தொண்டரடித்தொழல்பூசைத் தொழின்மகிழ்த லழகார் துளங்கியவர்ச் சனைபுரித றொகுதிய மங்கள் கொண்டபணி திருவடிக்கே கொடுத்த லீசன் குணமருவு மருங்கதையைக் குலவிக் கேட்டு மண்டிவிழி துளும்பன்மயிர் சிலும்ப லுன்னன் மருவுதிருப் பணிகாட்டி வருவ வாங்கி யுண்டிகொளா தொழிதலென விவையோ ரெட்டு முடையரவர் பத்தரென வுரைத்து ளாரே.
சிவனடியார்களைக் கண்டால் அவர்களுடைய சாதியை விசாரியாமல் அவர்களைச் சிவபிரானெனப் பாவித்து நமஸ்கரித்து குதுகுதுத்துக் கொண்டாடி மனமகிழ்ந்து அத்தியந்த ஆசையுடன் பசுவுக்குப் பின் கன்று அணைதல் போல அணைந்து, அவர்களுடன் பேசுங்காலத்து அவர்களைப் பேசும் பூச்சிய வசனமும் தங்களைப் பேசும் நைச்சியவசனமுந்தப்புமோ என்னுங் கூச்சத்துடனே பேசி, அவர்களுக்கு வேண்டுங் கருமமே தங்களுக்கு வேண்டுங் கருமமாகச் செய்தலும், சிவபெருமானை மிகுந்த அன்பினோடு எவ்விடத்தும் யாவர்களும் விதிப்படி அருச்சித்தலைக் கண்டால் மனமகிழ்தலும் சிவபெருமானையும் அவருடைய அடியார்களையும் தெவிட்டாத விருப்பத்தோடு சைவாகம விதிப்படி அருச்சித்தலும், தங்கள் உடம்பினாலே செய்யும் புண்ணியங்களெல்லாவற்றையும் சிவபெருமானது திருவடிக்கே கொடுத்தலும், சிவசரித்திரங்களையே அன்பினோடு கேட்டலும், சிவபெருமானையே வணங்கி மன நெக்குநெக்குருகிச் சரீரநடுக்குற்று உரோமப்புளகம் உண்டாக மதகினிற் புறப்படுஞ்சலம்போல ஆனந்தபாஷ்பம் பொழிய நாத்தழும்பப் பரவசமாதலும், நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் உண்டாலும் துயின்றாலும் விழித்தாலும் சிவபெருமானை ஒருபோதும் மறவாதிருத்தலும், சிவவேடந் தரித்துத் திருத்தொண்டர்போல் நடித்து அதனாற் சீவனஞ் செய்யாமையும், ஆகிய இவ்வெட்டினையும் உடையவர்களே பத்தராய்ப் பணிவாரென்று சொல்லப்படுவார்கள்.
திருச்சிற்றம்பலம்.
பூர்வ புண்ணியப் பேறாக வாய்க்கும் மெய்யுணர்வுக் காட்சியினாலே, தான் என்றைக்கேனும் ஒரு முதல்வன் அன்றென்றும் தன் அகவாழ்விலும் புற வாழ்விலுந் தன்னை நிர்வகித்து நிற்கும் முதல்வன் ஒருவன் உளனென்றும் அவன் தன் உயிர்க்குள்ளுயிரா யிருந்துகொண்டு தனக்கறிவிக்கும் வகையால் தானும் அறிந்துவருகின்றான் என்றும் அவ்வகையால் அவனை வஞ்சித்துத் தான் எதுவும் பண்ணிவிட இயலாதென்றும் தெளிந்து கொள்ளும் நிலை பெற்ற ஒருவர் அம்முதல்வனாகிய சிவபெருமானின் அதியுயர்வான அருமை பெருமைகட்கெதிர் மிகத் தாழ்தரமான தன் எளிமை சிறுமைகளைக் கண்டிரங்குந் தன்மையினாலும் ஜன்மாந்தரங்களிலெல்லாம் அவன் தன்பாற் சொரிந்துவரும் காரணமற்ற பெருங்கருணைக்குக் கைம்மாறாகத் தன்னாலாகக் கடவது எதுவு மின்றென்றெண்ணி யெண்ணி ஏங்கவைக்கும் நன்றிக் கடப்பாட்டுணர்வ ழுத்தத்தினாலும் சதா அவனையே நினைந்து நினைந்து உள்ளுருகிப் பெருகும் அன்புருக்கத்தின ராவர். அவ் வன்புருக்கத்துக்குப் பிரதியுபகாரமாக அவனளிக்கும் ஒப்பற்ற இன்பத்தினிமையிலே சொக்கிச் சொக்கிச் சுவை கண்டதும் அவர் அன்பினிமைக்காகவே சிவனை அன்பு செய்யும் மெய்யன் பாளராய்ச் சதா சிவனைப் பணிதலே தங்கடனாகக் கொண்டியல்வோராவர்.
அத்தகைமை பெற்றவர்களாய்த் திருவாரூரை இடமாகக் கொண்டிருந்து முன்மாதிரியான அன்பியல் வாழ்வு வாழ்ந்த ஒரு தொகுதியினரையும் உறுப்பினராகக் கொண்டுள்ளது திருத்தொண்டர் புராணத் தமையுஞ் சிவனடியார் சமுதாயம். அத்தொகுதியினரின் நினைவு பேச்செல்லாஞ் சதா பக்தி மயமும் செயலெல்லாஞ் சதா சிவனைப் பணிதலுமாம் விசேடம் பற்றி அவர்கள் பத்தராய்ப் பணிவார் எனப் பெயர் பெறுவாராயினர். மனித சாமான்யத் தன்மைக்கு அப்பாலான அவர்களின் சிறப்பியல்புகள் கண்டார்க்குங் கேட்டார்க்கும் பக்தியுணர்வைத் தூண்டி இன்பூட்ட வல்லனவாம். அத்தகு சிறப் பியல்புகளாக அவர் புராணத்தில் இடம் பெறுவன வருமாறு.
இப் பத்தராய்ப் பணிவார் சிவனடியார்களைக் காணுந் தோறுங் கூசிக் குதுகுதுத்துக் கொண்டாடிக் களிப்படைவர். தாய்ப்பசுவின் பின் இளங்கன்று தொடரும் பாங்கில் அவர்களைத் தொடர்வர். எங்கேனும் ஆரேனுஞ் சிவனை யர்ச்சிக்கக் காணின் தாமாகத் தம்மை அதில் ஈடுபடுத்திக் கொண்டு தம் பாவனா விருத்திப் பண்பும் நோக்குணர்வு நுட்பமும் பிறர்க்குந் துலாம்பரமாகத் தோன்றத்தக்கவகையிற் பகிரங்கமாகப் பலனுணர்வர். சிவனையுஞ் சிவனடியார்களையும் பொங்கியெழும் உணர்ச்சிப் பரிமளிப்புடன் தாமும் சுவாரஸ்யமாக இருந்து பூசிப்பர். தம் உடலுறுப்புகளாற் செய்ய நேரிடுந் தொழிலெதுவுந் தற்சார்பாகிவிடாது சிவார்ப்பணமாகவே செய்து முடிப்பர். சிவகதையை ஆரா அன்புடன் கேட்டலில் ரமித்து மற்றெல்லாம் மறந்திருக்கும் பரவச அன்பினராவர். "நெக்கு நெக்கு நினைந்துள்ளுருகி நின்று மிருந்துங் கிடந்தும் நடந்தும் நக்கு மழுதுந் தொழுதும் வாழ்த்தி நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச் செக்கர் போலுந் திருமேனி திகழ நோக்கிச் சிலிர் சிலிர்த்துப் புக்குநிற்பதென்று கொலோ" என மாணிக்கவாசக சுவாமிகள் முன்வைப்பது போன்ற அன்பிய லநுபவமெல்லாந் தம்பால் விளங்கநிற்பர். சிவவேடங்காட்டி அதன் பேரிற் சாரவரும் அவப்பெயருக்குள்ளாகாது அவ்வேடத்தைத் தமக்குத் தந்த சிவனை உணர்ந்து அநுபவித் திருத்தற்கே முழுமையாகப் பயன்படுத்தும் அதி நேர்மையாளர். சுருங்கச் சொல்வதானால், அவர்தம் அன்றாட அசைவாட்டம் ஒவ்வொன்றுமே அயரா அன்பினால் உள்ளுருகிச் சிவனைப் போற்றி மகிழும் பணியாகவே அமையும். அவ்வாறாதல், அவர் புராணாத்தில், "நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் மென்றாலுந் துயின்றாலும் விழித்தாலு மிமைத்தாலும் மன்றாடும் மலர்ப்பாத மொருகாலும் மறவாமை குன்றாத உணர்வுடையார் தொண்டராங் குணமிக்கார்" என வருவதால் விளங்கும்.
சிவபக்த ரொருவரை இனங் காணுமாறியாங்ஙனம் என்னும் வினாவுக் கமையும் விளக்க விரிவான விடை போன்றமையும் இப்பத்தராய்ப் பணிவார் புராணங் காட்டும் பக்தர் சிறப்பியல்புகள் உற்றுணர்ந்து போற்றிக் கடைப்பிடிக்கத் தகுவனவாம்.
திருச்சிற்றம்பலம்.
See Also:
1. பத்தராய்ப் பணிவார் புராணம் (தமிழ் மூலம்)
2. paththarAip paNivAr purANam in English prose
3. Pattharaai-p-Panivaar Nayanar Puranam in English Poetry