logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

தாயுமானவர் பாடல்கள் பகுதி-3

(43 - 56)


43. பராபரக்கண்ணி

 
சீராருந் தெய்வத் திருவருளாம் பூமிமுதல்

பாராதி யாண்ட பதியே பராபரமே. 1.

 

கண்ணாரக் கண்டோர் கருப்பொருள்கா ணாமலருள்

விண்ணூ டிருந்தஇன்ப வெற்பே பராபரமே. 2.

 

சிந்தித்த எல்லாமென் சிந்தையறிந் தேயுதவ

வந்த கருணை மழையே பராபரமே. 3.

 

ஆரா அமுதே அரசே ஆனந்தவெள்ளப்

பேராறே இன்பப் பெருக்கே பராபரமே. 4.

 

ஆரறிவார் என்ன அனந்தமறை ஓலமிடும்

பேரறிவே இன்பப் பெருக்கே பராபரமே. 5.

 

உரையிறந்த அன்பருளத் தோங்கொளியா யோங்கிக்

கரையிறந்த இன்பக் கடலே பராபரமே. 6.

 

எத்திக்குந் தானாகி என்னிதயத் தேயூறித்

தித்திக்கும் ஆனந்தத் தேவே பராபரமே. 7.

 

திக்கொடுகீழ் மேலுந் திருவருளாம் பொற்பறிந்தோர்

கைக்குள்வளர் நெல்லிக் கனியே பராபரமே. 8.

 

முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே

சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே. 9.

 

கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த

விண்ணேஆ னந்த வியப்பே பராபரமே. 10.

 

வாக்காய் மனதாய் மனவாக் கிறந்தவர்பால்

தாக்காதே தாக்குந் தனியே பராபரமே. 11.

 

பார்த்தஇட மெல்லாம் பரவெளியாய்த் தோன்றவொரு

வார்த்தைசொல்ல வந்த மனுவே பராபரமே. 12.

 

வானந்த மண்ணினந்தம் வைத்துவைத்துப் பார்க்கஎனக்(கு)

ஆனந்தம் தந்த அரசே பராபரமே. 13.

 

அன்பைப் பெருக்கிஎன தாருயிரைக் காக்கவந்த

இன்பப் பெருக்கே இறையே பராபரமே. 14.

 

வான்மெல் லாங்கொண்ட மௌனமணிப் பெட்டகத்துக்

கானபணி யான அணியே பராபரமே. 15.

 

ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள்

நாடும் பொருளான நட்பே பராபரமே. 16.

 

சித்த நினைவுஞ் செயுஞ்செயலும் நீயெனவாழ்

உத்தமர்கட் கான உறவே பராபரமே. 17.

 

போதாந்தப் புண்ணியர்கள் போற்றிசய போற்றியெனும்

வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே. 18.

 

முத்தாந்த வீதி முளரிதொழும் அன்பருக்கே

சித்தாந்த வீதிவருந் தேவே பராபரமே. 19.

 

ஈனந் தருமுடலம் என்னதுயான் என்பதற

ஆனந்தம் வேண்டி அலந்தேன் பராபரமே. 20.

 

என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்துகரைந்து

அன்புருவாய் நிற்க அலந்தேன் பராபரமே. 21

 

சுத்த அறிவாய்ச் சுகம்பொருந்தின் அல்லால்என்

சித்தந் தெளியாதேன் செய்வேன் பராபரமே. 22.

 

மாறா அனுபூதி வாய்க்கின்அல்லால் என்மயக்கந்

தேறாதென் செய்வேன் சிவமே பராபரமே. 23.

 

தாகமறிந் தின்பநிட்டை தாராயேல் ஆகெடுவேன்

தேகம் விழுந்திடின்என் செய்வேன் பராபரமே. 24.

 

அப்பாஎன் எய்ப்பில் வைப்பே ஆற்றுகிலேன்போற்றிஎன்று

செப்புவதல் லால்வேறென் செய்வேன் பர்ரபரமே. 25.

 

உற்றறியும் என்னறிவும் உட்கருவி போற்சவிமாண்

டற்றும்இன்பந் தந்திலையே ஐயா பராபரமே. 26.

 

சொல்லால் அடங்காச் சுகக்கடலில் வாய்மடுக்கின்

அல்லால்என் தாகம் அறுமோ பராபரமே. 27.

 

பாராயோ என்னைமுகம் பார்த்தொருகால் என்கவலை

தீராயோ வாய்திறந்து செப்பாய் பராபரமே. 28.

 

ஓயாதோ என்கவலை உள்ளேஆ னந்த வெள்ளம்

பாயாதோ ஐயா பகராய் பராபரமே. 29.

 

ஓகோ உனைப்பிரிந்தார் உள்ளங் கனலில்வைத்த

பாகோ மெழுகோ பகராய் பராபரமே. 30.

 

கூர்த்தஅறி வத்தனையுங் கொள்ளைகொடுத் துன்னருளைப்

பார்த்தவன்நான் என்னைமுகம் பாராய் பராபரமே. 31.

 

கடலமுதே தேனேயென் கண்ணே கவலை

படமுடியா தென்னைமுகம் பார்நீ பராபரமே. 32.

 

உள்ளம் அறிவாய் உழப்பறிவாய் நான்ஏழை

தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே. 33.

 

கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போலஎனக்

கென்றிரங்கு வாய்கருணை எந்தாய் பராபரமே. 34.

 

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிஎண்ணி ஏழைநெஞ்சம்

புண்ணாகச் செய்ததினிப் போதும் பராபரமே. 35.

 

ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும் உன்னடிமை

பாழில் திரிவதென்ன பாவம் பராபரமே. 36.

 

கற்றஅறி வால்உனைநான் கண்டவன்போற் கூத்தாடில்

குற்றமென்றென் நெஞ்சே கொதிக்கும் பராபரமே. 37.

 

ஐயோ உனைக்காண்பான் ஆசைகொண்ட தத்தனையும்

பொய்யோ வெளியாப் புகலாய் பராபரமே. 38.

 

துன்பக்கண் ணீரில் துளைந்தேற்குன் ஆனந்த

இன்பக்கண் ணீர்வருவ தெந்தாள் பராபரமே. 39.

 

வஞ்சனையும் பொய்யும்உள்ளே வைத்தழுக்கா றாயுளறும்

நெஞ்சனுக்கும் உண்டோ நெறிதான் பராபரமே. 40.

 

பாசம்போய் நின்றவர்போற் பாராட்டி யானாலும்

மோசம்போ னேன்நான் முறையோ பராபரமே. 41.

 

நன்றறியேன் தீதறியேன் நானென்று நின்றவனார்

என்றறியேன் நான்ஏழை என்னே பராபரமே. 42.

 

இன்றுபுதி தன்றே எளியென் படுந்துயரம்

ஒன்றும்அறி யாயோ உரையாய் பராபரமே. 43.

 

எத்தனைதான் சன்மமெடுத் தெத்தனைநான் பட்டதுயர்

அத்தனையும் நீயறிந்த தன்றோ பராபரமே. 44.

 

இந்தநாள் சற்றும் இரங்கிலையேற் காலன்வரும்

அந்தநாள் காக்கவல்லார் ஆர்காண் பராபரமே. 45.

 

உற்றுற்று நாடி உளம்மருண்ட பாவியைநீ

சற்றிரங்கி ஆளத் தகாதோ பராபரமே. 46.

 

எள்ளளவும் நின்னைவிட இல்லா எனைமயக்கில்

தள்ளுதலால் என்னபலன் சாற்றாய் பராபரமே. 47.

 

பாடிப் படித்துலகிற் பாராட்டி நிற்பதற்கோ

தேடி யெனையடிமை சேர்த்தாய் பராபரமே. 48.

 

சொன்னதைச் சொல்வதல்லாற் சொல்லறவென் சொல்லிறுதிக்

கென்னததைச் சொல்வேன் எளியேன் பராபரமே. 49.

 

சொல்லும் பொருளும்அற்றுச் சும்மா இருப்பதற்கே

அல்லும் பகலுமெனக் காசை பராபரமே. 50.

 

நேச நிருவிகற்ப நிட்டையல்லால் உன்னடிமைக்

காசையுண்டோ நீயறியா தன்றே பராபரமே. 51.

 

துச்சனென வேண்டாஇத் தொல்லுலகில் அல்லல்கண்டால்

அச்சம் மிகவுடையேன் ஐயா பராபரமே. 52.

 

கண்ணாவா ரேனும்உனைக் கைகுவியா ராயின் அந்த

மண்ணாவார் நட்பை மதியேன் பராபரமே. 53.

 

கொல்லா விரதங் குவலயமெல் லாம்ஓங்க

எல்லார்க்குஞ் சொல்லுவதென் இச்சை பராபரமே. 54.

 

எத்தாற் பிழைப்பேனோ எந்தையே நின்னருட்கே

பித்தானேன் மெத்தவுநான் பேதை பராபரமே. 55.

 

வாயினாற் பேசா மவுனத்தை வைத்திருந்துந்

தாயிலார் போல்நான் தளர்ந்தேன் பராபரமே. 56.

 

அன்னையிலாச் சேய்போல் அலக்கணுற்றேன் கண்ணார

என்னகத்தில் தாய்போல் இருக்கும் பராபரமே. 57.

 

உற்றுநினைக் கில்துயரம் உள்ளுள்ளே செந்தீயாய்ப்

பற்றநொந்தேன் என்னைமுகம் பார்நீ பராபரமே. 58.

 

பொய்யன் இவன் என்றுமெள்ளப் போதிப்பார் சொற்கேட்டுக்

கைவிடவும் வேண்டாமென் கண்ணே பராபரமே. 59.

 

எண்ண மறிந்தே இளைப்பறிந்தே ஏழைஉய்யும்

வண்ணந் திருக்கருணை வையாய் பராபரமே. 60.

 

நாட்டாதே யென்னையொன்றில் நாட்டி யிதமகிதங்

காட்டாதே யெல்லாம்நீ கண்டாய் பராபரமே. 61.

 

உன்னைநினைந் துன்நிறைவின் உள்ளே உலாவும்என்னை

அன்னைவயிற் றின்னம்அடைக் காதே பராபரமே. 62.

 

பரமுனக்கென் றெண்ணும் பழக்கமே மாறா

வரமெனக்குத் தந்தருள்என் வாழ்வே பராபரமே. 63.

 

வந்தித்து நின்னை மறவாக் கடனாகச்

சிந்திக்க நின்னதருள் செய்யாப் பராபரமே. 64.

 

எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி யிரங்கவும்நின்

தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே. 65.

 

வெட்டவெளிப் பேதையன்யான் வேறுகப டொன்றறியேன்

சிட்டருடன் சேர்அனந்த தெண்டன் பராபரமே. 66.

 

இரவுபக லற்றவிடத் தேகாந்த யோகம்

வரவுந் திருக்கருணை வையாய் பராபரமே. 67.

 

மால்காட்டிச் சிந்தை மயங்காமல் நின்றுசுகக்

கால்காட்டி வாங்காதே கண்டாய் பராபரமே. 68.

 

எப்பொருளும் நீயெனவே எண்ணிநான் தோன்றாத

வைப்பைஅழி யாநிலையா வையாய் பராபரமே. 69. 

 

சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென்

றெம்மா லறிதற் கெளிதோ பராபரமே. 70.

 

முன்னொடுபின் பக்கம் முடியடிநாப் பண்ணறநின்

தன்னொடுநான் நிற்பதென்றோ சாற்றாய் பராபரமே. 71.

 

மைவ்வண்ணந் தீர்ந்த மவுனிசொன்ன தெய்வண்ணம்

அவ்வண்ணம் நிட்டை அருளாய் பராபரமே. 72.

 

வித்தன்றி யாதும் விளைவதுண்டோ நின்னருளாஞ்

சித்தன்றி யாங்களுண்டோ செப்பாய் பராபரமே. 73.

 

ஆங்கார மற்றுன் அறிவான அன்பருக்கே

தூங்காத தூக்கமது தூக்கும் பராபரமே. 74.

 

சிந்தை அவிழ்ந்தவிழ்ந்து சின்மயமா நின்னடிக்கே

வந்தவர்க்கே இன்பநிலை வாய்க்கும் பராபரமே. 75.

 

சொல்லாடா வூமரைப்போற் சொல்லிறந்து நீயாகின்

அல்லால் எனக்குமுத்தி ஆமோ பராபரமே. 76.

 

பேச்சாகா மோனம் பிறவா முளைத்ததென்றற்

காச்சாச்சு மேற்பயனுண் டாமோ பராபரமே. 77.

 

கெட்டியென்றுன் அன்பர்மலங் கெட்டயர்ந்தோர் பூரணமாந்

தொட்டிலுக்குட் சேய்போல் துயின்றார் பராபரமே. 78.

 

காட்ட அருள்இருக்கக் காணா திருள்மலத்து

நாட்ட மெனக்குவரல் நன்றோ பராபரமே. 79.

 

எத்தன்மைக் குற்ற மியற்றிடினுந் தாய்பொறுக்கும்

அத்தன்மை நின்னருளும் அன்றோ பராபரமே. 80.

 

எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பமுண்டோ

சித்துருவே இன்பச் சிவமே பராபரமே. 81.

 

மண்ணொடுவிண் காட்டி மறைந்துமறையா அருளைக்

கண்ணொடுகண் ணாகஎன்று காண்பேன் பராபரமே. 82.

 

பஞ்சரித்து நின்னைப் பலகால் இரந்ததெல்லாம்

அஞ்ச லெனும்பொருட்டே அன்றோ பராபரமே. 83.

 

எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்

அங்கங் கிருப்பதுநீ அன்றோ பராபரமே. 84.

 

அனைத்துமாய் நின்றாயே யான்வேறோ நின்னை

நினைக்குமா றெங்கே நிகழ்த்தாய் பராபரமே. 85.

 

நின்போதத் தாலே நினைப்பு மறப்புமென்றால்

என்போதம் எங்கே இயம்பாய் பராபரமே. 86.

 

ஒன்றைநினைந் தொன்றைமறந் தோடுமனம் எல்லாம்நீ

என்றறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே. 87.

 

கொழுந்தில் வயிரமெனக் கோதறவுள் ளன்பில்

அழுந்துமவர்க் கேசுகமுண் டாகும் பராபரமே. 88.

 

பற்றும் பயிர்க்குப் படர்கொழுந்து போற்பருவம்

பெற்றவர்க்கே நின்னருள்தான் பேறாம் பராபரமே. 89.

 

யோகியர்க்கே ஞானம் ஒழுங்காம்பே ரன்பான

தாகியரும் யோகம்முன்னே சார்ந்தோர் பராபரமே. 90.

 

அல்லும் பகலும் அறிவாகி நின்றவர்க்கே

சொல்லும் பொருளுஞ் சுமைகாண் பராபரமே. 91.

 

எச்சிலென்று பூவை யிகழ்ந்தோர்க் குனைப்போற்றப்

பச்சிலையுங் கிள்ளப் ப்டுமோ பராபரமே. 92.

 

அந்தக் கரணம் அடங்கத் துறப்பதுவே

எந்தத் துறவினும்நன் றெந்தாய் பராபரமே. 93.

 

தன்னை அறிந்தால் தலைவன்மேற் பற்றலது

பின்னையொரு பற்றும்உண்டோ பேசாய் பராபரமே. 94.

 

அன்பாற் கரைந்துகண்ணீர் ஆறுகண்ட புண்ணியருக்

குன்பால் வரவழிதான் உண்டோ பராபரமே. 95.

 

தன்னை அறிந்தருளே தாரகமா நிற்பதுவே

உன்னை அறிதற் குபாயம் பராபரமே. 96.

 

கற்றகலை யால்நிலைதான் காணுமோ காண்பதெல்லாம்

அற்றவிடத் தேவெளியாம் அன்றோ பராபரமே. 97.

 

கண்மூடிக் கண்விழித்துக் காண்பதுண்டோ நின்னருளாம்

விண்மூடின் எல்லாம் வெளியாம் பராபரமே. 98.

 

நேரே நினதருளென் நெஞ்சைக் கவரின்ஒன்றும்

பாரேன் சுகமும் படைப்பேன் பராபரமே. 99.

 

வான்காண வேண்டின் மலையேற லொக்கும்உன்னை

நான்காணப் பாவனைசெய் நாட்டம் பராபரமே. 100.

 

வாதனைவிட் டுன்னருளின் மன்னினல்லால் வேறுமொரு

சாதனைதான் உண்டோநீ சாற்றாய் பராபரமே. 101.

 

பாரகமும் விண்ணகமும் பற்றாக நிற்பதருள்

தாரகத்தைப் பற்றியன்றோ சாற்றாய் பராபரமே. 102.

 

விளக்குந் தகளியையும் வேறென்னார் நின்னைத்

துளக்கமறச் சீவனென்று சொல்வார் பராபரமே. 103.

 

பாராதி நீயாப் பகர்ந்தால் அகமெனவும்

ஆராயுஞ் சீவனுநீ யாங்காண் பராபரமே. 104.

 

பொய்யைப்பொய் யென்றறியும் போதத்துக் காதரவுன்

மெய்யருளே அன்றோ விளம்பாய் பராபரமே. 105.

 

வருவான்வந் தேன்எனல்போல் மன்னியழி யுஞ்சகத்தைத்

தெரிவாக இல்லையென்ற தீரம் பராபரமே. 106.

 

மாயா சகமிலையேல் மற்றெனக்கோர் பற்றுமிலை

நீயேநான் என்றுவந்து நிற்பேன் பராபரமே. 107.

 

வானாதி நீயெனவே வைத்தமறை என்னையும்நீ

தானாகச் சொல்லாதோ சாற்றாய் பராபரமே. 108.

 

வெள்ளக் கருணைமத வேழமாம் நின்னருட்கென்

கள்ளக் கருத்தே கவளம் பராபரமே. 109.

 

வண்டாய்த் துவண்டு மவுன மலரணைமேல்

கொண்டார்க்கோ இன்பங் கொடுப்பாய் பராபரமே. 110.

 

மாயைமுத லாம்வினைநீ மன்னுயிர்நீ மன்னுயிர்தேர்ந்

தாயும்அறி வானதுநீ அன்றோ பராபரமே. 111.

 

என்னறிவும் யானும்என தென்பதுவு மாம்இவைகள்

நின்னவையே அன்றோ நிகழ்த்தாய் பராபரமே. 112.

 

பாரறியா தண்டப் பரப்பறியா துன்பெருமை

யாரறிவார் நானோ அறிவேன் பராபரமே. 113.

 

அண்டம் அனைத்திலுமாய் அப்பாலுக் கப்பாலுங்

கொண்டநின்னை யாரறிந்து கொள்வார் பராபரமே. 114.

 

ஒப்புயர்வொன் றின்றி ஒலிபுகா மோனவட்டக்

கப்பலுக்காம் வான்பொருள்நீ கண்டாய் பராபரமே. 115.

 

என்போல் எளியவரும் எங்கெங்கும் பார்த்தாலும்

உன்போல் வலியவரும் உண்டோ பராபரமே. 116.

 

பார்க்கின்அண்ட பிண்டப் பரப்பனைத்தும் நின்செயலே

யார்க்குஞ் செயலிலையே ஐயா பராபரமே. 117.

 

ஒன்றே பலவே உருவே அருவேயோ

என்றே அழைப்பதுன்னை என்றோ பராபரமே. 118.

 

செப்புவதெல் லாஞ்செபம்நான் சிந்திப்ப தெல்லாம்நின்

ஒப்பில் தியானமென ஓர்ந்தேன் பராபரமே. 119.

 

ஆரிருந்தேன் ஆர்போய்என் ஆரமுதாம் நின்னருளின்

சீரிருந்தால் உய்வேன் சிவமே பராபரமே. 120.

 

வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும்

அஞ்சி உனையடைந்தேன் ஐயா பராபரமே. 121.

 

எந்தப் படியுன் இதயம் இருந்ததெமக்

கந்தப் படிவருவ தன்றோ பராபரமே. 122.

 

எந்தெந்த நாளும் எனைப்பிரியா தென்னுயிராய்ச்

சிந்தைகுடி கொண்டஅருள் தேவே பராபரமே. 123.

 

அஞ்சல் அஞ்சல் என்றடிமைக் கப்போதைக் கப்போதே

நெஞ்சில் உணர்த்தும் நிறைவே பராபரமே. 124.

 

என்னையுன்றன் கைக்களித்தார் யாவரென்னை யான்கொடுத்துப்

பின்னை யுன்னாற் பெற்றநலம் பேசேன் பராபரமே. 125.

 

வாய்பேசா யூமையென வைக்கவென்றோ நீமவுனத்

தாயாக வந்தருளைத் தந்தாய் பராபரமே. 126.

 

தன்னைத்தந் தென்னைத் தடுத்தாண்ட நின்கருணைக்

கென்னைக்கொண் டென்னபலன் எந்தாய் பராபரமே.127.

 

மார்க்கண்டர்க் காக மறலிபட்ட பாட்டைஉன்னிப்

பார்க்கின்அன் பர்க்கென்ன பயங்காண் பராபரமே.128.

 

சுட்டியுண ராமல் துரியநிலை யாய்வெளியில்

விட்டநின்னை யானோ வியப்பேன் பராபரமே.129.

 

சூதொன்று மின்றியென்னைச் சும்மா இருக்கவைத்தாய்

ஈதொன்றும் போதாதோ இன்பம் பராபரமே.130.

 

வாயொன்றும் பேசா மவுனியாய் வந்தாண்ட

தேயொன்றும் போதாதோ இன்பம் பராபரமே. 131.

 

என்று மிருந்தபடிக் கென்னை யெனக்களித்த

தொன்றும்போ தாதோ உரையாய் பராபரமே. 132.

 

எண்திசைக்கீழ் மேலான எல்லாம் பெருவெளியாக்

கண்டவிடத் தென்னையும்நான் கண்டேன் பராபரமே.133.

 

பித்தனையே தும்மறியாப் பேதையனை ஆண்டவுனக்

கெத்தனைதான் தெண்ட னிடுவேன் பராபரமே.134.

 

தாயர்கர்ப்பத் தூடன்னமுந் தண்ணீருந் தந்தருளும்

நேயவுனை யாரோ நினையார் பராபரமே.135.

 

விரிந்த மனமொடுங்கும் வேளையில்நா னாகப்

பரந்தஅருள் வாழி பதியே பராபரமே.136.

 

சிந்தனைபோய் நானெனல்போய்த் தேக்கஇன்ப மாமழையை

வந்து பொழிந்தனைநீ வாழி பராபரமே.137.

 

தந்தேனே ஓர்வசனந் தந்தபடிக் கின்பமுமாய்

வந்தேனே யென்றனைநீ வாழி பராபரமே.138.

 

மண்ணும்விண்ணும் வந்து வணங்காவோ நின்னருளைக்

கண்ணுறவுட் கண்டவரைக் கண்டாற் பராபரமே.139.

 

என்றுங் கருணைபெற்ற இன்பத் தபோதனர்சொல்

சென்றசென்ற திக்கனைத்துஞ் செல்லும் பராபரமே.140.

 

ஆடுவதும் பாடுவதும் ஆனந்த மாகிநின்னைத்

தேடுவதும் நின்னடியார் செய்கை பராபரமே.141.

 

பொங்கியநின் தண்ணருளைப் புட்கலமாப் பெற்றவர்கட்

கெங்கெழுந்தென் ஞாயி றியம்பாய் பராபரமே.142.

 

பாலரொடு பேயர்பித்தர் பான்மையென நிற்பதுவே

சீலமிகு ஞானியர்தஞ் செய்கை பராபரமே.143.

 

உண்டுடுத்துப் பூண்டிங் குலகத்தார் போல்திரியுந்

தொண்டர்விளை யாட்டே சுகங்காண் பராபரமே.144.

 

கங்குல்பக லற்றதிருக் காட்சியர்கள் கண்டவழி

எங்கும் ஒருவழியே எந்தாய் பராபரமே.145.

 

காயநிலை அல்லவென்று காண்பார் உறங்குவரோ

தூயஅருட் பற்றாத் தொடர்வார் பராபரமே.146.

 

அப்பும்உப்பும் போன்ற அயிக்யபரா னந்தர்தமக்

கொப்புவமை சொல்லவும்வாய் உண்டோ பராபரமே.147.

 

சித்தந் தெளிந்து சிவமானோ ரெல்லோர்க்குங்

கொத்தடிமை யான குடிநான் பராபரமே.148.

 

தம்முயிர்போல் எவ்வுயிருந் தானென்று தண்ணருள்கூர்

செம்மையருக் கேவலென்று செய்வேன் பராபரமே.149.

 

விண்ணுக்கும் விண்ணாகி மேவும்உனக் கியான்பூசை

பண்ணிநிற்கு மாறு பகராய் பராபரமே.150.

 

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம்அன்பே

மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே.151.

 

கெட்டவழி ஆணவப்பேய் கீழாக மேலான

சிட்டருனைப் பூசை செய்வார் பராபரமே.152.

 

கால்பிடித்து மூலக் கனலைமதி மண்டலத்தின்

மேலெழுப்பில் தேகம் விழுமோ பராபரமே.153.

 

பஞ்சசுத்தி செய்துநின்னைப் பாவித்துப் பூசைசெய்தால்

விஞ்சிய ஞானம் விளங்கும் பராபரமே.154.

 

அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்

இன்பநிலை தானேவந் தெய்வதும் பராபரமே.155.

 

மூர்த்திதலந் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்

வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே.156.

 

விரும்புஞ் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்

அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே.157.

 

தானந் தவந்தருமஞ் சந்ததமுஞ் செய்வர்சிவ

ஞானந் தனையணைய நல்லோர் பராபரமே.158.

 

சொன்னத்தைச் சொல்லித் துடிக்கின்ற ஆணவப்பேய்க்

கின்னல் வருவதெந்நாள் எந்தாய் பராபரமே.159.

 

இன்றே இருவினைவந் தேறியது நானென்றோ

அன்றே விளைந்ததன்றோ ஆற்றேன் பராபரமே.160.

 

எண்ணமுந்தான் நின்னைவிட இல்லையென்றால் யான்முனமே

பண்ணவினை யேது பகராய் பராபரமே.161.

 

என்னைஇன்ன தென்றறியா ஏழைக்கும் ஆகெடுவேன்

முன்னைவினை கூடல் முறையோ பராபரமே.162.

 

அறியாநான் செய்வினையை ஐயாநீ கூட்டுங்

குறியே தெனக்குளவு கூறாய் பராபரமே.163.

 

என்னைக் கெடுக்க இசைந்த இருவினைநோய்

தன்னைக் கெடுக்கத் தகாதோ பராபரமே.164.

 

வல்லமையே காட்டுகின்ற மாமாயை நானொருவன்

இல்லையெனின் எங்கே இருக்கும் பராபரமே.165.

 

முக்குணத்தால் எல்லாம் முளைக்கப் பிரகிருதிக்

கிக்குணத்தை நல்கியதார் எந்தாய் பராபரமே.166.

 

ஆற்றப் படாதுதுன்பம் ஐயஎன்னால் என்மனது

தேற்றப் படாதினிஎன் செய்வேன் பராபரமே.167.

 

பூராய மாய்மனதைப் போக்கஅறி யாமல்ஐயோ

ஆராய் அலைந்தேன் அரசே பராபரமே.168.

 

சினமிறக்கக் கற்றாலுஞ் சித்தியெல்லாம் பெற்றாலும்

மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே.169.

 

வாதுக்கு வந்தெதிர்த்த மல்லரைப்போல் பாழ்த்தமனம்

ஏதுக்குக் கூத்தாடு தெந்தாய் பராபரமே.170.

 

சூதாடு வார்போல் துவண்டு துவண்டுமனம்

வாதாடின் என்னபலன் வாய்க்கும் பராபரமே.171.

 

கொள்ளித்தேள் கொட்டிக் குதிக்கின்ற பேய்க்குரங்காய்க்

கள்ளமனந் துள்ளுவதென் கண்டோ பராபரமே.172.

 

வந்ததையும் போனவையும் வைத்துவைத்துப் பார்த்திருந்தால்

சிந்தை இதமகிதம் சேரும் பராபரமே.173.

 

ஏறுமயிர்ப் பாலம்உணர் விந்தவிட யங்கள்நெருப்

பாறெனவும் நன்றாய் அறிந்தேன் பராபரமே.174.

 

பொறிவழியே ஏழை பொறியாய் உழல்வதுநின்

அறிவின் விதித்தவிதி ஆமோ பராபரமே. 175.

 

பாசசா லங்கள்எலாம் பற்றுவிட ஞானவைவாள்

வீசுநாள் எந்நாள் விளம்பாய் பராபரமே.176.

 

எந்தவுட லேனும் எடுத்தவுடல் நல்லதென்று

சிந்தைசெய வந்ததிறஞ் செப்பாய் பராபரமே.177.

 

பொய்யெல்லாம் ஒன்றாய்ப் பொருத்திவைத்த பொய்யுடலை

மெய்யென்றான் மெய்யாய் விடுமோ பராபரமே.178.

 

மின்னனைய பொய்யுடலை மெய்யென்று நம்பிஐயோ

நின்னை மறக்கை நெறியோ பராபரமே.179.

 

நித்தியமொன் றில்லாத நீர்க்குமிழி போன்றவுடற்

கித்தனைதான் துன்பமுண்டோ என்னே பராபரமே.180.

 

தேகம்இறும் என்றுசடர் தேம்புவதென் நித்திரையில்

ஊகமறிந் தாற்பயந்தான் உண்டோ பராபரமே.181.

 

ஏதைச் சுமையா எடுப்பார் எடுத்தவுடல்

சேதமுறின் யாதுபின்னே செல்லும் பராபரமே.182.

 

தோற்பாவை நாலாட் சுமையாகுஞ் சீவனொன்றிங்

கார்ப்பால் எடுத்ததெவ ராலே பராபரமே.183.

 

ஞாலத்தை மெய்யெனவே நம்பிநம்ப நாளுமென்றன்

காலத்தைப் போக்கியென்ன கண்டேன் பராபரமே.184.

 

பொய்யுலக வாழ்க்கைப் புலைச்சேரி வாதனைநின்

மெய்யருளின் மூழ்கின் விடுங்காண் பராபரமே.185.

 

நூலேணி விண்ணேற நூற்குப் பருத்திவைப்பார்

போலே கருவிநன்னூற் போதம் பராபரமே.186.

 

சின்னஞ் சிறியார்கள் செய்தமணற் சோற்றையொக்கும்

மன்னுங் கலைஞான மார்க்கம் பராபரமே.187.

 

வாசகஞா னத்தால் வருமோ சுகம்பாழ்த்த

பூசலென்று போமோ புகலாய் பராபரமே.188.

 

கேட்டதையே சொல்லுங் கிளிபோல நின்னருளின்

நாட்டமின்றி வாய்பேசல் நன்றோ பராபரமே.189.

 

வெளியாய் அருளில் விரவும்அன்பர் தேகம்

ஒளியாய்ப் பிறங்கியதும் உண்டோ பராபரமே.190.

 

காலமொரு மூன்றுங் கருத்திலுணர்ந் தாலும்அதை

ஞாலந் தனக்குரையார் நல்லோர் பராபரமே.191.

 

கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர்மற்

றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே.192.

 

இல்லாத காரியத்தை இச்சித்துச் சிந்தைவழிச்

செல்லாமை நல்லோர் திறங்காண் பராபரமே.193.

 

ஏதுவந்தும் ஏதொழிந்தும் என்னதுயான் என்னார்கள்

போதநிலை கண்ட புலத்தோர் பராபரமே.194.

 

ஆயிரஞ்சொன் னாலும் அறியாதவஞ்சநெஞ்சப்

பேயரொடு கூடிற் பிழை காண் பராபரமே.195.

 

மாய மயக்கொழிந்தார் மற்றொன்றை நாடுவரோ

நேய அருள்நிலையில் நிற்பார் பராபரமே.196.

 

நித்திரையிற் செத்தபிணம் நேருமுடற் கிச்சைவையாச்

சுத்தர்களே நல்ல துறவோர் பராபரமே.197.

 

எந்நெஞ்ச மேனும் இரங்குமே நின்னருட்குக்

கன்னெஞ் சரும்உளரோ காட்டாய் பராபரமே.198.

 

மந்தஅறி வாகியின்பம் வாயா திருந்தலைந்தால்

சிந்தைமயங் காதோஎன் செய்வேன் பராபரமே.199.

 

தேடினேன் திக்கனைத்துந் தெண்டனிட்டேன் சிந்தைநைந்து

வாடினேன் என்மயக்கம் மாற்றாய் பராபரமே.200.

 

மடிமையெனும் ஒன்றை மறுத்தன்றோ என்னை

அடிமைகொளல் வேண்டும் அரசே பராபரமே.201.

 

காலர்பயந் தீரஇன்பக் காற்கபய மென்றெழுந்த

மாலை வளர்த்தனையே வாழி பராபரமே.202.

 

நீர்ப்புற் புதமாய் நினைவருட்கே நின்றழியப்

பார்ப்பதல்லால் வேறுமொன்றைப் பாரேன் பராபரமே.203.

 

நீர்க்குமிழி போலென் நினைவுவெளி யாக்கரையப்

பார்க்குமிடம் எல்லாம்என் பார்வை பராபரமே.204.

 

ஆடிஓய் பம்பரம்போல் ஆசையுடன் எங்கும்உனைத்

தேடிஓய் கின்றேன்என் செய்வேன் பராபரமே.205.

 

வேதாந்தஞ் சித்தாந்தம் வேறென்னார் கண்களிக்கும்

நாதாந்த மோன நலமே பராபரமே.206.

 

ஆனந்த மானநின்னை அன்றியொன்றை உன்னாத

மோனந் தமியேற்கு முத்தி பராபரமே.207.

 

ஏதுக்கும் உன்னைவிட இல்லையென்றால் என்கருத்தைச்

சோதிக்க வேண்டாநான் சொன்னேன் பராபரமே.208.

 

முத்தியிலுந் தேகமிசை மூவிதமாஞ் சித்திபெற்றார்

எத்தனைபேர் என்றுரைப்ப தெந்தாய் பராபரமே.209. 

 

நீயன்றி நானார் நினைவார்என் நெஞ்சகமார்

தாயன்றிச் சூலுமுண்டோ சாற்றாய் பராபரமே.210.

 

அங்கமே நின்வடிவ மானசுகர் கூப்பிடநீ

எங்கும்ஏன் ஏனென்ற தென்னே பராபரமே.211.

 

கொள்ளைவெள்ளத் தண்ணருள்மேற் கொண்டுகழித் தார்த்திழுத்தால்

கள்ளமனக் கப்பலெங்கே காணும் பராபரமே.212.

 

எக்கலையுங் கற்றுணர்ந்தோ மென்றவர்க்குஞ் சம்மதஞ்சொல்

வக்கணையால் இன்பம் வருமோ பராபரமே.213.

 

கல்லெறியப் பாசி கலைந்துநன்னீர் காணும்நல்லோர்

சொல்லுணரின் ஞானம்வந்து தோன்றும் பராபரமே.214.

 

நின்னை யுணர்ந் தோர்கடமை நிந்தித்த பேயறிஞர்

என்ன கதிபெறுவார் எந்தாய் பராபரமே.215.

 

என்னதுயான் என்னல்அற்றோர் எங்கிருந்து பார்க்கினும்நின்

சன்னிதியாம் நீபெரியசாமி பராபரமே.216.

 

சோற்றுத் துருத்திச் சுமைசுமப்பக் கண்பிதுங்கக்

காற்றைப் பிடித்தலைந்தேன் கண்டாய் பராபரமே.217.

 

உள்ளபடி யொன்றை உரைக்கின்அவர்க் குள்ளுறவாய்க்

கள்ளமின்றி அன்பாய்க் களிப்பேன் பராபரமே.218.

 

அடுத்தஇயல் பாகவொன்றை யான்பகர்வ தல்லால்

தொடுத்ததொன்றை யான்வேண்டிச் சொல்லேன் பராபரமே.219.

 

உள்ளமறி யாதொருவர் ஒன்றைஉன்னிப் பேசில்ஐயோ

துள்ளியிளங் கன்றாய்த் துடிப்பேன் பராபரமே.220.

 

எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே.221.

 

முன்னாள்மெய்ஞ் ஞான முனிவர்தவம் ஈட்டுதல்போல்

இந்நாளிற் காணஎனக் கிச்சை பராபரமே.222.

 

கன்மமென்ப தெல்லாங் கரிசறவே மெய்ஞ்ஞான

தன்மநிலை சார்ந்ததன்பர் தன்மை பராபரமே.223.

 

கண்துயிலா தென்னறிவின் கண்ணூடே காட்சிபெற

மண்டிய பேரொளிநீ வாழி பராபரமே.224.

 

நானான தன்மையென்று நாடாமல் நாடஇன்ப

வானாகி நின்றனைநீ வாழி பராபரமே.225.

 

அகத்தூ டணுவணுவாய் அண்டமெல்லாந் தானாய்

மகத்தாகி நின்றனைநீ வாழி பராபரமே.226.

 

காரகமாங் கர்ப்பஅறைக் கண்ணூடும் என்கண்ணே

வாரம்வைத்துக் காத்தனைநீ வாழி பராபரமே.227.

 

புரந்தோர்தந் தேசமென்பார் பூமியைப்போ ராடி

இறந்தோருந் தம்மதென்பார் என்னே பராபரமே.228.

 

மூர்த்தியெல்லாம் வாழியெங்கள் மோனகுரு வாழிஅருள்

வார்த்தையென்றும் வாழிஅன்பர் வாழி பராபரமே.229.

 

சொல்லும் பொருளுந் தொடரா அருள்நிறைவில்

செல்லும் படிக்கருள்நீ செய்தாய் பராபரமே.230.

 

இற்றைவரைக் குள்ளாக எண்ணரிய சித்திமுத்தி

பெற்றவர்கள் எத்தனைபேர் பேசாய் பராபரமே.231.

 

நாடும் நகரும்நிசா னாட்டிய பாளயமும்

ஈடுசெயு மோமுடிவில் எந்தாய் பராபரமே.232.

 

தேடுந் திரவியமுஞ் சேர்ந்தமணிப் பெட்டகமும்

கூட வருந்துணையோ கூறாய் பராபரமே.233.

 

தேடாத தேட்டினரே செங்கைத் துலாக்கோல்போல்

வாடாச் சமனிலையில் வாழ்வார் பராபரமே.234.

 

நீராய்க் கசிந்துருகி நெட்டுயிர்த்து நின்றேனைப்

பாராத தென்னோ பகராய் பராபரமே.235.

 

உள்ளபொருள் ஆவி உடல்மூன்றும் அன்றேதான்

கொள்ளைகொண்ட நீயென் குறைதீர் பராபரமே.236.

 

ஆழ்ந்தாயே யிவ்வுலகில் அல்லலெல்லாந் தீர்ந்தருளால்

வாழ்ந்தாயே என்றனைநீ வாழி பராபரமே.237.

 

தாரா அருளையெல்லாந் தந்தெனையும் நின்னருளின்

வாராயோ என்றனைநீ வாழி பராபரமே.238.

 

ஆசையுன்மீ தல்லால் அருளறிய வேறுமொன்றில்

பாசம்வையேன் நின்கருணைப் பாங்காற் பராபரமே.239

 

ஆதியந்த நீகுருவாய் ஆண்டதல்லால் நின்னையன்றிப்

போதனையும் உண்டோ புகலாய் பராபரமே.240.

 

தானாக வந்து தடுத்தாண் டெனையின்ப

வானாகச் செய்தஇன்ப வானே பராபரமே.241.

 

பற்றற் றிருக்குநெறி பற்றிற் கடல்மலையுஞ்

சுற்ற நினைக்குமனஞ் சொன்னேன் பராபரமே.242.

 

படிப்பற்றுக் கேள்வியற்றுப் பற்றற்றுச் சிந்தைத்

துடிப்பற்றார்க் கன்றோ சுகங்காண் பராபரமே.243.

 

சத்தாகி நின்றோர் சடங்க ளிலிங்கமென

வைத்தாரும் உண்டோயென் வாழ்வே பராபரமே.244.

 

சித்த நிருவிகற்பஞ் சேர்ந்தார் உடல்தீபம்

வைத்தகர்ப்பூ ரம்போல் வயங்கும் பராபரமே.245.

 

ஆதிகா லத்தில்எனை ஆண்டனையே இப்பால்நீ

போதியெனில் எங்கேநான் போவேன் பராபரமே.246.

 

நாவழுத்துஞ் சொல்மலரோ நாளுதிக்கும் பொன்மலரோ

தேவையுனக் கின்னதென்று செப்பாய் பராபரமே.247.

 

கன்னல்தரும் பாகாய்க் கருப்புவட்டாய்க் கற்கண்டாய்

இன்னமுதாய் என்னுள் எருந்தாய் பராபரமே.248.

 

சிற்பரமே தற்பரமே தெய்வச் சுருதிசொன்ன

அற்புதமே அன்பே அறிவே பராபரமே.249.

 

அறிவிப்பான் நீயென்றால் ஐம்புலன்க டந்தந்

நெறிநிற்பார் யாரே நிகழ்த்தாய் பராபரமே.250.

 

அந்தக் கரணமெனும் ஆகாத பேய்கள்எனை

வந்துபிடித் தாட்ட வழக்கோ பராபரமே.251.

 

ஐவரொடுங் கூடாமல் அந்தரங்க சேவைதந்த

தெய்வ அறிவே சிவமே பராபரமே.252.

 

அருளாகி நின்றசுகம் ஆகாமல் ஐயோ

இருளாகி நிற்க இயல்போ பராபரமே.253.

 

அன்பரெல்லாம் இன்பம் அருந்திடவும் யான்ஒருவன்

துன்புறுதல் நன்றோநீ சொல்லாய் பராபரமே.254.

 

சந்ததமும் நின்கருணை சாற்றுவதல் லால்வேறு

சிந்தைஅறி யேன்உன்றன் சித்தம் பராபரமே.255.

 

நான்நான் எனக்குளறும் நாட்டத்தால் என்னைவிட்டுப்

போனாலும் உன்னைவிட்டுப் போகேன் பராபரமே.256.

 

இக்காயம் பொய்யென்றோர் ஈட்டத் துனக்கபயம்

புக்காதார் உண்டோ புகலாய் பராபரமே.257.

 

தானாதல் பூரணமே சாருமிடம் உண்டுயிரும்

வானாதி யும்ஒழுங்காய் மன்னும் பராபரமே.258.

 

உன்னுமனங் கர்ப்பூர வுண்டைபோ லேகரைய

மின்னும்ஆ னந்த விளக்கே பராபரமே.259.

 

நாட்பட் டலைந்த நடுக்கமெலாந் தீரவுனக்

காட்பட்டுந் துன்பம்எனக் காமோ பராபரமே.260.

 

பாவிபடுங் கண்கலக்கம் பார்த்துமிரங் காதிருந்தால்

ஆவிக் குறுதுணையார் ஐயா பராபரமே.261.

 

நின்னிறைவே தாரகமாய் நின்றுசுகம் எய்தாமல்

என்னிறைவே பாவித்தேன் என்னே பராபரமே.262.

 

நின்னைச் சரண்புகுந்தால் நீகாக்கல் வேண்டுமல்லால்

என்னைப் புறம்விடுதல் என்னே பராபரமே.263.

 

மாறாத துன்பமெல்லாம் வந்துரைத்தால் நின்செவியில்

ஏறாத வாறேது இயம்பாய் பராபரமே.264.

 

விஞ்சுபுலப் பாடனைத்தும் வீறுதுன்பஞ் செய்யவந்த

அஞ்சுபுல வேடருக்கும் ஆற்றேன் பராபரமே.265.

 

கன்னங் கரியநிறக் காமாதி ராட்சசப் பேய்க்

கென்னையிலக் காகவைத்த தென்னே பராபரமே.266.

 

சித்திநெறி கேட்டல் செகமயக்கஞ் சன்மமற

முத்திநெறி கேட்டல் முறைகாண் பராபரமே.267.

 

சிந்தை சிதையச் சிதையாத ஆனந்தம்

எந்தவகை யாலேவந் தெய்தும் பராபரமே.268.

 

கூர்த்தஅறி வால்அறியக் கூடா தெனக்குரவன்

தேர்த்தபடி தானே திரிந்தேன் பராபரமே.269.

 

பத்த ரருந்தும் பரமசுகம் யானருந்த

எத்தனைநாள் செல்லும் இயம்பாய் பராபரமே.270.

 

தீர்த்தி னால்துறவு சேராமல் இவ்வுலகில்

பாரத் தனம்பேசல் பண்போ பராபரமே.271.

 

இந்த வெளியினையுண் டேப்பமிடப் பேரறிவாத்

தந்தவெளிக் கேவெளியாய்ச் சார்ந்தேன் பராபரமே.272.

 

உணர்த்தும்உனை நாடா துணர்ந்தவையே நாடி

இணக்குறுமென் ஏழைமைதான் என்னே பராபரமே.273.

 

உண்டுபோல் இன்றாம் உலகைத் திரமெனவுள்

கொண்டுநான் பெற்றபலன் கூறாய் பராபரமே.274.

 

உள்ளபடி யாதுமென உற்றுணர்ந்தேன் அக்கணமே

கள்ளமனம் போனவழி காணேன் பராபரமே.275.

 

சித்த மவுனஞ் செயல்வாக் கெலாமவுனஞ்

சுத்த மவுனம்என்பால் தோன்றிற் பராபரமே.276.

 

எண்ணில்பல கோடிஉயிர் எத்தனையோ அத்தனைக்குங்

கண்ணிற் கலந்தஅருட் கண்ணே பராபரமே.277.

 

எனக்கினியார் உன்போலும் இல்லையென்றால் யானும்

உனக்கினியா னாகா உளவேன் பராபரமே.278.

 

அண்டபிண்டங் காணேன் அகமும் புறமும் ஒன்றாக்

கண்ட என்னை நீகலந்த காலம் பராபரமே.279.

 

எத்தனையோ கோடி யெடுத்தெடுத்துச் சொன்னாலுஞ்

சித்தம் இரங்கிலைஎன் செய்வேன் பராபரமே.280.

 

அன்றந்த நால்வருக்கும் அற்புதமாய் நீயுரைத்த

தொன்றந்த வார்த்தையெனக் குண்டோ பராபரமே.281.

 

அப்பனென்றும் அன்னையென்றும் ஆரியனென் றும்உனையே

செப்புவதும் உன்னிலையின் சீர்காண் பராபரமே.282.

 

கட்டுங் கனமும்அந்தக் காலர்வரும் போதெதிர்த்து

வெட்டுந் தளமோ விளம்பாய் பராபரமே.283.

 

பேசாத மோனநிலை பெற்றன்றோ நின்னருளாம்

வாசாம கோசரந்தான் வாய்க்கும் பராபரமே.284

 

கற்றாலுங் கேட்டாலுங் காயமழி யாதசித்தி

பெற்றாலும் இன்பம்உண்டோ பேசாய் பராபரமே.285.

 

கண்டவடி வெல்லாங் கரைக்கின்ற அஞ்சனம்போல்

அண்டமெல்லாம் நின்னருளே அன்றோ பராபரமே.286.

 

தன்செயலால் ஒன்றுமிலை தானென்றால் நான்பாவி

நின்செயலாய் நில்லா நினைவேன் பராபரமே.287.

 

கொலைகளவு கட்காமங் கோபம்விட்டால் அன்றோ

மலையிலக்கா நின்னருள்நான் வாய்க்கும் பராபரமே.288.

 

தன்னைஅறி யாதுசகந் தானாய் இருந்துவிட்டால்

உன்னை அறியஅருள் உண்டோ பராபரமே.289.

 

ஒன்றிரண்டென் றுன்னா உணர்வுகொடுத் துள்ளபடி

என்றும்என்னை வையாய் இறையே பராபரமே.290.

 

கருதும்அடி யார்கள்உளங் காணவெளி யாகுந்

துரியநிறை வான சுகமே பராபரமே.291.

 

பொய்குவித்த நெஞ்சன்அருட் பொற்பறிந்து திக்கனைத்துங்

கைகுவித்து நிற்பதெந்தக் காலம் பராபரமே.292.

 

அத்துவித மான அயிக்ய அனுபவமே

சுத்தநிலை அந்நிலையார் சொல்வார் பராபரமே.293.

 

வைத்த சுவரலம்பின் மண்போமோ மாயையினோர்க்

கெத்தனைபோ தித்தும்என்னாம் எந்தாய் பராபரமே.294.

 

பூட்டற்றுத் தேகமற்றுப் போகுமுன்னே நின்னருளைக்

காட்டாத் தகாதோஎன் கண்ணே பராபரமே.295.

 

சொல்லிற் பதர்களைந்து சொல்முடிவு காணாதார்

நெல்லிற் பதர்போல் நிற்பார் பராபரமே.296.

 

அழுக்காற்றால் நெஞ்சம் அழுங்கியபுன் மாக்கள்

இழுக்காற்றால் இன்பநலம் எய்தார் பராபரமே.297.

 

தேகாதி பொய்யெனவே தேர்ந்தவுப சாந்தருக்கு

மோகாதி உண்டோ மொழியாய் பராபரமே.298.

 

சாதனையெல் லாம்அவிழத் தற்போதங் காட்டாதோர்

போதனைநீ நல்குவதெப் போதோ பராபரமே.299.

 

ஒன்றுமறி யாவிருளாம் உள்ளம் படைத்தஎனக்

கென்று கதிவருவ தெந்தாய் பராபரமே.300.

 

சிந்திக்குந் தோறும்என்னுள் சிற்சுகமாய் ஊற்றூறிப்

புந்திக்குள் நின்றஅருள் பொற்பே பராபரமே.301.

 

என்றும்அடைந் தோர்கட் கிரங்கார் குறிப்பனைத்துங்

கன்றையுதை காலி கதைகாண் பராபரமே.302.

 

குற்றங் குறையக் குணமே லிடஅருளை

உற்றவரே ஆவிக் குறவாம் பராபரமே.303.

 

ஓருரையால் வாய்க்குமுண்மைக் கோரனந்த நூல்கோடிப்

பேருரையாற் பேசில்என்ன பேறாம் பராபரமே.304.

 

சொல்லுஞ் சமயநெறிச் சுற்றுக்கு ளேசுழலும்

அல்லல் ஒழிவதென்றைக் கையா பராபரமே.305.

 

பிடித்ததையே தாபிக்கும் பேராணவத்தை

அடித்துத் துரத்தவல்லார் ஆர்காண் பராபரமே.306.

 

நேசத்தால் நின்னை நினைக்கும் நினைவுடையார்

ஆசைக் கடலில் அழுந்தார் பராபரமே.307.

 

கள்ளாது கட்டுணவுங் காரியமோ நானொருசொல்

கொள்ளாத தோடமன்றோ கூறாய் பராபரமே.308.

 

சென்றவிட மெல்லாந் திருவருளே தாரகமாய்

நின்றவர்க்கே ஆனந்த நிட்டை பராபரமே.309.

 

நீட்சி குறுகல்இல்லா நித்யசுகா ரம்பசக

சாட்சியாம் உன்னைவந்து சார்ந்தேன் பராபரமே.310.

 

வானாதி தத்துவமாய் மன்னிநின்ற காரணநீ

நானாகி நிற்பதெந்த நாளோ பராபரமே.311.

 

காட்டத்தில் அங்கி கடையவந்தால் என்னவுன்னும்

நாட்டத்தின் ஊடுவந்த நட்பே பராபரமே.312.

 

நித்திரையாய்த் தானே நினைவயர்ந்தால் நித்தநித்தஞ்

செத்தபிழைப் பானதெங்கள் செய்கை பராபரமே.313.

 

இன்பநிட்டை எய்தாமல் யாதெனினுஞ் சென்றுமனந்

துன்புறுதல் வன்பிறவித் துக்கம் பராபரமே.314.

 

பொய்யகல மெய்யான போதநிலை கண்டோர்க்கோர்

ஐயமிலை ஐயமிலை ஐயா பராபரமே.315.

 

மந்திரத்தை உன்னி மயங்கா தெனக்கினியோர்

தந்திரத்தை வைக்கத் தகாதோ பராபரமே.316.

 

விண்கருணை பூத்ததென்ன மேவி உயிர்க்குயிராய்த்

தண்கருணை தோன்றஅருள் தாய்நீ பராபரமே.317.

 

தன்மயமாய் நின்றநிலை தானேதா னாகிநின்றால்

நின்மயமாய் எல்லாம் நிகழும் பராபரமே.318.

 

ஏங்கி இடையும்நெஞ்சம் ஏழையைநீ வாவென்றே

பாங்குபெறச் செய்வதுன்மேற் பாரம் பராபரமே.319.

 

ஆண்டநின்னை நீங்கா அடிமைகள்யாம் ஆணவத்தைப்

பூண்டதென்ன கன்மம் புகலாய் பராபரமே.320.

 

எங்கணும்நீ யென்றால் இருந்துபடி எய்தாமல்

அங்குமிங்கும் என்றலையல் ஆமோ பராபரமே.321.

 

கற்குமது வுண்டு களித்ததல்லால் நின்னருளில்

நிற்குமது தந்ததுண்டோ நீதான் பராபரமே.322.

 

அண்டபகி ரண்டம் அறியாத நின்வடிவைக்

கண்டவரைக் கண்டாற் கதியாம் பராபரமே.323.

 

கலக்கமுற நெஞ்சைக் கலக்கித் திரும்பத்

துலக்குபவன் நீயலையோ சொல்லாய் பராபரமே.324.

 

சிந்தையும்என் போலச் செயலற் றடங்கிவிட்டால்

வந்ததெல்லாம் நின்செயலா வாழ்வேன் பராபரமே.325.

 

பந்தமெலாந் தீரப் பரஞ்சோதி நீகுருவாய்

வந்த வடிவை மறவேன் பராபரமே.326.

 

தானந்த மான சகச நிருவிகற்ப

ஆனந்த நிட்டைஅருள் ஐயா பராபரமே.327.

 

அல்லலெல்லாந் தீரஎனக் கானந்த மாகவொரு

சொல்லைஎன்பால் வைத்ததையென் சொல்வேன் பராபரமே.328.

 

சிந்தை மயக்கமறச் சின்மயமாய் நின்றவுன்னைத்

தந்தவுனக் கென்னையும்நான் தந்தேன் பராபரமே.329.

 

மைகாட்டு மாயை மயக்கமற நீகுருவாய்க்

கைகாட்ட வுங்கனவு கண்டேன் பராபரமே.330.

 

மால்வைத்த சிந்தை மயக்கறஎன் சென்னிமிசைக்

கால்வைக்க வுங்கனவு கண்டேன் பராபரமே.331.

 

மண்ணான மாயையெல்லாம் மாண்டுவெளி யாகஇரு

கண்ணார வுங்கனவு கண்டேன் பராபரமே.332.

 

மண்ணீர்மை யாலே மயங்காதுன் கையால்என்

கண்ணீர் துடைக்கவும்நான் கண்டேன் பராபரமே.333.

 

உள்ள துணரா வுணர்விலிமா பாவியென்றோ

மெள்ளமெள்ளக் கைநெகிழ விட்டாய் பராபரமே.334.

 

எல்லாம் நினதுசெயல் என்றெண்ணும் எண்ணமும்நீ

அல்லால் எனக்குளதோ ஐயா பராபரமே.335.

 

பந்த மயக்கிருக்கப் பற்றொழிந்தேன் என்றுளறும்

இந்த மயக்கம் எனக்கேன் பராபரமே.336.

 

காட்சியெல்லாங் கண்ணைவிடக் கண்டதுண்டோ யாதினுக்கும்

ஆட்சி உனதருளே அன்றோ பராபரமே.337.

 

எட்டுத் திசையும்ஒன்றாய் இன்பமாய் நின்றவுன்னை

விட்டுப் பிரியவிடம் வேறோ பராபரமே.338.

 

பிரியா துயிர்க்குயிராய்ப் பின்னமற வோங்குஞ்

செறிவே அறிவே சிவமே பராபரமே.339.

 

ஏதேது சொன்னாலும் எள்ளளவும் நீயிரங்காச்

சூதே தெனக்குளவு சொல்லாய் பராபரமே.340.

 

கற்பனையாப் பாடுகின்றேன் கண்ணீருங் கம்பலையுஞ்

சொற்பனத்துங் காணேன்என் சொல்வேன் பராபரமே.341.

 

வன்பொன்று நீங்கா மனதிறப்ப மாறாப்பேர்

அன்பொன்றும் போதும்எனக் கையா பராபரமே.342.

 

ஏதுந் தெரியா எளியேனை வாவெனநின்

போதநிலை காட்டிற் பொறாதோ பராபரமே.343.

 

ஓராமல் எல்லாம் ஒழிந்தேற்குன் தெய்வஅருள்

தாரா திருக்கத் தகுமோ பராபரமே.344.

 

மோனந் தருஞான மூட்டி எனக்குவட்டா

ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே.345.

 

வாடுமுகங் கண்டென்னை வாடாம லேகாத்த

நீடுங் கருணை நிறைவே பராபரமே.346.

 

புந்தியினால் நின்னடியைப் போற்றுகின்ற மெய்யடியார்

சிந்தையிறப் போநின் தியானம் பராபரமே.347.

 

உனக்குவமை யாக்கருணை உள்ளவரும் வன்மைக்

கெனக்குவமை யானவரும் இல்லை பராபரமே.348.

 

தாயிருந்தும் பிள்ளை தளர்ந்தார்போல் எவ்விடத்தும்

நீயிருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே.349.

 

வாயாற் கிணறுகெட்ட வாறேபோல் வாய்பேசிப்

பேயானார்க் கின்பமுண்டோ பேசாய் பராபரமே.350.

 

பாவமென்றால் ஏதும் பயமின்றிச் செய்யஇந்தச்

சீவனுக்கார் போதந் தெரித்தார் பராபரமே.351.

 

இன்ப நிருவிகற்பம் இன்றேதா அன்றெனிலோ

துன்பம் பொறுப்பரிது சொன்னேன் பராபரமே.352.

 

கற்குநிலை கற்றால் கருவியவி ழாதருளாய்

நிற்குநிலை கற்பதுவே நீதம் பராபரமே.353.

 

காச்சச் சுடர்விடும்பொற் கட்டிபோல் நின்மலமாய்ப்

பேச்சற் றவரே பிறவார் பராபரமே.354.

 

பற்றொழிந்து சிந்தைப் பதைப்பொழிந்து தானேதான்

அற்றிருப்ப தென்றைக் கமைப்பாய் பராபரமே.355.

 

உருவெளிதான் வாதவூர் உத்தமர்க்கல் லாலினமுங்

குருவழிநின் றார்க்குமுண்டோ கூறாய் பராபரமே.356.

 

தேகம்யா தேனுமொரு சித்திபெறச் சீவன்முத்தி

ஆகுநெறி நல்லநெறி ஐயா பராபரமே.357.

 

உலகநெறி போற்சடலம் ஓயஉயிர் முத்தி

இலகுமெனல் பந்த இயல்பே பராபரமே.358.

 

பரமாப் பரவெளியாப் பார்ப்பதல்லால் மற்றெவர்க்குந்

திரமேது மில்லைநன்றாய்த் தேர்ந்தேன் பராபரமே.359.

 

தேடுவேன் நின்னருளைத் தேடுமுன்னே யெய்தில்நடம்

ஆடுவேன் ஆனந்த மாவேன் பராபரமே.360.

 

உள்ளங் குழைய வுடல்குழைய வுள்ளிருந்த

கள்ளங் குழையஎன்று காண்பேன் பராபரமே.361.

 

பட்டப் பகல்போலப் பாழ்த்தசிந்தை மாளின்எல்லாம்

வெட்டவெளி யாக விளங்கும் பராபரமே.362.

 

பார்க்கின்அணுப் போற்கிடந்த பாழ்ஞ்சிந்தை மாளின்என்னை

யார்க்குச் சரியிடலாம் ஐயா பராபரமே.363.

 

பாட்டுக்கோ அன்பினுக்கோ பத்திக்கோ அன்பர்தங்கள்

நீட்டுக்கெல் லாங்குறுகி நின்றாய் பராபரமே.364.

 

முத்தாந்த வித்தே முளைக்குநில மாயெழுந்த

சித்தாந்த மார்க்கச் சிறப்பே பராபரமே.365.

 

உன்னா வெளியாய் உறங்காத பேருணர்வாய்

என்னாவிக் குள்ளே யிருந்தாய் பராபரமே.366.

 

தத்துவமெல் லாமகன்ற தன்மையர்க்குச் சின்மயமா

நித்தமுத்த சுத்த நிறைவே பராபரமே.367.

 

உள்ளக் கொதிப்பகல வுள்ளுள்ளே ஆனந்த

வெள்ள மலர்க்கருணை வேண்டும் பராபரமே.368.

 

என்னைப் புறப்பதரு ளின்கடனாம் என்கடனாம்

நின்னிற் பணியறவே நிற்கை பராபரமே.369.

 

தானேயா நன்னிலையைத் தந்தஅருள் ஆனந்த

வானே மனாதீத வாழ்வே பராபரமே.370.

 

மண்ணாதி பூதமெல்லாம் வைத்திருந்த நின்னிறைவைக்

கண்ணாரக் கண்டு களித்தேன் பராபரமே.371.

 

அறியாமை ஈதென் றறிவித்த அன்றேதான்

பிறியா அருள்நிலையும் பெற்றேன் பராபரமே.372.

 

தீதெனவும் நன்றெனவுந் தேர்ந்ததுநான் தேர்ந்தபடி

ஏதும் நடக்கவொட்டா தென்னே பராபரமே.373.

 

கண்ட அறிவகண்டா காரமென மெய்யறிவில்

கொண்டவர்க்கே முத்தி கொடுப்பாய் பராபரமே.374.

 

ஈறாக வல்வினைநான் என்னாமல் இன்பசுகப்

பேறாம் படிக்கடிமை பெற்றேன் பராபரமே.375.

 

பெற்றார் அநுபூதி பேசாத மோனநிலை

கற்றார் உனைப்பிரியார் கண்டாய் பராபரமே.376.

 

நீயேநான் என்று நினைப்பும் மறப்புமறத்

தாயே அனையஅருள் தந்தாய் பராபரமே.377.

 

சஞ்சலமற் றெல்லாம்நீ தானென் றுணர்ந்தேன்என்

அஞ்சலியுங் கொள்ளாய் அரசே பராபரமே.378.

 

பூதமுதல் நாதவரை பொய்யென்ற மெய்யரெல்லாங்

காதலித்த இன்பக் கடலே பராபரமே.379.

 

வாக்குமனம் ஒன்றுபட்ட வார்த்தையல்லால் வெவ்வேறாய்ப்

போக்குடைய வார்த்தை பொருந்தேன் பராபரமே.380.

 

வன்மையின்றி எல்லாம் மதித்துணர்வாய்க் காகெடுவேன்

தன்மையொன்றுந் தோயாத் தடையோ பராபரமே.381.

 

பத்தர்சித்தர் வாழிபரி பக்குவர்கள் வாழிசெங்கோல்

வைத்தவர்கள் வாழிகுரு வாழி பராபரமே.382.

 

கல்லாதேன் ஆனாலுங் கற்றுணர்ந்த மெய்யடியார்

சொல்லாலே நின்னைத் தொடர்ந்தேன் பராபரமே.383.

 

சொல்லிறப்பச் சற்குருவாய்த் தோன்றிச் சுகங்கொடுத்த

நல்லவர்க்கே கொத்தடிமை நான்காண் பராபரமே.384.

 

முத்திக்கு வித்தான மோனக் கரும்புவழி

தித்தித் திடவிளைந்த தேனே பராபரமே.385.

 

நித்திரையும் பாழ்த்த நினைவும்அற்று நிற்பதுவோ

சுத்த அருள்நிலைநீ சொல்லாய் பராபரமே.386.

 

மண்ணும் மறிகடலும் மற்றுளவும் எல்லாம்உன்

கண்ணில் இருக்கவும்நான் கண்டேன் பராபரமே.387.

 

பூட்டிவைத்து வஞ்சப் பொறிவழியே என்றனைநீ

ஆட்டுகின்ற தேதோ அறியேன் பராபரமே.388.

 

பொய்யுணர்வா யிந்தப் புழுக்கூட்டைக் காத்திருந்தேன்

உய்யும் வகையும் உளதோ பராபரமே.389.

 

        44. பைங்கிளிக்கண்ணி

 

அந்தமுடன் ஆதி அளவாமல் என்னறிவில்

சுந்தரவான் சோதி துலங்குமோ பைங்கிளியே. 1.

 

அகமேவும் அண்ணலுக்கென் அல்லலெல்லாஞ் சொல்லிச்

சுகமான நீபோய்ச் சுகங்கொடுவா பைங்கிளியே. 2.

 

ஆவிக்குள் ஆவிஎனும் அற்புதனார் சிற்சுகந்தான்

பாவிக்குங் கிட்டுமோ சொல்லாய்நீ பைங்கிளியே. 3.

 

ஆருமறி யாமல்எனை அந்தரங்க மாகவந்து

சேரும்படி இறைக்குச் செப்பிவா பைங்கிளியே. 4.

 

ஆறான கண்ணீர்க்கென் அங்கபங்க மானதையுங்

கூறாத தென்னோ குதலைமொழிப் பைங்கிளியே. 5.

 

இன்பருள ஆடையழுக் கேறும்எமக் கண்ணல்சுத்த

அம்பரமாம் ஆடை அளிப்பானோ பைங்கிளியே. 6.

 

உன்னாமல் ஒன்றிரண்டென் றோராமல் வீட்டுநெறி

சொன்னான் வரவும்வகை சொல்லாய்நீ பைங்கிளியே. 7.

 

ஊருமிலார் பேருமிலார் உற்றார்பெற் றாருடனே

யாருமிலார் என்னை அறிவாரோ பைங்கிளியே. 8.

 

ஊறைப்பா ராமல்எனக் குள்ளகத்து நாயகனார்

சீரைப்பார்த் தாற்கருணை செய்வாரோ பைங்கிளியே. 9.

 

என்று விடியும் இறைவாவோ என்றென்று

நின்றநிலை எல்லாம் நிகழ்த்தாய்நீ பைங்கிளியே. 10.

 

எந்தமட லூடும் எழுதா இறைவடிவைச்

சிந்தைமட லாலெழுதிச் சேர்ப்பேனோ பைங்கிளியே. 11.

 

கண்ணுள்மணி போல்இன்பங் காட்டி எனைப்பிரிந்த

திண்ணியரும் இன்னம்வந்து சேர்வாரோ பைங்கிளியே. 12.

 

ஏடார் மலர்சூடேன் எம்பெருமான் பொன்னடியாம்

வாடா மலர்முடிக்கு வாய்க்குமோ பைங்கிளியே. 13.

 

கல்லேன் மலரேன் கனிந்தஅன்பே பூசைஎன்ற

நல்லோர்பொல் லாஎனையும் நாடுவரோ பைங்கிளியே. 14.

 

கண்டதனைக் கண்டு கலக்கந் தவிரெனவே

விண்டபெரு மானையும்நான் மேவுவனோ பைங்கிளியே. 15.

 

காணாத காட்சி கருத்துவந்து காணாமல்

வீணாள் கழித்து மெலிவேனோ பைங்கிளியே. 16.

 

காந்தம் இரும்பைக் கவர்ந்திழுத்தா லென்னஅருள்

வேந்தன் எமைஇழுத்து மேவுவனோ பைங்கிளியே. 17.

 

காதலால் வாடினதுங் கண்டனையே எம்மிறைவர்

போதரவா யின்பம் புசிப்பேனோ பைங்கிளியே. 18.

 

கிட்டிக்கொண் டன்பருண்மை கேளாப் பலவடிகொள்

பட்டிக்கும் இன்பமுண்டோ சொல்லாய்நீ பைங்கிளியே. 19.

 

கிட்டூராய் நெஞ்சிற் கிளர்வார் தழுவஎன்றால்

நெட்டூர ராவர்அவர் நேசமென்னோ பைங்கிளியே. 20.

 

கூறுங் குணமுமில்லாக் கொள்கையினார் என்கவலை

ஆறும்படிக்கும் அணைவாரோ பைங்கிளியே. 21.

 

சின்னஞ் சிறியேன்றன் சிந்தைகவர்ந் தார்இறைவர்

தன்னந் தனியே தவிப்பேனோ பைங்கிளியே. 22.

 

சிந்தை மருவித் தெளிவித் தெனையாள

வந்தகுரு நாதன்அருள் வாய்க்குமோ பைங்கிளியே. 23.

 

சொல்லிறந்து நின்ற சுகரூபப் பெம்மானை

அல்லும் பகலும் அணைவேனோ பைங்கிளியே. 24.

 

தற்போதத் தாலே தலைகீழ தாகஐயன்

நற்போத இன்புவர நாட்செலுமோ பைங்கிளியே. 25.

 

தன்னை அறியுந் தருணந் தனிற்றலைவர்

என்னையணை யாதவண்ணம் எங்கொளித்தார் பைங்கிளியே. 26.

 

தாங்கரிய மையலெல்லாந் தந்தெனைவிட் டின்னருளாம்

பாங்கியைச்சேர்ந் தார்இறைக்குப் பண்போசொல் பைங்கிளியே. 27.

 

தாவியதோர் மர்க்கடமாந் தன்மைவிட்டே அண்ணலிடத்

தோவியம்போல் நிற்கின்எனை உள்குவரோ பைங்கிளியே. 28.

 

தீராக் கருவழக்கைத் தீர்வையிட்டங் கென்னைஇனிப்

பாரேறா தாண்டானைப் பற்றுவனோ பைங்கிளியே. 29.

 

தூங்கிவிழித் தென்னபலன் தூங்காமல் தூங்கிநிற்கும்

பாங்குகண்டால் அன்றோ பலன்காண்பேன் பைங்கிளியே. 30.

 

தொல்லைக் கவலை தொலைத்துத் தொலையாத

எல்லைஇலா இன்பமயம் எய்துவனோ பைங்கிளியே. 31.

 

நன்னெஞ்சத் தன்பரெல்லாம் நாதரைச்சேர்ந் தின்பணைந்தார்

வன்னெஞ்சத் தாலேநான் வாழ்விழந்தேன் பைங்கிளியே. 32.

 

நானே கருதின்வர நாடார்சும் மாஇருந்தால்

தானே அணைவரவர் தன்மைஎன்னோ பைங்கிளியே. 33.

 

நீர்க்குமிழி போன்றவுடல் நிற்கையிலே சாசுவதஞ்

சேர்க்கஅறி யாமல் திகைப்பேனோ பைங்கிளியே. 34.

 

நெஞ்சகத்தில் வாழ்வார் நினைக்கின்வே றென்றணையார்

வஞ்சகத்தார் அல்லரவர் மார்க்கமென்னோ பைங்கிளியே. 35.

 

பன்முத் திரைச்சமயம் பாழ்படக்கல் லாலடிவாழ்

சின்முத் திரைஅரசைச் சேர்வேனோ பைங்கிளியே. 36.

 

பச்சைகண்ட நாட்டிற் பறக்கும்உனைப் போற்பறந்தேன்

இச்சைஎல்லாம் அண்ணற் கியம்பிவா பைங்கிளியே. 37.

 

பாசபந்தஞ் செய்ததுன்பம் பாராமல் எம்மிறைவர்

ஆசைதந்த துன்பமதற் காற்றேன்நான் பைங்கிளியே. 38.

 

பாராசை அற்றிறையைப் பற்றறநான் பற்றிநின்ற

பூராய மெல்லாம் புகன்றுவா பைங்கிளியே. 39.

 

பேதைப் பருவத்தே பின்தொடர்ந்தென் பக்குவமுஞ்

சோதித்த அண்ணல்வந்து தோய்வாரோ பைங்கிளியே. 40.

 

பைம்பயிரை நாடும்உன்போற் பார்பூத்த பைங்கொடிசேர்

செம்பயிரை நாடித் திகைத்தேன்நான் பைங்கிளியே. 41.

 

பொய்க்கூடு கொண்டு புலம்புவனோ எம்மிறைவர்

மெய்க்கூடு சென்று விளம்பிவா பைங்கிளியே. 42.

 

பொய்ப்பணிவேண் டேனைப் பொருட்படுத்தி அண்ணலென்பால்

மெய்ப்பணியுந் தந்தொருகால் மேவுவனோ பைங்கிளியே. 43.

 

மண்ணுறங்கும் விண்ணுறங்கும் மற்றுளஎ லாமுறங்குங்

கண்ணுறங்கேன் எம்மிறைவர் காதலாற் பைங்கிளியே. 44.

 

மட்டுப்படாத மயக்கமெல்லாந் தீரஎன்னை

வெட்டவெளி வீட்டில்அண்ணல் மேவுவனோ பைங்கிளியே. 45.

 

மாலைவளர்ந் தென்னை வளர்த்திறைவர் பன்னெறியாம்

பாலைவனத் தில்விட்ட பாவமென்னோ பைங்கிளியே. 46.

 

மெய்யில்நோய் மாற்றவுழ்தம் மெத்தவுண்டெம் அண்ணல்தந்த

மையல்நோய் தீர்க்க மருந்தும்உண்டோ பைங்கிளியே. 47.

 

மேவுபஞ்ச வண்ணமுற்றாய் வீண்சிறையால் அல்லலுற்றாய்

பாவிபஞ்ச வண்ணம் பகர்ந்துவா பைங்கிளியே. 48.

 

வாய்திறவா வண்ணமெனை வைத்தாண்டார்க் கென்துயரை 

நீதிறவாச் சொல்லின் நிசமாங்காண் பைங்கிளியே. 49.

 

வாட்டாப் படாத மவுனஇன்பங் கையாலே

காட்டிக் கொடுத்தானைக் காண்பேனோ பைங்கிளியே. 50.

 

வாரா வரவாக வந்தருளும் மோனருக்கென்

பேராசை எல்லாம்போய்ப் பேசிவா பைங்கிளியே. 51.

 

விண்ணவர்தம் பாலமுதம் வேப்பங்கா யாகஎன்பால்

பண்ணியதெம் அண்ணல்மயல் பார்த்தாயோ பைங்கிளியே. 52.

 

விண்ணுள் வளியடங்கி வேறற்ற தென்னஅருள்

கண்ணுள் அடங்கிடவுங் காண்பேனோ பைங்கிளியே. 53.

 

விண்ணார் நிலவுதவழ் மேடையிலெல் லாருமுற

மண்ணான வீட்டிலென்னை வைத்ததென்னோ பைங்கிளியே. 54.

 

உள்ளத்தி னுள்ளே ஒளித்திருந்தென் கள்ளமெல்லாம்

வள்ளல்அறிந் தால்எனக்கு வாயுமுண்டோ பைங்கிளியே. 55.

 

ஆகத்தை நீக்குமுன்னே ஆவித் துணைவரைநான்

தாகத்தின் வண்ணந் தழுவனோ பைங்கிளியே. 56.

 

தானே சுபாவந் தலைப்படநின் றான்ஞான

வானோ னவரும் வருவாரோ பைங்கிளியே. 57.

 

கள்ளத் தலைவரவர் கைகாட்டிப் பேசாமல்

உள்ளத்தில் வந்த உபாயமென்னோ பைங்கிளியே. 58.

 

        45. எந்நாள்கண்ணி

 

        1. தெய்வ வணக்கம்

 

நீர்பூத்த வேணி நிலவெறிப்ப மனறாடுங்

கார்பூத்த கண்டனையான் காணுநாள் எந்நாளோ. 1.

 

பொன்னாரும் மன்றுள்மணிப் பூவைவிழி வண்டுசுற்றும்

என்னா ரமுதின்நலன் இச்சிப்ப தெந்நாளோ. 2.

 

நீக்கிமலக் கட்டறுத்து நேரே வெளியிலெம்மைத்

தூக்கிவைக்குந் தாளைத் தொழுதிடிநாள் எந்நாளோ. 3.

 

கருமுகங்காட் டாமல்என்றுங் கர்ப்பூரம் வீசுந்

திருமுகமே நோக்கித் திருக்கறுப்ப தெந்நாளோ. 4.

 

வெஞ்சே லெனும்விழியார் வேட்கைநஞ்சுக் கஞ்சினரை

அஞ்சேல் எனுங்கைக் கபயமென்ப தெந்நாளோ. 5.

 

ஆறு சமயத்தும் அதுவதுவாய் நின்றிலங்கும்

வீறு பரைதிருத்தாள் மேவுநாள் எந்நாளோ. 6.

 

பச்சைநிற மாய்ச்சிவந்த பாகங் கலந்துவகை

இச்சையுடன் ஈன்றாளை யாங்காண்ப தெந்நாளோ. 7.

 

ஆதியந்தங் காட்டா தகண்டிதமாய் நின்றுணர்த்தும்

போதவடி வாம்அடியைப் போற்றுநாள் எந்நாளோ. 8.

 

கங்கை நிலவுசடைக் காட்டானைத் தந்தையெனும்

புங்கவெண்கோட் டானைபதம் புந்திவைப்ப தெந்நாளோ. 9.

 

அஞ்சமுகங் காட்டாமல் ஆறுமுகங் காட்டவந்த

செஞ்சரணச் சேவடியைச் சிந்தைவைப்ப தெந்நாளோ. 10.

 

தந்தைஇரு தாள்துணித்துத் தம்பிரான் தாள்சேர்ந்த

எந்தைஇரு தாளிணைக்கே இன்புறுவ தெந்நாளோ. 11.

 

        2. குமரமரபின் வணக்கம்

 

துய்ய கரமலரால் சொல்லாமல் சொன்னவுண்மை

ஐயனைக்கல் லால்அரசை யாமணைவ தெந்நாளோ. 1.

 

சிந்தையினுக் கெட்டாத சிற்சுகத்தைக் காட்டவல்ல

நந்தியடிக் கீழ்க்குடியாய் நாமணைவ தெந்நாளோ. 2.

 

எந்தை சனற்குமர னாதிஎமை ஆட்கொள்வான்

வந்த தவத்தினரை வாழ்த்துநாள் எந்நாளோ. 3.

 

பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித

மெய்கண்ட நாதன்அருள் மேவுநாள் எந்நாளோ. 4.

 

பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்த மாகவுண்மை

சாதித்தார் பொன்னடியைத் தான்பணிவ தெந்நாளோ. 5. 

 

சிற்றம் பலமன்னுஞ் சின்மயராந் தில்லைநகர்க்

கொற்றங் குடிமுதலைக் கூறுநாள் எந்நாளோ. 6.

 

குறைவிலருள் ஞானமுதல் கொற்றங் குடியடிகள்

நறைமலர்த்தாட் கன்புபெற்று நாமிருப்ப தெந்நாளோ. 7.

 

நாளவங்கள் போகாமல் நன்னெறியைக் காட்டிஎமை

ஆளவந்த கோலங்கட் கன்புவைப்ப தெந்நாளோ. 8.

 

என்னறிவை உள்ளடக்கி என்போல் வருமவுனி

தன்னறிவுக் குள்ளேநான் சாருநாள் எந்நாளோ. 9.

 

ஆறுளன்றை நாடின்அதற் காறுமுண்டா மென்றெமக்குக்

கூறும் மவுனியருள் கூடுநாள் எந்நாளோ. 10.

 

நில்லாமல் நின்றருளை நேரேபா ரென்றவொரு

சொல்லால் மவுனியருள் தோற்றுநாள் எந்நாளோ. 11.

 

வைதிகமாஞ் சைவ மவுனிமவு னத்தளித்த

மெய்திகழ்ந்தென் அல்லல் விடியுநாள் எந்நாளோ. 12.

 

வாக்குமன மற்ற மவுனிமவு னத்தருளே

தாக்கவும்என் அல்லலெல்லாந் தட்டழிவ தெந்நாளோ. 13.

 

        3. அடியார் வணக்கம்

 

வெம்பந்தந் தீர்த்துலகாள் வேந்தன் திருஞான

சம்பந் தனையருளாற் சாருநாள் எந்நாளோ. 1.

 

ஏரின் சிவபோகம் இங்கிவற்கே என்னஉழ

வாரங்கொள் செங்கையர்தாள் வாரம்வைப்ப தெந்நாளே. 2.

 

பித்தரிறை என்றறிந்து பேதைபால் தூதனுப்பு

வித்த தமிழ்ச்சமர்த்தர் மெய்புகழ்வ தெந்நாளோ. 3.

 

போதவூர் நாடறியப் புத்தர்தமை வாதில்வென்ற

வாதவூர் ஐயன்அன்பை வாஞ்சிப்ப தெந்நாளோ. 4.

 

ஓட்டுடன்பற் றின்றி உலகைத் துறந்தசெல்வப்

பட்டினத்தார் பத்ரகிரி பண்புணர்வ தெந்நாளோ. 5.

 

கண்டதுபொய் என்றகண்டா காரசிவம் மெய்யெனவே

விண்டசிவ வாக்கியர்தாள் மேவுநாள் எந்நாளோ. 6.

 

சக்கர வர்த்தி தவராச யோகியெனும்

மிக்கதிரு மூலன்அருள் மேவுநாள் எந்நாளோ. 7.

 

கந்தரநு பூதிபெற்றுக் கந்தரநு பூதிசொன்ன

எந்தைஅருள் நாடி இருக்குநாள் எந்நாளோ. 8.

 

எண்ணரிய சித்தர் இமையோர் முதலான்

பண்ணவர்கள் பத்தரருள் பாலிப்ப தெந்நாளோ. 9.

 

        4. யாக்கையைப் பழித்தல்

 

சுக்கிலமும் நீருஞ் சொரிமலமும் நாறும்உடல்

புக்குழலும் வாஞ்சையினிப் போதும்என்ப தெந்நாளோ. 1.

 

நீர்க்குமிழி பூணமைத்து நின்றாலும் நில்லாமெய்

பார்க்குமிடத் திதன்மேற் பற்றறுவ தெந்நாளோ. 2.

 

காக்கைநரி செந்நாய் கழுகொருநாள் கூடியுண்டு

தேக்குவிருந் தாம்உடலைச் சீஎன்ப தெந்நாளோ. 3.

 

செங்கிருமி யாதி செனித்தசென்ம பூமியினை

இங்கெனுட லென்னும் இழுக்கொழிவ தெந்நாளோ. 4.

 

தத்துவர்தொண் ணூற்றறுவர் தாமாய்வாழ் இந்நாட்டைப்

பித்தன்நான் என்னும் பிதற்றொழிவ தெந்நாளோ. 5.

 

ஊனொன்றி நாதன் உணர்த்தும்அதை விட்டறிவேன்

நானென்ற பாவிதலை நாணுநாள் எந்நாளோ. 6.

 

வேலையிலா வேதன் விதித்தஇந்த்ர சாலவுடல்

மாலைவியா பார மயக்கொழிவ தெந்நாளோ. 7.

 

ஆழ்ந்து நினைக்கின் அரோசிகமாம் இவ்வுடலில்

வாழ்ந்துபெறும் பேற்றை மதிக்குநாள் எந்நாளோ. 8.

 

மும்மலச்சே றான முழுக்கும்பி பாகமெனும்

இம்மலகா யத்துள் இகழ்ச்சிவைப்ப தெந்நாளோ. 9.

 

நாற்றமிகக் காட்டு நவவாயில் பெற்றபசுஞ்

சோற்றுத் துருத்தி சுமைஎன்ப தெந்நாளோ. 10.

 

உருவிருப்ப வுள்ளேதான் ஊறும் மலக்கேணி

அருவருப்பு வாழ்க்கையைக்கண் டஞ்சுநாள் எந்நாளோ. 11.

 

        5. மாதர் மயக்கருத்தல்

 

மெய்வீசு நாற்றமெலாம் மிக்கமஞ்ச ளால்மறைத்துப்

பொய்வீசும் வாயார் புலையொழிவ தெந்நாளோ. 1.

 

திண்ணியநெஞ் சப்பறவை சிக்கக் குழற்காட்டில்

கண்ணிவைப்போர் மாயங் கடக்குநாள் எந்நாளோ. 2.

 

கண்டுமொழி பேசிமனங் கண்டுகொண்டு கைவிலையாக்

கொண்டுவிடு மானார்பொய்க் கூத்தொழிவ தெந்நாளோ. 3.

 

காமனைவா வென்றிருண்ட கண்வலையை வீசும்மின்னார்

நாமம் மறந்தருளை நண்ணுநாள் எந்நாளோ. 4.

 

கண்களில்வெண் பீளை கரப்பக் கருமையிட்ட

பெண்கள்மயல் தப்பிப் பிழைக்குநாள் எந்நாளோ. 5.

 

வீங்கித் தளர்ந்து விழுமுலையார் மேல்வீழ்ந்து

தூங்குமதன் சோம்பைத் துடைக்குநாள் எந்நாளோ. 6.

 

கச்சிருக்குங் கொங்கை கரும்பிருக்கும் இன்மாற்றம்

வைச்சிருக்கும் மாதர் மயக்கொழிவ தெந்நாளோ. 7.

 

பச்சென்ற கொங்கைப் பரப்பியர்பா ழானமயல்

நச்சென் றறிந்தருளை நண்ணுநாள் எந்நாளோ. 8.

 

உந்திச் சுழியால் உளத்தைச் சுழித்தகன

தந்தித் தனத்தார் தமைமறப்ப தெந்நாளோ.  9.

 

தட்டுவைத்த சேலைக் கொய்சகத்திற் சிந்தைஎல்லாங்

கட்டிவைக்கும் மாயமின்னார் கட்டழிவ தெந்நாளோ. 10.

 

ஆழாழி என்ன அளவுபடா வஞ்சநெஞ்சப்

பாழான மாதர்மயல் பற்றொழிவ தெந்நாளோ. 11.

 

தூயபனித் திங்கள் சுடுவதெனப் பித்தேற்றும்

மாய மடவார் மயக்கொழிவ தெந்நாளோ. 12.

 

ஏழைக் குறும்புசெய்யும் ஏந்திழையார் மோகமெனும்

பாழைக் கடந்து பயிராவ தெந்நாளோ. 13.

 

விண்டு மொழிகுளறி வேட்கைமது மொண்டுதருந்

தொண்டியர்கள் கட்கடையிற் சுற்றொழிவ தெந்நாளோ. 14.

 

மெய்யிற் சிவம்பிறக்க மேவும்இன்பம் போல்மாதர்

பொய்யிலின் பின்றென்று பொருந்தாநாள் எந்நாளோ. 15.

 

        6. தத்துவ முறைமை

 

ஐம்பூதத் தாலே அலக்கழிந்த தோடமற

எம்பூத நாதனருள் எய்துநாள் எந்நாளோ. 1.

 

சத்தமுத லாம்புலனிற் சஞ்சரித்த கள்வரெனும்

பித்தர்பயந் தீர்ந்து பிழைக்குநாள் எந்நாளோ. 2.

 

நாளும் பொறிவழியை நாடாத வண்ணம்எமை

ஆளும் பொறியால் அருள்வருவ தெந்நாளோ. 3.

 

வாக்காதி யானகன்ம மாயைதம்பால் வீண்காலம்

போக்காமல் உண்மை பொருந்துநாள் எந்நாளோ. 4.

 

மனமான வானரக்கைம் மாலையாக் காமல்

எனையாள் அடிகளடி எய்துநாள் எந்நாளோ. 5.

 

வேட்டைப் புலப்புலையர் மேவாத வண்ணமனக்

காட்டைத் திருத்திக் கரைகாண்ப தெந்நாளோ. 6.

 

உந்து பிறப்பிறப்பை உற்றுவிடா தெந்தையருள்

வந்து பிறக்க மனமிறப்ப தெந்நாளோ. 7.

 

புத்திஎனுந் துத்திப் பொறியரவின் வாய்த்தேரை

ஒத்துவிடா தெந்தையருள் ஓங்குநாள் எந்நாளோ. 8.

 

ஆங்கார மென்னுமத யானைவா யிற்கரும்பாய்

ஏங்காமல் எந்தையருள் எய்துநாள் எந்நாளோ. 9.

 

சித்தமெனும் பௌவத் திரைக்கடலில் வாழ்துரும்பாய்

நித்தமலை யாதருளில் நிற்குநாள் எந்நாளோ. 10.

 

வித்தியா தத்துவங்கள் ஏழும் வெருண்டோடச்

சுத்தபர போகத்தைத் துய்க்குநாள் எந்நாளோ. 11.

 

சுத்தவித்தை யேமுதலாத் தோன்றுமோர் ஐந்துவகைத்

தத்துவத்தை நீங்கிஅருள் சாருநாள் எந்நாளோ. 12.

 

பொல்லாத காமப் புலைத்தொழிலில் என்னறிவு

செல்லாமல் நன்னெறியிற் சேருநாள் எந்நாளோ. 13.

 

அடிகளடிக் கீழ்க்குடியாய் யாம்வாழா வண்ணங்

குடிகெடுக்கும் பாழ்மடிமைக் கூறொழிவ தெந்நாளோ. 14.

 

ஆன புறவிக்கருவி ஆறுபத்தும் மற்றுளவும்

போனவழி யுங்கூடப் புல்முளைப்ப தெந்நாளோ. 15.

 

அந்தகனுக் கெங்கும்இரு ளானவா றாஅறிவில்

வந்தஇருள் வேலை வடியுநாள் எந்நாளோ. 16.

 

புன்மலத்தைச் சேர்ந்துமல போதம் பொருந்துதல்போய்

நின்மலத்தைச் சேர்ந்துமல நீங்குநாள் எந்நாளோ. 17.

 

கண்டுகண்டுந் தேறாக் கலக்கமெல்லாந் தீர்வண்ணம்

பண்டைவினை வேரைப் பறிக்குநாள் எந்நாளோ. 18.

 

பைங்கூழ் வினைதான் படுசாவி யாகஎமக்

கெங்கோன் கிரணவெயில் எய்துநாள் எந்நாளோ. 19.

 

குறித்தவித மாதியாற் கூடும்வினை எல்லாம்

வறுத்தவித்தாம் வண்ணம்அருள் வந்திடுநாள் எந்நாளோ. 20.

 

சஞ்சிதமே யாதி சரக்கான முச்சேறும்

வெந்தபொரி யாகஅருள் மேவுநாள் எந்நாளோ. 21.

 

தேகமுதல் நான்காத் திரண்டொன்றாய் நின்றிலகும்

மோகமிகு மாயை முடியுநாள் எந்நாளோ. 22.

 

சத்த முதலாத் தழைத்திங் கெமக்குணர்த்துஞ்

சுத்தமா மாயை தொடக்கறுவ தெந்நாளோ. 23.

 

எம்மை வினையை இறையைஎம்பாற் காட்டாத

அம்மை திரோதை அகலுநாள் எந்நாளோ. 24.

 

நித்திரையாய் வந்து நினைவழிக்குங் கேவலமாஞ்

சத்துருவை வெல்லுஞ் சமர்த்தறிவ எந்நாளோ. 25.

 

சன்னல்பின்ன லான சகலமெனும் குப்பையிடை

முன்னவன்ஞா னக்கனலை மூட்டுநாள் எந்நாளோ. 26.

 

மாயா விகார மலமொழிசுத் தாவத்தை

தோயா அருளைத் தொடருநாள் எந்நாளோ. 27.

 

        7. தன் உண்மை

 

உடம்பறியும் என்னும்அந்த ஊழலெல்லாந் தீரத்

திடம்பெறவே எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ.  1.

 

செம்மையறி வாலறிந்து தேகாதிக் குள்ளிசைந்த

எம்மைப் புலப்படவே யாமறிவ தெந்நாளோ. 2.

 

தத்துவமாம் பாழ்த்த சடவுருவைத் தான்சுமந்த

சித்துருவாம் எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ. 3.

 

பஞ்சப் பொறியைஉயி ரென்னும் அந்தப் பஞ்சமறச்

செஞ்செவே எம்மைத் தெரிசிப்ப தெந்நாளோ. 4.

 

அந்தக் கரணமுயி ராமென்ற அந்தரங்க

சிந்தைக் கணத்தில்எம்மைத் தேர்ந்தறிவ தெந்நாளோ. 5.

 

முக்குணத்தைச் சீவனென்னும் மூடத்தை விட்டருளால்

அக்கணமே எம்மை அறிந்துகொள்வ தெந்நாளோ. 6.

 

காலைஉயிர் என்னுங் கலாதிகள்சொற் கேளாமல்

சீலமுடன் எம்மைத் தெளிந்துகொள்வ தெந்நாளோ. 7.

 

வான்கெடுத்துத் தேடும் மதிகேடர் போலஎமை

நான்கெடுத்துத் தேடாமல் நன்கறிவ தெந்நாளோ. 8.

 

        8. அருளியல்பு

 

ஈனந் தருநா அதுநமக்கு வேண்டாவென்

றானந்த நாட்டில் அவதரிப்ப தெந்நாளோ. 1.

 

பொய்க்காட்சி யான புவனத்தை விட்டருளாம்

மெய்க்காட்சி யாம்புவனம் மேவுநாள் தெந்நாளோ. 2.

 

ஆதியந்தங் காட்டாமல் அம்பரம்போ லேநிறைந்த

தீதில் அருட்கடலைச் சேருநாள் எந்நாளோ. 3.

 

எட்டுத் திசைக்கீழ்மேல் எங்கும் பெருகிவரும்

வெட்டவெளி விண்ணாற்றின் மெய்தோய்வ தெந்நாளோ. 4.

 

சூதான மென்று சுருதிஎல்லாம் ஓலமிடும்

மீதான மானவெற்பை மேவுநாள் எந்நாளோ. 5.

 

வெந்துவெடிக் கின்றசிந்தை வெப்பகலத் தண்ணருளாய்

வந்துபொழி கின்ற மழைகாண்ப தெந்நாளோ. 6.

 

சூரியர்கள் சந்திரர்கள் தோன்றாச் சுயஞ்சோதிப்

பூரணதே யத்திற் பொருந்துநாள் எந்நாளோ. 7.

 

கன்றுமன வெப்பக் கலக்கமெலாந் தீரஅருள்

தென்றல்வந்து வீசுவெளி சேருநாள் எந்நாளோ. 8.

 

கட்டுநமன் செங்கோல் கடாவடிக்குங் கோலாக

வெட்ட வெளிப்பொருளை மேவுநாள் எந்நாளோ. 9.

 

சாலக் கபாடத் தடைதீர எம்பெருமான்

ஓலக்க மண்டபத்துள் ஓடுநாள் எந்நாளோ. 10.

 

விண்ணவன்தா ளென்னும் விரிநிலா மண்டபத்தில்

தண்ணீர் அருந்தித் தளர்வொழிவ தெந்நாளோ. 11.

 

வெய்யபுவி பார்த்து விழித்திருந்த அல்லலறத்

துய்ய அருளில துயிலுநாள் எந்நாளோ. 12.

 

வெய்ய பிறவிவெயில் வெப்பமெல்லாம் விட்டகல

ஐயனடி நீழல் அணையுநாள் எந்நாளோ. 13.

 

வாதைப் பிறவி வளைகடலை நீந்தஐயன்

பாதப் புணைஇணையைப் பற்றுநாள் எந்நாளோ. 14.

 

ஈனமில்லா மெய்பொருளை இம்மையிலே காணவெளி

ஞானமெனும் அஞ்சனத்தை நான்பெறுவ தெந்நாளோ. 15.

 

எல்லாம் இறந்தவிடத் தெந்தைநிறை வாம்வடிவைப்

புல்லாமற் புல்லிப் புணருநாள் எந்நாளோ. 16.

 

சடத்துளுயிர் போலெமக்குத் தானுயிராய் ஞானம்

நடத்துமுறை கண்டுபணி நாம்விடுவ தெந்நாளோ. 17.

 

எக்கணுமாந் துன்ப இருட்கடலை விட்டருளால்

மிக்ககரை ஏறி வெளிப்படுவ தெந்நாளோ. 18.

 

        9. பொருளியல்பு

 

கைவிளக்கின் பின்னேபோய்க் காண்பார்போல் மெய்ஞ்ஞான

மெய்விளக்கின் பின்னேபோய் மெய்காண்ப தெந்நாளோ. 1.

 

கேடில்பசு பாசமெல்லாங் கீழ்ப்படவுந் தானேமேல்

ஆடுஞ் சுகப்பொருளுக் கன்புறுவ தெந்நாளோ. 2.

 

ஆணவத்தை நீக்கி அறிவூடே ஐவகையாக்

காணவத்தைக் கப்பாலைக் காணுநாள் எந்நாளோ. 3.

 

நீக்கப் பிரியா நினைக்கமறக் கக்கூடாப்

போக்குவர வற்ற பொருளணைவ தெந்நாளோ. 4.

 

அண்டருக்கும் எய்ப்பில்வைப்பாம் ஆரமுதை என்அகத்தில்

கண்டுகொண்டு நின்று களிக்கும்நாள் எந்நாளோ. 5.

 

காட்டுந் திருவருளே கண்ணாகக் கண்டுபர

வீட்டின்ப மெய்ப்பொருளை மேவுநாள் எந்நாளோ. 6.

 

நானான தன்மை நழுவியே எவ்வுயிர்க்குந்

தானான உண்மைதனைச் சாருநாள் எந்நாளோ. 7.

 

சிந்தை மறந்து திருவருளாய் நிற்பவர்பால்

வந்தபொருள் எம்மையுந்தான் வாழ்விப்ப தெந்நாளோ. 8.

 

எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் வியாபகமாய்

உள்ளஒன்றை உள்ளபடி ஓருநாள் எந்நாளோ. 9.

 

அருவுருவம் எல்லாம் அகன்றதுவா யான

பொருளெமக்கு வந்து புலப்படுவ தெந்நாளோ. 10.

 

ஆரணமுங் காணா அகண்டிதா காரபரி

பூரணம்வந் தெம்மைப் பொருந்துநாள் எந்நாளோ. 11.

 

சத்தொடுசித் தாகித் தயங்கியஆ னந்தபரி

சுத்த அகண்டசிவந் தோன்றுநாள் எந்நாளோ. 12.

 

எங்கெங்கும் பார்த்தாலும் இன்புருவாய் நீக்கமின்றித்

தங்குந் தனிப்பொருளைச் சாருநாள் எந்நாளோ. 13.

 

அடிமுடிகாட் டாதசுத்த அம்பரமாஞ் சோதிக்

கடுவெளிவந் தென்னைக் கலக்குநாள் எந்நாளோ. 14.

 

ஒன்றனையுங் காட்டா உளத்திருளைச் சூறையிட்டு

நின்றபரஞ் சோதியுடன் நிற்குநாள் எந்நாளோ. 15.

 

எந்தச் சமயம் இசைந்தும்அறி வூடறிவாய்

வந்தபொரு ளேபொருளா வாஞ்சிப்ப தெந்நாளோ. 16.

 

எவ்வாறிங் குற்றுணர்ந்தார் யாவர் அவர்தமக்கே

அவ்வாறாய் நின்றபொருட் கன்புவைப்ப தெந்நாளோ. 17.

 

பெண்ணாண் அலியெனவும் பேசாமல் என்அறிவின்

கண்ணூடே நின்றஒன்றைக் காணுநாள் எந்நாளோ. 18.

 

நினைப்பும் மறப்பும்அற நின்றபரஞ் சோதி

தனைப்புலமா என்னறிவிற் சந்திப்ப தெந்நாளோ. 19.

 

        10. ஆனந்த இயல்பு

 

பேச்சுமூச் சில்லாத பேரின்ப வெள்ளமுற்று

நீச்சுநிலை காணாமல் நிற்குநாள் எந்நாளோ. 1.

 

சித்தந் தெளிந்தோர் தெளிவில் தெளிவான

சுத்த சுகக்கடலுள் தோயுநாள் எந்நாளோ. 2.

 

சிற்றின்பம் உண்டூழ் சிதையஅனந் தங்கடல்போல்

முற்றின்ப வெள்ளம்எமை மூடுநாள் எந்நாளோ. 3.

 

எல்லையில்பே ரின்பமயம் எப்படிஎன் றோர்தமக்குச்

சொல்லறியா ஊமர்கள்போற் சொல்லுநாள் எந்நாளோ. 4.

 

அண்டரண்ட கோடி அனைத்தும் உகாந்தவெள்ளங்

கொண்டதெனப் பேரின்பங் கூடுநாள் எந்நாளோ. 5.

 

ஆதியந்த மில்லாத ஆதிஅ நாதிஎனுஞ்

சோதிஇன்பத் தூடே துளையுநாள் எந்நாளோ. 6.

 

சாலோக மாதி சவுக்கியமும் விட்டநம்பால்

மேலான ஞானஇன்பம் மேவ்ய்நாள் எந்நாளோ. 7.

 

தற்பரத்தி னுள்ளேயுஞ் சாலோக மாதியெனும்

பொற்பறிந்தா னந்தம் பொருந்துநாள் எந்நாளோ. 8.

 

உள்ளத்தி னுள்ளே தான் ஊறுஞ் சிவானந்த

வெள்ளந் துளைந்து விடாய்தீர்வ தெந்நாளோ. 9.

 

கன்னலுடன் முக்கனியுங் கற்கண்டுஞ் சீனியுமாய்

மன்னும்இன்ப ஆரமுதை வாய்மடுப்ப தெந்நாளோ. 10.

 

மண்ணூ டுழன்ற மயக்கமெல்லாந் தீர்ந்திடவும்

விண்ணூ டெழுந்தசுகம் மேவுநாள் எந்நாளோ. 11.

 

கானற் சலம்போன்ற கட்டுழலைப் பொய்தீர

வானமுத வாவி மருவுநாள் எந்நாளோ. 12.

 

தீங்கரும்பென் றால்இனியா தின்றால் இனிப்பனபோல்

பாங்குறும்பே ரின்பம் படைக்குநாள் எந்நாளோ. 13.

 

புண்ணியபா வங்கள் பொருந்தாமெய் யன்பரெல்லாம்

நண்ணியபே ரின்பசுகம் நானணைவ தெந்நாளோ. 14.

 

        11. அன்புநிலை

 

தக்கரவி கண்ட சரோருகம்போல் என்னிதயம்

மிக்கஅருள் கண்டு விகசிப்ப தெந்நாளோ. 1.

 

வானமுகில் கண்ட மயூரபட்சி போலஐயன்

ஞானநடங் கண்டு நடிக்குநாள் எந்நாளோ. 2.

 

சந்திரனை நாடுஞ் சகோரபட்சி போல்அறிவில்

வந்தபரஞ் சோதியையான் வாஞ்சிப்ப தெந்நாளோ. 3.

 

சூத்திரமெய்ப் புற்றகத்துக் குண்டலிப்பாம் பொன்றாட்டுஞ்

சித்தனைஎன் கண்ணால் தரிசிப்ப தெந்நாளோ. 4.

 

அந்தரத்தே நின்றாடும் ஆனந்தக் கூத்தனுக்கென்

சிந்தை திறைகொடுத்துச் சேவிப்ப தெந்நாளோ. 5.

 

கள்ளனிவன் என்றுமெள்ளக் கைவிடுதல் காரியமோ

வள்ளலே என்று வருந்துநாள் எந்நாளோ. 6.

 

விண்ணாடர் காணா விமலா பரஞ்சோதி

அண்ணாவா வாவென் றரற்றுநாள் எந்நாளோ. 7.

 

ஏதேது செய்தாலும் என்பணிபோய் நின்பணியாம்

மாதேவா என்று வருந்துநாள் எந்நாளோ. 8.

 

பண்டுங்கா ணேன்நான் பழம்பொருளே இன்றும்உனைக்

கண்டுங்கா ணேன்எனவுங் கைகுவிப்ப தெந்நாளோ. 9.

 

பொங்கேத மான புழுக்கமெலாந் தீரஇன்பம்

எங்கேஎங் கேஎன் றிரங்குநாள் எந்நாளோ. 10.

 

கடலின்மடை கண்டதுபோற் கண்ணீ ராறாக

உடல்வெதும்பி மூர்ச்சித் துருகுநாள் எந்நாளோ. 11.

 

புலர்ந்தேன் முகஞ்சருகாய்ப் போனேன்நிற் காண

அலந்தேன்என் றேங்கி அழுங்குநாள் எந்நாளோ. 12.

 

புண்ணீர்மை யாளர் புலம்புமா போற்புலம்பிக்

கண்ணீருங் கம்பலையுங் காட்டுநாள் எந்நாளோ. 13.

 

போற்றேனென் றாலும்என்னைப் புந்திசெயும் வேதனைக்கிங்

காற்றேன்ஆற் றேனென் றரற்றுநாள் எந்நாளோ. 14.

 

பொய்ம்முடங்கும் பூமிசில போட்டலறப் பூங்கமலன்

கைம்முடங்க நான்சனனக் கட்டறுவ தெந்நாளோ. 15.

 

கற்குணத்தைப் போன்றவஞ்சக் காரர்கள்கை கோவாமல்

நற்குணத்தார் கைகோத்து நான்திரிவ தெந்நாளோ. 16.

 

துட்டனைமா மாயைச் சுழல்நீக்கி அந்தரமே

விட்டனையோ என்று வியக்குநாள் எந்நாளோ. 17.

 

        12. அன்பர் நெறி

 

அத்துவா எல்லாம் அடங்கச்சோ தித்தபடிச்

சித்துருவாய் நின்றார் தெளிவறிவ தெந்நாளோ. 1.

 

மூச்சற்றுச் சிந்தை முயற்சியற்று மூதறிவாய்ப்

பேச்சற்றோர் பெற்றஒன்றைப் பெற்றிடுநாள் எந்நாளோ. 2.

 

கோட்டாலை யான குணமிறந்த நிர்க்குணத்தோர்

தேட்டாலே தேடுபொருள் சேருநாள் தெந்நாளோ. 3.

 

கெடுத்தே பசுத்துவத்தைக் கேடிலா ஆனந்தம்

அடுத்தோ ரடுத்தபொருட் கார்வம்வைப்ப தெந்நாளோ. 4.

 

கற்கண்டால் ஓடுகின்ற காக்கைபோல் பொய்ம்மாயச்

சொற்கண்டால் ஓடும்அன்பர் தோய்வறிவ தெந்நாளோ. 5.

 

மெய்த்தகுலங் கல்விபுனை வேடமெலாம் ஓடவிட்ட

சித்தரொன்றுஞ் சேராச் செயலறிவ தெந்நாளோ. 6.

 

குற்றச் சமயக் குறும்படர்ந்து தற்போதம்

அற்றவர்கட் கற்றபொருட் கன்புவைப்ப தெந்நாளோ. 7.

 

தர்க்கமிட்டுப் பாழாஞ் சமயக் குதர்க்கம்விட்டு

நிற்குமவர் கண்டவழி நேர்பெறுவ தெந்நாளோ. 8.

 

வீறியவே தாந்தமுதல் மிக்க கலாந்தம்வரை

ஆறுமுணர்ந் தோருணர்வுக் கன்புவைப்ப தெந்நாளோ. 9.

 

கண்டஇட மெல்லாங் கடவுள்மயம் என்றறிந்து

கொண்டநெஞ்சர் நேயநெஞ்சிற் கொண்டிருப்ப தெந்நாளோ. 10.

 

பாக்கியங்க ளெல்லாம் பழுத்து மனம்பழுத்தோர்

நோக்குந் திருக்கூத்தை நோக்குநாள் எந்நாளோ. 11.

 

எவ்வுயிருந் தன்னுயிர்போல் எண்ணுந் தபோதனர்கள்

செவ்வறிவை நாடிமிகச் சிந்தைவைப்ப தெந்நாளோ. 12.

 

        13. அறிஞர் உரை

 

இருநிலனாய்த் தீயாகி என்றதிருப் பாட்டின்

பெருநிலையைக் கண்டணைந்து பேச்சறுவ தெந்நாளோ. 1.

 

அற்றவர்கட் கற்றசிவன் ஆமென்ற அத்துவித

முற்றுமொழி கண்டருளில் மூழ்குநாள் எந்நாளோ. 2.

 

தானென்னை முன்படைத்தான் என்ற தகவுரையை

நானென்னா உண்மைபெற்று நாமுணர்வ தெந்நாளோ. 3.

 

என்னுடைய தோழனுமாய் என்ற திருப்பாட்டின்

நன்னெறியைக் கண்டுரிமை நாஞ்செய்வ தெந்நாளோ. 4.

 

ஆருடனே சேரும் அறிவென்ற அவ்வுரையைத்

தேரும் படிக்கருள்தான் சேருநாள் எந்நாளோ. 5.

 

உன்னில்உன்னும் என்ற உறுமொழியால் என்னிதயந்

தன்னில்உன்னி நன்னெறியைச் சாருநாள் எந்நாளோ. 6.

 

நினைப்பறவே தான்நினைந்தேன் என்றநிலை நாடி

அனைத்துமாம் அப்பொருளில் ஆழுநாள் எந்நாளோ. 7.

 

சென்றுசென் றேயணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாகி

நின்றுவிடும் என்றநெறி நிற்குநாள் எந்நாளோ. 8.

 

ஆதியந்த மில்லா அரியபரஞ் சோதிஎன்ற

நீதிமொழி கண்டதுவாய் நிற்குநாள் எந்நாளோ. 9.

 

பிறிதொன்றி லாசையின்றிப் பெற்றிருந்தேன் என்ற 

நெறியுடையான் சொல்லில்நிலை நிற்குநாள் எந்நாளோ. 10.

 

திரையற்ற நீர்போல் தெளியஎனத் தேர்ந்த

உரைபற்றி உற்றங்கு ஒடுங்குநாள் எந்நாளோ. 11.

 

அறியா அறிவில் அவிழ்ந்தேற என்ற

நெறியாம் உரையுணர்ந்து நிற்குநாள் எந்நாளோ. 12.

 

எனக்குள்நீ என்றும் இயற்கையாப் பின்னும்

உனக்குள்நான் என்ற உறுதிகொள்வ தெந்நாளோ. 13.

 

அறிவை அறிவதுவே யாகும் பொருளென்று

உறுதிசொன்ன உண்மையினை ஒருநாள் எந்நாளோ. 14.

 

        14. நிற்குநிலை

 

பண்ணின் இசைபோலப் பரமன்பால் நின்றதிறன்

எண்ணி அருளாகி இருக்குநாள் எந்நாளோ. 1.

 

அறிவோ டறியாமை அற்றறிவி னூடே

குறியி லறிவுவந்து கூடுநாள் எந்நாளோ. 2.

 

சொல்லால் மனத்தால் தொடராச்சம் பூரணத்தில்

நில்லா நிலையாய் நிலைநிற்ப தெந்நாளோ.  3.

 

செங்கதிரின் முன்மதியந் தேசடங்கி நின்றிடல்போல்

அங்கணனார் தாளில் அடங்குநாள் எந்நாளோ. 4.

 

வானூ டடங்கும் வளிபோல இன்புருவாங்

கோனூ டடங்குங் குறிப்பறிவ தெந்நாளோ. 5.

 

செப்பரிய தண்கருணைச் சிற்சுகனார் பூரணத்தில்

அப்பினிடை உப்பாய் அணையுநாள் எந்நாளோ. 6.

 

தூய அறிவான சுகரூப சோதிதன்பால்

தீயில் இரும்பென்னத் திகழுநாள் எந்நாளோ. 7.

 

தீதணையாக் கர்ப்பூர தீபமென நான்கண்ட

சோதியுட னொன்றித் துரிசறுவ தெந்நாளோ. 8.

 

ஆராருங் காணாத அற்புதனார் பொற்படிக்கீழ்

நீரார் நிழல்போல் நிலாவுநாள் எந்நாளோ. 9.

 

எட்டத் தொலையாத எந்தைபிரான் சந்நிதியில்

பட்டப் பகல்விளக்காய்ப் பண்புறுவ் தெந்நாளோ. 10.

 

கருப்புவட்டா வாய்மடுத்துக் கண்டார்நாப் போல்

விருப்புவட்டா இன்புருவை மேவுநாள் எந்நாளோ. 11.

 

துச்சப் புலனால் சுழலாமல் தண்ணருளால்

உச்சிக் கதிர்ப்படிகம் ஒவ்வுநாள் எந்நாளோ. 12.

 

இம்மா நிலத்தில் இருந்தபடி யேயிருந்து

சும்மா அருளைத் தொடருநாள் எந்நாளோ. 13.

 

தானவனாந் தன்மைஎய்தித் தண்டமென அண்டமெங்கும்

ஞான மதயானை நடத்துநாள் எந்நாளோ. 14.

 

ஒன்றிரண்டு மில்லதுவாய் ஒன்றிரண்டு முள்ளதுவாய்

நின்ற சமத்துநிலை நோபெறுவ தெந்நாளோ. 15.

 

பாசம் அகலாமல் பதியில் கலவாமல்

மாசில் சமத்துமுத்தி வாய்க்குநாள் எந்நாளோ. 16.

 

சிற்றறிவு மெள்ளச் சிதைந்தெம்மான் பேரறிவை

உற்றறியா வண்ணமறிந் தோங்குநாள் எந்நாளோ. 17.

 

தந்திரத்தை மந்திரத்தைச் சாரின்நவை யாம் அறிவென்

றெந்தையுணர் வேவடிவாய் எய்துநாள் எந்நாளோ. 18.

 

போக்குவர வற்றவெளி போல்நிறைந்த போதநிலை

நீக்கமறக் கூடி நினைப்பறுவ தெந்நாளோ. 19.

 

காண்பானுங் காட்டுவதுங் காட்சியுமாய் நின்றஅந்த

வீண்பாவம் போய்அதுவாய் மேவுநாள் எந்நாளோ. 20.

 

வாடாதே நானாவாய் மாயாதே எங்கோவை

நாடாதே நாடி நலம்பெறுவ தெந்நாளோ. 21.

 

ஆடலையே காட்டிஎன தாடலொழித் தாண்டான்பொன்

தாள்தலைமேல் சூடித் தழைக்குநாள் எந்நாளோ. 22.

 

மேலொடுகீ ழில்லாத வித்தகனார் தம்முடனே

பாலொடுநீர் போற்கலந்து பண்புறுவ தெந்நாளோ. 23.

 

அறியா தறிந்தெமையாள் அண்ணலை நாமாகக்

குறியாத வண்ணங் குறிக்குநாள் எந்நாளோ. 24.

 

ஓராமல் மந்திரமும் உன்னாமல் நம்பரனைப்

பாராமற் பார்த்துப் பழகுநாள் எந்நாளோ. 25.

 

ஊன்பற்றும் என்னோ டுறவுபற்றும் பூரணன்பால்

வான்பற்றுங் கண்போல் மருவுநாள் எந்நாளோ. 26.

 

ஆண்டான் மவுனி அளித்தஅறி வாலறிவைத்

தூண்டாமல் தூண்டித் துலங்குநாள் எந்நாளோ. 27.

 

ஆணவத்தொ டத்துவித மானபடி மெஞ்ஞானத்

தாணுவினோ டத்துவிதஞ் சாருநாள் எந்நாளோ. 28.

 

        15. நிலைபிரிந்தோர் கூடுதற் குபாயம்

 

கன்மநெறி தப்பிற் கடுநரகென் றெந்நாளும்

நன்மைதரு ஞானநெறி நானணைவ தெந்நாளோ. 1.

 

ஞானநெறி தானே நழுவிடினும் முப்பதத்துள்

ஆனமுத்தி நல்குமென அன்புறுவ தெந்நாளோ. 2.

 

பன்மார்க்க மான பலஅடிபட் டேனுமொரு

சொன்மார்க்கங் கண்டு துலங்குநாள் எந்நாளோ. 3.

 

அத்துவுத மென்ற அந்நியச்சொற் கண்டுணர்ந்து

சுத்த சிவத்தைத் தொடருநாள் எந்நாளோ. 4.

 

கேட்டல்முதல் நான்காலே கேடிலா நாற்பதமும்

வாட்டமற எனக்கு வாய்க்குநாள் எந்நாளோ. 5.

 

என்னதுயான் என்பதற எவ்விடமும் என்னாசான்

சந்நிதியாக் கண்டுநிட்டை சாதிப்ப தெந்நாளோ. 6.

 

நாம்பிரம மென்றால் நடுவேயொன் றுண்டாமால்

தேம்பிஎல்லா மொன்றாய்த் திகழுநாள் எந்நாளோ. 7.

 

முச்சகமே யாதி முழுதுமகண் டாகார

சச்சிதா னந்தசிவந் தானென்ப தெந்நாளோ. 8.

 

எவ்வடிவும் பூரணமாம் எந்தையுரு வென்றிசைந்த

அவ்வடிவுக் குள்ளே அடங்குநாள் எந்நாளோ. 9.

 

சிந்தித்த தெல்லாஞ் சிவபூ ரணமாக

வந்தித்து வாழ்த்தி வணங்குநாள் எந்நாளோ. 10.

 

தாங்கியபார் விண்ணாதி தானேஞா னாக்கினியாய்

ஓங்குமி யோகவுணர் வுற்றிடுநாள் எந்நாளோ. 11.

 

ஆசனமூர்த் தங்க ளறஅகண்டா காரசிவ

பூசைசெய ஆசை பொருந்துநாள் எந்நாளோ. 12.

 

அஞ்செழுத்தின் உண்மை அதுவான அப்பொருளை

நெஞ்சழுத்தி ஒன்றாகி நிற்குநாள் எந்நாளோ. 13.

 

அவ்வுயிர்போல் எவ்வுயிரும் ஆனபிரான் தன்னடிமை

எவ்வுயிரு மென்றுபணி யாஞ்செய்வ தெந்நாளோ. 14.

 

தேசிகர்கோ னான திறன்மவுனி நந்தமக்கு

வாசி கொடுக்க மகிழுநாள் எந்நாளோ. 15.

 

குருலிங்க சங்கமமாக் கொண்ட திருமேனி

அருள்மயமென் றன்புற் றருள்பெறுவ தெந்நாளோ. 16.

 

        46. காண்பேனோ என்கண்ணி

 

சிந்திக்குந் தோறுந் தெவிட்டா அமுதேஎன்

புந்திக்குள் நீதான் பொருந்திடவுங் காண்பேனோ. 1.

 

கேவலத்தில் நான்கிடந்து கீழ்ப்படா தின்பஅருள்

காவலன்பால் ஒன்றிக் கலந்திடவுங் காண்பேனோ. 2.

 

துரியங் கடந்தஒன்றே தூவெளியாய் நின்ற

பெரியநிறை வேஉனைநான் பெற்றிடவுங் காண்பேனோ. 3.

 

மாசற்ற அன்பர்நெஞ்சே மாறாத பெட்டகமாத்

தேசுற்ற மாமணிநின் தேசினையுங் காண்பேனோ. 4.

 

மாயா விகார மலமகல எந்தைபிரான்

நேயானு பூதி நிலைபெறவுங் காண்பேனோ. 5.

 

பொய்யுலகும் பொய்யுறவும் பொய்யுடலும் பொய்யெனவே

மெய்யநினை மெய்யெனவே மெய்யுடனே காண்பேனோ. 6.

 

வாலற்ற பட்டமென மாயா மனப்படலங்

காலற்று வீழவும்முக் கண்ணுடையாய் காண்பேனோ. 7.

 

உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் நின்றுசுகங்

கொள்ளும் படிக்கிறைநீ கூட்டிடவுங் காண்பேனோ. 8.

 

காட்டுகின்ற முக்கட் கரும்பே கனியேஎன்

ஆட்டமெல்லாந் தீரஉன தாடலையுங் காண்பேனோ. 9.

 

தூங்காமல் தூங்கிச் சுகப்பெருமான் நின்நிறைவில்

நீங்காமல் நிற்கும் நிலைபெறவுங் காண்பேனோ. 10.

 

வாதவூ ராளிதனை வான்கருணை யால்விழுங்கும்

போதவூ ரேறேநின் பொன்னடியுங் காண்பேனோ. 11.

 

சாட்டைஇலாப் பம்பரம்போல் ஆடுஞ் சடசால

நாட்டமற எந்தைசுத்த ஞானவெளி காண்பேனோ. 12.

 

மன்றாடும் வாழ்வே மரகதஞ்சேர் மாணிக்கக்

குன்றேநின் தாட்கீழ்க் குடிபெறவுங் காண்பேனோ. 13.

 

பொய்யென் றறிந்தும்எமைப் போகவொட்டா தையஇந்த

வையங் கனமயக்க மாற்றிடவுங் காண்பேனோ. 14.

 

தாயினும் நல்ல தயாளுவே நின்னை உன்னித்

தீயின்மெழு கொத்துருகுஞ் சிந்தைவரக் காண்பேனோ. 15.

 

என்செயினும் என்பெறினும் என்னிறைவா ஏழையன்கான்

நின்செயலென் றுன்னும் நினைவுவரக் காண்பேனோ. 16.

 

எள்ளத் தனையும் இரக்கமிலா வன்பாவி

உள்ளத்தும் எந்தை உலவிடவுங் காண்பேனோ. 17.

 

வஞ்சகத்துக் காலயமாம் வல்வினையேன் ஆகெடுவேன்

நெஞ்சகத்தில் ஐயாநீ நேர்பெறவுங் காண்பேனோ. 18.

 

தொல்லைப் பிறவித் துயர்கெடவும் எந்தைபிரான்

மல்லற் கருணை வழங்கிடவுங் காண்பேனோ. 19.

 

வாளாருங் கண்ணார் மயற்கடலில் ஆழ்ந்தேன்சற்

றாளாக  எந்தை அருள்செயவுங் காண்பேனோ. 20.

 

பஞ்சாய்ப் பறக்குநெஞ்சப் பாவியைநீ கூவிஐயா

அஞ்சாதே என்றின் னருள் செயவுங் காண்பேனோ. 21.

 

ஆடுகறங் காகி அலமந் துழன்றுமனம்

வாடுமெனை ஐயாநீ வாவெனவுங் காண்பேனோ. 22.

 

சிட்டர்க் கெளிய சிவனேயோ தீவினையேன்

மட்டற்ற ஆச்சை மயக்கறவுங் காண்பேனோ. 23.

 

உள்நின் றுணர்த்தும் உலப்பிலா ஒன்றேநின்

தண்ணென்ற சாந்தஅருள் சார்ந்திடவுங் காண்பேனோ. 24.

 

ஓடுங் கருத்தொடுங்க உள்ளுணர்வு தோன்றநினைக்

கூடும் படிக்கிறைநீ கூட்டிடவுங் காண்பேனோ. 25.

 

வாக்கால் மனத்தால் மதிப்பரியாய் நின்னருளை

நோக்காமல் நோக்கிநிற்கும் நுண்ணறிவு காண்பேனோ. 26.

 

இவ்வுடம்பு நீங்குமுனே எந்தாய்கேள் இன்னருளாம்

அவ்வுடம்புக் குள்ளே அவதரிக்கக் காண்பேனோ. 27.

 

நித்தமாய் ஒன்றாய் நிரஞ்சனமாய் நிர்க்குணமாஞ்

சுத்தவெளி நீவெளியாய்த் தோன்றிடவுங் காண்பேனோ. 28.

 

கண்ணிறைந்த மோனக் கருத்தேஎன் கண்ணேஎன்

உள்நிறைந்த மாயை ஒழிந்திடவுங் காண்பேனோ. 29.

 

அத்தா விமலா அருளாளா ஆனந்த

சித்தா எனக்குன்அருள் செய்திடவுங் காண்பேனோ. 30.

 

வீணே பிறந்திருந்து வேசற்றேன் ஆசையறக்

காணேன் இறைநின் கருணைபெறக் காண்பேனோ. 31.

 

சட்டையொத்த இவ்வுடலைத் தள்ளுமுன்னே நான்சகச

நிட்டையைப்பெற் றையா நிருவிகற்பங் காண்பேனோ. 32.

 

எல்லாந் தெரியும் இறைவாஎன் அல்லலெலாஞ்

சொல்லாமுன் நீதான் தொகுத்திரங்கக் காண்பேனோ. 33.

 

அண்டபகி ரண்டம் அனைத்து மொருபடித்தாக்

கண்டவர்கள் கண்டதிருக் காட்சியையுங் காண்பேனோ. 34.

 

ஊனிருந்த காயம் உடனிருப்ப எந்தைநின்பால்

வானிருந்த தென்னவுநான் வந்திருக்கக் காண்பேனோ. 35.

 

தினையத் தனையுந் தெளிவறியாப் பாவியேன்

நினைவிற் பரம்பொருள்நீ நேர்பெறவுங் காண்பேனோ. 36.

 

துன்பமெனுந் திட்டனைத்துஞ் சூறையிட ஐயாவே

இன்பவெள்ளம் வந்திங் கெதிர்ப்படவுங் காண்பேனோ. 37.

 

        47. ஆகாதோ என்கண்ணி

 

கல்லாத நெஞ்சங் கரைந்துருக எத்தொழிற்கும்

வல்லாய்நின் இன்பம் வழங்கினால் ஆகாதோ. 1.

 

என்னை அறிய எனக்கறிவாய் நின்றருள்நின்

தன்னைஅறிந் தின்பநலஞ் சாரவைத்தால் ஆகாதோ. 2.

 

பொய்ம்மயமே யான புரைதீர எந்தைஇன்ப

மெய்ம்மயம்வந் தென்னை விழுங்கவைத்தால் ஆகாதோ. 3.

 

மட்டில்லாச் சிற்சுகமாம் வாழ்வேநின் இன்பமயஞ்

சிட்டர்போல் யானருந்தித் தேக்கவைத்தால் ஆகாதோ. 4.

 

அத்தாநின் பொற்றா ளடிக்கே அனுதினமும்

பித்தாகி இன்பம் பெருகவைத்தால் ஆகாதோ. 5.

 

மெல்லியலார் மோக விழற்கிறைப்பேன் ஐயாநின்

எல்லையில்ஆ னந்தநலம் இச்சித்தால் ஆகாதோ. 6.

 

சுட்டழகா யெண்ணுமனஞ் சூறையிட்டா னந்தமயக்

கட்டழகா நின்னைக் கலக்கவைத்தால் ஆகாதோ. 7.

 

சோதியே நந்தாச் சுகவடிவே தூவெளியே

ஆதியே என்னை அறியவைத்தால் ஆகாதோ. 8.

 

நேசஞ் சிறிதுமிலேன் நின்மலனே நின்னடிக்கே

வாசஞ் செயஇரங்கி வாவென்றால் ஆகாதோ. 9.

 

என்னறிவுக் குள்ளே இருந்ததுபோல் ஐயாவே

நின்னறிவுள் நின்னுடன்யான் நிற்கவைத்தால் ஆகாதோ. 10.

 

ஆதிப் பிரானேஎன் அல்லல் இருளகலச்

சோதிப்ர காசமயந் தோற்றுவித்தால் ஆகாதோ. 11.

 

ஆசைச் சுழற்கடலில் ஆழாமல் ஐயாநின்

நேசப் புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ. 12.

 

பாசநிக ளங்களெல்லாம் பஞ்சாகச் செஞ்செவே

ஈசஎனை வாவென் றிரங்கினால் ஆகாதோ. 13.

 

ஓயாவுள் ளன்பாய் உருகிவாய் விட்டரற்றிச்

சேயாகி எந்தைநின்னைச் சேரவைத்தால் ஆகாதோ. 14.

 

ஆதியாம் வாழ்வாய் அகண்டிதமாய் நின்றபரஞ்

சோதிநீ என்னைத் தொழும்பனென்றால் ஆகாதோ. 15.

 

விண்ணாரக் கண்ட விழிபோற் பரஞ்சோதி

கண்ணார நின்நிறைவைக் காணவைத்தால் ஆகாதோ. 16.

 

சேராமற் சேர்ந்துநின்று சின்மயனே நின்மயத்தைப்

பாராமற் பாரெனநீ பட்சம்வைத்தால் ஆகாதோ. 17.

 

கண்ணாடி போலஎல்லாங் காட்டுந் திருவருளை

உள்நாடி ஐயா உருகவைத்தால் ஆகாதோ. 18.

 

மூலஇருள் கால்வாங்க மூதறிவு தோன்ற அருட்

கோலம்வெளி யாகஎந்தை கூடுவித்தால் ஆகாதோ. 19.

 

சாற்றரிய இன்பவெள்ளந் தாக்குமதில் நீமுளைக்கில்

ஊற்றமுறு மென்னஅதில் உண்மைசொன்னால் ஆகாதோ. 20.

 

கையுங் குவித்திரண்டு கண்ணருவி பெய்யஅருள்

ஐயநின்தாள் கீழே அடிமைநின்றால் ஆகாதோ. 21.

 

        48. இல்லையோ என்கண்ணி

 

ஏதுந் தெரியா தெனைமறைத்த வல்லிருளை

நாதநீ நீக்கஒரு ஞானவிளக் கில்லையோ. 1.

 

பணியற்று நின்று பதைப்பறஎன் கண்ணுள்

மணியொத்த சோதிஇன்ப வாரிஎனக் கில்லையோ. 2.

 

எம்மால் அறிவதற எம்பெருமான் யாதுமின்றிச்

சும்மா இருக்கஒரு சூத்திரந்தான் இல்லையோ. 3.

 

நாய்க்குங் கடையானேன் நாதாநின் இன்பமயம்

வாய்க்கும் படிஇனியோர் மந்திரந்தான் இல்லையோ. 4.

 

ஊனாக நிற்கும் உணர்வைமறந் தையாநீ

தானாக நிற்கஒரு தந்திரந்தான் இல்லையோ. 5.

 

அல்லும் பகலும் அகண்டவடி வேஉனைநான்

புல்லும் படிஎனக்கோர் போதனைதான்  இல்லையோ. 6.

 

        49. வேண்டாவோ என்கண்ணி

 

கண்டவடி வெல்லாநின் காட்சிஎன்றே கைகுவித்துப்

பண்டுமின்றும் நின்றஎன்னைப் பார்த்திரங்க வேண்டாவோ. 1.

 

வாதனையோ டாடும் மனப்பாம்பு மாயஒரு

போதனைதந் தையா புலப்படுத்த வேண்டாவோ. 2.

 

தன்னை அறியத் தனிஅறிவாய் நின்றருளும்

நின்னைஅறிந் தென்அறிவை நீங்கிநிற்க வேண்டாவோ. 3.

 

அள்ளக் குறையா அகண்டிதா னந்தமெனும்

வெள்ளமெனக் கையா வெளிப்படுத்த வேண்டாவோ. 4.

 

அண்டனே அண்டர் அமுதேஎன் ஆருயிரே

தொண்டனேற் கின்பந் தொகுத்திரங்க வேண்டாவோ. 5.

 

பாராதே நின்று பதையாதே சும்மாதான்

வாரா யெனவும் வழிகாட்ட வேண்டாவோ. 6.

 

        50. நல்லறிவே என் கண்ணி

 

எண்ணிறைந்த மேன்மைபடைத் தெவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்க்

கண்ணிறைந்த சோதியைநாங் காணவா நல்லறிவே. 1. 

 

சித்தான நாமென் சடத்தைநா மென்னஎன்றுஞ்

சத்தான உண்மைதனைச் சாரவா நல்லறிவே. 2.

 

அங்குமிங்கும் எங்குநிறை அற்புதனார் பொற்பறிந்து

பங்கயத்துள் வண்டாய்ப் பயன்பெறவா நல்லறிவே. 3.

 

கான்றசோ றென்னஇந்தக் காசினிவாழ் வத்தனையுந்

தோன்ற அருள்வெளியில் தோன்றவா நல்லறிவே. 4.

 

        51. பலவகைக்கண்ணி

 

என்னரசே கேட்டிலையோ என்செயலோ ஏதுமிலை

தன்னரசு நாடாகித் தத்துவங்கூத் தாடியதே. 1.

 

பண்டொருகால் நின்பாற் பழக்கமுண்டோ எந்தைநினைக்

கண்டொருகாற் போற்றக் கருத்துங் கருதியதே. 2.

 

கண்டனவே காணுமன்றிக் காணாவோ காணாஎன்

கொண்டறிவேன் எந்தைநினைக் கூடுங் குறிப்பினையே. 3.

 

கல்லா லடியில்வளர் கற்பகமே என்னளவோ

பொல்லா வினைக்குப் பொருத்தந்தான் சொல்லாயோ. 4.

 

தப்பிதமொன் றின்றியது தானாக நிற்கஉண்மை

செப்பியது மல்லால்என் சென்னியது தொட்டனையே. 5. 

 

மாசான நெஞ்சன்இவன் வஞ்சனென்றோ வாய்திறந்து

பேசா மவுனம் பெருமான் படைத்ததுவே. 6.

 

கற்பதெல்லாங் கற்றேம்முக் கண்ணுடையாய் நின்பணியாய்

நிற்பதுகற் றன்றோ நிருவிகற்ப மாவதுவே. 7.

 

முன்னளவில் கன்மம் முயன்றான் இவனென்றோ

என்னளவில் எந்தாய் இரங்கா திருந்ததுவே. 8.

 

நெஞ்சகம்வே றாகி நினைக்கூட எண்ணுகின்ற

வஞ்சகனுக் கின்பம்எந்தாய் வாய்க்குமா றெவ்வாறே. 9.

 

பள்ளங்கள் தோறும் பரந்தபுனல் போல்உலகில்

உள்ளம் பரந்தால் உடையாய்என் செய்வேனே. 10.

 

முன்னினைக்கப் பின்மறைக்கும் மூடஇருள் ஆகெடுவேன்

என்னினைக்க என்மறக்க எந்தை பெருமானே. 11.

 

வல்லாளா மோனாநின் வான்கருணை என்னிடத்தே

இல்லாதே போனால்நான் எவ்வண்ணம் உய்வேனே. 12.

 

வாக்கும் மனமும் மவுனமுற எந்தைநின்னை

நோக்கும் மவுனமிந்த நூலறிவில் உண்டாமோ. 13.

 

ஒன்றாய்ப் பலவாய் உலகமெங்குந் தானேயாய்

நின்றாய் ஐயாஎனைநீ நீங்கற் கெளிதாமோ. 14.

 

ஆவித் துணையே அருமருந்தே என்றனைநீ

கூவிஅழைத் தின்பங் கொடுத்தாற் குறைவாமோ. 15.

 

எத்தனையோ நின்விளையாட் டெந்தாய்கேள் இவ்வளவென்

றத்தனையும் என்னால் அறியுந் தரமாமோ. 16.

 

தேடுவார் தேடுஞ் சிவனேயோ நின்திருத்தாள்

கூடுவான் பட்டதுயர் கூறற் கெளிதாமோ. 17.

 

பற்றினதைப் பற்றும்எந்தாய் பற்றுவிட்டாற் கேவலத்தில்

உற்றுவிடும் நெஞ்சம்உனை  ஒன்றிநிற்ப தெப்படியோ. 18.

 

ஒப்பிலா ஒன்றேநின் உண்மையொன்றுங் காட்டாமல்

பொய்ப்புவியை மெய்போற் புதுக்கிவைத்த தென்னேயோ. 19.

 

காலால் வழிதடவுங் காலத்தே கண்முளைத்தாற்

போலே எனதறிவிற் போந்தறிவாய் நில்லாயோ. 20.

 

தன்னரசு நாடாஞ் சடசால பூமிமிசை

என்னரசே என்னை இறையாக நாட்டினையோ. 21.

 

திங்களமு தாநின் திருவாக்கை விட்டரசே

பொங்கு விடமனைய பொய்ந்நூல் புலம்புவனோ. 22.

 

உன்னஉன்ன என்னைஎடுத் துள்விழுங்கு நின்நிறைவை

இன்னமின்னங் காணாமல் எந்தாய் சுழல்வேனோ. 23.

 

ஆரா அமுதனைய ஆனந்த வாரிஎன்பால்

தாராமல் ஐயாநீ தள்ளிவிட வந்ததென்னோ. 24.     

 

        52. நின்றநிலை

 

நின்றநிலை யேநிலையா வைத்தா னந்த

     நிலைதானே நிருவிகற்ப நிலையு மாகி

என்றுமழி யாதஇன்ப வெள்ளந் தேக்கி

     இருக்கஎனைத் தொடர்ந்துதொடர்ந் திழுக்கு மந்தோ. 

 

இருக்காதி மறைமுடிவுஞ் சிவாகம மாதி

     இதயமுங்கை காட்டெனவே இதயத் துள்ளே

ஒருக்காலே யுணர்ந்தவர்கட் கெக்கா லுந்தான்

     ஒழியாத இன்பவெள்ளம் உலவா நிற்கும்.

 

கற்றதுங்கேட் டதுந்தானே ஏதுக் காகக்

     கடபடமென் றுருட்டுதற்கோ கல்லால் எம்மான்

குற்றமறக் கைகாட்டுங் கருத்தைக் கண்டு

     குணங்குறியற் றின்பநிட்டை கூட அன்றோ.

 

        53. பாடுகின்ற பனுவல்

 

பாடுகின்ற பனுவலோர்கள் தேடுகின்ற செல்வமே

நாடுகின்ற ஞானமன்றில் ஆடுகின்ற அழகனே. 1.

 

அத்தனென்ற நின்னையே பத்திசெய்து பனுவலால்

பித்தனின்று பேசவே வைத்ததென்ன வாரமே. 2.

 

சிந்தையன்பு சேரவே நைந்துநின்னை நாடினேன்

வந்துவந்து னின்பமே தந்திரங்கு தாணுவே. 3.

 

அண்டரண்டம் யாவுநீ கொண்டுநின்ற கோலமே

தொண்டர்கண்டு சொரிகணீர் கண்டநெஞ்சு கரையுமே. 4.

 

அன்னைபோல அருள்மிகுத்து மன்னுஞான வரதனே

என்னையே எனக்களித்த நின்னையானும் நினைவனே. 5.

 

        54. வண்ணம்

 

அருவென் பனவுமன்றி யுருவென் பனவுமின்றி

  அகமும் புறமுமின்றி-முறைபிறழாது

    குறியுங் குடிணமுமன்றி நிறைவுங் குறைவுமன்றி

      மறையொன் றெனவிளம்ப-விமலம தாகி

அசலம் பெறவுயர்ந்து விபுலம் பெறவளர்ந்து

  சபலஞ் சபலமென்றுள் அறிவினர் காண

    ஞானவெளியிடை மேவுமுயிராய்,

 

அனலொன் றிடவெரிந்து புகைமண் டிடுவதன்று

   புனலொன் றிடவமிழ்ந்து மடிவில தூதை

      சருவும் பொழுதுயர்ந்து சலனம் படுவதன்று

         சமர்கொண் டழிவதன்றோர்-இயல்பின தாகும்

அவனென் பதுவுமன்றி யவளென் பதுவுமன்றி

  யதுவென் பதுவுமன்றி-எழில்கொ டுலாவும்

    ஆருமிலையறி யாதபடியே, 1/4 

 

இருளென் பதுவுமன்றி யொளியென் பதுவுமன்றி

  எவையுந் தனுளடங்க-ஒருமுத லாகும்

    உளதென் பதுவுமன்றி இலதென் பதுவுமன்றி

      உலகந் தொழவிருந்த அயன்முத லோர்கள்

எவருங் கவலைகொண்டு சமயங் களில்விழுந்து

  சுழலும் பொழுதிரங்கி-யருள்செயு மாறு

      கூறரியசக மாயையறவே,

 

எனதென் பதையிகழ்ந்த அறிவின் திரளினின்றும்

   அறிவொன் றெனவிளங்கும் உபயம தாக

      அறியுந் தரமுமன்று பிறியுந் தரமுமன்று

         அசரஞ் சரமிரண்டின் ஒருபடியாகி

எதுசந் ததநிறைந்த தெதுசிந் தனைஇறந்த

   தெதுமங் களசுபங்கொள்-சுகவடி வாகும்

      யாதுபரமதை நாடியறிநீ, 1/2

 

பருவங் குலவுகின்ற மடமங் கையர்தொடங்கு

  கபடந் தனில்விழுந்து-கெடுநினை வாகி

     வலையின் புடைமறிந்த மறியென் றவசமுண்டு

       வசனந் திரமுமின்றி-அவரித ழுறல்

பருகுந் தொழிலிணங்கி இரவும் பகலும்இன்சொல்

  பருகும் படிதுணிந்து-குழலழ காக

     மாலைவகைபல சூடியுடனே, 

 

பதுமந் தனைஇசைந்த முலையென் றதையுகந்து

   வரிவண்டெனவுழன்று-கலிலென வாடுஞ்

      சிறுகிண் கிணிசிலம்பு புனைதண் டைகள்முழங்கும்

         ஒலிநன் றெனமகிழ்ந்து-செவிகொள நாசி

பசுமஞ் சளின்வியந்த மணமுந் திடமுகந்து

  பவமுஞ் சிடவிறைஞ்சி-வரிசையினூடு

     காலில் மிசைமுடி சூடிமயலாய், 3/4

 

மருளுந் தெருளும்வந்து கதியென் பதைமறந்து

   மதனன் சலதி பொங்க-இரணம தான

      அளிபுண் தனைவளைந்து விரல்கொண் டுறவளைந்து

          சுரதஞ் சுகமிதென்று-பரவச மாகி

மருவுந் தொழில்மிகுந்து தினமும்விஞ்சி

  வளரும் பிறைகுறைந்த படிமதி சோர

     வானரமதென மேனிதிரையாய்,

 

வயதும் படஎழுந்து பிணியுந் திமிதிமென்று

  வரவுஞ் செயலழிந்துள்-இருமலு மாகி

     அனமுஞ் செலுதலின்றி விழியுஞ் சுடர்களின்று

        முகமுங் களைகளின்று-சரியென நாடி

மனையின் புறவிருந்த இனமுங் குலைகுலைந்து

  கலகஞ் செயஇருண்ட-யமன்வரும் வேளை

     ஏதுதுணைபழி காரமனமே. 1

 

 

        55. அகவல்

 

திருவருள் ஞானஞ் சிறந்தருள் கொழிக்குங்

குருவடி வான குறைவிலா நிறைவே

நின்ற ஒன்றே நின்மல வடிவே

குன்றாப் பொருளே குணப்பெருங் கடலே

ஆதியும் அந்தமும் ஆனந்த மயமாஞ்

சோதியே சத்தே தொலைவிலா முதலே

சீர்மலி தெய்வத் திருவரு ளதனால்

பார்முத லண்டப் பரப்பெலாம் நிறுவி

அண்டசம் முதலாம் எண்தரு நால்வகை

ஏழு பிறவியில் தாழா தோங்கும்

அனந்த யோனியில் இனம்பெற மல்க

அணுமுத லசல மான ஆக்கையுங்

கணமுத லளவிற் கற்ப காலமுங்

கன்மப் பகுதித் தொன்மைக் கீடா

இமைப்பொழு தேனுந் தமக்கென அறிவிலா

ஏழை உயிர்த்திரள வாழ அமைத்தனை 

எவ்வுடல் எடுத்தார் அவ்வுடல் வாழ்க்கை

இன்ப மெனவே துன்ப மிலையெனப்

பிரியா வண்ணம் உரிமையின் வளர்க்க

ஆதர வாகக் காதலும் அமைத்திட் 

டூக மின்றியே தேகம் நானென

அறிவு போலறி யாமை இயக்கிக்

காலமுங் கன்மமுங் கட்டுங் காட்டியே

மேலும் நரகமும் மேதகு சுவர்க்கமும்

மாலற வகுத்தனை ஏலும் வண்ணம்

அமையாக் காதலிற் சமய கோடி

அறம்பொரு ளாதி திறம்படு நிலையில்

குருவா யுணர்த்தி யொருவர்போ லனைவருந்

தத்தம் நிலையே முத்தி முடிவென

வாத தர்க்கமும் போத நூல்களும்

நிறைவிற் காட்டியே குறைவின்றி வயங்க

அங்கங்கு நின்றனை எங்கு மாகிச்

சமயா தீதத் தன்மை யாகி

இமையோர் முதலிய யாவரும் முனிவருந்

தம்மைக் கொடுத்திட்டெம்மை யாளென

ஏசற் றிருக்க மாசற்ற ஞான

நலமும் காட்டினை ஞானமி லேற்கு

நிலையுங் காட்டுதல் நின்னருட் கடனே.

 

        56.  ஆனந்தக்களிப்பு

 

ஆதி அனாதியு மாகி - எனக்

      கானந்த மாயறி வாய்நின்றி லங்குஞ்

சோதி மவுனியாய்த் தோன்றி-அவன்

      சொல்லாத வார்த்தையைச் சொன்னாண்டி தோழி-சங்கர 1.

 

சொன்னசொல்  லேதென்றுசொல்வேன்-என்னைச்

      சூதாய்த் தனிக்கவே சும்மா இருத்தி

முன்னிலை ஏது மில்லாதே-சுக

      முற்றச்செய் தேஎனைப் பற்றிக்கொண் டாண்டி-சங்கர 2.

 

பற்றிய பற்றற உள்ளே-தன்னைப்

      பற்றச் சொன் னான்பற்றிப் பார்த்த இடத்தே

பெற்றதை ஏதென்று சொல்வேன் - சற்றும்

      பேசாத காரியம் பேசினான் தோழி-சங்கர 3.

 

பேசா இடும்பைகள் பேசிச்-சுத்தப்

      பேயங்க மாகிப் பிதற்றித் திரிந்தேன்

ஆசா பிசாசைத் துரத்தி-ஐயன்

      அடியிணைக் கீழே அடக்கிக்கொண் டாண்டி-சங்கர 4.

 

அடக்கிப் புலனைப் பிரித்தே-அவ

      னாகிய மேனியில் அன்பை வளர்த்தேன்

மடக்கிக்கொண் டான்என்னைத் தன்னுள்-சற்றும்

      வாய்பேசா வண்ணம் மரபுஞ்செய் தாண்டி-சங்கர 5. 

 

மரபைக் கெடுத்தனன் கெட்டேன் - இத்தை

      வாய்விட்டுச் சொல்லிடின் வாழ்வெனக் கில்லை

கரவு புருஷனும் அல்லன் - என்னைக்

      காக்குந் தலைமைக் கடவுள்காண் மின்னே-சங்கர 6.

 

கடலின் மடைவிண்ட தென்ன - இரு

      கண்களும் ஆனந்தக் கண்ணீர் சொரிய

உடலும் புளகித மாக - என

      துள்ளமுருக உபாயஞ்செய் தாண்டி - சங்கர 7.

 

உள்ளது மில்லது மாய்முன் - உற்ற

      உணர்வது வாயுன் னுளங்கண்ட தெல்லாந்

தள்ளெனச் சொல்லிஎன் ஐயன் - என்னைத்

      தானாக்கிக் கொண்ட சமர்த்தைப்பார் தோழி - சங்கர 8.

 

பாராதி பூதநீ யல்லை-உன்னிப்

      பாரிந் திரியங் கரணநீ யல்லை

ஆராய் உணர்வுநீ என்றான் -ஐயன்

      அன்பாய் உரைத்த சொல் லானந்தந் தோழி - சங்கர 9.

 

அன்பருக் கன்பான மெய்யன் - ஐயன்

      ஆனந்த மோனன் அருட்குரு நாதன்

தன்பாதஞ் சென்னியில் வைத்தான் - என்னைத்

      தானறிந் தேன்மனந் தானிறந் தேனே - சங்கர 10.

 

இறப்பும் பிறப்பும் பொருந்த - எனக்

      கெவ்வணம் வந்ததென் றெண்ணியான் பார்க்கில்

மறப்பும் நினைப்புமாய் நின்ற - வஞ்ச

      மாயா மனத்தால் வளர்ந்தது தோழி - சங்கர 11.

 

மனதேகல் லாலெனக் கன்றோ - தெய்வ

      மவுன குருவாகி வந்துகை காட்டி

எனதாம் பணியற மாற்றி - அவன்

      இன்னருள் வெள்ளத் திருத்திவைத் தாண்டி - சங்கர 12.

 

அருளால் எவையும்பார் என்றான் - அத்தை

      அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்

இருளான பொருள்கண்ட தல்லால்-கண்ட

      என்னையுங் கண்டிலன் என்னேடி தோழி - சங்கர 13.

 

என்னையுந் தன்னையும் வேறா - உள்ளத்

      தெண்ணாத வண்ணம் இரண்டற நிற்கச்

சொன்னது மோஒரு சொல்லே-அந்தச்

      சொல்லால் விளைந்த சுகத்தைஎன் சொல்வேன் - சங்கர 14.

 

விளையுஞ் சிவானந்த பூமி - அந்த

      வெட்ட வெளிநண்ணித் துட்ட இருளாங்

களையைக் களைந்துபின் பார்த்தேன் - ஐயன்

      களையன்றி வேறொன்றுங் கண்டிலன் தோழி - சங்கர 15.

 

கண்டார் நகைப்புயிர் வாழ்க்கை - இரு

      கண்காண நீங்கவுங் கண்டோந் துயில்தான்

கொண்டார்போற் போனாலும் போகும் - இதிற்

      குணமேது நலமேது கூறாய்நீ தோழி - சங்கர 16.

 

நலமேதும் அறியாத என்னைச் - சுத்த

      நாதாந்த மோனமாம் நாட்டந்தந் தேசஞ்

சலமேதும் இல்லாமல் எல்லாம் - வல்லான்

      தாளால்என் தலைமீது தாக்கினான் தோழி - சங்கர 17.

 

தாக்குநல் லானந்த சோதி - அணு

      தன்னிற் சிறிய எனைத்தன் னருளாற்

போக்கு வரவற் றிருக்குஞ் - சுத்த

      பூரண மாக்கினான் புதுமைகாண் மின்னே - சங்கர 18.

 

ஆக்கி அளித்துத் துடைக்குந் - தொழில்

      அத்தனை வைத்துமெள் ளத்தனை யேனுந்

தாக்கற நிற்குஞ் சமர்த்தன் - உள்ள

      சாட்சியைச் சிந்திக்கத் தக்கது தோழி - சங்கர 19.

 

சிந்தை பிறந்ததும் ஆங்கே - அந்தச்

      சிந்தை இறந்து தெளிந்ததும் ஆங்கே

எந்த நிலைகளும் ஆங்கே - கண்ட

      யான்றான் இரண்டற் றிருந்தும் ஆங்கே - சங்கர 20.

 

ஆங்கென்றும் ஈங்கென்றும் உண்டோ - சச்சி

      தானந்த சோதி அகண்ட வடிவாய்

ஓங்கி நிறைந்தது கண்டால் - பின்னர்

      ஒன்றென் றிரண்டென் றுரைத்திட லாமோ - சங்கர 21.

 

என்றும் அழியும்இக் காயம் - இத்தை

      ஏதுக்கு மெய்யென் றிருந்தீர் உலகீர்

ஒன்றும் அறியாத நீரோ - யமன்

      ஓலை வந்தாற்சொல்ல உத்தரம் உண்டோ - சங்கர 22.

 

உண்டோ நமைப்போல வஞ்சர் மலம்

      ஊறித் ததும்பும் உடலைமெய் யென்று

கொண்டோ பிழைப்பதிங் கையோ - அருட்

      கோலத்தை மெய்யென்று கொள்ளவேண் டாவோ - சங்கர 23.

 

வேண்டா விருப்பும் வெறுப்பும் - அந்த

      வில்லங்கத் தாலே விளையும் சனனம்

ஆண்டான் உரைத்த படியே - சற்றும்

      அசையா திருந்துகொள் ளறிவாகி நெஞ்சே - சங்கர 24.

 

அறிவாரும் இல்லையோ ஐயோ - என்னை

      யாரென் றறியாத வங்கதே சத்தில்

வறிதேகா மத்தீயிற் சிக்கி - உள்ள

      வான்பொருள் தோற்கவோ வந்தேன்நான் தோழி - சங்கர 25.

 

வந்த வரவை மறந்து - மிக்க

      மாதர்பொன் பூமி மயக்கத்தில் ஆழும்

இந்த மயக்கை அறுக்க - எனக்

      கெந்தை மெய்ஞ்ஞான எழில்வாள் கொடுத்தான் - சங்கர 26.

 

வாளாருங் கண்ணியர் மோகம் - யம

      வாதைக் கனலை வளர்க்குமெய் என்றே

வேளா னவனுமெய் விட்டான் - என்னில்

      மிக்கோர் துறக்கை விதியன்றோ தோழி - சங்கர 27.

 

விதிக்கும் பிரபஞ்ச மெல்லாஞ் - சுத்த

      வெயில்மஞ்ச ளென்னவே வேதாக மங்கள்

மதிக்கும் அதனை மதியார் - அவர்

      மார்க்கந்துன் மார்க்கஞ்சன் மார்க்கமோ மானே - சங்கர 28.

 

துன்மார்க்க மாதர் மயக்கம் - மனத்

      தூயர்க்குப் பற்றாது சொன்னேன் சனகன்

தன்மார்க்க நீதிதிட் டாந்தம் - அவன்

      தானந்த மான சதானந்த னன்றோ-சங்கர 29.

 

அன்றென்றும் ஆமென்றும் உண்டோ - உனக்

      கானந்தம் வேண்டின் அறிவாகிச் சற்றே

நின்றால் தெரியும் எனவே - மறை

      நீதிஎம் மாதி நிகழ்த்தினான் தோழி - சங்கர 30.

 

        தாயுமான அடிகள் பாடல்கள் முற்றிற்று.

 

 


 

 

               உ

                 திருச்சிற்றம்பலம்

 

           தாயுமனவடிகள் மாணாக்கர்

                  அருளையர்

        அவ்வடிகளைத் தொழுத

 

        அருள்வாக்கிய அகவல்

 

திருவளர் கருணைச் சிவானந்த பூரணம்

ஒருவரும் அறியா ஒருதனிச் சித்து

நவந்தரு பேதமாய் நாடக நடித்துற்

பவந்தனை நீக்கிப் பரிந்தருள் பராபரம்

கண்ணுங் கருத்துங் கதிரொளி போல             5.

 

நண்ணிட எனக்கு நல்கிய நன்மை

ஒன்றாய்ப் பலவாய் ஒப்பிலா மோனக்

குன்றாய் நிறைந்த குணப்பெருங் குன்றம்

மண்ணையும் புனலையும் வளியையும் கனலையும்

விண்ணையும் படைத்த வித்திலா வித்துப்               10.

 

பந்த மனைத்தையும் பாழ்பட நூறிஎன்

சிந்தையுட் புகுந்த செழுஞ்சுடர்ச் சோதி

விள்ளணா ஞானம் விளங்கிய மேலோர்

கொள்ளைகொண் டுண்ணக் குறைவிலா நிறைவு

தாட்டா மரைமலர்த் தாள்நினைப் பவர்க்குக்       15.

 

காட்டா இன்பங் காட்டிய கதிநிலை

வாக்கான் மனத்தான் மதித்திட அரிதென

நோக்கா திருக்க நோக்கிய நோக்கம்

ஆதியாங் அறிவாய் அகண்டமாய் அகண்ட

சோதியாய் விரிந்து துலங்கிய தோற்றம்          20.

 

பரவெளி தன்னிற் பதிந்தஎன் னுளத்தின்

விரவி விரவி மேற்கொள்ளும் வெள்ளம்

சுட்டுக் கடங்காச் சோதி யடியார்

மட்டுக் கடங்கும் வான்பெருங் கருணை

எல்லைக் கடங்கா ஏகப் பெருவெளி              25.

 

தில்லைப் பொதிவில் திருநடத் தெய்வம்

வாதவூர் எந்தையை வரிசையாய் விழுங்கும்

போதவூர் மேவுகர்ப் பூர விளக்குச்

சுகரை அகண்டத் தூவெளி எல்லாந்

திகழவே காட்டுஞ் சின்மய சாட்சி        30.

 

செழுந்தமிழ் அப்பரைச் சிவலிங்க மாகி

விழுங்கிய ஞான வித்தக வேழம்

எழில்தரு பட்டினத் திறைவரை யென்றும்

அழிவிலா இலிங்க மாக்கிய அநாதி

சாந்த பூமி தண்ணருள் வெள்ளம்                35.

 

ஆர்ந்த நீழ லசையாக் ககனம்

பரவுவார் நெஞ்சிற் பரவிய மாட்சி

இரவுபக லற்ற ஏகாந்தக் காட்சி

ஆட்சிபோ லிருக்கும் அகிலந் தனக்குச்

சாட்சியா யிருக்குந் தாரகத் தனிமுதல்             40.

 

ஆணும் பெண்ணும் அலியுமல் லாததோர்

தாணுவாய் நின்ற சத்தாந் தனிச்சுடர்

எள்ளும் எண்ணெயும் எப்படி அப்படி

உள்ளும் புறம்பும் உலாவிய ஒருபொருள்

அளவிலா மதந்தொறும் அவரவர் பொருளென    45.

 

உளநிறைந் திருக்கும் ஒருபொற் பணிதி

துள்ளு மனப்பேய் துடிக்கத் தறிக்கக்

கொள்ளு மோனவாள் கொடுத்திடு மரசு

பெரிய பேறு பேசாப் பெருமை

அரிய உரிமை அளவிலா அளவு                 50.

 

துரிய நிறைவு தோன்றா அதீதம்

விரியுநல் லன்பு விளைத்திடும் விளைவு

தீராப் பிணியாஞ் செனன மறுக்க

வாரா வரவாய் வந்தசஞ் சீவி

ஆலைக் கரும்புபா கமுதக் கட்டிநீள்              55.

 

சோலைக் கனிபலாச் சுளைகத லிக்கனி

பாங்குறு மாங்கனி பால்தேன் சருக்கரை 

ஓங்குகற் கண்டுசேர்த் தொன்றாய்க் கூட்டி

அருந்திய ரசமென அறிஞர் சமாதியில்

பொருந்திய இன்பம் பொழிசிற் சுகோதயம்        60.

 

எங்கணும் நிறைந்த இயல்பினை எனக்குச்

செங்கையால் விளங்கத் தெரித்தமெய்த் தேசிகன்

தன்னையறி வித்துத் தற்பர மாகி

என்னுளத் திருந்தருள் ஏக நாயகன்

அடிமுடி இல்லா அரும்பொருள் தனக்கு          65.

 

முடியடி இதுவென மொழிந்திடும் முதல்வன்              

மெய்யலான் மற்றவை மெய்யல வெல்லாம்

பொய்யென அறியெனப் புன்னகை புரிந்தோன்

அருளும் பொருளும் அபேதமா யிருந்தும்

இருதிற னென்னும் இயலுமுண் டென்றோன்      70.

 

அருளுனக் குண்டேல் அருளும் வெளிப்படும்

பொருள்மயந் தானே பொருந்துமென் றுரைத்தோன்

சத்தசத் திரண்டு தன்மையுந் தானே

ஒத்தலாற் சதசத் துனக்கென உரைத்தோன்

ஆணவம் அறாவிடின் அருளுறா தென்னக்        75.

 

காணரு நேர்மையாற் காணவே உரைத்தோன்

சென்மமுள் ளளவுந் தீரா திழுக்குங்              

கன்மம் விடாதெனக் காட்டிய வள்ளல்

உளதில தெனவும் உறுதலான் மாயை

வளமில தெனவும் வகுத்தினி துரைத்தோன்               80.

 

இல்லறத் திருந்தும் இதயம் அடக்கிய

வல்லவன் தானே மகாயோகி என்றோன்

துறவறத் திருந்துஞ் சூழ்மனக் குரங்கொன்

றறவகை யறியான் அஞ்ஞானி என்றோன்

இறவா மனந்தான் இறக்க உணர்த்திப்            85.

 

பிறவா வரந்தரும் பேரறி வாளன்

அத்தன தருளால் அனைத்தையும் இயக்குஞ்

சுத்தமா மாயையின் தோற்றமென் றுரைத்தோன்

இருள்மல மகல இசைந்ததில் அழுந்தும்

பொருளருட் டிரோதைப் பொற்பெனப் புகன்றோன்  90.

 

வீறு சிவமுதல் விளம்பிய படியே

ஆறு மநாதிஎன் றறிஞருக் குரைப்போன்

கொல்லா விரதங் குவலயத் தோர்கள்

எல்லாம் பெறுமினென் றியம்பிய தயாநிதி

தருமமுந் தானமுந் தவமும் புரிபவர்க்           95.

 

குரிமையா யவரோ டுறவு கலப்பவன்

தன்னுயிர் போலத் தரணியின் மருவிய

மன்னுயி ரனைத்தையும் வளர்த்திடும் வேந்தன்

களவுவஞ் சனைகள்செய் கருமிகள் தமக்குந்

தெளிவுவந் துற அருள் செய்திடுந் திறத்தோன்    100.

 

தான்பெறும் பேறு சகமெலாம் பெறவே

வான்பெறுங் கருணை வழங்கிய மாரி

தஞ்சமென் றடைந்த தாபதர் தம்மை

அஞ்சலென் றாளும் அறிஞர் சிகாமணி

சீவ கோடிகளுஞ் சித்த கோடிகளும்               105.

 

யாவரும் புகழ யாவையும் உணர்ந்தோன்

யானென தென்னா இறைவனெம் பெருமான்

தானவ னாகிய தலைவனெங் கோமான்

அருண கிரியார்க் காறு முகன்சொல்லும்

பொருள்நல மல்லது பொருளென மதியான்               110.

 

பூத முதலாப் பொலிந்திடு நாத

பேதமுங் கடந்த பெருந்தகை மூர்த்தி

மூலா தார முதலா யுள்ள

மேலா தாரமும் வெறுவெளி கண்டவன்

மண்டல மூன்றிலும் மன்னிய உருவிலும்         115.

 

கண்டவை யத்திலுங் கடவுளாய் நின்றோன்

பகர்சம யந்தொறும் பரமே யிருந்து

சுகநடம் புரியுந் தொழிலெனச் சொன்னோன்

பேத அபேத பேதா பேத

போத மிதுவெனப் புகன்றிடும் புண்ணியன்         120.

 

அதுநா னெனவே யாற்றிடும் அனுபவஞ்

சதுர்வே தாந்தத் தன்மையென் றுரைத்தோன்

அல்லும் பகலும் அறிவா னோர்க்குச்

சொல்லும் பொருளுஞ் சுமைஎனச் சொன்னோன்

சுதனே குருவாஞ் சுவாமிநா யகற்கெனின்         125.

 

அதிகமெய்ஞ் ஞான மல்லவோ வென்றோன்

நேசயோ கத்துறு நிருபரெல் லாந்தொழும்

இராசயோ கத்திறை இராசயோ கத்தான்

பொறுமை தெளிவு புனிதவா சாரம்

மறுவிலா வண்மை வாரம் இயற்கை             130.

 

தண்ணமர் சாந்தந் தயங்கிய கீர்த்தி

எண்ணெண் கலைபயில் இணையிலாக் கல்வி

நல்ல இரக்கம் நடுநிலை சத்தியம்

இல்லைஎன் னாமல் எவர்க்குந் தருங்கொடை

நற்குண னெல்லாம் நண்ணிய பெருந்தகை               135.

 

சிற்குண வாரி திருவருட் செல்வன்

கரமே லெடுத்துக் கருத்துற வணங்கிப்

பரமே யுனக்குப் பரமெனப் பகர்ந்தோன்

ஆலடி மேவும் அரசினை அடுத்தே

சீலமெய்ஞ் ஞானந் தெளிந்தன னெனவுஞ்         140.

 

சித்த மவுனி திடசித்த மாக

வைத்த நிலையின் வளர்ந்தன னெனவும்

மூலன் மரபின் முளைத்த மவுனிதன்

பாலன்யா னெனவும் பரிவொடும் பகர்ந்தோன்

வடமொழி இயற்கையின் மகிமையை உணர்ந்து   145.

 

திடமுற முப்பொருள் திறத்தையுந் தெளிந்து

கண்டமு தென்னக் கனிரச மென்னத்

தண்டமிழ் மாரி தன்னைப் பொழிந்து

சித்தியும் முத்தியுஞ் சிறந்தருள் கொழிக்கும்

நித்திய நிரஞ்சன நிராலம்ப நிறைவைப்           150.

 

பாடியும் நாடியும் பணிந்தெழுந் தன்பால்

ஆடியும் அரற்றியும் அகங்குழை வெய்தியும்

உடலங் குழைய உரோமஞ் சிலிர்ப்ப

படபடென் றுள்ளம் பதைத்துப் பதைத்துப்

பாங்குறு நெட்டுயிர்ப் பாகிப் பரதவித்             155.

 

தேங்கி ஏங்கி இரங்கி இரங்கி

ஓய்ந்தபம் பரம்போ லொடுங்கியே சிறிதும்

ஏய்ந்த விழிக ளிமைப்பது மின்றிச்

சோர்ந்து சோர்ந்து துவண்டு துவண்டுமெய்

யார்ந்த அன்போ டவசமுற் றடிக்கடி              160.

 

உள்நடுக் குறவே உருகியே சற்றுத்

தண்ணமர் மொழியுந் தழுதழுத் திடவே

உள்ளும் புறம்பும் ஒருமித் துருகி

வெள்ள நீர்போல் விழிநீர் பெருக்கிக்

கன்று பசுவைக் கருதிக் கதறிச்                  165.

 

சென்றுசென் றோடித் திகைப்பது போல

என்புநெக் குடைய இருகரங் குவித்துப்

புன்புலால் யாக்கை பொருந்தா தினிஎன

உணர்ந்துணர்ந் தன்பா யுவகைமேற் கொண்டினிக்

கணம்பிரி யேனெனக் கருதியே குறித்துத்         170.

 

திருவுரு வெல்லாந் திருநீ றிலங்க

இருகர நளினம் இயன்முடி குவித்துப்

பூரண சந்திரன் போலொளி காட்டுங்

காரண வதனங் கவின்குறு வெயர்வுற

இளநிலா வெனவே இலங்கிய சிறுநகை           175.

 

தளதள வென்னத் தயங்கி எழில்பெற

இத்தன்மை எல்லா மிசைந்து மிவனருட்

சித்தெனச் சிவகதி தேர்ந்தவ ருரைப்பப்

பாத்திர மாடப் பரிவுட னாடிச்

சாத்திரங் காட்டித் தயவுசெய் தருளும்            180.

 

வல்லவ னெனவே மன்னுயிர்க் காக

எல்லையி லன்ப னிவனென விளங்கி

ஈன வுலகத் தியற்கைபொய் யென்றே

ஞானநூல் மெய்யென நவின்றினி திரங்கிக்

கேவல சகலங் கீழ்ப்பட மேலாய்         185.

 

மேவருஞ் சுத்த மெய்யினை நல்க

அருளே உருவுகொண் டவனியில் வந்த

பொருளே இவனெனப் பொலிந்திடும் புனிதன்

சைவஞ் சிவனுடன் சம்பந்த மென்பது

மெய்வளர் ஞானம் விளக்குமென் றிசைத்தோன்   190.

 

கதிர்விழி யொளியுறக் கலத்தல்சித் தாந்த

விதிமுறை யாமென விளம்பிய மேலோன்

முடிவினில் ஆகம முறைமையி னுண்மையை

அடியரைக் குறித்துரைத் தருளிய அண்ணல்

சிதம்பர நேர்மை திறமா வுரைத்திறை            195.

 

பதம்பர வெனப்பகர் பரமமெய்ஞ் ஞானி

முத்திபஞ் சாக்கர முறைமையி லயிக்கியஞ்

சத்திய மிதுவெனச் சார்ந்தவர்க் குரைத்தோன்

அஞ்செழுத் துள்ளே அனைத்தையுங் காட்டிஎன்

நெஞ்சழுத் தியகுரு நீதி மாதவன்        200.

 

எல்லா நிறைந்த இறைவன் செயலெனக்

கல்லா எனக்குங் கருணைசெய் கடவுள்

குருவரு ளாலே கூடுவ தல்லால்

திருவரு ளுறாதெனத் தெரிந்திட உரைத்தோன்

குருவுரு வருளெனக் கொண்டபின் குறையாப்     205.

 

பொருள்மய மாமெனப் புகன்றிடு போதன்

எந்தமூர்த் திகளையு மெழிற்குரு வடிவெனச்

சிந்தையில் தியக்கறத் தேர்ந்தவர்க் குரைத்தோன்

சதாசிவ மென்றபேர் தான்படைத் ததுதான்

எதாவதே பொருளென் றேடுத்தெடுத் துரைத்தான்  210.

 

கல்லானை கன்னல் கவர்ந்திடச் செய்தவன்

எல்லாம் வல்லசித் தெம்மிறை என்றோன்

எவ்வுயிர் தோறும் இறைமே வியதிறஞ்

செவ்விய பிரம்படி செப்பிடு மென்றோன்

எவ்வண மெவரெவ ரிசைத்தன ரவரவர்க்         215.

 

கவ்வண மாவனெம் மானென அறைந்தோன்

ஒருபாண னுக்கே யொருசிவ னாட்படின்

வருமடி யார்திறம் வழுத்தொணா தென்றோன்

சிவனடி யாரைச் சிவனெனக் காண்பவன்

எவனவன் சிவனே என்றெடுத் துரைத்தோன்       220.

 

விருப்பு வெறுப்பினை வேரறப் பறித்துக்

கருப்புகா தென்னைக் காத்தருள் சேய்தோன்

இருசொல் லுரையா தியானின்ப மெய்த

ஒருசொல் லுரைத்த உயர்குண பூதரன்

அத்துவா மார்க்கம் ஆறையு மகற்றித்            225.

 

தத்துவா தீதத் தன்மையைத் தந்தோன்

திருமகள் மருவிய திகழ்வள மறைசையில்

வருமுணர் வாளன் மருளிலா மனத்தான்

எண்ணிய எண்ணமெல் லாந்தெரிந் தெனக்குந்

தண்ணருள் செய்தவன் தாயு மானவன்           230.

 

ஒருமொழி பகர்ந்த உதவியா லவன்றன்

இருபத முப்போ திறைஞ்சிவாழ்த் துவனே.

 

            திருச்சிற்றம்பலம்

 

        அருள்வாக்கிய அகவல்

 

              முற்றிற்று

 

 

_____________________________________

 

 

 

        அருளையவடிகள் பாடியது

 

உலகினுக் கணியா மிராமநா தபுரத்

      துயர்நறை வாவியின் குணபால்

மலர்நிறை வனத்திற் சிவத்துறு நிட்டை

      மருவிமெய் யொருவிவே தாந்தத்

திலகிய பொருளால் வானமாய் நிறைவு

      மெந்தையே எனதுபந் தமும்போய்

நிலையுற நினது திருவரு ளளிப்பாய்

      நின்மலா னந்தமே போற்றி.

 

        கோடிக்கரை ஞானிகள் பாடியுது

 

துகளறு சாலி வருடமா யிரத்தைஞ்

      ஞூற்றொடெண் பத்தொன்று தொடரு

மிகுசுப கிருதாம் வருடந்தை மாதம்

      வெண்மதி வாரநாள் விசாக

மகிமைசேர் பூரணத் திதியினி லருத்த

      மண்டல சமையத்திற் கங்கை

திகழ்கரை யதனிற் றாயுமா னவனார்

      சிவத்தினிற் கலந்தநற் றினமே.

 


 

 

Related Content

A Revel In Bliss. Of Tayumanvar

Tayumanavar

Tayumanavar The Way To Beatitude

Tayumanavar - His Life, Teachings And Mission

Thayumanavar Padalkal - Part-1