சமஸ்தலோக காரணபூதராகிய பரமேசுவரன் கட்டளைப்படி திருமால் மோகினியுருவேற்றுத் தாருவதமுநிவர் தவத்தை யழித்தும் பெருமானே பிக்ஷாடநத் திருவுருக்கொண்டு அம்முநிபத்தினிகளின் கற்பை யொழித்தும் நகரிற் புறம்போந்த போது, பெருமான்பக்கலிற்சேர்ந்த திருமால் பெண்ணுரு நீங்கினர். அப்பொழுது அயன் முதலிய அமரர் ஆண்டடைந்து வணங்கினர். அவற்றையெல்லாம் நன்குணர்ந்துள்ள தாருவநமுநிவர் ஓர் வேள்வி செய்தரனை யழிப்போமென்று அபிசாரஹோமமியற்ற, அவ்வக்கினியில் நினைத்தற்கு மரியவுருவும் இடிமுழக் கனைய வெடிபடு தொனியும், பெரியவாயும், வளைவாகிய பற்களும், கூர்மை வாய்ந்த நகமும், தீப்பொறிசிந்துஞ் சிவந்தவிழியும் அஞ்சாமையுமுடைய புலி யொன்று அதிகரித்த கோபத்துடன் தோன்றியது. முநிவர் வல்லியத்தை நோக்கி முக்கணானை முடிக்க என விடுக்க, அது விடையூர்தியைத்தேடி விரைந்து வருகையில் உலகினர் அச்சுறவோடி வரும் உழுவையை உம்பர்பெருமான் எதிர்சென்று பற்றிச் சங்கரித்துத் தமதருமைத் திருமேனியில் அதன் சருமத்தை யாடையாக வணிந்தனர்.
வல்லியம் வலியிழந்து வஸ்திரமானபின், எவற்றையுமழிக்கும் இணையில் லாக் கணிச்சியொன்று, எரியிலிருந்து பிறக்க, அந்தணர் ஐயன்மேல் விடுப்ப, அஃது எதிர்வர, சங்கரன் றனது கெங்கையிற் பற்றி இங்கொரு படையாயிருவென விசைத்தனன், மீண்டும் ஓர் மான் உற்பவித்தது. அதனை மகாதேவன் மேற்போக்க அதுசராசரமெல்லாமழியும்படி இரைச்சலிட்டு அந்தரமார்க்கமா யெழுந்துவரக்கண்ட அரன் அதெனொலியால் உயிர்கள் வருந்தாது கிருபை புரிந்து இடக்கரத் தேற்று "ஈண்டிருந்தினி திரைக ” எனப் பணித்தனர். அதன்மேல் சர்ப்பங்கள் பிறந்தன. அவற்றைச் செலுத்த, சம்புசரீரத்திற் பணியாக அப்பணிகளை யணிந்தனர். பூதவெள்ளம் தோன்றின. ஆதிநாதன்மேல் ஏவினர். மாதுபாகர் வருகென விளித்து
"நமது சேனையாய் நாளுமிருத்திர் " என நன்கருளினர். ஒரு வெண்டலை உலகழியச் சிரித்துத் தோன்றக்கண்டு சிவபிரான் மேற் பிரயோகிக்க, சிவபிரான் திருக்கரத்தாற்பற்றிச் சிரமீதணிந்தனர். இவற்றைக்கண்டமுநிவர் முனிவுற்று, முன்னவன் மேல் மந்திரங்களைவிட அவை துடியுருவேற்று இடியென முழங்கி யெதிர்வர, எம்பிரான் கரத்திற்பற்றி என் கன்னத்தில் முழங்குக" எனக்கட்டளை யிட்டனர். தாருவநத்தோர் தரியாக் கோபத்தழலால் மீண்டும் யாகஞ்செய்ய முயலகன் பிறந்தான். முநிவர் முயலகனையும் ஹோமாக்கினியையும் ''உமை கேள்வனை யுயிர்செகுக்க'' என வோதி யனுப்பினர். நேர்வரக்கண்ட நின்மலர் கெருப்பைக் கையிற்றாங்கி, நிசாசரனாகிய முயலகனை நிலத்தில்வீழக் காலாற்றள்ளி யவன் முதுகின்மேல் தமது முண்டகத்தாளூன்றி நின்றனர். வேறொன்றுஞ் செய்யமாட்டாத வேதியர் பல சாபமிட அவை தாணுவினிடஞ் செல்லாமைகண்டு தடுமாறிநின்றனர். முயலகன் முதுகை யசைக்க முக்கணர் நடிக்கக்கண்ட நான்முகன் முதலானார் ''அரகர சங்கர சம்பு” எனத் தொழுவாருந் துதிப்பாருங் களிப்பாருங் கைகுவிப்பாரும் பாடுவாரும் ஆடுவாருமாயினர்.
சிவபெருமான் தம்மைப் பணியாத தாருவநமுநிவருக்கு ஞாநத்தை யநுக்கிரகித்தனர். அதனால் அந்தணர் அறிவுகூர்ந்து "ஐயனே! அடியேங்க ளறியாமையாற் பலவகையாகத் தேவரீரை யவமதித்தோம். அவற்றை மன்னிக்கவேண்டும் அருட்பெருங்கடலே" என்று பலமுறை பணிந்து உடல் நடுங்க உரைகுழற உரோமம் புளகிப்ப உள்ளமுருக ஆநந்த வெள்ளம் பெருக வேண்டினர். சிவபெருமான் "முநிவரே! சைவநெறியைக் கைக்கொண்டு நற்றவம்புரிந்து நானிலத் திருத்திர்'' என நிறுவியருளி, திருக்கைலையையடைந்து திருமால் பிரமன் முதலானாரைத் தத்தமிடஞ் செல்ல விடுத்தனர். இதன் முற்பட்ட சரிதத்தைப் பிக்ஷாடகமூர்த்தத்திற் காண்க.
ஈண்டுத் தாருவந முநிவர்செய்த அபிசார வேள்வியில் தோன்றி அவர்கள் ஏவலின்படி வந்த புலியைச்சங்கரித்து உடையாகப் போர்த்த கோலமே சார்த்தூலஹரமூர்த்த மெனப்படும்.
"தீதில் மாதர்கள் கற்ப ழித்தவ னைச்செ குத்திடுவோமெனா
மாத ழற்கொண் மகம்பு ரிந்ததின் வந்து வந்துபி றந்திடுங்
காது வெம்புலி பரசு நவ்வி கடும்ப ணித்திரள் பூதர்கண்
மோது வெண்டலை திண்டி றற்றுடி மூபல கன்றனை யேவினார்.
வேங்கை தன்னையு ரித்து டுத்தனன் மிக்க சாரதர் தானையாய்ப்
பாங்கு றும்படி யோதி னானொரு பாத வண்கழ லத்தினா
லேங்கு றும்படி முயல கன்றனை யீடி னோடுமித்தித்தனன்
வாங்க ருங்கவி னுற்ற மேனியின் மற்றை யாவு மணிந்தனன்.”
சார்த்தூலஹரமூர்த்தயே நம: