logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-somaskandha-murthi

சோமாஸ்கந்த மூர்த்தி

சோமாஸ்கந்த மூர்த்தி
சோமாஸ்கந்த மூர்த்தி

சிவபெருமான், பார்ப்பதி சமேதராய்த் திருக்கயிலாயகிரியில் திருவோலக்கங் கொண் டெழுந்தருளியிருக்கையில், தேவர்களெல்லாருங்கூடி அம்மலையை யடைந்து ஆண்டு முதற்பெருங்காவலாக வீற்றிருக்கும் திருந்திதேவரைப் பணிந்து விடைபெற்றுத் திருச்சந்நிதானத்தி னுட்சென்று சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துக் கை கட்டி வாய்பொத்திநின்று , "மஹாதேவனே! தேவரீர் உமையம்மை யாரை மணந்தும், எங்களை நெடுநாளாகத் துன்புறுத்தி மஹேந்திரபுரியி லரசுசெய்யும் சூரபன்மனாதிய அசுரரைச் சங்கரிக்கத்தக்க தேவரீரைப்போன்ற ஒரு புத்திரனைப் பெற்று இன்னும் எங்கள் சங்கடத்தை ஒழித்திலீர். விரைவில் இது கை கூடுமாறு அருள் புரியவேண்டும்'' என விண்ணப்பித்தனர்.

ஆதிமூர்த்தி அவர்கட்கிரங்கி ஆறு திருமுகங்களுடன் வீற்றிருந்து தமது திருமுகங்கடோறும் விளங்கும் அக்கினிக் கண்களினின்றும் ஆறு நெருப்புப்பொறிகள் பெருஞ்சோதிமயமாய் வெப்பத்துடன் வெளிவரும்படி யருள் செய்ய, அப்பொறிகள் பார்முழுவதும் பரந்திடக் கண்டு, பார்ப்பதியார் பாதத்தணிந்த சிலம்புகள் ஒன்றுட னொன்று மோதும்படி விரைவிற் சென்று அந்தப்புரமடைந்தனர். தேவர்கள் சித்தங்கலங்கி மெத்தவும் திகைத்துச் சிறிது ஓடித் திரும்பி அத்தனை நாடி "ஐயனே! தீயோரை ஜயிக்கத்தக்க சிறுவனை யிரந்த எங்கட்குத் தீப்பொறிகளை யருளிச் செய்தால் எவ்வாறு பிழைப்பேம்” என நடுங்கிக் கூறினர். சிவபெருமான் திருமுக மொன்றுடனிருந்து தீப்பொறிகளைத் தம்பால் வரத்திருவுளஞ் செய்தனர். பொறிக ளாறும் புராரிமுன்னர்ப்புக, அம்பிகாபதி அக்கிரியையும் வாயுவையும் நோக்கி, "இப்பொறிகளை நீங்களிருவரும் தாங்கிக்கொண்டுபோய்க் கங்கையில் விடுங்கள்” என்று கட்டளையிட்டுத் தக்க பலமுந்தந்தனர்.. மாதேவன் திருவாணைப்படி அவர்கள் மாறிமாறி யெடுத்துக்கொண்டுபோய்க் கங்கையில் வைத்தனர். தகுதியா கிய அக்கங்கையும் சரவணத்தில் விடுப்ப, பத்துத்திக்குகளிலும் விண்டு முதலானார் கண்டு காத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அச்சரவணப்பொய்கையில் ஆறு திருமுகங்களுடனும் பன்னிரு திருப்புயங்களுடனும் அரனே குமரேசனாகத் தோன்றி யிருக்க, அமரர் தரிசித்து, அக்குழந்தைக்குப் பாலூட்ட அறுவராகிய கார்த்திகை நக்ஷத்திரமாதரையனுப்ப, அறுமுகப்பெருமான் ஆறு சிறுவர்களாகி அவர்கள் பாலுண்டிருந்தனர். 
இது நிற்க: அந்தப்புரமடைந்த அம்மையார் முக்கணருடன் சிங்காதனத்துட் கார்ந்தனர். ஈஶ்வரியார் முன்னெழுந்து செல்லுகையில், திருவடிச்சிலம்பினின்று சிதறிய நவரத்தினங்கள் பார்வதியின் சாயை யுற்று, பரமனழைக்கப் பக்கலில் வந்து, கட்டழகு நோக்கிக் கருப்பமடைய, கவுரிகண்டு கடுங்கோபங் கொண்டு, "கருப்பயவாமல் தாங்குமின்'' எனச் சபித்தனர். அவ்வநிதையர் கருப்பவாதனையால் வருந்துகையில், உடலில் வியர்வையில் இலக்கம்வீர ருதித்தனர். பின் பொருநாள் பெருமாட்டி விருப்பின்படி அவர்கள் வீரவாகு - வீரகேசரி - வீரமகேந்திரன் - வீரமகேசன் - வீரபுரந்தரன் - வீரராக்ஷசன் - வீரமார்த்தாண்டன் - வீரராந்தகன்- வீரதீரன் என்னும் ஒன்பது புதல்வரை யுதவினர். ஈசன் இமயவல்லியை நோக்கி ''இந்த லக்ஷத்தொன்பதின்மரும் நமது புத்திரர்கள்'' என்று, அவர்களை நோக்கி "எனதுமைந்த னேவலைச்செய்திருங்கள்'' என்றிசைத்து, அம்மையாருடன் இடப வாகன மேறிச் சரவணப்பொய்கையைச் சார்ந்து "உமையே! உன் குழந்தையைக் கொண்டுவா” என, தேவியார் விடையினின்றிழிந்து விசையுடன் சென்று, ஆறுருமைந்தனை அம்மையெடுக்கையில், குழந்தை ஆறுதிருமுகமும் பன்னிருதிருக்கரமும் ஒரே திருமேனியுமாக, இறைவி யெடுத்து, உண்ணாமுலை யாதலின் தமது திருமுலைப்பாலை வள்ளத்திற் கறந்து திருவமுது செய்வித்து ஈசனைப்பணிவித்தனள். ஸ்கந்தன் என்று அப்பொழுது திருநாமமுற்ற குமரேசனை முன்னவன் மார்பிலணைத்து முத்தங்கொண்டு உமையுடன் இடபவாகனத்திலேற்றி, (கார்த்திகை நக்ஷத்திரமாகிய மாதர்கட்கும், பராசர புதல்வர்க்கும் திருவருள்புரிந்து) ஏனைய தேவர்களை யவரவரிடத்திற்கேக விடைதந்து, எம்பெருமானும் விடையேறி வெள்ளிமலை யடைந்து, தேவியாருக்கும் தமக்கு மிடையே ஸ்கந்தரிருக்க வீற்றிருந்தனர். இதனால் சிவபெருமான் ஸ் + உமா + ஸ்கந்தர் = ஸோமாஸ்கந்த ரெனப் பெயருற்றனர்.

லக்ஷம்வீரரும், நவவீரரும் ஸ்கந்தமூர்த்தியைப் பணிந்தனர். பிறகு குமாரக் கடவுள் ஸ்கந்தகிரியில் இலக்ஷத்தொன்பது வீரருடன் வீற்றிருந்து பல திருவிளையாடல்கள் செய்து, ஏகாதசருத்திரர்களைப் பதினொருபடையாகவும் பராசத்தியை வேற்படையாகவுங் கொண்டு தென்றிசையடைந்து சூரபன்மனாதி யரைத் தொலைத்து, தேவர் சிறையை விடுத்து, இச்சை கிரியைகளாகிய தெய்வயானையம் மையார் வள்ளிநாயகியார் இவர்களை மணந் தெழுந்தருளி விருந்தனர்.

கந்தபுராணம்.

எந்தை சத்திக ளுயிரெலா மொடுங்குறு மெல்லை 
முந்து போலவொன் றாகியே கூடிய முறைபோ 
லந்த மில்லதோர் மூவிரு வடிவுமொன் றாகிக் 
கந்த னென்று பேர் பெற்றனன் கவுரிதன் குமரன்.

ஏல வார்குழ லிறைவிக்கும் மெம்பிரான் றனக்கும் 
பால னாகிய குமரவே ணடுவுறும் பான்மை 
ஞால மேலுறு மிரவொடு பகலுக்கு நடுவாய் 
மாலை யானதொன் றழிவின்றி வைகுமா றொக்கும்.

ஸோமாஸ்கந்தமூர்த்தயே நம: 

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்
 

Related Content

புராணம் இறைவன் விடையேறுதல் (ரிஷபாரூடர்)

உமாமஹேச மூர்த்தி

உமேச மூர்த்தி

சந்திரசேகர மூர்த்தி

ருஷபாரூட மூர்த்தி