சிவாக்கினையால் அரக்கர்குலத்திலே சோமுகாசுர னென்னும் நாமமுற்ற தீயோன் ஒருவன் ஜனித்து எம்பிரானை நோக்கி யியற்றற்கரிய தவஞ்செய்து, பல வரங்களைப்பெற்றுப் பராக்கிரமசாலியாய்த் தன்னையெதிர்ப்போர் தரணியிலிலாது தருக்கெய்தி, தோள்களின் தினவு தீரும்படி மேருமலையையெடுத்துப் பந்துபோல் விளையாடினான். இயமனுங் கண்டஞ்சத்தக்க காலகாலன்போலவிருக்குஞ் சேரமுகன், தன்னொடு போர்ச்செய்யவல்ல சதுரர் சுவர்க்க மத்தியபாதலமென்னுந் த்ரிலோகத்திலு மொருவருமில்லாமையால், ஒருநாள் தானே சத்தியலோகமுற்றுப் பிரமதேவனுக்குமுன் தோன்றினன்.
அப்போது சதுமுகன் சோமுகனைக்கண்டு பயந்துநிற்க, இராக்கதன் இவன் வலி இவ்வளவுதானோவென்று கருதி யிகழ்ந்து, மலரவன் வசத்திலிருந்த மறைகள் நான்கையுங் கையாற்பறித்துக் கடவிற்பாய்ந்து களித்துலாவினான். அயனோ தனது ஆக்கற்றொழிலுக்காதரவாகிய ஆரணங்கணான்கும் அசுரன் கையிலகப்பட்டமையா லஞ்சிச் செய்வதொன்றுந் தெரியாமல், திருமகள் கொழுநன்பாற்சென்று "பிதாவே! என்வசத் திருந்த எழுதாக்கிளவியைச் சோமுகன் கொண்டுபோயினன்” எனக்கூற, நெடுமால் உடனே கோபாக்கிரசித்தராய்ப் பிருகுமுநிவர் சாபப்படி மீனவடிவேற்றனர். எண்ணில்லாதயோசனை நிகளமுள்ள பெரிய மச்சவடிவேற்ற மாயோன், கடலிற் பாய்ந்து அது சேறுபடும்படி சோமுகனைத்தேடி வாலாலடிப்பதால் நீர்த்துளி ஆகாயத்திற்படவும், அண்டச்சுவரில் மீனங்கள் மோதவும் விசிறி, திமிங்கலமுதலிய பெருமீன்களை அங்காந்த வாயினாலுட்கொண்டு, வேதத்தைக் கவர்ந்தொளித்த வெய்யோனாகிய சோமுகனைக்கண்டு பின்சென்று துன்புறுத்தி, அவனது சோரியாகிய மாரியை வாயாரவுட்கொண்டு அவனைச் சங்கரித்து அவன் வசத்திருந்த அருமறை நான்கையுங் கைக்கொண்டு திரும்புகையிற் கமலயோனி கண்டு மாலோன் மலரடிபணிந்து அச்சத்துடன் கையேந்த, நாரணன் ஆபரணங்களை யம்புயன் வசமளித்தனன். அதுபெற்ற அயன் அகங்களி கொண்டு தனது சத்தியலோ கஞ்சார்ந்தனன். அசுரன் மெய்யிலிருந்தொழுகும் உதிரப்பெருக்கு உவரியைச் செந்நிறமாக்கியது.
அப்பொழுது மந்தரம் போலக் கடலைக்கலக்கிய மச்சங் கரைகளையிடித்துக் கிழக்கு - மேற்கு - தெற்கு - வடக்கு ஆகிய நாற்றிசைகளொன்றில் தலையும் பிறிதொன்றில் வாலுமாக நின்று முதுகுநீரிலமிழாத பேருருக்கொண்டு மகரமுதலிய மச்சங்களைப் புசித்து மரக்கலங்களையுடைத்து எல்லாவற்றையுமழிக்குந் ததியிலிருப்பது தெரிந்து, தேவர்கள் புகலிடந்தேடித் திருக்கைலாயகிரியை யடைந்து அறவடிவாகிய திருநந்திதேவரைப்பணிந்து விடைபெற்றுத் திருச்சந்நிதானத்தினுட் சென்று ஸ்ரீபரமபதியைத் தரிசித்து "எம் பெருமானே! மாயோன் மச்சவடிவாய் எழுகடலையுமொன்று கூட்டி அதிலுள்ளவைகளைப் புசித்தலின் மாந்தர் வருந்துகின்றனர். இனி யாவரிடம் வருவனோதெரியேம். அண்டகடாகமுற்று மதிர்கின்றது; ஆதலின் அம்மாயா மச்சத்தி னிறு மாப்பை மாய்க்க வேண்டும்'' என விண்ணப்பித்து வணங்கிநிற்க, சிவபெருமான் "அவ்வாறேயாகுக. அமரர்களே! அஞ்சற்க" என்றபயமளித்து, வலைஞர் வடிவேற்று வாரிதியையடைந்து, அம்மச்சத்திற்கேற்ற பேருரு வாய்த்து, எழுகடலையும் மறைக்கத்தக்க வலையை வீச மீனம் அதனுளகப்பட, சங்கரர் அதன்விழியைப் பறித்தனர். அப்பொழுது தேவர் இருடியர் முதலானார் இறைவனே! இத்திருமால் இன்னுமொருகரம் இத்தகைய விறுமாப் பெய்தாவண்ணம் அவ்விழியையுந் தேவரீர் திருமேனியிலணிய வேண்டுகிறோம்'' எனப் பிரார்த்திக்க, அன்பர் எண்ணியவாறே அருள்புரியும் அமலர் அதனைக் கைவிரல் மோதிரத்தி லமைத்தணிந்து வெள்ளிமலை சேர்ந்து வீற்றிருந்த னர். கண்ணிழந்த ஈனமாகிய மீனவடிவுற்ற விஷ்ணு பண்டைய வுணர்ச்சியால் அவ்வடிவையொழித்துச் சிவார்ச்சனை புரிந்து மச்சபுராணமோதி வைகுந்தமுற்றனர்.
சிவபெருமான் மச்ச சங்காரஞ்செய்கையிற் கொக்குருவேற்றுச்சென்றதாய் அதர்வண வேதம் கோஷிக்கின்றது.
மாயனாகிய மச்சத்தின் மமதையை மாய்த்து, அதனைச் சங்கரித்தமையால், ஐயனுக்கு மச்சாரியென்றோர் திருநாமம் அறைதலாயிற்று.
த்ரியம்பகோபகோநாமருத்ர: நாராயணஶிரச்ச0சுநாசகர்த –
''எடுத்து வீசிய வலைகட லேழையு நிரப்பிப்
படுத்தி ழுத்தலும் வலையகப் பட்டது பாரா
நடுக்க டற்புகுந் திருவிழி பறித்தன னடந்தான்
கடுத்த வெஞ்செருக் கழிந்தது மீனமாக் கடவுள்''
''வானம்பழித்தவலைமாக்கள் வடிவுதாங்கிவலம்புரிக்கை
மீனம்படுத்துவிழிசூன்று விரன்மோதிரத்தினெவ்வுயிர்க்கு
ஞானம்பயப்பக்குருவிந்த நலங்கேழ்மணிபோற்பதித்தணிந்த
கானம்படித்துச்சுரும்புளருங் கடுக்கைத்தொடையோன்றிருவுருவம்.”
மச்சஸம்ஹாரமூர்த்தயே நம: