முன்னொருகாலத்தில், தவமே முத்திபயக்கத்தக்கதென்றிறுமாந்திருந்த தாருவநமுநிவர் தவத்தையும், அவர் பன்னியர் கற்பையுமழிக்க, சிவபெருமான் பிக்ஷாடகமூர்த்தியாய், திருமால் மோகினி வடிவேற்று உடன் வரக்கொண்டு தாருவுனத்தைச் சார்ந்து மோகினியால் முநிவர் தவத்தையொழித்து, தாமே அவ்விருஷிமாதர் கற்பையகற்றினர். அதனால் வெகுளிமீக்கொண்ட அந்தணர் அபிசார ஹோமமொன்றியற்றி அதிற்றோன்றிய பலபொருள்களையும்பரமன் மேற்பிரயோகிக்க, இறைவர் அவற்றை உடை – படை - அணி முதலியனவாகக் கொண்டனர். அவர்கள் யாகாக்கினியிற்றோன்றிய முயலகனைச்செலுத்த, முன்னோன், அம்முயலகன் முதுகில் ஓர் திருவடியையூன்றி ஓர் நடனஞ்செய்து முநிவர்கட்கு ஞானமளித்துத் திருமாலுடன் திருக்கைலைசேர்ந்தனர். [இச்சரிதங்களை முறையே பிக்ஷாடநமூர்த்தம் - சார்த்தூலஹதமூர்த்தங்களிற் கண்டுகொள்க.]
இதனையறிந்த எமதன்னையாகிய கௌரியம்மையார் தாம் சத்தியாயிருக் கையில் இறைவர்மாலாகிய மோகினியை உடன் கொண்டு சென்றதும், தாம் உடனில்லாத சமயத்தில் தாருவனத்தில் திருநடனஞ் செய்ததுமாகிய காரணங்களால், ஓர் லீலாமாத்திரையாய் ஊடல் கொண்டனர்.
அதுகண்ட அருள்வள்ளல் ''ஏகைவஶக்தி: பரமேஶ்வரஸ்யப் ரயோஜ நார்தாய சதுர்விதாபூத் - போகேபவாநி புருஷேஷுவிஷ்ணு:க்ரோதேசகாளீ ஸமரேசதுர்கா”- என்றபடியே. ''உமையே! எமது ஒரு ஶக்தியே மாயாகாரிய சம்பந்தத்தால் நான்கு வகை யுற்று விளங்கும். அதுவே நீயும் - திருமாலும் - காளியும் – துர்க்கையு மென்றறிவை. அதாவது:- மனைவியாகையில் நீயும், ஆணுருவாகையில் விண்டுவும், குரோதமுற்றபொழுது காளியும், யுத்தமுனையில் துர்க்கையுமாக விளங்குவீராதலின், திருமாலும் நீயும் வேறன்று. இதற்காக வெகுளி வேண்டுவதில் லை'' என்று தாமும் லீலா மாத்திரையாய்ப் பிரார்த்தித்தனர்.
தேவியார் சினந்தணிந்து ''தேவநாயகா! எளியேன் அத்திரு நடனத்தைத் தரிசிக்கும்படி திருவருள் புரிய வேண்டும்" எனப் பிரார்த்திக்க, இறைவர் அகங்களிகூர்ந்து “அவ்வாறே ஆகுக" என்று ஆண்டும் ஓர்தாண்டவஞ் செய்தருளினர். அதனைக் கௌரி தாண்டவம் என்பர். இறைவியார் ஈசனைப்பணிந்து “எளியேன் பிழையை மன்னிக்க வேண்டும்" என்று பலமுறை பணிந்து பண்டு போல் பரமன்பக்கலில் வீற்றிருந்தனர். இறைவர் லீலாமாத்திரையாக ஊடல் கொண்ட இமயவல்லியைப் பிரார்த்தித்த அவசரம் ப்ரார்தநாமூர்த்தமெனப்படும்.
ப்ரார்தநாமூர்த்தயே நம: