logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-veena-dakshinamurthi

வீணாதக்ஷிணாமூர்த்தி

வீணா தக்ஷிணாமூர்த்தி
வீணா தக்ஷிணாமூர்த்தி

 சிவபெருமான் பக்தாநுக்ரஹ காரணமாகத் திருக்கயிலாய கிரியில், தக்ஷிணாமூர்த்தங் கொண்டெழுந்தருளி யிருக்கையில், தும்புருநாரதர் சுகர்மூதலிய ருஷிசிரேஷ்டர்கள் இசைஞானத்தை நன்குணரவும், சாமவேதத்தை வீணையிலேற்றுப் பாடவும், தங்களுக்கருள்புரிய வேண்டும் என்னுங் கருத்துட் கொண்டோராய், கயிலை மலையையடைந்து கருணாமூர்த்தியைப் பணிந்து கைகூப்பிக் ''கடவுணாயகா! அடியேங்கட்கு வீணாகானத்தை விளக்கி யருள வேண்டும்" என்று விண்ணப்பித்தனர்.

அம்பிகாபதி "அந்தணரே! அவ்வாறே யாகுக இருத்தீர்'' எனப் பின்வருமாறு அருளிச்செய்யத் தொடங்கினர்.

“நீரிலே நிற்ற லழுகுதல் வேத னிலமயக்கும்
பாரிலே நிற்ற லடிவீழ்த னோய்மரப் பாற்படல்கோ
ணேரிலே செம்பகை யார்ப்பொடு கூட மதிர்வுநிற்றல்
சேரினேர் பண்க ணிறைமயக்கப் படுஞ் சிற்றிடையே." –

என்றபடியே மேற்கூறிய விலக்கத்தக்க மரங்கள் வீணாதண்டத்திற்காகா. அவற்றைக்கொண்டால் நால்வகை இசைக்குற்றத்தை யுண்டுசெய்யும். நால்வகைக் குற்றமாவன: -

"செம்பகை யார்ப்புக் கூட மதிர்வு.
அவற்றுள்,
செம்பகை யென்பது பண்ணோ டுளரா
வின்பவி லோசை யென்மனார் புலவர்.

ஆர்ப்பெனப் படுவ தளவிறந் திசைக்கும்
கூட மென்பது குறிவுற விளம்பின்
வாய்வதின் வாராது மழுங்கியிசைப் பதுவே.

அதிர்வெனப் படுவ திழுமென லின்றிச்
சிதறி யுரைக்குந ருச்சரிப் பிசையே." எனப்பெறும்.

பஞ்சபாரதீயம்.

“இன்னிசை வழிய தன்றி யிசைத்தல்செம் பகைய தாகும்
சொன்னமாத் திரையி னோங்க விசைத்திடுஞ் சுருதி யார்ப்பே
மன்னிய விசைவராது மழுங்குதல் கூட மாகும்
நன்னுதால் சிதற வுந்த லதிர்வென நாட்டி னாரே." -

ஆதலின் மேற்கூறிய குற்றங்களைப் பயக்கவல்லவாகிய விலக்குமரங்களை நீக்கி உத்தமமாகிய விதிக்கப்பட்ட மரங்களால் வீணா தண்டஞ் செய்யவேண்டும்.

''சொல்லிய கொன்றை கருங்காலி மென்முருக்கு
நல்ல குமிழுந் தணக்குடனே - மெல்லியலா
யுத்தம மான மரங்க ளிவையென்றார்
வித்தக யாழோர் விதி.''

“தளமாய்ச் சமநிலத்துத் தண்காற்று நான்கு
முளதா யொருங் கூனமின்றி - யளவு
முதிரா திளகாது மூன்றாங்கூ றாய
துவாகில் வீணாதண் டாம்.''

''பதுமங் கழல்குடந் தாடியொ டுள்ளிபண் பூண்டுநின்ற
விதியமர் தண்டு குடையே குடுமிமெய்க் கோட்டுறுபின்
மதியமர் போதிகை புட்டின் முகஞ்சுவர் மன்னெருத்தம்
விதியமர் பத்தர்க் குறுபென் றுரைத்தனர் மின்னிடையே.”_

என்றபடியே, நலமுடைய மரங்களைக்கொண்டு, நல்ல விலக்கண சம்பந்தமாகவே நால்வகைய யாழையுஞ் செய்ய வேண்டும். நால்வகை யாழாவன: - பேரியாழ் - மகரயாழ் - சகோடயாழ் - செங்கோட்டீயாழ் என்பனவாம்.

“பேரியாழ் பின்னு மகரஞ் சகோடமுடன்
சீர்பொலியுஞ் செங்கோடு செப்பினார் - தார்பொலிந்து
மன்னுந் திருமார்ப வண்கூடற் கோமானே
மின்னு முளவே பிற.”

என்றபடியே, நால்வகையாழுஞ் செய்கையில்; பேரியாழுக்கு நரம்பு இருபத்தொன் றும், மகரயாழுக்கு நரம்பு பதினேழும், சகோட யாழுக்கு நரம்பு பதினாறும், கெங்கோட்டியாழுக்கு நரம்பு ஏழுந்தொடுக்கவேண்டும்.

“ஒன்று மிருபது மோரேழ்மேற் பத்துடனே
நின்றபதி னாறேழு நேடுங்காற் - குன்றாத
நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே
மேல்வகை நூலோர் விதி''

என்னு மிலக்கணத்தின்படி யாழிற்கு நரம்பெண்ணித் தொடுக்கையில் ''கொடும்புரி மயிர் தும்பு முறுக்கிவை நான் - நடுங்கா மரபிற் பகையென மொழிப்" எனக் கூறிய குற்றம் நீங்கி, நரம்புகளைத் தொடுத்து, பண்ணல் – பரிவட்டனை - ஆராய்தல் – தைவரல் – செலவு - விளையாட்டு – கையூழ் - குறும்போக்கு ஆகிய கலைத்தொழி லெண்வகையா லிசையெழுப்பவேண்டும். அவையாவன: - பண்ணல் - பாடநினைத்த பண்ணுக்கு இணைகிளைபகை நட்பான நரம்புகள் பெயருந்தன்மை மாத்திரையறிந்து வீக்குதல், பரிவட்டணை - அவ்வீக்கின நரம்பை விரல்களால் அகமும் புறமுங் கரணஞ்செய்து தடவிப்பார்த்தல், ஆராய்தல் - ஆரோகண அவரோகணவகையால் இசையைத்தெரிதல், தைவரல் - அநுசுருதியேற்றுதல், செலவு - ஆளத்திலே நிரம்பப்பாடுதல், விளையாட்டு - பாடநினைத்த வண்ணத்திற் சந்தத்தைவிடுதல், கையூழ் - பாடநினைத்த வண்ணத்திற்செய்த பாடலெல்லாம் இன்பமாகப் பாடுதல், குறும்போக்கு - குடகச்செலவுந் துள்ளற்செலவும் பாடுதல் என்பன.

மேற்கூறிய எண்வகைத்தாகிய கலைத்தொழிலால் இசையெழுப்பி, வார்தல் -வடித்தல் – உந்தல் – உறழ்தல் – உருட்டல் – தெருட்டல் - அள்ளல் - பட்டடை என்னும் எண்வகைப்பட்ட இசைக்கரணத்துடன் உடற்குற்ற முதலியவை நீங்கப் பண்பாடவேண்டும்.

வார்தல் முதலிய முறையே, வார்தல் - எடுத்தல், வடித்தல் - படுத்தல், உந்தல் - நலிதல், உறழ்தல் - கும்பித்தல், உருட்டல் - உருட்டு, தெருட்டல் - ஒலி, அள்ளல் - குடிலம், பட்டடை - தூக்கு எனப்பொருள்படும்.

உடற்குற்றங்களாவன: -

''கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா
பண்ணளவும் வாய்தோன்றா பற்றெரியா - வெண்ணிலிவை
கள்ளார் நறுந்தெரியற் கை தவனே கந்தருவர்
உள்ளாளப் பாட லுணர்" - என்றும்,

''விரனான் கமைத்த வணிகுரல் வீங்காது
நான்மறை துள்ளும் வாய்பிள வாது
காட்டியுள் ளுணர்த்து நோக்கமா டாது
பிதிர்கனன் மணிசூழ் முடிநடுக் காது
வயிறுகுழி வாங்கி யழுமுகங் காட்டாது'' - என்றும்,

“வயிறது குழிய வாங்க லழுமுகங் காட்டல் வாங்குஞ்
செயிரறு புருவ மேறல் சிரநடுக் குறல்கண் ணாடல்
பயிரறு மிடறு வீங்கல் பையென வாயங் காத்த
லெயிறது காட்டலின்ன வுடற்றொழிற் குற்றமென்ப-“ -

என்றுங் கூறியபடியே உடற்குற்ற மொழியவும், பாடற் றொழித் குற்றமொழியவும், உள்ளாளப் பண்பாடவேண்டும்.

பாடற்றொழிற் குற்றமாவன: -


“நாசி காகுளி வெடிகுரல் வெள்ளை
பேசாக் கீழிசை யொருபுற மோட்டல்
நெட்டுயிர்ப் பெறித லெறிந்துநின் றிரட்டல்
ஓசை யிழைத்தல் கழிபோக் கென்னப்
பேசுறு குற்ற மசைவொடு மாற்றி''

என்றபடி, பாடற்செழிற் குற்றமொழிய உள்ளாளப் பண்பாட வேண்டும்.

உள்ளாளமாவது: -

''உள்ளாளம் விந்துவுட னாத மொலியுருட்டுத்
தள்ளாத தூக்கெவித்த றான்படுத்தல் - மெள்ளக்
கருதி நலிதல்கம் பித்தல் குடிலம்
ஒருபதின்மே லொன்றென் றுரை'' –

என்றபடியே பாடுகவென்று, அவற்றின் உட்பிரிவுகளோடு நன்கு விளங்கத் திருவாய் மலர்ந்தருளி, யாழ்வாசிக்கும் முறையிலக்கணங்களை உபதேசித்ததற் கேற்ப, இலக்கியமாகத் தாமே தமது திருக்கரத்தில் யாழேந்தி, திருத்தோளில்ணைத்து நின்று இசையெழுப்பி வாசித்துக் காட்டினர். அதுகேட்ட முதிவர் உள்ளங் களிகூர்ந்த
னர். தேவர் - மனிதர் – விலங்கு - புள் முதலிய பிராணிகளெல்லாம் இன்பமிக்கு வாழ்ந்தன. முநிவர் முன்னோனை வீணாகானத்தாற் சாமகீதம் பாடித் துதித்தனர்.

சிவ பெருமான் தம்மையடுத்த சுகர் முதலியோருக்கு வீணையினிலக்கணத்தை யுணர்த்தித் தமது திருக்கரத்து வீணையேந்தி வாசித்துக்காட்டிய திருக்கோலமே வீணாதக்ஷிணாமூர்த்தமெனப்படும்.

வீணாதக்ஷிணாமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள் 

 

Related Content

தக்ஷிணாமூர்த்தி

யோகதக்ஷிணாமூர்த்தி

காமதஹந மூர்த்தி

குருமூர்த்தி

அசுவாரூட மூர்த்தி