தாமரைமலரில் வீற்றிருக்குஞ் சதுமுகப் பிரமதேவனை நோக்கித் தவஞ் செய்து பலவரம்பெற்ற * இரணியாக்கன் பரந்தவுலகத்தைப்பாய்போற்சுருட்டிச் சமுத்திரத்தில் வீழ்ந்து மறைந்தனன். தேவர்கள் அப்பொழுது நடுக்கமெய்தி நாரணனையடைந்து நடந்ததுகூறி "அடியேங்கட்கு அடைக்கலம் வேறில்லை'' என்று வேண்டினர். திருமால் அமரர்களே! ''அவ்வசுரனைத் தொலைத்து அவனியை யளிப்பேன்" என்று கருடவாகனமேறிச் செல்லுகையில் இந்திரன் பிரமன் இருடியர் முதலானார் பணிந்தனர். மாயோன் வையகத்தைக்கொணர் வராகவடிவாயினன். அவ்வராகமோ நீலவெற்பினும் இரட்டிப்புயர்ந்ததும், கால்கள் நடுவே ஆயிரங்காத தூரமுள்ளதும், வால் அசையுந்தோறும் திக்குகளிற்படுவதும் சுவாசத்தால் அண்டத்தைக்குலுக்குவதும், உராய்ஞ்சால் அண்டச்சுவரையசைப்பதும், வடவாமுகாக்கினிபோற் பார்வையுடையதும், மூக்கினாற்றோண்டப் பாதலமுட்டு வதுமாயுள்ளது. பன்றியாகிய திருமால் கடலேழையுங்கலக்கிச் சேறுபடுத்திப் பின்னர்ப் புழுதியாக்கி இரணியாக்கனைக்கண்டு, கொம்பினாலே யவனைக் கிழித்துக்கொன்று சுருண்டிருக்கும் பூமியைக் கொம்பின் நுனியாற்றாங்கி யெடுத்து வந்து ஆயிரம் முடிகளையுடைய ஆதிசேடனது உச்சியில் விரித்தனர்.
[* இரணியாக்கன் – பொன்னிறமான கண்களையுடையவன்,
இரணியம் -பொன். அக்கன் - கண்களையுடையவன்.]
அவ்வாறு செய்த வராகம் தனது வெற்றியால் மமதையுற்று, அஷ்டகுலபர்வதங்களையு மிடித்துத்தள்ளியும், பலவுயிர்களை வாயிற் பெய்து குதட்டியும், சப்தமேகங்களும் நாகலோகமும் அஷ்டகஜங்களும் அச்சமெய்தி நடுங்கும்படி ஆர்ப்பரித்துக்கர்ச்சித்தும், காசினியைத்தாங்குங் காசிபர்பெற்ற எவ நாகங்களும் உச்சி நடுங்கும்படி தரையைமோந்தும், பூமியைக்குத்தித் தோண்டியும், கட்கடையில் ஊழித்தீயைச் சிந்தியும் உலாவியது. இக்கோலமாகிய கோலத்தைக் கண்டஞ்சிய இமையவர் கண் கூச்சம் மனக்கலக்கமுமுற்று, இத்தகைய இடுக்கண் விலகும்படி வெள்ளிமலையையடைந்து, முதற் பெருங்காவலாகிய நந்தியெம் பெருமான் கட்டளை பெற்றுத் திருச்சந்நிதியுட்சென்று கருணாநிதியைக் கண்டு தரிசித்துச் சாஷ்டாங்கமாகப்பணிந்து கைகட்டி வாய்பொத்தியின்று 'மகாதேவா! மாயவன் வராக வடிவேற்று வையக முழுவதும் வருத்துகின்றனன். இமைப் பொழுது கழியின் இமையவருலகுமழியும். இரணியாக்ஷனைச் சங்கரிக்கும்படி திருமாலைத்துதித்தது இத்தீமையை விளைத்தது. யாங்கள் துன்புற்றால், தேவரீரை யன்றி யதனைத் தீர்ப்போர் யாவர்?'' எனப் பலவாறு துதித்துப் பணிந்து நின்றனர். விடையூர்தி அத்தேவமுநிவர் வேண்டுகோளுக்கிரங்கி, அவர்கட்கருள் செய்யத் திருவுள்ளஞ்செய்து ஓர் வேடுவவுருவேற்று வராகத்தை யடைந்து தமது திருக்கரத்திருந்த முத்தலைவேலால், நெற்றியிற் குத்தி நிலத்திலழுத்தி, ஒரு கொம்பைப்பறித்தனர்.
அக்காலத்தில் அகந்தைகழிந்த வராகம் ஐயனைத்துதித்தலால் அருள்கூர்ந்து மற்றொருகொம்பையும் பறிக்காமல் மன்னித்து விடுங்க, தேவர்கள் "எம்பெருமானே! இன்னுமொருதரம் இதனைப் போல மாயோன் மாலோனாய் மமதையுறாமல் இதன் கொம்பையும் தேவரீர் திருமேனியிலணிந்து கொள்ளல் வேண்டும்'' என, சிவ பெருமான் அவ்வாறே அவர்கள் விருப்பின்படி அதனைத் திருமேனி யிற்றரித்துத் திருக்கைலாயமலைக்கு எழுந்தருளினர். தனக்குப் பிருகு முநிவரிட்ட சாபப்படி பன்றியாகிய திருமால் சிவபிரானைத் துதித்துப்பணிந்து தேவரும் முன்வருங் கேட்கும்படி வராகபுராணங்கூறித் தனது வைகுந்தபதவியடைந்து வாழ்ந்தனர்.
திருமாலாகிய வராகம் இறுமாப்புற்று உலகிற்றுன்புறுத்துகையில், தேவர் வேண்டுகோளுக்கிரங்கி அதன் அகந்தையை யழித்தமையால் மகாதேவருக்கு வராஹாரியென்பதோர் திருநாமம் வழங்குகின்றது.
''உத்பாட்யதம்ஷ்ட்ராம்தஸ்யைகாம் ஹரஸ்யோரஸிபூஷணம்
ஏசஶ்ருங்கவராஹோபூத் ததாப்ரப்ருதிமாதவ: |
த்ருஷ்ட்வாஜக்ராஹதம்ஷ்ட்ராந்தாம் விஷ்ணோஶ்சைவமஹாத்மந:
பபாரசமஹாதேவ: கூர்மம்ப்ராந்தேபிகோரஸி
புத்ரபௌத்ராவ்ருத:ஸர்வோ வராஹஸ்சாபதத்புவி
அத்யாபிஸூகராக்யாதம் தீர்த்த0கங்காதமேஸ்திதம்
ஸ்கந்தஶக்த்யாஹதோயத்ர வராஹாக்யோம்ருதோஹரி: |
௸ வீரபத்ரவசநம்.
விஸ்ம்ருதம்தத்ததா0ஶேந தம்ஷ்ட்ரோத்பாடேநபீடித:
வராஹவிக்ரஹஸ்தேத்ய ஸாக்ரோஶஸ்தேநஹேதுநா
''கண்டுகண்ணுதலவன்மருப்பொன்றினைக்கரத்தாற்
கொண்டுவல்லையிற்பறித்தலுமுணர்வுமுன்குறுக
விண்டுமற்றதும்பறிப்பனிங்கிவனெனவெருவிப்
பண்டுபோலநின்றேத்தலும்போயினன்பரமன்.
அன்றுகொண்டதோர்மருப்பினைச்சின்னமாவணிந்தா
னின்றுமங்கவன்மார்பிடைப்பிறையெனவிலங்கு
மொன்றுமற்றிதுகேட்டனைநின்றதுமுரைப்பா
நன்றுதேர்ந்துணர்மறைகளுமித்திறநவிலும்.''
“சுழிக்கும்புனலேழ்கடல்சுவற்றிமலைகளேழுந்துகள்படத்தீ
விழிக்குங்கடவுட்பன்றியினைவிறல்வேடுருக்கொண்டெழுந்தருளி
யழித்தங்கொருவெண்கோடுபறித்தணிந்துமற்றையிடக்கோடு
பழிச்சுந்துதிகேட்டுளமிரங்கிவிடுத்தபகவன்றிருவுருவம்.”
வராஹஸம்ஹாரமூர்த்தயே நம: