logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-daksha-yagya-hata-murthi

தக்ஷயஜ்ஞஹத மூர்த்தி

தக்ஷயஜ்ஞஹத மூர்த்தி
தக்ஷயஜ்ஞஹத மூர்த்தி

சகலலோகங்களையும் பெற்ற தாயாகிய சங்கரியார் ஓர் லீலாமாத்திரையாய் தக்கன் புதல்வியாகத் திருவவதாரஞ்செய்தனர். சிவபெருமான் தேவியாரை மணந்து மறைந்தருள, அன்னையார் பண்டுபோலத் தவச்செயலிலிருந்து இறைவரால் வெள்ளியங்கிரியுற்று வீற்றிருந்தனர். * அதனை அவ்வம்மையாரது தோழியரிற் சிலர் சொல்லக் கேட்ட தக்கன் மிக்க கோபமுற்று விடையூர்தியை மதியா திருந்தனன். [* வித்தாரம் கௌரீ லீலா சமந்விதத்திற் கண்டுகொள்க.] அமரர் அஃதறிந்து “நக்கனை மதியாத தக்கன் தனது தலையையிழத்தல் சரதம்; அவன் பணித்த வகையிலொழுகும் பண்ணவராகிய யாமும் அவனுடனழியவரும்" என்று ஒருங்குகூடித் தக்கமாபுரியைச் சார்ந்து, அவனுக்குத்தக்க புத்திமதிகளையறைய, அவன் "ஆனால் அதற்கென் செய்வது?'' என, தேவர்கள் “திருக்கயிலையையடைந்து சிவபிரானையுந் தேவியாரையுஞ் சேவித்துவருக” என, அவனதற்கிணங்கி, அவ்வந்தரத்தவரை அங்கேயே நிறுத்திவிட்டு வெள்ளிமலையையடைந்து முன்வாயிலிற் புகக்கண்ட கணநாதர் சிலர் "கண்ணுதலை மதியாத கடையோய்! உட்செல்லாதொழிக'' என்று கடிந்து தடுத்தனர். தக்ஷன் அதனால் வருந்தித் தக்ஷணம் திரும்பித் தனது நகரமடைந்து தன்னைச் சங்கரன் பாலனுப்பிய உம்பருக்கு ஆங்குற்ற விசேஷத்தையுரைத்து, ''இமையவரே! இற்றை முதல் ஈசனை மதியாதிருக்க வேண்டும்'' என, எல்லோருமியைய, அந்தரத்தவரைத் தமது விருப்பின்படியேக விடையளித்து விடுத்தனன்.

பிரமன் ஓர் வேள்விசெய்ய வுத்தேசித்துத் தனதேவல்செய்யுந்தனயரை நோக்கி, திருமால் முதலிய தேவர்களை அழைத்துக் கொண்டு வரும்படி யனுப்பி, தக்கன் முன் சாற்றியது சிந்தித்துத்  தானிறக்கினு மிறக்கவென்று திடங்கொண்டு, திருக்கயிலையங்கிரியையடைந்து, திருநந்திதேவர் விடைபெற்றுத் திருச்சந்நிதானத் தினுட்சென்று சிவபெருமானைத் தரிசித்துப்பணிந்து இருகரமுங் குவித்து “எம்பெருமானே! யான் செய்யும் யாகத்திற்குத் தேவரீர் எழுந்தருள வேண்டும்'' என்று விண்ணப்பிக்க, நம்பர் “நம் முருவான நந்தியை விடுப்போம்" என்றருள், பதுமன் பணிந்து சென்று, தக்கனுக்குஞ்சொல்லித் தனது மனோவதி நகரமடைந்து, யாகஞ் செய்யத்தொடங்கினன். திருமால் முதலிய தேவர்கள் தக்கனுடன் யாகசாலை சார்ந்தனர். திரு நந்திதேவர் சிவாஜ்ஞையின்படி நூறு கோடி பூதர்கள் புடைசூழ யாகசாலையையெய்தினர். பிரமன் பார்த்தெழுந்து நமஸ்கரித்து ஆதனத்தமர்த்தினன். தக்கன் அதுகண்டு யாவரழைத்தனரென்று கருதி அம்ஸ வாகனனை நோக்கி "நீயாகஞ் செய்வதைச் சிவனுக்குச் செப்பினை; அவனா லனுப்பிய நந்தியைப் பணிந்து நம்முன்னிருத்தனை; பிதாவாதலின் உன்னை வெட்டாது விடுத்தேன். பித்தனாகிய சிவன் அவிப்பாகங் கொள்ளுதற்குரியனோ? இதுகாறும் அறியார்கள் செய்து வந்த வழக்கத்தைவிலக்குக. விஷ்ணுவே உயர்ந்தவர். அவருக்கு அவியை முன்னேயளித்துப் பிறகு ஏனையோருக் குதவுக'' எனக்கூறினன். திருநந்திதேவர் சீற்றங்கொண்டு தக்கன் முகத்தைப்பார்த்து "மூடா! பரமபதியை நிந்தித்தாய்; ஈசனையன்றி யாகஞ்செய்வோர் தலையறுக" என்றும், எம்மிறைவனையிகழ்ந்த உனது தலையொழிக; சிவநிந்தை செய்யும் நின்னோடு சேர்ந்த தேவர்கள் தீயோனாகிய சூரபன்மனால் துன்புறுக'' என்றும், சாபமிட்டு அவ்விடம் விட்டுப் பூதகணங்களுடன், வெள்ளிமலை சென்று மாதுபாகனாகிய ஆதிநாதனிடம் விண்ணப்பித்து வீற்றிருந்தனர். நந்தியெம்பெருமான் நவின்ற சாபத்திற் கஞ்சி யாவரும் யாகஞ்செய்யாதொழிந்தனர்.

அவ்வாறிருக்கையில், தக்கன் ஒர்யாகஞ்செய்ய நினைத்து விச்சுவகன்மனால், கங்கைக்கரையில் ஆயிரங்கோடியோசனை யகலமும் மிகவுந்தமுமான ஓர் யாகசாலை திருமிக்கச்செய்து, சில தூதர்களை நோக்கி “சிவபிரானை நீங்கிய தேவர்களையெல்லாம் அழைத்து வாருங்கள்'' என அனுப்ப அவர்கள்கூற, அமரர்கள் யாவரும் ஆண்டடைந்தனர். திருமால் – திசைமுகன் - தேவேந்திரன் முதலிய யாவரும் அங்கிருக்கையில், சாரங்கனைச் செயித்துள்ள ததீசி முநிவர் வந்தனர். அவரது வருகையைக் கண்ட தக்கன் தனக்கஞ்சி வந்தனரெனக்கருதி, “மாதவரே! வருக'' என்று ஓர் ஆசனமளித்தமர்த்தினன். முநிவர் "என்னை யழைத்த தென்னகாரணம்?” என தாக்ஷாயணியைச் சங்கரன் வதுவை செய்தபின் நிகழ்ந்தன கூறி, "என்னை இகழ்ந்த ஈசனுக்கு அளிக்கும் அவிப்பாகத்தைமாற்ற ஓர்யாகம் ஆற்றவேண்டுமாதலின், உம்மையழைத்தோம்'' என உரைப்ப, ததீசிமுநிவர் "சங்கரனே ஜகதீசன், அவ்வெம்பெருமானை விரோதித்து யாகஞ்செய்யேல்'' என தக்கன் பலவகையாக வினாவி ஆக்ஷேபிக்க * முநிவர் அவ்வினாக்கட்கேற்ப விடைகூறினர். [* கந்தபுராணம் ததீசியுத்தரப்படலத்திற் காண்க.] அரிவைக்கு அர்த்தசரீரமளித்த அரனே அனைவர்க்குமுயர்ந்த கடவு ளாக இருக்கினுமிருக்க: யான் அவனுக்கு அவிப்பாகங்கொடேன். ஒன்று முறையாமற்போக.'' என, ததீசி முதிவர் கடுங்கோபங் கொண்டு "இறைவனையின்றி யியற்றும் யாகம் இமைப்பி லொழியசீகடவது. உன்தலை யறக்கடவது. உன்னோடிருக்கும் உம்பர் உயிரொழியக்கடவர்'' என்று சபித்து, "முநிவர்களே! உங்கள் குலத்தினியற் கைவிலகி அரனையும் அடியாரையும் விபூதி உருத்திராக்கத்தையும் ஒழிந்து மோட்சமடையாமற் பிறந்து பிறந்திறக்கக்கடவீர்'' என்று சாபமிட்டு, பலமுநிவர் புடைசூழ்ந்துவரத் தமதிருக்கை சார்ந்து சிவத்தியானத் திருந்தனர். அதன்பிறகு தக்கன் அந்தணருக்கன்னமிட்டு ஆடை பொன் முதலியன அபரிமிதமாக வளித்து யாகஞ்செய்ய ஆரம்பித்தனன்.

அதனையறிந்த நாரதமுநிவர் திருக்கயிலைமலையை யடைந்து சிவபிரா னைப் பணிந்து நிற்க, பரமன் “உலகத்திலென்ன விசேடம்! பகர்க” என, முநிவர் ''சங்கரா! தக்கன் பலதேவருடன் யாகஞ்செய்கின்றனன்'' என விண்ணப்பித்தனர். உமாதேவியார் உடனே எழுந்து உம்பர்நாதனைப்பணிந்து “எம்பெருமானே! எந்தையி யற்றும் வேள்வியைக் காண வேட்கையுற்றேன்” என, விமலர் விடையளித்தனுப்ப, ஓர் விமானமேறிச் சிலசேடியருடன் பிதாவின்பாற் செல்ல, தக்கன்கண்டு சற்றும் உபசாரஞ் செய்யாமலிகழ்ந்து “இப்பொழுதே போக" என்று ஈசனையும் நீதித்தனன். கௌரி கடுங்கோபங்கொண்டு கயிலையங்கிரியை யடைந்து கருணா மூர்த்தியைப் பணிந்து ''தக்கன் யாகத்தை யழித்தருளவேண்டும்'' என்று விளம்பினர். முன்னோன் அதனை முடிக்க முன்னியவளவில், நிமலரது நெற்றிவிழியினின்றும் ஆயிரந் திருமுகங்களும், இரண்டாயிரந்திருக்கரங்களுங்கொண்டு வீரபத்ரர் திருவவதாரஞ் செய்தனர். அப்பொழுது அம்வையாரது அளவில்லாச்சினத்தால் ஓராயிரஞ்சிரமும், ஈராயிரங் கரமுங்கொண்டு உக்கிரமாகாளி யுதித்து வீரபத்ரர் பக்கலிற் றேவியாய் வீற்றிருந்தனள்.

வீரபத்ரர் விரைவுடன் சிவபிரானையுந் தேவியையும் பணிந்து “அடியேனுக்கு யாது கட்டளை?” என வினவ, நம்பர் "நம்மை மதியாத தக்கன் யாகசாலைக்குப்போய் அவிப்பாகங்கேள், கொடுத்தால் பெற்றுவா; தடுத்தால் அவன் தலையையறுத்து ஆண்டுள்ளோர் ஆவியையகற்றி அவ்யாகத்தை யழித்துவிடு; யாமும் வருவோம்'' என ஆஜ்ஞாபிக்க, வீரபத்ரர் விடைபெற்று, தமது திருமேனியில் தோன்றிய பூதப்படையும், காளியும் உடன்வர, உலகமதிரவும், சுவாசத்தாற்கடல்கள் நிலை கலங்கவும், பேரிரைச்சலால் திக்குகள் செவிடுபடவும். சுமையாற்றாது ஆதிசேடன் முடிகுலுங்கவும், நடையாலெழுந்ததூளி ஸப்தசமுத்திரங்களையுந் தூர்த்துச் சூரிய வொளியை மறைக்கவும், தக்கன் யாகசாலையை யடைந்து பூதச்சேனையை அதன்வாயிலிலும் மதிற்புறத்திலுங் காவலாக நிறுவி, காளியுடன் யாகசாலையுட் பிரவேசித்து, யாகஞ்செய்வது கண்டு, நெருப்புப் பொறிபறக்க விழித்து, இடிபோற் கர்சித்து, வெற்றிபொருந்திய ஊதுகொம்பினை நாதஞ் செய்தனர் அவ்வோசையால் ஆண்டுள்ளோர் செவிடுற்று அவரது சொரூபக்காட்சியாற் கண்கலக்கங் கொண்டு மூர்ச்சித்து விழுந்தனர்.

தக்கன் வீரபத்ரக்கடவுளைப்பார்த்து ''இங்கு வந்த காரணமென்ன?” என. வீரபத்ரர் ''சங்கரனனுப்ப இங்ஙனம்வந்தனன்; அன்னோன் அவிப்பாகத்தை யென் முன்னளிக்க" என, ஆவிவழங்க நிற்கும் தக்கன் “அவிவழிங்கேன்'' என்றனன். அதுகேட்ட அண்ணல் ஆண்டுள்ள அமரரைநோக்கி ''உம்பர்காள்! உங்கள் சம்மதம் யாது?'' என வினாவ, அவர்கள் ஊமைகள் போல ஒன்று முரையாதிருந்தனர். உடனே உக்கிரமூர்த்தி உலக நடுங்க நகைத்துத் தண்டாயுதத்தாற் சார்ங்கனை யடித்தனர். மாதவன், அதனால் மரணாவஸ்தைக்குச் சமானமாக மதிமயங்கிவீழ்ந்தனன். பிரமனைத் தலைகுலுங்கும்படி குட்டினர். அவனும் அவனிமேல் அவசமாயினன். சந்திரன் கண்டு ஜரேலென்றெழுந்தோட அவனை உடல்தேயும்படி காலினாலே தேய்த்தனர். தேவர்கள் பலரையுந் துன்புறுத்தினர்.

வீரபத்ரரேவலால் வெளியேநின்ற பூதகணங்கள் அவ்வெம்பிரானது கட்டளையேற்று, மதிலையிடித்துக்கொண்டு போரெனப்புகலக் களிப்புற்று, சூரியவொளியும் பின்னிடச்சிரித்து, யாகசாலையிற்றீயூட்டி, யூபஸ்தம்பங்களை யொடித்து, சிலதேவர்களைத் தின்று சில முநிவர்களைமென்று, அமரர்சிலரை அண்டமுகடுசேரப் பந்தடித்து, அட்டதிசைகளிற்செல்ல அநேகரை வீசி, சத்த மேகங்களையும்பிழிந்து தாகந்தணித்து, தம்பங்களிற்கட்டிய யாகப்பசுக்களைக் கட்டவிழ்த்து விடுத்து, இயக்கர்கிந்நரர் முதலானாரது நா – மூக்கு – விழி – கரம் – சிரம் - முழந்தாள் முதலியவற்றைச் சோதித்துப் பல கொடுந்தொழில் புரிந்தனர். இதுகண்ட யஜ்ஞன் இனியாவதில்லையென்று கலையுருக்கொண்டு காலாற் கால்போற் படரக்கண்ட வீரபத்ரர் அக்கலையின் கொம்பைமுரித்து அம்பொன்றினால் ஆருயிர்மாய்த்தனர். பூதா ''நாத! அச்சுதன் ஒருவனே எமைத்தடுக்கின்றனன்'' என, சிங்கவேறு போன்ற வீரபத்ரர் ''எங்குளான், எங்குளான்'' என்று சென்று மங்குல் போல் வடிவமைந்தமாயனைக்கண்டு “நெடியோய்! கொடியோய்! கொன்றைவேணியன் குரைகழல் மீது ஆயிரங்கமலத்தால் அருச்சனை புரிகையில், அன்னதி லொன்றினை ஐயன் மறைப்ப, அம்பகமிடந்தப்பி அன்னவனருளாற் சுதரிசனம் பெற்றதை எதனால் மறந்தனை? யாகபுருஷனாகிய நீதக்கனைக் காத்துச் செருச்செய்வையோ? உயிரிழப்பையோ? உரைக்க'' என, தாமோதரன் "தக்கனைக்காப்பேன். சமர்செய்க" என்று கருடன் பேரிலேறினன். அழற்கண் வந்த அண்ணல் அதுகண்டு அண்ட கோளகையும் அப்பாலுள்ள அண்டமும் மேருமலையும் சக்ரவாள கிரியும் வெடிபடவும், எண்டிசையுஞ் செவிடுபடவும், மேகவண்ணனுக்கு ஒரிடிபோல் தோன்றவும், கையிலிருந்த வெற்றிச்சங்கத்தை வாய்வைத்தூதிப் போர்தொடங்கினர். இருவரும் பெருஞ்சமர்செய்தனர். கடைசியிற் கருடனது சிறகுகளை வெட்டி, கையிற்பிடித்த வில்லை முரித்து, ஏனைய ஆயுதங்களையும் இமைப்பிற் சங்கரித்து, மாயனையடித்து, மூர்ச்சைப்படுத்திப் பூமியில் விழச்செய்தனர். மூர்ச்சை தெளிந்தெழுந்த முகுந்தன் கையிலிருந்த சக்கரத்தைச் செலுத்த, ஐயன் அதனைப் பற்றி அயின்றனன். விண்டு வாள் கொண்டு முன்வர, உக்கிரமூர்த்தி ஹுங்காரஞ் செய்தனர். திருமால் சித்தங்கலங்கிச் சித்திரம் போற்செய்வதொன்றுமில்லாது நிலமிசை வீழ்ந்து கிடந்தனர். [விண்டு இச்சமரில் ஏனைய தேவர்கள் தண்டிக்கப் பட்டாற்போல , தனது உயிரையும் போக்கினதாக வடநூற் பிரமாணங்களால் விளங்குகின்றது அவற்றுட் சிலவற்றை யீண்டு  தகரித்திருக்கின்றேன்.]

அதுபொழுது அமரரில் அநேகர் மரிந்தோரும் மதிமயங்கினோருமாய் மகச்சாலையில் வீழ்ந்து கிடந்தனர். தக்கன் வெகுண்டு தண்டாயுதந் தாங்கிவர, வீரபத்ரர் அவன் தலையையரிந்து யாககுண்டத்திலிட்டு ஓமாக்கினிக் கூட்டினர்; பலதேவர்களையுங்கண்டு அவர்களில் இந்திரனைத் தண்டாலெரிந்து மூர்ச்சை யாக்கி, அக்கினியின் அஸ்தத்தையறுத்து, அண்டமுகட திரும்படி வீராட்டகாசஞ் செய்து, இயமனை இருகரங்களாற் கசக்கிப்பிழிந்து அவனது வெற்றுடலை நாற்றிசையிலும்வீசி, அவனது மேதியின் கொம்பைமுரித்து வீழ்த்தி, நிருதியின் தோளையரிந்து, வருணன் உந்தியை வாளினாற்றோண்டி, வாயுவை உசுவாசத்தால் வருத்திப் பறத்தி, கோபத்துடன் குபேரன் தோளைக் கச்சினாற்கட்டி, பூடாவென்னும் பரிதியைப் போடாவென்று பல்லுதிர்த்து, பகன் என்னும் பகலோனது அம்பகமகிழ்ந்து, அரியமாவென்னும் ஆதவன் றோளையறிந்து, சமீபித்த தக்ஷபுத்திரர் பதின்மரை வாளாற் சேதித்து, வசுக்களென்மரையும் மருத்துவரையும் வாய்வழி சோரி வழியப் புடைத்து, பல நூல்களைக் கற்றும் பரமசிவனே பரம்பொருளென் றுணராது அப்பொருள் மால் என்று மால்கொண்டுள்ள வானோர் பலரையும் வதைத்தனர்.

தக்கன் தலையிழந்தது கேட்ட அவன் பிரதானபத்தினி வேத வல்லிபாங்கியர் சிலருடன் ஆங்கடைந்தனள். அவள் வருவது கண்ட காளியம்மை அவளது காதினை யறுத்துத் தரையிற்போட்டு தக்கனது மற்ற மனைவிமார் தலைகளை யறுத்துப் பந்தாடி, நாமகள் திருமகள் நாசியையரிந்து, இந்திராணியின் இணைமுலை களைந்து, அதிதியினது அதரத்தை அரிந்தெறிந்து, அக்கினிதேவன் மனைவியாகிய சுவாகா தேவியின் வலமூக்கையும் இடத்தனத்தையும் நகத்தாற்கிள்ளி ஏனைய மாதரது செவி – நா – மூக்கு - முலை முதலியவற்றைக்கொய்து துன்புறுத்தினள்.

வீரபத்ரர் வெகுளிமீக்கொள் ஆகாயத்தில் அசரீரி "கோபந்தணிக'' எனக் கூறக்கேட்டு, உக்கிரர் சிறிது சினங்குறைந்தனர். சிவபெருமான் உமாதேவியாருடன் இடபாரூடராய் ஆண்டுக்காட்சி யளித்தனர். வீரபத்ரமூர்த்தியும் காளிகாதேவியும் அவ்விருவர் முன் சென்று பணிந்தனர். உலக மாதாவாகிய உமாபிராட்டியார் அவ்யாக சாலைமுற்றும் தேவர் – அரம்பையர் – முநிவர் – முநிமாதர் – தக்ஷவம் சத்தர் முதலானாரது பிரேதங்கள் வீழ்ந்து கிடக்கக்கண்டு மனம் பொறாது "எம்பெருமானே! இவர்கள் யாவரும் இவ்வேழையேன் பொருட்டிறந்தோராதலின், இவர்களை யெழுப்பியருள வேண்டும்'' எனப்பிரார்த்திக்க, கருணாமூர்த்தி களிகூர்ந்தாராய் வீரபத்ரராலேயே அவர்களையெழுப்பி உயிரீந்தருளினர். இமைப் பொழுதி லூயிர் பெற்ற இந்திரைகேள்வன் - என்கண்ணன் இமயவர் - இருடியர் யாவரும் இமயவல்லியாருடன் இடபாரூடராய் ஆகாயத்திற்சேவைதந்த ஜகதீசனது திருவடிகளை நிலமிசைப் பலமுறை வீழ்ந்து பணிந்து பரவிப்பயந்துநிற்க, பரமகாருண்யமூர்த்தி ''அஞ்சாதீர்கள்'' என்று திருவாய்மலர்ந்தருளித்தேற்றினர். பதுமன் தன் தனயனாகிய தக்கனைக்காணாது பதைத்து பகவானைப் பணிந்து 'கொடியோனாகிய தக்ஷனையும் எழுப்பிக் கொடுக்கவேண்டும்” என்றிரப்ப, சிவ கடாக்ஷத்தினால் வீரபத்ரர் - தக்கன் சரீரத்தின்மேல் ஆட்டுத்தலையை யமைத்து ''எழுக'' என, அவனும் எழுந்து உள நாணி அச்சமுற்று விமலரை நமஸ்கரிக்க “வெருவேல்'' என்று அருள்செய்து, விடையூர்தி வீரபத்திரருடன் வெள்ளிமலை யடைந்து அவருக்கோருலகளித்து விடுத்தனர். பிறகு தக்ஷன் பிரமன் சாற்றிய புத்திமதியைக்கேட்டுச் சிவார்ச்சனை செய்து சிவகணங்கட்குத் தலைவனாயினன்.

சுருதிகள்.

ஏததேவஸ0யோகாத்ருகாஹவாஸூர்யஸ்யஇத்யாதிதநுராத்நி:
விஷ்வெரத்யோவிஷ்ணொஶிர:ப்ரதிபி0த்யதுததும0பபாத
யஜ்ஞொமுகஸ்தஸ்மைஸச்சிரோயத்ப்ரவக்ய:
வாஜஸநீய0தநுராத்திநி:ப்ரக்ருத்யாமந0தி
விஷ்ணொ:ஶிர:ப்ரதிஷி0திதம்.

லிங்க புராணம்.

பபாதசததாபூமௌஸஸ0ஜ்ஞ:புருஷோத்தம:
புதருத்தாயத0ஹ0து0சக்ரமுத்யம்யஸப்ரபு:
வ்யஷ்ட0பததீநாத்மாகரெணெவஸ்தந0ஶு:
உதிஷ்ட்டெஜ்ஜ0கிதஸ்தோபாஷாணஇவநிஸ்சல:
த்ரிபிஶ்சகர்ஷிதஸ்தேநத்விதாபூத்வைப்ரபோர்தது:
ஸார்ங்ககோடிப்ரஸ0காச்சசிச்செதஸஶிர:ப்ரபு:
ததக்ஷணாதபதத்பூம்யா0ஶிரஸ்தஸ்யதராதலெ
வாயுநாப்ரெரித0சைவக்ராணஜெநபிநாதிநா
ப்ரவிவேஶக்ஷணாதேவததாஹ்யாஹவநீயகே
ஶார்ங்ககோடிப்ரஸ0காஶ்சகேஶவஸ்யமஹாத்மந:
ஶிரஶ்சிச்செதயாமாஸவீரபத்ரோமஹாபல:
யஜ்ஞஸ்யஶிரஸஶ்சேத்தாபூஷ்ணோத0தவிநாஶக:

வாமந புராணம்

ஜடாதரம்ஹரிர்த்ருஷ்ட்வாக்ரோதாதாரக்தலோசநம்
தஸ்மாத்தேஶாதபக்ரம்யகுப்ஜோதா0தர்ஹிதஸ்தித:

ஶாந்திபர்வம்.

நசைவாகல்பயத்பாகம்தக்ஷோருத்ரஸ்யபாரத
ததஸ்ஸதேவீவசநாத்தக்ஷயஜ்ஞமபாத்ரவத்
ஸஸர்ஜஶூலக்ரொதெநப்ரஜ்வலந்தம்முஹுர்முஹு:
தச்சூலம்பஸ்மஸாத்க்ருத்வாதக்ஷயஜஞ0ஸவிஸ்தரம்
ஆவயோஸ்ஸஹஸங்கச்சந்பதர்யாம்பரமம0திகாத்
வேகேநமஹதாபார்த்தாபதந்தாராயணோபிச
ததஸ்ரத்தேஜஸாப்லுஷ்டா: சேஶாநாராயணஸ்யச
பழவுர்மு0ஜவர்ணாஸ்துததோஹ0மு0ஐகேஶ்வாந்
அத்யப்ரப்ருதிஶ்ரீவத்ஸ:ஶூலா0கோமேபவத்யயம்.

வாயுஸம்ஹிதை.

சரணோர்தெதுவக்த்ரேண ஸவிராட்பரபூருஷம்
ம்ருகரூபேணதாவ0தப0விஶிரஸ்க0ததாகரோத்.

பலதேவர்களுக்கெய்திய தண்டங்கட்கு மேற்கோள் வேண்டுவோர் கூர்மபுராணம் - ஸ்காந்தபுராணம் – இலிங்கபுராணம் - வாயுசங்கிகை - காசிகாண்ட முதலிய நூல்களிற் கண்டுகொள்க. விரிப்பிற் பெருகும்.

சிவபிரான் தன்னைப் பகைத்துச்செய்த தக்ஷன துயாகத்தைச் சங்கரிக்க எழுந்தருளியமூர்த்தமே தக்ஷயஜ்ஞஹதமூர்த்த மெனப் பகரப்படும்.

தக்ஷயஜ்ஞஹதமூர்த்தயே நம:
 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்          
 

Related Content

வீரபத்ரமூர்த்தி

அகோராஸ்த்ர மூர்த்தி