logo

|

Home >

devotees >

kulacchirai-nayanar-puranam

குலச்சிறை நாயனார் புராணம்

Kulacchirai Nayanar Puranam


யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


கோதில்புகழ் தருமணமேற் குடியார் கோவண்
    குலச்சிறையார் தென்னர்குல வமைச்சர் குன்றா
மாதவர்க ளடிபரவு மரபார் பாண்டி
    மாதேவி யாரருள்வான் பயிர்க்கு வேலி
காதன்மிகு கவுணியர்கோன் வாதிற் றோற்ற
    கையரைவை கைக்கரைசேர் கழுவி லேற்று
நீதியினா ராலவாய் நிமலர்ச் சேர்ந்த
    நின்மலனா ரென்மலங்க ணீக்கி னாரே.

பாண்டிநாட்டிலே, மணமேற்குடியிலே, குலச்சிறைநாயனார் என்பவரொருவர் இருந்தார். அவர் விபூதி உருத்திராக்ஷந்தரிக்கின்றவர்களும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை ஓதுகின்றவர்களுமாகிய சிவனடியார்களை, உயர்குலம் இழிகுலங்களும் நற்குணம் தீக்குணங்களும் பாராமல் வணங்கித் துதிக்கின்றவர். அவ்வடியார்கள் பலர்கூடி வரினும், ஒருவர் வரினும், அன்பினோடு எதிர்கொண்டு அழைத்துத் திருவமுது செய்விக்கின்றவர். பரமசிவனுடைய திருவடிகளை அநுதினமுஞ் சிந்தித்துத் துதித்து வணங்குகின்றவர். நெடுமாறர் என்னும் பெயரையுடைய பாண்டியருக்கு முதன்மந்திரியாராயினவர். அந்தப்பாண்டியருடைய மாதேவியாராகிய மங்கையர்க்கரசியார் செய்கின்ற திருத்தொண்டுக்குத் துணைசெய்கின்றவர். கீழ்மக்களாகிய சமணர்களுடைய பொய்ச்சமயத்தைக் கெடுத்து, பாண்டி நாடெங்கும் திருநீற்றை வளர்க்கும் பொருட்டு, பரசமய கோளரியாகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவடிகளை வணங்கிய சிறப்பினையுடையவர். வாதிலே அந்நாயனாருக்குத் தோற்ற சமணர்களைக் கழுவிலே ஏற்று வித்தவர். சுந்தரமூர்த்திநாயனாராலே திருத்தொண்டத்தொகையிலே "பெருநம்பி" என்று வியந்துரைக்கப்பட்டவர்.

திருச்சிற்றம்பலம்

 


குலச்சிறை நாயனார் புராண சூசனம்

1. சிவனடியார் பத்தி

சிவன் சுவதந்திரர் நாம் பரதந்திரர். சிவனுக்கும் சிவபத்தர்களுக்கும் நாம் அடிமை என்று தெளிந்த மெய்யுணர்வு உடையோர், தாம் எத்துணைச் செல்வத்தோடும் எத்துணை அதிகாரத்தோடும் கூடி யிருப்பினும், சிறிதாயினும் அவைகளாலே அகங்காரம் கொள்ளாமல், சிவனடியார்களைக் கண்டால், அவர்கள் எக்குலத்தர்களாயினும், அவர்களைச் சிவன் எனவே பாவித்து, எதிர்கொண்டு வணங்கித் துதித்து, விதிப்படி அமுது செய்விப்பர். இப்படிச் சிவனடியாரிடத்து அன்புடையவரே சிவனிடத்து அன்புடையர் என்று தெளியப்படுவர். அகங்காரம் முதலியன உடையோர் சிவனது திருவருளை அடையார்கள். அது "ஒருமையுடனீசனரு ளோங்கி யென்றுந் தூங்க - லருமை யருமை யருமை - பெருமையிடும் - பாங்காரங் கோப மபிமான மாசையிவை - நீங்காத போது தானே" என்னும் சிவபோகசார வெண்பாவால் அறிக. இக்குலச்சிறை நாயனார், தாம் பெருஞ் செல்வரும் பாண்டியனுக்கு முதன்மந்திரியாருமாய் இருந்தும், சிறிதும் செருக்கு உறாது, இச்சிவபுண்ணியத்தைச் செய்தமையால், சிவனிடத்தே மெய்யன்புடையர் என்பது தெள்ளிதிற் றுணியப்படும். இவரது பத்தித்திறம் "வெற்றவேயடியா ரடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியுங் - கொற்றவன் றனக்கு மந்திரியாய குலச்சிறை குலாவிநின்றேத்து - மொற்றைவெள் விடைய னும்பரார் தலைவனுலகினி லியற் கையை யொழிந்திட - டற்றவர்க் கற்ற சிவனுறைகின்ற வாலவா யாவது மிதுவே; கணங்களாய்வரினுந் தமியராய் வரினு மடியவர் தங்களைக் கண்டாற் - குணங்கொடு பணியுங் குலச்சிறை பரவுங் கோபுரஞ் சூழ்மணிக் கோயின் - மணங்கமிழ் கொன்றை வாளராமதியம் வன்னிவண் கூவிள மாலை - யணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே, நலமில ராக நலமதுண்டாக நாடவர் நாடறி கின்ற - குலமில ராகக் குலமதுண்டாகத் தவம்பணி குலச்சிறை பரவுங் - கலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரிபுரி மூடிய கண்ட - னலைமலி புனல்சேர் சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே; நாவணங் கியல்பா மஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகுங் - கோவணம் பூதிசாதனங் கண்டாற் றொழுதெழு குலச்சிறை போற்ற - வேவணங் கியல்பா மிராவணன் றிண்டோ ளிருபது நெரிதர வுன்றி - யாவணங் கொண்ட சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே; தொண்டராயுள்ளார் திசைதிசைதோறுந் தொழுதுதன் குணத்தினைக் குலாவக் - கண்டுநா டோறு மின்புறுகின்ற குலச்சிறை கருதிநின் றேத்தக் - குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள் குறியின்கணெறி யிடைவாரா - வண்டர்நா யகன்றா னமர்ந்துவீற் றிருந்த வாலவா யாவது மிதுவே" எனத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாராற் புகழப்பட்டமை காண்க.

2. சைவ சமயத்தை வளர்க்க விரும்பல்

புறச்சமயிகளுடைய துர்ப்போதனையினாலே ஆன்மாக்கள் சற்சமயமாகிய சைவத்தை விட்டு அவர்களது சமயப் படுகுழியிலே விழுந்து கெடுதலைக் காணின், மிக இரங்கிக் கவலை கொண்டு, அப்புறச்சமயங்களை ஒழித்து, சைவத்தை வளர்த்தற்கு வேண்டும் முயற்சியைச் சிரத்தையோடு செய்தல் மிக மேலாகிய சிவபுண்ணியமாம்; அது செய்யாமை மிகக் கொடிய பாதகமாம். அம்முயற்சி சிரத்தையோடு செய்யப்படுமாயின், வேண்டுவார் வேண்டியதே ஈவாராகிய சிவன் அதனை முற்றுவித்தருளுவர். இக்குலச்சிறை நாயனார் இச்சிவபுண்ணியத்தான் மிகச் சிறப்புற்றவர் என்பது, சமணர்களுடைய பொய்ச் சமயத்தைக் கெடுத்துப் பாண்டி நாடெங்கும் திருநீற்றை வளர்க்கும் பொருட்டுத் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவடிகளை வணங்கினமையாலும், வாதிலே அந்நாயனாருக்குத் தோற்ற சமணர்களைக் கழுவிலே ஏற்றுவித்தமையாலும், செவ்விதிற்றெளியப்படும். இவர் இவ்வாறு செய்தபின்பு, பாண்டி நாடெங்கும் புறச்சமயமாகிய இருள் கெடச் சைவ சமயமாகிய பேரொளி தழைத்து ஓங்கியதன்றோ? ஆதலால், இதனின் மிக்க புண்ணியம் வேறு இல்லை எனத் தெளிந்து, சைவத்தை வளர்த்தற்குச் சிவனது திருவருளையே முன்னிட்டுக் கொண்டு இடைவிடாது பெருமுயற்சி செய்க.

திருச்சிற்றம்பலம்

See Also: 
1. குலச்சிறை நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. kulachchiRai nAyanAr purANam in English prose 
3. Kulacchirai Nayanar Puranam in English Poetry 

 


Related Content

63 Nayanmar Drama - மங்கையர்க்கரசியார் - நின்றசீர் நெடுமாறர்

The Puranam of Kulacchirai Nayanar

The History of Kulachirai Nayanar

திருமுறைகளில் குலச்சிறை நாயனார் பற்றிய குறிப்புகள்