திவ்விய மங்கள ஸ்வரூபராகிய சிவபெருமான் மகேச்சராக நின்று, தம்மிடத் திருந்து அகிலபுவனங்களையும், அப்புவனாதிபர்களையும் முறையே தோற்றுவித்து, அத்தோற்றிய அடைபே தம்மிடத்திலொடுக்கிக்கொள்வர். அவ்வொடுக்கம் நித்தியம் நைமித்தியம் பிராகிருதம் ஆத்தியந்திகம் என நான்குவகைப்படும். அவற்றுள் முதலிற்கூறிய நித்தியம் என்பது ஆன்மாக்கள் அவரவர்கட் கறுதியிட்ட ஆயுளினிறு தியில், தத்தங்காரணத்தொடுங்குவதாம். இரண்டாவதாகிய நைமித்திகம் என்பது பிரமாவினது பகல்கழிய, உலகஞ்சலத்தால் மறைதலாம். மூன்றாவதாகிய பிராகிருதம் என்பது பிரமதேவனது காலவளவை யொழிய உலகமெல்லாம் மடிந்து பிரகிருதியில் ஒடுக்கமுறுதலாம். நான்காவதுங் கடைப்பட்டதுமான ஆத்தியந்திகம் என்பது ஆன்மாக்கள் விரிந்தஞானத்தினால் முத்தியடைதலாம்.
அவற்றுள், முதற்கூறிய நித்தியமென்பது வெளிப்படை. இரண்டாவதாகிய நைமித்திகம் பிரளயத்தின் முடிவில், சூரியன் நூறு தேவவருடமட்டும், சுவர்க்க மத்திய பாதல லோக மனைத்தும் முதலற, அழற்கதிர்பரப்பி, கடலாற்சூழப்பட்ட பூமியும் அதைச்சூழ்ந்த பெரும்புறக்கடலும் வறண்டு பொரிந்து போகும்படி, தீப்பொறி
களைச்சிந்தி அக்கினிதேவனுடன், கொல்லுந்தொழில் செய்யும் யமனைப்போலக் காலத்தோடு கலந்து, பூலோகம் - புவர்லோகம் – சுவர்லோகம் – ஜனலோகம் -மகாலோகம் - தபோலோகம் - ஸத்யலோகம், அதலம் – விதலம் – தலம் – நிதலம் – தராதலம் - லாதலம் – மஹாதலம் - பாதலலோகம் முடிவுவரையிலுள்ள சராசர மெல்லாவற்றையு மெரிப்பன். இங்ஙனம் செய்ததின் பின்னர் நூறு வருஷம் மேகக் கூட்டங்கள் குழுமி யானைத்துதிக்கையினின்றும் நீர் சொரிதல் போல நீர்த்தாரைபொழிந்து மின்னி இடித்துச் சூரியோஷ்ண முதலியவற்றைத் தம்மிடத்தொடுக்கிக்கொண்டு பெருமழை சொரியும். இவ்வகைய நைமித்திகப் பிரளயகாலத்தில் பிரமன் யோகநித்திரை செய்வன். இப்பிரளயத்தோடு கூடிய கற்பத்தை வராககற்பமெனவுங் கூறுவர்.
பிராகிருதப் பிரளயத்தைச் சிறிது விரிப்பாம். பரமாணு இரண்டு கொண்டது அணு. அதுமூன்றுகொண்டது திரிசரேணு. அது மூன்று கொண்டது துடி. அது மூன்று கொண்டது வேதை. அது மூன்று கொண்டது லவம். அது மூன்று கொண்டது நிமிஷம். அது மூன்று கொண்டது கணம். அது ஐந்து கொண்டது காட்டை. அது பதினைந்து கொண்டது லகு. அது பதினைந்துகொண்டது கன்னல் அல்லது கடிகை. அது இரண்டுகொண்டது முகூர்த்தம். அது பதினைந்துகொண்டது பொழுது. அது இரண்டுகொண்டது நாள். அது பதினைந்து கொண்டது பட்சம். அது இரண்டு கொண்டது திங்கள். அது இரண்டு கொண்டது இருது. அது மூன்று கொண்டது அநயம். அது இரண்டு கொண்டது ஆண்டு என்று சொல்லப்படும். ஆண்டு அல்லது வருடம் நூறுகொண்டது மாநுடர் ஆயுள் காலம். மேற் கூறிய மாநுடநாள் முப்பது கொண்டது தென்புலத்தோர்க்கு ஒரு நாள். அவ்வகைத்திங்கள் பன்னிரண்டு கொண்டது தேவர்களுக்கு ஒருநாள். அவ்வகைய நாள்கள் கூடிய ஆண்டு பன்னீராயிரங் கழிந்தால் தேவர்களுக்கோர் ஊழியாம். நால்வகையூழி யாயிரஞ்சென்
றால், பிரமனுக்கொருபகல். இதற்குள் சுவாயம்பு – சுவாரோசிஷன் – உத்தமன் – தாமசன் – இரைவதன் – சாக்குஷன் – வைவச்சுதன் – சூரியசாவர்ணி - தக்ஷசாவர்ணி – பிரமசாவர்ணி – தருமசாவர்ணி – உருத்திரசாவர்ணி – ரௌச்சியன் -பௌத்தியனென்னும் பதினான்கு மநுக்களும், அரி – விபச்சித்து – சுசாந்தி – சிவிவிபு – மனோசவன் – புரந்தரன் – மாவலி – அற்புதன் – சாந்தி – விருடன் - இருதராமன் - திவற்பதி - சுசி என்னும் பதினான்கு இந்திரர்களும் நீங்குவர். அப்பொழுது பிரமன் சிருட்டி நீங்கித் துஞ்சுவான். இதையே பிராகிருதப் பிரளயமென்பர். இத்தகைய பிரமர் ஒரு கோடிய ரிறப்பின் திருமாலுக்கு ஒருபகலாம். இவ்வகையே விஷ்ணுவின் காலவளவை கழியின் விஷ்ணுவு மிறப்பர். [ஆதியந்திகப் பிரளயமென்பது ஆன்மாக்கள் இருவினையொப்பும் மலபரிபாகமும் பெற்றுச் சர்வேசுவரனுடைய திருவருளால் சத்தினிபாத முற்று முத்தியிற் கலத்தலாம்.]
இவ்வாறிறந்த பிரமவிஷ்ணுக்களும் உருத்திரரும் தாம்தோன்றிய அடைவே மகேச்சுரனிடத்தில் லயமாவர். அம்மகேச்சுவரரோ அநேககோடி சூரியப்பிரகாசமாய்ப் பிரமாண்டங்களையெல்லாம் நெற்றிக்கண்ணா லெரித்து, அவ்வாறு எரியுண்ட புவனபதிகளின் அங்கங்களைக் கருணையாலே, தம்மிடத் தொடுக்கிக்கொள்வர். பிரமா – விண்டு - உருத்திரனென்னு மூவரும் ஒடுங்குஞ்சமயத்து மகேஶ்வரரெழுந் தருளிய அவசரம் த்ரிபாதத்ரிமூர்த்த மெனப்படும். அதாவது மூன்றுபதமாக நின்ற மும்மூர்த்திகளும் மகேசுவரரிடத்தில் லயமாதலாகிய அவசரம் என வுணர்க.
எல்லாப் பொருள்களும், தத்தம் பிறப்பிடத்திலேயே லயப்படும் என்பதற்குப் பிரமாணம்.
"யாதேவா இமாநிபூதாநிஜாயந்தேயே நஜாதாநி ஜீவந்தியத் ப்ரயந்தயயிஸO விஸந்திதத் விஜிஜ்ஞா ஸஸ்வததப்ரஹ்ம'”- சுருதி.
"இலயித்த தன்னின் லயித்ததா மலத்தா
லிலயித்த வாறுளதா வேண்டு – மிலயித்த
தத்திதியி லென்னி னழியா தவையழிவ
தத்திதியு மாதியுமா மாங்கு.”
த்ரிபாதத்ரிமூர்த்தயே நம: