இரண்டாயிரஞ் சதுர்யுகம் பிரமனுக்கு ஒரு நாளாதலின் ஆயிரஞ் சதுர்யுகம் அகல ஒருபகல் கழிதலாற் பிரமன் துயின்றனன். அப்பொழுது சூரியர் சந்திரர் நக்ஷத்திரங்கள் நவக்கிரகங்கள் முநிவர்கள் தேவர்கள் முதல் மாறிய பதினான்கு மநுக்களும், பதினான்கு இந்திரர்களும், யாவரும் மகலோகமுற்றனர். கற்பாந்த வெள்ளம் தோன்றி உலகிலுள்ள உயிர்களை அழித்தது. மகாமுநிவர் சநலோகஞ் சேர்ந்தனர். கடற்பெருக்கால் உலகம் மறையத் திருமால் ஓர் ஆலிலையின் பேரிற் குழந்தை வடிவுகொண்டு சிவத்தியாநத்துடன் நித்திரை செய்தனன். அதைச் சநலோகத்துள்ள முநிவர் கண்டு துதிக்க விழித்துப் பழைய உலகைத் தேட, அது பாதலத்து அமிழ்ந்ததனால் வராக உருவேற்றுப் பிலத்தின் வழியே சென்று கண்டு தனது கொம்பிற் குத்தியெடுத்து வந்து முறைப்படி நிறுத்திப் பாற்கடலிற் படுத்து யோகநித்திரையில் இருந்தனன். இதனுள் ஆயிரஞ் சதுர்யுகம் கழிய, பிரமனுக்கு இரவு நீங்கிப் பகற் காலமெய்தியதனால் கண்விழித்து உலகைப்பார்த்து தேவர் அசுரர் மனிதர் விலங்கு முதலிய தாவரசங்கமங்களைச் சிருட்டித்துத் தேவலோக பூவுலகங்களை நிரப்பி இந்திரனை அரசிலிருத்தி அட்டதிக்குப் பாலகரை அவரவர் பதவியில் வைத்துத் தான் துயின்றால் உலகந்துயிலும் தானெழுத்தால் உலகமெழும் ஆதலின். தன்னை விட வேறே கடவுளில்லையென்று தருக்கெய்தித் தரணி முழுவதும் பார்த்து வருகையில், க்ஷீராப்தியிலே திருமால் இறுமாந்து யோக நித்திரை செய்வது கண்டு அகந்தையால் மார்பில் தட்டி, “எழுந்திரு'' என, விண்டு விழிக்க, பிரமன் ''நீ யார்?" என்று வினாவ, "யானுன் தந்தை' என, "நீ இன்னும் விழிக்கவில்லை; நீ என் மகன்; யானே உன்னைப் படைத்தேன்” என, திருமால் "நீ என்னுந்தியிற் பிறந்தோனலையோ?” என, பிரமன் "பிருகு முநிவன் சாபத்தால் உன்னைப் படைத்துப் படைத்துக் கை சிவந்திருக்கின்றன பார்' என, திருமால் "நான்முக! உனது நடுச்சிரத்தைச் சிவபிரான் கிள்ளியபோது அச்சமுற்றதை மறந்தாய்'' என்று பலவகையாகக் கூற, கமலாசநன் கடுஞ்சினங் கொண்டு "நாமிருவரும் போர்புரிந்தால் நம்மில் வெற்றியுற்றவனே பெரியவன்'' என, இருவருஞ் சம்மதித்துப் போர்க் கோலங்கொண்டு வில்லை வளைத்துப் பல்வகைப் பாணங்களைப் பிரயோகித்துச் சமர் புரிகையில் அவ்வத்திரங்கள் அவனி முழுவதுந் திரிந்தனவாதலாற் பலரிறந்தனர், பலர்கரித்தனர், பலர் கயிலைமலையை யடைந்தனர், மேகங்கள் கரிந்தன, தேவலோகமும் பூவுலகமுமெரிந்தன, கடல்கள் முழுவதும் நீர் வறந்தன, இவ்வாறு செருச்செய்கையிற் சிவாக்கினையினால் நாரத முநிவர் அங்கு வந்து ''நீங்களிருவரும் நான் முதல் நான் முதலென்று சண்டை செய்கிறீர்கள். உங்களிருவரில் ஒருவரும் முதல்வரல்லர். முதல்வன் சிவபிரான் இன்னும் போர் செய்வீரேல் முதற்பொருள் சோதிவடிவாய் வரும்" என்று தேற்றிப் போகவும், அதனைக் கவனியாமல் இருவரும் முன் போலவே சமர் விடாதிருக்கக் கண்ட சிவபெருமான், இன்னுஞ் சமரைத் தடுக்காதிருந்தால் உலக மழியுமென்று திருவுளங்கொண்டு, யாவர்க்கும் உற்ற இடுக்கண் களைவாராய் ஓர் அக்கினித் தம்பமாய் இருவரும் அஞ்சும்படி அவர்க்கிடையே தோன்றினர். அப்பொழுது அசரீரி “சிறுவர்களே! உங்கள் வல்லமையைச் சோதிக்கக் கருதி, சிவபெருமானே சோதி வடிவாய் எழுந்தருளினர். இதன் அடிமுடிகளை அறியுங்கள்'' என, பிரம விஷ்ணுக்கள் அவ்வொளிப் பிழம்பைத் தரிசித்து அசரீரியைக் கேட்டவுடனே கோப மொழிந்தும் அகந்தை நீங்காதவர்களாய் “இதன் முடியையும் அடியையும் தேடுவோம். அவற்றி லொன்றைக் கண்டவரே மேலோர்" எனச் சபதஞ்செய்து, பிரமன் ''யான் முடியைக் காண்பேன்'' என்றும், விஷ்ணு "அடியைக் காண்பேன்'' என்றுந் தம்முள் மனத் தீர்மானஞ் செய்துகொண்டனர்.
மாயவன் வராக வடிவேற்றுக் கொம்புகளாற் பூமியைத் தோண்டி அதலம் விதலம் சுதலம் நிதலம் தராதலம் ரசாதலம் பாதல மென்னுஞ் சத்தலோகங்களுந் தேடிச் சென்று மேலுஞ் செல்லுகையில் அநேக காலமாகியும் அடியைக் காணவில்லை. நா வறண்டு ஒளி மழுங்கிக் காதடைப்புற்றுச் சலித்த திருமாலுக்குப் பண்டைய வுணர்வு தோன்றியது. மீண்டு வரவுஞ் சக்தியற்றுத் திரிநேத்திரனைப் பலவகையாகத் துதித்து "அடியேன் அறியாமையாற் செய்த பிழையைப் பொறுப்பீராக" என்று பிரார்த்தித்துப் பெருமானருளாற் சிறிது வலிபெற்றுப் பூமியையடைந்து சோதிமலையைச் சமீபித்து வணங்கி நின்றனன். இது நிற்க. முடிகாண்பதாகச் சபதஞ் செய்த பிரமன் அன்னப்பறவை வடிவேற்றுப் பூலோகம் புவர்லோகம் சுவர்லோகம் சநலோகம் தபோலோகம் மகாலோகம் சத்தியலோகமென்னுஞ் சத்த லோகங்களுந் தேடி ஆயிர வருஷந் திரிந்து திரிந்துழன்றும் முடியைக் காணாமல் திரும்ப விரும்பானாய் "திருமால் அடி கண்டு வருவான். தலைவனாவானே. யான் முடிகண்டல்லது திரும்பேன்'' என்று மேலுஞ் சென்றமையாற் கண் சுழன்று சிறகுகள் நொந்து காலோய்ந்து மனந் திரிந்து துன்புறுகையில் ''ஐயோ இவ்வன்னம் இன்னுஞ் சிறிது நேரம் பறந்தாலிறக்கும். சோதியைச் சிவமென் றறியாதோ? அம்முடியைக் காண முடியுமோ? திருமாலே அடியைத் தேட முடியாமற் சிவனே சரணனெனத் திரும்பிச் சோதியையடைந்தனன்'' எனச் சித்தர் சிலர் செப்பக் கேட்டு அவரை வணங்கிச் சிவபிரானது புகழைச் சிந்தித்து, சிவார்ச்சனை செய்யத் துணிந்து திரும்பிப் பூலோகத்தை யடைந்து, சோதியருகே தொழுது நிற்கும் வாசுதேவனைக் கண்டு "மாலே! நாமிருவரும் மால் கொண்டு கெட்டோம் அடிமுடி தேடி அறியாமற் போனோம். இனி அவனை அருச்சித்து அவனருளால் அவற்றைக் காண்போம்'' என, இருவரு மொத்து ஆங்கோர் சிவலிங்கப் பிரதிட்டை செய்து, திருமஞ்சன முதலியவற்றை யியற்றி ஆகம முறைப்படி அருச்சிக்க, பெருமான் நீலகண்டமும், மான் மழு வரதாபயம் பொருந்திய சதுர்ப்புஜமும், நெற்றிக்கண்ணும், நிலவணி சடையும், பார்ப்பதி பாகமுமாகக் காட்சியளிக்க, இருவரும் அஷ்டாங்க பஞ்சாங்க சாஷ்டாங்க நமஸ்காரங்களைச் செய்து, "யாங்களறியாமற் செய்த பிழையை க்ஷமிக்க வேண்டும். புத்திரர் செய்த குற்றத்தைப் பெற்றவர் பொறுக்க வேண்டு மன்றோ'' என்று பல வகையாகப் பிரார்த்திக்க, சிவபெருமான், "மைந்தர்களே! அஞ்சாதீர்கள். உங்கள் பிழையைப் பொறுத்தோம். நீங்கள் செய்த பூசைக்குக் களித்தோம். உங்கள் பதவியை யளித்தோம். வேண்டிய வரங்களைக் கேளுங்கள்'' என, பிரம விஷ்ணுக்கள் 'தேவரீர் திருவடிகளில் நீங்காத அன்பு அநுக்கிரகிக்கவேண்டும்'' என்று வேண்ட அம்பிகாபதி அருளிச்செய்கின்றார்.