ஆதியாய் நடுவுமாகி யளவிலா வளவு மாகிச் சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியா வேக மாகிப் பெண்ணுமா யாணுமாகிப் போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி கற்பனை கடந்த சோதி கருணையே யுருவமாகி யற்புதத் கோலநீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ் சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்து ணின்று பொற்புட னடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி போற்றிநீ டில்லை வாழந் தணர்திறம் புகல லுற்றே னீற்றினா னிறைந்த கோல நிருத்தனுக் குரிய தொண்டாம் பேற்றினார் பெருமைக் கெல்லை யாயினார் பேணி வாழு மாற்றினார் பெருகு மன்பா லடித்தவம் புரிந்து வாழ்வார். நல்லவா னவர்போற்றுந் தில்லை மன்று ணாடகஞ்செய் பெருமானுக் கணியார் நற்பொற் றொல்லைவான் பணியெடுத்தற் குரியார் வீடுந் துறந்தநெறி யார்தொண்டத் தொகைமுன் பாடத் தில்லைவா ழந்தணரென் றெடுத்து நாதன் செப்புமரு ளுடையார்முத் தீயார்பத்திக் கெல்லைகாண் பரியாரொப் புலகிற் றாமே யேய்ந்துளா ரெமையாள வாய்ந்து ளாரே.
தாவரமாகிய அண்டமும் சங்கமமாகிய பிண்டமும் சமமாதலால், பிண்டமாகிய சரீரத்தில் இடைக்கும் பிங்கலைக்கும் நடுவிலுள்ள சுழுமுனாநாடியும், பிரமாண்டத்திலுள்ள பரதகண்டத்தில் இலங்கைக்கும் இமயமலைக்கும், நடுவிலுள்ள தில்லைவனமும் சமமாகும்.
சாந்தோக்கியோப நிடதத்திலே பிரமபுரத்திலுள்ள தகரமாகிய புண்டரீக வீட்டினுள்ளே இருக்கும் ஆகாசமத்தியில் விளங்கும் அதிசூக்குமசித்தை அறிதல் வேண்டுமென்று தகரவித்தை சொல்லப்பட்டது. இங்கே பிரமபுரமென்றது இச்சரீரத்தையும், புண்டரீகவீடென்றது இருதயகமலத்தையும், ஆகாசமென்றது பராசக்தியையும், அதிசூக்கும சித்தென்றது பரப்பிரமமாகிய சிவத்தையு மென்றறிக. புறத்தும், இப்படியே இப்பிரமாண்டம் பிரமபரமெனவும், இப்பிரமாண்டத்தினுள்ளே இருக்கும் தில்லைவனம் புண்டரீக வீடெனவும், தில்லைவனத்திலிருக்கும் ஆகாசம் பராசத்தியாகிய திருச்சிற்றம்பலமெனவும், அத்திருச்சிற்றம்பலத்திலே நிருத்தஞ்செய்யும் பரப்பிரமசிவம் அதிசூக்குமசித்தெனவும் சொல்லப்படும். இவ்வாகாசம் பூதாகாசம்போற் சடமாகாது சித்தேயாம், ஆதலால் சிதம்பரமெனப்படும். இச்சிதம்பரம் எந்நாளும் நீக்கமின்றி விளங்குந்தானமாதலால், தில்லைவனமும் சிதம்பரமெனப் பெயர் பெறும்.
இத்துணைப் பெருஞ்சிறப்பினதாகிய அந்தத் தில்லை வனத்தின்கண்ணே முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளாகிய சிவபெருமான் சர்வான்மாக்களுக்கும் அருள் செய்யும் பொருட்டுத் திருமூலத்தனமாகிய சிவலிங்க வடிவமாய் எழுந்தருளியிருப்பார். அந்தத் திலமூலத்தானத்துக்குத் தெற்குத் திக்கிலே திருவருள் வடிவாகிய கனகசபை இருக்கின்றது. அந்தக் கனகசபையின் கண்ணே பரமகாருண்ணிய சமுத்திரமாகிய சிவபிரான் தமது அருட்சத்தியாகிய சிவகாமியம்மையார் காண அனவரதமும் ஆனந்தத் தாண்டவஞ் செய்தருளுவர்.
திருமூலத்தானலிங்கத்துக்கும் சபாநாதருக்கும் வேத சிவாகம விதிப்படி பூசை முதலியவை செய்யும் பிராமணர்கள் தில்லைவாழந்தணர் என்று சொல்லப்படுவர்கள். அவர்கள் மூவாயிரவர். அவர்கள் குற்றமில்லாத வமிசத்தில் உதித்தவர்கள். பாவமென்பது சிறிதுமில்லாதவர்கள்; புண்ணியங்களெல்லாம் திரண்டு வடிவெடுத்தாற்போன்றவர்கள். கிருகத்தாச் சிரமத்தில் ஒழுகுகின்றவர்கள். இருக்கு யசுர் சாமம் அதர்வம் என்னும் நான்கு வேதங்களையும், சிக்ஷை வியா கரணம் சந்தோ விசிதி நிருத்தம் சோதிடம் கற்பம் என்னும் ஆறு வேதாங்கங்களையும், மீமாஞ்சை நியாயம் புராணம் மிருதி என்னு நான்கு உபாங்கங்களையும் ஓதியுணர்ந்தவர்கள். ஆகவனீயம் தக்ஷிணாக்கினி காருகபத்தியம் என்னும் மூன்றக்கினிகளையும் விதிப்படி வளர்க்கின்றவர்கள். ஓதல் ஓது வித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்னும் அறுதொழிலினாலும் கலியை நீக்கினவர்கள். விபூதி உருத்திராக்ஷம் என்னுஞ் சிவசின்னங்களை விதிப்படி சிரத்தையோடு தரிக்கின்றவர்கள். சிவபெருமானுடைய திருவடிக்கண்ணே இடையறாது பதிந்த அன்பே தங்களுக்குச் செல்வமெனக் கொள்கின்றவர்கள்.
அவர்கள் சமயதீக்ஷை விசேஷதீக்ஷை நிருவாணதீக்ஷை ஆசாரியாபிஷேகம் என்னுநான்கும் பெற்றவர்கள். காமிக முதல் வாதுளமிறுதியாகிய சைவாகமங்கள் இருபத்தெட்டையும் ஓதியுணர்ந்தவர்கள். அச்சைவாகமங்களால் வீட்டு நெறிகள் இவையென உணர்த்தப்படும் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கு பாதங்களையும் வழுவா வண்ணம் அநுட்டிக்கின்றவர்கள்.
அவர்கள் சபாநாயகர் "இவ்விருடிகளில் நாம் ஒருவர்" என்று அருளிச்செயப்பெற்ற பெருமையையுடையவர்கள். அதுமட்டோ, தியாகேசர் சுந்தரமூர்த்திநாயனாருக்குத் திருத்தொண்டத்தொகை பாடும்படி அருளிச்செய்தபோது "தில்லைவாழந்தணர்த மடியார்க்கு மடியேன்" என்று அவர்களைத் தமது அருமைத்திருவாக்கினாலே எடுத்துச் சொல்லியருளினார். இங்ஙனமாயின், அவர்களுடைய அளவிறந்த மகிமையை நாமா சொல்ல வல்லம்.
திருச்சிற்றம்பலம்
சாந்தோக்கியோப நிடதத்திலே பிரமபுரத்திலுள்ள தகரமாகிய புண்டரீக வீட்டினுள்ளே இருக்கும் ஆகாசமத்தியில் விளங்கும் அதிசூக்குமசித்தை அறிதல் வேண்டுமென்று தகரவித்தை சொல்லப்பட்டது. இங்கே பிரமபுரமென்றது இச்சரீரத்தையும், புண்டரீகவீடென்றது இருதயகமலத்தையும், ஆகாசமென்றது பராசக்தியையும், அதிசூக்கும சித்தென்றது பரப்பிரமமாகிய சிவத்தையு மென்றறிக. புறத்தும், இப்படியே இப்பிரமாண்டம் பிரமபரமெனவும், இப்பிரமாண்டத்தினுள்ளே இருக்கும் தில்லைவனம் புண்டரீக வீடெனவும், தில்லைவனத்திலிருக்கும் ஆகாசம் பராசத்தியாகிய திருச்சிற்றம்பலமெனவும், அத்திருச்சிற்றம்பலத்திலே நிருத்தஞ்செய்யும் பரப்பிரமசிவம் அதிசூக்குமசித்தெனவும் சொல்லப்படும். இவ்வாகாசம் பூதாகாசம்போற் சடமாகாது சித்தேயாம், ஆதலால் சிதம்பரமெனப்படும். இச்சிதம்பரம் எந்நாளும் நீக்கமின்றி விளங்குந்தானமாதலால், தில்லைவனமும் சிதம்பரமெனப் பெயர் பெறும்.
இத்தகரவித்தையை உபாசிக்கும் முறைமை கைவல்லி யோபநிடதத்தில் சிவனது தகரோபாசனாவிதிப்பிரகரணத்திலே "ஏகாந்தஸ்தானங்களிலே சுகாசனத்தில் இருந்து, சுத்தனாகி, நேராகிய கழுத்துத் தலை உடம்புகளை உடையனாய், அத்தியாச்சிரமஸ்தனாய் இந்திரியங்கள் அனைத்தையும் அடக்கி பத்தியால் தனது ஆசிரியரை இறைஞ்சி, இருதய புண்டரீகத்தைத் துகளற்ற சுத்தமாகக் கருதி, அதன் மத்தியத்திலே, தெளிவுடையவராய், சோகம் இல்லாதவராய், எண்ணப்படாதவராய், வெளிப்படாதவராய், அனந்தரூபராய், சிவனாய், அமிர்தராய், பிரமயோனியாய், தத்பதமாய், ஆதிமத்தியாந்தவிகீனராய், ஏகராய், விபுவாய், சிதானந்த ரூபராய், அரூபராய், அற்புதராய், உமாசகாயராய், பரமேசுவரராய், பிரபுவாய், முக்கண்ணராய், நீலகண்டராய், பிரசாந்தராய், பூதயோனியாய், சமஸ்தசாட்சியாய் இருப்பவரைத் தியானித்து, (அதனால்) முனியாகி, இருளின் மேற்போவான். அவர் பிரமா; அவர் சிவன்; அவர் இந்திரன்; அவர் அழிவற்றவர்; மேலானவர்; சுவப்பிரகாசர்; அவரே விஷ்ணு; அவர் பிராணன்; அவர் காலன்; அக்கினி; அவர் சந்திரன்; அவரே இருந்ததும் இருப்பதுமாகிய எல்லாமானவர்; என்றும் உள்ளவர். அவரை அறிந்து, (அதனால்) மிருத்தியுவைக் கடப்பன். முத்திக்கு வேறுவழி இல்லை" என்று கூறப்பட்டது. இதனால் பிரம விஷ்ணு ருத்திரர் கூடிய சகல சகத்தும் சிவனது விபூதியே ஆதலால் சிவனே சருவோற்கிருஷ்டர் என்பது தெளிவுறுத்தப்பட்டமை காண்க. மிருத்தியு என்பது ஆணவமலம்; அது மிருகேந்திரத்திற் கண்டது.
மானவ புராணத்து ஆறாம் அத்தியாயத்தில் "முன்னே சத்திய பராயணனாகிய ஆகவலாயன முனி பகவானும் பரமேஷ்டியுமாகிய செகந்நாதரை அடைந்து" என்றற் றொடக்கத்தால் ஆகவலாயனர் வினாவினமை கூறி, அதற்குப்பரமேஷ்டி விடை கூறினமை சொல்லத் தொடங்கி, "எண்ணப்படாதவராய் வெளிப்படாதவராய்" என்பது முதலாகக் கொண்டு விரிவாகச் சிவத்தியானப் பிரகாரத்தைக் காட்டி; "இப்படி முனியானவன், நேரேசாக்ஷியாய், இருளைக் கடந்தவராய் பூதயோனியாய், புரப்பகைவராய் இருப்பவரைத் தியானித்து, தனது ஆத்துமவித்தையினால் முத்தி அடைவன். தியானிக்கப்படும் பொருளாகியவர் சாம்பசிவன்; சநாதநர்; பிரமா விஷ்ணு முதலிய ரூபங்களாகக் கூறுபட்டாற் போலிருப்பர். அவர் பிரமா, அவர் சிவன் என்று தொடங்கி அவரை அறிந்து மிருத்தியுவைக் கடப்பான். அவரைப் பிரத்திய கான்மாவாக அறியும் அறிவேயன்றி முத்திக்கு வேறுவழி இல்லை" என்னுந் துணையால் இந்தச் சுருதிப் பொருளே காட்டப்பட்டது. பிரம கீதையிலும் இப்பொருளே உணர்த்தப்பட்டது.
தாவரமாகிய அண்டமும் சங்கமமாகிய பிண்டமும் சமமாதலால், பிண்டமாகிய சரீரத்தில் இடைக்கும் பிங்கலைக்கும் நடுவிலுள்ள சுழுமுனாநாடியும், பிரமாண்டத்திலுள்ள இப்பரதகண்டத்திலே இலங்கைக்கும் இமயமலைக்கும் நடுவிலுள்ள தில்லையும், கருணாநிதியாகிய சிவன் ஆனந்த நிருத்தஞ் செய்யும் ஸ்தானமாம். அது "வலங்கைமான் மழுவோன் போற்றும் வாளர வரசை நோக்கி - யலைந்திடும் பிண்ட மண்ட மவைசம மாதலாலே - யிலங்கைநே ரிடைபோ மற்றை யிலங்குபிங் கலையாநாடி - நலங்கிள ரிமய நேர்போ நடுவுபோஞ் சுழுனை நாடி." "நாடரு நடுவி னாடி நலங்கிளர்தில்லை நேர்போய்க் - கூடுமங் கதனின்மூலக் குறியுள ததற்குத் தென்னர் - மாடுறு மறைகள் காணா மன்னுமம் பலமொன்றுண்டங் - காடுது மென்று மென்றா னென்னையாளுடையவையன்" என்னுங் கோயிற் புராணச் செய்யுள்களாலும், "இடம்படு முடம்பின் மூலத் தெழுந்தநற் சுழுனைநாடி - யுடன்கிள ரொளியேயாகி யொளியிலஞ் செழுத்து மொன்றாய் - நெடுங்குழ லோசை யாகி நிலவு மவ்வோசை போயங் - கடங்கிய விடமே யென்று மாடுமம் பலமதாகும்." "எண்டரு பூத மைந்து மெய்திய நாடி மூன்று - மண்டல மூன்றுமாகி மன்னிய புணர்ப்பினாலே - பிண்டமு மண்டமாகும் பிரமனோ டைவராகக் - கண்டவர் நின்றவாறு மிரண்டினுங் காணலாகும்.", "ஆதலா லிந்த வண்டத்தறிவரும் பொருளா யென்றுந் - தீதிலா மூல நாடிற் றிகழ் சிவலிங்க மேனி - மீதிலா மந்த நாத வெளியின்மேலொளிமன் றங்குக் - காதலான் மடவாள் காணக் கருத்துற நிருத்தஞ் செய்வோம்" என்னுந் திருவாதவூரடிகள் புராணச் செய்யுள்களாலும் அறிக.
இத்திருநிருத்தமாவது பஞ்சகிருத்தியமேமாம். அது "இருவகை யிவைகடந்த வியல்புநம் மொளியா ஞான - வுருவமா னந்த மான வுயிரியாம் பெயரெமக்குப் - பரபதம் பரம ஞானம் பராற்பர மிலது காத்த - றிருமலி யிச்சை செய்தி திகழ்நட மாகு மன்றே." என்று கோயிற் புராணத்திலும். "அந்தநன் னடமே தென்னி லைந்தொழிடைத்தலாகும் - பந்தம தகற்று மிந்தப் படிவமு மதுவேயாகும் - வந்துலகத்தில் யாருங் காண்பரேல் வழுவா முத்தி - தந்தருளளிக்குந் தெய்வத் தலமுமத் தலமே யாகும்." என்னுந் திருவாதவூரடிகள் புராணத்திலும், "ஐந்து - நலமிகு தொழில்க ளோடு நாடக நடிப்ப னாதன்," என்று சிவஞான சித்தியாரிலும், "தோற்றந் துடியதனிற் றோயுந் திதிய்மைப்பிற் - சாற்றியிடு மங்கியிலே சங்கார - மூற்றமா - யூன்று மலர்ப்பதத்தேயுற்ற திரோதமுத்தி - நான்ற மலர்ப்பதத்தே நாடு." "மாயைதனையுதறி வல்வினையைச் சுட்டுமலஞ் - சாய வமுக்கியரு டானெடுத்து - நேயத்தா - லானந்தவாரிதியி லான்மாவைத் தானழுத்த - றானெந்தை யார்பரதந் தான்." என்று உண்மை விளக்கத்திலும், "மன்று ணிறைந்து பிறவி வழக்கறுக்க - நின்ற நிருத்த நிலைபோற்றி." என்று போற்றிப்பஃறொடையிலும், "நீங்கலரும் பவத் தொடர்ச்சி நீங்கமன்று ணின்றிமையோர் துதிசெய்ய நிருத்தஞ்செய்யும்." என்று சிவப்பிரகாசத்திலும் கூறியவாற்றாற் காண்க. இந்நிருத்தத்தைத் தரிசித்தலால் விளளயும் ஆனந்தம். "புளிக்கண்டவர்க்குப் புனலூறு மாபோற் - களிக்குந் திருக்கூத்துக் கண்டவர்க்கெல்லாந் - துளிக்குங்கண்ணீருடன் சோருநெஞ் சத்திரு - ளொளிக்கு மானந்த வமுதூறு முள்ளத்தே." என்னுந் திருமந்திரத் தாலும். "தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றே ணுண்ணாதே - நினைந்தொறுங் காண்டொறும் பேசுந் தோறு மெப்போது - மனைத்தெலும் புண்ணெகவானந்தத் தேன்சொரியுங் - குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ." என்னுந் திருவாசகத்தாலும் உணர்க.
இத்துணைப் பெருஞ்சிறப்பினதாகிய சிதம்பர ஸ்தலத்தில் வியாக்கிரபாதமுனிவர் பதஞ்சலிமுனிவர் என்பவர்களோடு, இத்தில்லைவாழந்தணர் மூவாயிரரும், பராசத்தியால் அதிட்டிக்கப்பட்ட சுத்தமாயாமயமாகிய கனகசபையின்கண்ணே பரமகாருண்ணிய சமுத்திரமாகிய சிவன் செய்தருளும். ஆனந்த தாண்டவத்தைத் தரிசனஞ் செய்து பேரானந்தம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது; பிரமாவானவர் கங்கா தீரத்தில் உள்ள அந்தர் வேதியிலே தாம் தொடங்கிய யாகத்தின் பொருட்டு, இச்சிதம்பரத்தில் வந்து வியாக்கிரபாத முனிவரது அநுமதியினாலே இவர்களை அழைத்துக் கொண்டு போயினார்; பின்பு அம்முனிவரது ஏவலினாலே, இரணியவன்மச்சக்கிர வர்த்தியானவர் அந்தர்வேதியிற் சென்று, இவ்வந்தணர் மூவாயிரரையும் வணங்கி, தேர்களில் ஏற்றி அழைத்துக் கொண்டு, சிதம்பரத்தை அடைந்தார். உடனே இவர்கள் சிதம்பரத்துக்கு வடமேற்றிசையிலே தேர்களை நிறுத்தி, இப்பாலே வந்து, தங்களை எதிர் கொண்ட வியாக்கிரபாத முனிவருக்குத் தங்களை எண்ணிக் காட்டினார்கள். அப்பொழுது, அம்மூவாயிரர்களுள், ஒருவரைக் காணாமல். இரணியவன்மச் சக்கிரவர்த்தி மனந்திகைத்துநிற்ப; அடியார்க்கெளியராகிய பரமசிவன், தேவர்கள் முதலிய யாவருங் கேட்ப இவ்விருடிகளெல்லாரும் எமக்கு ஒப்பாவர்கள்; நாமும் இவ்விருடிகளுக்கு ஒப்பாவோம்; ஆதலால், நம்மை இவர்களுள் ஒருவராகக் கைக்கொள் என்று திருவாய் மலர்ந்தருளினார். இத்திருவாக்கைக் கேட்ட சக்கிரவர்த்தியானவர், சபாநாதரே இவ்விருடிகளில் நாம் ஒருவரென்று சொல்லத்தக்க பெருமையையுடையவர்கள் இவர்கள் என்று மனம் நடுங்கி, இவர்களை நமஸ்கரித்தார். இவ்வந்தணர்கள் இத்திருவாக்கைக் கேட்டவுடனே, மிக அஞ்சி, பூமியிலே தண்டாகாரமாய் வீழ்ந்து; மீள எழுந்து வாழ்வு பெற்று, உன்மத்தராகி, ஸ்தோத்திரம் பண்ணி, "சுவாமீ! சிறியேங்களை அகத்தடிமைகளாகக் கொண்டருளும்" என்று பிரார்த்தித்து, கூத்தாடினார்கள். இச்சரித்திரம் கோயிற் புராணத்தில் விரித்துரைக்கப்பட்டது.
இவ்வந்தணர்கள் வேதாகமங்களை விதிப்படி ஓதி, அவற்றின் உண்மைப்பொருளை ஐயந்திரிபற உணர்ந்து, அவைகளில் விதித்தவழி வழுவாது ஒழுகும் மெய்யன்பர்கள். ஆதலால் இவர்கள் தம்பால் வைத்த அன்பின் பெருமையையும், அவ்வன்புக்கு எளிவந்த தமது பெருங்கருணையையும், சருவான்மாக்களும் தெளிந்து தம்மேலும் தமதன்பர்களாகிய இவர்கள் மேலும் பத்திசெய்து முத்தி பெற்றுய்தற் பொருட்டே, நடேசர் இவ்வாறு அருளிச் செய்தார்.
வேதம், இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என நான்காம். அவற்றுள், இருக்கு வேதம் இருபத்தொரு சாகையும், யசுர் வேதம் நூற்றொரு சாகையும், சாமவேதம் ஆயிரஞ் சாகையும், அதர்வவேதம் ஒன்பது சாகையும் உடையனவாம். இவை அற்பச்சுருதிவாக்கியம், பிரபலச்சுருதிவாக்கியம் என இருபகுதிப்படும். அவற்றுள், அற்பச்சுருதிவாக்கியம் கர்மானுட்டானக்கிரமங்களைச் சொல்லும். பிரபலச் சுருதிவாக்கியம் அத்தியான்மகஞானத்தைச் சொல்லும். இது முப்பத்திரண்டு உபநிஷத்தாய் இருக்கும். வேதம் என்னுஞ்சொல் அறிதற்கருவி எனப் பொருள்படும். இவ்வேதத்துக்கு அங்கங்கள் சிட்சை, வியாகரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தோவிசிதி என ஆறாம். அவற்றுள், சிட்சையாவது வேதத்தின் உச்சாரணலக்ஷணத்தை உணர்த்துவதாம். வியாகரணமாவது வேதத்தின் பதலக்ஷணத்தை விவரிப்பதாம். நிருத்தமாவது வேதத்தின் பதங்களுக்கு விவரணங் கூறுவதாம். சோதிடமாவது இலக்கினம், திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் முதலியவற்றால் வைதிக கருமங்களுக்குக் காலம் அறிவிப்பதாம், கற்பமாவது ஆசுவலாயநீயம், போதாயநீயம், ஆபஸ்தம்பம் முதலிய சூத்திர ரூபத்திருந்து, வைதிக கருமங்களைப் பிரயோகிக்கும் முறைமையைக் கற்பிப்பதாம். சந்தோவிசிதியாவது வேதத்தில் உக்தை முதலிய சந்தோபேதங்களுக்கு அக்ஷரசங்கிய கற்பிப்பதாம். இவ்வாறும் உணராக்கால், வேதங்களை ஓதுதலும், அவற்றின் பொருளை உணர்தலும், அவைகளில் விதித்த வழி ஒழுகுதலும் ஏலாவாம். ஆதலால், இவை ஒருதலையாக உணர்தற்பாலனவாம்.
இத்தில்லைவாழந்தணர்கள் இவ்வேத வேதாங்கங்களை ஓதி உணர்ந்தோர்களென்பது இங்கே "அருமறை நான்கினோடா றங்கமும் பயின்று வல்லார்" என்பதனால் உணர்த்தப்பட்டது. வேதங்களை ஓதி உணர்ந்தவழியும், அவற்றுள் விதித்த ஒழுக்கம் இவ்வழிப் பயனில்லை ஆதலால்; இவர்கள் அவ்வொழுக்கத்திற் சிறிதும் வழுவாமை, இங்கே "வருமுறை யெரிமூன் றோம்பி மன்னுயி ரருளான் மல்கத் - தருமமே பொருளாகக் கொண்டு.", "மறுவிலா மரபின் வந்து மாறிலா வொழுக்கம் பூண்டா - ரறுதொழி லாட்சியாலே யருங்கலி நீக்கி யுள்ளார்.", "தானமுந் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தா - ரூனமே லொன்றுமில்லா ருலகெலாம் புகழ்ந்து போற்று - மானமும் பொறையுந் தாங்கி மனையறம் புரிந்து வாழ்வார்." என்பனவற்றால் உணர்த்தப்பட்டது. திருஞானசம்பந்தமூர்த்திநாயனாரும் 'கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே - செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலம்" என்று அருளிச் செய்தார். ஒழுக்கம் இல்வழி வேதம் ஓதலாற் பயனில்லையென்பது "மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் - பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்." என்னுந் திருக்குறளால் அறிக.
வேதங்களை ஓதியும், முனிவர்களது சாபத்தினாலே அவற்றின் மெய்ப்பொருட்டுணிவு பிறவாமையால், சிவனையும் சிவசின்னங்களாகிய விபூதி ருத்திராக்ஷங்களையும் இகழ்ந்து, பிறரைப் பரம்பொருளெனக் கொண்டு, ஊர்த்துவ புண்டர முதலியன இடுவோரும், விபூதி ருத்திராக்ஷந் தரித்தும், விஷ்ணு முதலிய பசுக்களைப் பசு பதியாகிய சிவனோடு சமமெனக் கொள்வோரும் ஆகிய புல்லறிவாளர் போலாகாமல், இவ்வந்தணர்கள், சிவனொருவரே பரமபதி என்பதும் விபூதி, ருத்திராக்ஷம் தரித்துச் சிவனை வழிபடினன்றி முத்தி சித்தியா தென்பதுமே வேதத்துணிவாமெனத் தெளிந்து, அச்சிவனையே வழிபடும் மெய்யன்பர்களென்றறிக. அது இங்கே "நீற்றினா னிறைந்த கோல நிருத்தனுக்குரிய தொண்டாம் - போற்றினார் பெருமைக் கெல்லை யாயினார் பேணிவாழு - மாற்றினார் பெருகு மன்பாலடித்தவம் புரிந்து வாழ்வார்." "பொங்கிய திருவினீடும் பொற்புடைப் பணிக ளேந்தி - மங்கலத் தொழில்கள் செய்து மறைகளாற் றுதித்து மற்றுந் - தங்களுக் கேற்ற பண்பிற் றகும்பணித் தலைநின் றுய்த்தே - யங்கணர் கோயி லுள்ளா வகம்படித் தொண்டு செய்வார்", "திருநடம் புரிவார்க் காளாந் திருவினாற் சிறந்த சீரார்", "உறுவது நீற்றின் செல்வ மெனக்கொளுமுள்ள மிக்கார் - பெறுவது சிவன்பாலன்பாம் பேறெனப் பெருகி வாழ்வார்." என்பனவற்றால் உணர்த்தப்பட்டது.
ஆகமமானது காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், ரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞாநம், முகவிம்பம், புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம் என இருபத்தெட்டாம். இவ்வாகமங்கள் மாந்திரமெனவும், தந்திரம் எனவும், சித்தாந்தம் எனவும் பெயர்பெறும். இவ்விருபத்தெட்டுச் சிவாகமங்களுக்கும் ஒவ்வொன்றுக்குக் கோடி கிரந்தமாக இருபத்தெட்டுக் கோடி கிரந்தங்களாம். இவை ஞானபாதம், யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் என்று தனித்தனி நான்கு பாதங்கள் உடையனவா யிருக்கும். இவற்றுள் ஞானபாதம் பதிபசுபாசம் என்னுந் திரிபதார்த்தங்களின் ஸ்வரூபத்தையும், யோகபாதம் பிராணாயாமம் முதலிய அங்கங்களோடும் கூடிய சிவயோகத்தையும், கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரம் சந்தியாவந்தனம் பூசை செபம் ஓமம் என்பனவற்றையும், சமய விசேஷ நிருவாண ஆசாரியாபிஷேகங்களையும், சரியாபாதம் சமயாசாரங்களையும் உபதேசிக்கும். ஆகமம் என்பது (பரமாப்தரினின்றும்) வந்தது எனப் பொருள்படும். இன்னும், ஆ என்பது பாசம் எனவும், க என்பது பசு எனவும், ம என்பது பதி எனவும் பொருள் படுதலால், ஆகமம் என்பதற்குத் திரிபதார்த்த லக்ஷணத்தை உணர்த்தும் நூல் என்பதே சிறந்த பொருளென்க. ஆ என்பது சிவஞானமும், க என்பது மோக்ஷமும், ம என்பது மலநாசமுமாம் ஆதலால் ஆன்மாக்களுக்கு மலத்தை நாசம் பண்ணி, சிவஞானத்தை உதிப்பித்து, மோக்ஷத்தைக் கொடுத்தல் பற்றி, ஆகமமெனப் பெயராயிற்றென்று கூறுதலும் ஒன்று. இவ்வாகங்களுக்கு வழிநூல் நாரசிங்கம் முதல் விசுவான்மகம் ஈறாகிய உபாகமங்கள் இருநூற்றேழாம்.
இவ்வந்தணர்கள் சிவதீக்ஷை பெற்று, சைவாகமங்களை ஓதி உணர்ந்து, அவைகளால் உணர்த்தப்படும் நான்கு பாதங்களையும் அனுட்டிப்பவர்களாம். நான்கு பாதங்களையும் அனுட்டிப்பவர்களாம். அது இங்கே "ஞானமே முதலா நான்கு நவையறத் தெரிந்து மிக்கார்." என்பதனால் குறிப்பிக்கப்பட்டது. சிவதீக்ஷை பெற்றமையும் சைவாகமங்களை ஓதி உணர்ந்தமையும் இங்கே பெறப்பட்டில அன்றோவெனின்; அறியாது கூறினாய்; ஞான முதலிய நான்கு பாதப் பகுப்பிலக்கணம் சிவாகமங்களினன்றிப் பெறப்படாமையால் ஞான முதலிய நான்கும் உணர்ந்தோர்கள். எனவே, அவைகளை உணர்த்தும் சைவாகமங்களை ஓதினோர்கள் என்பதும், சிவதீக்ஷை பெற்ற பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருமே சைவாகமத்துக்கு அதிகாரிகள் என்பதும் சிவாகமம் செப்புதலால், சைவாகமங்களை ஓதினோர்கள். எனவே, அவ்வோதுகைக்குமுன் பெறற்பாலதாகிய சிவதீக்ஷை பெற்றோர்கள் என்பதும், தாமே பெறப்படும். இவர்கள் சிதம்பரலாயத்திற் சிவாகம விதிப்படியே நித்திய பூசை உற்சவம் முதலியன செய்தலானும் பரார்த்தலிங்கப் பிரதிஷ்டை, பரார்த்த பூசை, உற்சவம் முதலியனவற்றை விதிப்பன சிவாகமங்களேயன்றி வேதங்கள் மிருதிகளன்மை யானும், இவர்கள் சிவாகமவுணர்ச்சி யுடையார்களென்பதே சித்தம். சிவதீக்ஷை பெற்றே சிவாகமங்களை ஓதல் வேண்டும் என்பதற்குப் பிரமாணம் சுப்பிரபேதம். "இந்தச் சுத்த சைவாகமம் எல்லார்க்கும் கொடுக்கத்தக்கது மன்று. விளக்கத்தக்கதுமன்று; தீக்ஷை பெற்றனவாய், நிலையுடையோனாய், சிவபத்திமானாய் இருப்பவனுக்கே விளக்கத்தக்கது. ஏனையோர்க்கு விளக்கல் குற்றம் எனப்படும்" என்பதாம். அங்ஙனமாயினும், சிவாகமவிதிக்கு மாறுபட்டு, சிவதீக்ஷை பெறாமல் சிவாகமங்களை ஓதினோர்கள் எனக் கொள்ளலாகாதோ எனில்; "தெரிந்து மிக்கார்" என்பது தெரிந்தமையால் மிக்கோர்" எனப் பொருள்பட்டு, உண்டுபசிதீர்ந்தான் என்றாற்போலக் காரணகாரியப் பொருட்டாய் நிற்றலாலும், இவர்கள் சிவாகமவிதிக்கு மறுதலைப்பட்டுச் சிவதீக்ஷையின்றிச் சிவாகமங்களை ஓதி உணர்ந்தார்கள் எனக் கொளில், அவ்வுணர்ச்சியால் இவர்கட்கு மேன்மை கூறுதல் கூடாமையாலும், அது பொருந்தாதென்க. இன்னும், இவர்கள் சமயதீக்ஷை, விசேஷதீக்ஷை, நிருவாணதீக்ஷை, ஆசாரியாபிஷேகம் என்னும் நான்கும் பெற்றோர்கள் எனவும், மூலாகமங்களையும், உபாகமங்களையும் ஓதி உணர்ந்தோர்கள் எனவும், சிவரகசியத்து நவமாம்சிசத்தில் இருபத்தைந்தாம் அத்தியாயத்திலும் சிதம்பர மான்மியத்திலும் கூறப்படுதலால், யாம் கூறியதே பொருத்தம். சிவாகமத்தில் கூறிய தீக்ஷையின் உயர்ச்சி, வாயவ்வியசங்கிதையிலே "சைவ நூலிற் கூறப்பட்டதும் பாசம் மூன்றையும் தவிர்ப்பதும் மேலானதுமாகிய தீக்ஷையைத் தவிர வேறு யாதொரு ஆச்சிரமமும் இவ்வுலகத்திலே மாந்தருக்கு மேன்மை அன்று. ஆதலால், தீக்ஷையினாற்றான் மோக்ஷம்; ஆச்சிரமங்களினாலும் மற்றைக் கருமங்களினாலும் மோக்ஷம் இல்லை. அத்துவசுத்தியின்றி முத்தியை விரும்பும் மனிதர் கோலின்றி நடக்கத் தொடங்கிய குருடர் போல்வர்; தோணி இன்றிக் கடலைக் கடக்க விரும்பினவர் போல்வர்" என்று கூறுமாற்றால் அறிக. இனிச் சைவாகமப் பெருமை சிறிது கூறுவாம்.
ஆகமமென்பது ஆப்தவாக்கியம், ஆகமங்கள் லெளகிகம், வைதிகம், அத்தியான்மகம், அதிமார்க்கம், மாந்திரம் என ஐவகைப்படும். தற்காலத்திற் பயன்றருவது லெளகிகம்; காலாந்தரத்திற் பயன்றருவது வைதிகம்; ஆத்தும விசாரவியற்கையது அத்தியான்மகம்; யோகவியற்கையது அதிமார்க்கம்; சிவஞானவியற்கையது, மாந்திரம் எனப்படும். அவற்றுள், மாந்திரம் பிற நூல்களைப் பூருவ பக்ஷமாகக் கீழ்ப்படுத்தி, மேற்பட்டு விளங்கும் காமிகம் முதலிய சைவாகமங்கள், ஆகமாந்தம் என்னும் ஞானபாதப்பகுதி யோக ரூடிநாமமாகிய சித்தாந்தம் என்னும் பெயரை உடையது. அது இரத்தினத்திரயத்திலே "சித்தாந்தமே சித்தாந்தம், அவைக்கு வேறானவை பூருவபக்ஷங்கள்." என்றும், காந்தத்திலே "இந்த எல்லையில் சிவன் வெள்ளிமலையாகிய கைலாசத்திலே சனகர் முதலிய முநீந்திரர்களுக்குத் திரிபதார்த்தங்களினாலே சம்மிதமாகியும் இரகசியமாகியும் ஆகமாந்தம் என்னும் பெயர்த்தாகியும் உள்ள சித்தாந்தத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்" என்றும், காமிகத்திலே "இருக்கும் யசுர், சாமம், அதர்வம் என்பவை சிவனது மற்றை முகங்களிற் பிறந்தன; காமிகம் முதலிய சிவஞானம் ஊர்த்துவச் சுரோதோற்பவங்களாகி, மேன்முகத்திற் பிறந்தன. முன்கூறிய சகல நூல்களையும் பரமசிவன் பூர்வபட்சமாகச் சொன்னார்; அவற்றை எல்லாம் கீழ்ப்படுத்தி, பரமார்த்தமாகத் தவிரற்பாலனவும் கொள்ளற்பாலனவும் ஆகிய பொருள்களை நிச்சயிக்கும் சிவசித்தாந்தத்தைச் சொன்னார். சித்தாந்தமாவது காமிகம் முதலியனவாம். இதில் உயர்ந்தது பிறிதொன்றும் இல்லை. இந்தச் சைவ நூலே மூலமாம். சதுர்வேதங்களும் இதினின்றும் பிறந்தனவாம். சைவமே வைதிகம் எனப்படும்; வைதிகமே சைவம் எனவும் படும். சைவமானது வைதிகத்தில் அடங்கியும் அடங்காமலும் இருக்கும், வைதிகமும் சைவத்திற்றாழ்ந்து; முனிவரே, அற்றாயினும், சைவம் வேதப்பொருளோடு ஒற்றுமையாய் இருத்தலால், வைதிகம் என்றும் வேதசாரம் என்றும் கூறப்படும். சிவப்பிரகாசமாகிய சிவஞானம் பரஞானமாம்; பசுபாசபதார்த்த போதகமாகிய வேதம் முதலியன அபரஞானமாம். இராத்திரியில் மனிதரது கண்ணும் பூனையின் கண்ணும் விலக்ஷணமாய் இருப்பதுபோல, இந்தப் பரஞானமும் அபரஞானமும் விலக்ஷணமாய் இருக்கும்" என்று கூறுமாற்றால், அறிக. லெளகிகம் முதலிய ஐந்து சாஸ்திரங்களும் முறையே ஒன்றற்கொன்று ஏற்றமுடையன. காமிகத்திலே "சித்தாந்தம் மந்திர தந்திரமாகும்; அதிமார்க்கம் அதனிற் றாழ்ந்தது; அத்தியான்மகம் அதனிலுந்தாழ்ந்தது; அதிலும் தாழ்ந்தது வைதிகம்; வைதிகத்திலும் தாழ்ந்தது லெளகிகம்." என்று சொல்லப்பட்டது.
சைவாகமங்கள் வைதிகவாகியம் ஆதலில் அப்பிரமாணங்கள் என்று சில மூடர் கூறுவர். "வேதாந்த நிஷ்டை பெற்றுக் களங்கமற்ற ஞானிகளும், எனது சிவாகமத்திலே தற்பரர்களாகி ஞானபாதத்திலே நிலை நின்றோரும் ஆகிய இருவகையோரும், பெறற்கரிய சாயுச்சியம் பெறுவர்கள். கருமத்தையும் பிரமத்தையும் உணர்த்தும் வேதாகமம் என்று பிரசித்தம் பெற்ற இரண்டு மார்க்கங்களிலும் நில்லாத பாவிகள் சாத்திரத்திற் கூறிய நால்வகைத் தண்டங்களாலும் தண்டிக்கற்பாலர்கள்." என்னும் காந்தசம்பவ சிதம்பரமான்மியத்தில் சிவன் கூறிய பொருளை உடைய வியாசவாக்கியத்தினாலே, அது பேதைமையாம் என மறுக்க.
சைவாகமங்களுக்கு வேதவாகியத் தன்மை எந்த நியாயத்தினாலே கூறியது? வேதப்பொருளுக்கு விருத்தத் தன்மையே வேதவாகியத் தன்மை எனில்; அப்போது வேதத்திலும், கருமத்தையும் பிரமத்தையும் உணர்த்தும் பூருவோத்தர காண்டங்கட்கு விருத்தத்தன்மை உண்மையால், அந்தப் பிரசங்கம் உண்டாம். அங்கே இலக்கணையால் தாம் கருதிய பொருளில் முடிவுபெறுமெனில், அது எங்கும் ஒக்கும். வேதத்துக்கு வேறாய் இருக்குந் தன்மையே வாகியத்தன்மை. எனில், அப்போது மிருதிகளும் அப்பிரமாணம் எனக் கொள்ளப்படும். வேதத்தை மூலமாகக் கொள்ளாத தன்மை எனில், அப்போது வேதத்துக்கும் வேதத்தை மூலமாகக் கொள்ளாத தன்மை உண்மையால், வேதத்துக்கே அப்பிராமாண்ணியப் பிரசங்கம் வரும். ஆதலால், வேதப்பிராமாண்ணியத்திலே நித்தியத்துவமும் வேதத்தை மூலமாக உடைமையாதலும் முடிவல்ல; மற்றென்னெனில், ஆப்தவாக்கியத்துவமேயாம். வேதம் சுத்த சைவ சித்தாந்தம் என்பவை ஒருவாற்றால் ஒவ்வோரிடத்தில் விருத்தப் பொருளை உணர்த்துவனவாயினும், சாமானிய விசேஷத் தன்மையால் ஐக்கம் உள்ளனவாயேயிருக்கும். வியாகரணத்திலே, இகாரம் முதலியவற்றிற்கு ஆதேசமாக உயிர்வருவழி யகார முதலியன வரும் என்று பொதுச் சூத்திரத்தில் விதித்த விதி சிலவிடத்து அகார முதலியவற்றிற்குச் சவர்ணம் வரிற்றீர்க்கமாம் என்று சிறப்புச் சூத்திரத்தால் விதிக்கப்பட்ட விதியினாலே வாதிக்கப்பட்டதாயினும், இரு சூத்திரங்களுக்கும் அப்பிராமாண்ணியம் இல்லை. தருக்க சாஸ்திரத்திலும், பிரமைக்குக்கரணம் பிரமாணம் என்ற சாமானிய வாக்கியத்தாற் பெறப்பட்ட பிரமாணத் தன்மையை உடைய அனுமானம் முதலியன சாக்ஷாற் காரியப் பிரமைக்குக் கரணம் பிரத்தியக்ஷம் என்ற விசேஷ வாக்கியத்தால் வாதிக்கப்பட்டதாயினும், இருவாக்கியங்களுக்கும் அப்பிராமாண்ணியம் இல்லை. ஆதலின், வேதம் பொதுவாகவும் சிவாகமம் சிறப்பாகவும் இருத்தலால், இரண்டும் பிரமாணங்கள் என்றே துணியப்படும். ஆகமம் வேதவிசேஷமாய் இருத்தலால், அதற்கு வேதவாகியத் தன்மையும் இன்று. வேதவிசேஷம் என்று ஆலாசியமான்மியத்தும் சுப்பிரபேதத்தும் சொல்லப்பட்டது. மோக சூரோத்தரத்திலே "புராணம் வேதங்களாலும், வேதங்கள் ஆகமங்களாலும் வாதிக்கப்படும். அவை சாமானியமும் விசேஷமுமாம்; சைவமே மிகுவிசேஷமாம்." என்றும் விருத்தாசலமான்மியத்திலே "பரமசிவனுடைய இந்தத் திருவுருவங்களை விருத்தாசலத்துள்ள ஈசாலயத்தின் மண்டபத்தானங்களிலே வைத்து, சிவாகமத்திற் சொல்லிய விசேஷமார்க்கங்களாலே பூசித்தான்." என்றும், அருணாசல மான்மியத்திலே "சோணாசலத்தில் உயர்ந்த க்ஷேத்திரம் இல்லை. பஞ்சாக்ஷரத்தில் உயர்ந்த மந்திரம் இல்லை; மாகேச்சுர தருமத்தில் உயர்ந்த தருமம் இல்லை; சிவாகமத்தில் உயர்ந்த சாஸ்திரம் இல்லை." என்றும் வாயவ்வியசங்கிதையிலே "பிற நூல்களிற் கூறப்பட்டதெல்லாம் சிவாகமத்தில் இருக்கின்றது. சிவாகமத்திற் காணப்படாதது பிறிதோர் இடத்திலும் இல்லை" என்றும் சொல்லப்பட்டது.
அற்றேல் வியாகரணம் முதலியன வேதாங்கமாதலின், வேதமே பிரமாணம்; ஆகமம் பிரமாணமன்றெனின்; அற்றன்று. யோகரூடி நாமத்தால் சிவாகமமே நால்வகைப் பிரமாணங்களாலும் முடிந்த ஆகமம் எனப்படுதலாலும், "சித்தாந்தமே சித்தாந்தம்." என்று இரத்தினத்திரயத்திலே கூறப்படுதலாலும் அதுவே பிரமாணம்; வேதம் பிரமாணமன்று. அற்றேல், வேதமும் ஆகமம் சித்தாந்தம் என்னும் சத்தங்களாலே கெளணவிருத்தியாற் சொல்லப்படுமெனின், ஆகமமும் வேதசத்தத்தாலே கெளணவிருத்தியாற் சொல்லப்படுமென்று சமநீதியாமே. ஆதலால் சிவாகமமே முக்கிய விருத்தியால் ஆகமமெனவும் சித்தாந்தமெனவும் படுதலில், சருவோத்கிருஷ்டப் பிரமாணமாமென்று சாதிக்கப்பட்டது. இருக்கு வேதத்திலும், இருக்கு வேதசிரசிலும், யசுர்வேதத்திலும், யசுர்வேதசிரசிலும், சாமவேதத்திலும், சாமவேதசிரசிலும், ஒரோவிடத்தில் அதர்வவேதத்திலும், அதர்வவேதசிரசிலும், லெளகிகநூற்பொருளும், வைதிக நூற் பொருளும், அத்தியான்மக நூற்பொருளும், அதிமார்க்க நூற்பொருளும், யதோசிதமாக எவ்வாற்றானும் சொல்லப்பட்டன; அதர்வசிரசிலே மாந்திர நூற்பொருள் விசேஷித்துச் சொல்லப்பட்டது. செளர சங்கிதையிலே "ஆகமத்தைப் பற்றிக் கொண்டன்றோ சில புராணங்கள் சில சில இடங்களில் பிரத்தியட்சமாக வேதத்துக்கு விருத்தமாகிய பொருளைக் கூறுகின்றன" என்று சொல்லியபடியே சைவாகமம் வேதவிரோதப் பொருள் கூறுதலும், சாமானிய வேதத்தைக் குறித்து விசேஷவேதமாயிருத்தலாலேயாம். விசேஷசாமானியங்கள் சிலவிடத்து விரோதப் பொருள் கூறினாலும், விருத்த சாத்திரமென்னுந் தோஷமும் வாகியத்தன்மையுஞ் சாற்றலாகாது, காமிகத்திலே "வேதம் முதலிய நூல்களெல்லாம் இரெளத்திரங்களாம்; சித்தாந்தமே செளமியமாம்" என்று கூறப்பட்டது. ஞானசித்தி முதலியவற்றிலே, சாமானிய சைவநூல்களும், அவற்றின் உபபேதங்களும் பூருவகாண்டமென்றும் காமிகம் முதலிய சைவசித்தாந்தங்களும் அவற்றின் உபபேதங்களாகிய பெளட்கரம் சருவ ஞானோத்தரம் முதலியனவும் உத்தரகாண்டம் என்றும் உணர்த்தப்பட்டது. சூதசங்கிதையிலே பதினெண் புராணங்களையும் சத்தியவதியின் புத்திரர் செய்தார்; காமிகம் முதலியவற்றைப் பரமசிவனே செய்தார் என்று கூறுதலால் சிவாகமங்களைச் சாக்ஷாத்தாகச் சிவனே செய்தனர் என்று துணியப்பட்டது.
வேதநெறி வழுவிய மாந்தர்க்கே தந்திரங்கள் கூறப்பட்டன எனச் சில நூல்களிற் கூறியதென்னையெனின்; ஆண்டுக் கூறியது வாமசோம லாகுள பைரவ முதலிய தந்திரங்களை அன்றிச் சிவசித்தாந்தத்தை அன்றென்க. அது அப்பதீக்ஷிதர் இயற்றிய சிவதத்துவ விவேக விருத்தியில் பல பிரமாணங் கொண்டு சாதிக்கப்பட்டது. காந்தத்திலே "சிவன் அழிவற்ற தக்ஷிணாமூர்த்தியாய்த் தோன்றி, ஆலமரத்தின் அடியிலே இருந்து, குற்றமில்லாத இவர்களை ஓதுவித்தார். இவர்கள் விதிப்படியே வேதங்களையும் உபநிடதங்களையும் நெடுநாள் வரையும் ஓதியும், சிவனது மாயையினாலே ஞானம் நிலை பெறாதவராயினர். அவர்கள் ஒருங்குகூடி, உமாபதியாகிய சிவனிடத்திற் கேட்க விரும்பி, வெள்ளிமயமாகிய கைலாசத்திற்போய், தவஞ் செய்தார்கள். இந்த எல்லையில் சிவன் வெள்ளியங் கைலாசமலையிலே சனகர் முதலிய முனீந்திரர்களுக்குத் திரிபதார்த்த சம்மிதமும் இரகசியமுமாகிய ஆகமாந்தம் என்னும் பெயரையுடைய சித்தாந்தத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்" என்றும், சைவ புராணத்திலே " பசு சாத்திரங்களைப் பற்றாதுவிட்டுச் சிவசாத்திரத்தைப் பற்றிப் பயிலும் பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருமே ஆசாரியராவாரென்று புகழப்படுவர். சிவாகமத்திற் கூறப்பட்ட ஞானமே ஞானமென்று சொல்லப்படும். அதுவே சிவனனப் பற்றின பெரியோருக்கு முத்திசாதனம்" என்றும் கூறுதலாலும்; சுவேதர் உபமன்னியு கிருஷ்ணர் அருச்சுனர் முதலியோர் சிவசித்தாந்த மார்க்கச் சிரவணாசரணஞ் செய்தமையாலும், சிவசித்தாந்தம் வேதநெறி வழுவிய மாந்தர்க்குக் கூறியதென்பதே கூடாது. இன்னும், பிரம மீமாஞ்சைக்கு நீலகண்ட சிவாசாரியர் இயற்றிய பாஷ்யத்திலே "வேதசிவாகமங்களுக்குப் பேதங்காண்கின்றிலம், வேதமே சிவாகமம்" என்று கூறப்பட்டது. வேதங்கள் சிலவிடத்துச் சிவசாத்திரப் பொருளைச் சிரசிலே தாங்கி இருத்தலால், "வேதமே சிவாகமம்" என்று உபசரிக்கப்பட்டது. விரோதப்பொருள் மாத்திரமே தள்ளப்படுதலால், இவ்விரண்டற்கும் பெரும்பாலும் ஒற்றுமை உண்டாம். அப்படியே வேதம் முதலிய சகல சாத்திரங்களும் சிவாகமத்துக்கு விரோதமில்லாத வழியே பிரமாணங்களாகும். சிவாகமம் தனது பொருட்டன்மையால், மகாமாயையும் அதனிற்றோன்றிய சிவம் முதற் சுத்தவித்தை ஈறாகிய காரியங்களும், மல மாயா கர்மங்களும், கலைமுதற் பிருதிவி ஈறாயுள்ள காரியங்களும் ஆகிய அமிதார்த்தங்களை விளக்கலால் வியாபகமாம். வேத முதலியன தம் பொருண்மையால், பிரகிருதி முதல் பிருதிவி ஈறாயுள்ள காரியங்கள் மாத்திரமாகிய மிதார்த்தங்களை விளக்கலால் வியாப்பியங்களாம். அது பெளட்கரத்திலே "புருஷ வாக்கியங்களாலே இருஷி வாக்கியமும், இருஷிகளாலே தெய்வ வாக்கியமும், தேவராலே பிரம வாக்கியமும், பிரமாவாலே விஷ்ணு வாக்கியமும், விஷ்ணுவினாலே உருத்திர வாக்கியமும், உருத்திரனாலே சிவவாக்கியமும், வாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், ஒன்றினொன்று மேன்மேலும் சிறந்தனவாம்; மேல் உள்ளனவற்றால் கீழுள்ளவைகளே வாதிக்கப்படல் வேண்டும். சிவ சாஸ்திரத்துக்கு விரோதமில்லாமலே சகல சாஸ்திரங்களும் நிற்கும். ஆனால் மற்றை நூல்களுக்கு விரோதம் இல்லாமல் சிவசாஸ்திரம் இருக்க வேண்டுவதில்லை. ஏனெனில், சிவதந்திரம், வியவஸ்தாபகம், ஏனையன வியவஸ்தாப்பியம். ஆதலில், சிவதந்திரத்தால் வாதிக்கப்பட்டது பிரமாணமன்று" என்றும், மிருகேந்திரத்திலே "மிதார்த்தத்திலும் அமிதார்த்தத்துக்கு மேன்னம (உண்டென்பர் புலவோர்கள்)" என்றும் கூறியவாற்றால் உணர்க. இனியமமயும்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இத்தில்லை வாழந்தணர் மூவாயிரரும் தமக்குச் சிவகணநாதராய்த் தோன்றக் கண்டு, அத்தன்மையைத் திருநீலகண்டயாழ்ப்பாணருக்குக் காட்டினார் என்று திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் புராணத்திற் சொல்லப்பட்டது. அந்நாயனார் "ஆடி னாய்நறு நெய்யொடு பாறயிர்" என்னுந் திருப்பதிகத்திலே "நீலத்தார்கரி யமிடற் றார்நல்ல நெற்றி மேலுற்ற கண்ணி னார்பற்று - சூலத் தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார் - சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலஞ் சேர்தலாற்கழற் சேவடி கைதொழக் - கோலத் தாயரு ளாயுன காரணங் கூறுதுமே." என்னுந் திருப்பாட்டிலே தாம் இவர்களைக் கண்ட தன்மையைக் கூறி, இவர்கள் " தொழுதேத்து சிற்றம்பலம்" என்று அருளிச் செய்தார். இதனாலும், இவர்களது மகிமை தெளியப்படும். சிவானுபூதிமானாகிய சேக்கிழார் நாயனாரே "இன்றிவர் பெருமையெம்மா லியம்பலா மெல்லைத் தாமோ - தென்றமிழ்ப் பயனா யுள்ள திருத்தொண்டத் தொகை முன்பாட - வன்றுவன் றொண்டர் தம்மை யருளிய வாரூரண்ணன் - முன்றிரு வாக்காற் கோத்த முதற்பொரு ளானா ரென்றால்" என்று திருவாய் மலர்ந்தருளினாராயின்; புழுத்த நாயினுங் கடையனாகிய யானா இம்மகான்களது எண்ணிறந்த பெருமையை விரித்துச் சொல்ல வல்லன்!
இதுகாறுங் கூறியவாற்றால், வேதாகங்களையேனும் அவற்றின் வழிநூல் சார்பு நூல்களையேனும் சற்குரு முகமாகக் கற்றல் கேட்டல் செய்யா தொழியில், பசுபதியாகிய சிவனை உணர்ந்து மனம்வாக்குக் காயங்களினால் மெய்யன்போடும் அவரை வழிபட்டுப் பிறவிப்பிணி தீர்த்து உய்தல் கூடாது என்பதும், கற்றல் கேட்டல் செய்தவழியும், சிவனை வழிபடா தொழியிற் பயனில்லை என்பதும் பெறப்படும். இதற்குப் பிரமாணம்: திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம். "கல்லார் நெஞ்சி - னில்லானீசன் - சொல்லா தாரோ - டல்லோ நாமே. எ-ம்." திருநாவுக்கரசு நாயனார் தேவாரம் - "பின்னுவார் சடையான் றன்னைப் பிதற்றிலாப் பேதை மார்க - டுன்னுவார் நரகந் தன்னுட் டொல்வினை தீரவேண்டின் - மன்னுவான் மறைகளோதி வனத்தினுள் விளக்கொன் றேற்றி - யுன்னுவா ருள்ளத் துள்ளா னொற்றியூ ருடையகோவே." எ-ம். திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா: "கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை - மற்றவ ரறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் - செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத் திருவீழி மிழலை வீற்றிருந்த - கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளங் குளிரவென் கண்குளிர்ந் தனவே." எ-ம் திருக்குறள் - "சுற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ - னற்றா டொழாஅ ரெனின்." எ-ம். வரும்.
திருச்சிற்றம்பலம்
See Also:
1. தில்லைவாழந்தணர் புராணம் (தமிழ் மூலம்)
2. thillaivAzandhaNar purANam in English Prose
3. Tillai-Vazh Anthanar Puranam in English Poetry