ஸ்ரீ கயிலாயகிரியாகிய வெள்ளிமலையி னுச்சியிற் கோடி சூரியோ தயமானாற்போன் றொளி வீசும் நவரத்ந மயமான ஆயிரக்கால் மண்டபத்தில், பக்தா நுக்கிரஹ காரணமாக ஹரி ப்ரஹ்மாதி தேவர்களும், பதினொருகோடி யுருத்திரர்களும், இந்திராதி திக்குப்பாலகர்களும், அஷ்டவசுக்களும் முதலாகிய முப்பத்து மூன்று கோடி தேவர்களும், நாற்பத்தெண்ணாயிரம் முநிவர்களும், சநக ராதி மஹருஷிகளும், நவசித்தர்களும், கருட காந்தர்வ சித்த வித்தியாதர யக்ஷ கிந்நரர் முதலாகிய பதினெண்கணங்களும் ஒவ்வொரு பக்கத்திலுறைந்து ஹரஹர சிவசிவ கங்காதர சங்கர மஹாதேவாவென்று துதித்து நமஸ்கரிக்கவும், வேதங்கள் கோஷிக்கவும், தும்புரு நாரதர்பாடவும், அரம்பையர் நடிக்கவும், கூட்டத்தைத் திருநந்திதேவர் பொற்பிரம்பு கொண் டடித்து விலக்கவும், இஷ்ட காமியார்த் தங்களைப்பெற வெண்ணினோர் வரங்கேட்டுக் கையேற்றுநிற்பவும். ஸ்ரீ உமாதேவி யாருடன் இரத்ந சிங்காதனத்தில் இறைவர் திருவோலக்கங்கொண் டெழுந்தருளி யிருந்து, பக்தியே வடிவமாகவுள்ள ப்ருங்கி மஹாருஷி நடிக்கும் நடனத்திற் சிறிது நாழிகை திருக்கண்சாத்திப் பின் அவரவர்கட்குத் தக்கபடி சிரக்கம்பன மந்தஹாஸாதி களான குறிப்புடன் அவரவர்கள் விரும்பின வரங்களை யநுக்கிரகித்துத் தத்தமிடங்க ளிற் செல்ல ஆஞ்ஞாபித்து விடுத்தனர்.
அதன்பின்னர் அருள்வடிவாகிய அன்னையார் அரியாதனத்திருந்து எழுந்து பணிந்து, சிறிது பொழுது கையேற்றுநின்று “எம் பெருமானே! தேவரீர் திருவாய்மலர்ந்தருளிய வேத சிவாகமங்களின் உண்மை இத்தகையினதென எளியேன் எளிதிலுணரும்படி திருவுளஞ்செய்து திருவாய்மலர்ந்தருள வேண்டும்" என்றிசைக்க, உம்பர்பெருமான் “உமையே! இரு'' எனத் தமது வாமபாகத்திலிருத்தி, ஒரு திருமுகமும் ஆறு திருக்கரங்களு முடையராய் ''நங்காய்! நன்றுவினாவினை இஃதுனக்கே யன்றி ஏனைய அண்டங்களிலுமுள்ள அகில சராசரங்கட்கும் பயனளிக்கும் பயனுள்ளது; அதனை யுனக்குக் கூறுவேன்'' என்று [ஐவகைப் பாசபந்தத்தின் நிலைமையும், அவை நீங்குமாறும், அவற்றை நீங்கினா ரடையுந் தன்மையும், வேதசிவாகமாதியின் தோற்றமும், அவை அநாதியென்றறிவிப்பதற்கு எடுத்துக்காட்டிய வைகரியாதிய வாக்குகளுக்கு அதிஷ்டாநமாயுள்ள சுத்த மாயாலக்ஷணமும், அம்மாயை பராசத்தியாகிய உன்னிடத்துள்ளதும், நீ என் வாமபாகத்தி லமர்ந்ததும் இவ்விவ் வரலாற்றானென்று] திருவாய்மலர்ந்தருளினர். இத்தகைய வேதசிகாமப்பொருளை உமாதேவியார்கேட்டு நிற்பத் தாம் எல்லா ஆஸநத்தினு முயர்ந்த ஸுகாஸனத்திலிருந்து திருவாய் மலர்ந்தருளிய காரணத்தால், சிவபெருமான் ஸுகாஸன மூர்த்தி யெனப் பெயர்பெற்றனர்.