தாரகாசுரன் பெற்ற தனயராகிய தாரகாக்ஷன் கமலாக்ஷன் வித்யுன்மாலி யென்னு மூவரும், பிரமனை நோக்கிப் பெருங்காலந் தவம்புரிகையில், பதுமன் அவர்கட்குமுன் தோன்றக்கண்டு பணிந்துநின்று பலவகையாகத்துதித்து ''அண்ணலே! அடியேங்கட்கழி'யாவர மருளவேண்டும்” என, மலரோன் "மைந்தரே! மடியாதிருப் போர் வையகத்திலில்லை; கற்பகாலங் கழியின் யானும் இந்திராதி தேவர்களும் இறப்போம். ஈசனே யிறவாதவன். ஆதலின் அது நீங்க மேம்பாடாவது மோக்ஷமாவது வேண்டிற் றருதும்' என, தானவர் பொன் – வெள்ளி - இரும்பினா லமைந்த மதில்கள் பொருந்திய முப்புரம் பூமி – அந்தர - சுவர்க்க மென்னும் மூவுலகங்களிலும் வேண்டும். அவை ஆயிரவருடத்திற் கொருமுறை விரும்பிய இடத்திற்குப் பெயரவேண்டும். அப்புரமூன்றும் ஒன்றுபட்டபொழுது சிவபெருமானே ஒருகணையா லழித்தாலன்றி வேறொருவராலு மழியா வரம் வேண்டும்” எனக் கேட்க, பிதாமகன் அவ்வாறே பிரசாதித்துத் தனதுலகுசார்ந்தனன்.
தாரகாக்ஷன் முதலாயினர் அளவில்லாத அவுணர் சேனையை யுடையவராய், மயன் என்னுந் தானவதச்சனை வருவித்துத் தங்கள் விருப்பின்படி பூமியி லிருப்பு மதிலும் . அந்தரத்தில் வெள்ளி மதிலும், சுவர்க்கத்திற் பொன்மதிலுமாக, பலவளப்பமு நிறைந்த முப்புரம் நிருமிக்கச்செய்து, தமக்கு வேண்டியதொன்றுமின்றி, சிவலிங்கபூசனை முதலியவற்றைக் குறைவறச்செய்து வாழ்ந்திருப்பினும், தமது அசுரகுலத் தியற்கை குன்றாதவராய் வைகுந்த முதலிய தேவநகரங்களையும், உலகிலுள்ள பல பதிகளையும், திரிபுரத்தோடு சென்று சிதைத்து வருதலாற் சினந்த இந்திரைகேள்வன் இந்திரன் முதலிய இமையவரை யுடன் கொண்டுபோ யெதிர்த்துத்
துன்புற்றுச் சகியாமல், தேவர் குழுவுடன் திரும்பி மேருமலையின் வடபாலிற் பலகாலந் தவஞ்செய்ய, பரமபதி இடபாரூடராய்க் காட்சிதந்தனர். தேவர்கள் நமஸ்கரித்துத் திரிபுரத்தவர் தீமையை விண்ணப்பஞ்செய்ய, சிவபிரான் “அவர்கள் நமதடியராதலின், அவர்களைச்செகுத்தல் அடாது" என்றருளி அந்தர்த்தானமாயினர்.
விண்டு தேவர்களே அஞ்சாதீர்களென்று புத்தவடிவுகொண்டு, நாரதமுநிவர். சீடராக வுடன்வரத் திரிபுரமடைந்து பிடகாகமம் பிரசங்கித்து, அவரை மருட்டிப் பவுத்தராக்கினர். அம்மாயையிலகப்படாதார் மூவரேயாதலின் திருமால் எனையோரைப் பார்த்து “நீங்கள் அம்மூவரையும் பாராதீர்கள். அவர்கள் இழிதொழில்பூண்டோர்” என்று கூறி, நாரதருடன் மேருமலையடைந்து தேவ கூட்டத்துடன் சிவபிரானைச் சிந்தித்துத் தவத்திருந்தனர். பெருமான் அஃதறிந்து அருள்வடிவாகிய திருநந்திதேவரை விளித்து “'தேவர்கள்பாற் சென்று திரிபுரத்தவரைச் செயிக்க இரதமுதலிய யுத்தகருவிகளைச் சித்தஞ்செய்யக் கட்டளையிடுக'' என, நந்தியெம் பெருமான் மேருமலை சேர்ந்து அவ்வாறே அமரர்கட்கு ஆஞ்ஞாபித்துச் செல்ல, தேவர்கள் களிகூர்ந்தனர்.
மந்தரகேசரி மலைகள் அச்சாகவும், சந்திர சூரியர் சக்கிரமாகவும் இருதுக்கள் சந்தியாகவும், பதினான்கு லோகங்கள் பதினான்கு தட்டுகளாகவும், ஆகாயம் ஆதனமாகவும், உதயாஸ்தகிரிகள் கொடிஞ்சியாகவும், நதிகளும் நதங்களும் நாட்டுங்கொடியாகவும், நக்ஷத்திரங்கள் நல்ல விதானமாகவும், மோட்சலோகம் மேல்விரிவாகவும், மகங்கள் சட்டமாகவும், நாள் முதலிய காலத்திரயங்கள் (கடுப்பா
கிய) எண்ணெயூற்றும் இடுக்குமரமாகவும், அஷ்டபர்வதங்கள் தூணாகவும், எட்டுத் திக்கஜங்கள் இடையிற் றாங்கவும், சத்தசமுத்திரம் திரைச்சீலையாகவும், ஞானேந்திய கன்மேந்தியங்கள் கலன்களாகவும், கலைகள் முளையாகவும், புராணம் – வேதாங்கம் – சாஸ்திரம் - மநுக்கள் மணியாகவும், மருத்துக்கள் படியாகவு மமைந்த திவ்வியமான ஒரு தேரைச்செய்து, வேதங்கள் நான்கையும் நான்கு குதிரைகளாய்ப் பூட்டி, பிரமனைத் தேர்சாரதியாய் நிறுத்தி, ப்ரணவமே குதிரை தூண்டுங் கோலாய்க்கொண்டு, கங்கை அதிதிமுதலிய தேவநங்கையர் நாற்புறமுஞ் சாமரை விரட்டவும், தும்புகுகாரதரிசைபாடவு மமைத்து, அரம்பை முதலிய கணிகையர் நடிக்கவுஞ் சமைத்து, மேருமலையை வில்லாகவும், வாசுகியை நாணி யாகவும் நியமித்து, திருமால் பாணமும், சரச்சுவதி வில்லிற்கட்டிய மணியும், அக்கினிதேவன் அம்பின்கூர்வாயும், வாயு அம்மிற்கட்டிய இறகுமா யேற்படுத்தித் திருக்கயிலாயகிரியை யடைந்து திருநந்தி தேவரைப் பணிந்து "அமரர் அமரர்க் கருவிகளை யமைத்துக் கொண்டடைந்தன ரென்று அருள்வள்ளல் சந்நிதியில் அறிவிக்க வேண்டும்" எனப் பிரார்த்தனை செய்தனர்.
அவர் சென்று விண்ணப்பிக்க, இறைவர் தேவியாருடன் இடபாரூடராய் இரதத்தை யடைந்து இமையவர் எண்ணத்தின்படி அதிற் காலூன்ற அதன் அச்சு முரிந்தது. அச்சுதன் அக்கணமே விடை வடிவாகி எம்பிரானை யேற்றுத் தாங்க மாட்டாமல் தரை மேல்விழ, சிவபெருமான் திருவருண்மே லீட்டாலிறங்கினர். பிரமன் ஸ்ரீ விநாயகக்கடவுளைப் பூசித்தனன். அவரருளால் அவ்விரதம் முன்போலாக அதன்மேற் பெருமான் அம்மையாருடன் ஆரோகணித்தனர். மூத்த பிள்ளையார் – இளையபிள்ளையார் – திருமால் - இந்திரன் முதலான தேவர்கள் தத்தம் வாகனங்களிலேறிவரவும், முப்பத்து முக்கோடி தேவர்களும் எப்பக்கத்திலுஞ் சூழ்ந்துவரவும், ஸப்தருஷிக ளாசீர்வதிக்கவும், திருநந்திதேவர் பொற்பிரம்பு கொண்டு முன் செல்லவும், பாநுகம்பன் - வாணன் – சங்குகன்னன் முதலிய சிவகண நாதர்கள் வாச்சிய மிசைக்கவும் சிவபெருமான் இரதாரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ரபுஷ்ய நக்ஷத்திரத்திற் சமீபித்தனர்.
அமரர்கள் அப்பொழுது ஐயனைப் பணிந்து "அண்ணலே! வில்லைவளைத்துக் கணைவிடவேண்டும்'' என்று பிரார்த்திக்க, சிவபெருமான் தமது திருக்கரத்தேந்திய மேருமலையாகிய வில்லையெடுத்து வளைத்து, வாசுகியாகிய நாணேற்றினர். [அதில் அம்புபூட்டித் திரிபுரத்தை யழிப்பின், அந்தரர் அந்தமில்லாத அகந்தையுறுவராதலின், அவ்வாறின்றி] இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக் கடைக்கணிந்து, பிறகு புன்னகை செய்யப் புரமூன்றுந் தீப்பற்றிச் சாம்பராயின, பெருந்தவராயிருந்து சிவனடியே சிந்தித்துவந்த மூவரும், யாதொரு தீமையுமின்றிப் பெருமான் பால்வந்து பணிய கண்ணுதல் அவர்களைத் துவாரபாலகராக அருளி, தேவர்களை அவரவரிடத்திற் கனுப்பித் திருக்கைலைமலைக் கெழுந்தருளினர். அமரர்துயர் தீரும்படி முப்புரத்தைச் சிரித்தெரித்தலின், சிவபிரான் த்ரிபுராந்தக மூர்த்தியெனத் திருநாமமுற்றனர்.
தேஷாமஸுராணாந்திஸ்ர:புர ஆஸந்நய ஸ்மையவ மாதரஜதாதஹரிணீதா தேவாஜேதும் நாஶக் நுவந்தா உபஸதைவாஜி கீஷந்தஸ் மாதா ஹுர்யஶ்சைவம் வேதயஶ்சநோபஸதாவை மஹாபுரம் ஜயந்தீதிஸஇஷுக்ஸமஸ்குர்வதாக்நி மநீகக்ஸோமக்ஶல்யம் விஷ்ணும் தேயநந்தேப்ருவந்க இமாமஶிஷ்யதீதி ருத்ர இத்யப்ருவந் ருத்ரோவைக்ரூர:ஸோஸ்யத்விதி.
திதக்ஷோஸ்தேகாயம்த்ரிபுரத்ருணமாடம்பரவிதிர்விதேயை:
க்ரீடம்த்யோநகலுபலதந்த்ரா:ப்ரபுதிய:.
ரத:க்ஷமாசக்ரகௌஸூர்யசந்த்ரௌதுரங்கமா:
வே:தா:ஸூதோவிரிஞ்சிஶ்சஜ்யாஶேஷோதநுரத்ரிராட்
ஶீதாஸ்த்ரமிந்திராதீஶஇத்யாடம்பரபூர்வகம்
த்ருணவத்ஸம்ஹ்ருதாநீஶபுராணித்ரிணிலீலயா.
த்ரிபுராந்தகமூர்த்தயே நம: