logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-gaja-yuddha-murthi

கஜயுத்த மூர்த்தி

கஜயுத்த மூர்த்தி
கஜயுத்த மூர்த்தி

 காளமேகம் போன்ற கரிய சரீரத்தையுடைய கயாசுரனென்னும் யானை வடிவேற்ற . அசுரன் மேருபர்வதத்தின் மேல், பிரமதேவனை நோக்கி அருமையாகிய பெருந்தவம் அநேககாலஞ்செய்தனன் . கயாசுரன் செய்த கடுந்தவத்திற்களி கூர்ந்த கமலயோனி அவன் கண்கட்குப் பிரத்தியட்சமாகி "அசுரேச! நீயவாவியவரம் யாது? அறைக” என, அசுரன் அருந்தவ நீங்கி அடிமலர்பரவி "ஐயனே! இறப்பில்லாத் தீர்க்காயுவும் வல்லமையும் வெற்றியும் அடையும்படி அடியேனுக்கு அனுக்கிரகிக்க வேண்டும்'' என வேண்ட, பிரமன் சிறுநகை செய்து ''விரும்பியவாறே வரமீந்தேனாயினும், அந்திவண்ணனை யெதிர்ப்பாயாகில் அப்பொழுதே நீபெற்ற பேறழியும் " என்றருளி அந்தர்த்தானமாயினன்.

கயாசுரன் களிகொண்டு, சதுமுகன் தனக்குத் தந்தவரத்தைச் சிந்தனை செய்து, சிவன் பேரிற் செருச்செயச் செல்லாமல் மற்றைய வானவரை வஞ்சித்து வம்பிழுத்து வலிய போர்புரிந்து உலகத்துள்ளாரை ஒழிப்போமென் றுறுதி கொண்டு உடனே துண்ணெனச் சென்று உம்பருலகுற்று, மகபதியை யெதிர்த்து யுத்தஞ்செய்து
வருத்தினன். புலோமசைகணவன் போர்புரியவாற்றானாய்ப் புறமுதுகிட்டோட, அவன் வாகனமாகிய ஐராவதத்தின்வாலைப்பற்றிப் பன்முறை சுழற்றி யெறிந்து, காமதேனு கற்பக விருட்சம் சங்கநிதி பதுமநிதி முதலிய வளங்களையுடைய அமராவதி நகரையழித்து, அக்கினி யமன் நிருதி முதலிய அட்டதிக்குப்பாலகரைச் செயித்து, தனது குலத்தவர்களாயுள்ள தானவர்களையுஞ் சாடி, இராக்கதரை ஹிம்சித்து, மண்ணுலகெங்கும் வதிந்து மானவர்களை மாய்த்து விஷம் போல விளங்கக்கண்ட அருந்தவர் சிலர் அம்பிகாபதி யமர்ந்த அவிமுக்தமாகிய காசியை யடைந்தனர். கயாசுரன் கடுஞ் சினங்கொண்டு தொடர்ந்து பின்வர, சங்கரா சம்போவென்னுஞ் சிவத்தியானத்துடன், மகாதேவனே யாணென்று மணிகன்னிகை யாகிய அருகிருக்கும் ஆலயத்துளடைந்து அரன் முன்னின்று, “அருட்பெருங்கடலே! ஆபத்திற்புணையே! ஆநந்தவெள்ளமே! அடியேங்க ளடைக்கலம் யானை யுருவாக எய்தும் இராக்கத விறைவனால் இறவாவண்ணம் எங்களைக்காத்து இன்னருள் புரியவேண்டும்" என்றிரந்தனர். தான் துரத்திக் கொண்டு வந்த மாநுடர் மணிகன்னிகைச் சந்நிதியில் வருந்தி வாய்விண்டு வழுத்துவது கேட்டு, கயாசுரன் ஆலயத்திருவாயிலை யடைந்து அவர்களஞ்சும்படி இடிபோற்கர்ச்சித்துப் பயமுறுத்த, மாந்தர்கள் மணிகண்டரைத் தழுவிக்கொண்டனர். அரவாபரணர் "அஞ்சாதீர்கள்'' என்றபயங்கூறி, அண்டகடாக முட்டும் முடியுடன் ஆயிரங்கோடி யருணோதய மாயினாற்போல, அமரருமுநிவரு மஞ்சிக் கண்பொத்த உக்கிரப்பெரு வடிவுற்றுக் கயாசுரன் முன்வர, கயன் தன்பால் வந்தவர் தாணுவென்றுணர்ந்தும் தனக்குள்ள விறுமாப்பாற் சதுமுகன் வரந்தரு கையிற் சாற்றிய வசனத்தை மறந்து எதிருறத் தலைப்பட்டனன்.

சங்கரன் வடவாமுகாக்கினியும் அஞ்சத்தக்க தீப்பொறியை விழிவழிசிதறி, திருவடியா லுதைத்துத்தள்ள, கயாசுரன் கவிழ்ந்து பதைத்துப் பார்மேல் விழ, திருவடி மற்றொன்றாற் சிரத்தை மிதித்துத் தொடையிலூன்றித் திருநகங்களாற் பிளந்து நான்கு கால்களும் இருபக்கங்களிற் பொருந்தவும், உதிரஞ்சிந்தவும், ஒலமிட்டழவும், அசுரர்குலத் துதித்த யானை வடிவாகிய கயாசுரன் தோலை உமையம்மையு மஞ்சும்படி உரித்திழுக்க, ஈச்சுரனது இணையிலாத சோதியுருவைத் தரிசித்த சுரர் முதலானார் கண்ணொளிமழுங்கித் துன்புற்றனர். கண்ணுதல் கருணை செய்யும்படி களிற்றுரியை உடலின் மேல் உத்தரியமாகப் போர்த்தனர். அமரர் களித்து ஆனந்தக்கூத்தாடி மலர்மாரி வருஷித்தனர். சிவபெருமான் மணிகன்னிகை யடைந்தனர். கயாசுரனுக்கஞ்சிய பரிசனர் களித்துப் புறம்போந்தனர். காசிவாணர் முதலான காசினியோர் கடவுட்பூசை காலம் வழாதியற்றிக் களித்து வாழ்ந்தனர்.

கயாசுரனாகிய யானையைத் தேவமானவர் துயர் தீர்த்தற் பொருட்டுப் போர்புரிந்து சங்கரித்தமையால், கருணாநிதிக்குக் கஜயுத்தமூர்த்தி யென்பதோர் பெயர் வழங்குகின்றது.

கந்தபுராணம் - ததீசியுத்தரப்படலம்.

"மதித்து வேழமாந் தானவன் வருதலும் வடவை
யுதித்த வன்னியு மச்சுற வெரிவிழித் தொருதன்
கதித்த தாள்கொடு தள்ளவே கயாசுரன் கவிழ்ந்து
பதைத்து வீழ்தலு மிதித்தனன் சிரத்தையோர் பதத்தால்.

ஒருப தத்தினைக் கவானுறு திருக்கரத் துகிரால்
வெரிநி டைப்பிளந் தீரிரு தாள்புடை மேவக்
குருதி கக்கியே யோலிட வவுணர்தங் குலத்துக்
கரியு ரித்தனன் கண்டுநின் றம்மையுங் கலங்க.

ஐயன் மிக்க தன் கதிரினைக் குருதி நீரறாத
மையல் யானை வன் றோலைமேற் கொண்டனன் மறைத்தான்
செய்ய கோளொடு கரியகோ ளிருவருஞ் செறிந்து
வெய்ய பானுவி னடுவுறக் கவர்ந்துமே வியபோல்.''

கஜயுத்தமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்

Related Content

இலிங்கோற்பவ மூர்த்தி

முகலிங்க மூர்த்தி

ஸதாசிவமூர்த்தி

மஹாசதாசிவ மூர்த்தி

உமாமஹேச மூர்த்தி