ஒருநாள் சிவாலயத்துள்ள திருவிளக்கொன்று சுடர்மழுங்குகையில், சவபெருமான் தேவியாரைப்பார்த்து ''பெண்ணே! இத்திருவிளக்கின் திரியைத் தூண்டுவோர் திரிலோகமும் அரசுசெய்வர்" என்றனர். அப்பொழுது ஒரெலி அத்தீபத்திலிருந்த நெய்யைக்குடித்ததால் அஃதசைந்து திரிதூண்டப்பெற்றது. இறைவி யார் எம்பெருமானை நோக்கி "இப்பொழுது இதனைத் தூண்டிய இவ்வெலிக்கு இன்னருள் புரிய வேண்டும்” என, அண்ணல் "அவ்வாறே அளித்தனம்” என்றருளினர்.
அது மாவலியென்னும் பெயருடன் அசுரகுலத்திற்றோன்றி, அவனிமுழுவ தையும் அரசுபுரிந்தது. தானவர்குழாம் வலிமிகுதல் கண்டு வானவர்கோன் மனம் பொறானாய் எண்ணில்லாச் சேனையுடனெதிர்த்துப் போர்செய்து புறமுதுகிட்டோடி, திருமால்பாற்கூறினன். அதுசமயத்தில் திதி யென்பவள் விண்டுவைவேண்டி ''என் மைந்தனாக வரவேண்டும்'' என வரங்கேட்க, அரவணை துயில்வோன் அவளுக்கு "அவ்வாறேயாகுக” வென்று வரமளித்து, அயிராணி கேள்வனை நோக்கி "அமரர்பெரும! அஞ்சற்க. அவனை அடர்ப்போம்" என்றருளிக் காசிபமுறிவருக்கும் திதிக்கும் மைந்தனாக வாமனாவதாரஞ்செய்தனர்.
மாவலி அசுரனாயிருப்பினும் யாககருமங்களைச் செய்தும், அவரவர் விரும்பிய தானங்களை அபரிமிதமாக அளித்தும், நற்செயலிலேயிருந்தனன். வாமனவடிவங்கொண்ட மாயவன் மாவலி மாளிகையையடைய நிருதநிருபன் கண்டு, எதிர்சென் றழைத்துச் சோடச உபசாரங்களுஞ்செய்து, தக்க ஆதனத்தமர்த்தி ''வேதிய! யாது கருதிவந்தனை கூறுக” என, வாமனன் "மகவான் மலரான்மலர்தலை யுலகத்து மன்னர் முதலானார் மனங்களிக்க அளிக்கவல்ல வள்ளலாகாரென்று உள்ளத்திற்கொண் டுன்பாலுற்றேன்" என, மாவலி "மறையோனே! ரதம் – கஜம் – துரகம் - பொன் - பொருள் - பொக்கிஷம் முதலிய எதுவேண்டினும் இமைப்பிற் றருவேன். இயம்புக” என, அந்தணன் "அரசே! அவற்றையெல்லாம் அவாவினே னல்லேன். என தடியால் மூவடி மண் வேண்டினேன்'' என, மாவலி ''மூவடிமண் எற்றுக்குப்பயன்படும்” என, மாணி "தவஞ் செய்திருப்பேன்” என்றனர்.
அப்பொழுது அருகிருந்த அசுரகுருவாசிய சுக்கிரன் “அரசே! இவனோர் பார்ப்பனச் சிறுவனென்றெண்ணற்க. திருமாலாதலின் தீமைவிளையும்'' எனச் செப்பினன். மாவலி "மாலேயென்பால் மறையவனாகி மூவடிமண் யாசித்தானென்று அரும்புக ழிருக்குமாதலின் அதனால் விளையுஞ் சஞ்சலம் பெரிதன்று'' என்று சுக்கிரன் சொல்லைக் கடந்து மும்முறை நீர் சொரிந்து தாரைவார்த்தனன். அதுபெற்ற அச்சுதன் அக்ஷணமே திரிவிக்கிரமாவதாரங்கொண்டு அண்டகடாக மூடுருவநின்று ஓரடியால் பூலோகத்தையும் மற்றோரடியால் தேவலோகத்தையும் அளந்து மூன்றாவது அடிக்கு இடமின்மையால் மாவலியின் சிரமேலூன்றி அவனைப் பாதலலோகத்தமிழ்த்தி அதனால் அகந்தை கொண்டு ஆர்ப்பரித்து அமனிமாக்களை அழிக்க முயன்றனர்.
அதுகண்ட அமரர் அரைக்கணமுந்தாழாது, அதிவிரைவாகச் சென்று, அம்பிகைபாகர் வீற்றிருக்கும் வெள்ளிமலையை யடைந்து. நந்திபகவான் நளின பாதங்களைப்போற்றி உள்ளே செல்ல உத்தரவு பெற்று, சந்நிதானத்தைச் சார்ந்து சாஷ்டாங்கமாகப்பணிந்து கைகளைச் சிரமேற்குவித்து "சம்பு! சங்கரா! சச்சிதாநந்தா! ஜகத்ரக்ஷகா! சரணம்! சரணம்!!" என்று பேரிரைச்சலாய்த் தோத்திரஞ் செய்ய, எல்லாமறிந்த எம்பெருமான் ஓர் விளையாடலாக ஒன்ற மறியார்போன்று "உம்பர்களே! உங்களுக்குற்ற துயர் யாது? ஓதுமின்' எனத் திருவாய்மலர்ந்தருளினர். வானவர் "மகாதேவா! மாகவிபால் மாயவன் வாமனவடிவாய்ச் சென்று மண்யாசித்து வானுற்றோங்கி மாவலியைமாய்த்து, மமதையால் வையகத்தை வதைக்கின்றனன். அவனை விரைவிலடக்காவிடில் அமரர் அந்தணர் முதலானார் அரைக்கணத்தில் அழிவது சரதம்'' என முறையிட அருள்வள்ளல் அகிலத்திலுள்ள அனைவர்க்குமுற்ற ஆபத்தை அகற்றும்படி அக்கணமே அவ்வாமனன் முன்னரடைந்து, மயக்க மொழிய வார்த்தைகள் சில வாய்மலர்ந்தருளியும் * பிருகுமுனிவன்சாபப்படி விண்டு கருப்பாசயமுற்ற பாசவீக்க முதிர்ச்சியால், கேளாமல், இறுமாந்திருப்பது நோக்கி, இறைவர் இணையில்லாச் சினங்கொண்டு வச்சிரதண்டமொன்று திருக்கையிலேற்று வாமனன் மார்பிலடித்தனர். வாயுவேகத்தாற் சாய்ந்த மேருமலை போல வாமனன் தரைமேற்சாய்ந்தனன். அப்பொழுது அவனது தோலை யுரித்துக் கஞ்சுகமாகத்தரித்து, முதுகென்பைப்பிடுங்கித் தண்டாகக்கையிற்கொண்டு கடவுளர் துயரொழித்துக் கயிலையடைந்தனர்.
அச்சுதன் அகந்தையகன்று, பண்டைய உணர்வெய்திப் பரமனைப்பரவி, தேவமுநிவர்கட்கு வாமனபுராணமோதி வைகுந்தஞ் சேர்ந்தனன். மாவலி நற்கதி பெற்றனன். சிவபிரான் வாமனனது முதுகென்பைக்கொண்ட கோலமே கங்காள மூர்த்த மெனப்படும்.
[வாமனன் வானை யளந்தபொழுது மேலண்டகடாகம் பிளவுற்று: ஆகாய கங்கையொழுகி, அது மாளவதேசவழியாய்ச் சமுத்திரசங்கமமாயிற்று. அதன் விருத்தாந்தத்தையறியார் சிலர் அக்கங்கை நீரைச் சிவபிரான் அணிந்தனரெனக் குழறுவர். அஃதபத்த மென்க.]
* ஆதியில் அமரருக்கும் அசுரருக்கும் நிகழ்ந்த அமரில் அண்டர்கள் ஆற்ற கில்லாராய் விண்டுவைவேண்டியது கண்டு திருமால் செருக்களஞ்சேர்ந்து திகிரியைச் செலுத்தித் தீயோர் பலரைச் செகுத்தனர். போனவரொழியத் தானவர் சிலர் தமதுயிர்தப்பிப் பிழைக்கச் சமர்துறந்தோடிப் பெருந்தவஞ்செய்யும் பிருகு முனிவர் பர்ணசாலையடைந்து அவர் பன்னியாகிய கியாதியென்னும்மாதினை யடைக்கலம்புக, அவ்வம்மை "அஞ்சேல்'' என்றபயமளித்து ஆச்சிரமத்தில்வைத்துக் காத்தனள். சீற்றமிகுந்து தீச்சொரி விழியொடுஞ் சக்கரப்படையைத் தாங்கிய கையொடுஞ் சீதரன் பாதசாரியாக வருதல் கண்ட கியாதிவணங்கிநிற்க, மாதவன் சினந்து மாதின் சிரத்தைக்கொய்து தானவர் குழாத்தைச் சங்கரித்தொழித்தனன். பிருகு முநிவர் தன்பெண்சாதியைக் கொன்ற பின்னை கேள்வன்மேற் பெருங் கோபங்கொண்டு “கேசவா!. ஈசனையன்றி யெவரையும் பணியோம். சைவசமயமே தரணியிற்சிறந்ததென் றெண்ணியாமிருப்ப துண்மையாயின், இழிந்த பிறவிக ளீரைந்தெய்தி வருந்தியழிக” வென வசைமொழியிசைத்து "நின்னடியார்கள் நெறியில்லாவழி தீக்கை பெற்றுச் சிவநிந்தை செய்து தீநரகடைக'' எனக் கோபமே லீட்டாற்கூறி சுக்கிரனா லுயிர்த்தெழுந்த தோகையோடு களித்து வாழ்ந்தனர். திருமால் தனக்குற்ற பிருகுவின் சாபம் பிரியவகை யாதெனப் பெரிது மாலோசித்துத் திரிபுரதகனன் சேவடிவணங்கிப் பெருமுசெபித்த பிறப்பொரு பத்தும் ஒழிப்பலென்று தன்னுள்ளத்தெண்ணிச் சிவலிங்கக் குறியொன்று பிரதிட்டை செய்து பாசுபதவிரதம் பூண்டு உடலெங்குந் திருவெண்ணீறு சண்ணித்துத் திரிபுண்டரந்தரித்து உருத்திராக்கம், பூண்டு உருத்திரசமக மகாமந்திரஞ் சபித்துக்கொண்டு, சருகு – நீர் - பழம் - காற்று முதலியவற்றைப் பக்ஷித்து ஒரேமனதாய் உமாபதியை உள்ளத் திருத்தி, பஞ்சாக்கினிமத்தியிற் பலகாலநின்று தவஞ்செய்தனர். அவர் தவத்திற் களித்த அடியவர் சகாயர் அம்பிகைசமேதராய் இடபவாகனமிவர்ந்து தரிசனந்தர, கமலை கேள்வன் கண்கள் களிக்கக்கண்டு, அரகரவென்று சிவநாமங்களாற்றுதித்து அஷ்டாங்க பஞ்சாங்க நமஸ்காரம் பலமுறை செய்து பணிந்துநிற்க, பரமன்களித்து "மாதவ! யாதுவேண்டினை" எனத் திருவாய்மலர்ந்தருள, சார்ங்கன் “சங்கர! பிருகுமுரிவன் சாபத்தை விலக்கி யருளவேண்டும்" என்றிரப்ப, பெருமான் "எமதடியவர் இசைத்த மொழிகள் என்றுந் தவருறா . மாநிலத்துள்ள மன்பதைக் குதவியாய்ப் பிறவி பத்தும் நீபெறுதலே திண்ணம். ஆயினும் நம்மடி யருச்சனைப் பலனால் ஐந்தினி லருளுமற்றைந்தினிற் றண்டமுமடைதி'' என்றருளக் கேட்டு களித்து "தேவரீரே அடியேனைத் தண்டிக்கவும் காக்கவும் நாயேன் பெருவாழ்வுற்றது என்ன பாக்கியம்'' என்று வணங்கச் சிவபெருமான் அந்தர்த்தானமாயினர். அவற்றுள் முற்பட்ட ஐந்தில் தண்டமும், பிற்பட்ட ஐந்திற் சிவார்ச்சனை செய்யும் பெரும் புண்ணியமும் பெருமான் திருவருளாற்பெற்றனர் என்பது. சிவபிரானே சர்வதேவர் கட்குஞ் சிக்ஷகர் என்றறிக.
விஷ்ணும்ப்ரஹ்மணமிந்த்ரஞ்ச யமமந்யாஸ்ஸுராநபி
யதோநிக்ருஹயஹரதே ஹ்ரஇத்யுச்யதேபுதை:
த்வம் விஶ்வகர்த்தாதவநாஸ்திகர்த்தா
த்வம் விஶ்வபர்த்தாதவநாஸ்திபார்த்தா
த்வம்விஶ்வஹர்த்தாதவநாஸ்திஹர்த்தா
த்வம்விஶ்வநாதாதவநாஸ்திநாத:
''கல்பாந்தேஶமிதத்ரிவிக்ரமமஹாகங்காளபத்தஸ்புரச்
சேஷ:ஸூத்ரமதோக்ருஸி0ஹநகரப்ரோதாதிகோலாமிஷம்
விஶ்வைகார்ணவஸம்விஹாரமுதிதெளயௌமத்ஸ்யகூர்மாவுபௌ
கர்ஷத்தீவரதாங்கதோஸ்யதுஸதாம்மோஹம்மஹாபைரவம்.”
"பற்றினன்வயிரத்தண்டம்பகிரண்டமதிரவோச்சிச்
சுற்றினனுருமுக்காலத்தொழித்தனன்றுளவமார்பி
னெற்றினனெற்றலோடுமெறிபடுசண்டவாயு
முற்றுறவிற்றுவீழுமூரிவெங்கிரியிற்சாய்ந்தான்.
கருநிறக்கமஞ்சூன்மேகக்காரதளுரித்துவாங்கித்
திருநிறத்தமையக்காளகஞ்சுகமென்னச்சேர்த்தி
வெரிநுறப்பிடுங்குமென்புதண்டெனவெடுத்துக்கொண்டான்
மருமலர்த்துளவமாயோனாணவமயக்கந்தீர்ந்தான்.''
''குறளாயணுகிமூவடிமண்கொண்டுநெடுகிமூவுலகுந்
திறலானளந்துமாவலியைச்சிறையிற்படுத்து வியந்தானை
யிறவேசவட்டிவெரிநெலும்பையெழிற்கங்காளப்படையென்ன
வறவோர்வழுத்தக்கைக் கொண்டவங்கணாளன்றிருவுருவம்."
கங்காளமூர்த்தயே நம: