திருக்கயிலாயகிரிக் கருகிலுள்ள ஒரு சிங்காரவனத்தில் சிவபிரான் உலாவு கையில் உமாதேவியார் ஒன்றமுரையாது ஒரு விளையாடல் கருதிப் பின்வந்து தமது திருக்கரங்க ளிரண்டினாலும் பெருமானது திருவிழிகளை மூடினர். அதனால் அளவில்லாத அண்டகோடிகளிலுள்ள ஆன்மாக்களெல்லாம் அல்லலுற் றழுங்கும்படி அந்தகாரம் நிறைந்தது. தினகரன் வெயிலுந் திங்களின் நிலவுந் தீயின் சுடரும் தேவர் ஒளியும் மற்றெங்குமுள்ள பிரகாசமுமிறந்து உலகமுழுவதும் பேரிருண்மய மாயிற்று.
சிவபிரான் திருவிழி யொளியால் எல்லாச் சோதியும் இயங்கும் தன்மையால், கங்களானது கண்களைக் கவுரி கையால் மூடிய கணமொன்றில் உயிர்கட்கு ஊழி பல கழிதல் கருதி, கருணைமூர்த்தி மன்னுயிர்த் தொகைகட் கின்னருள்புரியத் தன்னுளமதனிலுன்னினனாகி, நெற்றியினாப்பண் நீள்விழி தோன்றுவித்து, அன்னது கொண்டுலகின் இன்னலை விலக்கி நீங்காநிலையாய் நிறைந்த பேரிருளைத் தீர்த்து, திங்கள் – செஞ்சுடர் – தீ - முதலாய சுடர்கட்கொளிசெய்தனர். எண்ணிறந்த ஆன்மாக்கள் தத்தம் உண்ணிறைந்த பெருங்களிப்பால் உமைபாகனை வழுத்தின. இத்திறச்செய்கையை இறைவியறிந்து சித்தமதனில் மெத்தப்பிரமித்து ஈசன் இணை.
விழிமூடிய இருகரத்தையும் இமைப்பொழுதிலெடுத்தனள். அவ்வாறெடுக்கையில் அம்மையாருக்கேற்ற அச்சத்தால் விரல்கள் பத்திலும் வியர்வு தோன்ற, விமலை கண்டு கைவிதிர்க்க, பத்துவிரலிலிருந்து பிறந்தவை பத்துக்கங்கைகளாகிப் பெருகிச் சத்தசமுத்திரக்கட்கும் வழிகொண்டன: நூறு ஆயிரங் கோடி முதலிய கணக்கில்லாத முகமுற்று மூதுலக முழுவதும் மூடிப் பரவக்கண்டு மோசம் வந்ததென்று இந்திரன் பிரமன் விண்டு மூவரும் திருக்கயிலாய கிரியில் திருநந்திதேவர் விடைபெற்றுத் திருச்சந்நிதானத்தி னுட் சென்று திரியம்பகனைச் சேவித்து "தேவதேவா! ஏதோவொரு வெள்ளம் எங்கும் பெருகி எல்லையில்லா திரைந்து யாவையு மழிய
அண்ட முழுவதுங் கவர்ந்தது. அதனை யடக்கி அடியேங்களையும் அகிலத்தையும் அளிக்க வேண்டும்" என்றறைய, பன்னகாபரணன் பார்வதி விரலிற் பத்துக் கங்கைகள் உற்பவித்ததை யுணர்த்தி உலகைச்சூழ்ந்த அவ்வெள்ளத்தை யுன்னியழைத்துத் தமது * சடைக் கற்றையிலோர் மயிர் முனையில் தரித்தனர்.
* இஃதிவ்வாரிருக்கையில், வைணவரி லொருசாரார் "திருமால் திரிவிக்கிர மாவதாரங் கொண்டு, மாவலிபால் மூவடி மண் ஏற்று ஆகாயத்திற் றன தடியை நீட்டிய பொழுது, பிரமன் கங்கா சலத்தால் அபிடேகித்தனன்' எனவும், மற்றொருசாரார் “வாமனாவதாரங்கொண்ட விஷ்ணுமூர்த்தியின் அங்குஷ்டத் தினின்றுங் கங்கை அவதரித்தது” எனவுங் கூறி, "அத்தகைய கங்கையைச் சிவபிரான ணிந்தனர்” எனவும், கர்ணபரம்பரையில் வழங்கி வருகின்றனர். அவையொவ்வா: எவ்வாறெனில்,
ததீசி - கண்ணுவர் - பிருகு முதவிய முநிசிரேஷ்டர் சாபத்தாற் பத்துப் பிறவியடைந்த பதுமநாபன் (மச்சம் – கூர்மம் - வராகம் - நரசிம்ஹம் - வாமனமாகிய) ஐந்து அவதாரங்களில் கண் - ஓடு - கொம்பு – தோல் - முதுகந்தண்டு இவற்றைப் பறிகொடுத்து) , ஐயனால் தண்டிக்கப்பெற்றும், மற்றைந் தவதாரங்களில் மஹாதேவனை யருச்சித்து வரங்கள் பெற்றும், தான் பெற்ற சாபப்படி, தசாவதாரங்க ளுஞ் செய்தொழிந்தனர் எனச் சிவபுராணங்கள் விளங்கக்கூறும். [இச்சரிதங்களை முறையே மச்சாரி – வராஹாரி – கூர்மாரி - ஹிம்ஹக்நம் - கங்காளமூர்த்தங்களிற் கண்டு கொள்க. ஈண்டு : விரிவு கருதி, விடுத்தாம்.] இது நிற்க.
ஈண்டுக் குறளுரு வேற்று, மாவலிச்சக்ரவர்த்திபால் யாசித்து மூவடி மண் பெற்று, வையகமும் வானகமும் மாயோன் அளந்த பொழுது, அவ்வாமனனது அடி அங்குஷ்டம் மேலண்டகடாக முகட்டிற்பட்டு, அண்டகடாகம் பினத்து, ஆங்குள்ள ஆகாயகங்கை அவனிமே லொழுகியதென்றும், அது கங்காத்வாரத்தின் வழியே, மாளவதேச மூலமாய்ச் சென்று மேற்கடலிற் சங்கமமாயிற்று என்றும், சிவரஹஸ்யம் துதீயாம்சத்தில் ஸ்ரீந்தியெம்பெருமான் ஹிமவானுக்குப் பூலோக விசிஷ்டத்தைக் காட்டுகிற கட்டத்திற் கூறப்பட்டுளது.
அந்யாவிக்ரமதோவிஷ்ணோஃபாததோநிர்கதாநகா
கங்காத்வாராத்ப்ரதீச்யாப்திம்ஸங்கதாமாளவாந்திமே.
அவ்வாறன்றி, அவ்வைணவர் கூறும் விஷ்ணு பாதோதக கங்கையைச் சிவபிரான் அணிந்ததுமில்லை. கமலைகேள்வன் காலினின்றுங் கங்கை ஜனித்தது மில்லை. அங்குக் கங்கோற்பவமாகக் காரணமுமில்லை யென்பவை நன்கு விளங்குகின்றன. அல்லது அவர்கள் அநுமானிக்கும் வகையே அத்திரிவிக்கிரமன் தாளிற் கங்கை ஜனித்திருப்பினும், அது அத்திருமாலின் சிரமேலேயே விழுந்து அவருடலின் வழியேயிழிந்து தரையையடைந்து ஊர்கடக்க வோடியிருக்க வேண்டு மேயன்றி, சிவபெருமான் தம்மால் கர்வ பங்க நிமித்தமாய் முதுகென்பு பறிக்கப்பட்ட வாமனனது பாதோதகத்தைச் சிரமேற் கொண்டாரென்பது வேதாகம விருத்தமாகவே விளங்கும் வாமனாவதாரத்தின் சரிதமும், அதனைச் சங்கரிக்க வந்த ஸ்ரீ கங்காளமூர்த்தியின் கண்யமும் பின்னர் வருமிடத்திற் கண்டுணர்க.
அதுகண்ட மூவரும் அரனை வணங்கி "அருள் வெள்ளமே! அவனிமுழுவது மழிக்கும்படி வந்த அவ்வெள்ளம் அன்னையார் திருவிரலினின்றும் ஜனித்தமை யானும், தேவரீர் செஞ்சடைமீதிற் சேர்த்தியதானும் புனிதமாகப் பொருந்துதலானும் எங்கள் நகரத்திலிருத்த அதிற் சிறிது அருளவேண்டும்'' என்று பிரார்த்திக்க, இறைவர் சடையிலிருந்த ஒரு கங்கையிற் சிறிது சிறிது வாங்கி மூவர்கையிலும் நல்கி உடன்
செல்லப் பணித்தனர். எம்பெருமானது விடைபெற்று இந்திரன் அமராவதி நகருக்கும், பிரமன் மனோவதி பட்டணத்திற்கும், விஷ்ணு வைகுந்த பதவிக்குங் கங்கையைக் கொண்டு சேர்ந்தனர்.
தேவியாரது திருவிரல் வியர்வினாலுண்டாகிய கங்கை உலகத்தை யழிக்கும் படி இரைந்து வருகையில், அதன்வீறு குன்ற விமலர் தமது வேணியிலணிந்த காரணத்தினால் ஐயனுக்குக் கங்காதர மூர்த்தி யென்பதோர் அபிதானமெய்தியது.
''மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தா ல்வன்றலையிற் பாயுமது வென்னேடி
சலமுகத்தா லவன்றலையிற் பாய்ந்திலளேற் றரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ.''
கங்காதரமூர்த்தயே நம: