logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-kurma-samhara-murthi

கூர்மஸம்ஹார மூர்த்தி

கூர்ம ஸம்ஹார மூர்த்தி
கூர்மஸம்ஹார மூர்த்தி

பண்டொரு பதுமகற்பத்தில் திதிமைந்தரும் அதிதிமைந்தருமாகிய தேவரும் அசுரருந் தீராப்பகையாற் பலகாலஞ் சமர்புரிந்தனர். இருதிறத்தவரிலும் எண்ணில்லார் இறந்தனர்; அதனால் அவர்கள் ஒருங்குகூடி, க்ஷீராப்தி மதனஞ்செய்து அமுதுண்டு அதிகநாள் ஜீவித்து அரும்போர் ஆற்றவேண்டுமென்று, அகத்துட் கொண்டு, பதுமனுடன் கூறி அவனையு முடன்படுத்தி, அழைத்துக்கொண்டு அச்சுதன்பாற் சென்று அறைய, திருமால் "அவ்வாறேயாகுக'' வென்று, மந்தர மலையை மத்தாகவும், சந்திரனை அடைதூணாகவும், வாசுகியைத் தாம்பாகவும் அமைத்து, இருதிறத்தவரையும் இருபுடைநின்று மாறிமாறி யீர்க்கச்செய்ய, மந்தரமலைசாய்ந்தது. அதுகண்ட ஐம்படைக்கிழ்வன் பெரிய யாமைவடிவுகொண்டு பாற்கடலிற்பாய்ந்து, தன்மேற்புறத்தையிலக்க யோசனையிடமாக்கிவீழ்ந்த வெற்பையெழுப்பி முதுகின் மேற்றாங்கி நின்றனன். அந்தரரும் அசுரருங்கடைய அவ்வசலம் மீண்டுஞ்சாய்ந்தது. அதுகண்ட கமடவுருக்கொண்ட கமலநாபனுக்குக் கரங்களாயிரந்தோன்றின. பல கரங்கள் ஓங்கலின் உச்சியைப்பற்றி யூன்றின. பலகரங்கள் பர்வதத்தைப் பக்கத்திற்சாயாமற் பத்திரமாய்ப்பற்றிநின்றன. சிலகரங்கள் தேவாசுரர் கடல்கடைந்து களையுறாமல் அவர்கட் குதவியாய் நின்றன. அமரர் – அசுரர் - அச்சுதன் முதலானார் யாவரும் ஒருங்குகூடிக் கடைந்தமையால் அம்மந்தரம் அதிவேகமாகச்சுழன்று பாற்கடலைக்கலக்கிப் பல சிறுதிவலைகளைத் தேவருலகமட்டுமெறிந்தது.

இவ்வாறு பாற்கடல்கடையப் புக்கோர் பரமசிவன்பால் விண்ணப்பித்து அவர் கட்டளை பெறாமற் செய்த அபசாரத்தால், தாம்பாகிய வாசுகி வருத்தந்தாங்காமற் றன்வாய்வழி நஞ்சுகக்கியது. வானவருந் தானவரும்வெருவி வாயுவேகமாகவோடத் தலைப்பட்டனர். திருமால் அதுகண்டு, "தேவாசுரர்களே! சிறிது மஞ்சன்மின்" என்று அதனை த்தடுக்க முயன்றும், விடவேகத்தால் உடல் கருகித் தானுநிற்றற்கஞ்சித் தேவர்களை நோக்கி,-

“என்னை யொப்பவ ராயிர கோடிய ரெனினு
முன்ன ருங்கொடு விடத்தினை யெதிர்ப்பவ ருளரோ
பின்னல் வேணியன் றிருவருளுளவெனிற் பிழைப்பே
மன்னதில்லையே லெங்ஙனம் பிழைத்துமென் றறைந்தான்."

என்றபடியே "என்போன்றோர் ஆயிரகோடி பேரெனினும் நினைத்தற்குமரிய இவ்விஷத்தின் சேர்திற்பாருளரோ? சடைமுடிதரித்த சங்கரரது திருவருளிருந் தாற் பிழைப்போம்; அஃதில்லையாயிற் பிழைத்தலருமை'' என்று கூறினர். அதனால் அமரர் – அசுரர் – அயிராணிகேள்வன் - அம்புயனாதியோர் அஞ்சி அச்சுதனுடன் வெள்ளிமலையை விநாடியிலடைந்து விடைத்தேவர்பால் விடைகொண்டு விமலர் சந்நிதிசேர்த்து "அரஹர சங்கர! அபயம்! அபயம்!! என்ற லறியழுதனர். உமாபதி யொன்று முணரார்போன்று "உம்பர்காள்! நுங்களுக்குற்ற துன்பம் யாது'' என வினாவ, இமையவர் யாவையும் விண்ணப்பித்தனர். இறைவர் இமயவல்லியைக் கடைக்கணித்தனர். ஈஶ்வரியார் ''ஈசனே! எவ்வாற்றானும் இவர்களைக்காக்க வேண்டும்'' என்றிசைப்ப, முன்னோன் தம்முன் நின்ற சுந்தரரால் அவ்விடத்தை வருவித்து உள்ளங்கையிலேற்றுட்கொண்டு, உம்பர் ஓர்காலத்தும் அகந்தையடை யாமல், தமது திருக்கண்டத்திலேயே அவர்கள் விருப்பின்படி அவ்விஷத்தை யமர்த்தினர்.

நீலகண்டரென இக்காரணத்தா லியம்புந் திருநாமமேற்ற நின்மலர் ''உம்பர்காள்! உங்கள் உள்ளக் கருத்தின்படி பாற்கடலையினி மதித்து அமுதுண்பீராக'' என விடையளித்துவிடுத்தனர். திருமால் பிரமன் இந்திரன் வானவர் தானவர் முதலானோர் பெருங்களிப்புடன் ஆரவாரித்து rராப்தியையடைந்து, விண்டு கமட வுருக்கொண்டு மந்தரத்தைப் பண்டுபோற்சுமக்க, தேவரும் அசுரரும் அதைச் சுழற்றும்படி வடந்திருப்பினர். வடந்திருப்பினர். முதலில் மூதேவி தோன்றினள்; அவளை வருணனுக்களித்தனர். தண்டு கமண்டலத்துடன் தந்வந்த்ரியென்னுந் தேவமருத்துவன் தோன்றினன்; உலக முழுவதுக்கும் மருத்துவனாகவிடுத்தனர். அறுபது கோடி அரம்பா ஸ்திரீகள் பிறந்தனர்; அவர்களை இந்திரலோகத்திற் கேகவிடுத்தனர். சுரைதோன்றியது; அதனை வானவருண்டனர்; தானவர் நீத்தனர்; அதனால் அவர்கள் சுரரென்றும் அசுரரென்றும் பெயரெய்தினர். உச்சைச்சிரவம் என்னும் புரவியுதித்தது; புரவியைப் புரந்தரனுக்களித்தனர். கவுத்துவமணி பிறந்தது; அதனைக் கமலநாபன் மார்பிலணிந்தனன். பஞ்ச தருக்கள் – காமதேனு – சிந்தாமணி இவை பிறந்தன; இவற்றை இந்திரனுக்கீந்தனர். சந்திரன் ஜனித்தான்; அவனை ஒளிசெய்யும்படி ஆகாயத்திலனுப்பினர். தாக்கணங்கு தோன்றினள்; தாமோதரன் தனது தாரமாகக்கொண்டனன். இவையாவுந்தோன்றிய பின்னர் அமிர்தம்பிறந்தது.

அமரரும் அசுரரும் அமிர்தத்தைத் தமக்குத் தமக்கென்று ஒருவரோடொருவர் சமர்புரிந்து இருதிறத்தவரிலும் எண்ணில்லாதவர் இறத்தல்கண்ட மாயோன் ஓர் மாயையால் மோகினி வடிவேற்று அசரரைவஞ்சித்து அமரருக்கு அமிர்தத்தைப் பகிர்ந்தளித்தனன். அவ்வானவத் தொகுதியில் மாறிய வடிவுடன் அமுதேற்றருந்திய
தான வரிருவர், சூர்யசந்திரரால் விஷ்ணுவுக்கு வெளியிடப்பட்டனர். அச்சுதன் அக்கணமே அளவில்லா வெகுளி கொண்டு தன்கைச்சட்டுவத்தா லவர்கள் சிரத்தை யறுத்தெரிந்தனன். அவர்கள் அமுதுண்ட விசேடத்தாலிறவாமல், சிவார்ச்சனை செய்து இராகு கேதுவென்னுங் கிரகங்களாய்த் தம்மை வெளியிட்ட செங்கதிர் வெண்கதிர்களைத் தீராத்துயர் செய்து வருகின்றனர். இவையேகிரஹண்காலமாம். சுரர் அமுதருந்தித் தீர்க்காயுவெய்தி அசுரரை ஹதஞ் செய்து பொன்னுலகு சேர்ந்து வாழ்ந்திருந்தனர். இது நிற்க!

மந்தரமலையாகிய மத்தினைத் தாங்கிநின்ற மாயவன் அவதாரமாகிய யாமைகடலேழையும் ஒன்றுகூட்டி, அதன் வெள்ளம் அவனியை யழிக்கும்படி கலக்கி, சிந்துவைச் சேறுபடுத்தி, இலக்கயோசனை மேன்முதுகும், கால்களினள வைக் கணக்கிட்டறிய ஏலாதவையுமா யியைந்ததாதலின், திமிங்கலமுதலிய ஜலப்பிராணிகளை யெல்லாம் புசித்தும் பசி தணியாமல், ஜலத்தையுங்குடித்துத் தரை தெரியும்படி சேற்றையு நக்கியது. அதனாற் கலக்கி வெளிப்படுத்தப்பட்ட கடல் நீர் யுகாந்தவெள்ளம்போல எங்கும்பரவியது. தாமோதரனாகிய யாமை தனக்குக் கிடைத்த பலபொருளையுந் தின்னத் தலைப்பட்டது. இதனையறிந்த சூரியசந்திரர் கடலிற்றோன்றிச் செல்லுவதஞ்சினர். உலகமெங்கும் இருட்பிழம்பாயது. மகபதியும் மலரோனும் வையமழியுமென்று மனங்கலங்கி ஸ்ரீகைலாயமலையை யடைந்து திருநந்திதேவ ரநுஜ்ஞையால் மஹாசந்நிதானத்தினுட் சேர்ந்து சிவபெருமானைச் சேவித்துத் துதித்து நின்று “எம்பெருமானே! எளியேங்கட்கு இடுக்கணெய்தினால், அதனையகற்றி அருள் செய்வோர் யாவர்? அடைக்கலம்! அடைக்கலம்!! அச்சுதன் யாமைவடிவுகொண்டு ஆர்கலியிலிருந்து அவன் புரியும் அல்லல் அறைதற் பாலதோ? அறியார் போன்றிருப்பது தேவரீரது திருவருளுக் கழகாகுமோ? விரைவில் அதனை விலக்கி எங்களைக் காக்க வேண்டும்” என்று குறைகூறி யாசித்தனர்.

சிவபெருமான் தேவமாநுடர்கட்குத் திருவருள் செய்யத் திருவுள்ளங்கொண்டு, ''அமரமே! அஞ்சன்மின்” என்று உடன்வரக் கொண்டு உத்தியையடைந்து தமது திருக்கரத்திருந்த சூலப்படையால் அக்கூர்மத்தின் உடலைச் செகுத்து, அதன திறைச்சியைக் குடைந்தெறிந்தனர். பார்த்துக்கொண்டிருந்த பண்ணவர் களிகூர்ந்து ஆர்த்து ''கருணாநிதியே! கமலைகேள்வன் மீண்டுங் கர்வமடையாமல் அவ்வோட்டினைத் தேவரீர் திருமேனியிலுள்ள திருவாபரணங்களோடு ஒன்றாக அணிந்து கொள்ள வேண்டும்” என்று வேண்ட, அடியா ரவாவிய அடைவே அருள்புரியும் அண்ணலார் அக்கூர்மத்தின் முதுகோட்டையுந் தமது திருமார்பிலுள்ள பிரமவிஷ்ணுக்களின் சிரோமாலைக்கு நடுநாயகமாக வணிந்து அமரர்கட்கு விடையளித்தனுப்பி, விடையூர்ந்து வெள்ளிமலைசேர்ந்து வீற்றிருந்தனர்.

கூர்மவடிவேற்ற விஷ்ணுமூர்த்தி அதனாற் பண்டைய வுணர் வெய்தி, பரமபதியைத் துதித்துச் சிவலிங்கார்ச்சனை புரிந்து, தேவர்முதிவர் கேட்கும்படி கூர்மபுராணம் ஓதித் தமது நிஜவடிவுடன் வைகுந்தமுற்றுச் சிவத்தியானஞ்செய்து வாழ்ந்திருந்தனர்.

பிருகு முநிவர் சாபப்படி பின்னைகேள்வனுக்குற்ற கூர்மாவதாரத்தில், அக்கூர்மத்தின் கொடுமையை யொழிக்கக்கொன் றெறிந்தமையால், கொன்றை வேணியைக் கூர்மாரியெனக் கூறவேண்டுவதாயிற்று.

காளிகாகண்டம்.

தத:ப்ராண்யுபகாராய. கூர்ம0ஸம்ஹ்ருக்யகர்விதம்
ததங்கம்பூஷணத்வேந தாராயமாஸஶங்கர: ||

ஸ்காந்தபுராணம். வீரபத்ரவாக்யம்.

அத்யாபிதவபஶ்யத்வம் கபாலங்கூர்மரூபிண:
ஹரஹாரலதாமத்யே முக்தகஸ்மர்ந்தபுத்யஸே ||
கந்தபுராணச்சுருக்கம்.

''மாலவன்கமடத்துருக்கொடு மந்தரத்தைவெரிந்தனிற்
சாலவன்றுபரித்தனன்கட றந்ததங்கமுதந்தனை
நீலமாயனகந்தைகொண்டு நிறைந்தவேலையுழக்கவே
யாலமுண்டவன்வந்துபற்றி யவன்றன்வன்மையழித்தனன்"

காஞ்சிப்புராணம்.

“மகரந்திளைக்குங்கடலேழு மலங்கக்கலக்கும்பசுந்துளவ
முகைவிண்டலர்தாராமையினைப் பற்றித்தகர்த்தமுதுகோடு
நகுவெண்டலைமாலிகையணிக்கு நடுநாயகமாக்கோத்தணிந்து 
புகரின்றுயர்ந்தோர்தொழப் பொலிந்தபுத்தேள்செல்வத்திருவுருவம்.”

கூர்மஸம்ஹாரமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்                         
 

Related Content

How good is your religion ?

கடல் ஆமையும் பாவகாரிகளும்

புராணம் - இறைவன் ஆமையோட்டை அணிதல்

மச்சஸம்ஹார மூர்த்தி

வராஹஸம்ஹார மூர்த்தி