திருச்சிற்றம்பலம்
48 கணம்புல்ல நாயனார் புராணம்
1. திருக்கிளர் சீர் மாடங்கள் திருந்து பெருங்குடி நெருங்கி 4055-1
பெருக்கு வட வெள் ஆற்றுத் தென் கரைப்பால் பிறங்கு பொழில் 4055-2
வருக்கை நெடுஞ்சுளை பொழிதேன் மடு நிறைத்து வயல் விளைக்கும் 4055-3
இருக்கு வேளூர் என்பது இவ் உலகில் விளங்கும் பதி 4055-4
2. அப்பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு இறந்த 4056-1
எப்பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார் 4056-2
ஒப்பில் பெருங்குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார் 4056-3
மெய் பொருளாவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார் 4056-4
3. தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று 4057-1
ஓவாத ஒளிவிளக்குச் சிவன் கோயிலலுள் எரித்து 4057-2
நா ஆரப் பரவுவார் நல்குரவு வந்து எய்தத் 4057-3
தேவதி தேவர்பிரான் திருத்தில்லை சென்று அடைந்தார் 4057-4
4. தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள் 4058-1
அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த 4058-2
வில்லியார் திருப் புலீச் சரத்தின் கண் விளக்கு எரிக்க 4058-3
இல்லிடை உள்ளன மாறி எரித்துவரும் அந்நாளில் 4058-4
5. ஆய செயல் மாண்டதற்பின் அயல் அவர் பால் இரப்பஞ்சி 4059-1
காய முயற்சியில் அரிந்த கணம் புல்லுக் கொடு வந்து 4059-2
மேய விலைக்குக் கொடுத்து விலைப் பொருளால் நெய்மாறித் 4059-3
தூயதிரு விளக்கு எரித்தார் துளக்கறு மெய்த் தொண்டனார் 4059-4
6. இவ்வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள் 4060-1
மெய் வருந்தி அரிந்து எடுத்துக் கொடுவந்து விற்கும்புல் 4060-2
எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இப்பணி ஒழியார் 4060-3
அவ்வரிபுல் வினைமாட்டி அணி விளக்காயிட எரிப்பார் 4060-4
7. முன்பு திருவிளக்கு எரிக்கும் முறையாமம் குறையாமல் 4061-1
மென் புல்லும் விளக்கு எரிக்கப் போதாமை மெய்யான 4061-2
அன்பு புரிவார் அடுத்த விளக்குத் தம் திருமுடியை 4061-3
என்புருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார் 4061-4
8. தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலைத் திருவிளக்குப் 4062-1
பொங்கிய அன்புடன் எரித்த பொருவில் திருத்தொண்டருக்கு 4062-2
மங்கலமாம் பெரும் கருணை வைத்து அருளச் சிவலோகத்து 4062-3
எங்கள் பிரான் கணம் புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார் 4062-4
9. மூரியார் கலி உலகின் முடி இட்ட திருவிளக்குப் 4063-1
பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி 4063-2
வேரியார் மலர்ச் சோலை விளங்கு திருக்கடவூரில் 4063-3
காரியார் தாம் செய்த திருத்தொண்டு கட்டுரைப்பாம் 4063-4
49 காரிநாயனார் புராணம்
1. மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின் 4064-1
துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக் 4064-2
குறையாத தமிழ்க் கோவை தம் பெயரால் குலவும் வகை 4064-3
முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர் பால் பயில்வார் 4064-4
2. அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்தவுரை நயம் ஆக்கி 4065-1
கொங்கலர்தார் மன்னவர் பால் பெற்ற நிதிக் குவை கொண்டு 4065-2
வெம் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறைச் சென்னிச் 4065-3
சங்கரனார் இனிது அமரும் தானங்கள் பல சமைத்தார் 4065-4
3. யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழிப் பயன் இயம்பத் 4066-1
தேவர்க்கு முதல்தேவர் சீர் அடியார் எல்லார்க்கும் 4066-2
மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்தம் 4066-3
காவுற்ற திருக்கயிலை மறவாத கருத்தினர் ஆய் 4066-4
4. ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி 4067-1
ஆய்ந்த உணர்வு இடை அறா அன்பினராய் அணி கங்கை 4067-2
தோய்ந்த நெடும் சடையார்தம் அருள் பெற்ற தொடர்பினால் 4067-3
வாய்ந்த மனம் போலும் உடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார் 4067-4
5. வேரியார் மலர்க் கொன்றை வேணியார் அடிபேணும் 4068-1
காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால் 4068-2
வாரியார் மதயானை வழுதியர் தம் மதி மரபில் 4068-3
சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம் 4068-4
50 நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம்
1. தடுமாறும் நெறி அதனைத் தவம் என்று தம் உடலை 4069-1
அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு அடைந்த 4069-2
விடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்த 4069-3
நெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்ததால் 4069-4
2. அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலே 4070-1
தென்னாடு சிவம் பெருகச் செங்கோல் உய்த்து அறம் அளித்து 4070-2
சொன்னாம நெறிபோற்றிச் சுரர் நகர்க்கோன் தனைக் கொண்ட 4070-3
பொன்னாரம் அணி மார்பில் புரவலனார் பொலி கின்றார் 4070-4
3. ஆய அரசு அளிப்பார் பால் அமர் வேண்டி வந்து ஏற்ற 4071-1
சேய புலத் தெவ்வர் எதிர் நெல்வேலிச் செருக் களத்துப் 4071-2
பாய படைக் கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம் 4071-3
காயும் மதக் களிற்றின் நிரை பரப்பி அமர் நடக்கின்றார் 4071-4
4. எடுத்துடன்ற முனைஞாட்பின் இருபடையில் பொரு படைஞர் 4072-1
படுத்த நெடுங் கரித்துணியும் பாய் மாவின் அறு குறையும் 4072-2
அடுத்து அமர் செய் வய்வர் கரும் தலையும் மலையும் அலை செந்நீர் 4072-3
மடுத்த கடல் மீளவும் தாம் வடிவேல் வாங்கிடப் பெருக 4072-4
5. வயப்பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும் 4073-1
கயப் பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும் 4073-2
வியக்குமுகக் கடை நாளின் மேக முழக்கு என மீளச் 4073-3
சயத்தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும் படி தயங்க 4073-4
6. தீயுமிழும் படை வழங்கும் செருக்களத்து முருக்கும் உடல் 4074-1
தோயும் நெடும் குறுதி மடுக் குளித்து நிணம் துய்த்து ஆடி 4074-2
போய பருவம் பணிகொள் பூதங்களே அன்றிப் 4074-3
பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது எனப் பிறங்க 4074-4
7. இனைய கடுஞ் சமர் விளைய இகலுழந்த பறந்தலையில் 4075-1
பனை நெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக் குடைந்து 4075-2
முனை அழிந்த வடபுலத்து முதல் மன்னர் படைசரியப் 4075-3
புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து 4075-4
8. வளவர் பிரான் திருமகளார் மங்கையருக்கு அரசியார் 4076-1
களப மணி முலை திளைக்கும் தடமார்பில் கவுரியனார் 4076-2
இளவள வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம் 4076-3
அளவில் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார் 4076-4
9. திரை செய் கடல் உலகின் கண் திருநீற்றின் நெறி விளங்க 4077-1
உரைசெய் பெரும்புகழ் விளக்கி ஓங்கு நெடு மாறனார் 4077-2
அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே 4077-3
பரசு பெரும் சிவலோகத்தில் இன் புற்று பணிந்து இருந்தார் 4077-4
10. பொன் மதில் சூழ் புகலி காவலர் அடிக்கீழ்ப் புனிதராந் 4078-1
தென்மதுரை மாறனார் செம் கமலக் கழல் வணங்கிப் 4078-2
பன்மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பைத் 4078-3
தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலைதொழுவாம் 4078-4
51 வாயிலார் நாயனார் புராணம்
1. சொல் விளங்கு சீர்த் தொண்டைநல் நாட்டின் இடை 4079-1
மல்லல் நீடிய வாய்மை வளம்பதி 4079-2
பல்பெரும் குடி நீடு பரம்பரைச் 4079-3
செல்வம் மல்கு திருமயிலா புரி 4079-4
2. நீடு வேலை தன் பால் நிதி வைத்திடத் 4080-1
தேடும் அப்பெரும் சேம வைப்பாம் என 4080-2
ஆடு பூங்கொடி மாளிகை அப்பதி 4080-3
மாடு தள்ளும் மரக்கலச் செப்பினால் 4080-4
3. காலம் சொரிந்த கரிக்கருங்கன்று முத்து 4081-1
அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும் 4081-2
நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா 4081-3
சிலம்பு தெண்திரைக் கானலின் சேண் எலாம் 4081-4
4. தவள மாளிகைச் சாலை மருங்கு இறைத் 4082-1
துவள் பதாகை நுழைந்து அணை தூமதி 4082-2
பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி 4082-3
உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்குமால் 4082-4
5. வீதி எங்கும் விழா அணிக் காளையர் 4083-1
தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர் 4083-2
ஓதி எங்கும் ஒழியா அணிநிதி 4083-3
பூதி எங்கும் புனை மணிமாடங்கள் 4083-4
6. மன்னு சீர் மயிலைத் திரு மாநகர்த் 4084-1
தொன்மை நீடிய சூத்திரத் தொல் குல 4084-2
நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார் 4084-3
தன்மை வாயிலார் என்னும் தபோதனர் 4084-4
7. வாயிலார் என நீடிய மாக்குடித் 4085-1
தூய மா மரபின் முதல் தோன்றியே 4085-2
நயனார் திருத்தொண்டின் நயப்புறு 4085-3
மேய காதல் விருப்பின் விளங்குவார் 4085-4
8. மறவாமையான் அமைத்த மனக்கோயிலுள் இருத்தி 4086-1
உறவாதிதனை உணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றி 4086-2
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி 4086-3
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார் 4086-4
9. அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார் தமை நாளும் 4087-1
நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமே 4087-2
திகழ நெடுநாள் செய்து சிவபெருமான் அடிநிழல் கீழ்ப் 4087-3
புகல் அமைத்துத் தொழுது இருந்தார் புண்ணிய மெய்த் தொண்டனார் 4087-4
10. நீராருஞ் சடையாரை நீடுமன ஆலயத்துள் 4088-1
ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்பால் 4088-2
பேராத நெறி பெற்ற பெருந் தகையார் தமைப்போற்றிச் 4088-3
சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம் 4088-4
52 முனையடுவார் நாயனார் புராணம்
1. மாறு கடிந்து மண்காத்த வளவர் பொன்னித் திரு நாட்டு 4089-1
நாறு விரைப்பூஞ் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழுந்தேன் 4089-2
ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும் 4089-3
சேறு நறுவாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர் 4089-4
2. விளங்கும் வண்மை மிக்குள்ள வேளாண் தலைமைக்குடி முதல்வர் 4090-1
களம் கொள் மிடற்றுக் கண் நுதலார் கழலில் செறிந்த காதல் மிகும் 4090-2
உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த 4090-3
வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார் 4090-4
3. மாற்றார்க்கு அமரில் அழிந்துள்ளோர் வந்து தம்பால் மா நிதியம் 4091-1
ஆற்றும் பரிசு பேசினால் அதன் நடுவு நிலை வைத்து 4091-2
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி ஏற்றுச் சென்று எறிந்து 4091-3
போற்றும் வென்றி கொண்டு இசைந்த பொன்னும் கொண்டு மன்னுவார் 4091-4
4. இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள் 4092-1
சொன்ன சொன்ன படி நிரம்பக் கொடுத்துத் தூய போனகமும் 4092-2
கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனியுள்ளுறுத்த கலந்து அளித்து 4092-3
மன்னும் அன்பின் நெறி பிறழா வழித் தொண்டு ஆற்றி வைகினார் 4092-4
5. மற்றிந் நிலை பல்நெடு நாள் வையம் நிகழச் செய்து வழி 4093-1
உற்ற அன்பின் செந்நெறியால் உமையாள் கணவன் திருஅருளால் 4093-2
பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார் 4093-3
முற்ற உழந்த முனை அடுவார் என்னும் நாமம் முன்னுடையார் 4093-4
6. யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார் தமக்கு இன்பம் 4094-1
மேவ அளிக்கும் முனை அடுவார் விரைப் பூம் கமலக் கழல் வணங்கி 4094-2
தேவர் பெருமான் சைவநெறி விளங்கச் செம்கோல் முறை புரியும் 4094-3
காவல் பூண்ட கழற் சிங்கர் தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம் 4094-4
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
1. செறிவுண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும் 4095-1
குறியுண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால் 4095-2
வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழிபறிக்க 4095-3
பறியுண்டவர் எம்பழவினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே 4095-4
திருச்சிற்றம்பலம்
கறைக் கண்டன் சருக்கம் முற்றிற்று.
This webpage was last updated on 13 July 2004
See Also:
1. Stories of the nAyanmAr in English with Pictures