logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-kshetrapalaka-murthi

க்ஷேத்திரபாலக மூர்த்தி

க்ஷேத்திரபாலக மூர்த்தி
க்ஷேத்திரபாலக மூர்த்தி

ஆதிமத்தியாந்த ரகிதராகிய சிவபெருமானே பலகோடி ஆன்மாக்களையும் பதுமனாகிப் படைத்தும், திருமாலாகிக்காத்தும், உருத்திரனாகிச் சங்கரித்தும், மகேஶ்வரனாகி மறைத்தும், ஸதாசிவனாகி அநுக்கிரகித்தும், பஞ்சகிருத்தியங்களை யும் இயற்றாநிற்பர். அத்தகைய அமலரது ஆணைவழித்தாய் அண்டகோடிகளும் விளங்கும் அவ்வண்டங்கட் கிடனாய்ச் சத்தசமுத்திரங்களையுஞ் சிறதி வலைபோல எறிகின்ற மூலமகாசமுத்திரமாகிய பெரும் புறக்கடலும், உலகத்தின் மத்தியில் மேருமலையும் விளங்கும்.

தனித்தனி இலட்சம்யோசனை விஸ்தீரணமான நாவலந்தீவும், உவர்க் கடலும், அதனிரட்டிப்பு விரிவாகிய இறலித்தீவும் கருப்பஞ்சாற்றுக்கடலும், அதற்கிரட்டிப்பு விஸ்தாரமாகிய இலவுத்தீவும், மதுக்கடலும், அதற்கிரட்டிப்புப் பரப்பாகிய குசைத்தீவும் நெய்க்கடலும், அதற்கிரட்டிப்பு விசாலமாகிய கிரவுஞ்சத் தீவும், தயிர்க்கடலும், அதற்கிரட்டிப்பு அகலமாகியசாகத்தீவும் பாற்கடலும், அதற்கிர ட்டிப்பளவாகிய புட்கரத்தீவும் சுத்தநீர்க்கடலும், பத்துக்கோடி யோசனை விஸ்தீரண மான பொன்மயமாகிய போகபூமியும், பதினாயிரங்கோடி யோசனை விஸ்தீரணமான சக்ரவாளகிரியும், ஒரு கோடியே யிருபத்தேழிலட்சம் யோசனை விஸ்தீரணமான பெரும் புறக்கடலும், கோடியோசனை விரிவுள்ள இருளுலகமும், நாற்பத்தொன்பதி லட்சம் யோசனை விஸ்தீரணமும் கோடியோசனை கனமுமான அண்டச்சுவரும் உடையது இவ்வண்டம்.

மேருமலையின் நடுவிலிருந்து அண்டச்சுவர்வரையில் ஐம்பது கோடி யோசனையாகக் கீழ்த்திசையெல்லையை விரித்துக்கூறினோம். ஏனைய மூன்று திசைகளும் இவ்வாறே விஸ்தீரணமுடையன. அகலமும் நீளமும் உயரமும் தனித்தனி நூறுகோடியோசனையாகவுள்ள இவ்வகை அண்டத்தினை ஒரூழிக் காலத்தில் மலையைப் போல அலைகள் தோன்றி, அண்டகடாகத்தைமுட்டி, அண்ட அடுக்குகளை நிலைகுலையச்செய்து, வெள்ளச் சுழியால் அட்டபர்வதங்களையும் அட்டதிக்கஜங்களையுஞ்சாய்த்து, பதினான் குலகங்களிலுமுள்ள பர்வதங்களை யெல்லாம் பாழ்படுத்தத்தக்க ஓர் பெருவெள்ளந் தோன்றியது. அதனால், நெடுங் காலத்தை ஆயுளாகக்கொண்ட அஷ்டமாநாகங்களும் நவக்கிரகங்களும் தேவர்களும் இந்திரன் முதலிய எண்டிசைக்கிறைவரும் கற்பகவிருக்ஷமும் சூரிய சோமாக்கினி யென்னும் முச்சுடரும் ஊர்வன நீர்வாழ்வன பறப்பன நாற்காலி தாவாரம் மாநுடரா கிய எழுவகைத்தோற்றமு மொழிந்து, சொல்லப்பட்ட பலபொருள்களுமழிந்து, எல்லாவுயிர்களும்முறையே மாயையிலொடுங்கி, அண்டமுழுவதும் அந்தகாரமய மாயிற்று. அநேக காலம் இவ்வாறகன்றது.

சூத்ரிகன் பதுமையைச் சிறிதுகாலம் நிறுத்திமீட்டும் அதனை யாட்டுவிக்க வெடுப்பான் போல, அருள் வள்ளல் அகிலத்தை அடைவே சிருட்டி செய்யத் திருவுள்ளஞ்செய்து, சர்ப்பாபரணமும்புலியதளும் மழுமானேந்திய திருக்கரங்களும் கடுக்கைத்தொடையும் காளகண்டமும் கனல்விழியுங்கரந்து, கௌரியம்மையாரு டன் கலைகளெட்டெட்டையுங் கலைகளாய்த்தாங்கி, பிரணவமே தோணிவடிவாக நிற்க அதன்மீ தாரோகணித்தனர். நீங்கா நிலையாய் நிறைந்த பேரிருள் எம்பெருமானது திருவிருப்பின்படி நீங்கியது. அறமொன்றுதவிர அனைத்து மழியுமென்று கூறும் ஆன்றோர்கருத்தின் வண்ணம் எஞ்சிநின்ற வருணன் மகாதேவனைத் தோணிமேல் துணைவி யாருடன் வீற்றிருக்கக்கண்டு திருவடிகளைச் சேவித்துத் துதித்து, பவளம் முத்து முதலியவற்றா னருச்சித்து நிற்க, அமலர் அவ்வருணனுக்கு அருள்சுரந்து அநுக்கிரகித்து, அவளைவிலிருக்க ஆஜ்ஞாபித்து, திசைக்காவலரை நிறுவி; வெள்ளப் பெருக்கைத் தமது நுதல்விழியால் நொடிப்பொழுதில் விலக்கி, பண்டுபோற் பலரையும்படைத்து, அவரவர் பதவியில மர்த்தி, அகிலலோகங்களையும் ஆதரித்து அம்மையாருடன் திருத்தோணியில் வீற்றிருந்தருளினர்.

க்ஷேத்ரம் = பூமி; பாலகர்= காப்பவர்; - எனவே க்ஷேத்ரமாகிய உலகத்துக்கு ஊழிக்காலத்தில் உற்ற துன்பத்தைத் தீர்த்து ரக்ஷித்தருளினமையால் உமைகேள்வ னுக்கு க்ஷேத்ரபாலகமூர்த்தி யென்பதோர் திருநாமம் வழங்கிவருகின்றது.

சீகாழித்தலபுராணம்.

"விரிதிசை புரப்பா னெட்டு வியன்கணத் தலைவர்க் கேவிக் 
கிரிபுரை தண்ட மேந்திக் கேத்திர பால னாகிப் 
புரிசடை முதல்தன் சூழ்ந்து புறந்தருந் தோணி மேற்கொண் 
டரிபடா துலகங் காக்கு மன்னையோ டிருந்தா னெந்தை.

கமலநா ரணனொடுங்குங் கடையினு முதல்வ னாவா 
னிமலனே யன்றி வேறு நிலையுநர் யாரே யார்க்குந் 
தமரசா கரநீர் மோதத் தம்முயிர் சாம்பினாரை 
யமரரென் றுரைப்பா ரன்னோர் பெற்றியை யறியா ரன்றே.”

க்ஷேத்திரபாலகமூர்த்தயே நம: 

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்        

 

Related Content

புராணம் - மண்டையோட்டை ஏந்தியது (பைரவர்)

பைரவ மூர்த்தி

ஆபதோத்தாரண மூர்த்தி

வடுக மூர்த்தி

ப்ரம்மசிரச்சேத மூர்த்தி