logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-jalandhara-vada-murthi

ஜலந்தரவத மூர்த்தி

ஜலந்தரவத மூர்த்தி
ஜலந்தரவத மூர்த்தி

தேவேந்திரன் ஒருகாலத்தில் திருக்கைலாயகிரியை யடைகையில், சிவபெருமான் வடிவுமாறி வழியில் நிற்கக்கண்டு, 'நீயாவன்? யாது தொழில் செய்வோன்?'' என, ஒன்றுங்கூறா திருப்பக் கோபித்துத் தன் கைவச்சிரத்தைத் தோளிற்றாக்க, அது பொடியாகவுதிர்ந்தது. உடனே பெருமானுக்குக் கோபமுதித்து, ஒருருத்திரவடிவேற்க, இந்திரன் வெருக்கொண்டு, உரைகுழற வுடலசைடக் கைகட்டிவாய்பொத்திப் பலவகையாகத்துதிபுரிய, இறைவர் மனம் பொறுத்துத் தன் கோபத்தாலுண்டாகிய வியர்வை நீரை வழித்தெறிய, அது மேற்றிசைக்கடலில் வீழ்ந்து ஓர் புத்திரவடிவாயது. அதனைச் சமுத்திரராசன் மகன்மை கொண்டு வளர்த்து வந்தனன். அச்சிறுவன் பிரமனாற் சலந்தரனென்று நாமமிடப்பெற்று, காளைப் பருவமுற்று, அவுண்ருடன்கூடி ஆற்றல் மிகுந்தவனாய்த் தானஎத்தச்ச னாகிய மயன் என்பவனால் ஓர் அழகியநகரஞ்செய்வித்து, காலநேமியின் புத்திரி விருந்தையை மணந்து சிறிதுகாலம் வசித்திருந்து, மேருமலையிலிருந்த தேவர்களோடு போர்புரியக்கருதிப் போகையில், தேவர்கள் விஷ்ணுவைவேண்ட, அவர் கருடாரூடராய் இருபதினாயிரவருடங் கடும்போர்புரிந்து அவனை வெல்லுந் திறனில்லாராய்ப் புகழ்ந்து சென்றனர். அதுகண்ட இந்திரன் அவ்வசுரனால் யாது தீங்கெய்துமோவென் றலக்கணுற்றுத் திருக்கைலாயகிரியை யடைந்திருந்தனன்.

இந்திரனது செய்தியைச் . சில தூதுவரியம்ப வுணர்ந்த சலந்தரன் ஆங்குச் சென்று, அவனை யெதிர்ப்பான் கருதிப் புறப்படுகையில் விசேடித்த கற்பினை யுடைய விருந்தையென்னும் மனைவி வேண்டாமென்று தடுப்பவும் மனமயங்கா மல், சேனாசமுத்திரத்துடன் திருக்கைலையை சமீபித்தலைச் சதக்கிருதுகண்டு சஞ்சலங் கொண்டு, சந்நிதானத்துட்சென்று சங்கரர் முன்னே நின்று தனக்குற்ற சங்கடத்தைச்சாற்ற, தயாநிதி "வச்சிரபாணி! வருந்தாதே” என வனுக்கிரகித்துத்தேற்றித் தன்பின் வடிவுமாறி வரக் கட்டளையிட்டு, நரைத்த திருவுருவமும் ஊன்றியதடியும், தொங்கிய கமண்டலமுந்தளர்ந்த நடையுமுடைய ஓர் விருத்தமுநி வடிவேற்று, இந்திராதி யிமையவர்மறைந்து பின்றொடரச்சென்று. சலந்தரனைக் கண்டு "நீயார்? யாதுக்கருதிச் செல்கின்றனை?" என வினாவ, “யான் சமுத்திரராசன் தனயன். சலத்திரனென்னு நாமமுற்றோன். சிவனுடன் செருச் செய்யச் செல்கின்றேன்'' என செப்ப, நம்பெருமான் "நன்று றினை '' என்று நகை கோட்டி, கண்ணுதலைப் பொருதக்கருதிற்கணத்தி லுயிர்கழிவாய்; உயிர்ப்பிச்சை வேண்டின் திரும்பியோடிப்போ'' என, சலந்தரன் “இமைப்பொழு திங்கிருந்து என் ஆற்றலைக்காணுதி'' என, ஈசன் "யான் சிவபிரானுக் கிரண்டாவது. உன் வல்லமையைக் காண வந்தேன்'' என்று திருவடியால் ஓர் சக்கரம்போற்கீறி ''இவ்வலையத்தைச் சிரமேலேற்றுத் சாங்கவல்லையா" என்றவுடனே, சலந்தரன் இறுமாப்புமிகுந்து "இது தானோ பெரிது'' என்று இருகையாலுமெடுத்து மார்பிலும் புயத்திலுந்தாங்கிச் சிரத்தின் மேல் வைத்துக்கொள்ள, அச்சக்கரம் அவனை அக்கணமே இருபிளவாகப்பிளந்து சிவபெருமான் திருக்கரத்தெய்தியது. அவனுடன் வந்த அசுரர்கூட்டமுற்றும் பெருமானது விழித்தீயினாற் சாம்பராயின. பின்னர் பெருமான் தமது நிஜ வடிவுகாட்ட இந்திரன் முதலாயினார் வாழ்த்திப் பூமழை பொழிந்து ஆநந்தக்கூத்தாடிப் போற்றித் தத்தம்பதவியடைந்து வாழ்ந்திருந்தனர்.

அமரரைத் தீராத்துயர்விளைத்து வந்த சலந்தராசுரனைச் சக்கரமொன்று தாளாற்கீறித் தலைமேலெடுக்கச்செய்து சங்கரித்தமையால், சிவபிரானுக்கு ஜலந்தரவதமூர்த்தியென வோர் திருநாமஞ் சாற்றப்பட்டது..

கந்தபுராணம்.

“புங்கவர் யாரையும் புரங்கண் டேன்வரு
கங்கையை யடைத்தனன் கார்கொள் வேலையி
லங்கியை யவித்தன னரியை வென்றன
னிங்கிது தாங்குவ தரிய தோவெனா.

புரத்தழல் கொளுவியோன் பொறித்த நேமியைக்
கரத்திடை யெடுத்தனன் கனங்கொண் டெய்தலி
னுரத்திடைப் புயத்திடை யுயிர்த்துத் தாங்கியே
சிரத்திடை வைத்தனன் றேவ ரார்க்கவே.

செழுஞ்சுடர்ப் பரிதியைச் சென்னி கோடலா
லொழிந்திடு சலந்தர னுச்சி யேமுதற்
கிழிந்தது முழுதுடல் கிளர்ந்து சோரி
ரிழிந்தது புவிதனி லிழுமெ னோசையால்.”

காஞ்சிப்புராணம்.

"இருகூறாகச் சலந்தரனை யிறுத்து மாட்டி யவ்வடிவ
மருகே தோன்றச் சுதரிசன மங்கைத் தலத்தின் மிசையேந்தி 
முருகார்கடுக்கைத் தண்ணறும்பூந் தொடையல்வாகை முடிவிளங்கத்
திருவார் காட்சி யளித்தருளுந் தேவர் கோமான் றிருவுருவம்.''

ஜலந்தரவதமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்               
 

Related Content

சக்ரதாநஸ்வரூப மூர்த்தி