logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-dakshinamurthi

தக்ஷிணாமூர்த்தி

தக்ஷிணாமூர்த்தி
க்ஷிணாமூர்த்தி

 சிவபெருமான் ஸ்ரீகயிலையங்கிரியிற் சகலதேவர்களும் நிறைந்து தங்கடங்கள் இஷ்டகாமியங்களை விரும்பி யாங்குப் பெறும்படி திருவோலக்கங் கொண் டெழுந்தருளியிருக்கையில், இறைவியார் எழுந்து ஈசனை யிணையடி பணிந்து "எம்பெருமானே! எனக்குற்ற தாக்ஷாயணியென்னும் பெயரும், தேவரீரைப்பணியாத அத்தக்ஷனாற் போஷித்துவந்த வுடலும் மாறும் வண்ணம் வரம் வழக்குக'' என விண்ணப்பிக்க, மஹாதேவர் மகிழ்ச்சியுற்று "மாதே! மலைமன்னன் நின்னை மகளாகப் பெறக்கருதி நெடுநாளாய் விடாத் தவம் புரிகின்றனன்; நீ அவன்பாலுற்று வளர்க்க யாம் வந்து மணஞ் செய்வோம் என்றருளிச் செய்தனர்.

அம்மையார் அரவாபரணரது அடித்தாமரையைப் பணிந்து கட்டளையைச் சிரமேலேற்று, விடைபெற்று இமயமலையை யடைந்து அவ்வாறே அருந்தவ மாற்றும் அசல மன்னன் அவாநிரம்ப ஓர்  தடாகத்தில், தாமரைத்தவிசின்மேற் குழந்தை வடிவுகொண் டிருந்தனர். பர்வதராசன் பார்த்து மகிழ்ச்சியுற்றுத் தவப்பலன் கை கூடியதென்றுட்கொண்டு, அக்குழந்தையை யெடுத்துக்கொண்டு, மனையை யடைந்து மனைவியாகிய மேனையினிடத்துக் கொடுத்து வரலாற்றைக்கூற, மேனை போஷித்து வந்தாள். அம்மையார் ஐந்து வயது முதல் தவச்செயலிலிருந்து சங்கரனை மணந்தனர். (வித்தாரம் கல்யாணசுந்தரத்திற் காண்க.) இது நிற்க:

எமதன்னையா ரிவ்வாறு தவத்திருக்கையில், பிரமபுத்திரர்களாகிய ஸநகன் -ஸநந்தனன் - ஸாதனன் - ஸநத்குமாரன் என்னும் முநிவர் நால்வரும் வேதவராய்ச்சி செய்து முடித்து, பலவகைத் தவங்களையாற்றி, மீண்டும் வெள்ளி மலையையணுகி ஆண்டு முதற்பெருங்காவலாகவுள்ள திருநந்திதேவரைப் பணிந்து விடைபெற்றுத் திருச்சன்னதியுட்சென்று, கண்களாரக்கண்ணு தலைத் தரிசித்துச் சாஷ்டாங்கமாகத் தண்டஞ் செய்து, கரமிரண்டையுஞ் சிரமிசைச்சேர்த்து, “அருட்கடலே! அநந்தவகையாகிய ஆரணப்பொருளை ஆராய்ச்சி செய்தும் அடியேம், அகங்கள் அலைந்துகொண்டிருக்கின்றன, அவையடங்கியாங்கள் கடைத்தேறும்படி அவ்வேதத்தின் உட்கிடையாக வுள்ள பொருளை உபதேசித் தருளவேண்டும்'' எனப் பிரார்த்தித்தனர். அங்கவர்க்கிசைந்த சங்கரர் “இங்கிருத்தீர்'' என்றியம்ப, அவர்கள் அண்ணலாரது பங்கயப்பதத்தின் கீழ்த் தங்கியிருந்தனர்.

அப்பொழுது அரவாபரணர் நந்திபகவானை விளித்து “எம்மைத்தரிசிக்க எத்தகைய தேவர் முதலானாரெய்தினும் சந்நிதானத்துள் விடவேண்டாம். மதனன் வரில் வரவிடுக " என வாய் மலர்ந்து வாயிலிற்செல்ல விடையளித்தனுப்பி, விடையூந்தி முநிவர் விருப்பின்படி சிவாகமங்களிற் கூறப்பட்ட திரிபதார்த்தங்களாகிய பதி - பசு - பாச லட்சணங்களை விளக்கி வெளியிட்டனர். ஸநகனாதியர் “சங்கரா! எங்கள் மனம் விரிந்திருப்பதால் அவை யொடுங்கும் அடைவாக ஞானோபதேசஞ் செய்யவேண்டும்'' என விண்ணப்பித்தனர். தரியலர்புறங்கள் எரிபடப்பொடித்த பரசிவன் குறுநகை கோட்டிக் கூறுவதொன்று மிலராய், அப்பொருள் இவ்வாறிருக்கும்'' என்று, சடாடவிதாங்கிய முநிவர்களுக்குச் சாற்றவேண்டி, திருக்கர மொன்றனைத் திருமார்பிற்சேர்த்து சிந்முத்திரைகாட்டி முநிவர்போல ஓர் க்ஷஷணப்பொழுது நிஷ்டைகூடிநின்றனர். அதனால் அவர்கள் நால்வரும் மனமொடுங்கி ஞானநிலை யுணர்ந்து, பேரின்பப்பெருக்கிலழுதி, தங்கள் செயலொன்று மில்லாதிருந்தனர். (அதுகாலையில் அமரர் மன்மதனையனுப்ப அவன் ஐயன்மேல் மலர்க்கணை தூய்ச் சாம்பராய் மாய்ந்தனன். வித்தாரம் காமதகனத்திற் காண்க.)

சிவபெருமான் யோகுங்கி ''முநிவர்காள்! நீங்கள் முன்னிய வகையே நிஷ்டை யநுஷ்டித்து நீடூழிவாழுதிர்'' என்று தமதிச்சையின்படி யேக விடுத்தனர். இறைவர் தக்ஷிண திசையை நோக்கி ஸநகனாதி நான்குமஹருஷிகளுக்கும் உபதேசித்த அவசரம் தக்ஷிணாமூர்த்தமெனச் சாற்றப்படும்.

கந்தபுராணம்.

“இருவரு முணரா வண்ண லேனவெள் ளெயிறி யாமை
சிரநிரை யநந்த கோடி திளைத்திடு முரத்திற் சீர்கொள்
கரதல மொன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி
யொருகணஞ் செயலொன் றின்றி யோகுசெய் வாரி னுற்றான்.
இனையதோர் தன்மை காட்டி யெம்பிரா னுணர்த்தக் கண்டு
சனகனே முதலா வுள்ளோர் தவலரு ஞான போதம்
பனுவலி னளவன் றென்னும் பான்மையைத் தெரிந்து முக்கட்
புனிதன தருளாற் றத்தம் புந்தியி னொடுக்கம் பெற்றார்.
தற்பர னினைய வாற்றாற் றாபத ருணருந் தன்மை
யற்புத ஞான போத மளித்திடுங் கணம தொன்றின்
முற்படு கமலப் புத்தேண் முதலிய வமரர்க் கெல்லாம்
பற்பல யுகங்கள் சென்ற பிறர்க்கினிப் பகர்வ தென்னோ.”

தக்ஷிணாமூர்த்தயே நம:

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்
 

Related Content

பண்டார சாத்திரம் அருள்திரு தட்சிணாமூர்த்தி தேசிகர் அருளிச்

Pandaara saaththiram arultiru tadsinamurtti tesikar arulis s

பண்டார சாத்திரம் அருள்திரு தட்சிணாமூர்த்தி தேசிகர் அருளிச்

Pandara sattiram arultiru tadsinaamurtti tesikar arulis seyt

Arunachala Parayanam - Sriramanamaharshi-Org