logo

|

Home >

sivaprakramam-64-forms-of-lord-shiva >

sivaparakramam-chandrashekara-murthi

சந்திரசேகர மூர்த்தி

சந்திரசேகர மூர்த்தி
சந்திரசேகர மூர்த்தி

பிரமதேவனது  மாநதபுத்திரர்களி லொருவனாகிய தக்ஷப் பிரசாபதி தான் பெற்ற அசுவினி முதலிய நட்சத்திரங்களாகிய இருபத்தேழு பெண்களையும், அத்திரிமுநிவர். மனைவியாகிய அநயையீன்ற சந்திரன் அழகிற்சிறந்தோனா யிருத்தல், கருதி மணம் புணர்த்தி அவனை நோக்கி "நீ இப்பெண்கள் யாவரிடத்தும் பாரபக்ஷமின்றிச் சமானமாக அன்பு கொண்டிருக்க வேண்டும்” என்று கூறிப் புதல்வியரைச் சந்திரனோடனுப்பினன். (மாநதபுத்திரர் பதின்மர். அவர்கள் ஸப்தருஷிகள் நாரதன் கர்த்தமன் தக்ஷன் எனப்படுவர். இவருள் தக்ஷன் அங்குஷ்டத்தினின்றும் ஜனித்தவன்.)

சந்திரன் மாமனது மதிப்படி சிறிதுகாலம் யாவரிடத்தும் அன்புடையனாயிருந்து, பின்னர்க் கார்த்திகை உரோகணி என்னும் மாதரிருவருமே தனது மனைவியருட் பேரழகுடையராயிருத்தலால், அவ்விரண்டு மனைவியரிடத்திலேயே அதிக அன்புபாராட்டி ஏனையோரை முகநோக்கானாயினன். அக்கன்னியர் நெடுநாட் பொறுத்துப் பார்த்துச் சிறிதும் மனஞ்சகியாது தமது குறைகளைத் தந்தைபாற் சொல்ல, தந்தையாகிய தக்ஷன், சந்திரனையழைத்துப் பலவகையாகப் புத்தி மதிகளைக்கூறி விடுப்பவும், சந்திரன் அவற்றைத் “தையலார் மயலிற்பட்டோர் தமக்கொரு மதியுண்டாமோ'' என்னும் ஆன்றோர் வாசகத்தின்படி, தக்கன் சொல்லியவற்றைச் சிறிதுஞ் சிந்தியாமல் நடப்பது கண்ட அப்பேதையர் மீண்டுத் தந்தைபாற்சென்று "எந்தையே! எமது நாதன் எம்மை முன்போலவே முகநோக்காதிருக்.கின்றனன்'' எனக் குறைகூறக் கேட்ட தக்ஷன் வெகுண்டு "நாளுக்கொரு கலையாய் குறைந்து இறக்கக்கடவன்'' என்று சாபமிட, சந்திரன் அவ்வாறே தக்ஷன் சாபத்தால் நாளுக்கோர் கலையாகப் பதினைந்து தினங்களில் தன் கலைகளெல்லாமழிந்து, ஒருகலையோடு மனம்வருந்தி, தனக்கு நேர்ந்த துன்பத்தை இந்திரனிடஞ்சொல்லி யாசிக்க, இந்திரன் “நீபிரமதேவனிடஞ் சொல்லிக்கொண்டால்,
பிரமதேவன் ஒருகால் தன் புதல்வனாகிய தக்ஷனிடஞ்சொல்லி, உனக்குச் சாபவிமோசனஞ் செய்தல் கூடும்' என, அவ்வாறே பிரமதேவனை வேண்டிக்கொள்ள, பதுமன் "சந்திர! தக்கனுந் தந்தையென் றென் சொல்லைக் கேளான். யானு மகனென் றவனிடஞ் சொல்லேன் . நீ கைலையையடைந்து கருணாமூர்த்தியாகிய கண்ணுத லைப் பிரார்த்திக்கின் அவர் உனது குறைதீர்ப்பர்” என அது மேற்கொண்டு, சந்திரன் திருக்கைலாயகிரியை யடைத்து திருநந்தி தேவர் அநுமதியால் மஹாஸந்நிதாநத் துட்சென்று அருட்பெருங் கடலாகிய எமது சிவபெருமானைத்தரிசித்து அஷ்டாங்க பஞ்சாங்கமாக நமஸ்கரித்துத் தனக்கு நேர்ந்தசாபத்தை விண்ணப்பஞ்செய்து யாசிக்க, பார்ப்பதிபாகராகிய பரமன் எஞ்சியுள்ள ஒருகலையைத் தமது சடைமுடியில் தரித்து “உனது கலைகளிலொன்று என் முடிமீதிருத்தலால் நாளுக்கொரு கலையாக வளர்ந்தும், தக்ஷன் சாபத்தால் நாளுக்கொரு கலையாகக் குறைந்தும் இருக்கக்கடவாய். எப்போதும் ஒருகலையுன்னை விட்டு நீங்காது'' என அநுக்கிரகித்தனர். இது காரணத்தால் எம்பெருமானுக்குச் சந்திரசேகரர் என்பதோர் திருநாமமெய்தியது.

கந்தபுராணம்.

தீர்ந்தன வன்றியே திங்க டன்னிடை
யார்ந்திடு கலையினை யங்கை பிற்கொளா
வார்ந்திடு சடைமிசை வயங்கச் சேர்த்தினான்
சார்ந்தில தவ்வழித் தக்கன் சாபமே.

எந்தை யவ்வழி மதியினை நோக்கிநீ யாதுஞ்
சிந்தை செய்திடே லெம்முடிச் சேர்த்திய சிறப்பா
‘லந்த மில்லையிக் கலையிவ ணிருந்திடு மதனால்
வந்து தோன்றுநின் கலையெலா நாடொறு மாபால்.

நின்ன தொல்கலை யைந்து முப் பகலிடை நிரம்பிப்
பின்ன ரவ்வழி தேய்ந்துவந் தோர்கலை பிரியா
தின்ன பான்மையே நிகழுமெக் காலமு மென்றான்
முன்னை யாவிதோ றிருந்தெலா மியற்றிய முதல்வன்.

சந்திரசேகரமூர்த்தயே நம:

 

சிவபராக்கிரமம் 64 சிவ மூர்த்தங்கள்
 

Related Content

உமாமஹேச மூர்த்தி

உமேச மூர்த்தி

சோமாஸ்கந்த மூர்த்தி

ருஷபாரூட மூர்த்தி

ருஷபாந்திக மூர்த்தி