logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-kiratha-murthi

கிராத மூர்த்தி

கிராத மூர்த்தி
கிராத மூர்த்தி

துவாபரயுகத்திலே பாண்டு புத்திரர் சகுனியின் மாயச்சூதினால் நாடு நகரங்களைத் தமது ஞாதியாகிய துர்யோதனனுக்குத்தோற்று, மனைவியுடன் வனமடைந்து வாழ்ந்திருந்தனர். பிதாமகனாகிய வேதவியாசமுநிவர் அங்கெழுந்த ருளக்கண்டு பஞ்சவரும் பாஞ்சாலியும் அவரது பாததாமரையைப்பணிந்து தாம்படும் பாட்டின் குறை கூறினர். முநிவர் அவர்கட்கு அநேக அரசநீதியையும், நளன் முதலிய அநேக பேரரசர்களுங் காலவித்தியாசத்தினாற் கஷ்டப்பட்டனரெனப் பல பூர்வசரித்தி ரங்களையுங்கூறி, அவர்கள் மனதைத் திடப்படுத்தி, சிவபெருமானை நோக்கித் திருக்கயிலாயகிரிச்சாரலிற் றவஞ்செய்து அவரது அநுக்கிரகத்தை யடையங்கள் என்றருளிச்செய்து, தவமியற்றுதற்கு முகூர்த்தமுங்கூறித் தமதிச்சையின்படி சென்றனர்.

அம்முநிபுங்கவர் ஆஜ்ஞாபித்தவண்ணம் அருச்சுனன் சடை முடியும் மரவுரியுந்தரித்து, அம்பறாத்தூணியும் வில்லுந் தோளிற் பூட்டி, வெள்ளி மலையின் மேற்புரமடைந்து, அது பர்வதராசபுத் திரியாராக உமையம்மையார் திருவவதாரஞ் செய்த புண்ணியக்ஷேத்திரமென்று பணிந்தெழுத்து : முத்தழல்வளர்க்கும் முநிவரர் பாதங்களை முடி மேற்கொண்டு, இயக்கர் விச்சாதரர் சாரணர் முதலானாரைக் கண்டு, சிங்கம் - புலி - யானை - கரடி முதலிய மிருகங்கள் சஞ்சரிக்கும் ஆரண்யத்தையகன்று, எம்பெருமான் வீற்றிருக்கும் புண்ணியவடிவாகிய மலையை கண்ணி, இதயதாமரையில் இறைவரையிருத்தி வேதசிவாகமங்களிற் கூறிய வகையே திருவெண்ணீற்றினைத் தேகமுழுவதுஞ் சணித்து, அக்கமாலையணிந்து தவக்கோலங்கொண்டு தாளொன்றினால் நின்று, மற்றொருகாலை மடித்துநின்ற காலின் தொடையிலூன்றி, இருகரத்தையுஞ் சிரத்தின்மேற் சேர்த்துத்தூக்கி, இரு விழியிலும் இடையறாது நீர் தாரையொழுக, மனத்தைப் புறஞ்செல்லாதொடுக்கி மஹாதேவனைச் சிந்தித்து அருந்தவத்தமர்ந்தனன்.

அவனது தந்தையாகிய இந்திரன் தன் தனயன் தனஞ்செயன் செய்யுந் தவத்தைச் சோதிக்கும்படி, அரம்பை ஊர்வசி முதலிய சில தேவதாசிகளை யேவினன். அவர்கள் சதக்கிருதுவின் விருப்பின்படியே க்ஷணமொன்றில் ஆடையாபரணாலங்கிருதராகி, பரிமளமிகுந்த நறுமலர்சூடி, பற்குனன் தவஞ்செய்யும் பர்ணசாலையை நாடி, பலவகையிலுந் தமது கருத்து பக்குவப்படாமையாலோடி, பாகசாதனனைத் தேடி நடந்த விருத்தாந்தங்கள் பயன்பெற்றிலவெறுரையாடித் தமதுபதியிற்கூடினர். மகபதி தனது மைந்தனது சிந்தையின் வன்மைக்குக்களித்து, சடிதியிற் சென்று சவ்வியசாசியைக்கண்டு சந்தோஷித்து, சற்றுவசனித்து மனவிருப்பமறிந்து ''மங்கைபாகர் வருவார்; வரங்கள் பலதருவார்'' என்று ஊக்கமுண்டாக்கித் தனது நகரிற்குச் சென்றனன்.

இஃதிவ்வாறிருக்க: சில சேடியரால் அருச்சுனன் செய்யும் அருந்தவத்தையறிந்த அம்பிகை அரனிடமணுகி "அண்ணலே! அருந்தவமியற்றும் அருச்சுனனுக் கருள்புரிய வேண்டும்'' எனக் கூற, அரன் "தவமியற்று மிவனைக் கொல்லும்படி இவன்ஞாதி சுயோதனன் தனது நண்பன் முகாசுரனை யேவினன்; அவனும் பன்றி வடிவாய் இவ்வசலமடைந்து சமயம்பார்த்துக்கொண் டிருக்கின்றனன்; ஆதலின் அவன் கிரீடியைக்கிட்டிக் கெடுதிபுரியுமுன், அத்தானவனைச் சங்கரிக்கவேண்டும்" என்று என்று திருவாய்மலர்ந்தருளி, திருநந்திதேவரைவிளித்து "நாம் பன்றி வேட்டையாட வேண்டுதலின், கணங்களும் கீயும் கணமொன்றில் அதற்கேற்ற உருக்கொள்க" என ஆஜ்ஞாபித்து, தாமும் வேட்டுவ வடிவு தாங்கினர். உமாதேவியாரும் அதற்கேற்ப ஓர் வேட்டுவச் சிறுமியாகி, குமாரக்கடவுளைக் குழந்தையாக்கிக் கைக்கொண்டு பெருமான் பின் வந்தனர். வேதங்கள் நான்கும் வேட்டை நாய்கனாயின. கணங்கள் வேடுவராயின.

ஈசன் இவ்வகையாக் யாவரையுங்கூட்டிக்கொண்டு வில்லை வளைத்து விரைந்து செல்லுகையில், மூகாசுரன் பெருமுழக்கத்துடன் அர்ச்சுனனை எதிர்த்தோடினன். அகோரதவத்திருந்த சருகுபட்சணஞ்செய்யுஞ் சுவேதவாகனன் ஆர்ப்பரித்து வரும் பன்றியைப்பார்த்து, அதனாலே தவகிலை யழியுமென்றஞ்சி, வில்லைவளைத்து நாணேற்றி அஸ்திரமொன்றை அதன் முகத்தில் இலக்கு வைத்து விடுத்தனன். வேட்டுவவுருக்கொண்டு சேனாவீரருடன் வராகத்தைத் துரத்தி வந்த விமலர் வில்லோசைகாட்டி அம்பொன்றை அதன் பின்புறம் எய்தனர். அவ்விரண்டம்புகளும் பாய்ந்தன. அவற்றில் அருச்சுனனெய்த அம்பு அதன் முகத்திற்பாய்ந்து பின்புறத்துருவி, அருச்சுனனது அம்புறாத்தூணியை யடைந்தது. வேட்டுருவேற்ற இறைவரெய்த அம்பு அதன் பின்புறம்பாய்ந்து முன்புறத்துருவி, நிலமிசைவிழுந்தது. மூகாசுரனாகிய எனம் நிலத்தின்மேல் வீழ்ந்து மூர்ச்சையாய் இறந்தது. வேட்டுவவடிவு கொண்ட சிவகணங்கள் தவஞ்செய்யுந் தனஞ்சயனைச் சமீபித்து "தவசியே! ஒருவனெய்தமிருகத்தைப் பிறனொருவ னெய்யலாமோ'' எனப்
போர்கொண்டனர்.

வேடவடிவுகொண்ட சிவபிரானும், தவசியாயிருந்த தனஞ்சயனும், பல நியாயங்கள் பேசி ஒருவரோடொருவர் சபதஞ்செய்து கொண்டு பெருஞ்சமர் செய்தனர். கடவுள் தனஞ்சயனது காண்டீபத்தின் நாணையறுத்தனர். அதனால் அருச்சுனன் நாணமடைந்து அவ்வேடர் தலைவன் தலைமேல் நாணறுந்த வில்லாலடித்தான். அவர் சர்வவியாபியாதலின் அவ்வடி சுவர்க்கமத்திய பாத்லமென்னுந்திரிலோகத்திலுள்ள தேவர் மா நுடர் முதலிய எல்லோருக்கும் பட்டது.

''விண்ணிலுறை வானவரி லாரடி படாதவர்
விரிஞ்சனரி யேமு தலினோர்
மண்ணிலுறை மானவரி லாரடி படாதவர்
மனுக்கண் முத லோர்க ளதலக்
கண்ணிலுறை நாகர்களி லாரடி படாதவர்
கட்செவி மகீபன் முதலோ
ரெண்ணில்பல யோனியிலும் யாவடி படாதன.
விருந்துழி யிருந்து ழியரோ.
வேதமடி யுண்டன விரிந்தபல வாகம
விதங்களடி யுண்ட னவொரைம்
பூதமடி யுண்டனவி நாழிகைமு தற்புகல் செய்
பொழுதொடு சலிப்பில் பொருளின்
பேதமடி யுண்டன பிறப்பிலி பிறப்பிலி
பிறங்கலர சன்றன் மகளார்
நாதனம லன்சமர வேடவடி வங்கொடு
நரன்கையடி யுண்ட பொழுதே."

அருச்சுனனடித்த அடியால் வேடர்பதி வெகுளி கொண்டனர் போலச் சிறிதுநேரம் மல்லயுத்தஞ்செய்து பகவான் மைந்தனது வன்மையை யறிந்தனர். அவன் அல்லற்படுவதை யகற்றும்படி தேவர்களும் இந்திரனும் தோத்திரஞ் செய்தனர். கருணாமூர்த்தியாகிய கண்ணுதல் உமாபிராட்டியாருடன் சகல தேவர்களும்புடை சூழக் காட்சியளித்தருளினர். பற்குனன் பலவகையாகப் பரமபதியைத் துதித்தனன். சிவபிரான் அவனைத்தேற்றி ''மூகாசுரனால் உன்னுயிர் போகாவண்ணம் வேடுவனாக வேடமுற்றுவந்தேன். வேண்டியவரம் யாது" எனவினாவ, சவ்வியசாசி "சங்கரா! தேவரீர் பெயர்கொண்ட அஸ்திரமொன்று திருவருள் செய்யவேண்டும்" என விண்ணப்பிக்க இறைவர் அவ்வாறே பாசுபதாஸ்திர மநுக்கிரகித்து "பாரதப்போரிற் செயமுறுக" என ஆசீர்வதித்து அந்தர்த்தானமாயினர்.

அருச்சுனன் தவஞ்செய்கையில், அவனைக்கொல்லும்படி துர்யோதனனால் விடுத்த மூகாசுரனைச்சங்கரிக்க வேட்டுருவேற்றுச் சென்றமையால், சிவபிரான் கிராதமூர்த்தியேனப் பெயரெய்தினர்.

கிராதமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்           
 

Related Content

திருமுறைகளில் கண்ணப்ப நாயனார் பற்றிய குறிப்புகள்

பாசுபத மூர்த்தி

லகுளேசுவர மூர்த்தி