ஆளுடையவடிகளென்னுஞ் சிறப்புப்பெயருற்ற மணிவாசகர் பாண்டிநாட்டில் நீர்வள நிலவளமிகுந்த திருவாதவூரில் ஆமாத்திய வேதியர்குலத்தில் திருவவதாரஞ் செய்து தந்தையாரால் திருவாதவூரர் என்னும் பிள்ளைத்திருநாமம் பெற்று வேதாகம முதலிய கலைகளிற் றேர்ச்சியடைந்திருக்கையில், மதுரையில் அரசுபுரிந்துவரும் அரிமர்த்தன பாண்டியன் இவரது பிரதாபத்தைக் கேள்வியுற்றுத் தன்பால் வருவித்து ஆற்றலை நோக்கி அமைச்சுரிமையும் தென்னவன் பிரமராயன் என்னும் பட்டமுங் கொடுத்துச் சிறப்போடு வைத்திருந்தனன். அமைச்சர்பெருமான் இருமனப்பெண்டிர் போலும் அரசகாரியத்துத் தொழிலும் ஆளுடையார் திருவடிக்கண்ணே அறிவுமாக வொழுகிவருகையில், கீழ்க்கடற்றுறையிற் குதிரை கொள்ளும்படி அரசனேவ, அளவற்ற பொருளோடுஞ்சென்றனர்.
பரிபக்குவமுற்ற ஆன்மாக்கட்குத் திருவருள் புரியும் ஆளுடையார் இவரது சத்திநிபாதத்து உத்தமத்தலைமை, நிலைநோக்கி மாநுடத்திருவுருவேற்றுத் திருநந்தி முநிகணங்கள் மாணாக்கராய்ச் சூழ்ந்துவர, திருப்பெருந்துறையில் குருமூர்த்தங் கொண் டெழுந்தருளி வாதவூரையர் வரவுகோக்கியிருந்தனர். இவர் சென்று அத்திருப்பதியெல்லையடுக்க, அன்பும் ஆராமையுந்தலைமீதூர, என்னுடையான் இங்குற்றனனோ? என்னுங் கருத்தோடு சென்று, ஆசிரியர் பெருந்தகையைக் கருவிகளெல்லாங் கனிந்துருகக்கண்டு கைதொழுது உரைகுழற உடல்கரைய்ப் பரவினர்; பாடினர், ஆனந்தக்கூத்தாடினர்; பரவசராய் அசைவற்றுச் சிறிது பொழுது கையேற்றிருந்து "எம்பெருமானே? இவ்வுடல்பொருள் ஆவி மூன்றனையுந் திருவுள் ளம் பற்றுக'' என்று குறையிரந்த குணக்குன்றன்னவரை', எம்பெருமான் திருவரு ணோக்களித்து, அஸ்தமஸ்தக சையோகஞ்செய்து அமையத்தடவித் திருவடிசூட்டி அன்பூட்டி அறிவின்மயமாக்கி ஐந்தெழுத்துண்மையசைவுற உபதேசித்தருளினர்; அதனால் அமைச்சர்பெருமானும் அமுதராயினர். ஆசிரியநாயகத் தருட்சந்நிதியில் அன்புருவப் பெருந்தகையார் அளவளாவி, அடியார் கூட்டத்திலானந்தக் கடலின் மூழ்கி அழுதழுதலங்காரத்தமிழ்சூட, பத்திப்பிச்சை வேண்டிப் பரமபதி பவளவாய் திறந்து, தமது அருமைத் திருவாக்கால் “மாணிக்கவாசக! இங்கிருக்க” என்றனுக் கிரகித்துத் தம் மாணாக்கர் குழாத்துடன் அந்தர்த்தானமாயினர்.
சிவநேயமுற்ற மாணாக்கர் திலகராகிய மணிவாசகர் மனமுருகி வருந்திப் பிரிவாற்றாதவராய் உயிர்நீங்கக்கருதி அஃதெம்பெருமானதென் றஞ்சிக் கட்டளை கடவாது, அங்கேயே யிருந்து கொண்டு, அவருடன் வந்த பரிசனர்களை நோக்கி "ஆடித்திங்களிற் புரவிகள் வருமென்று புரவலற்குக் கூறுக" எனப் பணித்தனுப்பி, தாம்கொண்டுவந்த அரிமர்த்தன னரும்பொருள் முழுதும் ஆண்டவருக்கும் அடியவருக்குமமைந்த ஆலயமுதலிய திருப்பணியில் விநியோகஞ் செய்திருந்தனர். பரிசனர் சொல்லக் கேட்ட அரசன் அவ்வாறு ஆடித்திங்களன்றும் அஶ்வங்கள் வாராமையால் அமைச்சர் வாழ்வுக்கோலை விடுப்ப, அவரும் உடையார் சந்நிதியிற் சென்று அரசோலையறிவித்த நிற்க “ஆவணிமூலத்திற் பரித்திரள்வருமென்று ஒலை விடுக்க" எனப்பெருமான் அசரீரியாய்க்கூறினர். ஸ்ரீமன்றுடையார் கட்டளைப்படி அவ்வாறே ஓர் திருமுகம் வரைந்தனுப்பினர். மணிவாசகர் துயிலுகையில் எம்பெருமான் தோன்றி "புரவிகள் பின் வரும்: நீ முன்செல்க" எனப் பணித்தமையின், அமைச்சர் பெருமான் ஆளுடையார் சந்நிதியிற் பணிந்து விடைகொண்டு மதுரையை யடைந்து ஆலவாயுடையாரை வணங்கி, அரசனவைக் களத்துற்று அகமலரச்செய்து, சோமசுந்தரரைப் பணிந்து இருக்கையடைந்து திருவருணோக்கி யிருந்தனர்.*
* கவனிப்பு – குருமூர்த்தம் -அஶ்வாரூடம் என்னும் இரண்டு சரித்திரங்களும், மாணிக்கவாசகர் சரிதங்களேயாதலாலும், அவை முறையே ஒன்றின் பின்னொன்றாக அடுத்து வருவதாலும், அவர்பிரபாவத்தை ஈண்டு முடித்திலோம். எஞ்சிய சரிதையை அடுத்த அஶ்வாரூடமூர்த்தத்திற் கண்டுகொள்க.
பரிபக்குவமுற்றிருந்த மாணிக்கவாசகருக்கு ஞானோபதேசஞ் செய்தவர் சிவபிரானாதலால் அப்பெருமானுக்குக் குருமூர்த்தியென்பதோர் பெயர் வழங்குகின்றது.
குருமூர்த்தயே நம: