ஆகாயவாசிகளாகிய இமையவர் , திரிபுரத்தவர்களால் உலகந் துன்புறுகின்ற தாதலின், அவர்களை யடக்கி யருள வேண்டுமெனச் சிவபெருமானிடம் விண்ணப் பஞ்செய்ய, சிவபெருமான் "அவர்கள் மேல் அமர்க்கோலங்கொண் டெழும்படி யுத்தத்திற்குரிய கருவிகளை சித்தஞ்செய்க'' என்று கட்டளையிட்டருள, அமரர் அவ்வாறே ஆயத்தஞ்செய்து அரவாபரணனுக்குத் திருநந்திதேவர் மூலமாக அறிவிக்க , ஐயர் அம்மையாருடன் தருமதேவதையாகிய தாவள்யமான இடபவாக னத்தின்பேரி லாரோகணித்து, திருக்கயிலாய கிரியினின் றிறங்குகையில், திருமால், முதலாகிய தேவர்கள் கண்களாரத் தரிசித்துச் சிரசின்மேற் கைகளைக் குவித்து இறைஞ்சிப் பலவகையாகத்துதித்து மகிழ்ந்தனர். அம்பிகைபாகன் அமரராலாக்கிய இரதத்தைக்கண்டு இடபத்தினின்றும் இமயவல்லியுடனிழிந்து, மேருமலையாகிய வில்லுடன் சென்று தேரிலேறி மிதித்தவுடன்அதனச்சுமுறிந்தது.
அதுகண்ட அச்சுதன் அரனிடத்துள்ள அன்பின் மேலீட்டினால் அப்பொழுதே ஒரு வெள்ளியவிடை யுருவேற்றுத் தாங்கினன். சங்கரனைத் தாங்கி நின்ற சார்ங்கன் "என்னையன்றி எம்பெருமானைப் பரிப்போர் யாவர்? என் தவமே தவம்! இறைவன் எனக்களித்த வரமே வரம் ! ” என இவைபோற்பல நினைந்து இறுமாந்த னன். பத்திவலையிற் படுவோனாகிய பரமபதி, மாயவன் மனத்திலுற்ற மம்தையை யறீத்து ஓர் திருவிளையாடல் புரிந்தனன். அதனால் அச்சுதன் ஐயனைத் தாங்க மாட்டாமல் இருசெவியிலும் வாய் வழியிலும் நாசியிலும் உதிரவெள்ளமொழுக, இருவிழிகளும் பிதுங்க, கால்களை மடித்துக்கொண்டு நிலத்தின் பேரில் விழுந்தனர்.
அப்பொழுது தேவர்கள் பயந்து அத்தாசரணம் - அரனே சரணம், முத்தாசரணம் -முதல்வாசரணம், சித்தா சரணம் - சிவனே சரணம், நித்தாசரணம் - நிமலா சரணம்” எனப் பலவாறு துதித்தனர். கருணாநிதி கமலைகேள்வன் விஷயத்தில் மனங்கனிந்து பூமியிலிறங்கினர். ஈசன் இறங்கியபின்னர்க் கேசவன் வலிபெற்றோனாய் நிற்க, பிரிஹ்மேந்திராதி தேவர்கள் திகைத்தனர். சிவபிரான் புன்சிரிப்புக் கொண்டு திருமாலைநோக்கிச் சீதரா! யாது வேண்டினை. விரும்பியவற்றைக் கேட்பின், இப்பொழுதே தருவேம்' என, மாதவன் மனமகிழ்ச்சியுற்று 'தேவநாயகா! தேவரீரது வாமபாகத்தினின்றும் பிரியாது ஒருசத்தியிருக்கவும், அடியேன் விரும்பியபடி என்னையும் ஒரு சத்தியாகக் கொண்டீர். தொண்டருள்ளத்தில் அவாவியவற்றை எண்ணியாங்கீயும் அருட்கற்பகமாகிய தேவரீருக்குத் தருமவிடை யொன்றிருப்பி னும், மால்விடையென யானுந் தேவரீரைத்தாங்க வலிபெறவேண்டும்" என்று வருந்தி யாசித்து நிற்க, அருட்பெருங்கடல் தமது அடியவருட்சிறந்த திருமாலுக்கு அத்தகைய பெரும் பேறெய்தத்தக்க அரியவரத்தையும் வலியையும் அநுக்கிரகித்து அரியாகிய இடபத்தை வாகனமாகக் கொண்டு அதன்பேரி லாரோகணித்தனர். [எஞ்சியசரிதையைத் திரிபுரதகநத்திற் கண்டுகொள்க.]
மாலாகிய இடபத்தை வாகனமாகக் கொண்டு அதன்பேரில் ஆரோகணித்தலிற் சிவபிரானுக்கு ருஷபாரூடமூர்த்தி யென்பதோர் திருநாமம் விளங்குகின்றது.
''சதுஷ்பாத்வ்ருஷருபீத்வம் ப்ரஹ்மண: புத்ரதாங்கத:
தர்மஸ்ஸர்வார்சிதஶ்ஶஶ்வத் வாஹநோமெபவாநிஶ:
த்வஜேபிமமகோவிந்த தேநமாம்வ்ருஷபத்வஜம்
அஹம்வ்ருஷபவாஹஞ்ச ஸூரயோவேததத்பரா:”
மூரி வெள்ளிமி லேறுவிட் டிழிந்தனன் முதல்வன்
மேரு மால்வரை யொருதனி வில்லொடு மேவித்
தேரி னோர்தனி யெடுத்துற மிதித்தலும் தெறித்துப்
பாரு மச்சுமற் றிழிந்த்து தேர்த்தடம் பரப்பு.
மடுத்தெ டுத்தனன் வெள்விடை யுருக்கொடு மாய
னெடுத்த வப்பரம் பொறுக்கலா னிருதொளை நாசி
விடுத்தெ ழுந்தன குருதிநீர் விழித்துணை பிதுங்கிப்
படுத்த வாய்வழி யுமிழ்ந்தனன் குருதிநீர்ப் பறவை.
எந்தை யேயுனக் கபயமற் றெவ்வுயிர்த் தொகைக்குந்
தந்தை யேயுனக் கபயமெத் தலைவர்க்கு முதலா
முந்தை யேயுனக் கபயமென் றிரந்தனர் மொழிந்தா
ரிந்து சேகரன் மாயவற் குறித்தன னிரங்கி.
சத்தி யோர்புடை யிருக்கவும் யானுமோர் சத்தி
யொத்தி டப்புரிந் தருளினை யாதுபோ லுடையாய்
வித்த கத்தினி யேறுளை யாயினும் வினையே
னத்த னித்திற லேறெனத் தாங்குதற் கருள்வாய்.
ருஷபாரூடமூர்த்தயே நம: