logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-kalakntakar

காலாந்தக மூர்த்தி

காலாந்தக மூர்த்தி
காலாந்தக மூர்த்தி

மிருகண்டு முநிவர் என்பவர் முற்கலமுநிவர் தவப்புதல்வியாகிய மருத்துவதி யென்னுங் கன்னியை மணந்து, நெடுங்காலம் புத்திரரின்மையாற் காசிக்ஷேத்திரத் தை யடைந்து மணிகர்ணிகையில் ஸ்நானஞ்செய்து சிவபெருமானை நோக்கிப் புத்திரப்பேற்றினையவாவித் தவஞ்செய்ய, பெருமான் பிரத்தியடிமாகி, ''முநிவனே! தீக்குணம் - ஊமை - செவிடு குருடு - முடம் - தீராப்பிணி – அறிவின்மையாகிய இவற்றோடு கூடிய நூறுவயதுயிர்வாழும் புதல்வன் வேண்டுமா? அல்லது அழகு -நல்வடிவு – நோயின்மை - எமதன்பு முதலியவற்றைப்பெற்றுப் பதினாறு வயது சீவித்திருக்கும் மைந்தன் வேண்டுமா? சொல்க" என, முநிவன் ''வயது குறைந்து வாழ்வானாயினுஞ் சற்புத்திரனையே விரும்பினேன்'' என்று விண்ணப்பிக்க, அவ்வாறே வரமளித்து அந்தர்த்தானமாயினர். பிறகு சிறிது நாளில் அம்முநிவன் மனைவி கருப்பமுற்று நல்ல சுபமுகூர்த்தத்தி லோர் மைந்தனைத் தந்தனள். தேவர் புஷ்பமாரிபொழிந்தனர். தேவதுந்துபிமுதலிய முழங்கின. பிரமதேவன் அச்சிறுவனுக்கு மார்க்கண்டனென நாமகரணஞ்செய்தனன். உபநிஷ்டானம் - சந்திமிதித்தல் - அன்னப்பிராசன முதலியவற்றை முறைப்படி செய்து ஒரு வருடத்திற் றலைமயிர்களைந்து, இரண்டாம் வருடங் கர்ணவேதனமியற்றி, ஐந்து வயதில் உபநயனம் நடத்தி வித்தியாப்பியாசஞ் செய்வித்தனர். மார்க்கண்டேயர் வேதாகமமுதலிய நூல்களிற்றேர்ந்து சிவபெருமானே உண்மைப் பொருளென் றுணர்ந்து சிவபக்தியுஞ் சிவனடியாரிடத் தன்பு மதிகரித்தனர். அவ்வாறிருக்கையில் வயது பதினாறாகவே தாய்தந்தையர் இவரைப்பற்றி யெப்போதுந்துன்புற் றிருந்தனர். அதனையுணர்ந் தென்னெனக் கேட்க, உண்மை யுரையாராகிக் கடைசியிற் சிவபெருமான் தனக்களித்த வரத்தைத் தந்தை சொல்ல ''எந்தையே! யான் சிவார்ச்சனை செய்து பெருமானது பேரருளால் இயமனைவென்று வருகிறேன் அஞ்ச வேண்டாம்." என்று கூறி விடைகொண்டு, காசிக்ஷேத்திரத்தில் மணிகர்ணிகைக்கருகே சிவலிங்கப்பிரதிட்டை செய்து பூசித்து எம்பெருமானால் “இயம பயம் நீங்குக'' என்னும் வரம் பெற்று, மீண்டும் பூஜாகாலந்தவறாது பூசித்து வருகையில் மரணதசை குறுக, இயமனது கட்டளைப்படி ஓர் தூதன் வந்து அவரது பூசாபலத்தினாற் சமீபிக்கக் கூடாதவனாய்ச் சயமினி நகரஞ்சேர்ந்து தன் தலைவனுக்குச் சாற்ற, அவன் கோபித்துத் தன் கணிகராகிய சித்திரகுத்திரரை வரவழைத்து அவர் கணக்கை விசாரித்தறிந்து தன் மந்திரியாகிய காலனையனுப்ப, காலன் போய்ப்பார்த்துத் தன்னாலொன்றுஞ் சாயாதவனாய்த் திரும்பிவிட, இயமன் ஆலகாலம் போற் கொதித்துத் தன்மகிஷவாகனத்தை யழைப்பித்துத்தானே அதின் மீதேறி மழு - தண்டம் – பாசம் – சூலம் - இவற்றையேற்று, குடையுங்கொடியுந் தூதர் தாங்கிவர, மார்க்கண்டேயரைக் கிட்டியழைக்க, அவர் வராமையால் வெகுண்டு, நெருப்பெழச் சிரித்துப் பற்களைக்கடித்துச் சிரத்தையசைத்து, "பிரமாதி தேவர்களும் யானுமே ஒருகாலத்திறப் போமானால் நீயோவரமாட்டாதவன்'' என்று கோபத்துடன் நீலமலைபோலநின்று கழுத்திற்பாசத்தை வீசியிழுக்க எத்தனிக்கையில், மார்க்கண்டேயர் பயந்து சிவலிங்கக்குறியைத் தழுவுகின்றனர். அப்பொழுது ஆபத்சகாயராகிய சிவபெருமான் "அஞ்சற்க'' என்றருளிச்செய்து, அச்சிவலிங்கமூர்த்தத்தினின்றுந் தோன்றித் தமது இடது காலாலுதைக்க இமைப்பொழுதில் இயமன் உயிர்நீங்கினன். பின்னர்ப்பூமியில் மரணாவத்தையின் மையாற் பூதேவி சுமையாற்றாளாய்க் குறையிரப்ப, அருட்பெருங்கடல் மீண்டும் அவனை யெழுப்பினர். மிருகண்டுபுத்திரராகிய மார்க்கண்டேயரைச் சிரஞ்சீவியாக்கிக் காலனையடக்கிய கோலமே காலாந்தக மூர்த்தமெனப் பெயர்பெறும்.

கட்டளைக்கலித்துறை.

"பூமன் சிரங்கண்டி யந்தகன் கோவல் புரமதிகை
மாமன் பறியல் சலந்தர னிற்குடி மாப்பழுவூர்
காமன் கொறுக்கை யமன்கட வூரிந்தக் காசினியிற்
றேமன்னு கொன்றையுந் திங்களுஞ் சூடிதன் சேவகமே."

பிரஹ்ம சிரச்சேதம் திருக்கண்டியூரிலும், அந்தகாசுரவதம் திருக்கோவலூரி லும், திரிபுரதகனம் திருவதிகையிலும், தக்ஷசங்காரம் திருப்பறியலூரிலும், ஜலந்தரவதம் திருவிற்குடியிலும், கஜாசுரசம்ஹாரம் திருப்பழுவூரிலும், காமதஹநம் திருக்கொறுக்கையூரிலும், காலசம்ஹாரம் திருக்கடவூரிலும் நிகழ்ந்தனவெனக் கூறப்பட்டிருப்பதால், இயமனையுதைத்தது திருக்கடவூரெனக் கூறுநருமுளர்.

கந்தபுராணம்.

"மதத்தான் மிகான் மற்றிவன் மைந்த னுயிர்வவ்வப்
பதைத்தா னென்னா வுன்னி வெகுண்டான் பதின்மூன்றுஞ்
சிதைத்தான் வாமச் சேவடி தன்னாற் சிறிதுந்தி
யுதைத்தான் கூற்றன்விண்முகில்போன் மண்ணுறவீழ்ந்தான்.”

காலாந்தகமூர்த்தயே நம:

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்  

 

Related Content

Who else is my Saviour ?

இறைவன் காலந்தாழ்த்துவாரா?

திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார்