logo

|

Home >

devotees >

tirisirapuram-mahavidwan-meenakshi-sundaram-pillai

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

பிறப்பு

மீனாட்சி அருள்மழை பொழியும் மதுரையில் வாழ்ந்தவர்கள் சிதம்பரம் பிள்ளை – அன்னத்தாச்சி தம்பதியர். சிதம்பரம் பிள்ளை மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் மீன் முத்திரையிடும் பணி செய்துவந்தார். திருக்கோயில் நிர்வாகத்தோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அங்கிருந்து கிளம்பி, திருச்சிக்கு மேற்கே காவிரியின் தென்பாலுள்ள எண்ணெய் மாகாணம் என்னும் ஊரில் வந்து தங்கினார். குடும்பம் அதவத்தூரில் இருந்தபோது, ஸ்ரீபவ ஆண்டு பங்குனித் திங்கள் 26-ம் நாள் (06.04.1815), வியாழக்கிழமை, அபர பட்சம் துவாதசி திதியும் பூரட்டாதி நட்சத்திரமும் கூடிய நன்னாளில், மகர லக்கினத்தில், அன்னத்தாச்சி ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தார்.ஆலவாய் அண்ணலின் பெயரையே குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். அதன் பின் குடும்பம் சோமரசம்பேட்டைக்குக் குடிபெயர்ந்தது. 

கல்வி

தனயனுக்கு தந்தையே குருவும் ஆனார். அவரிடம் மீனாட்சிசுந்தரம், நெடுங்கணக்கு, ஆத்திச்சூடி, அந்தாதிகள், கலம்பகங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள், சதகங்கள், நிகண்டுகள், கணிதம் ஆகியவை மட்டுமல்லாது, நன்னூல் போன்ற இலக்கண நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். இளமையிலேயே நன்னூல் முழுவதும் அவருக்கு மனனம் ஆகி இருந்தது. 

யாப்பிலக்கணத்துக்கு தக்கபடி, செய்யுள் புனையும் ஆற்றல் அவரிடம் இருந்ததை தந்தை கண்டுகொண்டார். அதை தன்னால் இயன்றவரை மேலும் வளப்படுத்தினார். தந்தை அறிவுறுத்தியபடி பிறகு மலைக்கோட்டை மெளனமடம் வேலாயுத முனிவரிடம் பாடம் கேட்டார்.

திருவாவடுதுறை ஆதீனம் 14-வது பட்டம் வேளூர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர், ஸ்ரீ சிவாக்கிர யோகிகள் மடத்தின் தலைவராக பிற்காலத்தில் ஆனவரான அம்பலவாண முனிவர், கீழ்வேளூர் சுப்பிரமணிய பண்டாரம், காஞ்சிபுரம் சபாபதி முதலியார்,  ‘தண்டியலங்கார’  பரதேசியார் ஆகியோரிடம் பல்வேறு காலகட்டங்களில் பாடம் கேட்டார்.

திருவம்பலம் தின்னமுதம் பிள்ளை, மழவை மகாலிங்கையர் போன்ற தமிழ்ப் புலவர்களை அணுகி தக்க மரியாதை செலுத்தி அவர்களிடம் அளவளாவி தமிழ் இலக்கணம், இலக்கியம் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டார்.

துறை மங்கலம் சிவப்பிரகாசர், காசிமடம் குமரகுருபரர், சிவஞான முனிவர், அதிவீரராம பாண்டியர் ஆகியோரின் பாடல்களில் மனதைப் பறிகொடுத்த அவர், கம்ப ராமாயணம், கல்லாடம், சேக்கிழாரின் பெரிய புராணம், சைவத் திருமுறைகள் ஆகியவற்றிலும் ஆழ்ந்து அனுபவித்தார். தனது இலக்கண, இலக்கியத் தேர்ச்சியை மாணவர்களுக்கு அள்ளி வழங்கினார்.

மண வாழ்க்கை:

இவரது 15-வது வயதில் தந்தை காலமானார். அதன் பின் உறவினர்கள், காவேரியாச்சி என்ற பெண்ணை இவரது வாழ்க்கைத் துணைவியாக அமைத்தனர். இவர்களது மகன் சிதம்பரம் பிள்ளை.

தமிழ்ப் புலவர்களைக் கண்டு உரையாடுவதற்கும், தம் ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்கும் வாய்ப்பாகத் திரிசிரபுரம் (தற்போதைய திருச்சி) செல்லத் தீர்மானித்தார். திருச்சி மலைக்கோட்டை கீழவீதியில் குடியேறினார். அங்கு, முத்துவீரியம் என்னும் இலக்கண நூலைச் செய்த முத்துவீர வாத்தியார், திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார் முதலான புலவர்களுடன் அளவளாவும் வாய்ப்பைப் பெற்றார். வெளியூர்ப் புலவர்கள் இவரைத் ‘திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை’ எனக் குறிப்பிட்டனர்.

எழுது, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களையும் தக்கவரிடம் பாடங்கேட்ட அவர், தமிழ் கற்பிப்பதையே தனது தொழிலாகக் கொண்டார். பலருக்குக் கற்பித்த காலத்திலும் தன்னைவிட புலமையானோரிடம் பாடம் கேட்பதை அவர் தொடர்ந்தார்.

திருவாவடுதுறை அம்பலவாண முனிவரிடம் கம்பரந்தாதியையும் கீழ்வேளூர் சுப்பிரமணிய தேசிகரிடம் குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் இலக்கண விளக்கத்தையும் பாடங்கேட்டார். இதனால் அவர் தமிழ்ப் புலமை மேலும் சிறப்புற்றது.

தனது 21-வது வயதில், திரிசிரபுரம் செட்டி பண்டாரத்தையா என்பாரிடம் சிவ தீட்சையும் க்ஷணிகலிங்க தாரணமும் பெற்றார். அன்று முதல் அவரை வெண்ணீறு வேந்தராகவே தமிழகம் வாழ்நாள் முழுவதும் கண்டது.

நூல்களைக் கற்றுணர்ந்தவர்களிடம் முழுமையாகப் பாடம் கேட்டல் என்ற நியதி இருந்த காலம் அது. அக்காலத்தில் வாழ்ந்த பிள்ளையவர்கள், மாணவர்களுக்கு உண்ணும் நேரமும், உறங்கும் வேளையும் தவிர, நாளின் எல்லா நேரங்களிலும் பாடம் சொல்வதையே வாழ்வின் பயனாகக் கருதினார். பண்டைய குருகுல முறையில், மாணவர்களிடமிருந்து கட்டணம் ஏதும் பெறாமல் அவர்களுக்கு உணவும், உறையுளும் வழங்கி தமிழ்க் கல்வியைத் தழைக்கச் செய்து, தமிழுணர்வைச் செழிக்கச் செய்தார்.

தன்னிடம் பாடம் கற்கும் மாணவர்களை தனது புதல்வர்களாகவே கருதி பாடம் கற்பிப்பார் பிள்ளையவர்கள். இவரது அறிவுத்திறன் அறிந்து உதவிய நல்லோரின் உதவியால் தனது ஆசான் பணியைக் குறைவறச் செய்தாலும், இவரால் குடும்பம் வசதியாக வாழ முடிந்ததில்லை. அதைப் பற்றி அவரும் அக்கறை கொண்டதில்லை.

தல புராணங்கள் இயற்றல்:

அக்காலத்தில் புகழ் பெற்ற கோயில்களுக்கு தல புராணம் எழுதும் வழக்கம் இருந்தது. அதை அடியொற்றி, பிள்ளையவர்களும், நெருங்கியவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பல திருக்கோயில்களுக்கு தல புராணங்களை இயற்றினார்.

அதுவரை வழக்கத்தில் இருந்த தல புராணங்களுக்கு மாற்றாக, அற்புதமான தமிழ் நடையில், கற்பனைச் செழிப்பும், கருத்து வளமும், உவமை நயமும், திருத்தலப் பெருமையை தெளிவாக விளக்கும் நூல்நயமும் கொண்டதாக இவர் எழுதிய தல புராணங்கள் அமைந்தன. இதனால் பிள்ளையவர்களின் புகழ் பரவியது.

சிற்றிலக்கியம் எனப்படும் பிரபந்தங்களில் சிறந்த தேர்ச்சி பெற்றவரான பிள்ளையவர்கள், தனது காலத்தில் அருகிய இந்த இலக்கியங்களுக்கு புத்துயிருட்டினார். பல சிவத்திருத்தலங்களுக்குச் சென்று, அத்தலங்களைப் பற்றித் தலபுராணங்களும், பதிகங்களும், அந்தாதிகளும், அங்குள்ள இறைவன்- இறைவி மீது பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, உலா, தூது, குறவஞ்சி முதலான நூல்களும் இயற்றினார்.

பிள்ளையவர்கள் எழுதியவற்றில்,  ‘குசேலோபாக்கியானம்’ என்ற காப்பியமும்,  ‘சேக்கிழார் பிள்ளைத் தமிழ்’ என்ற பிரபந்தமும், ‘ஆதி குமரகுருபர சுவாமிகள் சரித்திரம்’ என்ற வாழ்க்கை வரலாறும் பிரதானமானவை.

1851-ல் திரிசிரபுரத்திலிருந்தவர்கள் விரும்பிய வண்ணம் சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய  ‘செவ்வந்திப்புராணம்’ என்னும் நூலைப் பதிப்பித்தார். இதன்மூலம் பதிப்பாசிரியருக்கும் இலக்கணமானார்.

மயிலாடுதுறை வாசம்:

பிறகு தமிழார்வம், ஆசிரியத் தொழில் நிமித்தமாக, 1860 முதல் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறையில் வசிக்கத் தொடங்கி, அங்கிருந்து அடிக்கடி திருவாவடுதுறை மடத்துக்குச் சென்று வந்தார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

இவரது அறிவுத் திறனை அறிந்த திருவாவடுதிறை ஆதீனத்தால் அங்கு வித்துவானாக நியமிக்கப்பட்டார். ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகர் மீது கலம்பகம் பாடினார். ஆதீனகர்த்தர் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு  ‘மகாவித்துவான்’ என்ற பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார். அன்றுமுதல்  ‘மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை’ என்று அழைக்கப்பட்டார்.

1871-ல் உ.வே.சாமிநாதையர் மகாவித்துவானின் மாணாக்கரானார். அவர் இறுதிவரை தம் ஆசானோடிருந்து பல்வேறு நூல்களைப் பாடங்கேட்டார். அதன் விளைவாகவே தமிழ்ப் பற்றும் நூல்கள் மீதான நேசமும் பெற்றவரானார் உ.வே.சா. தமிழின் முதல் புதினமான  ‘பிரதாப முதலியார் சரித்திரம்’  எழுதிய வேதநாயகம் பிள்ளையும் பிள்ளையவர்களின் அறிவமுதைப் பெற்றவரே.

மகாவித்துவான் பிள்ளையவர்கள், பட்டீஸ்வரம், திருப்பெருந்துறை, குன்றக்குடி முதலிய தலங்களுக்குச் செல்வது வழக்கம். இது அவரது பக்திக்கு உதாரணமாக இருந்தது. செல்லுமிடம் எல்லாம் தலபுராணம், பதிகம் பாடுதல் அன்னாரது இயல்பு. எனவே பல தலங்க்கள் இவரால் பாடல் பெற்றன.

பிள்ளையவர்கள் 1876-ல் நோய்வாய்ப்பட்டார். மாணாக்கர் புதுச்சேரி சவேரிநாத பிள்ளை மார்பில் சாய்ந்த வண்ணம், திருவாசத்தின் அடைக்கலப்பத்தை உ.வே.சா பாட,  தை மாதம் 20-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை, 01.02.1876-ல் தம் 61-ஆம் வயதில் சிவன் சேவடி சேர்ந்தார்.

எழுத்தில் அடக்க இயலாச் சிறப்பு:

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கம்பன், இணையிலாப் புலவன், புலவர்களின் புலவன், மெய்ஞானக் கடல், நாற்கவிக்கிறை, சிரமலைவாழ் சைவசிகாமணி முதலிய முப்பதுக்கு மேற்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர் பிள்ளையவர்கள்.

இவர் வாழ்ந்த காலத்தில் செல்வம் பெறவில்லையே தவிர, செல்வாக்கு குறைந்ததில்லை. தமிழுக்கு இவரால் மரியாதையும் அபிமானமும் பெருகியது. அவர் செல்வம் நாடாதவராக இருந்ததே, அவரது குடும்பத்தின் வறிய நிலைக்குக் காரணம் ஆனது. ஆனால், அதை பிள்ளையவர்கள் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. தனது குடும்பம் வறுமையில் உழன்றபோதும் நாடி வந்த மாணாக்கர்களுக்கு உறைவிடத்துடன் உணவும் அளித்து தமிழ் போதித்த பெருந்தகை அவர்.

அவரை நாடி செல்வம் சேர்க்கும் பல வாய்ப்புகள் வந்தன. அவர் நினைத்திருந்தால், சம்மதித்திருந்தால், அவர் காலடியில் பொன்னைக் கொட்ட பலர் தயாராகவே இருந்தனர். ஆனால், பொன்னுக்கு அவர் மயங்கவில்லை. அவர் மனம் (மனம் என்றே கூற வேண்டும், மனது என்று கூறக் கூடாது எனபது பிள்ளையவர்களின் விளக்கம்) முழுவதும் தமிழ் வளர்ச்சியிலும், சைவ நாட்டத்திலும் தான் ஆழ்ந்திருந்தது.

தனது குறுகிய வாழ்நாளில், இவர் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கும் அதன் பட்டியல்:

  • தலபுராணங்கள்- 22
  • சரித்திரம்- 3
  • மான்மியம்- 1
  • காப்பியங்கள்- 2
  • பதிகம்- 4
  • பதிற்றுப்பத்தந்தாதி- 6
  • யமக அந்தாதி- 3
  • மாலை- 7
  • பிள்ளைத்தமிழ்- 10
  • கலம்பகம்- 2
  • கோவை- 3
  • உலா- 1
  • தூது- 2
  • குறவஞ்சி- 1
  • பிறநூல்கள்- 7

-என இவர் செய்துள்ள மொத்த நூல்கள் ஏறத்தாழ 80.

பிள்ளையவர்கள் பாடிய பல பாடல்கள் பதிப்பிக்காமல் மறைந்து போயின. ஆயினும் அவர்தம் முதன்மைச் சீடரான தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிள்ளையவர்களின் 5,021 பாடல்களைப் பாதுகாத்து வழங்கி உள்ளார்.

 மாயூரப்புராணம் 

பிரபந்தத்திரட்டு 1-ம் பாகம் 
(திருத்துருத்திக் கச்சி வினாயகர் பதிகம் , திருத்துருத்திச் சுப்பிரமணியஸ்வாமி பதிகம், திருவிடைமருதூர் மருதவாணர் தோத்திரப்பதிகம் & திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்)

பிரபந்தத்திரட்டு 2-ம் பாகம் 
(திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்)

பிரபந்தத்திரட்டு 9-ம் பாகம் (வாட்போக்கிக் கலம்பகம்)

பிரபந்தத்திரட்டு 12-ம் பாகம் 
(திருவிடைமருதூர் உலா)

பிரபந்தத்திரட்டு - சீகாழிக் கோவை

பிரபந்தத்திரட்டு - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி

பிரபந்தத்திரட்டு 16-ம் பாகம் 
(துறைசையமகவந்தாதி)

பிரபந்தத்திரட்டு 20-ம் பாகம் 
(திருவூறைப்பதிற்றுப்பத்தந்தாதி)

பிரபந்தத்திரட்டு 21-ம் பாகம் 
(திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி)

பிரபந்தத்திரட்டு 22-ம் பாகம் 
(பூவாளூர்ப்பதிற்றுப்பத்தந்தாதி)

மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் "பிரபந்தத்திரட்டு" பகுதி 26 
(திருச்சிராமலையமகவந்தாதி)

நன்றி - முரளி முத்துவேலு 

Related Content