logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-vaduga-murthi

வடுக மூர்த்தி

வடுக மூர்த்தி
வடுக மூர்த்தி

சிவார்ச்சனைப்பலனாற் பெருவலியமைந்த துந்துபி என்போன் மைந்தனாகிய முண்டாசுரன் இளமைப்பருவத்திலேயே எம்பெருமானைநோக்கி, மழைநாளிலும் பனிராளிலும் நீரிலும், கோடை காலத்திற் பஞ்சாக்கினிமத்தியிலும் நின்று, பஞ்சேந்திரியங்களை யொடுக்கி, பசிதாக நித்திரை யொழித்து, பரமபதியைக் கருதிப் பலகாலம் அருந்தவஞ்செய்தனன். முக்கண் பொருந்திய முழுமுதற் கடவுள். முண்டாசுரன் கண்டானந்திக்கும்படி அரிபிரமாதியர் இருபுறம்வரவும், தும்புருநாரத ரிசைபாடவும், பார்ப்பதிசமேதசாய்க் காளகண்ட சதுர்ப்புஜ திரிநேத்திரங்களுடன் இடபவாகனாரூபராய்க் காட்சிதந்தருளினர். அசுரன் அதுகண்டு, அளவில்லா மகி;ச்சி கொண்டு, தனது தவத்தைநிறுத்தி, சங்கரனைத் தேவியோடு தரிசித்து, சாஷ்டாங்க மாக நிலமிசைவீழ்ந்து பலமுறை பணிந்து. பண்ணோசையாற்பாடி, பரவசனாய்க் கூத்தாடிக் கைகட்டி நின்று "கருணாநிதியே! கடையேனையும் ஒருபொருளாகக் கருதி காட்சி தந்தருளினீர்'' என்று மெய்யன்போடு துதித்தனன்.

அன்பர் துதிக்கு அகமகிழும் ஐயன் ''வேண்டிய வரம்யாது?'' எனவினாவ ''அத்தனே! அடியேன் தேவாசுரரி லொருவராலும் தோல்வியடையாமலும், தேவரீராலன்றி ஒருவராலும் உயிரொழியாமலும், இருக்கத்தக்க வலியுதவ வேண்டும்'' என வேண்டினன். பெருமான் அவ்வாறே அநுக்கிரகஞ்செய்து அந்தர்த் தானமாயினர். முண்டாசுரன் அதிக வலியுற்றோனாய், முதலில் அசுரர்களைச் செயித்து அவர்களைத் தனது சேனையாகக் கொண்டனன். அதன்பின்னர் அமராவதி நகரமடைந்து, ஆண்டு வசிக்கும் அந்தரத்தவர்களைச் சிறைப்படுத்தி, இந்திரனோ டெதிர்த்துச் செருச்செய்து, ஐராவதம் – அரம்பையர் – சங்கநிதி - பதுமநிதி – காமதேனு - கற்பகதரு முதலிய கணக்கில்லாத வளங்களைப் கைப்பற்றி, தோல்வியடைந்த அயிராணிகேள் வனைச்சிறைசெய்ய எத்தனித்தனன். அஃதறிந்த ஆகண்டலன் அம்முண்டனுக்குத் தப்பித்துக்கொண்டு க்ஷணமொன்றிற் சத்தியலோகஞ்சார்ந்து சதுமுகக்கடவுளைச் சரணடைந்து அபயம் பெற்றனன்.

முண்டாசுரன் கோபமூண்டு, "முண்டகத்தவன் என்னிலும் வலியனா? அவனை இப்பொழுதே அடக்குவேன்" என்று அநேகஞ் சேனையுடன் அமர்க்கோலங் கொண்டு வருகையில், ஆரணன் அன்னவாகனமேறி ஆண்டெதிரடையக்கண்டு அவனை வாகனத்துடன் மாய்ப்பேனென்று மாயை செய்து வருவதை நோக்கிய மலரோன் மனம் வருந்தி யெதிர்த்தனன். இசைத்தற்கரிய யுத்தம் எண்ணில் காலம் இருவருக்கும். நிகழ்ந்தது. வேதா யாதுவகையினும் முண்டனைச் சண்டையிற் சங்கரிக்க வலியற்றவனாய் மஹாதேவரை மனத்திலிருத்தி வருத்தத்துடன் ''மங்கை பாகனே! கங்கைவேணியாய்! எங்கணாயகா! சங்கரா சிவா!" என ஒலமிட்டழுதனன்.

உம்பர்கூட்டத்திடையே உமாதேவியாருடன் திருவோலக்கங் கொண் டெழுந் தருளியிருக்குஞ் சிவபெருமான் திசைமுகனது முறையீட்டைத் திருச்செவியிலே ற்று வடுக மூர்த்தியைப்பார்த்து ''நீ முண்டகத் தவிசோனது துயரொழிய முண்டாசுர னுயிரைமுடித்து வருதி'' என ஆஜ்ஞாபித்தனர். வடுகநாதர் வள்ளல் கட்டளைப்படி வாயுவேகமாகச்சென்று மலரோனுக்குச் சேவைதந்து, "வருந்தாதே” என்று தேற்றி மனத்துயர்போக்கி, முண்டாசுரன் சேனையை மாத்திரையொன்றினில் மாய்த்தனர். முண்டன் கண்டு தணியாக்கோபங்கொண்டு சண்டைசெய்ய எதிர்க்க, சிறிது பொழுது
அவனதாற்றலறியப் பொருதனர். இருவருக்கும் இணையில்லாச் சமரெய்தியதால் இமையவர் இடுக்கணெய்தி இறைவரைத்துதித்தனர். வடுகநாதப்பெருமான் ஒரு மாத்திரைப்பொழுதில் முண்டனைக்கொன்று நெடுநாளாய்ப் பசியுற்றோனுக்கு விருந்திட்டாற் போல இயமன் வயிறாரப்புசித்துத் தேக்கெடுக்கும்படி அவனுயிரைச் சயமினி நகருக்கு யாத்திரையனுப்பினர். பிரமன் துயரொழிந்து வடுகமூர்த்தியை வணங்கினன். தேவர்கள் புஷ்பமாரிபொழிந்தனர். வடுகமூர்த்தி மனக்களிப்புடன் இந்திரனை அமராவதிக்கேகவிடையளித்து, திருக்கயிலையையடைந்து விடையூர்திபால் விண்ணப்பித்தனர்.

பிரமன் தன்னைத் துன்புறுத்திய முண்டாசுரனுக்கு அஞ்சி முறையிட்ட பொழுது, அம்மலரோனது வேண்டுகோளுக் கிரங்கி விடையூர்தி அவ்விடுக்கண் தீர்ப்ப ன்கருதி விடுத்தமூர்த்தமே வடுகமூர்த்தமெனப்படும்.

வடுகமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்       

 

Related Content

புராணம் - மண்டையோட்டை ஏந்தியது (பைரவர்)

பைரவ மூர்த்தி

ஆபதோத்தாரண மூர்த்தி

க்ஷேத்திரபாலக மூர்த்தி

ப்ரம்மசிரச்சேத மூர்த்தி