logo

|

Home >

devotees >

munaiyatuvaar-nayanar-puranam

முனையடுவார் நாயனார் புராணம்

 

Munaiyatuvaar Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


பொன்னிவளந் தருநாட்டுப் புகழு நீடூர்ப்
    பொருவிறிரு மலிவேளாண் டொன்மை மிக்கார்
முன்னியவர் முனையடுவா ரிகலார் போரின்
    முரணழிவார் தமக்காக மொழிந்த கூலி
மன்னுநிதி கொண்டுசயங் கொடுத்து வந்த
    வளர்பொருளா லிறைவனடி வழுவா வன்பர்க்
கன்னமவர் நசையின்மிக மிசைய நல்கு
    மன்பர்துன்ப மவையாவு மகன்று ளாரே.

சோழ நாட்டிலே, திரநீடுரிலே, வேளாளர் குலத்திலே சிவனடியார்களிடத்தே மிகுந்த பக்தியுடைய ஒரு பெரியவர் இருந்தார். அவர் சத்துருக்களுடைய போர்முனையிலே தோற்றவர்கள் தம்மிடத்தில் வந்து கூலி பேசினால், அவர்களுக்காகப்போய்ப் போர்செய்து வென்று, பொருள் சம்பாதித்து, சிவனடியார்களுக்குச் சொன்ன சொன்னபடியே நிரம்பக்கொடுத்து அவர்களைத் திருவமுது செய்வித்துக் கொண்டிருந்தார். அதனால் அவருக்கு முனையடுவார் நாயனாரென்னுந் திருநாமம் உண்டாயிற்று. அவர் நெடுங்காலம் இவ்வருமையாகிய திருத்தொண்டைச் செய்துகொண்டிருந்து சிவபதம் பெற்றார்.

திருச்சிற்றம்பலம்.

 


முனையடுவார் நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

தொண்டுரிமையிலுள்ளார்க்கு எத்தொழில் வளமுஞ் சிவபணிக் கேற்கும் எனல்

ஆன்மாவுக்குஞ் சிவனுக்கு மிடையில் அநாதியாகவே இருந்துவரும் அந்தரங்கத் தொடர்பின் அடிப்படையில் அநாதியான ஆண்டானடிமைத்திறம் ஒன்று இருந்துகொண்டிருத்தல், "என்றுநீ அன்றுநா னுனதடிமை யல்லவோ" எனத் தாயுமானவர் பாடலினும், "அத்தா உனக்காளாயினி அல்லேனெனலாமே" எனத் தேவாரத்தினும் "என்தாயோ டென்னப்பன் ஏழேழ் பிறவியும் அன்றே சிவனுக்கெழுதிய ஆவணம் ஒன்றாயுலகம் படைத்தான் எழுதினான் நின்றான் கடல்வண்ணன் நேரெழுத்தாயே" எனத் திருமந்திரத்தினும் "பாய ஆருயிர் முழுவதும் பராபரனடிமை" எனத் தணிகைப் புராணத்தினும் வருவனவற்றாற் பெறப்படும். ஆன்மா ஒவ்வொன்றுக்கும் அதனதன் மலபரிபாக நிலையை யொட்டி இந்த ஆண்டானடிமைத் திறம் எவ்வெப்போதிற் புலப்பட வருமோ அவ்வப்போதிலிருந்து மென்மேல் விருத்தியுற்று வந்து காலகதியில் அது முதிர்ச்சியுறும் நிலை நேர்கையில் சம்பந்தப்பட்ட ஆன்மா தொண்டுரிமையில் உள்ளதாகி மேல்வரும் பிறப்பொன்றில் அவ்வுரிமையோடே பிறந்து அதன் பலப் பேறடையும் என்பது திருத்தொண்டர் புராணத்து நாயன்மார் மேற்கொள்ளுந் தொண்டுகளின் அசாதாரணத் தன்மைகளும் அவற்றின் விளைவுகளும் இருந்தவாற்றால் உய்த்துணர்ந்து கொள்ளப்படும். அங்ஙனம் தொண்டுரிமையில் உள்ளதாக ஒரு ஆன்மா ஜனித்திருக்கையில், கன்மாநுசாரமாக அதற்கு வாய்க்குந் தொழில் துறைச் சூழ்நிலை எத்தகையதாயினும் அது அதன் தொண்டுக்குப் பாதகமாதற் கேதுவில்லை யென்பது முன், அதிபத்த நாயனார் புராண சூசனத்திற் கண்டவாற்றானமையும்.

முனையடுவார் நாயனார் இவ்வகைத் தொண்டுரிமையில் உள்ளவராகவே பிறந்து தம் கன்மாநுசாரமாக அமைந்த, கூலிக்குப் போரிடுந் தொழிலாற் பெறும் வருமானங் கொண்டே சிவனடியார்க்கு வேண்டுவன அளித்தலும் மகேசுர பூசை செய்தலுமாகிய திருத்தொண்டாற்றி முடிவிற் சிவலோகத்தமர்ந்து பிரியா உரிமைநிலை பெற்றருளினார். அது அவர் புராணத்தில், "விளங்கும் வன்மை மிக்குள்ள வேளாண் தலைமைக் குடிமுதல்வர் களங்கொள் மிடற்றுக் கண்ணுதலார் கழலிற் செறிந்த காதல் மிகும் உளங்கொள் திருத்தொண் டுரிமையினி லுள்ளார் நள்ளார் முனையெறிந்த வளங்கொடிறைவரடி யார்க்கு மாறா தளிக்கும் வாய்மையார்" - "மற்றிந்நிலைமை பன்னெடுநாள் வையநிகழச் செய்துவழி உற்ற அன்பின் செந்நெறியா லுமையாள் கணவன் திருவருளால் பெற்ற சிவலோகத்தமர்ந்து பிரியா உரிமை மருவினார் முற்ற உழந்த முனையடுவார் என்னும் நாமம்முன் னுடையார்" என வரும்.

ஆயின், கொலையை இன்றியமையாத் தொழிலாகிய போர்த்தொழில் பழிச்சார்புள்ளதும் அதனாற் பெறும் பொருள் சிவபுண்ணியத்துக்குத் தகுதியற்றதும் ஆமன்றோ எனின் அது வாஸ்தவமே யெனினும் சிவன் கழற்சார்பாகிய மெய்யன்பில் தம்மை இழந்து நிற்கவல்லார் செயற்பழி தம்மைச் சாரா வண்ணஞ் செயல் புரிய வல்லாராதல் முன் வந்துள்ள மூர்க்க நாயனார் புராண சூசனத்திற் கண்டுள்ளவாற்றால் இந்த முனையடுவார் நாயனார் பழிக்கிடனாகாப் பாவனசீலர் என்பதும் அவர்பொருள் எவ்வகையினுஞ் சிவபுண்ணியத்துக்குத் தகுதி யற்றதாதல் செல்லா தென்பதும் அறிந்துவக்கத்தகும்.

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. முனையடுவார் நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. munaiyaduvAr nAyanAr purANam in English prose 
3. Munaiyatuvaar Nayanar Puranam in English Poetry 

 


Related Content

The Puranam of Munaiyatuvaar Nayanar

The History of Munaiyaduvar Nayanar

திருமுறைகளில் முனையடுவார் நாயனார் பற்றிய குறிப்புகள்