logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-yoga-dakshinamurthi

யோகதக்ஷிணாமூர்த்தி

யோக தக்ஷிணாமூர்த்தி
யோக க்ஷிணாமூர்த்தி

 சிவபெருமான் தஷிணாமூர்த்தமாக ஸநகன் - ஸநந்தனன் – ஸநாதனன் -ஸநத்குமாரனென்னும் மகருஷிகள் நால்வர்க்கும், பதி – பசு - பாசலக்கணங்களை யுபதேசித்த ஞான்று, அம்முநிவர் "அடிகளே! அடியேங்கள் அகமகன்றிருத்தலி னவையொடுங்கும் வண்ணம் திருவருள்புரிக'' என்று விண்ணப்பிக்க, அருளாளர் "அந்தணரே! உடல் முதலிய யாவும் அழிபொருளெனவும் ஆன்மா ஒன்றே அழியாப் பொருளெனவுமறிந்து, ஞானத்தைக்கிரகிக்க வேண்டுவோர் மோட்சசாதனமாகிய சாஸ்திரங்களைக் கேட்டலும், சிந்தித்தலும், அவ்விஷயங்களைத் தெளிதலும், அஷ்டாங்க யோகங்களைச்செய்தலும் வேண்டும். சிலர் யோகமாவது ஞானேந்திய கன்மேந்தியங்கள் ஒன்றோடொன்று கலத்தலெனவும், மற்றுஞ் சிலர் ஆன்மாவுடன்
கூடுதலெனவும், வேறு சிலர் பிராணவாயுவும் அபானவாயுவுஞ் சேருதலெனவுஞ் செப்புவர். ஈண்டெடுத்து விவகரித்த இவையெல்லாம் முடிவில்லாத யோகசாதன மாகமாட்டா; ஆனால் சீவான்மாவும் பரமான்மாவும் இரண்டறக்கலத்திலே யோகம் அஃதெவ்வாறெனில், புறக்கரணங்களை அந்தக்காணங்களிலொடுக்கி மனத்தை ஆன்மாவிலொடுக்கி உத்தமமாகிய ஆன்மாவைப் பரத்திற் சேர்ப்பிப்பதாம். யோகப்பயிற்சி யொன்றனாலன்றிப் பரம்பொருளைக் காணமுடியாது. பிராணன் - அபானன் - சமானன் – உதானன் - வியானன் – நாகன் - - கூர்மன் – கிருகரன் -தேவதத்தன் - தனஞ்சயனென்னும் * தசவாயுக்களைப் பந்தித்தாலன்றி மனம் ஒருநில்லாது.

* தசவாயுக்களில், பிராணன் - இதயத்தியங்குவதும், அபானன் - உச்சர்க்கத் தலத்திடைநிற்பதும், சமானன் – கந்தரசக்குழியிற் சந்திடை நிற்பதும், உதானன் - நாபியினிற்பதும், வியானன் - சரீரமுழுதும் வியாபிப்பதும், நாகன் - நீட்டலும் முடக்கலும் கிளக்கலும், கூர்மன் - உரோமம் புளகித்திமைப்பதும், கிருகரன் - முகத்திடைநின்று தும்மலும் சினமும் வெம்மையும் விளைப்பதும், தேவதத்தன் - ஓட்டம் இளைப்பு வெயர்ப்பு விளைப்பதும், தனஞ்சயன் - உயிர் நீங்கினும் நீங்காதுடலினை வீக்கித் தலைகிழித்த கால்வதுமாகிய இயற்கையனவென்பர்.

சடங்கயோக சாதனத்தாலன்றிச் சத்தியத்தை யுணர்தலருமை. ஆதலின் அத்தகைய யோகத்தைச் சாற்றுவோம் கேட்பீராக: -

இயமம் - நியமம் - ஆதனம் - பிராணாயாமம் – பிரத்தியாகாரம் – தாரணை – தியானம் - சமாதி என அஃதெண் வகைத்து. அவற்றுள்,

இயமம் - கொல்லாமை - சத்திய வசனம் - கள்ளாமை - பிறர் பொருளிச்சி யாமை - பஞ்சேந்தியமடக்கல்.

நியமம் - தவம் - பரிசுத்தம் - தத்துவ நூலாராய்ச்சி - மனமுவந்திருத்தல் - கடவுள் வழிபாடு.

ஆதனம் எண்வகைத்து. அவையாவன: - தொடைக்கும் முழக்காலுக்கும் நடுவே யிரண்டுள்ளங்காலையுஞ் சேர்த்து இறுமாந்திருத்தலாகிய சுவத்திகம் - சகநப் பக்கத்திலிருகாற் பரட்டையு மாற வைத்து அவ்விருகாற் பெருவிரலையுங் கை பிடித்திருத்தலாகிய கோமுகம் - இருதொடை மேலும் இரண்டுள்ளங்காலையும் மாறித் தோன்றவைத்தலாகிய பதுமம் - வலத்தொடையில் இடக்காற்பரட்டைச் சேர்த்தி யிறுமாப்புற்றிருத்தலாகிய வீரம் – பீசத்தின்கீழ்ச் சீவனிடத்திற் பரட்டைவைத்திட முழங்கையை முழந்தாவில் வைத்து அவ்விருபதத்தையு மிருகையால் இறுகப்பிடித்து அசையாதிருத்தலாகிய பத்திரம் - இடக்காற்பரட்டாற் சீவனியையழுத்தி வலக்காற்பரடு அப்பரட்டின்கீழுந்த விருத்தலாகிய முத்தம் - முழங்கைகளிரண்டும் உந்திப்புறத்திலழுந்தப் புவியிற் கையூன்றிக் கால் நீட்டித் தலைநிமிர்ந்திருத்தலாகிய மயூரம் - எவ்வாறிருக்கின் சுகமுந்திடனும் எய்துமோ அவ்வாறிருத்தலாகிய சுகம் என்பனவாம்.

பிராணாயாமம் - பிராணவாயுவை இரேசக பூரக கும்பகஞ் செய்தல்.

பிரத்தியாகாரம் - உபாதியை நீக்கி உண்ணோக்குவது.

தாரனை - கண்டம் - இதயம்- நெற்றி – கபாலம் - நாபி இவற்றிலொன்றிற சந்ததஞ் சிந்தைவைப்பது.

தியானம் - ஐம்புலன்களை யடக்கி யோகஞ்செய்வது.

சமாதி - மேற்கூறிய இமயநியமாதிகளைப் பொருந்தி சுழுமுனை முதலாகிய நாடிகட்குக் காரணமாகிய நாபிக்குக்கீழுள்ளதாய் கிழங்கின் நடுவிலிருக்கும் எழுபத்தீராயிரம் நரம்புகளில், வலமும், இடமும் பிரிந்த இரண்டாகிய இடைகலை பிங்கலைகளைச் சுழுமுனையில் அடக்கி, அச்சுழுமுனையைக் கீழிருந்து தேகமத்தி யமாகிய கந்தஸ்தானம் வரையில் இருகிளையாகவும், அதற்குமேல் பிரமரந்திரம் வரையில் ஒருகிளையாகவும், மூலாதாரம் - சுவாதிட்டானம் – மணிபூரகம் – அநாகதம் – விசுத்தி - ஆஞ்ஞையாகிய ஆறாதார சக்கரங்களையும், அதின்மேல் நாலு சக்கரங்களையும் வியாபிக்கச்செய்து, பிரமரந்திரம்வரையில் ஆதாரதேவதைகளைச் சகளமாகவும், அப்பால் துவாத ஶாந்தத்தில் அசலராகியும் அமேயராகியும் அதுலராகியும் சூட்சுமராகியும் மஹானாகியும் ஞானக் கிரியாசத்தி சரீரியாகியும் வியாபகராகியும் சத்திமானாகியும் மலரஹிதராஹியுமுள்ள பரசிவமூர்த்தியை நிஷ்களமாகவும் தியானித்தலே சிவயோகமென்னுஞ் சமாதியாம்" என் றிவ்வகையாகத் திருவாய்மலர்ந்தருளி, இறைவர் அம்முநிசிரேஷ்டர்கள் அறிந்து கொள்ளும்படி திருவுள்ளங்கொண்டு தாமே சிறிது பொழுது அத்தகைய நிலையினின் றுணர்த்துவித்தனர்.

அதனால் உள்ளம் விரிவொழிந்து ஒடுங்கப்பெற்ற ஸநகன் - ஸநந்தனன் - ஸநாதனன் - ஸநத்குமார னென்னும் முநிவர் நால்வரும் முன்னோனது. முண்டகப்பதத்தை வணங்கி விடைபெற்றுத் தம் விருப்பின்படி சென்றனர். சிவபெருமான், பிரமபுத்திரர்களாகிய இருடியர் நால்வரும் எளிதிலுணரும் வகையாக யோக முறையைப் பயிற்றினமையால்; யோக தக்ஷிணாமூர்த்தி யென்பதோர் திருநாம மெய்தினர்.

யோகதக்ஷிணாமூர்த்தயே நம:

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்

 

Related Content

தக்ஷிணாமூர்த்தி

வீணாதக்ஷிணாமூர்த்தி

காமதஹந மூர்த்தி

குருமூர்த்தி

அசுவாரூட மூர்த்தி