சர்வாண்டங்களையும் பெற்ற தாயாகிய உமாபிராட்டியார் பர்வதராஜன் புத்திரியாகத் திருக்கோலங்கொண்டு இமோற்கிரியில் தவஞ்செய்து கொண்டிருக்கை யில், சிவபெருமான் ஸநகனாதிமுநிவர்கட்காகக் கணப்பொழுது யோகத்திருந்தனர். அப்பொழுது அவனிமாக்களுக்கும் அமரருக்கும் அநேக யுகங்களாயின. "அரசனெவ் வழி யவ்வழி யக்குடி'' என்றாற்போலும், அவனசைந்திடிலுலகசைந்திடும்' என்றாற்போலும், எம்பெருமான் யோகத்திருத்தலால் எவ்வகையஜீவான்மாக்களும் ஞானத்திற் கூடிநின்றன. அது கண்ட அமரர்கள் "அரவாபரணன் அன்னையோடு கூடாது யோகத்துற்று முநிவர்போன் றிருத்தலின், எவரும் ஏந்திழையார் இணக்க மின்றி இறைவர்போலவே யிருக்கின்றனர். பிரமன் சிருட்டியும் பிறழ்ந்தது. அதுவுமன்றிச் சூரபன்மனால் துன்புற்றுச் சுவர்க்கலோகத்தைத் துறந்தோம்; என் செய்வோம்'' என்று, திருக்கயிலையடைந்து எம்பெருமானைத் தரிசிக்கச் சமயமில் லையென்று திருநந்திதேவர் பணித்தமையாற் சிவத்தியானஞ்செய்து தவத்திருந்த னர். சிவபெருமான் இந்திரன் கனவிற்றோன்றி “வாசவ! வருந்தல்; விரைவில் பார்ப்பதியை மணந்து புத்திரனொருவனால் உங்கள் துயரை யொழிப்போம்'' என்று திருவாய்மலர்ந்து மறைந்தருளினர்.
சிவபெருமான் நெடுநாள் யோகத்திருந்தமையால் வாசவன் பல தேவருடன் போய்ப் பதுமனுக்குக்கூற, பிரமன் யாவரையுங் கூட்டிக்கொண்டு விண்டுவைக் கண்டு விளம்ப, திருமால் "இறைவர் யோகம் நீங்கி இமாசலமன்னன் புதல்வியாக வந்த இறைவியை மணந்து ஒருமகனைப் பெறும்படி மன்மதனை விடுக" என மறுமாற்றக்கூற, மலரோன் மதனனை மனத்தில் நினைக்க, கருப்புவில்லி கணத்தில் வந்து கமலயோனியின் கழல்வணங்கி "என்னைச் சிந்தித்ததென்"? என, "கண்ணுதல் யோகு நீங்கிக் கவுரியை மணம்புரியும்படி மலர்க்கணைவிடுக” என. கேட்ட மதனன் “சிவசிவசிவசிவ'' என்று செவியைக் கரத்தாற் பொத்திக்கொண்டு, எண்கணனை நோக்கி “இசையேன்'' என மறுக்க சதுர்முகன் “தடுத்தாற்சபிப்பேன்'' எனச்சாற்ற, அங்கசன் செங்கை குவித்துத் திசைமுகனை நோக்கி ''உன்சாபத்தா லுயிரிழப்பதினும், பரமன்மேற் பாணப்பிரயோகஞ் செய்திறப்பது நலம் " எனக்கூறித் தனதுலகுசார்ந்து, தன்மனைவியாகிய இரதிதடுக்க, அவ்வேந்திழையைத் தேற்றி, அம்பறாத்தூணிகட்டி,சுப்பிரயோகம் – விப்பிரயோகம் – சோகம் – மோகம் - மரணமாகிய பஞ்சாவஸ்தைகளையுமுறையே உண்டு செய்யும் தாமரை – மா - அசோகு - முல்லை - நீலமென்னும் ஐந்து மலர்க்கணைகளும், சுருப்புநாண்பூட்டிய கருப்புவில்லும் மாந்தளிராகிய வாளும், எக்காளமாகிய குயிலும், முரசமாகிய கடலொலியும், மீனமாகிய கொடியும், சந்திரனாகிய குடையுங்கொண்டு கிளிகளாகிய குதிரைகள் பூட்டிய தென்றலாகிய தேரின்பேரில் இரதியுடனேறி. எண்ணில்லா மாதர்சேனை புடைசூழத் திருக்கயிலாயகிரியை யடைந்து பணிந்து, பரிசனங்களை நிறுத்தித் தேரினின்றிரதியுடனி றங்கி மலைவின்மேலேறி விலங்கு புள் முதலியனவு மோகங்கொள்ளத்தக்க வெவ்விய பாணங்களை விட, திருநந்திதேவர் சீற்றத்தால் அவை அந்தரத்திலேயே வெந்தகன்றன. காமன் நந்தியெம்பிரான் கழல் பணிந்து "சந்நிதானத்தினுட்செல்ல விடைதரவேண்டும்'' என வேண்டி, சிவபிரான் தமக்குமுன் கட்டளை செய்தவகையே “மேற்புறவாயிலாற் செல்க'' என்ற மேலோனைப்பணிந்து, கொம்பனையுடன் குடவாயிலாற் பிரவேசித்துக் குழகன் யோகத்திருத்தல் கண்டு கண்கூசி நடுநடுங்கி மூர்ச்சித்து வீழ்ந்தனன். மனைவி உபசரித்தலால் மூர்ச்சை தெளிந்தெழுந்த மதனன் மாய மனந்துணிந்து, கறுப்புவில் லைவளைத்துச் சுருப்புநாண் ஏறிட்டுப்பஞ்சபாணங்களையும் பரமன்பேரிற் பிரயோகித்தனன். அம்மலர்க்கணை அமலரது அருமைத் திருமேனியிற்பட, ஐயர் நெற்றித் திருவிழியைத் திறப்ப, மதனன் நீறாயினன்.
இரதிபலவகையாகப்புலம்பிப் பெருமானைத்துதிக்க, உமாபதி "அம்பிகையை மணந்தபின்னர் உன்கணவனை யருள்வோம்” என, அவள் வணங்கி இமையமலை யிலிருந்தனள். தாணுசங்கரியின் தவத்தைச்சோதித்து ஸப்தருஷிகளால் மணம் பேசித் தேவியை மணந்தனர். அப்பொழுது இரதி அரனைவேண்ட ஐயர் உளத்திலெ ண்ணியவுடன் பண்டைய வடிவுகொண்டு காமன் பணிந்துநிற்க, எம்பெருமான் “இரதிக்கு மட்டும் உருவமாகவும், எனைய தேவமாநுடர்க்கு அருவமாகவுமிருந்து உனது தொழிலைச் செய்யக்கடவாய்” எனத் திருவாய்மலர்ந்தருளினர். கந்தர்ப்பனை யெரித்தமையாற் காமதஹநமூர்த்தியெனக் கடவுளுக்குப் பெயராயது.
அஶரீர:க்ருத:காம:க்ரோதாதேவேஶ்வரேணவா
அநங்க இதிவிக்யாதஸ்ததாப்ரப்ருதிராகவ
“எரிபுனை நமதுநோக்கா லிறந்தநின் னுடல நீறாய்
விரைவொடு போயிற் றன்றே வேண்டின ளிரதி யன்னாட்
குருவமா யிருத்தி யேனை யும்பரோ டிம்பர்க் கெல்லா
மருவினை யாகியுன்ற னரசியல் புரிதி யென்றான்.”
காமதஹநமூர்த்தயே நம: