதுமுன் பனிமலர்ப் பீடத் தணைந்த ஆடகக் கிழிதலைக் கொண்டருமறைகள் துணிந்த வான்பொருள் தருபொருள் தூயவாய்மையினால் தணிந்த சிந்தைஅத் தாதையார்க் களித்துரை செய்வார்" - "ஆதிநான்மறை விதியினால் ஆறுசூழ் வேணி நாதனாரை முன்னாகவே புரியுநல் வேள்வி தீது நீங்கநீர் செய்யவுந் திருக்கழு மலத்து வேத வேதியர் அனைவருஞ் செய்யவும் மிகுமால்" என்வரும். இனி, அவர்தம் தேவாரச் சான்றுகள், "பறப்பை படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ் சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம்பலம்" - "மறைகொளுந் திருவினார் ஆகுதிப் புகைகள் வான் அண்டம் மிண்டிச் சிறைகொளும் புனலணி செழும்பதி திகழ்மதிற் கொச்சை" - "மந்திரநன் மாமறையினோடு வளர் வேள்விமிசை மிக்க புகைபோய் அந்தரவிசும்பளவி அற்புதமெனப்படரும்-வீழிநகரே" என்பன வாதியாக வரும். மேலும், "வேதவேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி யமணொடு தேரரை வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே பாதிமா துடனாய பரமனே" என அவர், அமணர்தேரர்களின் நிந்தனையால் இவ்வருமந்த வேள்விநெறிக் கேற்பட்ட பின்னிடைவைச் சகிக்கலாற்றாது செய்து கொண்ட வேண்டுதலானும் அவர் வேதநெறி தழைத்தோங்க வந்தவராதல்பெறுதும்.

இனி, சைவத்துறை விளங்க அவர் திருவவதாரஞ் செய்தார் என்பது, அவர் தமது மூன்றாண்டுப் பருவத்திலேயே உமாதேவியாரால் ஞானப்பாலூட்டப் பெற்றுச் சைவத் துறையாகிய ஞான நிலையில் விளங்கி, ஞானமுண்டார்-திருஞானசம்பந்தர்-சிவஞானசம்பந்தர் என்ற திருப்பெயர்களால் வழங்கப் பெற்றதனாலும் நின்றசீர் நெடுமாறன், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் என்போர் சிவஞானிகளாகி நாயன்மார் அறுபத்துமூவர் நிரலில் அம்மூவரும் இடம்பெற அருளியமையாலும் சிவம் (ஞானம்) பெருக்கும் பிள்ளையார் என்றே போற்றப்பெற்றிருத்தலாலும், திருவோத்தூர்ப் பனைகளே பாசநீக்கம் பெற்றுச் சிவப்பேறடைய வைத்தமையாலும், அவர்திருவாய் மலர்ந்தருளிய தேவாரத்தமிழ், பிரத்தியேகமான ஞானவீறும் விறலுமுடைத்தாதலைச் சுட்டியே அதனைத் திருநெறிய தமிழெனவும் அதை விளம்பிய தம்மைத் தமிழ்ஞான சம்பந்தன் எனவும் அவர் விதந்துள்ளார் என அநுமானிக்கப்படுதலாலும், முதிர்ச்சியுற்ற வைதிகர்களும் ஒப்புயர்வற்ற வேள்வி நெறியாளர்களுமாயிருந்து தமக்கு உபநயனச் சடங்கியற்றிய சீர்காழியந்தணர்க்குச் சடங்கு முடிவில் தாமே ஞானகுருவாயமைந்து, "செந்தழலோம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள்மந்திரம் அஞ்செழுத்துமே" என மெய்ஞ்ஞானோப தேசமாகிய பஞ்சாக்ஷர உபதேசம் பண்ணியதோடு மந்திரகிரியைகள் சார்பில் அவர்களால் விளங்க முடியாதிருந்த பகுதிகளுக்கு ஞான விளக்கமும் அருளியுள்ளதாக; "ஒருபிறப்பும் எய்தாமை உடையார்தம்மை உலகியல்பின் உபநயனமுறைமையாகும் இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி எய்துவிக்கும் மறைமுனிவர் எதிரே நின்று வருதிறத்தின் மறைநான்குந் தந்தோமென்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால் பொருவிறப்ப ஓதினார் புகலிவந்த புண்ணியனார் எண்ணிறந்த புனிதவேதம்" எனவும் "மந்திரங்களானவெலாம் அருளிச்செய்து மற்றவர்க்கு வைதிக நூற்சடங்கின்வந்த சிந்தைமயக்குறு மையந் தெளிய எல்லாஞ் செழுமறையோர்க்கருளி அவர் தெளியுமாற்றால் முந்தைமுதல் மந்திரங்கள் எல்லாந் தோன்றும் முதலாகும் முதல்வனார் எழுத்தஞ் சென்பார் அந்தியினுள் மந்திரமஞ்செழுத்து மேயென் றஞ்செழுத்தின் திருப்பக மருளிச் செய்தார்" எனவும் வருஞ் சேக்கிழார் செய்யுள்களாலறியக்கிடத்தலாலும் அவர் பாடியருளிய திருப்பாசுரத்துக்கு உரைவிரிக்கும் பகுதியில், அதன் பதினோராஞ் செய்யுள் குறிக்கும் "ஆற்றில் ஏடு எதிரேறல்" என்ற நிகழ்வின் தாற்பரியம் ஞானமீசன்பால் அன்பே என்ற திருவுளக்கிடையாகும் எனச் சேக்கிழார் தெரிவித்துள்ளமையாலும் புறச்சமயிகளாய் வந்து தம்மையெதிர்த்து வாதிட்ட போதிமங்கைப் பௌத்தர்கள் தமது சந்நிதியிற் "பட்டுற்றுப் படித்து" அறியாமை நீங்கிச் சைவஞானம் உணரச் செய்தருளியமையாலும் பெறப்படுவதாம். அன்றியும் அவருக்கு முத்திப் பேறருளும் வேளையில் சிவபரம் பொருள் மற்றெவர்க்குஞ் செய்யாத வகையில் திருப்பெருமண நல்லூர்த் திருக்கோயில் முழுவதையும் மூடி ஞானப் பெருஞ்சோதி எழுந்தொளிர அருளியது அவர் ஞானப்பெருமை விலாசத்துக்கென்றளிக்கப்பட்ட விசேட கௌரவமெனக்கருத நிற்றலானும் அவர்தம் திருமணவிழாவில் தொடர்புற்று அங்கு வந்திருந்த அபக்குவர்களுங்கூட முத்திப் பேற்றுக்கேற்குமளவு பக்குவர்களாய் விடுமாறு, "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி----" என்ற பஞ்சாக்ஷரப்பதிக மூலம் ஞானோபதேசம் பண்ணி அவர்களைத் தீவிரதர சத்திநிபாதர்களாக்கியுள்ளமையானும் அத்தொடர்பில் அநேகாநேகம்பேர் ஏககாலத்தில் ஒரே கூட்டாக ஞான சோதியிற் புகுந்து முத்திப் பேரின்பமுற வைத்ததன் மூலம் சைவஞானமகிமையைச் சாதனையளவிலும் பெருமளவிற் புலப்படுத்தியுள்ளமையானும் உறுதி பெறல் காணப்படும். குறித்த இவ்விறுதி நிகழ்ச்சிபற்றிய விபரம் அவரது புராணத்தில், "ஞானமெய்ந்நெறிதான் யார்க்கும் நமச்சிவாயச் சொலாமென் றானசீர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை அங்கண்வானமும் மண்ணுங்கேட்க அருள்செய்திம் மணத்தில் வந்தோர் ஈனமாம் பிறவிதீர யாவரும் புகுகவென்ன" எனவும் "அணி முத்தின் சிவிகைமுத லணிதாங்கிச் சென்றார்கள் மணிமுத்த மாலைபுனை மடவார் மங்கலம் பெருகும் பணிமுற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினைப்பாசந் துணிவித்த உணர்வினராய்த் தொழுதுடன்புக் கொடுங்கினார். எனவும் "ஆறுவகைச் சமயத்தில் அருந்தவரும் அடியவரும் கூறுமறை முனிவர்களுங் கும்பிடவந் தணைந்தாரும் வேறு திருவருளினால் வீடுபெற வந்தாரும் ஈறில் பெருஞ்சோதியினுள் எல்லாரும் புக்கதற்பின்" - "காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலஞ் செய்தருளித் தீதகற்ற வந்தருளுந் திருஞானசம்பந்தர் நாதனெழில் வளர்சோதி நண்ணி அதனுட் புகுவார் போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி உடனானார்" எனவும் வரும்.

"காகமுணவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகாரசிவ போக மென்னும் பெருவெள்ளம் பொங்கித் ததும்பிப்பூரணமாய் ஏகவெளியாய்க் கிடக்குதையோ இன்புற்றிடநாம் இனியெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேரவாருஞ் செகத்தீரே" எனத் தாயுமான சுவாமிகள் விடுத்துள்ள அறைகூவலுக்கு முற்றுலும் பொருந்துவதோர் முன்னோடி நிகழ்வாகக் காணப்படும் இவ்வற்புத நிகழ்ச்சியானது உலகமுள்ள அளவும் சைவஞானத்தின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்க வல்லதாகுமெனில் இதற்குக் காரணகர்த்தராய் விளங்கிய எம்பரமாசாரிய சுவாமிகளாகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் ஞானமகிமை எம்போலியரால் அளவிட்டுரைக்கப் படலாகுமோ என்க.

2. சிவஞானம்

ஆயின், ஞானம் என்பது சமயதர்சினிகள் அனைவர்க்கும் பொதுவில் உள்ள தொன்றன்றோ? அதிற் சிவஞானம் என ஒன்று விசேடித்துரைக்கக் கிடப்பது என்னெனிற் கூறுதும்.

பொறிபுலன்களால் அறியப்படுதற்கரிய சூக்குமார்த்தங்களை அகவுணர்வுக் கூர்மையா லறியும் அறிவுஞானம் எனப்படுமாகையால் ஐம்பூதம் முதலாகிய தத்துவங்களையும் அவற்றின் சார்பினால் உயிர்க்கு நிகழும் பந்தம், அவற்றின் நீக்கத்தால் வாய்க்கும் மோட்சம் என்பவற்றையும் பற்றித் தத்துவதர்சினிகள் காணும் அகவுணர்வுக் காட்சிகள் அனைத்தும் ஞானம் என்றே வழங்குமெனினும் தத்துவதர்சினிகள் பலதிறத்தாராகலின் அவரவர்க்கு வாய்க்குங் காட்சி அவரவர் பரிபக்குவநிலைத் தரத்தினுக்கேற்ப வேறுபடுவதாம். அவ்வகையில், தேக இந்திரியங்களைப்பற்றிய அறிவுக்காட்சியே ஞானமென்பாரும் அதற்கப்பாலான புத்திதத்துவத்தை அறியும் அறிவுக் காட்சியே ஞானம் என்பாரும் அதற்குமப்பாலான குணதத்துவத்தை அறியும் அறிவுக் காட்சியே ஞானம் என்பாரும் அதற்குமப்பாலான புருடன் என்ற தத்துவத்தை அறியும் அறிவுக் காட்சியே ஞானம் என்பாரும் அப்புருடனையும் பிரகிருதியையும் பிரித்தறியும் அறிவுக் காட்சியே ஞானம் என்பாரும் அப்புருடனே பிரமமாகக் காணுங் காட்சியே ஞானம் என்பாரும் ஆத்மாவே பிரமம் எனக் காணுங் காட்சியே ஞானம் என்பாரும் காண்பான், காட்சி, காட்சிப்பொருள் வேறுபாடுகளைக் கற்பனை செய்து காணும் அறிவுக்காட்சியே ஞானம் என்பாருமாக அவரவர் ஞானக் காட்சியியல்பு வேறுபடுவதும் அதற்கியைய, உலகாயதஞானம், பௌத்தஞானம், சமணஞானம், சாங்கியஞானம், விவேகஞானம், மாயாவாத ஞானம், ஏகான்மவாதஞானம், சங்கற்பனைஞானம் முதலாக ஞானம் பலவேறு நிலைகளிற் கண்டுரைக்கப்படுவதும் பிரசித்தமாம். இவற்றுட் பல, சாஸ்திர அறிவு மாத்திரங் கொண்டமைந்தனவாகவுஞ் சில, புருடனைப் பிரமமாகக் கொள்ளும் பிறழ்வுணர்வின் வெளிப்பாடுகளாகவும் அமைந்த புத்திசாதூரியத் தொழிற்பாட்டு விளைவுகளாகவும், ஞானம் பெறுவானும் ஞான வாய்மையும் ஞானப்பலனும் ஆகிய ஆந்தரங்க உண்மைகளை வெளிப்படுத்துதலிற் தவறுபட்டனவாகவும் காணப்படுதல் கொண்டு இவையனைத்தும் பாசஞானம், பசுஞானம் என்ற வகையினவாக மெய்யுணர்வுடையோராற் கணிக்கப்படுவனவாம். இந்த வகை ஞானங்கள் போலாது, உலகிருளை விலக்கிப் பொருளுண்மையறியுமாறு கண்ணுக்கு உபகரிக்குஞ் சூரியன்போலப் பெரும் பிரகாசமா யெழுந்து ஆன்மாவைச் சார்ந்த மலவிருளை விலக்கி ஆன்மாவாகிய தன்னையும் அதனிடத்திற் பதிவிருக்குஞ்சிவபரம் பொருளையும் ஆன்மாவுக்குக் காட்டுந் திருவருள் விளக்கமே ஞானம் என்பது சைவசித்தாந்தக்கோட்பாடாகும். அந்த ஞானம் சிவனால் வழங்கப்பட்டுச் சிவனையே அறிவிக்க வல்ல ஞானமாதலிற் சிவஞானம் என்றும் சிவனருளே அதுவாதலிற் பரை ஞானம் என்றும், "அருளெனு மதுவும் அடியெனுமதுவும் அறிந்திடிற் சிற்குணநிறைவு" என்ப ஆதலின் அந்தப் பரைஞானம் என்பது தானே திருவடிஞானம் என்றும் அது மற்றையஞானம் அனைத்தினுக்கும் மேலாய் நிற்பதாகலிற் பரஞானம் என்றும் அதே ஞானமே பரமுத்தியாகிய திரு அளிப்பதாதலில் திருஞானம் என்றும் வழங்குவதாம்.

எனவே, ஞானவகைகளுட் சிவஞானமொன்றொழிய ஏனைய அனைத்தும் பூரணத்துவப் பண் பற்ற ஏகதேசஞானங்கள் ஆதலானும், ஆன்மா பாசநீக்கம் பெற்றுச் சிவப்பேறடைதலாகிய அறுதிப்பயன் அவற்றால் நேர்ந்துள்ளமைக்கு அநுபவ அத்தாட்சி இன்மையானும் தத்துவ ஆய்வுக் கண்ணோட்டத்தில் அத்தகு ஞானப்பேறுகள் மீண்டும் மீண்டும் பந்தத்திற் கேதுவாதல் காணப்படுதலானும், சிவஞான மொன்றினாலேயே உண்மைமுத்தி கைகூடுவதென வேதசாத்திர மிருதிபுராணங்களுஞ் சிவாகமங்களும் உறுதிசெய்துள்ளமையானும் இச்சிவஞானத்தினெதிர் அவையெல்லாம், அஞ்ஞானம் அல்லாஞானம், ஈனஞானம் என நிராகரிக்கப்பட்டு இச்சிவஞானம் மாத்திரமே மெய்ஞ்ஞானம், நல்ஞானம், உயர்ஞானம் என அங்கீகரிக்கப்படுவதாம். அது, சிவஞான சித்தியாரில், "ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராண நல்லவா கமஞ்சொல்ல அல்லவா மென்னும் ஊனத்தார் என்கடவர் அஞ்ஞானத்தால் உறுவதுதான் பந்தமுயர் மெய்ஞ்ஞானந்தான் ஆனத்தால் இருள்போவ தலர்கதிர்முன் னிருள்போல் அஞ்ஞானம் விடப்பந்த மறு முத்தியாகும் ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம் இறைவனடி ஞானமே ஞானமென்பர்" எனவும் "பரஞானத்தாற் பரனைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் பார்க்க வருஞானம் பலஞானம் அஞ்ஞானவிகற்பம் வாச்சிய வாசகஞானம் வைந்தவத்தின் கலக்கந் தருஞானம் போகஞா திருஞான ஞேயந் தங்கிய ஞானஞ்சங் கற்பனை ஞானமாகும் திருஞானமிவையெல்லாங் கடந்த சிவஞானம் ஆதலாற் சீவன்முத்தர் சிவமே கண்டிருப்பர்" எனவும் வருவனகொண்டு அறியப்படும்.

3. மூர்த்திப் பிரபாவம்

நமது ஆளுடைய பிள்ளையார் பெற்றதாயுள்ள ஞானம் பராசக்தியே சீகாழிப் பிரமதீர்த்தக்கரையிற் சிவனோடுடனாய் வெளிநின்றூட்டிய திருஞானம் என்ற காரணத்தால் அவர் திருஞானசம்பந்தர் எனப்பெற்றார் என்பதும் அப்பேற்றினைப் போற்றிப் துதிக்குஞ் சேக்கிழார் சுவாமிகள் "சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம் பவமதனை அறமாற்றும் பாங்கினி லோங்கியஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்" என விளம்பியுள்ளவாறும், இம்மெய்ஞ்ஞான விளைவால் சம்பந்தர்க்கு வாய்ந்திருந்த மூர்த்திப் பிரபாவம் முழுவதும் ஒரேபார்வையில் ஒருங்கே புலப்படுமாறு, "ஞானத்தின் திருவுருவை நான் மறையின் தனித்துணையை வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத் தேனக்கமலர்க் கொன்றைச் செஞ்சடையார் சீர் தொடுக்குங் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்." என சேக்கிழார் மற்றோர் தருணத்தில் சொல்லுருவாக வார்த்து வடித்துவைத்துள்ளவாறும் இத்திருஞானசம்பந்தர் சைவஞானமூர்த்தியென்றே போற்றப்படவேண்டியவர் என்பதற்கான சூசகங்களாகக் கோடல்தகும்.

4. நாயனாரின் சீவகாருண்ய சீலம்

இங்ஙனம் சிவனருள் விளக்கத்தின் வேறாகாத சிவஞானவிளக்கமே தம் உருவுந் திருவுமாகத் திகழ்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அச்சிவனருளியல்பான நிர்ஹேதுக (காரணமற்ற) கருணா சமுத்திரமாய் விளங்கியவாறும் அவர் வரலாற்று நிகழ்வுகளாலறியப்படும். நாயனார் திருப்பாச்சிலாச்சிராமத்திற்கு எழுந்தருளியபோது அங்கு ஆலயத்துக்கே அடைக்கலமாக விடப்பட்டிருந்த முயலகன் நோயாளியாகிய கன்னியொருத்தி பட்டுற்ற வேதனை காணச்சகிக்காது உடனடியாகவே "துணிவளர்கங்கை" --- எனப் பதிகம் பாட எடுத்துக்கொண்டு, பாடல்தோறும் மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே-ஏழையை வாட இடர்செய்வதோ இவர் ஈடே-பைந்தொடிவாடச் சிதை செய்வதோ இவர் சீரே-தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்பே-சேயிழைவாடச் சிதை செய்வதோ இவர் சேர்வே-பைந்தொடிவாடப் பழிசெய்வதோ இவர்பண்பே பூங்கொடிவாடப் புனை செய்வதோ இவர்பொற்பே எனமீட்டு மீட்டழுத்திச் சிவன் கருணையை விகாசிப்பித்து அவள் நோயின் நீங்கி உய்யக் கொண்டமையும் திருமருகலில் வழிப்போக்கிலே சர்ப்பந்தீண்டி யிறந்த வணிகனிழப்பால், தன்பெற்றோருக்கு மறியாது அவனை நம்பிக் கூடிவந்த அவன்காதலியாகிய கன்னி அநாதையாய்க் கிடந்தலறிய குரல் கேட்டது கேட்கா முன்னமே தாமாக அவளையணுகி அவள் துயர்க்காகப் பரிந்து "சடையாய் எனுமால்"--- எனப் பதிகம் பாட எடுத்துக் கொண்டு, உடையாய் தகுமோ இவளுண் மெலிவே-னந்தாய் தகுமோ இவளேசறவே-இவளை இறையார் வளைகொண் டெழில்வவ்வினையே-இவளை மெலிநீர்மையளாக்கவும் வேண்டினையே-இவள்தன் அணிநீல வொண்கண் அயர் வாக்கினையே-நெறியார் குழலிநிறை நீக்கினையே-புடை போந்தலரும் படுமோ அடியாள் இவளே-தொழுவாள் இவளைத் துயராக்கினையே-அலங்கல் இவளை அலராக்கினையே-அரியாள் இவளை அயர்வாக்கினையே என்றெல்லாம் இடித்திடித் துணர்த்துவார் போலப்பாடி, அவ்வேழைக்கு நேர்ந்த அவலக்கவலையும் அவமதிநிலையுமாகிய எல்லாம் புலப்படக்காட்டி, "இவளுக்குமா இக்கதி நேர வேண்டும்" எனப் பரிந்துருகிச் சிவனருளைக் கூர்ப்பித்து இறந்தவணிகனை உயிர்ப்பித்து அவள் துயர் தீர்த்து வைத்தருளியமையும் மேல், மதுரையிற் சிவனடியாருடன் தாம் தங்கியிருந்தருளிய திருமடத்துக்கு அரசனநுசரணையுடன் சமணர் இட்ட தீவெப்பம், "வெய்ய தீங்கிது வேந்தன். மேற்று" என அவன்மேற் செல்லப்பிரார்த்திக்கையிலும், அது அவனுயிரைப் பாதிக்குமளவுக்கு, வேகமாய்ச் சென்றுவிடலாகாதென்ற கருணை மேற்கொண்டு அது மிகப்பதனமாக மெத்தெனச் செல்க என்ற அர்த்தத்தில், "வெய்யராம் அமணர் கொளுவுஞ்சுடர்-பையவே சென்று பாண்டியற்காகவே" எனப் பாடியருளியமையுங் கூட நாயனாரது சீவகாருண்யசீலம் இருந்தவாற்றைக் காட்டுவனவாம்.

அங்ஙனேல், மதுரையில் நாயனார் சமணரோடு நிகழ்த்திய வாத முடிவில் சமணர் எண்ணாயிரவர் உயிரிழக்க நேர்ந்தபோது நாயனார் அதில் தலையிடா திருந்தமை அவரது சீவகாருண்ய சீலத்திற்கு விரோதமாகாதோ எனின், விரையாது அமைதியாக நோக்கித் தெரிந்து கொள்ள வேண்டிய அப்பாரிய விஷயத்தின் விளக்கம் வருமாறு.

அன்றைய மதுரைச் சமணர்கள் தாமாகப் போய் விளக்கில் விழுந்துழன்று தம்மைத்தாமே அழித்துக் கொள்ளும் விட்டில்கள் போலச் சுய அழிவுப்பாதை நோக்கியே இயன்றிருக்கின்றார்கள் என்பது பல வேறு ஏதுக்களால் நிர்ணயிக்கப்படும். அவர்கள் தமது சமய தர்மப்படி அதன் அநுசரணை வரம்புக்குள் நில்லாது அதிக்கிரமித்துப்போய்ச் சைவசமய தூஷணை மூலம் சைவமக்களைப் பேதலிக்கச்செய்து சைவத்தை அழிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுவந்திருக்கிறார்கள். தமது மந்திர தந்திர மாயா வல்லபங்களால் அரச செல்வாக்கைத் தம்பக்கமாக்கிக் கொண்டு பிரசித்தி பெற்ற புராதன சைவத் திருநகரியான மதுரையையும் அதன் சுற்றாடலையும் சைவக்களை சற்றுமே புலப்படாத அளவுக்குச் சமணமயப் படுத்தி யுள்ளார்கள். இவை, "வேட்டு வேள்வி செயும் பொருளை மூளமூட்டு (நிந்திக்கும்) சிந்தை அமணரை ஒட்டி வாது செயத்திருவுள்ளமே" - "அழல தோம்பும் அருமறையோர்திறம் விழலதென்னும் அருகர்திறத்திறம் கழலவாது செயத்திருவுள்ளமே" - "நீற்று மேனியராயினார் மேலுற்ற காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத் தேற்றிவாது செயத் திருவுள்ளமே" - "வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே" என்பன வாதியாகவரும் நாயனார் தேவாரப் பகுதிகளானும் "பூழியர், தமிழ்நாட்டுள்ள பொருவில்சீர்ப் பதிகளெல்லாம் பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவுமாகிச் சூழிருட் குழுக்கள்போலத் தொடைமயிர்ப் பீலியோடு மூழிநீர் கையிற்பற்றி அமணரேயாகி மொய்ப்ப" - "பறிமயிர்த்தலையும் பாயும் பீலியுந் தடுக்கும் மேனிச் செறியுமுக் குடையுமாகித் திரிபவர் எங்குமாகி அறியுமச் சமயநூலி னளவினி லடங்கிச்சைவ நெறியினிற் சித்தஞ்செல்லா நிலைமையின் நிகழுங்காலை" - "வரிசிலைத் தென்னவன்தா னுய்தற்கு வளவர் கோமான் திருவுயிர்த் தருளுஞ் செவ்வப் பாண்டிமாதேவியாரும் குரைகழல் அமைச்சனாராங் குலச்சிறையாரு மென்னும் இருவர்தம் பாங்கு மன்றிச் சைவமங் கெய்தாதாக" என வருஞ் சேக்கிழார் திருவாக்குகளானும் முறையே அறியப்படும். அஃதன்றியும் மதுரையில் நாயனார் தங்கியிருந்தருளிய திருமடத்துக்குத் தீயிட்டிருக்கிறார்கள். மேல், அத்தொடர்பில் அரசன் வெப்பு நோய்க்காளாய்விட, அது தீர்க்கும் பாங்கில் நிகழ்ந்த நோய்த்தீர்ப்பு வாதத்திற் படுதோல்விகண்டு அரசனால் தாங்கள் பகிரங்கத்தில் நிராகரிக்கப்பட்ட பின்னுங்கூட, போதிமங்கைப் பௌத்தர்கள் வாதத்தில் பட்டுப் படித்து உண்மையுணர்ந்து நாயனார் வசமாயினமை போல, வசப்படுதற்கு முன் வந்திலர். அதன்பின் நிகழ்ந்த அனல் வாதத்திலுந் தோல்வி கண்ட பின்னுங்கூட மூன்றாவது வாதமாகப் புனல்வாதம் நிகழ்த்த முன்வந்திருக்கின்றார்கள். அக்கட்டத்தில், இவ்வாதத்தில் தோற்பவர் என் செய்வதென்பதைச் சபதமாக முன்மொழிந்து கொண்டே செய்தல் வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டபோது, இச்சமணர் தாமாகவே தம் வாயால், "தனிவாதில் அழிந்தோமாகில் வெங்கழு வேற்றுவானிவ் வேந்தனே" என்று சபதப்பிரகடனம் பண்ணியுள்ளார்கள். இந்நிகழ்வுகள் ஆறையும் நிரலே நோக்குங்கால் முன்னையவை மூன்றும் ஒன்றையொன்று விஞ்சுஞ் சிவ அபராதங்களாமாறும், அடுத்த இரண்டும் அச்சிவ அபராதங்களின் அறுதிப்பலனை அநுபவித்தே தீர்த்தற் கிசைவாம் வகையில் அவர்களின் உளத்திமிர் திணிந்திருந்தவாறும் ஆறாவதாக உள்ளது, தவிர்க்க முடியாத வகையில் தாம் ஏற்றாக வேண்டிய இறுதி முடிவுக்குத் தாமாகவே சங்கற்பித்துக் கொண்டவாறும் ஆகிய ஒரு காரண காரியத் தொடர்ச்சி காணப்படுதலின், அவர்கள் கன்மாநுசாரப்படி அவர்கள் செல்கதி இருந்தவாறு அவ்வாறே எனல் துணியப்படுமாகலின் அவர்கள் அழிவு மற்றியாவராலுந் கடைபடுதற்காஞ் சார்பிருந்த தில்லை யாகும்.

இனி இச்சமணர் சம்பந்த மட்டில் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் நோக்கு இருந்தவிதம் பின்வருமாற்றான் இனிதுணரப்படும். அவர் மெய்ஞ்ஞானங் கைவந்த பிள்ளையாராதலின் இது விஷயமாக அவர் மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தபோதே பின்னால் நிகழவிருப்பது எதுவோ அவர்க்கு முன்னுணர்வுக் காட்சியாகப் புலப்பட்டிருந்துள்ளது. அது, அவர் திருவலிவலத்திற் பாடியருளியுள்ள திருப்பதிகத்தில் "வஞ்சமுண்டென்றஞ்சுகின்றேன் விலிவலம் மேயவனே" - "விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள் மதியிலாதார் என்செய்வாரோ வலிவலம் மேயவனே" என அருளியவாற்றான் ஊகித்துணரப்படும். இதில், விதியிலாதார் என்பது தாம் உய்தற்காம் நல்லூழ் இல்லாதார் எனவும் வெஞ்சமணர் என்பது எக்கட்டத்திலுங் கொடுமையே தலைநிற்பார் எனவும் மதியிலாதார் என்பது எவ்வாற்றான் உணர்த்தினும் உணர்ந்து கொள்ளும் விவேகமற்றவர் எனவும் என்செய்வாரோ என்பது இவர்கள் முடிவில் எக்கதிக்காளாக இருக்கிறார்களோ என இரங்கியவாறாகவும் முன் வஞ்சமுண்டென்றஞ்சுகின்றேன் என்றது ஏதோ ஒரு பழியைத் தரிசிக்க வேண்டியிருக்கிறது என அஞ்சியவாறாகவும் பொருள்தந்து நிற்றலின் அப்பாடற்பகுதிகள் மூலம் நாயனார் தமது முன்னுணர்வுக் காட்சியையே மொழிந்தருளியுள்ளார் எனக் கொள்ளுதல் யதார்த்தமேயாம். மேல், நாயனார் மதுரைக்கு வந்து சேர்ந்து பாண்டியன்மேல் வெப்புநோய் ஏவப்பட்டதைத் தொடர்ந்து நிகழவிருப்பனவற்றால் சமணர்கள் பரிதாபகரமான ஒரு முடிவைச் சந்திக்க இருப்பதாகவும் அதற்குத்தாம் சாட்சியாக இருக்க நேரும் பழியொன்று தம்மைச் சாரவிருப்பதாகவுங் கண்ட முன்னுணர்வுக் காட்சியினாலேயே, அமண் ஆதரை வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே" தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே எனப் பலகால் இறைவனை வேண்டிக்கொண்டுள்ளார் நாயனார். எச்செயலாயினுந் திருவுளச் சம்மதமான செயலாய் நிகழ்கையில் அது சிவப்பணியாகி அதனால் தோஷம் நிகழா தென்பது சாஸ்திர சம்மதமாதலின் நாயனார் அந்நோக்கிலேயே அங்ஙனம் வேண்டிக்கொண்டாரெனல் பொருத்தமேயாம். ஆகவே, சமணர் சம்பந்தப்பட்டமட்டில் நாயனார் செயற்பாடு எதுவும் அவர் ஆன்மிக இயல்பான சீவ இரக்கப்பண்பிற்கு விரோதமாகாமை கண்டுணரப்படும்.

இனி, சமணர் தாமாகவே சபதமூலம் ஏற்றுக்கொண்ட கழுவேற்றுந் தண்டனையை அரசன் நிறைவேற்றியது அரசியல் அறத்திற்கு முறையானதே எனல் சமணர்கள் அதற்குப் பூரணமான உத்தரவாதிகளாயிருந்துள்ளமையாற் பெறப்படும். எனவே, பிள்ளையாரிருந்த மடத்திற்குத் தீயிட்டமையாகிய பாதகமும் அதன் தீய விளைவைக் கண்டிருந்தும் அஞ்சாதிருந்த அவர்கள் தறுகண்மையும் பிள்ளையாரால் வெப்புநோய் தீரப்பெற்று அரசன், தம்மை நிராகரித்துவிட்ட நிலையில் கட்டாயமாகத் தம் தவறுணர்ந்து, அரசன் வழிப்பட்டுத் திருந்தியிருக்க வேண்டியவர்கள் அதற்கிசையாதிருந்த முரட்டுச்சுபாவமும் அவர்களை அத்தண்டனைக்கு உத்தரவாதிகளாக்கிற்றாம். இங்ஙனம் அரசியலறம் முறைபற்றிச் சென்றமை ஸ்தாபிக்கப்படுமாகலின் அந்நிலையில் நாயனார் அதில் தலையிடாது விட்டமை எவ்வகையினுந் தவறாகாதென்க. தவறு நேர்ந்துழித் தலையிட்டுத் திருத்துதலும் தவறின்மை நிகழ்கையில் தராசு முள் போல் சாட்சி மாத்திரமாயிருந்து விடுதலும் நடுவுநிலைமைப் பண்பாதலின் இக்கட்டத்தில் நாயனார் நிலை அவர் நடுவுநிலைப்பண்பாகவே போற்றப்பெறுவதாம். இவ்விபரமனைத்தும் இப் புராணத்தில்,

"மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித் துன்னிய வாதில் ஒட்டித் தோற்றிடும அருகர் தாங்கள் முன்னமே பிள்ளை யார்பால் அநுசிதம் முற்றச்செய்தார் கொன்முனைக் கழுவிலேற முறைசெய்க என்று கூற" எனவும் "புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும் இகலிலர் எனினுஞ் சைவரிருந்து வாழ்மடத்துத் தீங்கு தகவிலாச் சமணர் செய்த தன்மையாற் சாலுமென்றே மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடாதிருந்த வேலை" எனவும் "பண்புடை அமைச்ச னாரும் பாருளோர் அறியுமாற்றால் கண்புடை பட்டுநீண்ட கழுத்தறி நிரையிலேற்ற நண்புடை ஞானமுண்டார் மடத்துத்தீ நாடியிட்ட எண்பெருங் குன்ற் தெண்ணாயிரவரு மேறினார்காள்" எனவும் வருஞ் செய்யுள்களாற் பிரதி பாதிக்கப்படுவதாம்.

5. சமய அரங்கிற் சைவத்தின்நிலை

வாழ்விலட்சியப்பேறான ஆத்மிக ஈடேற்றம் பற்றிய மெய்யுணர்வுக் காட்சியும் அதை அநுசரணையிற் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை யொழுங்குகளுங் கொண்டிருத்தல் சமயங்களின் பொதுவிலக்கணமாகும். மெய்யறிவுக் காட்சி யென்பது யதார்த்தமான அதன்பொருள்நிலையில் முற்றறிவினன் என்ற பெயர்க்குரிய சிவனுக்கே ஏகபோகமாக உரியதென்பதும் பக்குவான்மாக்களாயுள்ளார்க்கு அவரவர் பக்குவத்தரத்திற் கேற்குமளவு அது சிவனால் வழங்கப்படுமென்பதும் வேதாகம ஞான சாஸ்திரங்ளால் தெளியப்படும். அதற்கமைய உலகிற் பக்குவான்மாக்களாக உயர்வுற்றோர் அவ்வப்போது பெற்ற காட்சிகளின் வழிவந்த சமயங்கள் பலப்பலவாதல் தாயுமானசுவாமிகள் "சமய கோடிகள்" என வழங்கியுள்ளமையாற் பெறப்படும். அது அவர் பாடலில் "சமய கோடிகளெலாந் தந்தெய்வ மெந்தெய்வ மென்றெதிர் வழக்கிடவு நின்றதெது" எனவரும். சாருவாகம், பௌத்தம், சமணம், மீமாம்சகம் முதலாக அவைவேறு வேறு பெயர்களும் வேறுவேறியல்புகளுமுள்ளனவாக உலகில் வழங்குவதுடன் இன்னது இன்னாரால் வந்தது என்ற மரபு முறையான, ஒரு கோட்பா டிருந்து வருதலும் சிலவற்றில் அவ்வவர் பெயர் அவ்வச் சமயப் பெயரோடேயியைந்து போயிருத்தலுங் கண்கூடு. சைவத்திற்கு அத்தகையதோர் கோட்பாடு எவ்வாற்றானு மின்மையின் அது முற்றறிவனாகிய சிவனிடமிருந்து வெளிவந்த வேதாகமப் பயனாக உலகில் விளைந்த தொன்று என்ற உண்மை கடைப்பிடிக்கப்படும். இங்ஙனமாதலின் சமயங்களின் வரவு மெய்யுணர்வுக் காட்சியாளர் மூலம் அவரவர் காட்சித் தரத்திற்குத்தக வெளிவருதல், சிவனால் அருளப்பெற்ற வேதாகமங்களின் விளைவாக அமைதல் என இருவகைப்படுமாயினும் தீர்ந்த நோக்கில் அனைத்துஞ்சிவனால் ஆனவையே என்பது மறுக்கொணாவகையில் நிலைபெறும். எனில், ஒரே சிவன்தானே பலபடச் சமயங்கள் தோன்றவைத்த தெதனால் எனில், அது சமயத்துக்காக மக்களல்ல; மக்களுக்காகவே சமயம் என்னும் நயம் பற்றியாம். அது யாங்ஙனமெனில், மக்களாவார் தம்மியல்பான மும்மல மறைப்பு மயக்கங்களுக்குட்பட்ட நிலையில் நின்று தத்தங் கன்மாநுசாரப்படி அமைந்த தமது ஊழ்நிலை அநுமதிக்குமளவே அறிய வல்லுனர் ஆதல் பொதுவான அறிவியல் அடிப்படைவிதி ஆதலானும் அது அங்ஙனமாதல் நுண்ணியநூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மையறி வேமிகும்" (ஊழான்) என்ற திருக்குறளால் வலுவுறுதலினாலும், மக்கள் அவரவர் கொள்ளுமளவிற் கேற்பச் சமய உண்மைகளை அறிந்து அவற்றின் வழிநிற்கவும் காலஅடைவில் அதன் மூலம் தம்க்கு வாய்க்கும் உள்ளுணர்வு விருத்திப் பாங்கான அகவளர்ச்சிக் கேற்பத் தம் நிலையிலிருந்து சமயாநுசாரக் கிரமமாக மேன்மேற் சமயங்களில் இடம்பெற்றுவந்து இறுதியிற் சற்சமயஞ் சார்ந்து அறுதியாக உய்வடைய வைக்கவும் வேண்டிய சிவன் சமயங்களைப் பலபட வகுத்தார் என உய்த்துணரக் கிடத்தலாலாம். அது, சிவஞான சித்தியாரில், "புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம்புக்கும் புகன்மிருதி வழியுழன்றும் புகழுமாச் சிரம அறத்துறைக ளவையடைந்து மருந்தவங்கள் புரிந்து மருங்கலைகள் பல தெரிந்து மாரணங்கள் படித்துஞ் சிறப்புடையபுராணங்க ளுணர்ந்தும் வேதசிரப்பொருளை மிகத் தெளிந்துஞ் சென்றாற் சைவத் திறத்தடைவர். அதிற்சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்" என வருவதனால் உறுதி பெறுவதாகும். இனி, எவரேனும் அறுதியாக உறுதிபெறுதற் குகந்த நெறி சைவ நெறியே என்பது. ஆன்மாவானது பெறும் பந்த மோக்ஷ இயல்புகளை, அதாவது, பந்தம் என்றால் கட்டு ஆதலின் கட்டுஞ்சாதனமாகிய வினையுண்மை, கட்டுப்படுவோனுண்மை, கட்டுண்ணுதலாலாம் பயன் கொடுப்போனுண்மைகளும், மோக்ஷம் என்றால் விடுபடுதல் ஆதலின் விடுபடுதற்கான ஏது உண்மை விடுபடுதற்கோர் பயனுண்மை அப்பயனைக் கொடுப்போனுண்மைகளும் இனி, "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" ஆதலால் கட்டிப் பலனளிப்போனும் விடுவித்துப் பலனளிப்போனும் ஒருவனே என்ற உண்மையும் ஆதியவற்றைச் சரிசுத்தமாகத் துலக்கு மியல்பு மற்றெந் நெறிக்கு மில்லாவகையில் சைவ நெறி ஒன்றினுக்கே உண்டென்பதனாற் பெறலாகும். அது, திருத்தொண்டர்புராணத்திற் சாக்கிய நாயனார் சமயதத்துவ ஆய்வுத்துறையிற் சுயமாகப் பெற்ற அநுபவப் பயனைச் சேக்கிழார் தெரிவிக்கும், "செய்வினையுஞ் செய்வானு மதன் பயனுங் கொடுப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக்கொண்டே இவ்வியல்பு சைவ நெறி அல்லவற்றுக் கில்லையென உய்வகையாற் பொருள் சிவனென்றருளாலே உணர்ந்தறிந்தார்" என்னுஞ் செய்யுளாற் புலனாம். அன்றியும், சமய ஆய்வுப் பாதையில் ஏனைச் சமயங்களெல்லாம் இது சரி; அது பிழை எனப் பரஸ்பரம் பிணக்குணர்வினைத் தெரிவிப்பனவாக, சைவ சமயம் ஒன்றே அதற்கவகாச மளிக்காது ஆன்மிக விருத்திக் குபகரிக்கத் தக்கவனாகிய அவ்வச்சமயங்களின் சிறுசிறு பங்குகளாகவுள்ள அனைத்தையுந் தன்பாலேற்று அவையெல்லாவற்றையும் வியாபித்து அவற்றாற் பெறப்படற் கியலாததோர் முடிந்தமுடிபினைத் தாந்தோற்றி நிற்கும்பாங்கின தாகலினாலும் அது சற்சமயமெனக் கொள்ளற்பாலதாம். அதன் இவ்வியில்பு சிவஞான சித்தியாரில், "ஓது சமயங்கள் பொருளுணரு நூல்கள் ஒன்றோடொன் றொவ்வாம லுளபலவு மவற்றுள் யாது சமயம் பொருள்நூல் யாதிங் கென்னில் இருவாகும் அதுவல்ல தெனும் பிணக்க தின்றி நீதியினா லிவையெல்லாம் ஓரிடத்தே காண நின்ற தியா தொரு சமய மது சமயம் பொருணூல் ஆதலினாலிவையாவு மருமறையா கமத்தே அடங்கியிடு மவையிரண்டு மரனடிக்கீ ழடங்கும்" என வரும். சற்சமயமாகிய சைவத்தின் இம்மகத்தான நிலையினைக் கண்டன்றே சமய தத்துவ விசார தீரராகிய தாயுமான சுவாமிகள். "இராஜாங்கத் தமைந்தது வைதிக சைவமந்தோ" என ஒருகால் வியந்துரைத்து மற்றொருகால், "சைவசமயமே சமயம்" எனத் தேற்றங்கொடுத் துரைத்தார் ஆதலுங் கருதத்தகும்.

இது இங்ஙனமாகலின் எல்லாச் சமயங்களும் உலகிற்கு வேண்டுவன என்பதும் அவ்வச்சமயத்தோர் தத்தம் அறிவியலுக் கமைவான அவ்வச்சமய கோட்பாட்டுக் கமைய இயல்வதை ஆரும் ஆட்சேபித்தற்கில்லை என்பதும் அதனால் ஒரு சமயம் மற்றொரு சமயத்தின்மீது அதிக்கிரமம் பண்ணுதல் பாபகாரியம் என்பதும் சைவத்தின் நிலையாகக் கொள்ளப்படும். அங்ஙனேல், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், பரசமய கோளரி என விருது பெறுமளவுக்குப் பரசமய நிராகரணம் பண்ணியுள்ளமை இத்தகைய சைவ உண்மை நிலைக்குப் பொருந்துமா றெங்ஙனமெனின் அதற்காம் விளக்கம் அவ்விருதுபெய ரளவானே பெறற்பால தாமறு காண்போம். அவர் கோளரி யெனவே அக்கோளரிக்கிலக்காயிருந்த பரசமயம் மதயானையாதல் தானே பெறப்படும். அது, இறைவனடி சேராதார் பிறவிப்பெருங்கடல் நீந்தார் என்புழிப் பிறவி கடலாக உருவகிக்கப்பட்டிருத்தல் மூலம் இறைவனடி தெப்பமாதல் தானே பெறப்படுதல் போல்வதாம். அதனால், சமயமொன்று தனக்கருகமான அமைதியாகும் பசுத்தன்மை தவிர்ந்து அடுத்த சமயமொன்றில் தாவி அடர்த்துச் சிதைக்கும் ஆனையாக மதர்த்தெழக்காணின் அதிற் பாய்ந்து அதன் மதர்ப்படக்குபவர் என்பதே பரமசமயகோளரி எனும் விருதுப்பெயர் விளக்கமாதல் பொருந்தும். சமணபெளத்தர்கள் தமக்கருகமான அமைதியில் நின்று தமது தியான செப வழிபாட்டு அறவொழுக்கம் நிகழ்த்தும் நிலையில் நிற்கையில் நாயனார் அவர்களைச் சென்றடர்த்ததாக எத்தகவலு மின்மையானும், அவர்கள் அதிக்கிரமமான அநாகரிகமான முறையில் சைவதூஷணை மேற்கொண்டு அதன்மூலம் சற்சமயிகளாய சைவசமயிகளின் சுயமான சமயவாழ்விற் குறுக்கிட்டு அவர்கள் இஷ்டப்பாங்கான அவர்கள் சமயத்தில் அவர்களுக்கு அவநம்பிக்கையை வலிந்தூட்டிப் பலாத்காரமாக அவர்களை மதமாற்றம் பண்ண முனைந்து அவ்வாற்றால் நாட்டிற் சமயப்பொறுதியைக் குலைத்துக் கலவரம் விளைவித்த கட்டங்களிலேயே அவர் அது செய்துள்ளார் என்பதற்கு மட்டுமே போதுமளவு ஆதாரமுண்மையானும், சமயத்தையல்ல மதத்தையே-மதர்ப்பையே-அவர் அழித்துச் சைவபரிபாலனஞ் செய்துள்ளாராதல் பெறப்படும். அங்ஙனேல், அவர் தேவாரத்தில், "ஓதி ஓத்தறியா, அமண் ஆதரை வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே" என வந்திருப்பானேனெனில், அதில் ஆதரை அழிக்க என்பது, தமிழுக்கே சிறப்பான ஆகுபெயர் வழக்கால் ஆதரின் மதர்ப்பை அழிக்க என்றே பொருள் படுமென்க. அது அவ்வாறாதல் அவரே அருளியுள்ள மறுபாடல்களிற் காணும் "அண்டனே அமண் கையரை வாதினில் செண்டடித்துளறத் திருவுள்ளமே" எனவும், "அந்தணாளர் புரியும் அருமறைசிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த வாது செயத் திருவுள்ளமே" எனவும் அழல தோம்பும் அருமறையோர்திறம் விழலதென்னும் அருகர் திறத்திறம் கழல வாது செயத்திருவுள்ளமே" எனவும் வருவனவற்றானும் அத்தகையன பிறவற்றானும் எளிதிற் பெறப்படும்.

மனிதர்க்கு நேரும் லௌகிக சம்பந்தமான இழப்பு ஒரு பொருட்டன்று, ஆத்மிக சம்பந்தமான இழப்பே படுமோசமானது. காலாகாலமாக ஒரு ஆன்மா அருந்தி வருந்திப் பெற்ற ஆன்மிக விருத்திநிலை மதமதர்ப் பாட்டங்களால் அரைக்கணத்தில் தவிடுபொடியாக்கப்பட்டுவிடும் என்பது கருணைக் கண்ணுடையார் கணிப்பீடாகும். அதனால் எங்கேனும் பரமத மதர்ப்பாட்டம் நிகழக் கேட்குமளவிலேயே துடிதுடித்தெழுதலும் முன்னெதிர்ந்து சென்று அதற்குப் பரிகாரங் காணலும் சைவப்பண்பாக மட்டுமன்றிச் சிவதொண்டாகவே போற்றல்பெறும். நமது நாயனார் காருண்ய மூர்த்தியாதலின் மதுரையிற் சமண மதர்ப்பாட்டம் நிகழ்வதாகத் திருமறைக் காட்டிற்கேட்ட மாத்திரத்தே துடிதுடித்தெழுந்த வாறும், தமது உயர்பெரு மதிப்பிற்குரிய அப்பர் சுவாமிகளின் தடையுத்தரவான அன்புக்கட்டளை யளவினுந் தடங்காமல் மதுரைக் கெழுந்தவாறும், அந்நிலையில் அவர் உணர்வின் உத்வேகச் செழிப்பிருந்தவாறும் திருத்தொண்டர்புராணத்தில், "சைவநெறி வைதிக நெறி நிற்கச் சழக்கு நெறியைத் தவமென்னும் பொய்வல்லமணர் செயல் தன்னைப் பொறுக் கில்லோம் எனக்கேட்டே அவ்வன் தொழிலோர் செயல்மாற்றி ஆதிசைவ நெறிவிளங்கத் தெய்வநீறு நினைந்தெழுந்தார் சீர்கொள் சண்பைத் திருமறையோர் எனவும் ஆயபொழுது திருநாவுக்கரசு புகலி ஆண்டகைக்குக் காயமாக பெருக்கி யுழல் கலதியமணர் கடுவினைசெய் மாயைசால மிகவல்லார் அவர் மற்றென்னை முன்செய்த தீய செயலும் பலகெட்டேன் செல்லிவொட்டேன் அங்கென்றார்" எனவும் "என்று கூற எல்லையிலா நீறு போற்றும் இருவரையுஞ் சென்று காணுங் கருத்துடையேன் அங்குத் தீங்கு புரியமணர் நின்ற நிலைமை அழிவித்துச் சைவநெறி பாரித்தன்றி ஒன்றுஞ் செய்யேன் ஆணையும தென்றார் உடைய பிள்ளையார்" எனவும் வருவனவற்றால் இனிது விளங்கும்.

"தொண்டின் நெறிதரவருவார்" என்றே சேக்கிழார் நாயனாராற் புகழ்ந்தோதல் பெற்றுள்ள இத்திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் விளைத்ததொண்டு நெறிகளுள் இத்திருத் தொண்டுநெறியே அனைத்தினுக்கும் முதன்மைத்தொண்டு நெறியாதல் அறிந்து கடைப்பிடிக்கத்தகும்.

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. திருஞானசம்பந்த நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. thirunyAnachampandha nAyanAr purANam in English prose 
3. Tirugnaanasambandha Nayanar Puranam in English Poetry 

Related Content

Don't get lost in small pleasures

திருஞானசம்பந்தர் அற்புதம்

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட ம

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருவலிதாயம்- பத்தரோடுபல