logo

|

Home >

thala-marangalin-sirappukal >

temple-trees-umatham-plant

temple-trees-தலமர சிறப்புகள் ஊமத்தஞ் செடி

தலமர சிறப்புகள்


ஊமத்தை Datura metal, Linn.; Solanaceae.

எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம் 
வெறியாருஞ் செஞ்சடை யார நிலைத்தானை 
மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச் 
செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே.

                                                                                            - திருஞானசம்பந்தர்.

 

திருமணஞ்சேரி திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது ஊமத்தை ஆகும். இஃது விளிம்பில் பற்களுள்ள அகன்ற இலைகளையும், வாய் அகன்று நீண்ட குழலுடைய புனல் வடிவ மலர்களையும், முள் நிறைந்த காய்களையும் உடைய குறுஞ்செடி வகையது. மலர்கள் வெள்ளை, மஞ்சள், கருஞ்சிவப்பு முதலிய நிறங்களில் காணப்படுகின்றன. இவை முறையே வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை, கருஊமத்தை என வழங்கப்படுகிறது. தமிழகமெங்கும் சாலை ஓரங்களிலும் தரிசு நிலங்களிலும் தானே வளர்கிறது. அரிதாகக் காணப்பெறும் கருஊமத்தையே மருத்துவக் குணம் மிக்கதாகக் கருதப்படுகிறது. செடியின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.

இசிவு வேதனை அகற்றுதல், வாந்தி, மூர்ச்சையுண்டாக்குதல் ஆகிய மருத்துவக் குணங்களையுடையது.

திருமுறைகளில் ஊமத்தம் பற்றிய குறிப்புகள் :-

பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல் தூவி
ஒத்தசொல்லிஉல கத்தவர்தாம்தொழு தேத்தஉயர் சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலி தாயஞ்
சித்தம்வைத்தஅடி யாரவர்மேல்அடை யாமற்றிடர் நோயே.	1.3.1

தண்ணறு மத்தமுங் கூவிளமும் 
	வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்
நண்ணல் அரியநள் ளாறுடைய 
	நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும் 
	புகுந்துட னேத்தப் புனையிழையார்
அண்ணலின் பாட லெடுக்குங்கூடல் 
	ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.		1.7.3

மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்
குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே.	1.14.3

அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவனூராம்
நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
பரவிப் பொலியும் பனையூரே.	1.37.1

கொக்கிற கோடு கூவிள மத்தங் 
	கொன்றையொ டெருக்கணி சடையர்
அக்கினொ டாமை பூண்டழ காக 
	அனலது ஆடுமெம் மடிகள்
மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும் 
	விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம்பல் பூதம் பாடிட வருவார் 
	பாம்புர நன்னக ராரே.		1.41.2

நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத்
தாரகை யின்னொளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
போரக லந்தரு வேடர் புனத்திடை யிட்ட விறகில்
காரகி லின்புகை விம்முங் கற்குடி மாமலை யாரே.	1.43.3

வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல மேயவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத் தோர்விரும்பும்
மன்னுசோதி ஈசனோடே மன்னி யிருப்பாரே.	1.50.11

வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச்
செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர் திசைவணங்கத்
தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ
முழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே.	1.53.5

வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித்
தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக்
கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்த
ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.	1.70.1

பொங்கார்சடையர் புனலர்அனலர் பூதம்பாடவே
தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர்விடையேறிக்
கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக்குளிர்பொய்கைச்
செங்கால்அனமும் பெடையுஞ்சேரும் சித்தீச்சரத்தாரே.	1.71.2

குழலார்சடையர் கொக்கின்இறகர் கோலநிறமத்தந்
தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோவணக்கீளர்
எழிலார்நாகம் புலியினுடைமேல் இசைத்துவிடையேறிக்
கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச்சரத்தாரே.	1.71.7

வண்டணை கொன்றை வன்னியு மத்தம் 
	மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டணி சடையர் விடையினர் பூதங் 
	கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்
பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம் 
	பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி உமையவ ளோடும் 
	வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.		1.75.4

பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப் 
	பலதலை முடியொடு தோளவை நெரிய
ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே 
	ஒளிதிகழ் வாளது கொடுத் தழகாய
கோங்கொடு செருந்தி கூவிள மத்தம் 
	கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில் 
	வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.		1.75.8

துளிவண் டேன்பாயும் இதழி தூமத்தந்
தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி
ஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங்
களிவண்டியாழ் செய்யுங் காழிந் நகர்தானே.	1.81.2

தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி
வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே.	1.83.2

மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
தத்துவனைத் தொழுவார் தடுமாற் றறுப்பாரே.	1.107.8

மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
அன்னம் அனநடையாள் ஒருபாகத் தமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே.		1.108.1

விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ்
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய் துரைவேதம் நான்குமவை
பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.		1.108.7

வானமர் மதியொடு மத்தஞ்சூடித்
தானவர் புரமெய்த சைவனிடங்
கானமர் மடமயில் பெடைபயிலுந்
தேனமர் பொழிலணி சிரபுரமே.	1.109.7

கொட்டுவர் அக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன
விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின்
மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர்வான்
தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே.	1.117.5

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின் 
	சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ
டங்கைச்சேர் வின்றிக்கே அடைந்துடைந்த வெண்டலைப் 
	பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும்
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின் 
	போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங்
கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின் 
	காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.	1.126.3

ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க 
	ளொடுவன்னி மத்தமன்னும்
நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர் 
	செஞ்சடையான் நிகழுங்கோயில்
ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி 
	மலையென்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு 
	சுதைமாடக் கழுமலமே. 1.129.5

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே.	2.7.1

மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்
விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்
நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற்
பதியானே யென்பவர் பாவமி லாதாரே.	2.15.2

எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம்
வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை
மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே.	2.16.5

கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்
பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்
அடிகளை யடைந் தன்பு செய்யுமே.	2.25.4

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.	2.44.1

பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்றன் அடிநினைந்து
மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே.	2.46.1

வாளை யுங்கய லும்மி ளிர்பொய்கை
	வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்
	பூளை யுந்நறுங் கொன்றை யும்மத
மத்த மும்புனை வாய்க ழலிணைத்
	தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே.	2.53.3

வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி 
நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில் 
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும் 
மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.	2.64.6

கடிபடு கூவிளம் மத்தங் கமழ்சடை மேலுடை யாரும் 
பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும் 
வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும் 
படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.	2.69.6

துன்னங் கொண்டவுடை யான்துதைந்தவெண் ணீற்றினான் 
மன்னுங் கொன்றைமத மத்தஞ்சூடினான் மாநகர் 
அன்னந் தங்கும்பொழில் சூழ்அகத்தியான் பள்ளியை 
உன்னஞ் செய்தமனத் தார்கள்தம்வினை யோடுமே.	2.76.2

சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும் 
அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப் 
பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை 
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே.	2.76.9

நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்
ஏர்கொண்ட கொன்றையினோ டெழில்மத்தம் இலங்கவே
சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்பக்
கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே.		2.81.4

தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் 
	கொடுகொட்டி வீணை முரல
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த 
	பெருமான் உகந்த நகர்தான்
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் 
	பணிவார்கள் பாடல் பெருகி
நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை 
	நனிபள்ளி போலு நமர்காள்.		2.84.7

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க 
	எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் 
	உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் 
	உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல 
	அடியா ரவர்க்கு மிகவே.	2.85.2

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு 
	குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென் 
	உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல் 
	திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல 
	அடியா ரவர்க்கு மிகவே.		2.85.10

கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடிக் கணிவர்
பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையோர் பங்கர்
கடிகொள் நீடொலி சங்கின் ஒலியொடு கலையொலி துதைந்து
கொடிக ளோங்கிய மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.	2.89.4

பாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய்புனற் கங்கை
கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோல்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக் கிடம்அர சிலியே.		2.95.1

நாறு கூவிள மத்தம் நாகமுஞ் சூடிய நம்பன்
ஏறு மேறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர்
நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித்
தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே.		2.96.6

விண்டவெள்ளெ ருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்
இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவூர்
கெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய்
அண்டரண்டம் ஊடறுக்கும் அந்தணாரூ ரென்பதே.		2.101.2

மாதி லங்கிய பாகத்தன் மதியமொ
	டலைபுனல் அழல்நாகம்
போதி லங்கிய கொன்றையும் மத்தமும்
	புரிசடைக் கழகாகக்
காதி லங்கிய குழையினன் கடிக்குளத்
	துறைதரு கற்பகத்தின்
பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை
	பற்றறக் கெடுமன்றே.	2.104.6

வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு
	வெள்ளெருக் கலர்மத்தம்
பண்ணி லாவிய பாடலோ டாடலர்
	பயில்வுறு கீழ்வேளூர்ப்
பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக்
	கோயிலெம் பெருமானை
உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையார்
	உலகினில் உள்ளாரே.	2.105.3

துன்று வார்சடைத் தூமதி மத்தமுந்
	துன்னெருக் கார்வன்னி
பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம்
	புலியுரி யுடையாடை
கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற்
	கொழுந்தேயென் றெழுவாரை
என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை
	ஏதம்வந் தடையாவே.	2.109.6

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
	இளமரு திலவங்கங்
கலவி நீர்வரு காவிரி வடகரை
	மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும்
	ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை யல்லது
	வணங்குதல் அறியோமே.		2.110.4

கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறைக் கண்டனும்
புலியதள் பாம்பரைச் சுற்றினா னும்புன வாயிலில்
ஒலிதரு தண்புன லோடெருக் கும்மத மத்தமும்
மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை யூர்தியே.	3.11.5

அத்தகு வானவர்க் காக மால்விடம்
வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.		3.16.3

இரும்பொனின் மலைவிலின் எரிச ரத்தினால்
வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர்
சுரும்பமர் கொன்றையுந் தூய மத்தமும்
விரும்பிய சடையணல் விசய மங்கையே.	3.17.7

வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன்
பொன்னியல் திருவடி புதுமல ரவைகொடு
மன்னிய மறையவர் வழிபட அடியவர்
இன்னிசை பாடலர் ஏடகத் தொருவனே.	3.32.1

தடவரை யெடுத்தவன் தருக்கிறத் தோளடர்
படவிரல் ஊன்றியே பரிந்தவற் கருள்செய்தான்
மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும்
இடமுடைச் சடையினன் ஏடகத் திறைவனே.	3.32.8

ஏனவெண் கொம்பினோடும் இளவாமையும் பூண்டுகந்து
கூனிள வெண்பிறையுங் குளிர்மத்தமுஞ் சூடிநல்ல
மானன மென்விழியா ளொடும்வக்கரை மேவியவன்
தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.	3.60.5

கார்மலி கொன்றையோடுங் கதிர்மத்தமும் வாளரவும்
நீர்மலி யுஞ்சடைமேல் நிரம்பாமதி சூடிநல்ல
வார்மலி மென்முலையா ளொடும்வக்கரை மேவியவன்
பார்மலி வெண்டலையிற் பலிகொண்டுழல் பான்மையனே.	3.60.6

புற்றிடைவாள் அரவினொடு புனைகொன்றை மதமத்தம்
எற்றொழியா அலைபுனலோ டிளமதியம் ஏந்துசடைப்
பெற்றுடையார் ஒருபாகம் பெண்ணுடையார் கண்ணமரும்
நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.	3.65.7

கொன்றை மாலையுங் கூவிள மத்தமுஞ்
சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்
என்று மெந்தை பிரான்இடை மருதினை
நன்று கைதொழு வார்வினை நாசமே.		5.14.3

வண்ட ணைந்தன வன்னியும் மத்தமுங்
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனை
எண்டி சைக்கும் இடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே.	5.15.3

வன்னி மத்தம் வளரிளந் திங்களோர்
கன்னி யாளைக் கதிர்முடி வைத்தவன்
பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும்
மன்னி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.	5.20.2

குழலுங் கொன்றையுங் கூவிள மத்தமுந்
தழலுந் தையலோர் பாகமாத் தாங்கினான்
அழகன் ஆவடு தண்டுறை யாவெனக்
கழலுங் கைவளை காரிகை யாளுக்கே.	5.29.6

மத்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால்
பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம்
அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே.		5.41.2

வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக் 
கொண்டான் கோல மதியோ டரவமும் 
விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டங் 
கண்டா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.	5.53.6

அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமுந் 
துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான் 
கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி 
உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே.	5.84.6

மத்த மும்மதி யும்வளர் செஞ்சடை 
முத்தர் முக்குணர் மூசர வம்மணி 
சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரியெம் 
வித்தர் தாம்விருப் பாரை விருப்பரே.		5.87.4

தோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
	துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப்
பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்
	பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடேறு திருநுதன்மேல் நாட்டம் வைத்தார்
	சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடியென் றலைமேல் வைத்தார்
	நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.		6.14.3

ஆங்கணைந்த சண்டிக்கு மருளி யன்று
	தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று
	பலபிறவி அறுத்தருளும் பரிசு தோன்றுங்
கோங்கணைந்த கூவிளமும் மதமத் தமுங் 
	குழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும்
பூங்கணைவேள் உருவழித்த பொற்புத் தோன்றும்
	பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.	6.18.10

இறவாமே வரம்பெற்றே னென்று மிக்க 
	இராவணனை இருபதுதோள் நெரிய வூன்றி
உறவாகி இன்னிசைகேட் டிரங்கி மீண்டே
	உற்றபிணி தவிர்த்தருள வல்லான் றன்னை
மறவாதார் மனத்தென்றும் மன்னி னானை
	மாமதியம் மலர்க்கொன்றை வன்னி மத்தம்
நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை
	நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.	6.20.10

வண்டோங்கு செங்கமலங் கழுநீர் மல்கும்
	மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்
திண்டோள்கள் ஆயிரமும் வீசி நின்று
	திசைசேர நடமாடிச் சிவலோகனார்
உண்டார்னஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி
	ஒற்றியூர் மேய வொளிவண்ணனார்
கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன்
	கடும்பிணியுஞ் சடுஞ்தொழிலுங் கைவிட்டவே.	6.45.1

கண்டுஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக்
	கண்ணிடந்து சூட்டக்கண் டருளு வான்காண்
வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்
	வான்கங்கைச் சடைக்கரந்த மாதே வன்காண்
பண்டங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்
	பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்
வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்
	விண்ணிழிதண் வீழி மிழலை யானே.		6.52.6

பாட்டான நல்ல தொடையாய் போற்றி
	பரிசை யறியாமை நின்றாய் போற்றி
சூட்டான திங்கள் முடியாய் போற்றி
	தூமாலை மத்த மணிந்தாய் போற்றி
ஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றி
	அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி
காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
	கயிலை மலையானே போற்றி போற்றி.	6.57.1

சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை
	தூமத்தம் வாளரவஞ் சூடி னானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
	ஆலால நஞ்சதனை யுண்டான் றன்னை
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ
	மெல்லியலோர் பங்கனைமுன் வேனி லானைக்
கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
	கேடிலியை நாடுமவர் கேடி லாரே.		6.67.6

ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும்
	இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண்
தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந்
	துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம்
மாடேறி முத்தீனுங் கானல் வேலி
	மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி
சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில்
	திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.	6.76.4

குரவு கொன்றை மதியம் மத்தங்
	கொங்கை மாதர் கங்கை நாகம்
விரவு கின்ற சடையு டையீர்
	விருத்த ரானீர் கருத்தில் உம்மைப்
பரவும் என்மேல் பழிகள் போக்கீர்
	பாக மாய மங்கை யஞ்சி
வெருவ வேழஞ் செற்ற தென்னே
	வேலை சூழ்வெண் காட னீரே.	7.6.08

கருக்கநஞ் சமுதுண்ட கல்லாலன் கொல்லேற்றன்
தருக்கருக் கனைச்செற் றுகந்தான்றன் முடிமேல்
எருக்கநாண் மலரிண்டை யும்மத்த முஞ்சூடி
இருக்குமூர் எய்தமான் இடையா றிடைமருதே.	7.31.7

மத்தமாமலர் கொன்றைவன்னியுங்
	கங்கையாளொடு திங்களும்
மொய்த்தவெண்டலை கொக்கிறகொடு
	வெள்ளெருக்கமுஞ் சடையதாம்
பத்தர்சித்தர்கள் பாடியாடும்பைஞ்
	ஞீலியேன்என்று நிற்றிரால்
அத்தியீருரி போர்த்திரோசொல்லும்
	ஆரணீய விடங்கரே.	7.36.8

தாருந்தண் கொன்றையுங் கூவி ளந்தனி மத்தமும்
ஆரும் அளவறி யாத ஆதியும் அந்தமும்
ஊருமொன் றில்லை உலகெ லாமுகப் பார்தொழப்
பேருமோ ராயிரம் என்ப ராலெம் பிரானுக்கே.	7.44.7

அரியொடு பூமிசை யானும் ஆதியும் அறிகிலார்
வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
புரிதரு புன்சடை வைத்த எம்புனி தற்கினி
எரியன்றி அங்கைக்கொன் றில்லை யோவெம் பிரானுக்கே.	7.44.8

ஒப்பி லாமுலை யாளொரு பாகா
	உத்த மாமத்த மார்தரு சடையாய்
முப்பு ரங்களைத் தீவளைத் தங்கே 
	மூவ ருக்கருள் செய்யவல் லானே
செப்ப ஆல்நிழற் கீழிருந் தருளுஞ்
	செல்வ னேதிரு வாவடு துறையுள்
அப்ப னேயெனை அஞ்சலென் றருளாய்
	ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.	7.70.3

வெண்ட லைப்பிறை கொன்றையும் அரவும்
	வேரி மத்தமும் விரவிமுன் முடித்த
இண்டை மாமலர்ச் செஞ்சடை யானை
	ஈச னைத்திரு வாவடு துறையுள்
அண்ட வாணனைச் சிங்கடி யப்பன்
	அணுக்க வன்றொண்டன் ஆர்வத்தால் உரைத்த
தண்ட மிழ்மலர் பத்தும்வல் லார்கள் 
	சாத லும்பிறப் பும்மறுப் பாரே.		7.70.10

கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம்
பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி யம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே.		7.96.10

வட்டமலர்க்கொன்றை மாலைபாடி 
	மத்தமும்பாடி மதியம்பாடிச் 
சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச் 
	சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக் 
கட்டிய மாசுணக்கச்சைப் பாடிக் 
	கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல் 
இட்டுநின் றாடும் அரவம்பாடி 
	ஈசற்குச்சுண்ணம் இடித்தும்நாமே.	8.9.19

கொன்றை மதியமும் கூவின மத்தமும் 
துன்றிய சென்னியர் அன்னே என்னும் 
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே 
இன்றெனக் கானவா றன்னே என்னும்.		8.17.10

தொறுக்கள் வான்கமல மலர்உழக்கக் கரும்பு நற்சாறு பாய்தர
மறுக்கமாய்க் கயல்கள் மடைபாய் தில்லை அம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்தஅவ் அகத்து மொட்டொடு மத்தமும்
பிறைக்கொள் சென்னி யன்றே பிரியா(து) என்னுள் நின்றனவே. 	9.வாலியமுத.10

ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட
ஓதும் சடையாட உன்மத்த முற்றாடப்
பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே.	10.2751

217. செப்பன கொங்கைக்குத் தேமலர்க் கொன்றை நிறம்பணித்தான்
மைப்புரை கண்ணுக்கு வார்புனல் கங்கைவைத் தான்மனத்துக்
கொப்பன இல்லா ஒளிகிளர் உன்மத்தமும் அமைத்தான்
அப்பனை அம்மனைநீயென் பெறாதுநின் றார்க்கின்றதே.	11.சேர.49

605. உடையோடு காடாடி ஊர்ஐயம் உண்ணி
உடையாடை தோல்பொடிசந் தென்னை - உடையானை
உன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சே
உன்மத் தகமுடிமேல் உய்.		11.கபில.34

712. விரையாரும் மத்தம் விரகாகச் சூடி
விரையாரும் வெள்ளெலும்பு பூண்டு - விரையாரும்
நஞ்சுண்ட ஆதி நலங்கழல்கள் சேராதார்
நஞ்சுண்ட வாதி நலம்.		11.பரண.41

எம்மனோர்க் கடுத்த வெம்மைநோய்க் கிரங்கி
உலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம்
நொச்சிப் பூவும் பச்சை மத்தமும்
கொன்றைப் போதும் மென்துணர்த் தும்பையும்
கங்கை யாறும் பைங்கண் தலையும்	11.பட்டி.50

1198. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்
உத்தமத் தானத் தறம்பொருள் இன்ப மொடியெறிந்து
வித்தகத் தானத் தொருவழிக் கொண்டு விளங்கச்சென்னி
மத்தம்வைத் தான்திருப் பாத கமல மலரிணைக் கீழ்ச்
சித்தம்வைத் தார்என்பர் வீடுபே றெய்திய செல்வர்களே.	11.நம்பி.73

 

 

< PREV <
இலுப்பைமரம்
Table of Content > NEXT >
எருக்கு

 

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் அத்தி மரம் (Cluster Fig Tree)

temple-trees-தலமர சிறப்புகள் அகில் மரம்

temple-trees-தலமர சிறப்புகள் அரச மரம்

temple-trees-தலமரச் சிறப்புகள் அலரிச் செடி (Oleander Plant)