logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-kalyana-sundara-murthi

கல்யாணஸுந்தர மூர்த்தி

கல்யாணஸுந்தர மூர்த்தி
கல்யாணஸுந்தர மூர்த்தி

 திருக்கைலாயகிரியிற் சகலதேவர்களும் நிறைந்திருக்கும்படி நவரத்தின மண்டபத்திற் சிவபெருமான் திருவோலக்கங் கொண்டெழுந்தருளியிருக்கையில், எம்மன்னையார் சிங்காதனத்தை விட்டுத் துணுக்குற்றெழுந்திருந்து இறைவரது இருசரணாரவிந்தங்களையும் பணிந்து கைகூப்பிநின்று "தேவரீரைப்பணியாத தக்கன் மகளென்பதனாலாய தாக்ஷாயணியென்று சாற்றும் பெயரை மாற்றத்தயை செய்ய வேண்டும்" எனப் பிரார்த்திக்க, அரவாபரணர் ‘மாதே! மலையரயன் உன்னை மகளாகப்பெறத் தவஞ் செய்கின்றான். அவன்பாற் குழந்தையாகுக. உன்னை யாம் வந்து மணப்போம்'' என, அம்மையார் அவ்வாறே இமாசலத்திலுள்ள தாமரைத் தடாகத்தில் மலர்த்தவிசின்கண், மூவாண்டுள்ள மதலைவடிவேற்று நிற்ப, மலை மன்னன் கண்டு மகிழ்ந்தெடுத்துப்போய் மனைவியாகிய மேனைகையிற் கொடுப்ப, அவள் பாலூட்டி வளர்த்தனள். அம்மையார் ஐந்து வயதடைந்து அருள் மேலீட்டால் அத்தனாகிய பர்வதராஜனுக் கறிவித்து அவனநுமதி பெற்று மலைச்சாரலிற் பர்ணசாலை செய்வித்துச் சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்துகொண்டிருந்தனர்.

அக்காலத்திற் சிவபிரான் தம்மிடஞ்சேர்ந்து மனமொடுங்கும் வண்ணம் வினாவிய ஸநகன் – ஸநந்தனன் – ஸநாதனன் – ஸநற்குமாரன் என்னும் நால்வருக்கும், பதி பசு பாச லக்ஷணங்களைப் போதிக்க, அவர்கள் "அடியேங்கள் மனம் விரிந்திருப்பது அகலும் வகை யருள்புரிக'' என, “அப்பொருள் இவ்வாறிருப்பது'' என்று ஒன்று முரையாது முநிவர் போல் யோகத்திலிருந்தனராகலின், உலகமுழுவ தும் மாதர் முயக்கற்றுப் பிரமன் படைப்புத் தவறுற்றது கண்ட தேவர் அதனை விலக்குவான் கருதி, மன்மதனை விடுத்து மலர்க்கணை செலுத்தி யோகினை யழிக்கச்செய்ய, நின்மலர் நெற்றி விழியைத் திறப்ப, மதனன் சாம்பராயினன். அருகிருந்த இரதி பரமனைப் பார்த்துப் புலம்பி வேண்ட, பெருமான் ''உமையை மணந்தபின் உன் கணவனை யுதவுவோம் " என இரதி இமாசலமுற்றிருந்தனள்.

சிவபெருமான் முநிவர்கட்கருளி, இமயமலை யடைந்து எம்மன்னையாரது கடுந்தவத்தைக் கண்டுகளித்து வேதியவடிவுகொண்டு “யாது கருதித்தவஞ்செய்கின் றனை?” என, உமையம்மை “சங்கரன் என்னை மணஞ்செய்யத் தவஞ்செய்கின்றேன்” என, “பெண்ணே! என்னை மணஞ்செய்து கொள்”' என, இறைவி கோபித்து “கொடியோனே! அகன்று போக, என்று கூற , விமலர் விடையேறிக்காட்சிதர, அம்பிகை அண்ணலைக்கண்டு அச்சத்துடன் கை கூப்பி "தேவரீரை அறியாமற்கூறிய அபசாரத்தை மன்னிக்கவேண்டும்” என, ஐயர் "அவை யெம்மைத் துதித்தனவாகக் கொண்டோம்; தவமொழிக. விரைவில் மணம்புரிதும்'' என மறுமாற்றங்கூறி மறைந்தருளினர். பார்வதியார் நிகழ்ந்தது கூற பர்வதராஜன் கேட்டுக்களிப்புற்றிருந் தான். சங்கரர் கயிலை சார்ந்து ஸப்த ருஷிகளை வருவித்து "மலையரயன் மகளை மணம் பேசுக'' என, மாதவர் இமோற்கிரியுற்று மன்னனைக்கண்டு மகாதேவன் மனக்கருத்திசைப்ப, அவனங்கீகரிக்க அதனை அரன்பாலறைந்து அவரவரிடஞ் சேர்ந்தனர். இமோற்கிரிராஜன் விச்சவகன்மனால் நகர் புனைவித்து விசேஷாலங் காரஞ்செய்து "பங்குனியுத்திரத்தினம் உத்தமத்தினமாதலின், உமையை மணஞ் செய்க” என விண்ணப்பித்தனன். பெருமான் திருநந்திதேவரை விளித்து "தேவர்கள் முதலானாரைத் தருக'' என, நந்திதேவர் சிந்தித்தவளவில், கோடி யுருத்திரர்கள் - நூற்றுவருருத்திரர்கள் - கீழண்ட கடாகத்துள்ள காலாக்கினி யுருத்திரர் – கூர்மாண்டர் - ஆடகேசுரர் - திருமால் – பிரமன் - இந்திரன் முதலிய திக்குப்பாலர்கள் நவக்கிரகங்கள் - நவசித்தர்கள் - அஷ்டவசுக்கள் - ஸப்தருஷிகள் - யக்ஷ கிந்நர கருட காந்தருவர் முதலிய கணங்கள் - வேதாகமசாஸ்திரங்கள் - யுகாதி கால பேதங்கள் முதலிய யாவருங் குழுமிவந்து திருவாயிலடைந்து நந்தியெம் பெருமானைப் பணிந்தனர். பிரமன் பலரத்நாபரணங்களை முன் வைத்து அணியும்படி வேண்ட, பெருமான் 'அணிந்தாம்' என்று அவற்றைப் பரிசித்து அராக்கலனே பொற்பணியாகத் தோற்றுவித்து இடபவாகனத்தி லாரோகணித்துத் தேவர்கள் மலர்மாரி பெய்யவும், ஸ்ரீகணேஶர் – ஸ்கந்தர் - வீரபத்திரர் - வயிரவர் தத்தம் வாகனங்களில் வரவும், ஸப்தருஷிக ளாசீர்வதிக்கவும், பாநுகம்பன் ஆயிரம் வாய்களாற் சங்கத்தொனி செய்யவும், வாணாசுரன் சிவார்ச்சனை செய்த ஆயிரங்கரங்களாற் குடமுழவடிக்கவும், கணத்தலைவர்கள் பலவாத்தியங்களை முழக்கவும், திருநந்திதேவர் பொற்பிரம்பேந்தித் தேவமுநிவர்கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன் செல்லவும், இந்திரன் களாஞ்சியேந்தவும், ஈசானன் அடப்பை தாங்கவும், வாயு ஆலவட்டம் பணிமாறவும், அக்கினி தூபமேந்தவும், வருணன் பூரணகும்பமெடுக்கவும், நிருதி தர்ப்பணமேந்தவும், குபேரன் நவநிதிகள் சிந்தவும், யமன் கஞ்சுகத்தொழில்புரியவும், நாகராஜர்கள் மாணிக்கத்தீபமேந்தவும், வேதங்கள் திருவடியைச் சுமக்கவும், கங்கை காவிரி முதலிய நதிக்கன்னியர் சாமரையிரட்ட வும், குண்டோதரன் குடைபிடிக்கவும், பிரமவிஷ்ணுக்கள் இருபுரம் கைகுவித்து வரவும், ஸ்ரீசுந்தரேசப்பெருமான் திருவெண்ணீற்றுப் பெட்டகமுந் திருப்பள்ளித் தாமமு மெடுத்துக்காட்டவுமமைந்த சர்வாலங்காரத்துடன் இமாசலமடைந்து, திருவீதியிற் கண்ட மாதர்கள் காதல் கொள்ளும்படி திருவுலாப்போந்து, பர்வதராஜன் மனையையடைந்து, திருமால் கைலாகு கொடுக்க இடபவா கனத்தினின் றவரோகணித்தனர்.

பர்வதராஜன் பாரியாகிய மேனை அநேக மாங்கல்யமாதர் புடைசூழ ஆவின்பால்கொணர்ந்து ஐயனது திருவடித்தாமரையை விளக்கி நாணத்துடன் உட்சென்றனள். மன்றற் சடங்குகளை மலரோன்செய்தனன். சிவபெருமான் இரத்ன சிங்காதளத்தில் வீற்றிருந்தனர், அவரவர் தங்கட்குத் தக்க ஆதனத்திருந்தனர்.

[அப்பொழுது யாவரும் ஆண்டுக் கூடிநின்றதால், வடதிசை தாழ்ந்தது கண்டு, அத்தன் அகஸ்திய முனிவரை நோக்கி "நீர் ஒருவரே எமக்கொத்தவர்; நீர் தென்றிசையிலிருப்பின் உலகஞ் சமனாயிருக்கும்; உமக்குத் திருமணக்கோலங் காட்டுதும்'' என, அகஸ்தியர் ஆணையைக் கடவாராய் இமாசலமகன்று வழியில் மாயை செய்த க்ரௌஞ்சனைச் சபித்து, வழிவிடாது நின்ற விந்தத்தை யடக்கி, வாதாவி வில்வலரைமாய்த்து, குற்றாலத்துள்ள திருமாலைப் பெருமான் வடிவாக்கிப் பொதியமலை சேர்ந்து சிவத்தியானத்திருந்து பின்னொருகாலத்தில் திருமணக்கோலத்தைத் திருவருளால் தரிசித்தனர். இதுநிற்க. அகஸ்திய ரகன்றபின் உலகு உயர்வு தாழ்வின்றி யிருந்தது.]

அம்மையார் பலவகையாகிய ஆடையாபரணங்களை யலங்கரிக்கப் பெற்றவராய் அநேகர் தோழியர் புடைசூழ, புராரியை வந்து பணிய மாதேவன் "மாதே! பக்கலிரு” என, இருவரும் ஏகாசனத்திருந்தனர். மேனை யருகிருக்கப் பர்வதராஜன் பரமன் பாதத்தைப் பூசித்து, பார்ப்பதி கையைப் பரமேச்சுரன் திருக்கரத் திற்கொடுத்தனன். சிவபெருமான் திருமாங்கல்யந்தரித்து மணவினை முடித்தனர். இரதி தன் கணவனைப்பெற அது ததியிற் கண்ணுதலைப் பணிய, அண்ணல் தமதெண்ணத்தில், காமனைக் கருத, அவன் முன் தோன்றினன். முன்னோன் "உன் மனைவிக்கு மட்டும் உருக்கொண்டு அகிலத்திற்கெல்லாம் அரூபியாயிருத்தி" என்றருளிச்செய்து அங்கிருந்து தேவியாருடன் திருக்கயிலாயகிரியை யடைந்து தேவர்களை விடைகொடுத்தனுப்பி வீற்றிருந்தனர்.

பார்ப்பதியாரை மணஞ்செய்ய, சிவபெருமான் எழுந்தருளிய திருக்கோலமே கல்யாணஸுந்தரமெனப்படும்.

கல்யாணஸுந்தரமூர்த்தயே நம:

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்
 

Related Content

இலிங்கோற்பவ மூர்த்தி

முகலிங்க மூர்த்தி

ஸதாசிவமூர்த்தி

மஹாசதாசிவ மூர்த்தி

உமாமஹேச மூர்த்தி