திருநாவுக்கரசர் தேவாரம்
அணங்குமை பாக மாக அடக்கிய ஆதி மூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்துநல் அருந்த வத்த
கணம்புல்லர்க் கருள்கள் செய்து காதலாம் அடியார்க் கென்றுங்
குணங்களைக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே 4.49.9
பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப்
பேதப் படுகின்ற பேதை மீர்காள்
இணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்
எண்டோ ளர் எண்ணிறைந்த குணத்தி னாலே
கணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே. 6.12.7
சுந்தரர் தேவாரம்
கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7.39.8
நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே. 7.55.4
ஒன்பதாம் திருமுறை
கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன்
அடியார் அமருலகம் ஆளநீ ஆளாதே
முடியாமுத் தீவேள்வி முவாயி ரவரொடும்
குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக் கூத் தாடினையே. 2
பதினோறாம் திருமுறை
நன்னக ராய இருக்குவே ளூர்தனில் நல்குவராய்ப்
பொன்னக ராயநற் றில்லை புகுந்து புலீச்சரத்து
மன்னவ ராய அரர்க்குநற் புல்லால் விளக்கெரித்தான்
கன்னவில் தோள்எந்தை தந்தை பிரான்எம் கணம்புல்லனே. 11.58-நம்பி
See Also: 1. Life history of kaNampullanAyanAr
திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் - /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais