பொன்னி நீர் நாட்டின் நீடும்
பொற்பதி புவனத்து உள்ளோர்
இன்மையால் இரந்து சென்றோர்க்கு
இல்லை என்னாதே ஈயும்
தன்மையார் என்று நன்மை
சார்ந்த வேதியரைச் சண்பை
மன்னனார் அருளிச்செய்த மறைத்
திருவாக்கூர் ஆக்கூர். 1
தூ மலர்ச் சோலை தோறும்
சுடர் தொடுமாடம் தோறும்
மாமழை முழக்கம் தாழ மறை
ஒலி முழக்கம் ஓங்கும்
பூ மலி மறுகில் இட்ட
புகை அகில் தூபம் தாழ
ஓம நல் வேள்விச் சாலை
ஆகுதித் தூபம் ஓங்கும். 2
ஆலை சூழ் பூக வேலி
அத்திரு ஆக்கூர் தன்னில்
ஞாலமார் புகழின் மிக்கார் நான்
மறைக் குலத்தின் உள்ளார்
நீலமார் கண்டத்து எண் தோள்
நிருத்தர்தம் திருத்தொண்டு ஏற்ற
சீலராய்ச் சாலும் ஈகைத்
திறத்தினில் சிறந்த நீரார். 3
ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த
போது அடியில் தாழ்ந்து
மூளும் ஆதரவு பொங்க
முன்பு நின்று இனிய கூறி
நாளும் நல் அமுதம் ஊட்டி
நயந்தன எல்லாம் நல்கி
நீளும் இன்பத்துள் தங்கி
நிதிமழை மாரி போன்றார். 4
அஞ்சு எழுத்து ஓதி அங்கி
வேட்டு நல் வேள்வி எல்லாம்
நஞ்சணி கண்டர் பாதம்
நண்ணிடச் செய்து ஞாலத்து
எஞ்சலில் அடியார்க்கு என்றும்
இடையறா அன்பால் வள்ளல்
தஞ்செயல் வாய்ப்ப ஈசர்
தாள் நிழல் தங்கினாரே. 5
அறத்தினில் மிக்க மேன்மை
அந்தணர் ஆக்கூர் தன்னில்
மறைப் பெரு வள்ளலார் வண்
சிறப்புலி யார் தாள் வாழ்த்திச்
சிறப்புடைத் திருச் செங்காட்டங்
குடியினில் செம்மை வாய்ந்த
விறற் சிறுத் தொண்டர் செய்த
திருத்தொழில் விளம்பல் உற்றேன். 6
திருச்சிற்றம்பலம்
அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
பண் :
நாடு :
தலம் :
சிறப்பு: திருத்தொண்டர் புராணம் - இரண்டாம் காண்டம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சிறப்புலி நாயனார் புராணம்