logo

|

Home >

devotees >

eyarkon-kalikkama-nayanar-puranam

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

 

Eyarkon Kalikkama Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்
    ஏயர்கோன் கலிக்காமர் 'இறையை நேரே
தூதுகொளும் அவன் அணுகில் என்னாம்' என்னும்
    துணிவினர்பால் இறைவன் அருஞ் சூலைஏவி
'வேதனைவன் றொண்டன்வரின் நீங்கும்' என்ன
    வெகுண்டு உடல்வாள் கொடுதுறந்து மேய நாவாற்
போதகமும் உடல்இகழ எழுந்துதாழ்ந்து
    போற்றியது விலக்கியருள் பொருந்தி னாரே.

சோழநாட்டிலே, திருப்பெருமங்கலத்திலே, வேளாளர் குலத்திலே, சோழராஜாக்களிடத்திலே பரம்பரையாகச் சேனாதிபதித் தொழில்பூண்ட ஏயர்குடியிலே, கலிக்காமநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் குருலிங்க சங்கமபத்தியிலே சிறந்தவர். திருப்புன்கூரிலுள்ள சிவாலயத்திலே அளவில்லாத திருப்பணிகள் செய்தவர்.

அவர் சுந்தரமூர்த்திநாயனார் சிவபெருமானைப் பரவையாரிடத்திற்குத் தூதாக அனுப்பிய சமாசாரத்தைக் கேள்வியுற்று, வெம்பி மிகக் கோபித்து, "நாயனை அடியான் ஏவுங் காரியம் மிகநன்று. இப்படிச் செய்பவன் தொண்டனாம்! இது என்ன பாவம்! பொறுக்கவொண்ணாத இந்தப் பெரும் பாதகத்தைக் கேட்டும் உயிரோடிருக்கிறேனே" என்றார். "ஒருவன் பெண்ணாசைமேலீட்டினால் ஏவ ஒப்பில்லாத கடவுள் தூதராய் ஓரிரவு முழுதும் போக்கு வரவு செய்து உழன்றாராம். அரிபிரமேந்திராதி தேவர்களாலும் அறியப்படாத கடவுள் இசைந்தாராயினும், அவன் அவரை ஏவலாமா? இதற்கு மனநடுங்காத அந்தத் துரோகியை நான் காணு நாள் எந்நாளோ! பெண்பொருட்டுக் கடவுளை இரவிலே தூதனுப்பிய பாதகனைக் காண்பேனாயின் யாது சம்பவிக்குமோ" என்று சொல்லி மிகச் செற்றங் கொண்டிருந்தார்.

சுந்தரமூர்த்திநாயனார் அதனைக் கேள்வியுற்று அடியார்க் கெளியாராகிய பரமசிவனுக்கு விண்ணப்பஞ்செய்ய; பரமசிவன் இருவரையும் கூட்டுதற்குத் திருவுளங்கொண்டு, கலிக்காம நாயனாரிடத்திலே சூலைநோயை ஏவ; அது அக்கினியிலே காய்ச்சப்பட்ட வேல்குடைதல்போல மிக்கவேதனை செய்ய; கலிக்காமநாயனார் அதனால் மிகவருந்தி வீழ்ந்து, உயிர்த்துணையாகிய பரமசிவனுடைய திருவடிகளைச் சிந்தித்துத் துதித்தார். அப்பொழுது பரமசிவன் அவரிடத்தில் எழுந்தருளி, "சுந்தரனாலன்றி இந்நோய் தீராது" என்று அருளிச்செய்ய; அவர் "எம்பெருமானே! பரம்பரையாகத் தேவரீரே மெய்க்கடவுளென்று துணிந்து தேவரீருக்குத் திருத்தொண்டுகள் செய்து வருகின்ற குடியிலுள்ளேனாகிய என்னை வருத்துகின்ற சூலைநோயை, நூதனமாக ஆண்டுகொள்ளப்பட்ட ஒருவனா வந்து தீர்ப்பான். அவனாலே தீர்க்கப்படுதலிலும் தீராதொழிந்து என்னை வருத்துதலே நன்று. தேவரீர் செய்யும் பெருமையை அறிந்தவர் யாவர்! வன்றொண்டனுக்கு ஆகும் உறுதியையே செய்யும்" என்றார். உடனே பரமசிவன் அவர்முன்னே மறைந்து, "சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திற்சென்று, "நம்முடைய ஏவலாலே கலிக்காமனை வருத்துகின்ற சூலையை நீ போய் தீர்ப்பாய்" என்றார். சுந்தரமூர்த்திநாயனார் அதைக் கேட்டு திருவுள மகிழ்ந்து, கலிக்காமநாயனாரிடத்திற்குப் போம்படி தீர்ப்பாய்" என்றார். உடனே பரமசிவன் அவர்முன்னே மறைந்து, சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திற்சென்று, "நம்முடைய ஏவலாலே கலிக்காமனை வருத்துகின்ற சூலையை நீ போய்த் தீர்ப்பாய்" என்றார். சுந்தரமூர்த்திநாயனார் அதைக்கேட்டு திருவுள மகிழ்ந்து, கலிக்காமநாயனாரிடத்திற்குப் போம்படி புறப்பட்டு, சூலை தீர்க்கும்படி தாம் வருஞ் சமாசாரத்தை அவருக்குத் தெரிவித்தற்கு முன்னே ஆள் அனுப்பினார். அவ்வாளினாலே சுந்தரமூர்த்திநாயனாருடைய வரவை அறிந்த கலிக்காமநாயனார் "எம்பெருமானைத் தூதனுப்பியவன் சூலை நோய் தீர்த்தற்கு வந்தால் நான் செய்வது என்னாம்! அவன் இங்கே வந்து தீர்த்தற்கு முன்னே இச்சூலையை வயிற்றினோடுங் கிழிப்பேன்" என்று உடைவாளினாலே தம் வயிற்றைக் கிழித்துக்கொண்டு இறந்துபோனார். அது கண்ட அவர் மனைவியாரும் அநுமரணஞ்செய்யப் புகுந்தார். அப்போது 'சுந்தரமூர்த்திநாயனார் சமீபத்தில் எழுந்தருளி வந்துவிட்டார்" என்று முன் வந்தோர் சொல்ல; மனைவியார் "ஒருவரும் அழாதொழிக" என்று சொல்லி, பின்பு தம்முடைய நாயகரது செய்கையை மறைத்து, சுந்தரமூர்த்தி நாயனாரை எதிர்கொள்ளும் பொருட்டுத் தங்கள் சுற்றத்தார்களை ஏவ; அவர்கள் போய் எதிர்கொண்டு வணங்கினார்கள்.

சுந்தரமூர்த்திநாயனார் அவர்களுக்கு அருள்செய்து வந்து, கலிக்காமநாயனார் வீட்டிற்புகுந்து, ஆசனத்தில் எழுந்தருளியிருந்து, தமக்குச் செய்யப்பட்ட அருச்சனைகளை ஏற்றுக் கொண்டு, "கலிக்காமநாயனாருடைய சூலையை நீக்கி அவருடன் இருத்தற்கு மிக வருந்துகின்றேன்" என்றார். அப்பொழுது மனைவியாரது ஏவலால் வீட்டுவேலைக்காரர் வணங்கி, நின்று, "சுவாமீ! அவருக்குத் தீங்கு ஒன்றும் இல்லை உள்ளே பள்ளி கொள்கின்றார்" என்று விண்ணப்பஞ்செய்ய; "சுந்தரமூர்த்திநாயனார் தீங்கும் ஒன்றும் இல்லை என்றீர் ஆயினும், என் மனந்தெளிந்திலது. ஆதலால் அவரை நான் காணல் வேண்டும்" என்றார். அவர்கள் அது கேட்டு, கலிக்காம நாயனாரைக்காட்ட, சுந்தரமூர்த்திநாயனார் இரத்தஞ் சோரக் குடர் சொரிந்து உயிர் பொன்றிக் கிடந்தவரைக் க்ண்டு "புகுந்தவாறு ந்னறு. நானும் இவர்போல இறந்து போவேன்" என்று சொல்லி உடைவாளை எடுத்தார். உடனே பரமசிவனது திருவருளினால் கலிக்காமநாயனார் உயிர்த்து எழுந்து அவர்கையில் வாளைப் பிடித்துக்கொள்ள; அவர் விழுந்து நமஸ்கரித்தார். கலிக்காமநாயனாரும் சுந்தரமூர்த்திநாயனாரை நமஸ்கரித்தார்.

அதன்பின் இருவரும் அதிக நண்புள்ளவர்களாகித் திருப்புன்கூருக்குப் போய் சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு, சிலநாட் சென்றபின்பு, திருவாரூரை அடைந்தார்கள். கலிக்காமநாயனார் சிலநாள் அங்கே சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்து, பின்பு சுந்தரமூர்த்திநாயனாரிடத்தில் அநுமதி பெற்றுகொண்டு, தம்முடைய ஊருக்குத் திரும்பிவந்து, திருத்தொண்டு செய்து கொண்டிருந்து, சிவபதம் அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்

 


ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

1. ஞானமும் பக்தியும்

ஆத்மிக வளர்ச்சிப் படியேற்றத்தின் இறுதிக்கட்டமாகச் சைவஞான சாஸ்திரங்களால் அறிவுறுக்கப்படுவது சிவப்பேறாகும். குருவருளால் ஆத்மாவானது தன்னுண்மையும் தனக்குள்ளுயிராயிருக்குஞ் சிவத்தினுண்மையும் அத்துவித இயைபுநிலையில்வைத் துணர்த்தப்பட்டபோது அவ்வான்மா அதையே அறியும் நெறியில் அழுந்தி நின்று குருகாட்டிய குறிவழியே பஞ்சாக்கரசாதனை பண்ணி அதன்மூலம் தன்னுள்ளிருக்குஞ் சிவனோடு ஏகனாய்த் தன்னைப் பாவித்தலாகிய சிவோகம்பாவனை மூலம் பெறும் அநுபவத்தின் வழியாகச் சிவனை விடாமற் பற்றிநிற்கும் நிலை - "இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே" என நிற்கும் நிலை சிவப் பேறுற்ற நிலையாகும். அந்நிலையில் சிவம் தனது அளவிறந்த பேரருட் பிரகாசத்தில், சிவபரத்துவ விலாசமாகிய தன்னுண்மை முழுவதையும் உயிர்க்குக் காட்டிக் கண்டுநிற்கும் உபகாரம் நிகழுமென்பர், உடலிலிருக்கும் உயிரானது ஒளியின் பிரகாசத்தில் உலகப் பொருளியல்புகளைக் கண்ணுக்குக் காட்டித் தான் கண்டு நிற்றல் போல்வது இதுவாகும். அது முதனூலாகிய சிவஞான போதத்தில், "காணுங் கண்ணுக்குக் காட்டுமுளம்போற் காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்" எனவும் வழிநூலாகிய சிவஞான சித்தியாரில், ஏயுமுயிர் கண்ணுக்குக் காட்டிக்கண் டிடுமாபோல் ஏசனுயிர்க் குக்காட்டிக் கண்டிடுவன்" எனவும் திருமந்திரத்தில், "காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்" எனவும் வரும். அங்ஙனங் காட்டிக் காணுதலாகிய சிவத்தின் உபகாரம் உயிர்க்குச் சுத்தநிலையாகிய அந்நிலையில்மட்டுமல்ல அந்நிலைக்குமுன் நிலையாகிய பெத்தநிலையிலும் அதற்குத் தெரியாமல் இருந்தே தீர்ந்தமை, "காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே" என்பனவாதி திருமுறைகளால் அறியவருகின்றவாறு, அப்போதைய பராசக்தி விளக்க நிலையில் உயிர்க்கு விளங்கியே தீரும். ஆதலால், எந்நிலையிலுந் தனக்குச் சிவத்தின் இன்றியமையாமையும் காரணமின்றியே தனக்குபகரித்துவரும், சிவத்தின் அநாதிமுறையான பரமோபகாரத்தன்மை மகிமையும் பற்றிய இனிமை உணர்வு பொங்கிப் பெருகுவதோர் அன்புநிலை உளதாகும். அது, குறித்த சிவஞான போதச் சூத்திரத்தில், "காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் செலுமே" என வருதலா லறியப்படும். இந்நிலைக்கு முன்நிலையான பெத்தநிலையிலும் உயிர்க்கு அன்புண்டன்றோ எனின் அது அந்நிலையில் உயிரைப் பீடித்த மலகன்மங் காரணமாக, இறைவன் அதைப் பாசத்திற் பற்றுவித்தல் ஆகிய உபகாரவகையால் நிகழ்வதாகி உடலுயிர் வாழ்க்கைத் தேவைக்கான சாதனங்களின் இன்றியமையாமையும் மகிமையும் பற்றிய இனிமையுணர்வாகிய அன்பு மாத்திரமாய் அவ்வப்போதைய தேவையளவிற் கண்டப்படும் ஏகதேச அன்பாய் ஒழிவதன்றி மெய்ப்பொருளாகிய சிவத்தின் இன்றியமையாமையும் மகிமையும் பற்றிய அளவிறந்த, நிலையான இனிமையுணர்வாதல் இன்மையின் அது பொய்யன் பெனப்படுவதன்றி இதுபோல் மெய்யன்பெனப் படுமாறில்லையாகும். இம்மெய்யன்பு அதிசய தரமான இனிமையுணர்வு பற்றியதாதல் தேவாரத்தில், "கனியினுங் கட்டிபட்ட கரும்பினும் பனிமலர்க்குழற் பாவைநல்லாரினும் தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன் தன்னடைந்தார்க்கிடைமருதனே" - "என்னி லாரும் எனக்கினியாரில்லை என்னினும் மினியானொருவன்னுளன் என்னுளே யுயிர்ப்பாய்ப் புறம்போந்து வந்தென்னுளே நிற்கும் இன்னம் பரீசனே" எனவும் திருவாசகத்தில், "தேனே யமுதே, கரும்பின் தெளிவே தித்திக்கு மரனே" - "வினையேன்மனத்தே தேனையும் பாலையுங் கன்னலையும் அமுதத்தையு மொத்தூனையும் என்பினையும் உருக்காநின்ற உண்மையனே" - "நெல்லிக்கனியைத் தேனைப் பாலை நிறையின்னமுதை அமுதின் சுவையைப் புல்லிப்புணர்வ தென்று கொலோ" எனவும் வருவனவற்றாலும் அன்பென்பது அவ்வினிமைக்கு வேறுபடாமை "ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே" என வருவது போல்வனவற்றாலும் பெறப்படும்.

