logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-sada-nrutta-murthi

ஸதாந்ருத்த மூர்த்தி

ஸதாந்ருத்த மூர்த்தி
ஸதாந்ருத்த மூர்த்தி

 சிவபெருமான் ஆன்மாக்களுக்குப் பெத்த முத்திகளைத் திருவருள் செய்தற் பொருட்டுப் பஞ்சாக்கரமே திருமேனியாகக் கொண்டு பஞ்சகிருத்தியத் திருநடனத்தை யெஞ்ஞான்றும் இயற்றி யருளாநிற்பர்.

“தோற்றந் துடியதனிற் றோயுந் திதியமைப்பிற்
சாற்றியிடு மங்கியிலே சங்காரம் - ஊற்றமாய்
ஊன்று மலர்ப்பதத்தி லுற்ற திரோதமுத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு."

“மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டுமலஞ்
சாய வமுக்கியரு டானெடுத்து - நேயத்தால்
ஆநந்த வாரிதியி லான்மாவைத் தானழுத்தல்
தானெந்தை யார்பாதந் தான்."

என்னும் உண்மை விளக்கத்தின்படி, பெருமான் மூன்று திருக்கரங்களாலும் இரண்டு திருவடிகளாலும் பஞ்சகிருத்திய மியற்றுகின்றார். எவ்வாறெனில், தமருகமேந்திய கரத்தினாற் சிருட்டியும், அமைத்த அஸ்தத்தினால் திதியும், மழுவேந்திய கையினாற் சங்காரமும், முயலகன் முதுகிலூன்றிய திருவடியினால் திரோபவமும், அநவரத நடம்பயிலும் அடித்தாமரையினால் அநுக்கிரகமும் புரிவர். அன்றியும்,

''உரையுணர்வுக் செட்டா வொருவன்மிகு பஞ்சாக்
கரத்தால் வரைமகடான் பாதி - பரையிடமாய்க்
காணும் படியே கருணையுருக் கொண்டாடல்
பேணுமவர்க் குண்டோ பிறப்பு.''

என்றபடியே , ஆன்மாக்கள் அநாதியே பந்தித்துள்ள பாசவீக்கம்போக்கி முத்தியடைதற் பொருட்டே, அருள்வடிவாகிய அம்மையார் பக்தாநுக்கிரக காரண மாய், பஞ்சாக்கரவடிவமாகிய அவ்வாநந்தத் திருநடனத்தை வாமபாகத்தினின்றுந் தரிசிப்பர். மேலும்,

"ஆடும் படிகேணல் லம்பலத்தி லையனே
நாடுந் திருவடியி லேநகரங் - கூடு
மகர முதரம் வளர்தோள் சிகரம்
பகருமுகம் வாமுடியப் பார்.”

என்றபடியே, சிவபிரான் நிருத்தக் கோலங்கொண்டஞான்று திருவடியில் நகரமும், திருவயிற்றில் மகரமும், திருத்தோளில் சிகரமும், திருமுகத்தில் வாகாரமும், திருமுடியில் யகரமுமாகக்கொண்டு ஸ்ரீ பஞ்சாக்ஷரமே திருவுருவாக நின்று ஆன்மாக்களின் மீதுள்ள கருணையால் ஐவகையான கிருத்தியங்களையு மியற்றாநிற்பர். இனி இந்நடனம் ஊனநடனம் ஞானநடனம் என இருவகைப்படும். சிவபிரான் திருக்கயிலாயமலை ஸ்ரீ மேருமலை - வடாரண்யம் - திருத்தில்லை – திருவாலவாய் - திருநெல்வேலி - திருக்குற்றாலம் - திருத்தெளிச்சேரி முதலாகக் கூறப்படும் பலவிடங்களிற் பலகாரணங்களாற் பலமுறை பதம் பெயர்த்தாடி யிருப்பினும், ஸ்ரீ பஞ்சாக்கரமே திருமேனியாகக் கொண்டு பஞ்சகிருத்தியகாரணமாக எப்போதும் உமையம்மையார் தரிசித்து நிற்கும்படி திருமால் திருந்திதேவர் பிரமதகணங்கள் முதலானாரது தோற்கருவி தொளைக்கருவி நரப்புக்கருவி கஞ்சக் கருவி மிடற்றுக்கருவி முதலியவற்றி னோசையோடு திருநடனஞ் செய்திருத்தலின்,  ஸதாக்ருத்தமூர்த்தியெனப் பெயருற்றனர்.

ஸதாந்ருத்தமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்

Related Content

The Dance That Awakens Us!

சிதம்பர தரிசனம் - Chidambara Dharishanam

ஸந்த்யாந்ருத்த மூர்த்தி

சண்டதாண்டவ மூர்த்தி