ஆத்தி Bauhinia racemosa.
தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.3
. - திருநாவுக்கரசர்.
திருஆப்பாடி, திருச்சிற்றேமம், திருச்செங்காட்டங்குடி முதலிய திருக்கோயில்களில் ஆத்தி தலமரமாக உள்ளது. இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இம் மரத்தின் பட்டை, தலைவலி, காய்ச்சல், தோல் வியாதிகள், கட்டி, இரத்த நோய்கள், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
சிவபெருமான் ஆத்திப்பூவை சூடுவதால் ஆத்திசூடி எனப் போற்றப்படுகிறார்.
திருமுறைகளில் ஆத்தி பற்றிய குறிப்பு :-
தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.3
அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி
முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்து
மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே. 10.9.17.52
அங்கண் முன்னை அர்ச்சனையின்
அளவின் தொடர்ச்சி விளையாட்டாப்
பொங்கும் அன்பால் மண்ணி மணற்
புளினக் குறையில் ஆத்தியின் கீழ்ச்
செங்கண் விடையார் திருமேனி
மணலால் ஆக்கிச் சிவாலயமும்
துங்க நீடு கோபுரமும்
சுற்றாலயமும் வகுத்து அமைத்தார். 12.26.32
ஆத்தி மலரும் செழுந்தளிரும் முதலா
அருகு வளர் புறவில்
பூத்த மலர்கள் தாந்தெரிந்து புனிதர்
சடிலத் திரு முடிமேல்
சாத்தல் ஆகும் திருப் பள்ளித்
தாமம் பலவும் தாம் கொய்து
கோத்த இலைப் பூங்கூடையினில் கொணர்ந்து
மணம் தங்கிட வைத்தார். 12.26.33
கண்ணுதலில் காட்டாதார் கணபதீச்
சரத்தின் கண்
வண்ணமலர் ஆத்தியின் கீழ்
இருக்கின்றோம் மற்று அவர்தாம்
நண்ணினால் நாம் இருந்த பரிசு
உரைப்பீர் என்று அருளி
அண்ணலார் திருவாத்தி
அணைந்தருளி அமர்ந்திருந்தார். 12.042.41
அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார்
உரையாய் என்ன அவர் மொழிவார்
வடி சேர் சூல கபாலத்தர்
வட தேசத்தோம் என்றார் வண்
துடிசேர் கரத்துப் பயிரவர் யாம்
சொல்ல இங்கும் இராதே போய்க்
கடிசேர் திரு ஆத்தியின் நிழல்கீழ்
இருந்தார் கணபதீச் சரத்து. 12.042.43
உடைய நாதர் அமுது செய
உரைத்த படியே அமைத்த அதற்கு
அடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம்
பெருகிக் களி கூர
விடையில் வருவார் தொண்டர் தாம்
விரைந்து சென்று மெல் மலரின்
புடைவண்டு அறையும் ஆத்தியின் கீழ்
இருந்த புனிதர் முன் சென்றார். 12.042.67