இங்ஙனஞ் சிவனருளொளியிற் சிவபரத்துவ விலாசம் முழுவதையுங் கண்டுகொண்டிருக்கும் ஆன்ம விளக்கம் ஞானம் எனவும் அதன்வழி உயிருணர்விற் பட்டுருகும் உணர்வுருக்கம் அன்பெனவும்படுமாகலின் ஞானமும் பக்தியும் சிவப்பேறுடையார் அனைவர்க்கும் பொதுவெனவே கொள்ளப்படும். அங்ஙனமாகவும் ஞானமும் பக்தியும் ஒன்றோடொன் றொட்டாத இருவேறு துருவங்கள் எனவும் ஞானம் என்பது குருவருளாற் சித்திக்கும் நூலறிவு சார்ந்த மெய்ப்பொருள் விளக்கமாக, பக்தியென்பது தவவிசேடத்தால் தானே வாய்க்கும் உள்ளுணர்வுருக்க மாதல், "பண்டை நற்றவத்தாற்றோன்றிப் பரமனைப் பத்திபண்ணுந் தொண்டர்" எனவருஞ் சிவஞான சித்தியார் கூற்றால் தெளியப்படுமெனக் கொள்ளுநரும் உளரன்றோ வெனின், முன் திருஞான சம்பந்த மூர்த்திநாயனார் புராண சூசனத்திற் கண்டதன்மூலம் ஞானம் என்பது நூலறிவு கடந்த பராசக்தி விளக்கமாதல் தெளிவாகலினாலும், "நூலே நுழைவரியான்" எனத் திருவாசகத்தும் "நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக" என அற்புதத் திருவந்தாதியினும் வருவனவற்றால் நூலறிவு ஞானத்தில் முக்கியத்துவம் பெறாமை அறியப்படுதலானும் மேற்குறித்த சிவஞானபோதமும் அதன் வழிநூல் சார்பு நூல்களும் ஞானம் பக்தி என்பவற்றின் அந்தரங்க இயைபைக் காரண காரிய ரீதியிற் காட்டுதலானும் பண்டை நற்றவத்தாற்றோன்றிப் பரமனைப் பத்தி பண்ணுந்தொண்டராவார் முற்பிறப்பில் ஞானம் முற்றுப்பெற்றோரென்பது அவர்க்கு வழங்குஞ் சாமுசித்தர்-சம்சித்தர்-நல்ல-பூரண-சித்தியுற்றவர்-என்ற பெயரானே விளங்கக் கிடத்தலினாலும் அவர் கருத்து நிலையிலதாம் என்க.

2. பக்தியின் மாண்பருமை

மேற்கண்டவாறு மெய்ஞ்ஞான முற்றார்க்குப் பக்தி பொதுவாயினும் அவரவர் ஆன்ம எழுச்சியின் அந்தரங்க சுபாவத்தைப் பொறுத்து ஒருவர் பக்தி மற்றவர் பக்தி போலில்லாமை, திருத்தொண்டர் புராண வரலாறுகளில் வைத்தறியப்படும். "தந்தம் பெருமைக்களவாகிய சால்பினிற்கும் எந்தம் பெருமக்களை யாவர் தடுக்க வல்லார்" என மூர்த்தி நாயனார் புராணத்தில் வருவதனால் அது வலுவுறும். அவரவர் அன்புள்ளவீறு நின்ற அளவு எவ்வளவோ அவ்வளவு அவரவர் பக்தியின் உச்சவரம் பென்பதும் அவர் பாங்கில் என்றும் பிரசன்னமாய் நின்று அவர்க்கருளுஞ் சிவனேயன்றி மற்றெவரும் அவரவர் பக்திநிலையை மதிப்பிட்டுக் கொள்ள முடியாதென்பதும் திருத்தொண்டர் புராண உண்மைகளாதலுங் கண்கூடாம். அது, எறிபத்த நாயனார் புராணத்தில், ஆளுடைத்தொண்டர் செய்த ஆண்மையுந் தம்மைக் கொல்ல வாளினைக் கொடுத்து நின்ற வளவனார் பெருமைதானும் நாளுமற் றவர்க்குநல்கும் நம்பர்தா மளக்கினன்ற நீளுமித் தொண்டின் நீர்மை நினைக்கிலார் அளக்க வல்லார்" எனவரும். இனி, சிவபரம் பொருள் அவரவர் பக்திப்பேறாக முத்திப்பே றளிக்கும் வகையிலும் ஒரு சாரார்க்கு அவர் அந்தரங்கத்தில் நின்றளிப்பதாகிய சாமானியத் தன்மையும் ஏனையர்க்கு அவர் அன்புள்ள வீற்றின் உயர்மட்டத் தொழிற்பாடு களைகட்டும் அவசரத்தில் அதுவே சார்பாகப் பகிரங்கத்தில் வெளிப்பட்டு நின்றருளி உடனடியாகவோ சற்றுப் பின்னாகவோ வீடுபேறருளும் விசேடத் தன்மையும் அச்செய்திகளால் அறிய வருவனவாம். இத்தகைய அன்புள்ள வீற்றின் உயர்மட்டத் தொழிற்பாடுகளைக் கொள்ளநின்றோர், மற்றியாரும் நினைத்தும் பார்த்தற்கியலாத வகையில் உடற்கிறுதி விளையுமளவுக்குத் தம்மை வருத்தியும், ஞானசார வரம்புக்கு அதீதமென யாரும் மதிக்கக்கூடிய தொண்டுநெறிச் செயல்களில் அதி உத்வேகங் கொண்டு அழுந்தி நின்றும் தத்தம் மிலக்கைச் சாதித்த வீரதீரர்கள் ஆகின்றார்கள். "ஆரங்கண்டிகை ஆடையுங் கந்தையே பாரமீசன் பணியலதொன்றிலார் ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் வீரமென்னால் விளம்புந் தகையதோ" என்ற சேக்கிழார் திருவாக்குங் காணத்தகும். துணிதுவைக்குங் கல்லில் தம் தலையையே மோதியுடைக்கும் வகையால் ஆன வன்செயலால் தாம் உயிரெனப் பேணிவந்த தொண்டர் தொழும்புறுதியின் உச்சவரம்பில் நின்ற திருக்குறிப்புத் தொண்டநாயனாரும் சிவநைவேத்தியத்திற்கென நியதிப்படி தாம் எடுத்துச்சென்ற திரவியங்கள் நிலப்பிளப்பிற் சிந்துண்டு போகத் தம்மிடற்றில் அரிவாளைப் பூட்டி அரிந்த வன்செயலால் உடனடியாகவே அவை சிவநைவேத்தியமாகப் பெற்றுத் தம்மிலக்கை நிறைவேற்றிய அரிவாட்டாயனாரும் தம் நியதியான மாகேசுர பூசைத் தொண்டுக்குத் தம்வறுமை குறுக்கீடாகவே வேறோர் வழியுங் காணாது சூதாடிப் பொருளீட்டுகையில் தமது வரவை வீண்வாதத்தினால் தடுக்க முயல்வாரைச் சினந்து உடைவாளுருவிக் குற்றியும் அதனைப்பெறும் வன்செயலாற் பெற்ற பொருள் கொண்டும் தம் நியதிவழுவா இலட்சியத்தை நிறைவேற்றியுள்ள மூர்க்கநாயனாரும் போல்வார் அவ்வகையினராவர். அது திருக்களிற்றுப்படியாரில், "கல்லிற் கமரிற் கதிர்வாளிற் சாணையினில் வல்லுப்பலகையில் வாதனையைக் கொல்லும் அகமார்க்கத்தாலவர்கள் மாற்றினர்காண் ஐயா சகமார்க்கத் தாலன்றே தான்" என வரும். இங்கு அக மார்க்கம் என்பது, சிவனளவில் ஒரு வழிப்பட்ட கருத்தினராய் அதாவது, தம்முனைப்புச் சற்றுமின்றிச் சிவமேதாம் எனவும் ஏதொன்றுஞ் செய்வது சிவத்தின் பொருட்டன்றித் தம்பொருட்டன்றெனவும் நிற்குங் கருத்தினராதல் என்றாகும். இவ்வகையிற் செயலுஞ் சிவனது செயற்பலனுஞ் சிவனுக்கே என ஆதலால் காரணவகையிலாவது காரியவகையிலாவது செயல் தோஷம் தம்மைச் சாராதொழியப் பெறுதலும் செய்வானும் பலன் பெறுவானுஞ் சிவனே யாதலால் தமக் காகவேண்டும் வீட்டின்பப் பேறுந் தடையுறாதிருக்கப் பெறுதலும் அவர்க்குப்பலனா மென்க. அது, அதே திருக்களிற்றுப் படியாரில், "செய்யுஞ் செயலே செயலாகச் சென்று தமைப் பையக் கொடுத்தார் பரங்கெட்டார் ஐயா உழவுந் தனுசும் ஒருமுகமே யானால் இழவுண்டோ சொல்லாயினி" எனவும் "செய்தற்கரிய செயல்பலவுஞ் செய்துபலர் எய்தற் கரியதனை எய்தினார். ஐயோநாம் செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச் செய்யாமை செய்யாதவாறு" எனவும் வருவனவற்றாற் புலனாகும். இங்கு செய்யாமை செய்தலாவது எது செய்த போதிலுந் தான் செய்ததாகத் தன்னுணர்வுப் பதிவில் இடம் பெறாதிருக்கப் பெறுவதோர் நிலையாம்.

3. பக்தியின் பரவசாவேசநிலை

மேற்குறிக்கப்பட்ட பக்தர்களில் ஒருவராகிய ஏயர்கோன் கலிக்காமநாயனார் தம் உடைவாளினால் தமது வயிற்றைத் தாமே குற்றிக் கிழித்து, சிவமகிமை நோன்மையின்பால் தமக்கு அதிசயகரமாயெழுந்து விளாசிய அன்புள்ள வீற்றின் உயர்மட்டக் களை தட்ட நின்று தம் வாதனையைக் கொன்ற அகமார்க்கத்தர் ஆகத் திகழ்கின்றார். அது மேற்கண்ட திருக்களிற்றுப்படியார்ச் செய்யுளில், கதிர்வாளில் - வாதனையைக் கொல்லும் அகமார்க்கத்தால் மாற்றினர் என வந்திருத்தல் காண்டும். இந்த நாயனார் திருப்புன்கூர்த் திருக்கோயிலுக்கு ஒருதரம்போல் இருதரம் பன்னிருவேலி நிலங்கொடுத்த சிவதன்ம மஹாசீலரும் சிவனது பரமாப்தமான மகிமை நோன்மைகளிற் பட்டுணரும் பேருணர்வும் அந்நிலையில் அபாரமான உறுதித்திறனும் வாய்ந்திருந்த மஹோத்தமருமாவர். அது, கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்தில், "பொன்னம் பலத்துறை புண்ணிய னென்பர் புயன்மறந்த கன்னன்மை தீரப்புனிற்றுக் கலிக்காமற் கன்று புன்கூர் மன்னு மழைபொழிந் தீரறு வேலிகொண் டாங்கவற்கே பின்னும் மழைதவிர்த் தீரறு வேலிகொள் பிஞ்ஞகனே" எனவும் திருத்தொண்டர் புராணத்தில், பெருங்கொடையுந் திண்ணனவும் பேருணர்வுந் திருத்தொண்டால் வரும்பெருமைக் கலிக்காமனார்" எனவும் சுந்தரர் தேவாரத்தில் "வையகம் முற்றும் மாமழை துறந்து வயலில் நீரிலை மாநிலந் தருகேம் உய்யக்கொள்கமற் றெங்களை யென்ன ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெய்யுமாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண்டருளுஞ் செய்கைகண்டுநின் திருவடியடைந்தேன் செழும்பொழிற்றிருப் புன் கூருளானே" எனவும் வருவன வற்றாற் பெறப்படும். அவர்தம் பேருணர்வின் திண்மைநிலையைப் பதம்பார்க்க வந்தது போல் சுந்தரமூர்த்திநாயனார் சிவபிரானைப் பரவைபால் தூதனுப்பிய செய்தி அவர் செவிக்கெட்டிவிடுகிறது. கேட்டமாத்திரத்தே, சொரியும் நெய்க்கெதிர் பொங்கிச் சுவாலித்தெழும் அக்கினிச் சுவாலை போன்று மூண்டெழுந்து சிவமகிமை நோன்மையின் பெருமை பேணும் நாயனாரது அன்புள்ளவீறு தன் உச்சவரம்பையெட்டுங் களைதட்டி விடுகிறது. அது, "நம்பியாரூரர் நெஞ்சினடுக்கமொன்றின்றி நின்று தம்பிரானாரைத் தூது தையல்பால்விட்டா ரென்னும் இம்பரின் மிக்கவார்த்தை யேயர்கோனார்தாங் கேட்டு வெம்பினாரதிசயித்தார் வெருவினார் விளம்பலுற்றார்" - "நாயனை அடியானேவுங் காரியம் நன்று சால ஏயுமொன்றிதனைச் செய்வான் தொண்டனாமென்னே பாவம் பேயனேன் பொறுக்கவொண்ணாப் பிழையினைச் செவியார் கேட்ப தாயின பின்னும் மாயா திருந்ததென் ஆவியென்பார்" - "நம்பர்தா மடியாராற்றாராகியே நண்ணினாரேல் உம்பரார்கோனும் மாலு மயனுநேருணரவொண்ணா எம்பிரானிசைந்தாலேவப் பெறுவதே யிதனுக்குள்ளங் கம்பியாதவனை யான்முன் காணுநா ளெந்நா ளென்று" எனவருஞ் சேக்கிழார் செய்யுள்களானறியப்படும். இங்ஙனம் கனன்றெழுந்து பொங்கும் நாயனார் அன்புள்ள வீறாகிய அக்கினிச் சுவாலையானது, "அவனை வரவெதிர் காண்பேனாகில் வருவதென்னாங்கொல்" என்ற பகைமைப் பொறியையுங் கக்கத் தயங்கவில்லை.

சிவனையுஞ் சிவனடியாரையும் பற்றிக் குறை கூறுவதோ அவர்மேற் குற்றஞ் சுமத்துவதோ அபத்தம் என்ற ஞானாசார வரம்பை மீறி, சிவனடியாரை வணங்காது செல்லும் நம்பியாரூரன் அடியார்க்குப் புறகு அவனையாண்ட சிவனும் அடியார்க்குப்புறகு என அன்றொருகாற் சினந்த விறன்மிண்டநாயனார் போல, எச்செயலாயினும் சிவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டமட்டில் அதுசரியே என்னும் ஞானாசாரவரம்பை மீறிநின்று இந்த நாயனாரும் சுந்தரர் செயலைக் கண்டித் தொதுக்குகின்றார். அதைக் கேள்வியுற்ற சுந்தரர் தம் பெருந்தன்மையால் பிழையுடன்பட்டுக் கொண்டபோதும் தம் செற்றந்தணிந்திலர். மேல் சிவபிரான் அவர் செற்ற நிலையைத் தணிவிக்கும் ஒருவகை உபாயமாக அவர்பாற் சூலை நோயை ஏவியபோதும் அதனாலும் தணிந்திலர். மேல், சிவனை மறவாச்சீலத்துடன் சூலை தீர்த்தருளுமாறு அவர் தாமாகவே சிவனை வேண்டிக்கொள்ளச் சிவன் வந்து தோன்றி "இது வன்றொண்டனாலன்றித் தீராது" என்ற போதும் நோய்தீரப் பெறுவதைவிடத் தம் உறுதி சலிக்காது நிற்றலே மேன்மையெனுங் கருத்தால், பரம்பரை யடியனான என்னைப் பற்றிய சூலை புத்தடியனான வன்றொண்டனாலா தீர்தற்பாலது, அவன் தீர்க்கத் தீர்வதைவிட அது கிடந்தென்னை வருத்துவது நன்று என எதிர்மொழிந்து நிராகரித்திருக்கின்றார். இறுதியில், சிவனாணைப்படி சுந்தரர் நோய்தீர்க்க விரைந்துவருஞ்செய்தி கேட்டமாத்திரத்தே தம் உறுதி வழிநிற்கும், உத்வேகந் தலைக்கொள்ளத் தம்மைத் தாமே மாய்த்துக் கொள்கின்றார். இத்தனையும் ஒருகாலைக்கொருகால் அதிகரித்துவந்த அவர் பத்தியுறுதியின் சார்பான பரவச ஆவேச நிலைகளாதல் வெளிப்படை மேல் இதே நாயனார் உயிரற்றுக் கிடப்பக் கண்ட சுந்தரர் அவருடைய உடைவாளாலேயே தம்மையும் அவர்நிலைக்காக்கிவிடத் துணிந்தபோது சிவனருளால் உயிர்த்தெழுகையில், அவர் அக்கணம் வரை தமக்கு நச்சுப் பகையாகக் கொண்டிருந்த சுந்தரரை இனிய நண்பராக ஏற்றுத் தழுவிக்கொண்டவா றென்னையெனின், அது அவர் உயிர்த்தெழ அருளும்போது அவரை மாற்றிப் பிறக்க அருளிவிட்ட திருவருள் மகிமையின் வெளிப்பாடாம் என்க.

"நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே" எனத்தம் உறுதி சலிக்காது நின்றும் அதன் சார்பில் தம்மைப்பிடித்த வெப்பினுக்காற்றாது தோல்விகண்டுள்ள நக்கீரரின் அறிவு நெறிவீறுபோலாது, வன்றொன்டனை அங்கீகரிப்பதில்லை என்ற தமது உறுதிநிலை அதன் சார்பில் நேர்ந்தசூலை நோயினாலுந் தளராது நின்று வெற்றிபெறக் கொண்ட இந்நாயனாரது பக்தி நெறிவீற்றின் மகிமை இருந்தவாறென்னே!

திருச்சிற்றம்பலம்.

See Also: 
1. ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. EyarkOn kalikkAma nAyanAr purANam in English prose 
3. Eyarkone Kalikkama Nayanar Puranam in English Poetry 

 


Related Content

63 Nayanmar Drama- ஏயர்கோன் கலிக்காம நாயனார் - தமிழ்நாடகம்

The Puranam of Eyarkone Kalikkama Nayanar

The History of Manakkanychara Nayanar

The history of Eyarkon kalikkama Nayanar