logo

|

Home >

devotees >

kotpuli-nayanar-puranam

கோட்புலி நாயனார் புராணம்

Kotpuli Nayanar Puranam


யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


குலவுபுகழ் நாட்டியத்தான் குடிவே ளாளர்
    கோட்புலியார் குவித்துயர்த்த செந்நெற் கூடு
நிலவணிவார்க் கமைத்தாணை நிறுத்தி யொன்னார்
    நேர்மலைவார் திருவாணை நினையா தேநெற்
சிலமிடியா லழித்தபடி யறிந்து வாளாற்
    சேர்ந்தபெருங் கிளைஞருடல் சிதற வீசி
யிலகுமொரு குழவியையு மெறிந்து நாத
    னெண்ணரிய கருணைநிழ லெய்தி னாரே.

சோழநாட்டிலே, நாட்டியத்தான்குடியிலே, வேளாளர் குலத்திலே சிவபத்தியிற் சிறந்த கோட்புலிநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் அரசனிடத்திலே சேனாதிபதித் தொழில் பூண்டு, அதனாலே தமக்குக் கிடைக்கும் வேதனத்தைக்கொண்டு சிவாலயங்களுக்குத் திருவமுதின் பொருட்டு நெல்லுவாங்கிக் கட்டுதலாகிய திருப்பணியை நெடுங்காலஞ் செய்து வந்தார்.

இப்படியொழுகுநாளிலே, அரசனது ஏவலினால் போர்முனையிற் செல்லவேண்டி, சுவாமிக்குத் திருவமுதின் பொருட்டுத் தாந்திரும்பி வரும் வரைக்கும் வேண்டும் நெல்லைக்கட்டி, தம்முடைய சுற்றத்தார்களெல்லாருக்குந் தனித்தனியே அதில் எடுத்துச் செலவழியாதிருக்கும்படி ஆணையிட்டுக் கொண்டு போருக்குப் போயினார். சிலநாளிலே பஞ்சம் வந்தமையால் அந்தச்சுற்றத்தார்கள் "நாங்கள் உணவின்றி இறப்பதினுஞ் சுவாமிக்குத் திருவமுதின் பொருட்டுக் கட்டப்பட்ட இந்நெல்லைக் கொண்டாயினும் பிழைத்து, பின் கொடுத்துவிடுவோம்" என்று நெல்லைக் கூடுகுலைத்து எடுத்துச் செலவழித்தார்கள், கோட்புலிநாயனார் அரசனுடைய பகைஞரைப் போர்முனையிலே வென்று அவனிடத்திலே நிதிக்குவை பெற்றுக்கொண்டு, தம்முடைய ஊரை அடைந்து, தம்முடைய சுற்றத்தார்கள் அதிபாதகஞ்செய்தமையை உணர்ந்து, ஒன்று செய்யத் துணிந்து, தம்முடைய வீட்டிலே பகுந்து, அவர்களெல்லாரையும் அழைப்பித்து, தமது கோட்புலியென்னும் பெயரையுடைய காவலாளன் கடை காக்க, சிவதிரவியத்தை எடுத்துச் செலவழித்த அதிபாதகர்களாகிய தந்தை, தாய், உடன்பிறந்தார், மனைவி முதலிய சுற்றத்தா ரெல்லாரையும் பணிவிடைக்காரரையும் வாளினாலே துணிந்தார். அப்பொழுது காவலாளன் அங்கே பிழைத்த ஒரு ஆண்பிள்ளையைப் பார்த்து, "இக்குழந்தை அவ்வன்னத்தை உண்டதன்று. இது இக்குடிக்கு ஒரு பிள்ளை; இதனைக் கொல்லா தருள் செய்யும்" என்று வேண்ட; கோட்புலிநாயனார் "இது இந்நெல் உண்டவளுடைய முலைப் பாலை உண்டது" என்று அதை எடுத்து எறிந்து, வாளினாலே துணிந்தார். உடனே சிவபெருமான் கோட்புலிநாயனாருக்குத் தோன்றி, " அன்பனே! உன் கைவாளினாலே தங்கள் பாவத்தினின்றும் நீங்கிய உன் சுற்றத்தார்கள் சுவர்க்கத்தை அடைய நீ இந்தப்படியே நம்முடன் வருவாய்" என்று கருணை செய்து எழுந்தருளினார்.

திருச்சிற்றம்பலம்.

 


கோட்புலி நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

திருவிரையாக்கலி மீறல் அதிபாதகமா மெனல்

திருவாசகத்தில் தசாங்கப் பதிகம் கூறுகின்றவாறு சிவபெருமானுடைய பெயர் மஹாதேவன்; ஊர் உத்தரகோசமங்கை; குதிரை ஞானப்புரவி; கொடி ஏற்றுக் கொடி; படை கழுக்கடை; முரசு நாதம் என்பதற்கிணங்க அவருடைய ஆணை விரையாக்கலி எனப்படும். அது கோயினான் மணி மாலையில் "விரையாக்கலியென்னு மாணையும்" என வருவதனாற் பெறப்படும். திருநீல கண்ட நாயனாரின் மனைவியார், கணவர் விஷயத்தில் ஆணையிடுகையில் சிவன் திருவங்கமாகிய திருநீலகண்டத்தின் மேல் வைத்து ஆணையிட்டமைபோல எவரேனும் எதற்கேனும் ஆணையிடுகையில் சிவனாணையாகிய விரையாக்கலியின் மேல் வைத்தும் ஆணையிடுதல் வழக்காறென்பது கோட்புலி நாயனார் வரலாற்றினால் அறியப்படும்.

கோட்புலி நாயனார் சிறப்பு மிக்க சேனாதிபதியாயிருந்து தாம்பெறும் வருவாய் கொண்டு திருக்கோயில்களிற் சுவாமி நைவேத்தியத்திற்கான அமுதுபடிக்குச் செந்நெல்வாங்கிச் சேமித்து வைத்து வழங்கும் வழக்கமுடையராயிருந்தார். ஒரு தடவை அவர் பலமாதம் நீடிக்கக்கூடிய போரொன்றுக்குச் செல்ல வேண்டியானபோது சுவாமி நைவேத்தியத்திற்கெனச் சேமிக்கப்பட்டிருந்த நெற்கூடுகளில் தீண்டலாகாதெனத் தமது பெற்றார் உற்றார் அனைவரிடத்திலும் தனித்தனி அறிவித்துத் திருவிரையாக்கலியின்மேல் ஆணையிட்டு வற்புறுத்திச் செல்வாராயினர். அவர் சென்று திரும்புதற்கிடையில் கடும்பஞ்சமொன்று குறுக்கிட்டமையால் வருந்திய பெற்றாரும் உற்றாரும், "இப்போதைத் தேவைக்கெடுத்துவிட்டுப் பிறகு கொடுப்போம்" என்ற அடிப்படையில் தற்காலிக ஆணைமீறலாக அந்நெற் கூடுகளைப் பிரித்து உணவுக்குபயோகப் படுத்திக் கொண்டனர். போரில் வெற்றி பெற்றுத் திரும்புகையில் நிலைமை தெரிந்து கொண்ட நாயனார் அதைத்தாம் அறிந்ததாகக் காட்டிக் கொள்ளாமல் சுமுகமான நிலையிற் பெற்றார் உற்றார் எல்லாரையுமொருங்கழைத்து அனைவரையுந் தங்கைவாளுக் கிரையாக்கி ஒழித்துவிட்டார். இறுதியாக அணுகப்பட்ட பால்குடி பருவக் குழந்தை யொன்றைச்சுட்டி, இது அந்நெல்லை உண்டதில்லை என அவர் பெயர் தாங்கியிருந்த அவருடைய வாயிற் காவலாளன் பரிந்துரைத்தபோது, அந்நெல்லுண்டவளின் பாலைத்தானே இதுவும் உண்டதென மறுத்துரைத்துவிட்டு முன்னிருந்ததிலுங் கூடிய உத்வேகத்துடன் அக்குழந்தையை எடுத்தெறிந்து வாளால் அதனைத் துணிப்பாராயினர். அது, அவர் புராணத்தில், "பின்னங்குப் பிழைத்ததொரு பிள்ளையைத்தம் பெயரோனவ் வன்னந்துய்த்திலது குடிக்கொருபுதல்வன் அருளுமென இந்நெல்லுண்டாள் முலைப்பாலுண்டதென எடுத்தெறிந்து மின்னல்ல வடிவாளா லிருதுணியாய் விழவேற்றார்" என வரும்.

இங்ஙனம் பச்சிளங் குழந்தை விஷயத்திற்கூடப் பரிவுகாட்ட மறுக்குமளவுக்கு இந்த நாயனார், சிவாபராதத்துக்கு உரிய தண்டனைத் தீர்வு கொடுத்தேயாக வேண்டுமென்ற தமது தொண்டுறுதியில் தளராதிருந்துள்ளார். சிவ நைவேத்தியத்துக்கென வைத்த நெல்லைத் தீண்டியதே அதிபாதகச் செயலாக, அவர்கள் சிவ ஆணையின்பேரில் தாமிட்ட ஆணையை மீறியதன்மூலம் மற்றுமோ ரதிபாதகந் தேடி இருமடங்கு அதிபாதகத்துக்குரியராய் விட்டமையின் கொலையன்றி மற்றெதுவும் அவர்பாவத்துக்கு உரியதண்டனைத் தீர்வாகா தென்பது நாயனார் திருவுள்ளம் இருந்தவாறு. எனவே வெறுமனே, சினந்தீர்த்தலோ பழிவாங்குதலோ நோக்கமாகக் கொண்டு நிகழும் சாமானிய மறக்கொலைகள் போலாது, இவர் நிகழ்த்திய கொலை அவர்களுக்கு விளையவிருந்த அதிபாதகக் கொடுமையிலிருந்து அவர்களைத் தப்பிப் பிழைக்க வைக்குங் கருணையோடு கூடிய அறக்கொலையாம். அது அங்ஙனமாதல், அவர் செயல்முடிவில் உடனடியாகவே சிவபெருமான் அவரெதிரில் வெளிப்பட்டு, முதலில் அவர்பெற்றார் உற்றார்க்குச் சுவர்க்கமாதி மேல்கதிவாழ்வருளிப் பின்பே அவருக்குத் தன்னுடன் சேரும் பேரின்ப வாழ்வருளியுள்ளமையால் துணியப்படும். அது அவர் புராணத்தில், "அந்நிலையே சிவபெருமான் அன்பரெதிர் வெளியேநின் றுன்னுடைய கைவாளாலுறு பாசமறுத்தகிளை பொன்னுலகின் மேலுலகம் புக்கணையப் பகழோய் நீ இந்நிலைநம் முடனணைகென் றேவியெழுந் தருளினார்" என வரும்.

நாயனாரது தண்டனைத் தீர்வினால் அவர் பெற்றாரும் உற்றாரும் பாவநீக்கமாகிய நன்மையே பெற்றார்களென்பது இச்செய்யுளிலும், "உன்னுடைய கைவாளா லுறுபாச மறுத்தகிளை" என அநுவதிக்குப்பட்டிருத்தல் குறிப்பிடத்தகும். அருளாளர்களாய சிவனடியார்கள் கையாற் பெறுந் தண்டனைத் தீர்வு பாபநீக்கம் விளைப்பதாதல் முன் கழற்சிங்க நாயனார் புராண சூசனத்திற் காணப்பட்டவாறுங் கருதத்தகும். மேலும், இக்கோட்புலி நாயனார் சிறந்த அருளாளராதல், அவர் ஏலவே சுந்தர மூர்த்தி சுவாமிகளைத் தமதில்லத்தில் வரவேற்றுபசரித்து அவர்க்கு நண்புறவு பூண்டு தம் புத்திரிகள் இருவரையும் அவர் புத்திரிகளாக அவர் ஏற்றுக்கொள்ள வைத்த வகையால் அவரருளுக் காளானமையானும் சுவாமிகள் தமது தேவாரத் திருப்பாடல் சிலவற்றில் தம்மை வனப்பகை அப்பன் சிங்கடியப்பன் என அப்புத்திரிகளின் பெயர்சார்த்திக் குறிப்பிட்டுள்ளமையானும் நாயனாருடைய ஊராகிய திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்குஞ் சிவ பெருமானைச் சுவாமிகள் பாடியருளிய பதிகப் பாடலொன்றில், கோட்புலியார் வாழும் ஊரிலிருக்குஞ் சிவபெருமான் என்றதன் மூலம் நாயனார் மகிமையைச் சிறப்பித்துள்ளமையானும் இனிது பெறப்படும். குறித்தபாடல், "கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி நம்பியை நாளும் மறவாச் சேடார் பூங்கழற் சிங்கடியப்பன் திருவாரூரன் உரைத்த பாடீராயினும் பாடுமின் தொண்டீர் பாட நும்வினை பற்றறுமே" என வரும். இங்ஙனம் கோட்புலி நாயனார் சுந்தரரளுக்குப் பாத்திரமாயினாரெனல், "குற்றமறுக்குங் கோட்புலி நாவற் குரிசிலருள் பெற்ற அருட்கட லென்றுல கேத்தும் பெருந்தகையே" என்னுந் திருத்தொண்டர் திருவந்தாதித் திருப்பாடலினும் போற்றப்பட்டிருத்தல் காணத்தகும். கோட்புலியார் கொலை மூலந் தம் பெற்றாருற்றாரைக் குற்றமறுத்தமை, "குற்றமறுக்குநங் கோட்புலி" என இப்பாடலில் வருமாறுங் கருதத்தகும்.

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. கோட்புலி நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. kOtpuli nAyanAr purANam in English prose 
3. Kotpuli Nayanar Puranam in English Poetry 

 


Related Content

The Puranam of Kotpuli Nayanar

The History of Kotpuli Nayanar

திருமுறைகளில் கோட்புலி நாயனார் பற்றிய குறிப்புகள்