logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-pashupata-murthi

பாசுபத மூர்த்தி

பாசுபத மூர்த்தி
பாசுபத மூர்த்தி

சந்திர வமிசத்து மன்னரில், பாண்டு புத்திரரான பஞ்சவர்கட்கும், திரிதராட்டிரன் மக்கள் நூற்றுவர்க்குந் தொடர்ந்த பாரதயுத்தத்தில், பதின்மூன்றாந் தினப்போரில் பல்லாயிரவரான சஞ்சத்தவர்களைப் பார்த்தன் கொன்று திரும்புமுன், அநேக அரசருடன் அமர் செய்து அவர்களை அபஜெயப்படுத்திவரும் அபிமக்யுவென் னும் அருச்சுனன் சுதனைச் சயத்திரதன் சங்கரித்தனன். அதனைப் பாடி வீடுசேர்ந்த றிந்த பற்குனன் பதைத்துத் துடித்து வேர்த்துக்களைத்துக்கோபித்துப் பற்களைக் கடித்து மீசை துடிக்கத் தோளைப்புடைத்து "என்மகனைக் கொன்றவனை நாளைச் சமரில் நாசஞ்செய்யேனாகில் நான் எரியில் வீழ்ந்திறப்பேன்'' எனச் சபதஞ் செய்தனன்.

அப்பொழுது அருச்சுனனுக்குச் சாரதியாயும் அருந்துணையாயும் மைத்துனனா யுமுள்ள கண்ணன் அவனைப் புறத்தேகொண்டு போய்த்தேற்றி ''காலையிலிருந்து கடும்பசியாக விருத்தலின் ஈண்டுள்ள கனிகளையேனும் புசித்துக் களையாறுக” என; அருச்சுனன் “அடியேன் அரனை அருச்சித்தன் அருந்தேன்” என, கிருஷ்ணன் ''என்னையே பெருமானாக எண்ணி யருச்சிக்க'' என இயைந்து, அவ்வநத்திலிருந்த அநேக மலர்களைக் கொண் டருச்சித்து அங்குக் கிடைத்த பழவர்க்கங்களாற் பசியையாற்றி, அன்றெல்லாம் அயர்ந்திருத்தலின் அவ்வரண்யத்திலேயே கண்ணுற ங்கினன். கண்ணன் அவனுடலைப்பாதுகாக்க அமரர் சிலரை ஆண்டமைத்துப் புத்திர
சோகத்தாலே துயிலுஞ் சவ்வியசாசியின் கனவில் தோன்றினன். நரன் நாரணனை நமஸ்கரித்தனன். மதுசூதனன் "மைத்துனா! துரோணர் முதலானார் காப்பினும் நாளைப்போரிற் சிந்து மன்னனைச் சிரமழிக்கும்படி திருக்கயிலை சென்று சிவபிரான் திருவருள் பெற்றுத் தினகரன் உதிக்கு முன்னர்த் திரும்புதும்” என, அருச்சுனனுங் கனவிலேயே சம்மதித்தெழுந்தனன்.

கண்ணன் அருச்சுனனென்னும் இரண்டு கருமலைகள், கயிலையாகிய வெண்மலையை நண்ணி, பார்வதியாகிய பஞ்சை மலையைப் பாகமாகக் கொண்ட பரமேஶ்வரனென்னும் பவளமலையைக்கண்டு பணியும்படி அப் பருப்பதமடைந்து முதற்பெருங்காவலாகிய நந்தியெம்பெருமானது நளின சரணங்களை நமஸ்கரித்து அவர நுஞை பெற்றுத் திருச்சந்நிதியினுட்சேர்ந்து தேவமுநிகணங்கட்கிடையே சிங்காதனத்திற் சிலையரசபுத்திரியாருடன் வீற்றிருக்குஞ் சிவபெருமானைத் தரிசித்து, பன்முறை நிலமேற் பணிந்து நின்று கைகூப்பி,

''நித்தனே நிமலனே நிகழ்நின் னாமனே
அத்தனே யடியவர்க் கெளிய வண்ணலே
பித்தனே யாதியந் தங்கள் பேசொணா
முத்தனே யுயிர்தொறு முலாயமுன்பனே''

எனப் பலவாறாகத் துதித்துக் கண்களில் ஆரந்தபாஷ்பஞ் சொரியும் நரநாரணர் களை நோக்கி, நம்பர் இவ்விரவில் விரைவாகஈண்டடைந்தது யாது காரணம்?" என வினாவ, கிருஷ்ணார்ச்சுனர் "தேவதேவா! தேவரீர் முன் திருவருள் செய்த பாசுபதத்தால் நிவாதகவசர்காலகேயர்களை வதைத்தோம். அதன் முஷ்டிநிலை தலைப்பட அநுக்கிரகிக்கவேண்டும்” என வேண்ட, அமலர் அவ்வாறே தடாகத்திலிரு ந்த பாசுபதத்தை இருவராலெடுத்து வரச்செய்து, முஷ்டிநிலை (நனவிலும் மறவா வண்ணம்) முற்றுப்பெறவுணர்த்தினர். அருச்சுனன் அன்றிரவிற் கண்ணனை அருச்சித்த கடிமலர்யாவும் அண்ணல்மேனியி லமர்ந்திடக்கண்டு அநந்தபரவசனாய் வணங்கி நின்றனன். கண்ணன் கருதி வந்தது கை கூடியதென்று களித்துக் கைகூப்பி நின்றனன்.

கண்ணுதல் உளமகிழ்ச்சியுடன் “பாரதப்போரிற்செயமுண்டாகக்கடவது” என ஆசீர்வதித்து விடையளிக்க, விடையூர்தியின் திருவருள் பெற்ற இருவரும் இறைவரது திருவடியைப் பணிந்து அரிதிற்புறம் போந்து ஆலயத்தை வலம் வந்து திருக்கைலையை நீங்கித் தமதிருக்கைசார்ந்தனர். அருச்சுனன் இவ்வாறு சொப்பனங் கண்டு துண்ணெனவிழித்து அம்புறாத்தூணியில் அவ்வத்திரமிருத்தலின் உண்மை யெனத் தெளிந்து கொண்டனன். சுயோதனன் யுத்தியும், துரோணன்வல்லபமும், பலமன்னர் பராக்கிரமமும், மாயன் வஞ்சனையா லொழிந்தன . அருச்சுனன் தனக்குச்சிவபிரான் பிரசாதித்த பாசுபதக்கணையாற் சிந்துதேசாதிபதியாகிய செயத்திரதன் சிரசைக் கொய்து சபதத்தை நிறைவேற்றினன். கிருஷ்ணமூர்த்தியும் அருச்சுனனும் அவாவியவண்ணம் அவர்கட்கு அஸ்திரமருளிய அவசரம் பாசுபத மூர்த்தமெனப் பகரப்படும்.

பாசுபதமூர்த்தயே நம:

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்
 

Related Content

The History of Rudra Pashupati Nayanar

உருத்திரபசுபதி நாயனார் புராணம்

திருமுறைகளில் உருத்திர பசுபதி நாயனார் பற்றிய குறிப்புகள்

லகுளேசுவர மூர்த்தி

கிராத மூர்த்தி