திருவாக்கூர் அருமறையோர் உலகம் ஏத்தும் சிறப்புலியார் மறப்புலியார் உரிமேற் செங்கண் அரவார்த்தார் வருமேற்றார்க்கு அன்ப ரானார்க்கு அமுதளிப்பார் ஒளிவெண்ணீறு அணிந்த மார்பர் பெருவாக்கான் மறைபரவி யாகம் போற்றும் பெற்றியினார் ஐந்தெழுத்தும் பிறழாது ஓதிக் கருவாக்கா இறைவந்தாள் இணைகள் சேர்ந்த கருத்தினார் எனையாவும் திருத்தி னாரே.
சோழநாட்டிலே, திருவாக்கூரிலே, பிராமணகுலத்திலே, சிறப்புலிநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்கள் எழுந்தருளி வந்தபொழுது, அவர்களை நமஸ்கரித்து இன்சொற்களைச் சொல்லி, அவர்களைத் திருவமுது செய்வித்து அவர்களுக்கு வேண்டுந் திரவியங்களெல்லாவற்றையுங் கொடுப்பவர். ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை அன்பினோடு ஜபிப்பவர். பரமசிவனைக் குறித்து யாகங்கள் செய்பவர். அவர் இன்னும் பல சிவபுண்ணியங்களைச் செய்துகொண்டிருந்து சிவபதம் அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.
மந்திரங்கள் பலகோடி யுண்டேனும் அனைத்து மந்திரங்கட்கும் மூலமாயிருத்தலின் மூலமந்திரம் எனப்படுவதும் மந்திரவிரிவு கூறும் யசுர்வேதத்தின் மையத் தானத்தில் இடம் பெற்றுள்ளதும் ஆனகாரணங்களால், அனைத்து மந்திரங்களும் அனைத்து வேதங்களுமாய் உயர்ந்தோ ருள்ளந்தோறும் நிலை பெற்றிருந்து அவரவர்க்கு முத்தி சாதனமாக உதவும் மகிமைக்குரியது அஞ்செழுத்தாகும். அது, தேவாரத்தில், "மந்திரம் நான்மறையாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மையாள்வன (அஞ்செழுத்துமே)" எனவரும். உலகம் எனப்படும் இருவகைப் பிரபஞ்சங்களுள், பொருட்பிரபஞ்சத்துக்கு முன்னர் தோன்றுவது சொற்பிரபஞ்சமாகலானும் அதன் கண்ணும் முன்னர்த் தோன்றுவது வேதமாகலானும் அவ்வேதமூலமாய பிரணவத்தோற்றத்திற்குக் காரணமாய வற்றைத் தோற்றும் பராசத்தியின்கண் தோன்றும் ஆரணி, ஜனனி, ரோதயித்ரி என்னும் முச்சக்திகளின் புறவுருவான ஈசானி, பூரணி, ஆர்த்தி, வாமை, மூர்த்தி ஆகிய ஐந்தொழிற் சக்திகளாய் அஞ்செழுத்து அமைதலினாலும் சைவத்தில், தியானம், செபம், சிவபூசை, வேள்வி அனைத்திலும் அத்தியாவசியகமாக ஓதப்பெற வேண்டியது அதுவாம். வேள்வியும் அதனை இன்றியமையாதென்பது, குறித்த தேவாரத்தில் தொடர்ந்து வரும். "செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே" என்ற பகுதியாற் புலனாம். மாலைக்காலத்து வேள்விக்கண் மந்திரங்கள் பிரபாவம்மிக்கு விளங்குவன ஆதலின் அவ்வேளை அவற்றின் தலைமை மந்திரமாய்த் தன்னாலேயே அவையும் வலுவுறநிற்பதாய் இவ்வஞ்செழுத்தும் பிரபாவம் மிக்கு விளங்கும் என்பது குறித்தே. "அந்தியுண் மந்திரம் அஞ்செழுத்துமே" எனத் தேவாரங் கூறிற்றன்றி, மற்றைக்கால வேள்விகட்கு அது அவசியமாகா தென்றதன்றாம் என்பது அநுபவ பாரம்பரியத்தான் அறியப்படும்.
அது அங்ஙனமாதற் கேற்ப, அளவிறந்த கொடைவளத்தால் நிதிமழை மாரி போன்றவரும், சிவனடியாரை வரவேற்றுபசரித்து மகிழும் நியமம் பூண்டவரும் ஆகிய அந்தணச் செம்மலார் சிறப்புலி நாயனாரும் அஞ்செழுத்தோதி அங்கிவேட்கும் நியமத்திலும் வழுவாது நின்று அதன் பேறாகச் சிவபெருமான் திருவடி நீழலை யடைந்தின்புற்றார். அது, அவர் புராணத்தில், "அஞ்செழுத்தோதி அங்கி வேட்டுநல் வேள்வியெல்லாம் நஞ்சணி கண்டர்பாதம் நண்ணிடச்செய்து ஞாலத் தெஞ்சலில் அடியார்க்கென்றும் இடையறா அன்பால் வள்ளல் தஞ்செயல் வாய்ப்ப ஈசன்தாள்நிழல் தங்கினாரே" எனவரும்.
திருச்சிற்றம்பலம்.
See Also:
1. சிறப்புலி நாயனார் புராணம் (தமிழ் மூலம்)
2. chiRappuli nAyanAr purANam in English prose
3. Sirappuli Nayanar Puranam in English Poetry