logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-veerabathira-murthi

வீரபத்ரமூர்த்தி

வீரபத்ரமூர்த்தி
வீரபத்ரமூர்த்தி

காசிபப்பிரமாவின் மனைவியராகிய திதி அதிதி யென்னுஞ் சேயிழையார் பெற்ற தேவரும் அசுரரும், தீராப்பகையாற் செருச் செய்தல் வழக்கமாதலின், முன்னொரு காலத்தில் அவ்வாறடைந்த அமரில், அமரர்கள் வலியற்றவர்களாய் அயிராணி கேள்வனைத் துணைகொண்டு, அவுணர்சேனையை ஹதஞ்செய்ய, அவர்களில் வலியோர்களும் ஆற்றாது புறமுதுகுகாட்டி யோடினர். அகப்பட்டோர் மரம் சிரம் முதலிய உறுப்புக்கள் அறுபட்டு அவதியடைந்தனர். வருந்தி வலியிழந்ததானவர், வானவரைச் செயிக்க வகையே தென்றுமனங்குழம்பி, தமது குலகுருவாகிய சுக்கிரபகவானையடைந்து, அவனது துணைமலரடியைப் பணிந்து, தமக்குற்ற துன்பத்தைச்சொல்லி, "எமதுகுடிமுழுவதும் அடிமைகொண்ட குருநாதா! இமையவர் எங்களை யிற்றைப்போரி லலைத்தனர்; அவர்களை வெல்ல வல்ல வல்லமையுண்டாம் வகையை உபதேசித்தருள வேண்டும்" என்று பணிந்து வேண்ட, பார்க்கவன் பச்சாத்தாபமுற்று "பண்ணவரைப்பதைக்கப்பண்ணுவேன்; பதற வேண் டாம்'' எனக்கூறித் தன் முன்னின்ற நிருதரைத் தேற்றினன்.

சாலகடங்கடர் சங்கடத்தைச்சாலவுஞ் சிந்தித்தவெள்ளி, வீரமார்த்தாண்டன் என்னும் தீரமுடைய ஒருவனே உம்பரைத் துன்புறுத்தத் தக்கவன் என்றுள்ளத் திலுன்னி, அன்னோனை யழைத்து "அம்புயத்தவனை அகத்திலிருத்தி அருந்தவமாற்றி, அதிகவல்லமை யடைந்து அமரரையலைத்தி” என்று தவஞ் செய்ய வேண்டிய முறைமையையுஞ் சாற்றிவிடுத்தனன். முநிவனது பதமுண்டகங்களைப் பணிந்து விடைபெற்ற வீரமார்த்தாண்டன் மலைச்சாரலையடைந்து பலகாலம் பதுமனை நோக்கித் தவஞ்செய்தனன். தவாக்கினி தேவருலகஞ்சென்று ஆண்டுள்ள அந்தரத்தவரைத் தகித்ததால், துன்புற்ற சரர் ஹிரணியகருப்பனைத் தரிசித்து “வீரமார்த்தாண்டன் தேவரீரைநோக்கிக் கடுந்தவம் புரிதலின், அத்தவாக்கினி சுவாலித்து அடியேங்களைத் துன்புறுத்துகின்றது. அதனை விலக்கியருள வேண்டும்” எனப் பிரார்த்தித்துக்கொண்டனர்.

பிரமதேவன் ''அவ்வாறே யாகுக" எனத் தேவர்கட்குத் திருவாய்மலர்ந்து விடைதந்து, வீரமார்த்தாண்டன் தவச்சாலைக்கு அம்ஸவாஹனமிவர்ந்து சேர்ந்து, அவன் தவச்செயலாலிளைத்து என்புருவாயிருத்தல்கண்டு. இரக்கங்கொண்டு, கமண்டல நீரைமொண்டு அவன்மேற் புரோக்ஷிக்க, அதனால் அசுரன் பண்டுபோலா யினன். வேதன் "வீரமார்த்தாண்ட! நின் தவத்திற்கு வியந்தேன்; இறப்பு நிகழ் வெதிரிவெனு முக்காலத்தும் உன்னைப்போன்று தவமுஞற்றுவா ரொருவருளரோ? விழைந்தனகூறின் விரைவிற்றருவேன்'' என, அசுரன் ''அண்ணலே! திரிலோகத்தி லும் என்னைச் செயிப்போ ரொருவருமின்றி அரசாற்ற அவாவினேன்; அவ்வகைய வரம் வழங்க வேண்டும்'' என யாசிக்க, கமலயோனி அவ்வாறே கடாக்ஷித்து அந்தர்த்தானமாயினன். அவ்வீரமார்த்தாண்டன் அலரோனளித்த வரத்தால் அகந்தை யுற்று, அளவில்லாத அசுரச்சேனையைக் கூட்டிக்கொண்டு அமர்க்கோலமாய் அமராவதி நகரஞ் சார்ந்தனன். அஃதறிந்த அயிராணிகேள்வன் ஐராவதத்திலேறி எதிர்க்க, இருவருக்கும் இடையறாப்போர் பலகாலம் நிகழ்ந்தது; கடைசியில் ஆகண்டலன் தோற்க அவனை நகர்கடக்கத் துரத்தி இந்திரபட்டணத்திலேயே அரசுசெய்திருந்தனன்; அவ்வெற்றியால் மனத்திருப்தியடையாமல் அடிக்கடி அக்கினிமுதலிய திக்குப்பாலகரைத் துன்புறுத்தியும், தேவமாதரைச் சிறைசெய்தும், பசுமந்தைகளைக்கொன்றும், ருஷிசிரேஷ்டர்கள் செய்யும் யாக கருமங்களைச் சிதைத்தும், எண்ணிட்டுரைத்தற்கரிய இடுக்கண்புரிந்து வந்தனன்.

சகலவகையிலுந் தங்களைச் சங்கடப்படுத்திய வீரமார்த்தாண்டனைச் சங்கரித்து அவனாலாகிய வாதையொழிந்து உயிர்பிழைக்க, உம்பர்கள் ஒருங்குகூடி, ஆலோசித்துக் கொண்டிருந்தவற்றை நாரதமுநிவராற் கேள்வியுற்ற வீரமார்த்தாண் டன் சினமிகக்கொண்டு தேவர்களை யெல்லாஞ் செருச்செய்து, பெருந்துயர் விளைத்தனன். அதுபொழுது அமரர்களஞ்சியோட, வீரமார்த்தாண்டன் துரத்திக் கொண்டு பின்வர, தேவர்கள் திருக்கைலாயகிரியையடைந்து திருநந்திதேவர் விடைபெற்றுத் திருச்சந்தொனத்தினுட்பிரவேசித்து, சிவபெருமானைத் தரிசித்து, அஷ்டாங்க பஞ்சாங்கமாக நமஸ்கரித்து, தமக்குற்ற துன்பத்தை முறையிட்டனர். வானவர் வழங்கிய மாற்றத்தை, மனத்துட்கொண்ட மஹாதேவர் "அவனை யழிப்போம்; அஞ்சலிர்'' என்று அநுக்கிரகித்து, வீரபத்ரரை விளித்து "அவனையழித்தி'' என ஆஞ்ஞாபிக்க, ஆண்டவர் அநுமதிப்படி அவ் வீரபத்திரக்கடவுள் சிறிது சேனையை யுடன்வரக்கொண்டு, தானவத்தானையைச் சடுதியிறசங்கரித்து, வீரமார்த்தாண்டனுடன் எதிர்த்தனர். அவன் பலவகை மாயைபுரிய, வள்ளல் அதனை மாத்திரைப்பொழுதில் மாற்றி, அவனோடரும் போர் புரிந்து கடைசியில் வீரமார்த்தாண்டனைச்சங்கரித்து, தேவர் துயரைத்தீர்த்து, இந்திராதிதேவர்களை அவரவர் பதவியில் விடுத்து, உலகத்திலுள்ள உயிர்கட்குச் சுகவாழ்வளித்து, வெள்ளிமலையடைந்து தமது வெற்றிச் செயலைச் சிவபிரான்பால் விண்ணப்பித்த னர்.

தேவர் துயர் தீர்த்து, அவர்கட்குச் சுகவாழ்வளிக்கவும், வீரமார்த்தாண்டனைச் சங்கரிக்கவும், சிவபிரானால் அனுப்பிய கோலமே வீரபத்ரமூர்த்தமென விளம்பப் படும்.

வீரபத்ரமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்        

 

Related Content

இலிங்கோற்பவ மூர்த்தி

முகலிங்க மூர்த்தி

ஸதாசிவமூர்த்தி

மஹாசதாசிவ மூர்த்தி

உமாமஹேச மூர்த்தி