logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-gajanthika-murthi

கஜாந்திக மூர்த்தி

கஜாந்திக மூர்த்தி
கஜாந்திக மூர்த்தி

சொல்லுதற்கரிய வலியமைந்த சூரபன்மனது தொந்தரவைச் சகியாத இந்திரன் தன் மனைவியுடன் மறைந்து சீகாழிப்பதியிற் சிவார்ச்சனை செய்து காலங்கழித்திருந்தனன். அதுகாலத்தில், அமரர் சிலர் ஆகண்டலனைக்கண்டு "அரசே! அசுரர்புரி துயரினை ஆற்றகில்லோம்" எனக்கூற, வச்சிராயுதன் ''வானவர்களே! மகாதேவனைவழுத்தி அத்துயர்தீர வெள்ளி மலையடைவோம்'' என்று இந்திராணியை அரிகரபுத்திரர் காவலில் விடுத்து, தேவர் குழுவுடன் திருக்கயிலை யடைந்து திருச்சந்நிதானத்தினுட்செல்ல. திருநந்திதேவரை உத்தரமுதவும்படியிரந் தனர். அதுசமயம் ஸநகனாதியர்க்குச் சங்கரர் ஞானோபதேசஞ் செய்து கொண்டிருத் தலின், நந்தியெம்பெருமான் நாகாபரணர் கட்டளைப்படி தடுக்க, அத்திருவாயிலி லேயே அநேககாலம் அமர்ந்திருந்தனர்.

அக்காலத்திற் கொடுங்கோல் செய்துவந்த சூரபன்மன் தங்கையும், வாலிபரை வலிதிற் புணர்பவளுமாகிய அசமுகியென்பாள் துன்முகியுடன் சீகாழித்தலத்தைச் சேர்ந்து, ஆங்குப் பொற்கொடி போலவிளங்கும் புலோமசையைக்கண்டு தன் முன்னோனைச்சேர்ந்து வாழும்படியழைக்க, சசிதடுக்க, வன்மையுடன் கையாற்பற்றி
அவளலறும்படி இழுத்துக் கொண்டு சென்றாள். ஐயனாரது ஏவலாளராகிய வீரமாகாளார் விரைந்து சென்று “செல்லற்க'' என்று தடுக்க, அசமுகி ஓர் சூலத்தைச் சுழற்றிவிட்டனள். அதனை வீரமாகாளர் வாளால் வெட்டி மாய்த்தனர். அசமுகி துண்ணென்று துன்முகி கையிலிருந்த சூலத்தை வாங்கிக்கொண்டு, அவள் கையில் அயிராணியையளித்து வீரமாகாளர்மேல் அச்சூலத்தைவிட, அவர் அதையுமழித்தனர் அரக்கி மலையொன்றைப் பலங் கொண் டெறிந்தனள். அவர் அதனையும் வாள் கொண்டு மாய்த்தனர். மேஷமுகமுள்ளவள் மேலொன்றுஞ் செய்யமாட்டாதவளாய், துன்முகி கையிலிருந்த இந்திராணியைத் துணுக்குறத் தூக்கிக்கொண்டு விண்வழி, வேகமாய்ச்செல்ல, வீரமாகாளர் வெகுண்டு அவள் அளகத்தைப் பிடித்துக்கொண்டு உடைவாளையுருவி ஒருகையை வெட்டி இந்திராணியை விடுவித்து, துர்க்குணங் களமைந்த துன்முகியை நோக்கி “நீயுந் தொட்டனையன்றோ?'' என்று, அவளை யுமோர் அத்தமரிந்தனர். வருந்தியழுது புரண்டு சோகமாகி அவளையுமோர் அத்தமரிந்தனர். வருந்தியழுது புரண்டு சோகமாகி யெழுந்த அசமுகி அகம் நாணித் துன்முகிபுடன் மகேந்திரபுரிக்குச் சென்று தன் தமயனோடு நிகழ்ந்தனகூறித் துக்கித்தனள். சூரன் உலக நடுங்கச் சிரித்து ஹுங்காரஞ்செய்து கோபித்தான். அது
கண்ட அவன் ஜேஷ்டகுமாரன் பாநுகோபன் "என்னை விடுத்தால், இந்திரன் இந்திராணி இமையவர் யாவரையும் இமைப்பிற் சிறைசெய்து வருவேன்'' எனக் கேட்டு நன்றென இயைந்து ஏக விடுத்தனன். அவன் தன் வீடு சென்றான். சூரன் பிரமனைக்கொண்டு அவ்விருவரத்தத்தையும் பண்டுபோற் படைப்பித்து, வாயு - திசைக்காவலர் முதலிய தேவரையும், நிலமன்னரையுந் தண்டித்துப் பிரமன் வேண்டுகோளின்படி விடுத்தனன்.

பாநுகோபன் பூல்வகைப்படையும் புடைசூழ இரதாரூடராய், துன்முகி வழிகாட்டப் புகலிக்கரிற்புகுந்து இந்திராணியை யெங்குந்தேடிக்காணாது, அமரர் புரியாகிய அமராவதியை யடைந்தனன். அதனையறிந்த அந்தரர் சயந்தனுடன் சாற்ற, சயந்தன் ''தந்தை – தாய் - ஆசிரியன் என்னுமிவர்களில் யாரும் ஈண்டிலர்; இனி யென் செய்வது? விதியைவிலக்க முடியுமோ? வந்தது வருக" என்று ஐராவதத்தின் மேலேறி, ஆகாயவாசிகள் புடைசூழ, அசுரச் சேனைக் கெதிரில் அருஞ்சம ராற்றக் கருதி முன் சென்றனன். வானவருந்தானவரும் போர்புரிய ஆரம்பித்தனர். அவ்வாறு செய்த செருவில் தேவர்கள் தோற்றோட, அவுணர் அவர்களைத் தொடர்ந்து பற்றித் தோளிற்கயிற்றாற்கட்டி யிழுத்துக்கொண்டு போயினர். சயந்தன் சாலவும் வெகுண்டு தன்வில்லை வளைத்துப் பல்வகைப் பாணங்களைப் பூட்டித் தானவத்தலைவரைப் புறமுதுகு காட்டி யோடச்செய்து வெற்றிகொண்டனன். பாநுகோபன் அவனை யெதிர்த்துப் பல தேவாஸ்திரங்களைச் சிந்தினன். இந்திரகுமாரனும் எண்ணில்லாஅம்புகளை எதிர்விடுத்தனன். இவ்வாறு ஒருவர் விட்ட அஸ்திரத்தை மற்றொருவரழித்துக்கொண்டு, இருவரும் பெருஞ் சமர்புரிந்தனர். சயந்தன் பாநுகோபனது வில்லின் நாணியை யறுத்தனன்: பாநுகோபன் வேறோர் நாண்பூட்டி மனம்நாணி, சயந்தன் மார்பில் அஸ்திரமாரி வருஷத்தனன். சயந்தன் சகஸ்திராஸ்திரங்களால் அவனது தேரையுங் குதிரைகளையும் நொறுக்கினன். தீயோன் வேறோர் தேரேறிக்கணக்கில்லாத கணைகளை ஆகண்டல சுதனது ஆகத்திற் பிரயோகித்து அவனை யானை மேலேயே மூர்ச்சையாகி விழச்செய்தனன்.

சயந்தன் அவசமான துகண்ட அவனூர் தியாக நின்ற ஐராவதம் பகைஞனது தேரிற் பலமுடன் பாய்ந்து, அதனுறுப்புகளைச் சிதைத்து, கோறல் புரியுங் கோடுகள் நான்காலும் அவன் மார்பில் நன்றாய்ப்புடைக்க, அதன் கொம்புகணான்குஞ் சடசடவென்னும் ஒலியுடன் முரிந்தன. வெய்யோன் வெள்ளை யானையின் கவுளியில் வெகுளியோட்டிக்க அது வருந்தி அலறிவீழ்ந்தது. அவுணனாக்கினை யால், தைத்தியர் அநேகர் சயந்தனைச்சூழ்ந்து தோளிற் றாம்பு பூட்டிப்பிணித்து, சிறைப்பட்ட தேவருடன் சேர்த்தனர். அசுரர் அமரரது தோளிற்பூட்டிய கயிற்றைக் கைப்பற்றிக்கொண்டு ஈர்த்துச்சென்று, அப்பொன்னுலகத்தைத் தீயூட்டினர். பாவியாகிய பாநுகோபன் மனமகிழ்ச்சியுடன் நிலவுலகடைந்து மகேந்திரபுரியில் தந்தை முன் சென்று பணிந்து "எந்தையே! இந்திராணியையும் இந்திரனையுங் காணேன். தேவர்களையும், தேவமாதரையும், அவர்கள் இளவரசும் இந்திரன் மைந்தனுமான சயந்தனையுஞ் சிறைசெய்து கொண்டு வந்தேன் . அமரருலகை இனி அமரெய்தாவண்ணம் அக்கினிக்கூட்டினேன்' என, சூரபன்மன் மனங்களித்து, மகனைத் தழுவிக்கொண்டு தேவர்களை விலங்குபூட்டிச் சிறையிலிட்டனன். தேவமாதரை அசுரமாதருக்குப் பணிப்பெண்களாகப்பணித்தனன். சிறையிலகப்பட்ட தேவர்களும், அடிமை செய்யும் அரம்பாஸ்திரீகளும், எப்பொழுது இத்துயர்தீருமெ ன்று எண்ணிச் சிவபிரானது. திருவருளைச் சிந்தித்துக்கொண்டிருந்தனர். இதுநிற்க:

பாநுகோபனோடு போர் செய்து கொம்பொடிந்த நாற்கோட்டு ஐராவதம், தனது துயராற்றாமல் வருந்தி, சிவத்தியானத்துடன் விண்ணுலகு நீங்கி மண்ணுலகடைந்து, சுவேதாரண்யம் என்னும் திருவெண்காடு சென்று, ஆங்கு முன்னொருகாலத்தில் இந்திரனாற் பூசிக்கப்பெற்ற பிரமவித்தியா நாயகியாரை இடப்புறமமர்த்திய ஸ்ரீ சுவேதாரண்யேசுரரது துதித்தற்கரிய திருவடியை மனத்திற்பதித்து, ஸூர்யதீர்த்தம், ஸோமதீர்த்தம், அக்நிதீர்த்தம் என்னும் முத்தீர்த்தத்திலும் முறையே காலை, உச்சி, மாலைகளான முப்பொழுதிலுமூழ்கி, திருப்பள்ளித்தாமங்கொய்து, சங்கமாகிய குடங்களால் திருமஞ்சனமாட்டி அருச்சித்து, ஒரேமனதாய் உமாபதியை உள்ளத்திற் கொண்டுறைந்தது. அரவாபரணர் அத்தியின் பத்திக்குச் சித்தங்களித்து, திருவருள் செய்யச்சேவைதந்து ஐராவதத்தின் சிரமேற்றிருக்கரஞ்சூட்டி அதை நோக்கி "உனக் கென்னவரம் வேண்டும்?'' என, "தேவநாயகா! தேவரீரை இவ்வகையே அருச்சித்துக் கொண்டிருக்க வேண்டுகிறேன்'' என விண்ணப்பிக்க, விடையூர்தி “நீ க்ஷீராப்தி கடைகையில், தோன்றியபொழுதே உன்னை இந்திரனுக்கு வாகனமாக விடுத்தனனா தலின், நீ அவ்வாறே அமரர் துயரொழிந்தபின் அமராவதியையடைந்து வாழ்க எம்மடியனாகிய இந்திரனை நீயே வாகனமாகித் தாங்குதல் எமக்குச் சம்மதம். நின்கொம்புகள் பண்டு போலாக" எனத் திருவாய்மலர்ந்தருளி அந்தர்த்தான மாயினர். ஐராவதம் ஆண்டவ ரநுக்கிரகித்தவண்ணம் கொம்புகள் வளரப்பெற்று, ஆண்டு அன்போடு சிவலிங்கார்ச்சனை செய்துகொண்டிருந்து, ஸ்ரீகுமாரக்கடவுள் சூரபன்மனாதியர் அசுரர் துயரகற்றி அமரரைச்சிறைவிடுத்த பின்னர் இந்திரனுக்கு வாகனமாய்ப் பண்டு போல் அமராவதியில் வாழ்ந்திருந்தது.

ஐராவதமாகிய யானையின் வேண்டுகோளுக்கிரங்கி அதனைச் சமீபித்து அநுக்கிரகஞ்செய்தமையால், கடவுணாயகரைக்கஜாந்திக மூர்த்தியெனக் கழறலாயி ற்று.

திருஞாநசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தேவாரம்.

''சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானு
மக்கரைமே லசைத்தானு மடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினை துரக்கு
முக்குளநன் குடையானு முக்கணுடை யிறையவனே.

கள்ளார்செங் கமலத்தான் கடற்கிடந்தா னெனவிவர்க
ளொள்ளாண்மை கொளற்கோடி யுயர்ந்தாழ்ந்துமுணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யு மேதகுவெண் காட்டானென் 
றுள்ளாடி யுருகாதா ருணர்வுடைமை யுணரோமே."

கந்தபுராணம்.

''மற்ற வன்றன் மணியணி மார்பிடைச்
செற்ற மால்கரி சென்று முற்றாக்கலும்
பொற்றை யின்கட் புழைத்திடுஞ் சூசியி
னிற்ற வாலத னீரிரு தந்தமும்.

வாலிய வொளிகெழு வனத்தி லேகியே
மூலம தாகிய முக்கண் மூர்த்தியை
மேலுள தாணுவின் மேவச் செய்துபின்
சீலமொ டருச்சனை செய்து வைகிற்றே.

அறிவுள மால்கரி யமலன் றந்திர
முறையது நாடியே முதிரு மன்பினான்
மறையுற வழிபடீஇ வைகு மெல்லையிற்
குறைபடு நாற்பெருங் கோடும் வந்ததே.”

கஜாந்திகமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்              
 

Related Content

Discourse - The Great Vratas - Significance

Skanda Puranam Lectures

கந்தபுராணம் - பாயிரம்

இலிங்கோற்பவ மூர்த்தி

முகலிங்க மூர்த்தி