logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-visha-apaharana-murthi

விஷாபஹரண மூர்த்தி

விஷாபஹரண மூர்த்தி
விஷாபஹரண மூர்த்தி

பண்டொருபகலில் அமரருக்கும் அவுணருக்கும் நேரிட்ட போரில் இருதிறத்த வரிலும் பலர்மடிதலால் அவர்கள் கமலாசனத்திருந்து பலகோடியான்மாக்களையும் படைக்கும் பிரமதேவனைச்சத்தியலோகஞ்சென்று கண்டு "தலைவ! யாங்களிறவாது நெடுநாள் போர் புரியக் கருதினோமாதலின் பாற்கடலைக் கடைந்து அமுதளிக்க வேண்டும்” என வேண்ட, பதுமன்: "கமலை கேள்வன்பாற்கூறிக் கருதியது முடிப்பிப்பேன்" என்றுரைத்து, அவர்களுடன் க்ஷீராப்தியடைந்து சேஷசயனத்திற் சக்கனாதியர் பரவ யோகநித்திரை புரியுந் திருமாலை வணங்கி அவர்கள் விருப்பையறிவிக்க, விஷ்ணு மூர்த்தி யதற்கிணங்கி, ''அவ்வாறேயாகுக'' என்று, மந்தரமலையை மத்தாகநட்டுச் சந்திரனை அடைதூணாக்கி அட்டநாகங்களு ளொன் றாகிய வாசுகியென்னுமரவைத் தாம்பாகப்பூட்டி, தேவர் ஒருபுறமும் அசுரர் மறுபுறமும் ஈர்க்கும்படி கட்டளையிட்டு, தாம் கூர்ம வடிவேற்று மலையின் அடியையு முடியையு முதுகினாலுங் கைகளாலும் பற்றிநிற்க, தேவாசுரர்களை யெய்தக்காலம் பல கடைந்தமையால், கயிறாகிய வாசுகி வருத்தமாற்றாது உடல் பதைத்து நாத்துடிக்கத் தனது ஆயிரம் வாய்களாலும் விஷஞ்சிந்தியது.

அவ்விஷம் எங்கும் இருளெய்தும்படி யொல்லெனப் பரவ, தேவர் முதலாயி னார் பயந்தோடினர். அதுகண்ட விஷ்ணு அமரர்களைப் காப்பேனென்று ஆற்றல் கூறி, அவர்கள் மேற்செல்லும் ஆலத்தைத் தாமெதிர்சென் றடர்த்தனர். அவ்விஷம் அவர் திருமேனியைக் கருவிறஞ்செய்ய, அவரும் சிற்றற்கஞ்சி யோட்டெடுத்தனர். அப்பொழுது யாவரும் ஒருங்கு சென்று திருக்கைலாயகிரியை நண்ணி, திருநந்திதேவ ரநுஜ்ஞையால், திருச்சந்நிதானத்தினுட் சென்று கருணாநிதியாகிய கண்ணுதலைத் தரிசித்துக் கைகட்டி வாய்பொத்திநின்றனர். சிவபெருமான் திருமாலைநோக்கி "மாதவ! உருவம் வேறுபட்டுத் தேவர் குழுவுடன் வந்ததென் னை?” என்றறியார்போல் வினாவ, விஷ்ணு "பரமபதியே! தேவரீர் கட்டளையின்றிப் பாற்கடலைமதித்தமையின் அமுதுபெறாது விஷம்பெற்றோம்; அடியேங்களைக் காத்தருள்புரிய வேண்டும்" என்றிரந்து நிகழ்ந்தவையிசைப்ப, சிவபிரான் தமதிடப்பாக த்துள்ள பார்வதியை நோக்க, உமையம்மையார் “இவர்களைக் காக்கவேண்டும்'' என்று விண்ணப்பித்தனர்.

சர்வான்மாக்களின் இடுக்கண்களையுஞ் சம்பு சமீபத்திருந்த சுந்தரரைப்பார்த்து "சுந்தரா! அவ்வாலத்தைக்கொணர்க" என்றாஜ்ஞாபிக்க, அத்திருவாணையைச் சிரமேற்கொண்டு, அவ்வாறே அவர் தமதுள்ளங்கையிற்றாங்கிப் பெருமானிடந்தர, மகாதேவர் அதனை வாங்கித் திருக்கரத்தில் வைத்துக்கொண்டு "தேவர்களே! இதனை யுண்ணவா? விட்டுவிடவா?” என, தேவர்கள் தேவரீரது திருக்கரத்தில் வரவே இதனுருவம் சிறுத்தது; விட்டால் உலகை யழிக்கும். எவ்வெவற்றினும் முற்பாகந் தேவரீரதே யாதலின், விஷமாயிருப்பினும் இதனைத் தேவரீர் கொண்டருளல் வேண்டும்” என்று பிரார்த்திக்க, சிவபெருமான் அவ்வாறே சம்மதித்துத் திருவமுது செய்கையில் அது கண்டத்தளவு செல்ல அதனை யாவருங்
கண்டு, "எம்மை யுயிர்காத்ததற்குச் சான்றாக இவ்விஷத்தைக் கண்டத்திலேயே தரித்தருளல் வேண்டும்'' என்று வேண்ட, எம் பெருமான் அவர்கள் வேண்டுகோளுக் கிரங்கி, அங்கேயே ஒரு நீலமணிபோன்று நிறுத்தி மணிகண்டர் நீலகண்டர் சீகண்டர் முதலிய திருநாமங்களைப் பெற்றனர். பிறகு பெருமானருள் பெற்றுக் கடல் கடைய அமுதமும் பலபொருளும் பிறந்தன. திருமால் மோகினி வடிவேற்று அசுரரை வஞ்சித்து அமரர்க் கமுதளித்து, அவரவரிருக்கைக்கேகவிடுத்தனர்.

திருப்பாற்கடலிற்றோன்றிய விஷத்தாற் சர்வான்மாக்களும் துன்புறா வகையாக, தேவமுநிவர் வேண்டுகோளுக்கிரங்கிப் பானஞ் செய்தமையால், சிவபிரான் விஷாபஹரணமூர்த்தியெனப் பெயரெய்தினர்.

பாகவதம்.

யேஸமாம0த்ரியபகவாந் பவாநீம்விஶ்வபாவந:
தத்விஷம்கக்துமாரேபே ப்ரபாவஜ்ஞோந்வமோதத
தத:கரதலீக்ருத்ய வ்யாபிஹாலாஹலம்விஷம்
அபக்ஷயமஹாதேவ: க்ருபயாபூதபாவந:
நிஶம்யகர்மதச்சம்போர் தேவதேவஸ்யமீடுஷ:
ப்ரஜாதாக்ஷாயணீப்ரஹ்மா வைகுண்டஶ்சஶஶ0ஹிரே. ||

ப்ரஹ்மாண்ட புராணம்.

இரண்டாமத்தியாயம் - பிரமன் வாக்கியம்.
தஸ்யவிஷ்ணுரஹம்வாபி ஸர்வேவாஸுரபுங்கவா:
நஶக் நுவந்திவைஸோடும் வேகமந்யத்ரஸங்கராத்
விஷேணோத்திஷ்டமாநேந காலாநலஸமத்விஷா
நிர்தக்தோரக்தகௌராங்க: க்ருத:க்ருஷ்ணோஜநார்தந:!

வாமநபுராணம்.

த0த்ருஷ்ட்வாரக்தகௌராங்க0 க்ருத0க்ருஷ்ணம்ஜநார்தநம்
பீதாஸ்ஸர்வேவய0தேவா ஸ்த்வாமேவசரண0கதா:!

காஞ்சிப்புராணம்.

"அடுங்கால மிதுவென்ன விடமெழலு நனிவெருவி யயன் மாலேனோர், கொடுங்காலன் றனைக்குமைத்த குரைகழற்கீழ்ச் சரண்புகுதக் கொதித்து வாழ்நாள், பிடுங்காமலருள்புரிந்த பிரானன்றிப் பின்னையுமோர் பிரானுண் டென்ன, நடுங்காதார் தமைக்காணப் பெற்றிடினு மென்னுள்ள நடுங்குமாதோ.''

விஷாபஹரணமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்                      
 

Related Content

இலிங்கோற்பவ மூர்த்தி

முகலிங்க மூர்த்தி

ஸதாசிவமூர்த்தி

மஹாசதாசிவ மூர்த்தி

உமாமஹேச மூர்த்தி