logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-shishya-bhava-murthi

சிஷ்யபாவ மூர்த்தி

சிஷ்யபாவ மூர்த்தி
சிஷ்யபாவ மூர்த்தி

ஸ்ரீமுருகக்கடவுள் திருவிளையாடல்கள் பலவியற்றி, தேவர் வேண்டுகோளின் படி அவர்கள் பூசையைக் கொள்ளத் திருவுள்ளங் கொண்டு ஸ்கந்தகிரியில் எழுந்தருளியிருந்து, நாரதமுநிவர் யாகத்திற்றோன்றிய யாடொன்று அமரருலகத்தை யழித்து வந்ததால் அந்தரர் துயர்கூற, அதனை வீரவாகுதேவராற் பிடிப்பித்து வாகன
மாகக்கொண்டு வீற்றிருந்தனர்.

அவ்வாறிருக்கையிலொருநாள், பிரஹ்மேந்திராதி தேவர்கள் சிவபெருமா னைச் சேவை செய்யக் கருத்துட்கொண்டு திருக்கைலாயமலையையடைந்து தரிசித்துத் திரும்பி, குமாரக்கடவுள் வீற்றிருக்குந் திருவாலயத்தைச் சமீபிக்கையில், இளையபிள்ளையார் இலக்ஷத்தொன்பதுவீரரும் புடைசூழ்ந்து விற்க, பொன்மயமான முதற் கோபுரவாயிலில் எழுந்தருளியிருந்தமையால், அவ்வமரர்குழாத்திடை அவர்கட்குத் தலைவனாக வரும் பிதாமசனைத் திருக்கண்சாத்தி, "ஏசதுர்முக'' எனவிளிக்க, பதுமன் அக்கட்டளை மேற்கொண்டு சமீபித்துச் சாஷ்டாங்கமாய்ப் பணியாது கைகூப்பி நின்றனன். முருகக்கடவுள் 'நீயாவன்?" என்று வினாவ, அலரோன் "அண்ணலாக்கினைப்படி அகிலத்தை ஆக்குவோன்'' என்றனன். அறுமுகக் கடவுள் அவ்வாறு சிருட்டி செய்வோனாகில் உனக்கு வேதந்தெரியுமோ'' என, அம்புயன் ''அண்ணலே! இறைவரருளிய எண்ணில்லாவேதாகமங்களுட் சிறிதறிவேன்'' எனச் செப்பினன். கார்த்திகேயன் ''கமலயோனியே! இருக்கு ஒதுக'' என, நான் முகன் "நல்லது" என்று ஓம் எனப் பிரணவத்தையுச்சரித்துப் பின் வேதமோதத் தொடங்கினன்.

முருகக்கடவுள் "இரு; முன்னோதிய ஓம்எனபதற்கு முதலில் உரையுரைத்துப் பின்வேதமோதுக'' எனப்பணிப்ப, அன்னவூர்தி அஃதறியானாதலின் அறைதலொன்று மிலனாய் யோசித்து நின்றனன். செவ்வேள் சினமிகக் கொண்டோராய் "இதன்பொருளறி யாதவுனது சிருஷ்டித்தொழிலும் இவ்வாறேயோ?'' என்று திருவாய் மலர்ந்தருளி அவனது நான்கு முடிகளுங் குலுங்கும் வண்ணங்குட்டி, நிலத்தின் மேலேவிழவுதைத்து, பரிசனங்களாற் கந்தகிரியிலே சிறையிடுவித்து, தாமே ஜபமாலை - கமண்டலம் – அபயம் - வரதமேந்திய நான்கு திருக்கரங்களும் ஒரு திருமுகமுமாக வீற்றிருந்து பிரமதேவனைப்போலச் சிருஷ்டி செய்து கொண்டிருந்தனர். சதுமுகனோடுவந்த வானவர்பயந்து வள்ளலைவணங்கித் தத்தம்பதவியடைந்து பண்டுபோல் வாழ்ந்திருந்தனர். இவ்வாறே பலகாலங்கழிந்தன.

பதுமன் சிறையிலிருத்தற்காக, பன்னகசயனன் தன்னுளமதனில் இன்னல் மிகுந்து எண்கணன் சிறையை விலக்கவெண்ணி, அட்டதிக்கிறைவர் எட்டுவசுக்கள் – துவாதசாதித்தர் - சந்திரன் முதலிய கோள்வள் – சத்தருஷிகள் - நவபிரமாக்கள் முதலிய தேவர் முநிவர்களைச் சிந்திக்க அவர்கள் அந்தக்கணமே ஐம்படைக்குரிசில்பாலடைந்தனர். திருமால் தேவர்முநிவரை யுடன்கொண்டு திருக்கைலையையடைந்து திருநந்திதேவர் விடைபெற்றுத் திருச்சந்நிதானத்தினுட் சென்று திரியம்பகனைச் சேவை செய்து பலவகையாகத் துதித்துக் கைகூப்பி நின்றனர். உமாபதி ஒன்றுமறியார் போன்று லீலாமாத்திரையாய் “தேவமுநிவர்களே! ஒருகாலத்துமில்லாத பெநந்துயருற்று வந்தனிர்போலும்; என்ன விசேஷம்''? எனவினாவ, வானவர்கூட்டத்திலிருந்த மாதவன் பணிந்து, "மஹதேவ! தேவரீரது புதல்வராகிய முருகப்பிரான் பிரமனைப் பிரணவப்பொருள் வினாவி அவனஃதறியாமையாற் சிறையிலிட்டுச் சிருட்டியையுந்தாமே செய்து வருகின்றனர்; வேள் போல வேதனுந் தேவரீர் சுதனேயாம்; ஆதலின் சிறைநீக்க அருள் புரிய வேண்டும்” என விண்ணப்பித்தனர். சிவபிரான் நந்தியெம்பெருமானை நோக்கி "எமது கட்டளையைக்கூறிப் பிரமனைச் சிறைவிடுவித்துவா” என, அவர் அவ்வாறேசென்று சுப்பிரமணிய மூர்த்திகளைத் தரிசித்து, ஆஜ்ஞையை விண்ணப்பித்தவளவில், வேற்படையேந்தியவிமலர் வெகுளி மிக்கு 'வேதாவை விடுவதில்லை; விரைந்து செல்லாது நிற்பின் நின்னையுஞ் சிறையிடுவேன்'' என்றருளிச்செய்ய, நந்திபகவான் அச்சமுற்று ஒன்றுங்கூறாது உம்பர் நாயகரிடமுற்றுரைத்தனர்.

பரமசிவன் அதுகேட்டுப் புந்நகை செய்து, சகலதேவருந் தம்மைப்புடை சூழ்ந்துவர இடபவாகனத்தி லாரோகணித்து, ஸ்கந்தகிரியையடைந்து விடையினின் றிழிந்து உள்வருதல் கண்ட உம்பர் சேனாதிபதி எதிர்வந்து இறைவரது இருசரணங்களைப் பணிந்து தமது பீடத்தின்பேரில் வீற்றிருக்கச்செய்து "தேவரீர் ஈண்டெழுந்தருளியதென்னகாரணம் ?" என வினாவ, பிறைசூடிய பெருந்தகை "பிரமனை நீயிட்ட சிறையினின்றும் விலக்குக'' என, ஸ்கந்தர் சிரமசைத்து, "பிரணவப்பொரு ளறியாத. இவன் சிருட்டி செய்வது அடாது'' எனக்கூறினர். சிவபெருமான் சினங்கொண்டார் போன்று "வேலவ! விதியைவிடுதி'' என அறுமுகக்குரிசில் பரிசனர்களாற் பதுமனை விடுத்தனர். பரமபதி அவ்வலரோனுக்கு அருள்செய்து ஆக்குந்தொழிலிற் பண்டு போலிருக்கப் பணித்து விடுத்து மயூரவாகனரைத் தொடைமேலிருத்தி "பிரணவப்பொருள் உனக்குத்தெரியுமாகிற் செப்புக” என, குழகன் ''கொன்றைவேணியாய் அன்றென தன்னைக்கருளிய ஞான்று பிறருணராது பேசியதன்றோ ? அன்னதிங்ஙனனைவரு மன்னியவிடத்தே மறைவிலாதுறைத்தல் மரபதுதானோ” என மறுமாற்றம் வழங்கினர். ஈசன் எனக்கு 'மறைவாகக்கூறுக” என்று திருச்செவிகொடுக்க, ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிகள் ஓம் என்னும் பிரணவத்தின் பொருளைக்கூறினர். சிவபிரான் களிகூர்ந்து தேவர்களுக்குச் செல்ல விடையளித்து, விடையேறி வெள்ளி மலையடைந்து வீற்றிருந்தனர்.

முருகக் கடவுளிடத்திற் பிரணவப்பொருளைக் கேட்டுக்கொண்டபொழுது சிஷ்யகோலமாக நிற்றலின், சிவபெருமான் சிஷ்யபாவமூர்த்தியெனப் பெயரெய்தி னர்.

சிஷ்யபாவமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்                          
 

Related Content

இலிங்கோற்பவ மூர்த்தி

முகலிங்க மூர்த்தி

ஸதாசிவமூர்த்தி

மஹாசதாசிவ மூர்த்தி

உமாமஹேச மூர்த்தி