logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-gauri-leela-samanvita-murthi

கௌரி லீலாசமந்வித மூர்த்தி

கௌரி லீலாசமந்வித மூர்த்தி
கௌரிலீலாசமந்வித மூர்த்தி

திருக்கைலாயகிரியிற் சிங்காதனத்தெழுந்தருளியிருந்த சிவபெருமானது திருவடிகளைத் தேவியாரெழுந்து பணிந்து நின்று, ''இறைவரே! எங்கும் நிறைந்த தேவரீரது உண்மை நிலையை யுபதேசித்தருள வேண்டும்'' என விண்ணப்பிக்க, சுயம்பு “உமையே செயல் குண வுருவங்களைப் பொருந்தோம்; சர்வவியாபகமாக விளங்குவோம் ; உருவம் அருவம் உருவருவங்களைப் பொருந்துவோம்" என்று திருவாய்மலர்ந்தருளினர். உமாதேவியார் "உருவமுடையேமல்லமென்றும், பல வுருவமுடையேமென்றும் உரைக்குந்தன்மை யாது?'' எனவோத, ஐயன் "அவை நமதருள்வடிவுகள்'' என்றறைய, அன்னையார் "ஆயின், அவை யென்வடிவங்களே" என்றிசைத்தனர். நம்பர் "நம்மெதிரில் உன்னை வியந்து கூறினை; உன்னிடத்திலும் ஏனையோரிடத்திலும் யாமேநின்று தொழில் படுத்துகிறோம்; அவ்வாறு தொழில்படு த்துதல் நீங்கினால் அகிலசராசரங்களும் அறிவுமுழுவதும் ஒழிந்து சடமாயிருக்கும்; அதனையறிக' என்று மறுமாற்றமருளி திருமால் திசைமுகன் முதலிய தேவரது உள்ளத்திற்பொருந்தி அறிவினையளிக்குஞ் செயலைங்கிக் கணப்பொழுதிருக்க அகிலான்மாக்களும் அறிவிழந்தவர்களாய்த் தமது முறைதவறிச் சடமாயிருப்பதைக் கௌரிகண்டு, கங்காதரனது கழல் பணிந்து "எம்பெருமானே! எளியே னிசைத்ததை யெண்ணாமல் எவரையுமெழுப்பி யருள வேண்டும்" என்றிரப்ப, இறைவர் கருணை பூத்து யாவரையுமெழுப்பினர்.

விண்டு முதலானார் பண்டைய வுணர்வுறத் துயில் நீங்கினார். போலத் துண்ணென்றெழுந்து அண்ணலைப்பணிந்து "எளியேங்கள் எண்ணில்காலம் அறிவடங்கிச் சடமாய்ச் செய்கடன் மறந்தோம் மாதலின், அப்பாவம் அகலும் வகையை அருள் செய்ய வேண்டும்”, என விண்ணப்பிக்க, உத்தமன் “உம்பர்களே! அப்பாவம் உமையிடத்தன்றி, உங்களிடத்ததல்ல" என்றோதியகற்றி, சாம்பவியை நோக்கி “நீ * தக்கன்மகளாய்த் தரணிமேற்றோன்றுதி; யாம்வந்து மணஞ் செய்வோம்'' என ஆஜ்ஞாபிக்க, விமலை விடையூர்தியைப் பணிந்து விடை கொண்டு, காளிந்திந்தியிற்கமலமலரின் மேல் வலம் புரிவடிவாய்ச் சிவநாமங்களை யுச்சரித்துக்கொண்டு, சிறிது காலமிருந்தனள்.

* பண்டொரு பகலிற் பதுமன் தனது ஸத்தியவுலகத்தி லிருக்கையில், அவன் தனது மனத்தினின்று ஸப்தருஷிகளையும், மடியினின்று நாரதரையும், நிழலினின்று கர்த்தமரையும் அங்குஷ்டத்தினின்று தக்ஷனையும் பெற்றனன். அவ்வாறு தோன்றிய அவனது மாநதபுத்திரர் பதின்மரில், தக்கன் தந்தையை நோக்கி “எந்தையே! பெருந்தேவர் மூவருள் தலைவனாகவும், எல்லாவுயிர்கட்கும் உயிருமாயுள்ளவன் யாவன்?'' என்று வினாவ, சதுமுகன் "தனய சங்கரனே நீவினவிய முதல்வன்'' என மறுமாற்றங்கூற , தக்கன் ''சிருட்டியாதி மூவகைத்தொழிலிற் சங்காரமொன்றினை யியற்றுஞ் சங்கரன் ஏனைய விருதொழில்புரியு நுமக்கிறைவனாத லெங்ஙனம்?''
என, எண்கணன் "சர்வசங்காரகாலத்தில் எல்லாவற்றையுந் தன்னிடமொடுக்கி மீட்டும் படைப்போனாதலாலும், எம்முள் அந்தர்க்கதமாகவிருந்து சிருட்டி திதிகளைச் செய்விப்பவனாதலாலும், இறைவனாவான்'' எனத்தேற்றினன். அதுகேட்டு மனத்தடுமாற்றம் நீங்கி மாநததீர்த்தக்கரையில் ஆயிரவருடந் தவஞ் செய்த தக்கனுக்குச் சிவபெருமான் காட்சிதந்தருளி, "உன் மனதில் விரும்பியதென்?'' என, தக்கன்பணிந்து "த்ரிலோகங்களும் என் கட்டளையில் நிற்கவும், தேவரீரைப் பணிவோர் என்னைப்பணியவும், உமாதேவியார் என் புதல்வியாயுதிக்கவும், தேவரீர் வேதியவடிவாய் வந்து மணம் புரியவும், வரமருளவேண்டும்'' என வேண்டினன். சிவபிரான் அவ்வாறே யருள் செய்து அந்தர்த்தானமாயினர்.

தக்ஷன் சிவப்பிரசாதத்தாற் பிரமனைக்கொண்டு தக்கமாபுரியென வோர் நகரமியற்றி, ஆங்குக் கொலுவீற்றிருந்து இந்திராதி தேவர்பரவ அரசு செய்து வருகையில், வேதவல்லியை விவாகஞ் செய்து, ஆயிரம் புதல்வரையீன்று, அவர்கட்கு உபநயனகியற்றி, வேதமுணர்த்தி, ''நீங்கள் சிவபிரானை நோக்கி மாந்ததீர்த்தக்கரையில் தவஞ்செய்து, "சிருட்டி செய்ய வரம் பெற்று வருதிர்' என விடுத்தனன். அவர்கள் அவ்வாறே தவத்திருக்கையில், நாரதமுநிவர் அவர்களை வினாவி ஞானோபதேசஞ் செய்ய, அவர்கள் தவஞ்செய்து முத்தி பெற்றனர். இச்செயலை ஞான திருஷ்டியாலறிந்த தக்கன் மீண்டும் ஆயிரம் புதல்வரைப் படைத்து முன்போலவே விடுப்ப. அவர்களும் நாரதமுநிவரதுபதேசம் பெற்றுத் தம்முன்னோர் போலவே மோக்ஷமுற்றனர். இதையுமறிந்த தக்கன் வெகுண்டு முநிவரை "எங்குந் திரிக" எனச் சபித்து, இருபத்து மூன்று மாதர்களையீன்று மருதன் முதலான முநிவர்க்கு மணம்புணர்த்தி, இருபத்தேழு பெண்களை யளித்துச் சந்திரனுக்கு மணம்புணர்த்தினன். சந்திரன் அவ்வனிதையர்களில், கார்த்திகை உரோகணியென்னு மாத ரிருவரையன்றி ஏனையோரை முகநோக்கானாயினன். பலநாள் மனம் பொறுத்த மற்றையமாதர் தந்தைபாலுற்று முறையிட, தக்கன் சந்திரனை யழைத்து மதி கூறிவிடுத்தனன். திங்கள் அதனாலும் மனத் திரும்பாமை தெரிந்து சினங்கூர்ந்து "தினமோர் கலையாகக்குறைக” எனச் சபித்தனன். அதனால் நாளுக்கோர் கலையாகக்குறைதல்கண்டு, தக்கன் கொடுத்த சாபத்தினின்று விலகவிரும்பிய சோமன் சிவபிரானைப் பிரார்த்தித்து, பெருமானருளால் வளரவும் தேயவும் வரம் பெற்றனன். அதனையறிந்த தக்கன் கடுங்கோபங்கொண்டு புலகமுநிவர் புகன்ற புத்தியாற் கோபநீங்கி யிருந்தனன்.

மாசிமாதத்தில் மகநக்ஷத்திரத்தில் தக்கன் தன் மனைவி வேதவல்லியுடன் ஸ்நானஞ்செய்து திரும்புகையில், இறைவியாரது வலம்புரிச்சங்கவடிவைக்கண்டு கைகளிற்றாங்க, குழந்தை வடிவேற்றமையாற் களித்து மனைவிகையிலளித்து, உடன் கொண்டு ஊரையடைந்தனன். வேதவல்லி மாதேவியை வளர்த்து வந்தனள்.

அம்மையார் ஐந்து வயதடைந்து ''சிவபிரான் தன்னை மணஞ் செய்யும்படி தவஞ்செய்வேன்" எனத் தந்தைபாற்கூற, தக்கன் தன் மகளாகிய தாக்ஷாயணி சாற்றியதற்குச் சாலவுங்களித்து, அந்நகர்ப்புறத்தே ஓர் கன்னிமாடஞ் செய்வித்துச் சில கன்னியரோடும் அதில் விடுப்ப, பரை அரனை நோக்கிப் பன்னீராண்டடையு மெல்லையுந் தவத்திருந்தனள். அவ்வாறிருக்கையில், சிவபெருமான் தக்கமாபுரியில், தாமாயணியின் தவச்செயல்காண விரும்பி, விருத்த வேதியராய் எழுந்தருள, எம்மன்னை யார் கண்டு, இவர் பெரியரென்றுட்கொண்டு, எதிர்சென்று பாதம் பணிந்து நிற்க, மாதேவர் "மாதே! உன்பாலொரு வேட்கையால் வந்தேம்; கொடுப்பதாகிற் கூறுதும்'' என, அம்பிகை ''அஃதிசையுமாகிற் றருதும்; அறைக'' என, ஐயர் ''உன்னை வதுவை செய்ய உள்ளங்கொண்டு வந்தோம்; இசைக'' என, இறைவி 'இருகரங்களாலுஞ் செவித்தொளையைப் பொத்தி புராரியை மணக்கத் தவம்புரிவேனுக்கு இவ்வாறு புகன்றனை; போ! போ!'' என்று அங்கிருந்து விலகிச் செல்ல, பரமர் அருகிருந்த பாங்கியரறியாது தமது நிஜவடிவைப் பார்ப்பதிக்குக் காட்ட, அம்மை அளவில்லா மகிழ்ச்சி கொண்டு ஐயனைப்புகழ, அதுகண்ட சேடியர் சிலர் "இவன் மாயன் வல்லோன்" என்று மனத்துட்கொண்டு விரைந்து சென்று தக்கனிடஞ் சொல்லினர். அவன் தனதறிவால் அரனென்றறிந்து அக்கன்னிமாட மடைந்து கடவுணாயகரது கழல்பணிந்து "தேவரீர் என்நகரிற் கெய்தவேண்டும்" என்று தாக்ஷாயணியுடன் சங்கரரைத் தனது தக்கமாபுரிக்குக் கொடுபோந்து, முதற்பெருங்கடவுளை ஓர் முழுமணித் தவிசிலிருத்தினன். வேதவல்லி தன்மகளைப் புல்லி, நன்னீராட்டி, பொன்னணிபூட்டி மலர்சூட்டி, எம்பிரானருகில் விட, இறைவியார். ஈசனிடத்திலிருந்தனர்.

சமஸ்ததேவர்களும் அது சமயத்தில் அங்கடைந்து நின்றனர். தக்கன் தாக்ஷாயணியின் திருக்கரத்தைச் சங்கரர் திருக்கையிலளித்து வேதவல்லி கையிற்றாங்கிய கரக நீரைப் புரோஷிக்க "எனதன்னையும், தவப்புதல்வியுமாகிய தாக்ஷாயணியைத் தேவரீருக்குக் கொடுத்தேன்'' எனக் கூறினன். சிவபெருமான் சகலதேவருடன் உடனே மறைந்துவிட்டனர். தேவியார் மனம் வருந்திப் பண்டு போல், தவச்சாலையிலிருந்து பின்னொருபகலிற் பெருமான் காட்சி யளித்து இடபாரூடராய் அழைத்துக்கொண்டுபோக, வெள்ளிமலை யடைந்து விமலருடன் வீற்றிருந்தனர்.

சிவபிரான் திருமணஞ்செய்த தேவியாரை நீக்கி மறைந்ததற்காகவும், தன்னை மதியாமைக்காகவும், தக்கன் மிக்க கோபமுற்று அதுமுதல் சிவபிரானை மதியாம லிறுமாந்திருந்தனன். [இச்சரித்திரத்தின் மற்ற விஷயங்களை முன்சென்ற தக்ஷயஜ்ஞஹதமூர்த்தத்திற் கண்டுகொள்க.]

கௌரியாகிய உமாதேவியாருடன் லீலாமாத்திரையாகச் சிவபிரான் விளையாடிய மூர்த்தமே கௌரிலீலாசமந்விதமூர்த்த மெனப்படும்.

கௌரிலீலாசமந்விதமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்                     
 

Related Content

Significance of Kedara (Gauri) Vrata - Deepavali

கௌரீவரப்ரத மூர்த்தி

ப்ரார்தநா மூர்த்தி