logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-gauri-varaprada-murthi

கௌரீவரப்ரத மூர்த்தி

கௌரீவரப்ரத மூர்த்தி
கௌரீவரப்ரத மூர்த்தி

மந்தரபர்வதமானது மஹாதேவரை நோக்கிப் பலகாலந்தவஞ் செய்து, அப்பரமபதி தன்னிடம் வாழும்படி வரம் பெற்றமையால் சிவபெருமான் தேவியாருடன் அதிற்சிறிதுகாலம் வீற்றிருந்தனர். அவ்வாறிருக்கையில் அம்சவாகனனாகிய அலரோனை நோக்கி அநேக நாள் அருந்தவமாற்றிய அசுரனொருவன் உமையம்மையார் உடலினின்றுதித்த ஒருபெண்ணால் உயிரொழிந்தாலன்றி, வேறொருவராலும் இறவாதிருக்க வரமேற்று இமயவரையலைத்து வந்தனன். அந்த அவதியையகற்ற வழியாதென்று வருந்திக் கருதியமலரோன் மந்தரமடைந்து எம்பிரானைப்பணிந்து “இறைவரே! இமயவல்லியாகிய எமதன்னையிடம் ஓர் கன்னியைத்தோற்றுவித்து அவ்வசுரனை யழிக்கவேண்டும்'' என விண்ணப்பிக்க, இறைவர் அவ்வாறேயாகுக, என்று விடையளித்தனுப்பினர்.

பின்னர், காளகண்டராகிய கண்ணுதல் லீலாமாத்திரையாய்த் தேவியாரைத் திருநோக்கஞ்செய்து ''ஏகாளிவருக” இறைவி ''கருப்புவில்லியாகிய காமனைக் காய்ந்து கல்லாடையுஞ் சடைமுடியுத்தரித்த கடவுணாயக! தேவரீரிவ்வாறு திருவாய்மலர்ந்தது யாது காரணம்? விருப்பில்லாமனைவி மகளிருட்பதடியா வளாதலின், இக்காருரு நீங்கிக் கவுரியாம் வண்ணங் கருணைபூத்தருள்க'' என்று கண்ணிணையில் முத்துக்கள் போல் நீர்த்துளிகள் சிந்தினள். கருணாமூர்த்தி “பெண்ணே: சர்வான்மாக்களையுங் காத்தலே நமது கடனாதலின் ஓர் கருமப் பொருட்டாய் இவ்வாறு கழறினோம். மனங் கலங்கற்க. அதனைப் பின்னரறிவாய்'' எனத் திருவாய்மலர்ந்தருள, அம்பிகை அண்ணலை வலம்வந்து பணிந்து விடை பெற்று, இமயமலைச்சாரலை யடைந்து, ஆங்கோர் சிவலிங்கப்பிரதிட்டை செய்து ஆகமவிதிவழாது பூசித்து அருந்தவத்திருந்தனள்.

அசுரர் செய்யுந் தீமையில் அவதிப்படும் அந்தரத்தவர், சதுமுகனை முதலாகக்கொண்டு, சாம்பவியால் வந்து சாஷ்டாங்கமாகப் பணிந்து "தாயே! தமது திருமேனியினின்றோர் சத்தியையுதிப்பித்து, தானவர் குழாத்தைச்சங்கரித்து வானவருக் கருள்வழங்க வேண்டும்” எனப் பிரார்த்தித்துக்காத்திருந்தனர். மலையரச புத்திரியாராகிய விமலை, மஹாதேவரது திருவருளாற் கௌரநிறமாங்காலஞ் சமீபித்தது. அப்பொழுது அன்னையார் தமது காளநிறத்தை விலக்க, அதுவே துர்க்கையாயது. துர்க்காதேவி பிரமனாற்கொடுக்கப்பட்ட சிங்கவாகனமேறி உமையம்மையார் கட்டளைப்படி நிருதரைக்கொன்று விந்தகிரியில் வீற்றிருக்கின்ற னள். பரமேச்சுவரியார் புராரியின் திருவருளாற் பொன்னிறமுற்றுக் கௌரியென்னும் பெயர்பெற்று, மந்தரமலையையடைந்தனர். திருநந்திதேவர் முதலிய சிவகண நாதர்கள் திருவடிபரவத் திருச்சந்நிதானத்தினுட் சென்று சிவபிரானைச் சேவித்துத் திருக்கரங்கூப்பிநின்றனர். மங்கையைத் தமது செங்கையாலெடுத்துச் சங்கரர் தமது திருத்தொடைமீதிலிருத்தினர்.
சிவபெருமானை நோக்கி உமையம்மையார் தமது கருமைநிறத்தாலெய்திய காளியென்னும் பெயர்நீங்கிப், பொன்னிறமாகிய திருமேனியுங் கௌரியென்னுங் காரணத் திருநாமமுமெய்தக் கையேற்றுச் சந்நிதியில் வரங்கொண்டமூர்த்தமே கௌரீவரப்தமூர்த்த மெனக்கழறப்படும்.

கௌரீவரப்தமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்                   
 

Related Content

இலிங்கோற்பவ மூர்த்தி

முகலிங்க மூர்த்தி

ஸதாசிவமூர்த்தி

மஹாசதாசிவ மூர்த்தி

உமாமஹேச மூர்த்தி